ஆதிரனின் கையைப் பிடித்து, நிலா பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, அவனோ, அவன் கைக்குள் புகுந்திருந்த, அந்த பிஞ்சு கரத்தைத்தான் பார்த்தான்.
அவன் அதில் அவளை நிமிர்ந்து பார்க்கப் போக, அதற்குள், அவளுடைய மொபைலுக்கு கதிரவனிடம் இருந்து அழைப்பு வந்தது.
அதைப் பார்த்ததும், “அண்ணா” என்று சிறு பதட்டத்துடன் வேகமாய் அவன் கையில் இருந்த கையை உறுவியப்படி அழைப்பை ஏற்றாள்.
இங்கே ஆதியோ, அவள் பிடித்து குலுக்கிய, தன் உள்ளங்கையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பக்கம் அழைப்பில் இருந்தவனோ, “அண்ணே, கேக்குதா, கேக்குதா” என்று கேட்க, அப்போதே இவ்வுலகம் வந்தவன், “ம். நான் சொன்ன மாதிரி பண்ணு” என்றான்.
இங்கே நிலாவிடம், கதிரவனோ, “சாமி கும்பிட்டு முடிச்சிட்டீயா?” என்று கேட்டான். “ம் ண்ணா” என்று அவள் சொல்ல, “செரி. இங்க நான் சின்ன கடை வீதியலத்தேன் நிக்குறேன். அங்க வந்துடு. நானே கூட்டிப் போறேன்” என்றான்.
“சரிண்ணா” என்றவள் போனிலேயே அத்தனை தலையாட்டினாள். ஆதியோ அவன் அழைப்பில் பேசிவிட்டு திரும்ப, இவள் தலையை தலையை ஆட்டிக் கொண்டிருப்பதைத்தான் பார்த்தான்.
அவளின் உயரத்துக்கு, அவள் நிமிர்ந்து பார்த்தாலே, அவள் முகத்தை அவனால் பார்க்க முடியுமா? என்பதே சந்தேகம் தான். ஆனால் அவளோ குனிந்த தலையை நிமிர மாட்டாள்.
அதனால், இப்போது அவன் பார்வையில், அவள் காதில் அணிந்திருந்த அந்த ஜிமிக்கி தோடுதான் பதிந்தது.
அவள் தலையை ஆட்டி ஆட்டி பேச, அதற்கு தகுந்தது போல், அந்த ஜிமிக்கியும் குலுங்கியது. அதை சில நொடிகள் பார்த்தவனுக்கு, அவள் செய்கை, சிறுபிள்ளைத்தனமாய் தான் தெரிந்தது.
கதிரவன் கால்லை கட் செய்தபின், ஆதிரனின் பக்கம் அவள் திரும்ப, “என்ன? உன் அண்ணன் வந்துட்டான்னா” என்றான்.
அதற்கும், அவள் “ம்” என்று தலையாட்ட, “கூட்டத்துல தனியா போயிடுவீயா?” என்று கேட்டான்.
அதன் பின்னே அவள் அந்த வீதியைப் பார்த்தாள். அத்தனைக் கூட்டம், இந்த கூட்டத்திற்குள் புகுந்து, அவள் செல்வதெல்லாம் நடக்கும் காரியமாய் படவில்லை. அதற்கும் மேல், அவள் அண்ணன் நிற்கும் இடத்தை கண்டுப்பிடித்துவிடுவாள் என்றும் தோன்றவில்லை.
நியாயமாய், இதை அவள் அவளின் அண்ணனிடம் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவன் சொல்லியதற்கு, அப்படியே தலையாட்டிவிட்டு, இப்போது பாவமாய் முழித்தாள்.
