ஆதிரன் அவர்கள் இருவரை மிரட்டிக் கொண்டிருக்க, அதற்குள் அங்கு வந்த கதிரவனோ வழக்கம் போல், ஆதிரனை வம்புக்கு இழுத்தான்.
அதில் ஆதிரனுடைய கண்கள் கோவத்தில் சிவக்க, பிடித்திருந்தவனின் சட்டையை மேலும் முறுக்கிப் பிடித்து, “இன்னொரு தடம், இங்குட்டு வந்து ப்ரச்சன பண்ணேன்னு தெரிஞ்சுது. ஊரு இருக்கும், வீடு இருக்கும். ஆனா நீ இருக்க மாட்ட” என்று கர்ஜித்தான்.
“ஆறு இருப்பாகன்னு, இன்னும் கொஞ்ச நாள்ள அம்புட்டு பேருக்கும் தெரியும். கணேசா, நீ வா. என் மாப்ளட்ட சொல்லி, அவெனுக்கு நாலு கொடுக்க சொன்னாத்தான் செரி வரும். என்ன மாப்ள செய்வத்தேன்ன” என்று வியனிடம் கேட்டான்.
அதில் வியனோ, ஆதிரனைப் பார்த்தப்படி, “அவீக கம்ப்ளைண்ட் கொடுக்காட்டியும் கூட, மச்சான் நீ சொன்னா, நான் தூக்கி வைக்கப் போறேன்” என்றப்படி மீசையை நீவினான் வியன்.
“என் மருமவன்ன தூக்கிட்டு போற அளவுக்கு, இங்க எவெனுக்குல்ல தைரியம் இருக்கு” என்று கோவமாய் சொல்லியப்படி அங்கு வந்தார் முருகேசன்.
அப்பாவை அந்த இடத்தில் எதிர்பார்க்காத கதிரவனோ, சட்டென்று பைக்கில் இருந்து இறங்கி, “ப்பா” என்றான்.
அதில் வியனுமே ஒரு அடி பின் வாங்கியிருக்க, இப்போது ஆதிரனோ, முருகேசனைப் பார்த்தான். அவர்களுக்குள் ஆயிரம் சண்டைகள் இருக்கட்டும். ஆனால் பொதுவெளியில் வைத்து, ஆதிரனை எப்போதும் முருகேசன் விட்டு கொடுக்க மாட்டார்.
அது அவனுக்கும் தெரியும். அதில், ஆதிரனோ இப்போது, தூக்கி கட்டியிருந்த வேஷ்டியை சற்று இறக்கி விட்டான்.
“சும்மா ஏதும் தெரியாம பேசாதீங்க சித்தப்பா. என் தம்பி சொத்த, இவ” என்று சொல்ல வந்த கணேஷ், பின் ஆதிரனின் முறைப்பை பார்த்து, “அவீக ஈஸியா என் தம்பி சொத்த அபகரிச்சிட்டு போவாக, அத பாத்துட்டு நாங்க கம்முன்னு கெடக்கனுமா” என்று கோவமாய் கேட்டான்.
“ஆறுல இப்போ அபகரிச்சிட்டு போறா. வார்த்தைய பாத்து பேசு. பொறவு பேசுறதுக்கு நாக்கு இருக்காது” என்று ஆதிரன் கோவமாய் அவனை மீண்டும் அடிக்க பாய்ந்தான்.
“பாத்தீகளா சித்தப்பா. ஊருக்காரக, நம்மள விட்டுட்டு, எங்கிருந்தோ ஓடி வந்த கழுதைக்கு சப்போர்ட் பண்ணிட்டு திரியிறான் உங்க மருமவென்” என்று இளையவனும் சேர்ந்து பேச, ஆதிரனோ, அவனின் சட்டையைப் பிடித்து, “இன்னும் ஒத்த வார்த்த பேசுன” என்று அவனை அடிக்க சென்றான்.
அதற்குள் தோளில் போட்டிருந்த துண்டை உதறிய முருகேசனோ, “போதும் நிறுத்துங்க” என்றார்.
