இளந்தளிர் – 7

செம்பாவும், இளநிலாவும் வேடிக்கைப் பார்த்தப்படி நடந்துக் கொண்டிருக்க, வெற்றியோ ஆதியிடம் அவளை கண் காட்டினான்.

அதில் வெற்றியின் தலையிலையே தட்டியவன், “பொம்பள புள்ளைய பாத்து என்னல்ல பேசுற நீ?” என்றான். “ஐயோ இல்லங்கண்ணே. பாட்டி, பியூட்டின்னு ரைமிங்ல வந்திருச்சு. மத்தப்படி, அது என்னோட தங்கச்சிண்ணே” என்றான்.

அதற்கும் ஆதி முறைக்க, “அட எண்ணண்ணே, பேசாங்காட்டி, தங்கச்சி கையில கொடுத்து, பூஜைய முடிச்சிடலாம்ண்ணே” என்றான் வெற்றி.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ போயி பாட்டிய கூட்டி வா” என்று வெற்றி சொல்ல, “வெற்றி சொல்றது செரிதான்ன ராசா. வாழப்போற புள்ள கையில, கொடுத்து வாங்குனா, புன்னியம்த்தேன்ன” என்று ஒரு பாட்டியும், கூறினார்.

அதில் ஆதியோ அப்போதும் தயங்க, “சூரியன் மறையிறதுக்குள்ள, பூஜைய முடிக்கனும் தம்பி” என்று மற்றொருவர் கூறினார்.

அதனால் வேறு வழியின்றி, “அவீகள கூப்பிடு” என்று ஆதிரன் சொல்ல, “உங்க அத்தப்புள்ளைய நான் எப்படின்னே கூப்பிடுறது” என்று வெற்றி சீண்டலாய் கூறினான்.

“இப்போ நீ கன்னம் பழுத்துத்தேன், இன்னிக்கு வூடு போய் சேரப் போற” என்று கோவமாய் ஆதி சொல்ல, “தங்கச்சி” என்றான் வெற்றி.

அங்கே, செம்பாவோ, “ஐ அண்ணே வயல்ல பூஜா நடந்துட்டு இருக்கு. வாடீ. அங்கப் போனா, சாந்தி ஸ்வீட்ஸே கெடைக்கும்” என்றாள்.

அப்போதே ஆதியின் பைக்கை, அவள் பார்த்திருக்க, அதிலேயே அடுத்த அடி எடுத்து வைக்காது, அங்கிருந்து திரும்ப முயன்றாள்.

“ஹேய் எங்கடிப் போற” என்று செம்பா கேட்க, “நான் அந்த வழியா வூட்டுக்கு போறேன்” என்றப்படி நகர, “அம்மா தங்கச்சி” என்று கத்தினான் வெற்றி.

அப்போதும் அவளுக்கு கேட்கவில்லை. கேட்டாலும், அவள் நின்றிருக்க மாட்டாள். ஏனெனில், அவளுக்கு நன்றாக தெரியும். எப்படியும் அவளின் அண்ணன், பக்கத்து தோட்டத்தில் தான் இன்னேரம் இருப்பான்.

தப்பி தவறி, இவளுடன் ஆதியை பார்த்துவிட்டால் அவ்வளவுத்தான். அதனாலையே அவள் திரும்பி நடக்க, ஆதிரனோ புருவத்தை சுருக்கினான்.

இங்கே வெற்றியோ, “ஹே ஆதிண்ணே அத்த பொண்ணு” என்று கத்த, அந்த அழைப்பில் சட்டென்று திரும்பினாள் இளநிலா.

“பாத்தீகளாண்ணே, உங்க பேர சொன்னதும் நின்னுட்டாக” என்று வெற்றி சொல்ல, அவன் தலையிலேயே தட்டியவனோ, “கிட்ட போயி கூப்டு வாடா” என்றான்.