அதற்குள், அவள் கையை அழுத்திப் பிடித்தவன், “வா” என்று அழைத்து செல்ல, இவளுக்கோ அத்தனைப் பயம். ஏனெனில் அண்ணன் மட்டும், இவனுடன் தன்னைப் பார்த்தால், அடுத்த நொடி அவன் என்ன செய்வான் என்றே தெரியாது. தங்கையை அவன் எதுவுமே சொல்ல மாட்டான். ஏனெனில், அவனுக்கு தங்கை என்றால் உயிர். அது எல்லாவற்றுக்கும் சேர்த்து ஆதிரனிடம் தான் சண்டைக்கு செல்வான்.
ஆனாலும், ஆதியின் கையை விலக்கும் அளவுக்குலாம் அவளுக்கு தைரியம் கிடையாது. அதில் அவள், அத்தனை தயங்கி அவனுடன் நடக்க, இங்கே குறிப்பிட்ட ஒரு கடைக்கு முன்னே சென்று நின்றான்.
“அங்கத்தேன் உன் அண்ணன் நிக்குறான். பாத்து போ” என்று சொல்ல, அதன் பின்னே நிமிர்ந்து பார்த்தாள். கதிரவன் பைக்கில் சாய்ந்து யாருடனோ மொபைலில் பேசிக் கொண்டிருந்தான்.
அதனால், அவன் இவர்களைப் பார்த்திருக்கவில்லை. அதனால், அவளும், பதட்டத்தில் வேகமாய் செல்ல, இங்கே இவனோ, அவள் கையைப் பிடித்திருக்க, இப்போது அவள் கையில் இருந்த மோதிரம், அவன் விரல்களுக்குள் சிக்கியிருந்தது.
அதை அவன் உணர்ந்து, “ஹேய், உன் மோதிரம்” என்று அழைக்க, அந்த கூட்டத்தில், அவளுக்கு கேட்கவில்லை. கேட்டாலும் கூட திரும்பியிருக்க மாட்டாள்.
அதில் அவனோ, “செரியான பயந்தாங்கோலி” என்று சொல்லியவன், அந்த மோதிரத்தை அவன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான்.
அடுத்த முறை பார்க்கும் போது கொடுத்துக் கொள்ளலாம் என்றவன், நிலா கதிரவனின் அருகில் செல்லும் வரையிலும், கூட அங்கேயேத்தான் நின்று பார்த்திருந்தான்.
“என்னத்தா சாமியலாம் கும்பிட்டாச்சா” என்று கதிரவன் கேட்க, “ம்” என்று தலையாட்டினாள்.
“செரி பொறப்படுவோம்மா” என்று அவன் கேட்க, “ம்” என்று அவள் சொல்ல, “வண்டிய ஏறு” என்றான்.
அண்ணனின் பைக்கில் ஏறி அமர்ந்தவள், இப்போது ஆதிரனை சுற்றி முற்றி தேட, அவன் எங்கும் இல்லை. எங்கிருந்து வந்தான்? எப்படி வந்தான்? என்றெல்லாம் தெரியாது. அவளுக்கு ஒரு தேவை என்றால், நிச்சயம் அவன் அவள் முன் இருப்பான். இது இன்று நேற்று அல்ல. எப்போதுமே இப்படி நடக்கும்.
அந்த நினைவில் அவள் சென்றுவிட, இங்கே கதிரோ, இரவு போல் தான் வீட்டுக்கு சென்றான். அங்கே அவனுக்காக அவனின் பாட்டி, தாமரை தூங்காமல் காத்திருக்க, “என்ன பாட்டி? இன்னும் தூங்காம என்னத்த பண்ணிட்டிருக்கீங்க” என்றான்.
“வாய்யா வந்து மொத சாப்டு” என்று தாமரை சொல்ல, இப்போது ஆதிரனோ, “என்ன? பாசம் எல்லாம் செத்த தூக்கலா இருக்கு. எண்ட்ட ஏதாச்சும் பேசனுமா?” என்று கேட்டான்.