அதில் ஆதி அமைதியாகிவிட, அதற்குள் அவனோ, அடி வாங்கிய கோவத்தில், “அப்புடி எங்க அண்ணி மேல, இவெருக்கு என்ன தனி பாசம். ஒரு வேள புருஷன்தான் செத்துட்டான்னே, நம்ம வசதிக்கு வெச்சிக்கலாம்னு நெனைக்கிறாரோ என்னவோ” என்று அவன் இஷ்டத்துக்கு பேசிவிட, அவ்வளவுத்தான், ஆதிரனுடைய பொறுமை காற்றில் பறந்தது.
அடுத்த நொடி, முருகேசனையும் பொருட்படுத்தாது, “என்னல்ல பேசுற நீ? அவீக எனக்கு அக்கா மாதிரில்ல” என்றவன் விடாது அவனைப் போட்டு அடித்து வெளுத்தான்.
அதற்குள் இடையில் வந்த வியனோ, ஆதிரனின் சட்டையைப் பிடித்து தடுத்து நிறுத்தியிருக்க, முருகேசன் வேகமாய் வந்து அவன் கையை தட்டிவிட்டார்.
அதில் வியனோ, “இப்படி காட்டுமிராண்டித்தனமா, இவென் பஞ்சாயத்து பேசிட்டு இருப்பான். காக்கி சட்டைய போட்டு பாத்துட்டு இருப்பேன்னா நானு. அவங்க ரெண்டு பேரும், ஏற்கனவே இவன் மேல கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காங்க” என்றான்.
அவன் அணிந்திருந்த காக்கி உடை, அவனுக்கு கவசமாய் நின்றிருக்க, ஆதிரன், ஒரு அடி பின் வாங்கினான்.
அதில், கதிரவனோ, “வெள்ள சட்டை வெள்ள வேஷ்டின்னு போட்டுட்டா, ஆறு வேணும்னாலும் நாட்டாம பண்ண முடியுமா? அதுவும் போக, தப்பு நடந்தா தட்டி கேட்க, போலீஸ் எதுக்கு இருக்கு? சும்மா அடுத்தவீக குடும்ப ப்ரச்சனைக்குள்ள போனா, இப்படித்தேன் மூக்கறுபட்டு நிக்கனும்” என்றான்.
ஏனோ அந்த இடத்தில் நிற்கவே ஆதிரனுடைய கோவம் கடகடவென்று கூட, அதற்குள் முருகேசனோ, கோவமாய், “கதிரவா” என்றார்.
அதில் கதிரவனோ அமைதியாகிவிட, முருகேசனோ, இப்போது தவறாய் பேசியவனின் கன்னத்தில் ஓங்கி அடித்தார்.
“உன் இடத்துல நின்னுத்தேன்ன, அவென் பேசிட்டு இருக்கான். அண்ணன் செத்துட்டான். வயித்துல பிள்ளைய வெச்சிட்டு, அந்தப்புள்ள எங்கல்ல போகும். செத்த மனசாட்சிப்படி நடந்துக்க மாட்டீங்களா” என்றார்.
“என்னத்த மனசாட்சிப்படி நடக்குறது? ஜாதி விட்டு ஜாதி, கன்னாலம் கட்டாதன்னு நாங்கத்தேன் தலப்பாடா அடிச்சிக்கிட்டோமே. அவன் வீம்புக்குன்னு கெட்டுவான். இப்போ மட்டும், இந்த ஊரு, வீடு வாசல் எல்லாம் கேக்குதோ” என்றான் கணேசன்.
“என்னல்ல பொல்லாத ஜாதி” என்று ஆதிரன் அப்போதும் அடிக்கவே பாய, அதற்குள் வியனோ, “இன்னும் ஒத்த அடி அவென் மேல விழுந்திச்சின்னா, அடுத்து, நீ யாரு என்னென்னுலாம் பாக்க மாட்டேன். அரெஸ்ட் பண்ணி இழுத்துட்டு போயி, போலீஸ் அடின்னா எப்படி இருக்கும்னு காட்டுவேன்” என்றான்.
“ஓ. காட்டிடுவீகளோ, அப்படி, எங்க அண்ணன்ன, அடிக்கிறது பிடிவாரண்டு வெச்சிருக்கீகளா” என்று நக்கலாய் கேட்டப்படி அங்கு வந்தான் வெற்றி.
