அசுரன் – 5

தன் கஷ்டத்தை சொல்ல, கோவிலுக்கு வந்த அஞ்சலியின் கன்னத்திலேயே ஓங்கி அடித்திருந்தான், அத்விக் அதிரூபன்.

வாங்கிய அடியில் தடுமாறி அவள் கீழே விழுந்திருக்க, “யார்கிட்ட ப்ரச்சன பண்ணியிருக்க தெரியுமா?” என்று கேட்ட அத்விக்கோ, மீண்டும் அவளை அடிக்க சென்றான்.

அதற்குள்ளாக, அங்கு ஓடி வந்த நேசமணியோ, “சார் சார். இந்த பொண்ணு இல்ல சார். அந்தப் பொண்ணு இப்பதான் கோவில விட்டு கெளம்பி போனாங்க” என்றான்.

“என்ன?” என்று கேட்ட அத்விக்கோ, இப்போது அவன் கன்னத்திலும் ஓங்கி அடித்தான்.

இங்கே அஞ்சலிக்குத்தான் சுத்தமாய் எதுவும் புரியவில்லை. 

அவன் அடித்த அடியில், இவள் கன்னம் சிவந்து எரிய ஆரம்பித்தது.

“ஒரு விஷயத்த ஒழுங்கா சொல்ல மாட்டீயா?” என்று அத்விக், நேசமணியை திட்டினான்.

“இல்ல சார். அத சொல்லத்தான் வந்தேன். ஆனா அதுக்குள்ள, நீங்க இந்தப் பொண்ண அடிச்சிட்டீங்க” என்று கூறினான் நேசமணி.

அதில் அப்போது தான். கீழே விழுந்த அஞ்சலியின் பக்கம் பார்வையை திருப்பினான். அப்போதும் அவன், அவள் முகத்தை எல்லாம் பார்க்கவில்லை. 

அவள் போட்டிருந்த ட்ரஸ் கலரைத்தான் பார்த்தான். 

“இவள யாரு, இந்த கலர் ட்ரஸ்ல வர சொன்னது. அதனாலத்தான், அவ என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டா” என்று எரிச்சலாய் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“ஒரு நிமிஷம்” என்று அழைத்தது, சாட்சாத் அஞ்சலியே. 

அவளின் குரல் கேட்டும் திரும்பாமல், “அவெளுக்கு ஏதாச்சும் காச வீசிட்டு வா” என்று கடுப்பாய் சொல்லிவிட்டு அத்விக் நகர முயன்றான்.

அதற்குள்ளாக, அவனின் கையைப் பிடித்திருந்தாள் அஞ்சலி. 

அவனுக்குத்தான், அவன் அனுமதியின்றி, அவனை யார் தொட்டாலும் பிடிக்காதே.

“ஹேய்” என்று கோவமாய் அவன் கையை உதற முயற்சிக்க, “என்ன எதுக்கு அடிச்சீங்க?” என்று கேட்டப்படி, இன்னுமே அவன் கையை அழுத்திப் பிடித்தாள்.

அதில், இவனுடைய கோவம் ஏகத்துக்கும் ஏற, “ஹேய், எவ்ளோ தைரியம் இருந்தா, என் மேல கைய வெச்சிருப்ப” என்று சொல்லியப்படி அத்விக் திரும்ப, அவன் கன்னத்தில், பளாரென்று அடித்திருந்தாள் அஞ்சலி.

அதை, நிச்சயம் அத்விக் எதிர்பார்த்திருக்க மாட்டான். அத்விக் மட்டும் அல்ல, நேசமணியும் எதிர்பார்த்திருக்கவில்லை. இத்தனை ஏன்? அஞ்சலியே அதை எதிர்பார்த்திருப்பாளா? என்பது சந்தேகமே.

அவளே, வீட்டில் இருக்கும் கஷ்டம் தாங்காமல் தான், இங்கு வந்தாள். இவனோ, அவளை அடித்தது மட்டும் இல்லாமல், காசை தூக்கி வீச சொல்கிறான். 

அனைவருக்கும் அவளைப் பார்த்தால், எப்படி தெரிகிறது? உள்ளுக்குள் வைத்திருந்த கோவம் எல்லாம், அந்த ஒரு அடியில் வெளி வந்திருந்தது.