“ஏன்யா? நான் என்னத்த சொல்றேன். நீ என்னத்த கேக்குற. வூட்டுல தங்கி பத்து நாளாவுது. அங்க என்னத்த சாப்டீயோ. அதேன்” என்றார்.
அதில் பாட்டியின் கழுத்தை கட்டிக் கொண்ட ஆதியோ, “செரி பாட்டி. எனக்குமே செம்ம பசித்தேன். உங்கையால சாப்பிடனும்னுத்தேன். வெளிய கூட சாப்பிடல. வா வந்து சாப்பாட்ட போடு” என்று டைனிங் ஹாலுக்கு சென்றான்.
உடனே அவரும் வந்து அவனுக்கு பரிமாற, நீண்ட நாட்களுக்கு பின் வயிறார உண்டவன், தட்டில் கை கழுவினான். அதென்னவோ, அவனுக்கு வெளி சாப்பாடு சுத்தமாய் ஒத்துக்கொள்ளாது.
ஆனாலும் வெளியில் தங்கும் நாட்களில், அதை தவிர்க்க முடியாதே. அதனாலையே அங்கு பெரும்பாலும் உணவை குறைத்துக் கொள்வான்.
“ஏன்யா, இப்படி உடம்ப போட்டு கெடுத்து வேல பாக்கனும்னு என்ன இருக்கு? நம்மகிட்ட இல்லாத சொத்தா. குத்தகைக்கு விட்ட காச வாங்கி, பாத்தா ஆகாதா? நீயே போட்டு உன் உடம்ப கெடுத்துக்கனுமா” என்றார்.
“அட என்ன பாட்டி? இப்படி எல்லாம், நம்ம வீட்டு பெரியவங்க யோசிச்சிருந்தா, இன்னேரத்துக்கு, சொத்துன்னு ஒன்னு நமக்கெல்லாம் இருந்திருக்குமோ. அதுவும் போக, நம்ம வயல்ல இறங்கி வேல பாக்குறதுல என்ன தப்பு கெடக்கு. எனக்கு இதுத்தேன் பிடிச்சிருக்கு” என்றான்.
“உன்கிட்டையும், உன் அப்பன்கிட்டையும் என்னால பேசி ஜெயிச்சிட முடியுமா” என்று அவர் அலுத்துக்கொள்ள, “அப்போ என் அம்மாகிட்டன்னா பேசி ஜெயிச்சிடுவீகளா” என்று கிண்டலாய் கேட்டான்.
“க்கும், உன் ஆத்தா, என் மவளா என் வூட்டுல இருக்குற வர, என் பேச்ச கேட்டுத்தேன் இருந்தா, என்னிக்கு உன் அப்பன். அதான் என் தம்பிக்கு கட்டி வெச்சேன்னோ, அன்னியில இருந்து, அவ என் பேச்ச என்ன, உன் அப்பன் பேச்சையே கேக்குறது கிடையாது. உன் அப்பன்னே அவ பேச்ச கேட்டுத்தேன்ன சுத்துறான்” என்று தன் மகளையும், தன் தம்பியையும் வாரினார்.
அதைக் கேட்டு சிரித்த ஆதிரனோ, “அப்பாக்கு. அம்மா மேல அம்புட்டு பாசம்” என்று சொல்ல, “ஆமா ஆமா பொல்லாத பாசம். அதேன். ஒத்த ஆம்பள புள்ளையவும், இங்குட்டு வுட்டுட்டு, அவ கூட சுத்திட்டு கெடக்கான்” என்றவருக்கு, பேரன் மட்டும் இங்கே தனியே இருப்பதில் அத்தனை வருத்தம்.
இங்கே அவனுக்கு சொந்த பந்தத்திற்கு எல்லாம் எந்த கொறைச்சலும் இல்லைத்தான். ஆனால் முக்கிய சொந்தங்கள் எல்லாம், பகையாளியாய் இருக்க, இங்கே அத்தனையையும் தன் பேரன் மட்டுமே தனியாளாய் நின்று பார்க்கிறானே என்ற வருத்தம் அவருக்கு.
