காதல் – 3

கத்திரி வெயிலில், வாடி வதங்கி நிழலுக்காக, ஓடி ஒதுங்கிய பலருக்கு மத்தியில், மிகவும் கூலாக, காலையில் தன்னை ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றதை, ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், தன் பி,எம் டபிள்யூ காரில், எந்த அளவுக்கு சத்தமாக வைக்க முடியுமோ? அந்த அளவுக்கு சத்தமாக அலறிக் கொண்டிருந்தது, ஹிப்பாப் தமிழனின் பாடல் வரிகள்!. 

உள்ளே அமர்ந்து அந்த பாடல் வரிகளுக்கேற்ப, தலையை ஆட்டிக் கொண்டும், அந்த பாடல் வரிகளை ஹம் செய்துக்கொண்டே ‘காரினை’ அதிவேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான், முகிலன். 

அவனருகில், “எப்ப உங்ககிட்ட வேலைக்கு சேர்ந்தேனோ? அப்பவே என் பேர்ல இன்சூரன்ஸ் கிளைம் பண்ணிட்டேன்” என்று மனதில் நினைத்துக் கொண்டு முகிலனிடம், அன்று நடக்கவிருக்கும், முக்கிய மீட்டிங்கை பற்றியும், நாளை நடக்கவிருக்கும், இன்டெர்வியூ பற்றியும், சொல்லிக் கொண்டே வந்தான், முகிலனின் பிஏவான “வேந்தன் என்ற கிஷோர் வேந்தன்”. 

அப்போது திடீரென வண்டியை நிறுத்திவிட்டு, “மிஸ்டர். வேந்தன், நாளைக்கு சொல்லியிருந்த, அந்த இன்டெர்வியூ-வ கேன்சல் பண்ணிடுங்க. எனக்கு வேற வேலை இருக்கு” என்றான்.

அதில், அதிர்ந்து, “என்ன பாஸ்” என்று அவன் பேச முயன்றான். 

“இப்போ நீங்க இறங்கி, உங்க வண்டியில வரலாம்” என்று முகிலன் கண்ணை வெளியில் காமித்தான். 

“பாஸ்” என்று வேந்தன் ஏதோ சொல்ல வர, அதை காதில் வாங்காது, கன்னக்குழி விழ அழகாய் சிரித்தான்.

அவன் புன்னகைக்கும், மாயகண்ணனின் புன்னகைக்கும் பெரிதாய் வித்தியாசத்தை கண்டுப்பிடித்துவிட முடியாது.

அதில் வேந்தனே ஒரு நொடி, தன்னை மறந்து அவனைப் பார்க்க, முகிலனோ, அந்த புன்னகை முகம் மாறாமலே “வேந்தன், நீங்க என்னதான் உங்க பேர்-ல இன்சூரன்ஸ் எடுத்திருந்தாலும், அதை இன்னும் நீங்க ரினீவல் பண்ணலன்னு நினைக்கிறேன். சோ நீங்க அத முடிச்சிட்டு, என் வண்டியில வாங்க. இப்ப நீங்க போகலாம்” என்று சொல்லிவிட்டு அவன் பாடலை தொடர்ந்தான்.

அப்போதே சுயம் பெற்ற வேந்தனும், மறு பேச்சின்றி இறங்கி பின்னால் வந்த காரில் ஏறிக்கொண்டான். 

ஏனெனில் இது அவனுக்கு மிகவும் பழக்கமான ஒன்று தான். 

முகிலனுக்கு அவனுடன் மற்றொருவர், எப்போதும் உடன் இருப்பதை பெரிதும் விரும்பமாட்டான். 

பி.ஏ என்றாலும், அவன் அழைக்கும் நேரம் வந்தால் போதும். தேவைகள் இருந்தால் மட்டுமே அவர்களை வரவைப்பான். பெரிதாக அடுத்தவர் வேலையில் தலையிட மாட்டான். அதற்கும் மேல், அவன் வேலையில் யாரையும் தலையிடவிடமாட்டான். 

இன்னும் சொல்லப் போனால், அவனைப் பற்றி முழுதாய் அறிந்தவர்கள் என்று இதுவரை, யாரும் அவன் முன் இருந்ததில்லை.

வேந்தனை இறக்கிவிட்டு விட்டு, முகிலன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான். 