அதில், வெற்றியும் அவர்களை நோக்கி வர, இங்கே செம்பாவோ, “ஆதிண்ணே அத்த பொண்ணு நீதேன்னு உனக்கு ஞாபகம்லாம் இருக்கா” என்று சீண்டலாய் கேட்டாள்.

“ஹேய் சும்மா இருடி” என்று இளநிலா சொல்ல, அதற்குள் மூச்சு வாங்க ஓடி வந்த வெற்றியோ, “அட என்னம்மா தங்கச்சி. அம்புட்டு தூரம் கத்துறேன். திரும்பி பாக்காம போனா எப்படி?” என்றான்.

“இப்படி ஒரு அண்ணன் தேவயில்லன்னு அர்த்தம்” என்று செம்பா வார, அதில் அவளை முறைத்தவனோ, “ஹேய் ரெட்ட ஜடை, உன்கிட்ட இப்போ ஆறு பேசுனான்னு, ஊடால வர்ற நீ” என்றான்.

“இங்கப்பாருய்யா. அப்படி கூப்பிடாதன்னு சொன்னா கேக்க மாட்டீயா நீ” என்று அவள் கொந்தளிக்க, “அப்படித்தேன் கூப்பிடுவேன். ரெட்ட ஜட, ரெட்ட ஜட” என்று வம்பிழுத்தான் வெற்றி.

“போய்யா செருப்பு தள்ளி” என்று இவளும் சண்டைக்கு செல்ல, “இங்கப்பாரு. அப்படி சொன்னன்னா, பொறவு என்னப் பண்ணுவேன்னே தெரியாது” என்றான் வெற்றி.

“அதேன் உனக்கே தெரியலத்தேன்ன” என்று இவள் கடுப்பாய் சொல்ல, “நில்லுடி. உன் ரெட்ட ஜட போட்டோவ பெருசு பண்ணி, ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டுறேன்” என்றான்.

“நீ அப்படி மட்டும் பண்ணிப் பாரு. அடுத்த நாள், உனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்க வைக்கிறேன்” என்றாள் செம்பா.

வந்தவன், வந்ததை விட்டுவிட்டு, அவளுடன் மல்லுக்கு செல்ல, இங்கே ஆதிரனுடைய பொறுமை காற்றில் பறந்தது. இங்கே வேறு நேரம் சென்றுக் கொண்டிருக்க, “வெற்றி” என்று சத்தமாய் அழைத்தான்.

ஆனால், அவனோ செம்பாவிடம் வாய் சண்டை போடுவதில் முனைப்பாய் இருக்க, வேறு வழியின்றி, “இவென்ன அனுப்புனா, ஒரு வேலையும் ஓடாது” என்று கடுப்பாய் சொல்லியவன், “இளநிலா” என்று சத்தமாய் அழைத்தான்.

அவனின் அழைப்பில், அவள் நிமிர்ந்துப் பார்க்க, “இங்க வா” என்று கை காட்டி அழைத்தான். அவ்வளவுத்தான் அடுத்த நொடி, அவனின் முன்னே சென்றிருந்தாள்.

இங்கே நிலா சென்ற பின்னே, செம்பா அதை கவனிக்க, “அந்த வழியிலையே போ மாட்டேன்னு சொன்னா. இப்போ அண்ணன் கூப்டதும், மறு வார்த்த பேசாம அங்க போயி நிக்குறா” என்று தனக்குள்ளே புலம்பினாள்.

அதற்குள், “உன்ன இன்னொரு நாள் பாத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெற்றி செல்ல, “உன்னலாம் இன்னிக்கே பாக்க முடியலையாம். இதுல இன்னொரு நாள் வேற பாக்கனுமாக்கும்” என்று வாரியப்படி அவளும் அங்கு சென்றாள்.

“சடங்கு எப்புடி பண்ணனும்னு தெரியும்த்தேன்ன” என்று ஆதி கேட்க, “ம்” என்று தலையாட்டினாள் இளநிலா.

