குட்டி டீசர்

“அட என்னய்யா, ஊரே உம்ம வீட்டுல கூடி இருக்கு. நீ என்னென்னா, இன்னேரத்துல வாக்கா வெட்டிட்டு இருக்க?” என்று பெரியவர் ஒருவர், மழைக்கு, அந்த மரத்தடியில் ஒதுங்கி நின்றப்படி கேட்டார். 

“ஊரு எங்க இருந்தா என்ன? எம்ம வயலும், காடும் இங்கத்தான இருக்கு” என்றப்படி, அந்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, வரப்பு வெட்டிக் கொண்டிருந்தான் அவன்

கையில் இருந்த கடப்பாரையை அவன் பிடித்திருந்த விதத்தில், நிச்சயம் அந்த கடப்பாரைக்கு உயிர் இருந்திருந்தால், வலி தாங்காது கத்தியிருக்கும். அவன் பேச்சு சாதாரணமாக இருந்தாலும், அவனுக்குள் அத்தனைக் கோவம் கொதித்துக் கொண்டிருந்தது.

அந்த கோவத்தையும் சேர்த்துத்தான், அந்த மண்ணில் காட்டினான். “செரிய்யா. ரொம்ப நேரமாயிடுச்சி, இதுக்கு மேல, இங்குட்டு நான் நின்னா, அந்த கெழவி, என்னை இன்னிக்கு மழையில வெளியில படுக்கப் போட்டாலும் போட்டுடுவா. நான் போறேன்” என்று சொல்லியப்படி நடந்தார்.

“போயிடுவீகளா? இல்ல நான் வேண்னா, ஆறையாச்சும் கொண்டு போய் விட சொல்லட்டா” என்று ஆதி கேட்க, “நீ பொறக்க முன்ன இருந்தே, இந்த காட்டுலத்தேன் கிடக்கேன். அதெல்லாம் நான் போயிடுவேன். நீயும் செத்த வெரசா வூட்டுக்கு போய்யா” என்று குரல் கொடுத்தப்படியே சென்றிருந்தார்.

ஆனால் அவனுக்குத்தான், அந்த வீட்டுக்கு செல்ல மனம் வரவே இல்லைப் போலும். வரப்பை வெட்டி விட்டு, கை, கால்லில் இருந்த மண்ணை கூட கழுவாது, அப்படியே, வெறுந்தரையிலேயே அமர்ந்துவிட்டான் ஆதிரன்.

அவன் மனதில், என்னென்னவோ யோசனைகள் ஓடிக் கொண்டிருக்க, அதை எல்லாம் அவன் ஒதுக்கிவிட்டு, எழும் போது, கிட்ட தட்ட நள்ளிரவாகியிருந்தது.

மழையும் நிற்கும் பாடில்லை. வீட்டுக்கு செல்லவும் அவனுக்கு மனம் இல்லை. அதனால், அங்கிருந்த பம்ப் செட்டிற்கு செல்ல நினைத்து, நடந்தான்.

அவனின் நடைக்கு ஊடே, மெல்லிய கொலுசொலி சத்தமும் சேர்ந்து ஒலிக்க, முதலில் அதை அவன் கவனிக்கவே இல்லை. 

ஏனெனில், மழையும், காற்றும், அத்தனைப் பலமாய் அடித்துக் கொண்டிருக்க, அந்த கொலுசொலி, அவன் செவியை கொஞ்சம் கூட எட்டவில்லை.

பம்ப் செட்டிற்குள் நுழையப் போகும் சமயம், சட்டென்று ஏதோ தோன்ற, நடையை நிறுத்தினான்.

இப்போது அந்த கொலுசொலி மட்டும் அல்ல, கூடவே சேர்ந்து வளையல் சத்தமும் கேட்டது.

அந்த வளையோசை அவனுக்கு, ஒரு பெண்ணை நினைவுப்படுத்த, சட்டென்று திரும்பினான்.

அவன் எதிர்பார்தத்து சரிதான். அந்தப் பெண் தான் நின்றிருந்தாள். இதுவரை, அவள், அவனின் முன்னே, இப்படி வந்து நின்றது கிடையாது. அதனால் கண் முன் நிற்பவளை, அவனால் நம்ப முடியவில்லை.

அதில் ஒரு சில நொடிகள், அவன் அப்படியே அதிர்ந்து நின்றுவிட, அவனுக்கு முன்னே, மிரண்டு போய், யாருக்கோ பயந்து அஞ்சி அழுதப்படி நின்றிருந்தாள் இளநிலா.

அவனின் உயரத்துக்கு, அவள் பாதியாய் தான் அவள் இருப்பாள். அதிலும் இவனின் வலிய தேகத்தின் முன், கொஞ்சம் பலமாய், விழுந்த மழைத்துளிக்கே, அவள் தேகம் வலியை தாங்காது, சிவந்திருக்க, அப்போதே, அவள் நனைந்துக் கொண்டிருப்பதே அவனுக்கு புரிந்தது.