அவன் கார் சென்றுக் கொண்டிருந்த திசைக்கு நேரெதிர் திசையில், இருந்த ஒரு அழகிய வீட்டில், ஒரு கையில் காபியுடனும், மறுகையில் கோப்புகளுடனும் பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து, மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

“மித்துமா” என்ற அவள் அம்மாவின் குரலில், கவனம் கலைந்து நிமிர்ந்து பார்த்தாள் மித்ரா.

அங்கே, பார்த்தவுடன் கையெடுத்து கும்பிடத்தோன்றும் தெய்வீக முகத்தோடும், கனிவின் சாயலோடும், ஒரு நாற்பத்தி ஐந்து வயது நிரம்பிய ஒரு பெண்மனி கையில் சாப்பாட்டுத் தட்டுடன், நின்று கொண்டிருந்தார். 

அவர் தான் மித்ராவின் அம்மா கிருபாவதி. அவருக்கு பின்னால், ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க, ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். அவர் மித்ராவின் தாத்தா தயாளன். 

“என்னமா? எல்லாரும் சேர்ந்து வந்திருக்கீங்க? என்ன விசயம்?” என்று மித்ரா நிமிர்ந்து பார்த்து கேட்டுவிட்டு, பின் அவர்கள் பதிலுக்கு காத்திராமல் அவள் வேலையை தொடர்ந்தாள். 

“எல்லோருமா? வீட்ல இருக்கிறதே நம்ம மூனு பேர் தான். அதுலையும், உன்ன சொல்லவே வேண்டாம். வீட்ல இருந்தாலும், கோர்ட்-ல இருக்கிற மாதிரி தான். இன்னிக்கு ஒரு நாள் தான் நீ வீட்ல இருக்க. உன் கூட ஒன்னா சாப்பிடலாம்-னு பாத்தா, இன்னிக்கும் நீ அந்த files கூடதான் உட்கார்ந்திருக்க” என்றார் கிருபாவதி.

“என்ன தாத்தா. அம்மா சொல்ல வந்தத சொல்லிட்டாங்க. நீங்களும் ஏதாச்சும் சொல்லனும்னா சொல்லுங்க. உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து பதில் சொல்லிட்டு என் வேலைய பார்ப்பேன்” என்று சொல்லியவளின், குரல் என்னவோ அவர்களுக்கு என்றாலும், பார்வை என்னவோ அந்த கோப்புகளில் தான் இருந்தது. 

“என் பேத்திகிட்ட பேசி நான் ஜெயிக்க முடியுமா? என் பேத்தி யாரு, அப்படியே என் மருமகன் மாதிரி. என்ன! அவருக்கு தான் இதெல்லாம், கூட இருந்து பார்க்க கொடுத்து வைக்கல” என்று சொல்லியவரின் பார்வை மித்ராவின் மீது பதிந்து, அப்படியே அவள் பின்னால் சட்டத்தில் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படத்திலும் பதிந்தது. 

அதில் மித்ராவின் தந்தையின் தோற்றம் மற்றும் மறைவு தேதி பொறிக்கப்பட்டிருந்தது. 

அதில், மித்ராவின் கவனமும் ஒரு நொடி தந்தையின் பக்கம் சென்றது. தந்தையின் நினைவில், ஒரு நொடி கண்களை அழுந்த மூடி திறந்தவள், தன் கையில் இருந்த பைலை மூடி வைத்துவிட்டு, தாத்தா, அம்மாவின் அருகில் வந்தாள். 

“இப்ப என்ன. மூணு பேரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடனும் அவ்வளவுத்தான. சரி வாங்க எல்லோரும் ஒன்னாவே சாப்பிடலாம்” என்று அவர்களை மேற்கொண்டு எதுவும் பேச விடாமல், அந்த உரையாடலை அத்துடன் முடித்திருந்தாள்.

ஏனெனில், அவர்களை அப்படியே விட்டால், பின் பேச்சு கடைசியில் எங்கு வந்து முடியும் என்று அவளுக்கே தெரியும். வழக்கறிஞர் அல்லவா, அதனால் அழகாய் அவர்களை திசைதிருப்பியிருந்தாள். 

அதே நேரம், அதே சென்னை மாநகரத்தில், உள்ள அடையாரில், மிகப்பெரிய மாடமாளிகை என்று சொல்லும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய பங்களா இருந்தது. 