“அதேன் நீ என்கூடத்தேன்ன இருக்க. ஏன் என்னைய பாத்துக்கிடுறதுல, உமக்கெதுவும் கஷ்டமா இருக்கா என்ன” என்று சீண்டலாய் கேட்டான்.
“எனக்கென்னடா கஷ்டம்? ஊரையே கட்டி ஆளுற என் ராசன்ன பாத்துக்கிடுறதுல, இப்போ எனக்கென்ன வந்திச்சு. ஆனாலும், உனக்குன்னு ஒருத்திய பாத்து கட்டி வெச்சிட்டா, நீயும் தெனம் வீட்டுக்கு வந்து படுப்ப” என்றவர் மெதுவாய் அவனுடைய கல்யாண பேச்சை ஆரம்பித்தார்.
“பாட்டி. இப்போ எனக்கென்ன வயசாகிடுச்சின்னு. இப்பவே எம்ம கல்யாணத்த பத்தி பேசுறீங்க. தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணிட்டுத்தேன். அடுத்து இதெல்லாம் யோசிக்கனும்” என்றான்.
“க்கும். ஆறு உன் தங்கச்சித்தேன்ன, அப்படியே பண்ணுன்னு சொன்னதும், அப்படியே பண்ணிடுவா. இல்ல. உன் அப்பன்த்தேன், அவளுக்கு கட்டி கொடுத்து அனுப்பிடுவான் பாரு. உன் ஆத்தாக்காரிக்கனக்கா, அவளும் கலெக்டர் ஆயிட்டுத்தேன், கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லிட்டு இருக்கா. இதுல அவீக பாத்து அவெளுக்கு முடிச்சிட்டு, உனக்கு பாக்குறதுக்குள்ள விடிஞ்சிடும்” என்று அலுத்துக்கொண்டார்.
ஏனெனில் அவனின் தங்கைக்கு இப்போதுதான் இருபத்தி இரண்டு வயதாகிறது. அவளுக்கும் வரன் எத்தனையோ வர, ஆனால், நிலாவும் கதிரும், அதை மொத்தமாய் மறுத்துவிட்டனர். மகள் சொந்தக்காலில் நிற்கும் வரை, அவளுக்கு திருமணம் பற்றிய பேச்சை எடுப்பதாக அவர்கள் இல்லை.
இங்கே இவருக்கு ஆதிரனுக்காவது ஒரு திருமணத்தை முடித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் அவனோ கொஞ்சமும் பிடி கொடுப்பதாய் தெரியவில்லை.
“விடு பாட்டி. எனக்குன்னு ஒருத்தி இனிதான் பொறக்கப் போறாளா என்ன? அதெல்லாம் ஏற்கனவே பொறந்திருப்பா. அப்படி ஆறையாச்சும் பாத்தா, கூட்டி வாரேன். நீ கட்டி வை” என்று சீண்டலாய் சொல்லிவிட்டு, அவன் அவனுடைய அறைக்கு சென்றான்.
“க்கும், என்னிக்கு நீ பாத்து, கூட்டிட்டு வர்றது? நீ செரின்னு சொன்னா, நம்ம சொந்தத்துலையே உனக்கு ஏத்த மாதிரி நல்லா படிச்ச பொண்ணா” என்று தாமரை அவனின் பின்னே சென்றார்.
“சொந்தத்துக்குள்ளலாம் எனக்கு பொண்ணு வேண்டாம்” என்று ஆதிரன் சட்டென்று சொல்லிவிட, “ஏன் ராசா, இப்புடி சொல்ற” என்ற தாமரைக்கோ அத்தனை வருத்தம்.