அத்விக்கின் நிறத்துக்கு, இவளின் விரல்கள் தன் தடத்தை, அழகாய் கன்னத்தில் பதித்திருக்க, அவனின் முகம் மட்டும் அல்ல, உடலே எரிந்தது.

வாங்கிய அடியில் நிமிர்ந்துக் கூட பார்க்காது அப்படியே நின்றிருந்தான். அவளும் கோவத்தில் தான் நின்றிருந்தாள்.

வாழ்க்கையில் அவன் வாங்கிய இரண்டாவது அடி, அது. 

அவன் சிறு வயதில் இருக்கும் போது அவன் அன்னை ஒரு முறை அடித்திருக்கிறார்.

அதன் பின், இவள் தான் அவனை அடித்திருக்கிறாள். அதனால் அவனின் மூளை சட்டென்று வேலை நிறுத்தம் செய்திருந்தது.

“உங்க மனசுல எல்லாம், என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? பணம் காசு இருந்தா, யார வேணும்னாலும், உங்க இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் பண்ணலான்ற நெனப்பா. எங்ககிட்ட உங்க அளவுக்கு பணம் இல்லாம இருக்கலாம். ஆனா, உங்கள விட, மான மரியாத எங்களுக்கு அதிகமாவே இருக்கு. இன்னொரு தடவ, இப்படி யார்ட்டையாச்சும், உன் பணத்திமிர காமிக்க நெனச்சா, இந்த அடிய ஞாபகத்துல வெச்சிக்கோ” என்று கோவமாய் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றாள் அஞ்சலி.

இங்கே நேசமணிக்குத்தான், கண் முன்னே கண்ட காட்சியை நம்பமுடியவில்லை.

சில நொடிகளுக்கு பின்னே சுயம் பெற்ற அத்விக்கோ, கோவமாய் “எங்க அவள?” என்று சுற்றி முற்றிப் பார்த்தான்.

கோவிலில் பெரிதாய் கூட்டம் இல்லாமல் இருந்தாலும் கூட, சில பேர் அதைப் பார்த்திருந்தனர்.

அவ்வளவுத்தான், இவனுடைய உடல் எல்லாம் இறுக ஆரம்பிக்க, வாசலை தாண்ட சென்ற அஞ்சலியின் கையைப் பிடித்தான்.

உடனே அவள், “ஹேய் என் கைய விடு” என்று உதறப் போக, விடாது அழுத்திப் பிடித்தவன், “என்னால என்னப் பண்ண முடியும்னு கேட்டதான” என்று கேட்டான்.

அப்போதுதான் அஞ்சலி அவன் முகத்தைப் பார்த்தாள். அன்று அரை மயக்கத்தில் பார்த்திருந்ததால், பெரிதாய் நினைவில் இல்லை.

ஆனால் இப்போது அவன் யார் என்று நினைவுக்கு வர, நிதர்சனம் முகத்தில் அடித்தது.

“என்ன பண்ணி வெச்சிருக்க அஞ்சலி” என்று மனசாட்சி கேள்வி கேட்க, அதற்குள் அவள் கையைப் பிடித்து தர தரவென்று கோவிலுக்குள் இழுத்து சென்றான்.

“ப்ளீஸ், என்ன விடுங்க” என்று அஞ்சலி கெஞ்ச, அவனோ, அவள் எங்கு வைத்து அவனை அடித்தாளோ? அந்த இடத்தில் வந்து, பிடித்திருந்த கையை விட்டான்.

அவன் விட்டதும், அவள் மீண்டும் தடுமாறி கீழே விழ, “என்ன சொன்ன? உனக்கு என்னை விட மானம் ரொம்ப அதிகமா இருக்குன்னு சொன்னல்ல. இப்போ இந்த இடத்துல வெச்சி, உன்னோட மொத்த ட்ரஸையும், என்னால கழட்ட வைக்க முடியும். பண்ணட்டா” என்று கர்ஜித்தான் அத்விக்.

அப்போதும் அவன், அவள் முகத்தைப் பார்க்கவில்லை. ஒரு வேளை பார்த்திருந்தாலாவது, அவள் மீது இரக்கம் வந்திருக்குமோ என்னமோ?