கூடவே அவர்களுடைய வக்கிலும் வந்திருக்க, இப்போது வக்கிலின் கையில் இருந்த டாக்குமெண்டை பிடுங்கி, வியனிடம் காட்டியவன், “உன் கடமைய பண்ணனும்னு ஆசப்படுறல்ல நீ. இந்தா இத நல்லா பிரிச்சுப்பாரு. சொத்த சாவுறதுக்கு முன்னாடியே, பொண்ணுச்சாமி, அவீக பொண்டாட்டி பேர்ல மாத்தி எழுதியிருக்காரு. இப்போ வீண்ணா ப்ரச்சன பண்ணிட்டு திரியிறது இவனுங்கத்தேன். இப்போ அந்த அக்கா, உன் கூட்டாளிங்க மேல, கம்ப்ளைண்ட் கொடுப்பாக. ரெண்டு பேரையும் பிடிச்சு இழுத்துட்டு போயி உன் போலீஸ் அடிய காட்டு” என்று அதை வியனின் மீதே தூக்கி எறிந்தான்.
“ஹே” என்று வியன் கோவமாய் ஆதிரனின் பக்கம் அடி எடுத்து வைக்க, “ஹலோ, எங்கண்ணே மேல கைய வெச்சிடலாம்னு பகல் கனவு காணாதீங்க போலீஸ்கார். பொறவு. அசிங்கப்பட்டு போயிடுவீங்க” என்றப்படி, முன்னே வந்து நின்றான் வெற்றி.
அதற்குள் ஆதிரனோ, “அங்க என்னத்தல்ல பேசிட்டு இருக்க. டாக்குமெண்ட் எல்லாம் ரெடியாத்தேன்ன இருக்கு” என்றவன் வக்கீலைப் பார்க்க, உடனே அவரும், அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லி வந்த உத்தரவை, வியனிடம் நீட்டினார்.
அதைப் பார்த்த வியனுக்கோ இன்னும் எரிச்சல். ஆனாலும், இப்போது கணேசன் மற்றும் அவன் தம்பியின் பக்கம் திரும்பியவனோ, “டபத்திரத்துல தெளிவா இருக்கு. இனி இவீக வீட்டுக்கு முன்னாடி வந்து ப்ரச்சன பண்ணீங்கன்னா, உங்களத்தான் பிடிச்சு உள்ள போட வேண்டி வரும்” என்றான்.
அதில் அவர்களோ கதிரவனைப் பார்க்க, இப்போது அவனோ, “அதேன் என் மாப்ள சொல்றான்த்தேன்ன. போங்க சட்டத்த வளைக்கிறதுலாம், அவீனுக்கு புதுசா? நம்ம இத வேற மாதிரி பாத்துக்கலாம்” என்று பேசி அனுப்பி வைத்தான்.
அவர்கள் சென்றதும், வியனோ, இப்போது அந்த பெண்ணிடம் சென்று, “ஏதாச்சும் ப்ரச்சனைன்னா, ஸ்டேசன்ல வந்து கம்ப்ளைண்ட் கொடுங்க. உங்க இஷ்டத்துகு, ஆள் வச்சு ரவுடீசம் பண்ணக் கூடாது” என்று கடுப்பாய் சொல்லிவிட்டு, கதிரவனுடன் கிளம்பியிருந்தான்.
இங்கே ஆதியோ, அந்தப் பெண்ணிடம், பத்திரத்தை எல்லாம் கொடுத்தவன், “நீங்க அவீங்க பேசுனத எல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க. இனி அவனுங்களால, உங்களுக்கு எந்த ப்ரச்சனையும் வராது. நீங்க தைரியமா இருங்க” என்றான்.
அதில் கையெடுத்து கும்பிட்ட அந்தப் பெண்ணோ, சட்டென்று அவன் காலில் விழப் போக, “ஐயோ அக்கா. என்னப் பண்றீங்க. எந்திரிங்க” என்று அவரை எழுப்பினான்.