அந்த பங்களாவின் இரும்பு காம்பவுன்ட் கேட்டுகளுக்கும், இருபதில் இருந்து முப்பது சிபேரியன், பாக்சர்ஸ், டாபர்மென், மற்றும் ரோட்வீலர் என்று செல்லமாய் அழைக்கப்படும் விதவிதமான நாய்களின் கூட்டத்திற்கும், பாடி கார்ட்ஸ் என்ற இருபது முப்பது அடியாட்களுக்கும், நுழைவாயிலில் எப்போதுமே நிற்கும் துப்பாக்கி ஏந்திய வாயில் காவலர்களுக்கும் மத்தியில், அமைதியின் மறு உருவாய், மங்களகரமாய் கையில் தீபாதரனை தட்டோடு பூஜை அறையில் இருந்து வெளியே வந்தார்.  வந்தனா எனும் வந்தனா யோக நந்தன், முகிலனின் அம்மா. 

அன்னேரம் “வந்தனா” என்று அந்த பெரிய ஹாலில் நின்று கையில் மொபைலையும், வாட்சையும், மாறி மாறி பார்த்துக் கொண்டு, அழைத்தார், யோக நந்தன், முகிலனின் அப்பா. 

“இந்தா வந்துட்டேங்க” என்று அவர் முன் வந்து நின்ற வந்தனா கையில் வைத்திருந்த குங்குமத்தை அவர் நெற்றியில் பூசிவிட்டு, “பார்த்து போயிட்டு வாங்க” என்றார்.

“இப்படி உன்ன பாத்துகிட்டே இருந்தா, நான் எப்படி போறது?” என்று அவர் தன் மனைவியை செல்லமாக சீண்டினார். 

“ச்.. போங்க, உங்களுக்கு இன்னும் சின்ன பையனு நினைப்பு. கல்யாண வயசுல உங்களுக்கு ஒரு பையன் இருக்கான்” என்று வந்தனா, முகத்தில் வெட்கத்தோடும், வார்த்தையில் கண்டிப்போடும் கூறினார்.

மகன் என்ற வார்த்தையில் அவர் முகம் கடுமை பூசிக்கொள்ள, அதை புரிந்துக் கொண்ட வந்தனாவும், “சரி சரி. நேரம் ஆச்சுன்னு சொன்னீங்களே. போயிட்டு வாங்க” என்று அவரை வழியனுப்பி வைத்தார். 

பின் ஹாலில் நடுநாயகமாக, இருந்த முகிலனின் முழு உருவ புகைப்படத்தை பார்த்து மெல்ல அதன் அருகில் சென்றார்.

அதை மெல்ல வருடியவருக்கு கண் கலங்கியது. ஆசை மகன் கண் முன்னே இருந்தும், அவனிடம் சொந்தம் கொண்டாட முடியாத வருத்தம் அவர் முகத்தில் தெரிந்தது. 

அதில் பூஜையறை பக்கம் திரும்பி, “கடவுளே நீ தான் அவன் மனச எப்படியாச்சும் மாத்தி, எங்ககூட சேர்த்து வைக்கனும். இப்படி ஒரே வீட்ல இருந்தும், யாரோ, எவரோ மாதிரி இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கிறது?” என்று அவரின் மனச்சுமையை அந்த கடவுளின் காலடியில் இறக்கி வைத்தார். 

“பல காயங்களுக்கான மருந்து, ஆறுதலாலோ, அக்கறையாலோ, மட்டும் கிடைப்பதில்லை. காலங்கள் தான் அதை நீக்கும் ஆகச்சிறந்த மருந்தாகும்”

அப்படித்தான் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த, அந்த இருபது மாடி கட்டிடத்தின் உச்சியில் ‘முகிலன் குரூப் ஆப் கம்பெனிஸ்’ என்று பொன் எழுத்துகளில் அழகாய் பொறிக்கப்பட்டிருந்ததை, ரசனையாய் பார்த்து சென்றது, அந்த வழியில் சென்றுக் கொண்டிருந்த இரு விழிகள்!!!. 

அதெல்லாம் வெறும் சில நொடிகள் தான். பின் வழக்கம் போல் அதை அடக்கி, வழமைக்கு வந்த அந்த ஜீவன், கடமையே கண்ணென வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்டது.

