தாபம் – 3

 “ஒகே ஸ்டூடன்ஸ், நம்ம வர வேண்டிய பிளேஸ் வந்தாச்சி. இங்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது. அதனால ஸ்டடிங் பர்பஸ்காக அப்படின்னுதான், ரொம்ப கஷ்டப்பட்டு பர்மிஷன் வாங்கிருக்கோம். சோ உங்களோட சேட்டை எதையும் இங்க பண்ணாதீங்க. நீங்க சின்னதா ஒரு தப்பு பண்ணாக்கூட, அது நம்ம காலேஜ் ரெபிடேஷன்-ஸை ஸ்பாயில் பண்ணிடும்” என்று ஒரு முறைக்கு, பல முறை எச்சரிக்கை செய்தார், அவர்களின் கல்லூரி ஆசிரியர்.

“ஏன் மேடம். நீங்க கொடுக்கிற பில்டப்பை பார்த்தா? உள்ள என்ன புதையல்லா இருக்கு?” என்று கிண்டலாக ஒரு மாணவன் கேட்டான்.

“டேய் உன்னையெல்லாம் நம்பி, நம்ம காலேஜ் லைப்ரரிலேயே விடமாட்டாங்க. அப்படி இருக்கிறப்ப, இந்த அரண்மனைக்குள்ள சும்மா விடுவாங்களா?” என்று இன்னொரு மாணவி அவனை சீண்டினாள்.

அதைக்கேட்டு அனைவரும் சிரிக்க ஆரம்பிக்க, “சைலன்ட் காய்ஸ். இங்க ரொம்ப பழமையான பொருட்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு வச்சிருக்காங்க. அது போக இந்த கோட்டைய சுத்தி சில மர்மங்கள் இருக்கிறதாகவும் சொல்லப்படுது” என்று அந்த ஆசிரியர் கூறினார்.

“என்ன மேடம்? உள்ள பாகுபலி, அருந்ததி பட சூட்டிங் எடுக்கிறாங்களா? சும்மா ஓவரா பில்டப் கொடுக்கிறீங்க. அப்படி இங்க என்ன இருக்குன்னு, நான் போயி பார்க்குறேன்” என்று ருத்ரா சொல்லிவிட்டு முதல் ஆளாக, பஸ்ஸை விட்டு குதித்தாள்.

“நோ ருத்ரா. உன் விளையாட்டை இங்க வச்சிக்காத” என்று ஆசிரியர் சொல்லிய எதுவும் அவள் காதில் விழவே இல்லை.

“தென்றல். நீதான்-மா உன் பிரண்ட, இங்க இருந்து கிளம்புற வரைக்கும் பத்திரமா பார்த்துக்கனும். என் வேலைக்கு ஆப்பு வச்சிடப் போறா” என்று ஆசிரியர் சொல்லும் போதே, கற்பனை உலகத்தில் இருந்து, நிகழ்காலத்திற்கு வந்தாள்.

அப்போதே ருத்ரா-வை தேட, அவளோ அங்கு எங்கும் இல்லை. வேகமாக பஸ்ஸை விட்டு இறங்க முயற்சிக்க, அதற்குள் மற்ற மாணவ, மாணவிகள் எல்லோரும் இறங்க ஆரம்பித்தனர்.

இங்கே ருத்ரா-வோ, அந்த பிரமாண்ட கோட்டையின் அழகில் மெய்மறந்து அப்படியே நின்றாள். 

“வாவ்.. வாட் ஏ ட்ராமாடிக் பிளேஸ். அருந்ததி அரண்மனை எல்லாம், இந்த அரண்மனையோட ஒரு பகுதிக்கு ஈடாகாது போலே-யே. ப்பா” என்று மூச்சு விட கூட மறந்து ருத்ரா சொல்லிக்கொண்டே கோட்டையை நோக்கி அடி எடுத்து வைத்தாள்.

கோட்டை வாயிலில் அவள் பாதம் பட்டவுடன், ஒரு ஒளிபிம்பம் அதிர்வு போல், அந்த ஏரியா முழுவதும் பாய்ந்தது. அதில் அவள் வரவை உணர்த்தி அந்த வாயிலின் ஓரம் இருந்த அழைப்பு மணி தானாக அடிக்க ஆரம்பித்தது.