சுற்றி இருந்தவர்கள் அத்தனைப் பேரும் பார்த்தார்களே தவிர, யாரும் ஒரு அடி முன் வைக்கவில்லை. 

“சொல்லுடி, உன் ட்ரஸ கழட்டி, உன்னோட மானத்த ஊருக்கே காமிக்கட்டா” என்று அவன் கத்த, இவளுக்கோ அந்த வார்த்தைகளை கேட்கவே உடல் கூசியது.

அதிலும் அவன் கண்ணில் தெரிந்த அந்த தீவிரம், அவன் செய்துவிடுவான், என்பதை சொல்லியது.

“மன்னிப்பு கேட்ரு அஞ்சலி” என்று மனம் எடுத்துரைத்தது. “நான் என்ன தப்பு பண்ணேன்?” என்று அவளின் இன்னொரு மனம் கேள்வி கேட்டது.

அதற்குள், “என் பர்மிஷன் இல்லாம, என்ன ஒருத்தர் தொட்டாலே எனக்கு பிடிக்காது. ஆனா, நீ இத்தன பேர் முன்னாடி, என்ன அடிச்சிட்டல்ல. இதுக்கு, நான் கொடுக்கப் போற தண்டனைய நீ வாழ்க்க முழுசும் மறக்க கூடாது” என்றான்.

அவன் நிதானத்தில் சுத்தமாய் இல்லை. அவனை அவள் அடித்தது மட்டுமே, மீண்டும் மீண்டும் கண்ணுக்குள் வந்து நின்றது. 

“சிட்” என்றவன், அங்கும் இங்குமாய், சில அடிகள் நடந்தான். அவள் முகத்தைப் பார்க்ககூட தோன்றவில்லை.

சட்டென்று அவனின் செவியில், “பூஜைக்கு நாழியாகறது... நல்ல நேரம் முடியறதுக்குள்ள இந்த மங்கல நாண, சாமிக்கு சாத்திடுங்கோ” என்ற குரல் அவன் காதில் விழுந்தது.

அதில் விறுவிறுவென்று சாமி சன்னதியை நோக்கி சென்றான். அஞ்சலியோ புரியாது அவனைப் பார்த்தாள்.

சன்னதியின் முன்னே இருந்த தாலியை எடுத்தவன், மீண்டும் அஞ்சலியின் முன்னே வந்து நின்றான். அப்போதும் அவன் அவளைப் பார்க்கவில்லை.

“என்ன மன்னிச்சிடுங்க” என்று அஞ்சலி சொல்லி முடிக்கும் முன்னே, அந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டியிருந்தான்.

என்ன நடந்தது, என்று அவள் யூகிக்கும் முன்பே, அவளை இழுத்துக் கொண்டு, சன்னதி முன் சென்றவன், அங்கிருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்தான்.

அப்போதாவது, அவள் முகத்தைப் பார்த்திருக்கலாம். ஆனால் அவனுக்கோ கோவம் கண்ணை மறைத்திருந்தது.

எந்தளவுக்கு என்றால், அவள் அணிந்திருந்த உடையைத் தாண்டி, அவனின் நினைவில் வேறு எதுவுமே இல்லை. அதைப் பார்த்த நேசமணிக்குமே எதுவும் புரியவில்லை. 

அவள் குனிந்து தாலியைப் பார்க்க, அவள் முன்னே சொடக்கிட்ட அத்விக்கோ, “என்ன? உன் மானத்த வாங்குறேன்னு சொல்லிட்டு, உன் கழுத்துல தாலி கட்டியிருக்கேன்னு பாக்குறீயா” என்று நக்கலாய் கேட்டான்.

அவன் கண்ணில் அப்பட்டமான கோவம் மட்டுமே தெரிந்தது. அஞ்சலிக்கோ, இன்னும் நடந்ததையே கிரகிக்க முடியவில்லை. அதனால், குனிந்ததலை நிமிராது அப்படியே நின்றிருந்தாள்.

“என்னால என்னப் பண்ண முடியும்னு கேட்டல்ல, இப்போ இந்த second, இங்க நடந்த இந்த பொம்ம கல்யாணத்துல, உன்ன ஒரு பொம்மையா நிக்க வச்சேன்னா, அதே மாதிரி இப்போ உன்ன, விதவையாக்கி காமிக்கட்டா” என்று கேட்டவன், அவள் நெற்றியில் அவன் வைத்துவிட்ட, குங்குமத்தை அழித்தான்.