அதே நேரம். அந்த கம்பெனியின் வாயிலில் பெரிய கூட்டமே நின்றுக் கொண்டிருந்தது. 

“என்ன சார். கோர்ட்க்கு போற வழிய மறந்துட்டீங்களா? இங்க வந்து வண்டியை நிப்பாட்ட சொல்றீங்க” என்று மதியரசி, தன் அருகில் அமர்ந்திருந்த இஷாந்தை பார்த்து கேட்டாள்.

அவனோ, அதை கொஞ்சமும், கண்டுக்கொள்ளாமல், தாங்கள் வந்திருந்த ஆட்டோவிற்கு காசை கொடுத்துவிட்டு, “என்ன? வந்த ஆட்டோலையே திரும்பி போறதா எதுவும் ப்ளானா? அப்படியிருந்தா, நீயே ஆட்டோ காசு கொடுத்திடு” என்று சொல்லிவிட்டு, அவன் விருவிருவென முன்னாடி செல்ல, மதியரசியோ வேறு வழியில்லாமல், அவன் பின்னால் சென்றாள்.

“சார்” என்று மதியரசி விடாமல், கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அவனோ எதுவும் சொல்லாமல், வேகமாக அந்த கம்பெனியின், ரிசப்ஷன் நோக்கி சென்றான். 

அதில் கடுப்பானவளோ “இவன்கிட்ட கேக்கிறதுக்கு, இங்க இருக்கிற யார்டையாச்சும் கேட்கலாம்” என்று தனக்குள் முனுமுனுத்தப்படி சுற்றிப் பார்த்தாள் மதியரசி. 

அப்போது அவளை கிராஸ் செய்து இருவர் செல்ல, “ம் இவங்ககிட்ட கேக்கலாம்” என்றப்படி “ஹலோ” என்று மதியரசி கூப்பிட அவன் காதில் வாங்காமல் சென்றான்.

உடனே வேகமாய். “ஏய் சிவப்பு சட்ட உன்னைத்தான்” என்று அவள் கொஞ்சம் சத்தமாய் கத்தினாள். 

அதில் அந்த சிவப்பு சட்டையின் அருகில் நின்றவன், “சார். ஐ திங். தட் கேர்ள் கால்ஸ் யூ” என்று சற்று தர்மசங்கடமாக கூறினான். 

அதன் பின்னே அவனும் திரும்பி மதியரசியைப் பார்த்தான்.

பார்த்தவனுக்கு தோன்றியது இது தான். 

“முழுதாய் ஐந்து அடி இருப்பாளா இந்தப்பெண்?” என்று அவனின் ஆறடி உயரத்திற்கு முன் சிறு பெண்ணாய்,  நின்ற மதியரசியை, ஆராயும் பார்வை பார்த்தான். அந்த நெடியவன்.

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, மதியரசியோ, “ஹலோ உங்களதான்” என்று அவன் அருகே சென்றாள்.

ஆனால் அவனோ குழப்பமாய் அவளைப் பார்த்திருக்க, அவளோ “ஆமா இங்க என்ன நடக்குது?” என்று அவள் அமர்ந்திருந்த இடத்தில் இருக்கும் வரிசையையும், வெளியில் நிற்கும் கூட்டத்தையும், கை காட்டி கேட்டாள். 

“வாட்?” என்று அந்த நெடியவன் கேட்க, “ஓ உனக்கு காது கேக்காதா, இல்ல தமிழ் தெரியாதா?” என்று மதி சந்தேகமாய் கேட்டாள். 

அதற்குள் அங்கு வந்த இஷாந்த் “ஏய் உன்ன நான் இங்கதான நிக்க சொன்னேன். அதுக்குள்ள எங்கப்போன? வா” என்று அவள் கைப்பிடித்து இழுத்து சென்றான்.

அதில் செல்லும் அவளையே அசையாது பார்த்த அந்த நெடியவன், “சில்லி கேர்ள்” என்று அவனுக்குள் சொல்லி சிரித்தான். 

(யார் இந்த நெடியவன்? மதியரசிக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? மித்ரா முகிலன் சந்திப்பார்களா? இப்படி அத்தனை கேள்விக்குமான பதிலை அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி, இந்த பர்ஸ்ட் எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க

தொடரும்…

Author:    1 Sarmi SS
Comments   4

*** காதல் – 3 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com