“வாருங்கள் இளவரசியாரே. உங்களின் இந்த அடிபிரதேசத்திற்காக, பல பிரதேசங்கள் அழைந்து திரிந்து, உம்மை இங்கு சேர்த்து விட்டேன். இத்துடன் என் பணி நிறைவடைந்தது மனு வேந்தா. இனி இவள் உம்முடைய பொறுப்பு. வாழ வைப்பதும். உன் காலடியில் வீழ வைப்பதும் உன் சித்தம். என்றோ நான் செய்த, பாவத்திற்கு, பாவ மன்னிப்பு கிடைக்குமா என்று நான் அறியேன். ஆனால் இப்பாவத்திற்கு, நான் அக்னி கடலில் குளித்து என் உடலை அர்ப்பணம் செய்தாலும், அது தகாது. அன்றும் உன் ஆணைக்கே அடிப்பணிந்தேன். இன்றும் உன் கட்டளைக்கு அடிப்பணிந்தேன். இத்துடன் என் பிறவிப்பலன் முடிந்து நரகத்திற்கு செல்கிறேன். என் இளவரசியாரே மீண்டும் ஒரு முறை என்னை மன்னியும்” என்ற அசரீதி ஒரு மனித உருவம் பெற்று பின், அப்படியே அங்கிருந்த மன்னோடு மன்னாக கரைந்தது.

“ஹா.. ஹா. அற்புதம் என் ரகுவேந்தா. சொன்ன சொல்லிற்காக, உன் உயிரை தியாகம் செய்தது மட்டுமில்லாது, உன் உயிருக்கும் மேலான, உன் இளவரசியாரை எம்மிடம் கொண்டு சேர்த்ததை, நான் எவ்விதம் பாராட்டுவேன். ஆனால், அந்த தர்மனே சூழ்ச்சி என்று தெரிந்தும், தன் தமையனையும், தன் மனைவியையும் சொன்ன சொல்லிற்காக, துரியோதனிடம் அடமானம் வைக்க துணிந்தான். அதையே நீயும் செய்கிறாய். இதில் உன்னை விட கொடியவனா நான்? என் சித்தமே எனக்கு நியாயம். என் பகையை தீர்க்க உன்னை பகடையாய் உருட்டினேன், என்பதை அறிந்தும், உன் இளவரசியின் காயை என்னிடம் நகர்த்தி வந்திருக்கும் உன் முட்டாள்தனத்திற்கு நான் எவ்வாறு பொறுப்பேற்பேன்? சென்று வா ரகுவேந்தா. சென்று வா. உனக்கு அந்நரகமே இவ்விடத்தை விட்டு மேல் என்பதை நான் அறிவேன்” என்ற மனுவேந்தனின் சிரிப்பில், அங்கிருந்த மரங்களில் இருந்து இலைகள், காய், கனி என்று அனைத்தும் விழ ஆரம்பித்தன. 

“இந்த மரத்தின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடைகிறது இளவரசி. ஆனால் உன்னுடைய துன்ப காலம் இந்த நொடி ஆரம்பிக்கப் போகிறது. அதை உனக்கு உணர்த்துவதற்காகத்தான், இந்த மரத்தின் அர்ப்பணிப்பு” என்று அசரீதி சொல்வதற்கும். தென்றல் சரியாக, பேருந்தை விட்டு இறங்குவதற்கும் சரியாக இருந்தது. 

அவள் இறங்கியதும், அவளுள் ஏதேதோ நினைவலைகள் தோன்றி மறைந்தது. அவள் ஆழ் மனதினுள், ஒரு கொடூர சிரிப்பின் சத்தம் கேட்டது. அதில் தெரிந்த வெற்றி புன்னகை, அவளுள் ஏதோ ஒரு அச்சத்தை விதைத்தது. 

நொடியும் தாமதிக்காமல், ருத்ரா-வை தென்றல் தேட, இதை ஏதும் உணராத ருத்ரா, தன் கேமாரா-வை ஆன் செய்து, அந்த உயர்ந்த கோட்டையை புகைப்படம் எடுக்க முயற்சித்தாள்.

அதன் முழு பிம்பமும், பிரேமிற்குள் அடங்காமல் நிற்க, அவள் பின்னோக்கி அடி எடுத்து வைக்க ஆரம்பித்தாள். 

ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க, வைக்க, அவள் அந்த மரத்திற்கு அருகே சென்றுக் கொண்டிருந்தாள்.

“என்னடா இது? இன்னும் பத்து கிலோ மீட்டர் பின்னாடி போனாத்தான், ஒரு போட்டோ-வாச்சும் எடுக்க முடியும் போல” என்று யோசித்துக் கொண்டே ருத்ரா பின்னோக்கி நடந்துக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் அவள் நிற்க, கேமரா வழியாக அந்த உயர்ந்த கோட்டை அரண்மனையை, தன் புகைப்படக் கருவிக்குள் பிடித்திருந்தாள். 

“இப்போ தான் வியூ கரெக்டா இருக்கு” என்று ருத்ரா, கிளிக் செய்யப் போவதற்கும். அந்த பெரிய மரம், அவள் மேல் விழப்போவதற்கும் சரியாக இருந்தது.

சரியாக அந்த ஒரு நொடி வித்தியாசத்தில், ருத்ரா-வின் கையை ஒரு பக்கம், தென்றலும், இன்னொரு பக்கம், மற்றொருவரும் பிடித்திழுக்க, அவன் ஒருவனின் பிடியில், பெண்கள் இருவரும், அவன் இழுத்தப் பக்கம் சென்று விழுந்தனர்.

அவர்கள் நகர்ந்த நொடி, அந்த மரம் மண்ணோடு மன்னாக வீழ்ந்தது. வீழ்ந்தது மட்டுமில்லாது, நொடி நேரத்தில் அந்த மரம் இருந்த தடமே இல்லாமல், அப்படியே மண்ணுக்குள் புதைந்தது. 

அதை இருவருமே கவனிக்கவில்லை. ஆனால், “என் வரவேற்பு உங்களுக்கு பிடிக்கவில்லை போலும். பரவாயில்லை. அதான், என் வரவேற்பை, உங்களுக்கு இனிய ஒருத்தன் வாங்கிக் கொண்டானே. அது போதும் எமக்கு” என்று ஒரு அசரீதி-யின் குரல், சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தது.

திடீரென கீழே விழுந்ததால், இருவரின் மூளையும் ஒரு நொடி வேலை செய்யவே இல்லை. 

“என்ன நடந்தது?” என்று ருத்ரா-விற்கு சுத்தமாக புரியவில்லை.

தென்றலுக்கோ, ருத்ரா தனியாக நிற்பதைப் பார்த்து அவளை அங்கிருந்து இழுத்து செல்ல முயற்சித்தது வரை நினைவில் இருந்தது. ஆனால் இவள் இழுத்த திசைக்கு, எதிர்பக்கம் விழுந்து கிடப்பது சுத்தமாக புரியவில்லை. 

“எதுக்குடி? இப்போ என்னை கீழ தள்ளி விட்ட?” என்று ருத்ரா புரியாமல் கேட்டாள்.

“என்ன? நான் தள்ளிவிட்டேனா?” என்று தென்றல் குழப்பமாக கேட்டாள்.

“ஆமா. இங்க இருக்கிறது, நீயும், நானும் மட்டும் தான?” என்று ருத்ரா சுற்றி பார்த்துக் கொண்டு கூறினாள்.

“உன்னை யாருடி தனியா வர சொன்னா?” என்று தென்றல் கோவமாக கேட்டாள்.

“அடிபாவி, நான் எங்கடி தனியா வந்தேன். நம்ம கிளாஸ் மொத்தமும் இங்கத்தான இருக்கு” என்று தூரத்தில் நின்றிருந்த அவர்கள் வகுப்பு மாணவர்களை கை காட்டி ருத்ரா கூறினாள்.

“அவங்களாம் எங்க இருக்காங்க? நீ மட்டும் இங்க என்னப் பண்ற?” என்று தென்றல் ஆதங்கமாக கேட்டாள்.

“ஆமா. அவங்களாம் ஊட்டி மலை மேல இருக்காங்க. நான் கொடைக்கானல் மலை மேல இருக்கேன் பாரு. பேசாம ஒன்னு பண்ணு தென்றல். ஒரு கயிறு எடுத்து என் கையை உன் கை கூட சேர்த்து கட்டி வச்சிக்கோ. வர வர, அம்மா-வ விட, நீ மோசம்மா பண்ற” என்று ருத்ரா கடிந்துக் கொண்டாள். 