அவளோ மிரண்டு போய் அவனைப் பார்க்க, அடுத்த நொடி அவன் கட்டிய தாலியை பிடுங்க கை வைத்தான்.

“அபச்சாரம் அபச்சாரம்! அம்பாள் சந்நிதானத்துல நின்னுண்டு, என்ன பாவம் பண்ணிட்டு இருக்கே” என்றார் ஐயர்.

அதற்குள்ளாக இன்னும் சிலர் கூட, “கோவில்ல வெச்சி ஒரு பொண்ணோட தாலிய பறிக்குறது மகா பாவம். அதையும் கட்டுனவனே பறிக்குறது, கோவிலுக்கே பாவம் வந்து சேரும்” என்றனர்.

அதில், இப்போது அத்விக்கோ கோவமாய் அவர்கள் பக்கம் திரும்பி, “உயிர் மேல ஆச இருந்தா, அப்படியே போயிடுங்க” என்று உறுமினான்.

“நமக்கெதுக்கு, பெரியாளுங்க சமாச்சாரம் எல்லாம்” என்று அவர்கள் சொல்லிவிட்டு கிளம்ப, இப்போது அத்விக்கோ, அஞ்சலி பக்கம் திரும்பினான்.

ஆனால், அங்கே அவள் இல்லை. அதில் அவன் சுற்றி முற்றிப் பார்த்தான். அங்கு அவள் இல்லாமல் போக, வேகமாய் கோவிலுக்கு வெளியில் வந்தான்.

அங்கேயும் அவள் இல்லாமல் போக, “அதுக்குள்ள எங்க போனா” என்று தனக்குள் யோசித்தப்படி சுற்றி முற்றி தேடினான்.

அதற்குள், அத்விக்கிற்கு, தங்கை யாஷிகாவிடம் இருந்து அழைப்பு வந்தது. 

உடனே வேகமாய் அட்டண்ட் செய்து, “சொல்லுமா” என்றான். 

அந்தப் பக்கம் அவள் என்ன சொன்னாளோ? 

இவன் வேகமாய் “உடனே நா வரே. நீ tension ஆகாத” என்று கால்லை கட் செய்தான். 

பின் மீண்டும் ஒரு முறை அந்த கோவிலைப் பார்த்தவன், “இன்னொரு தடவ என் முன்னாடி வரட்டும், அவெளுக்கு நரகம்னா என்னென்னு காமிக்கிறேன்” என்று கர்ஜித்தான். 

ஆனால், முகம் தெரியாத அந்தப் பெண், அவன் கண் முன்னே வந்து நின்றால் கூட, அவனுக்கு தெரியப் போவதில்லை என்பதை மறந்திருந்தான்.

அதற்குள் நேசமணியும் வந்திருக்க, காரை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தனர்.

அவன் கார் கண்ணை விட்டு மறைந்ததும், அந்த பூக்கடையின் பின்னே இருந்து வந்தாள் அஞ்சலி.

அவள் கண்ணெல்லாம் கலங்கியிருந்தது. ஒரு நாளில், அவளும் எத்தனை கஷ்டத்தைத்தான் சமாளிப்பாள்.

ஏற்கனவே அவள் வாழ்க்கை என்னவாகப் போகிறதோ? என்று தெரியாமல்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.

இப்போது, இந்த அத்விக் வேறு அவன் பங்கிற்கு, அவள் வாழ்க்கையில் விளையாண்டு வைத்துவிட்டு சென்றிருந்தான்.

கழுத்தில், அவன் கட்டிய தாலி, அவள் நெஞ்சை இன்னும் பாரமாக்கியது.

“கழட்டி வீசிடு அஞ்சலி” என்று ஒரு மனம் சொல்ல, “அது தாலி அஞ்சலி” என்று இன்னொரு மனம் கெஞ்சியது.

சத்தியமாய் அவளால் முடியவில்லை. அப்படியே தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

(அத்விக் ஏன் இப்படி செய்தான்? இதனால் அஞ்சலியுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றம் வரப் போகிறது? அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தேவதை வருவாள்…

Author:    1 Sarmi SS
Comments   6

*** அசுரன் – 5 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com