ஆறடி ஆண்மகன், மதியை இழந்தது போல், அவள் தலை மேல் இரு கரம் வைத்து, அவளுக்கு குடையாய் தன் கையை மாற்றினான்.

அவனின் அந்த செய்கையில், அந்த பிஞ்சு நிலவோ, “மாமா” என்று சொல்லியப்படி அவன் மார்பில் சாய்ந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதுவரை அவள், அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. அவன் ஓரிடத்தில் இருந்தால், அவள் அந்த இடத்தில் கூட நின்றிருக்க மாட்டாள்.

அப்படி இருக்க, முதல் வார்த்தையே, மாமா என்றும், முதல் நெருக்கமே, இத்தனை இறுக்கமான அணைப்பாகவும் இருக்கும் என்று சத்தியமாய் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவன் மட்டும் அல்ல, அதை நிச்சயம், அவள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டாள்.

விடிந்தால் அவளுக்கு கல்யாணம். அப்படி இருக்க, இந்த நள்ளிரவில், அவனை பார்க்க வந்திருக்கிறாள். பார்க்க வந்ததோடு, இப்படி கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றிருக்கிறாள்.

சில நொடிகளுக்கு பின்னே அதிர்ச்சியில் இருந்து மீண்டவன், அவளை விலக்கி, “நிலா. என்னாச்சு? இங்கப்பாரு” என்று சற்று அழுத்தம் கூட்டி கேட்டான்.

அவனின் குரலில், அவள் உடல் நடுங்க, அவனோ, “என்னாச்சுன்னு கேக்குறேன்த்தேன்ன” என்றான்.

அவனை இத்தனை நெருக்கத்தில், அவள் பார்ப்பது இதுதான் முதல் முறை. அதில் அவள் அதிர்ந்தப்படியே இருக்க, “நிலா” என்றான் ஆதிரன்.

“மாமா. எனக்கு அந்த கல்யாணம் வேண்டாம்” என்று சிறுமியாய் அவள் சொல்ல, அதைக் கேட்டு பெரிதாய் அதிர்ந்தவன், “என்ன” என்றான்.

அவனின் மனதில், “இந்த கல்யாணம் மட்டும் நடக்காம போச்சுன்னா, அடுத்து என்ன உசுரோடவே பாக்க முடியாது. எனக்கு சத்தியம் பண்ணி கொடு. இந்த கல்யாணத்துல நீ எந்த ப்ரச்சனையும் பண்ணக் கூடாது” என்று அவன் கையைப் பிடித்து கெஞ்சிய ஒருவருடைய முகமும், வார்த்தைகளும் ஓடியது.

அதற்குள் “ப்ளீஸ் மாமா. எனக்கு அந்த கல்யாணம் வேண்டாம்” என்று மீண்டும் அவனைக் கட்டிக் கொண்டாள் இளநிலா.

ஒட்டு மொத்த சொந்தமும், அவர்கள் வீட்டில் கூடியிருக்க, அவனின் அத்தை மகளோ, இப்போது வந்து, அவனிடம், இந்த திருமணத்தை நிறுத்த கூறுகிறாள். 

உண்மை, நியாயம் என்று இருப்பவன், அத்தை மகளின் பேச்சை கேட்டு, அத்திருமணத்தை நிறுத்துவானா? இல்லை. கொடுத்த வாக்கிற்காக, அவனே அழைத்து சென்று, அவனின் எதிரிக்கே அவளை திருமணம் செய்து வைப்பானா? 

இது எல்லாவற்றிற்கும் மேல், நிலா ஏன் திருமணத்தை நிறுத்த சொல்லி ஆதிரனிடம் வந்து நிற்கிறாள்? நிலாவின் மனதில் என்ன இருக்கிறது? ஆதிரன் என்ன முடிவெடுக்கப் போகிறான்? இந்த அத்தை மகள், மாமன் மகன் இருவரும் இன்னும் என்னவெல்லாம் செய்து, உங்கள் மனதை கொள்ளையிடப் போகிறார்கள் என்பதை, இனி ஒவ்வொரு அத்தியாயமாய், “இம்சிக்காதே என் இளந்தளிரே” நாவலில் பாக்கலாம்.

நாளை முதல் அத்தியாயம் வெளியிடப்படும். தீண்டாதே என் தென்றலே நாவலுக்கு கொடுத்த சப்போர்ட்டை, நிச்சயம், இதற்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிப்பை வெளியிட்டிருக்கிறேன். டீஷரைப் பற்றிய கருத்தை மறக்காமல் தெரிவிக்கவும். 

Author:    1 Sarmi SS
Comments   12

*** குட்டி டீசர் - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com