“நீ பண்றதுக்கு, அப்படித்தான் பண்ணனும். சரி. அம்மா-கிட்ட பேசுனீயா? முதல்ல பேசு. எனக்கு நாலு தடவை கால் பண்ணிட்டாங்க” என்று  தென்றல் கூறினாள்.

“உன் நம்பரை எங்கம்மாகிட்ட கொடுத்தது ரொம்ப தப்பா போச்சி” என்று ருத்ரா தனக்குள் முனுமுனுத்தாள்.

“சரி. வா போவோம்” என்று தென்றல் கூறினாள்.

“எப்படி இப்படி தவன்டுக்கிட்டே போவோமா?” என்று ருத்ரா கடுப்பாக அவர்கள் கீழே விழுந்து கிடப்பதை சுட்டிக் காட்டி கேட்டாள்.

அவள் கேட்ட விதத்தில் தென்றல் சிரித்து விட, “ஸ்ப்பா. இப்பையாச்சி சிரிச்சியே. ஆனா ஒன்னு சொல்லனும் தென்றல். நீ சிரிக்கிறப்ப ரொம்ப அழகா இருக்க” என்று ருத்ரா வழக்கம் போல் சொல்லிவிட்டு அவளுடன் சேர்ந்து சிரித்தாள்.

இவர்கள் இருவரின் சிரிப்பலையில், அந்த பட்டுப்போன மரத்தின் தூரில் இருந்து ஒரு புதிய தளிர் முளைத்தது. 

அதைப்பார்த்து நரகத்திற்கு சென்றுக் கொண்டிருந்த ரகுவேந்தன் “பார்த்தாயா மனுவேந்தா. நீ ஒரு மரத்தை அழித்து, என் இளவரசிக்கு, மரண பயம் தர துணிந்தாய். ஆனால் என் இளவரசியார், அவரின் சிறு புன்னகையில், அம்மரத்திற்கு புது ஜனனத்தையே வழங்கியுள்ளார். உன்னிடம் எம் இளவரசியை சேர்த்ததற்கு காலம் தான் விடையை சொல்ல வேண்டும். நீ கூறிய தர்மன், துரியோதனன் கதையில் கூட, மங்கை-க்கு செய்த பாவத்திற்காக, பலியாய் போனது, தர்மன் மட்டுமல்ல, மனுவேந்தா. துரியோதனும் தான். அதை மறந்து போயிடாதே. அவனின் கடைசி காலம் உமக்கு நினைவு இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தான் அவன். 

“என்ன? எமக்கு கடைசி காலம்மா? நரகத்திற்கு செல்கிறாய் அல்லவா? அந்த ஆணவத்தில் பேசுகிறாய் நீ. செல். உமக்கான பதிலை சொல்ல கூடிய சீக்கிரம் இன்னொரு ஜீவனை, அங்கே அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அகோரமாக சிரித்தான் மனுவேந்தன். 

அப்போது அந்த கோட்டையில் இருந்த கல்வெட்டில், மனுவேந்தனின் மாயவனத்திற்கு உங்களை வரவேற்கிறோம் என்ற எழுத்துகள், பெரிதாக பொறிக்கப்பட்டிருந்தது.

அதை அனைத்து மாணவ, மாணவிகளும் பார்த்துக்கொண்டு நுழைந்தனர்.

தென்றல், ருத்ரா இருவரும் அந்த கல்வெட்டை அசையாது பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதில் பொறிக்கப்பட்டிருந்த மனுவேந்தன் என்ற பெயரைப் பார்த்த ருத்ராவிற்கோ, அந்தப்பெயர் மிக நெருக்கமானதாக தோன்றியது. அவள் விரல்கள் அவளையும் மீறி, அந்த எழுத்துகளை தடவியது. அவள் உதடுகள் “மன்னு” என்று முனுமுனுத்தது.

அவள் உதடுகள் உச்சரித்த பெயரைக்கேட்டு, அங்கே இவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக்கொண்டிருந்த சிவந்த விழியோனின் கண்கள் கனலை கக்க துடித்தது.