“அட என்ன பாட்டி? ஒருத்தர் வூட்டுல பொண்ணு எடுத்து, இன்னொருத்தர் கோவிச்சிக்கிடுறதுக்கு பதிலா, நம்ம வேற ஊருல பொண்ணு பாக்கலாம்” என்றான்.
“அதுக்கில்ல ராசா” என்று அவர் முடிக்கும் முன்னே, “எனக்கு இப்போதைக்கு, கல்யாணம் வேண்டாம். அப்படியே நான் பண்ணுறதா இருந்தாலும், சொந்தத்துல வேண்டாம்” என்றான் ஆதிரன்.
ஏனெனில், இவன் சொந்தத்தில் திருமணம் செய்தால், அவனின் தங்கையையும், சொந்தத்தில் திருமணம் செய்து வைக்க நினைப்பார்கள். அவனின் தங்கைக்கு, இந்த கிராம வாழ்க்கை எல்லாம் சுட்டு போட்டாலும் வராது. அதற்கும் மேல் அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவும் செய்யாது. அதனாலையே ஆதிரன், அவனுக்கு வரப் போற பெண், சொந்தத்தில் இருக்கவே வேண்டாம் என்ற முடிவெடுத்திருந்தான்.
அதற்கு அவனிடம் இன்னொரு காரணமும் இருந்தது. ஆனால் அவன் அதை சொல்லிக்கொள்ள விரும்பவில்லை.
இங்கே தாமரைக்கும் கூட ஒரு சின்ன ஆசை இருக்கத்தான் செய்தது. இளநிலாவை ஆதிரனுக்கு கேட்டு பாக்கலாம். அப்படியாவது பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் என்று.
ஆனால் பேரன் திட்டவட்டமாய் சொல்லிவிட, அவருக்கோ, அவனின் கல்யாண பேச்சை எடுத்திருக்கவே கூடாதோ என்றே தோன்றிவிட்டது.
அதில் அவர் அவருடைய அறைக்கு சென்றுவிட, இப்போது ஆதியோ, தன் சட்டையை கழட்ட, அவன் பையில் ஏதோ தட்டுப்பட்டது. உடனே அவன் அதை எடுத்துப் பார்க்க, அப்போதுதான் நிலாவுடைய மோதிரத்தை அவளிடம் கொடுக்கவில்லை என்ற நினைவுக்கு வந்தது.
அதில், அதை கையில் எடுத்து அவனுடைய வாட்சின் அருகில் வைத்தவன், “நாளைக்கு அவ காலேஜ் போறப்ப கொடுத்திடனும்” என்று நினைத்துக் கொண்டான்.
அதன் பின்னே, அவன் சட்டையில் ஒட்டியிருந்த குங்குமத்தைப் பார்த்தான். “சட்டையில எப்படி குங்குமம் வந்திச்சு” என்று ஒரு நொடி யோசித்தவனுக்கு, கூட்ட நெரிசலில், நிலா வந்து அவனின் மீதே மோதியது நினைவுக்கு வந்தது.
அதில், அந்த குங்குமத்தைப் பார்த்தவனுக்கோ, காரணமேயின்றி, அவளின் மீது சிறு கோவமும் வந்தது. அதனால், அந்த சட்டையை, துவைக்கும் இடத்தில் சிறு கடுப்புடன் தூக்கி போட்டான்.
(க்கும். உனக்கு ஏன்பா கோவம் வருது? அந்தப்புள்ள உன்னை என்ன பண்ணிச்சு? சரி அடுத்து என்னாகப் போவுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
இம்சிக்குமா?..
Karthiga p
ivan enna ninapula irrukanu puriyaliye 🤔
Keerthi S
ada paiya pulla romba thaan rosam varuthu
Keerthi Keerthi
♥♥♥
Ammu Sathish
சூப்பர்.. அட என்ன ஆதி இப்போ எதுக்கு உனக்கு நிலா மேல கோவம்.. அவ வியன் கூட பேசுனா கோவம். அதுக்கு என்ன காரணம்