“பண்ணு” என்றவன், அவளுக்கு வழிவிட, இப்போது கையில் இருந்த புத்தகத்தை ஓரமாய் வைத்துவிட்டு, தாவணியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டாள். 

காலில் அணிந்திருந்த செருப்பையும் கழற்றியவள், மெதுவாக வயலுக்குள் இறங்கினாள்.

அந்த மண்ணில் காலடி வைத்த நொடியே, அவள் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. 

அப்படியே மண்டியிட்டு குனிந்து, விளைச்சலை வாரி வழங்கிய பூமாதேவியை இரு கரங்களாலும் தொட்டு வணங்கினாள். பிறகு அந்த மண்ணை கண்களில் ஒற்றிக்கொண்டு மெதுவாக எழுந்தாள்.

அருகில் பூஜைக்காக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்ற தீப்பெட்டியை தேடினாள். அது அங்கே இல்லாமல் போக, அன்னிட்சையாய் ஆதியின் பக்கம் திரும்பினாள்.

அத்தனை நேரம் அவள் செய்கையையே, சிறு ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் தன் பக்கம் திரும்பவும், “என்ன” என்றான்.

“தீப்பெட்டி” என்ற வார்த்தைக் கூட அவள் தொண்டையில் இருந்து வெளிவர மறுக்க, “தீப்பெட்டி கேக்குறாண்ணே” என்றாள் செம்பா.

அதில், ஆதியோ வெற்றியிடம், “எங்கடா” என்று கேட்க, அதன் பின்னே தன் சட்டைப் பாக்கெட்டை தடவி அதை எடுத்து ஆதியிடம் நீட்டினான்.

அவனை முறைத்தப்படியே, வாங்கி, நிலாவின் கையில் அவன் கொடுக்க, அவனைப் பார்க்காமல் அதை வாங்கி கொண்டவள், அந்த விளக்கை ஏற்றினாள்.

"அம்மா. மீனாட்சி தாயே. இந்த வருஷம் நல்ல விளைச்சல தந்திருக்க…" என்று பெரியவர்கள் அம்மனை நினைத்து முணுமுணுக்க, அடுத்த கணமே, சுற்றியிருந்த பெண்கள் அனைவரும் ஒருசேர குலவை போட்டனர்.

“ஐயா ராசா. பொண்ணும், மண்ணும் ஒன்னுன்னு சொல்லுவாக, இந்த மண்ணுல வெளஞ்ச நெல்ல, உன் கையால, புள்ளைக்கு கொடுய்யா” என்று வயதானவர் ஒருவர் சொல்ல, அவனும் கை நிறைய அந்த நெல்லை அள்ளினான்.

அதற்குள் அங்கிருந்த ஒரு குறும்புக்காரி, “அட என்ன மச்சான். மொத படிய கொடுக்குறீக. இப்புடி வெறுமன கொடுத்தா எப்புடி? தங்கத்துல எதுவும் போடலன்னாலும், பணமானாலும் போடனும்ல” என்றாள்.

“இதென்னடி கூத்தா கெடக்கு. என் ராசன் கையால கொடுத்தா மண்ணே பொண்ணுக்கு சமம்டி. அதுலையும், என் ராசன் வூட்டு மண்ணுல வெளைஞ்ச நெல்லுக்கு, லட்சம் கொடுத்தாலும் போதாதுடீ” என்றார்.

“நல்லா இருக்கே. அதுக்குன்னு, இந்த நெல்ல கொண்டு போயி நக கடையில கொடுத்தா வாங்கிப்பாகளா என்ன” என்று சவடால் பேசினாள் இன்னொருத்தி.

அதில், ஆதியோ, சட்டென்று தன் மோதிரத்தை கழட்டப் போக, “இல்ல அதெல்லாம் வேண்டாம்” என்று மெல்லமாய் முனுமுனுத்தாள் இளநிலா.