ஆனால் தென்றலிற்கோ அதில் அன்புடன் வரவேற்கப்படுகிறது என்ற எழுத்துகளுக்கு பதிலாக, “வந்த வழியே சென்றுவிடுங்கள்” என்று தோன்றி மறைந்தது.

ஒரு நொடி அவளுக்குள் சொல்ல முடியாத ஒரு பயம், அதற்கு மேல், அந்த மனுவேந்தனின் பெயருக்கு மேல் இருந்த கொம்பு போன்ற சின்னத்திற்கு நடுவில் அவனின் சிவந்த விழிகள் தோன்றி மறைந்தது. 

அவ்வளவுத்தான். அவள் கை, கால்கள் நடுங்கின. அந்த சிவந்த விழிகள் ருத்ரா-வை கொடூரமாக பார்த்தது போல் அவளுக்கு தெரிந்தது. வேகமாக, ருத்ரா-வின் கையை இறுக்கமாக பிடித்தாள்.

“பார்க்கிறேன் தேவி, உங்கள் இளவரசியை இன்னும் எத்தனை நாட்களுக்கு, உங்கள கைப்பிடியில் வைத்து காக்கப் போகிறீர்கள் என்று” என்று அசரீதி போல் சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தது.

தென்றலின் தொடுதலில் தன்னிலைப் பெற்ற ருத்ரா திரும்பி அவளைப் பார்த்தாள்.

அவள் முகத்தில் தெரிந்த அச்சக்கோடுகள், “இப்போ இவளுக்கு என்ன ஆச்சு? சும்மா-வே பயப்படுவா? இதுல இவ்வளவு பெரிய கோட்டைய பார்த்து பயப்பட மாட்டாளா? என்ன?” என்று ருத்ரா தனக்குள் யோசித்துக்கொண்டு, அவள் கையை அவளும் பிடித்துக் கொண்டு அந்தக் கோட்டைக்குள் நுழைந்தாள். 

“தென்றல், அரண்மனை சூப்பரா இருக்குல்ல” என்று ருத்ரா எதார்த்தமாக கேட்டாள்.

“அரண்மனையா?” என்று எதுவும் புரியாமல் தென்றல் சுற்றிப் பார்த்தாள்.

“ஏய். இல்ல, இந்த கோட்டையத்தான் சொன்னேன். வெளிய இருந்து பார்க்கிறதுக்கே இவ்வளவு அழகா இருக்கே. உள்ள இருக்கிற அரண்மனை எப்படி இருக்கும்?” என்று ருத்ரா கற்பனையாக கேட்டாள்.

“உன் அழகுக்கு முன், அதெல்லாம் வெறும் கல்லும், சித்திரம் மட்டுமே இளவரசி. ஆனால், என் கனலுக்கு முன்னால், உன் அழகும், உன் திமிரும் வெறும் சித்து விளையாட்டு மட்டுமே” என்று கோவமாக அந்த சிவந்த விழியோன், கோவமாக கூறினான். 

“ஆனா எனக்கு இந்த இடமே புடிக்கல” என்று வெடுக்கென்று கூறினாள் தென்றல்.

“அடிப்பாவி. இந்த இடம் உனக்கு பிடிக்கலையா? எம்புட்டு ரசனையா அந்த ராஜா, ஒவ்வொரு விசயத்தையும் கட்டிருக்கான். நீ என்னன்னா இப்படி சொல்ற” என்று ருத்ரா அதிர்ச்சியாகி கேட்டாள்.

“ரசனையா? அதை எங்க பார்த்த?” என்று தென்றல் சலிப்பாக கேட்டாள்.

“ம் அதை உன் கண்ணால இல்ல, இது வழியா பார்க்கனும்” என்று தன் கேமரா-வை தூக்கி ருத்ரா கூறினாள்.

“ம்க்கும், அப்போ அதை நீயே பாரு. ஆனா எனக்கு இதைப்பார்த்தா, ஏதோ சந்திரமுகி அரண்மனை மாதிரிதான் தெரியுது” என்று தென்றல் சற்று பயத்துடனே கூறினாள்.

“ஆமா, இந்த ராஜா-வும், ஏதோ ஒரு பொண்ணு மேல ஆசைப்பட்டு, அவளை அடையிடுறதுக்காக, இந்த அரண்மனைய கட்டி வச்சிருக்கான்” என்று ருத்ரா கடுப்பாக கூறினாள்.