“மன்னிச்சிடுங்க தம்பி. என்னாலத்தேன் தேவயில்லாம, உங்களுக்கு இந்த அவமானம் எல்லாம். அவரு போன அப்பவே நானும் போயி சேர்ந்திருப்பேன். என் வயித்துல இருக்குற புள்ளைய கொல்ல மனசில்லாமத்தேன், இன்னும் இந்த உயிர பிடிச்சுட்டு இருக்கேன். எந்த ஜென்மத்துல நான் என்ன பாவம் பண்ணேன்னோ, எனக்கு உதவி பண்ண வந்ததுக்கு, உங்களுக்கும் கெட்டப் பேரு” என்று அழுதப்படி கூறினாள் பொன்னி.
“ஐயோ என்னக்கா நீங்க. உங்களுக்கொரு தம்பி இருந்தா, இன்னேரம் வந்து நிக்கமாட்டான்னா என்ன? அப்படி நெனச்சிக்கோங்க. நீங்க போங்க. உங்களுக்கு ஒத்தாசைக்கு ஒரு அம்மாவ வர சொல்லிருக்கேன்” என்றான்.
அதை எல்லாம் பார்த்த முருகேசனுக்கோ, அப்படியே கதிரையும், நிலாவையும் ஒன்றாக பார்ப்பது போல் தோன்றியது.
ஆனாலும், கதிருடன் நடந்த வாக்குவாதங்கள் எல்லாம் நினைவுக்கு வர, அப்படியே இறுக்கமானார். இங்கே ஆதிரனோ, ஒரு நொடி அவரைப் பார்த்துவிட்டு, தன்னுடைய பைக்கை எடுக்க சென்றான்.
அதற்குள், “செல்வி” என்று முருகேசன் குரல் கொடுக்க, அவரோ வேகமாய் அங்கு வந்தார். வந்தவர் அப்போதே ஆதிரனைப் பார்த்தார்.
“ஆதி” என்றவர் முன்னேற நினைக்க, ஆனாலும் கணவரை எதிர்க்க மனமின்றி அப்படியே நிற்க, “ஒரு சொம்புல தண்ணிய எடுத்துட்டு வந்து கொடு. கை கால் எல்லாம் மண்ணாகியிருக்கு பாரு” என்றார்.
அதில் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய், “அம்மாடி நிலா. அந்த துண்டையும் எடுத்துட்டு வாடி” என்று குரல் கொடுத்தவர், வேகமாய் அவனுக்கு குடிக்க, தண்ணீரை எடுத்து வந்தார்.
“இந்தாய்யா” என்று அவர் அதை அவனிடம் நீட்டப் போக, அதற்குள் அதை தடுத்துப் பிடித்த முருகேசனோ, “அவெனுக்கு கழுவத்தேன் தண்ணி கொடுக்க சொன்னேன். இந்த வூட்டுல இருந்து அவெனும், அவென் அப்பனும், ஒரு வாய் தண்ணி வாங்கி குடிக்க மாட்டாங்க” என்று வீம்பாய் கூறினார்.
அதில் தண்ணீரை வாங்க நீட்டிய கையை, விலக்கி கொண்டவன், “குடிக்க கொடுத்த தண்ணிய, கை கழுவிட்டு போற பழக்கமும் எனக்கில்ல மாமா. நீங்க இம்புட்டு தூரம் எனக்காக பேசுனதே போதும். நான் வரேன். இல்ல இல்ல. இனி தெரியாம கூட உங்க வூட்டு வாசல் முன்ன வந்துட மாட்டேன்” என்று அழுத்தி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான் ஆதிரன்.
இங்கே துண்டை எடுத்துக் கொண்டு வந்தவளின், செவியில் அவன் சொல்லிய கடைசி வார்த்தை பளீச்சென்று விழ, அவள் அப்படியே அந்த வாசலிலேயே தேங்கி நின்றுவிட்டாள்.
“ஏன் மச்சான்? இப்படி பேசுறீங்க” என்று செல்வி மனசு தாராமல் கேட்டுவிட, “அவென் அப்பன் சொன்னதத்தேன்ன சொன்னேன்” என்றார் முருகேசன்.