அதென்னவோ அவன் முதன் முதலாய் ஒன்றை கொடுக்கப் போக, அவள் அதை வேண்டாம் என்று மறுத்ததில், இவனுடைய தாடை இறுகியது.

ஏன் இந்த கோவம் என்று அவளுக்கே தெரியவில்லை. அதில் சற்றும் யோசிக்காமல், கழுத்தில் கெடந்த அவன் செயினை கழட்டி, அவள் கழுத்தில் போட்டவன், அந்த நெல்லை அவள் முந்தானையில் கொட்டினான்.

அதில் இளநிலா அதிர்ந்து நிற்க, “அத்தப்பொண்ணுன்றதால, கழுத்துல கெடந்த தங்க சங்கிலிய கழட்டி போட்டுட்டீகளாக்கும்” என்று அதற்கும் கிண்டலடித்தனர்.

ஆனால் அவனுக்கோ அத்தனை கோவம். அதென்ன அவள் வேண்டாம் என்று சொல்வது என்று புதிதாய் ஒரு உரிமை உணர்வு அவனுக்குள் தலைதூக்கியது. அதில் அவன் அங்கிருந்து பைக்கை நோக்கி நடந்தான்.

ஆனால் இங்கே இளநிலாதான், அதை எப்படி கிரகிக்க என்று புரியாது, நின்றுக் கொண்டிருக்க, அதற்குள், ஆதிரனின் சட்டையைப் பிடித்த கதிரவனோ, “என் தங்கச்சிட்ட என்னல்ல வம்பு பண்ணிட்டிருக்க நீ” என்றான்.

அண்ணனைப் பார்த்தப் பின்னே இவ்வுலகம் வந்த இளநிலாவோ, “அண்ணே” என்றவளுக்கு கதிரவனை சென்று தடுக்கும் அளவுக்குலாம் தைரியம் கிடையாது.

இங்கே ஆதியோ, இப்போது தன் சட்டையை பிடித்திருந்த அவன் கரத்தை உதறியவன், “பொறுமையா போறேன்றதுக்காக, உன் இஷ்டத்துக்கு என் மேல கைய வெக்காத. பொறவு, நீ நினைச்சி பாக்க முடியாத அளவுக்கு பெருசா ஏதாச்சும் செஞ்சு விட்டுடுவேன்” என்று கர்ஜித்தான்.

“என்னடா பண்ணிடுவ நீ? உன்னால என்ன பண்ண முடியும்?” என்று கதிரவனும் கோவமாய் கேட்க, “என்னால என்ன பண்ண முடியும்? முடியாதுன்னு தெரிஞ்சிக்கனும்னு ஆசப்படாத. அடுத்து நிம்மதி இல்லாமத்தேன் கெடக்கனும்” என்று சொல்லியவன், அவனை விலக்கிவிட்டு பைக்கில் ஏற சென்றான்.

“என் தங்கச்சி மேல, உன் நிழல் பட்டிச்சின்னா கூட, உன் தங்கச்சிய” என்று கதிரவன் முடிக்கும் முன்னே, அவன் சட்டையை கொத்தாய் பிடித்தவனோ, “அன்னிக்கு சொன்னதத்தேன் இப்பவும் சொல்றேன். உன் தங்கச்சின்னா எனக்கு ஆகாதுத்தேன். அவ நிழல்ல கூட நான் தொட மாட்டேன். அதே மாதிரி, உன்னாலையும் என் தங்கச்சி நிழல்ல கூட தொட முடியாது. நான் தொடவும் விட மாட்டேன். வந்துட்டான் பெரிய இவனாட்டாம். நீ சும்மா கொடுத்தாலும், உன் தங்கச்சி எனக்கு வேண்டாம்” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டு, பைக்கில் ஏறி கிளம்பியிருந்தான் ஆதிரன்.