“என்ன சொல்ற? அது எப்படி உனக்கு தெரியும்?” என்று தென்றல் உண்மையான பதட்டத்துடன் கேட்டாள்.

“ஆ..ங். அந்த ராஜா தூக்கிட்டு வந்த பொண்ணே நான் தான்” என்று ருத்ரா கிண்டலாக கூறினாள்.

அதைக்கேட்டு ஒரு நொடி தென்றலின் இதயம் துடிக்க மறந்து துடித்தது.

“என்ன?” என்று தென்றலின் அதிர்ச்சியைப் பார்த்த, ருத்ரா சிரித்துக் கொண்டே “அப்புறம் என்னடி? சும்மா ஏதோ கதைய சொன்னா? நீ உண்மை மாதிரி பிகேவ் பண்ற” என்று கூறினாள்.

“கதையா? ஆனா எனக்கென்னமோ அதெல்லாம் உண்மையா இருக்கும்-னு தான் தோணுது. உனக்கு வேணும்னா, இது மேல எல்லாம் நம்பிக்கை இல்லாம இருக்கலாம், ருத்ரா. ஆனா எனக்கு நான் பார்த்தது, கேட்டது எதுவும் என் கற்பனை இல்ல.” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

சரியாக அந்நேரம் “ருத்ரா, தென்றல், நீங்க ரெண்டு பேர் மட்டும் அங்க என்னப் பண்றீங்க உள்ள வாங்க. இருட்டுறதுக்குள்ள கிளம்பனும்” என்று ஆசிரியர் கூப்பிட்டார்.

அவரின் அழைப்பில் தன்னிலைக்கு வந்த தென்றல், ருத்ரா-வுடன் அந்த கோட்டைக்குள் சென்றாள்.

இவர்கள் உள்ளே சென்ற நொடி, அந்த பெரிய வாயில் கதவுகள், தானாக மூடிக் கொண்டன். 

அதில் புகைப் போன்ற வடிவம் தோன்றி அதில் “என் மாயவனத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இது என் எல்லை, என் கோட்டை, இங்கே உங்கள் சக்தி எதுவும் வேலை செய்யாது. இனி இந்த மனு வேந்தனின் ஆட்டம் மட்டுமே” என்று எழுத்துகள் உதித்து பின் மறைந்தது. 

அந்நேரம், அந்த கோட்டை வாசலில் பெரிய கார் ஒன்று வந்தது.

“பாஸ், இதுதான்” என்று அவனின் பி.ஏ ஏதோ சொல்ல வர, அதை தடுத்துவிட்டு “ஐ நோ” என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு, கண்ணில் அணிந்திருந்த கூலரை கழட்டி, அந்த கோட்டையைப் பார்த்தான்.

கார் கதவைத் திறந்து அவன் இறங்கப்போக, அதுவரை பூந்தென்றல் வீசிக்கொண்டிருந்த அந்த வானுயர்ந்த மரங்கள் எல்லாம், புயல் காற்றில் சிக்கியது போல் அலங்கோலமாக ஆடியது. புழுதிக்காற்றோடு சேர்ந்த சூறாவளி, அவனை அங்கே இறங்க விடவில்லை.

இறங்குவதற்காக, கார் கதவை திறந்த அவனின் கரங்கள், எதையோ யோசித்து விட்டு, பின் இழுத்து மூடிக்கொண்டான். அவனைத் தொடர்ந்து பி.ஏ வும் அவன் காரில் ஏற, அந்தக்கார் அங்கிருந்து எதிர் திசைக்கு சென்றது.

அவன் கார் சென்ற பின்னே, அந்த இடம் அமைதியாக மாறியது. குண்டூசி விழும் அளவுக்கு மையான அமைதியானது. 

(இவனுக்கும், இந்த அரண்மனைக்கும் என்ன சம்பந்தம்? சிவந்த விழியோனின் கனலை தகிப்பாளா தங்க விழியாள்? போன்ற கேள்விக்கான பதிலை அடுத்தடுத்த அத்தியாயத்தில் காண்போம். அதற்கு முன் தங்கள் கருத்துகளை மறக்காமல் தெரிவிக்கவும்...)

சாபம் தீருமா?

Author:    1 Sarmi SS
Comments   6

*** தாபம் – 3 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com