ஆனால், அங்கே அவனின் வார்த்தையில், உடைந்து போய் நின்றிருந்தாள் இளநிலா. ஆம் அவளுக்குமே அது தெரியும். ஆதிரனுக்கு, அவளை பிடிக்கவே பிடிக்காது என்று தெரியும். அவன் சொல்லியது போல், அவன் தன் நிழலை கூட தீண்ட மாட்டான் என்றும் தெரியும். இந்த வார்த்தையை அவளின் ஐந்து வயதில் கேட்கும் போது, அவளுக்கு அது புரியவில்லை.

பத்து வயதில் கேட்ட போது, பெரிதாய் பக்குவம் இல்லை. பதினாறு வயதில் கேட்ட போது, புரிந்தும், அதை ஏற்றுக்கொள்ள தெரியவில்லை. இப்போது மீண்டும் இருபத்தி ஒன்று வயதில் கேட்டிருக்கிறாள். இப்போது அவளுக்கு அத்தனையும் புரிய, மனதில் மெலிதாய் ஒரு வலி வந்தது. அது அவன் அவளுக்கு கிடைக்க மாட்டான் என்ற கவலை எல்லாம் இல்லை.

தன் மாமனுக்கு, பிடிக்காத அத்தை பெண்ணாய்தான் கடைசி வரை இருப்பேனோ என்ற மெல்லிய பயம். அவனுக்கு பிடித்த ஜீவனாய் இல்லை என்றாலும், பிடிக்காத வரிசையில் இருந்தாவது விலக நினைக்கிறாள். ஆனால் அது நடக்காது என்று நிதர்சனம் முகத்தில் அடித்து சொல்லியது.

அதே நேரம், இத்தனை வருடம், ஆதிரனின் கழுத்தில் ஊர்ந்துக் கொண்டிருந்த அந்த செயின், இப்போது, நிலாவின் கழுத்தில் புதிதாய் உறவாட ஆரம்பித்தது. 

இங்கே கதிரவனோ, கோவமாய், “எனக்கும், உன் தங்கச்சி வேண்டாம்டா. அடுத்து, உன்னை மாதிரி ஒருத்தனுக்கு என் தங்கச்சிய கொடுக்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது” என்று கத்தினான்.

சற்று முன் அந்த வயலில் இருந்த அமைதி அப்படியே மாயமாகியிருக்க, செம்பாதான், தேங்கி நின்றிருந்த இளநிலாவின் கையைப் பிடித்து அங்கிருந்து அழைத்து சென்றாள்.

இங்கே நிலா வீடு வரும் முன்னே, வயலில் நடந்த விஷயங்கள் எல்லாம் வீடு வந்து சேர்ந்திருக்க, அந்தப் பக்கம் தாமரையோ, “அந்தாளு ஆரம்பிச்சி வச்ச பகை. இப்போ, எங்க வந்து நிக்குது” என்று தன் கணவரை மனதிற்குள் திட்டி தீர்த்தார்.

இங்கே முருகேசன், வேலை விஷயமாய் வெளியூர் சென்றிருக்க, இந்த விஷயம் அவர் காதுக்கு சென்றிருக்கவில்லை.

செல்வியிடம் கதிரவன் குதி குதியென்று குதித்திருக்க, அவரோ, “நீ போ. நான் அவகிட்ட பேசுறேன்” என்று அனுப்பி வைத்தார். அதன் பின் இளநிலாவிடம் வர, “ம்மா” என்று அன்னை மடியில் தலை சாய்த்தாள்.

“இனிமே, நீ தெரியாம கூட, ஆதிரன் முன்னாடி போகாதடா. பொறவு உன் அண்ணன் தேவையில்லாம, அவென்கிட்டத்தேன் ப்ரச்சன பண்ணுவான்” என்றார்.

(இல்லன்னா மட்டும், உங்க மவென், ப்ரச்சன பண்ண மாட்டானாக்கும். செரி. அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

இம்சிக்குமா?..

Author:    1 Sarmi SS
Comments   4

*** இளந்தளிர் – 7 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com