“இன்னும் எத்தன வருஷத்துக்குத்தாங்க. அத புடிச்சே தொங்கிட்டு இருக்கப் போறீங்க” என்று செல்வி சிறு ஆத்தாமையுடன் கேட்க, “நான் தூக்கி வளத்த பையன், என் சட்டைய பிடிச்சு. அவீக சொத்து விஷயத்துல, தலையிட நான் ஆறுன்னு கேப்பான். நான் அத்தனையும் மறந்துட்டு, அவென் பிள்ள போய் நிக்கனுமா?” என்றார்.
கதிரோ யாருக்காக அதை சொன்னான்னா? அவன் கூட இருவருக்கும் பொதுவாய் போய்விட, ஆனால் அவன் பெற்ற மகன் தான் அத்தனைப் பேருக்கும் பகையாளியாய் மாறிப்போனான்.
இங்கே அத்தனைப் பேரும், அவன் சட்டையில் ஒட்டியிருந்த மண்ணைப் பற்றி கவலைப் பட, அங்கே நிலாவோ, அவன் முழங்கையில் இருந்து வடிந்த ரத்தத்தை துடைத்து மருந்திட ஆளில்லாததை நினைத்து துடித்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு அது வலித்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இவளுக்கு அத்தனை வலித்தது. ஏற்கனவே காய்ச்சல். இப்போது இதுவும் சேர்ந்துக் கொள்ள, கிட்ட தட்ட ஒரு வாரம் கழித்துத்தான் கல்லூரிக்கு கிளம்பினாள் இளநிலா.
இங்கே ஆதியும், அந்த சம்பவத்துக்கு பின், தெரியாமல் கூட இளநிலாவின் வீட்டுப் பக்கம் அவன் சென்றிருக்கவில்லை.
அவள் தொலைத்த அந்த மோதிரம் அவனிடம் இருப்பதையே மறந்திருந்தான். அப்படியே நாட்கள் ஓடியிருந்தது.
அன்று அறுவடை நாள். அதனால் காலையிலேயே, அவன் வயலில் மட்டும் அல்லாது, சுற்றி இருந்த அத்தனை வயிலிலும், வேலைகள் தாறுமாறாய் ஓடிக் கொண்டிருந்தது.
அதனால், எல்லாம் சரியாய் நடக்கிறதா? என்பதைப் பார்க்க, மாலை போல் அங்கு வந்திருந்தான் ஆதி.
“இப்போ என்னத்துக்கு வயல் பக்கம் கூட்டி வார. அந்தப் பக்கமா போலாம்த்தேன்ன” என்று இளநிலா சொல்ல, செம்பாவோ, “அட என்னடி நீ? இன்னிக்கு அறுவட நாள்டீ. எப்படியும் அம்புட்டு வயல்லையும் சாமி கும்பிட்டிட்டு இருப்பாக. அந்தப் பக்கமா போனா, லட்டு, பூந்தின்னு ஏதாச்சும் கொடுப்பாங்க. அத வாங்கி சாப்டுட்டே வீடு போயி சேரலாம்” என்றாள்.
“உனக்கு, லட்டு பூந்தி வேனும்னா, என் கூட வீட்டுக்கு வா. எடுத்து தரேன்” என்று இளநிலா சொல்ல, “ச் அதெல்லாம், இப்படி வழியில வாங்கி திங்கத்தேன் நல்லா இருக்கும். நீ வா” என்று இழுத்து வந்திருந்தாள் செம்பா.
சரியாக அன்னேரம் தான், ஆதியின் வயலில், அன்று அறுவடை செய்த நெல்லுக்கு பூஜை செய்துக் கொண்டிருக்க, “தம்பி. உங்க கையால. மொத பிடிய, பூமாதாயிக்கு போடுங்க” என்றார் பெரியவர்.
“வூட்டுல இருக்குற பொண்ணுக்கையிலத்தேன்ன கொடுக்கனும்” என்று ஒரு கெழவி வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் சொல்லிவிட, ஆதியோ வெற்றியிடம், “போயி பாட்டிய கூட்டிட்டு வா” என்றான்.
“செரிங்கண்ணே” என்றப்படி திரும்பியவனின் பார்வையில், செம்பாவும், இளநிலாவும் விழ, “பாட்டி எதுக்குண்ணே. அதேன் பியூட்டியே வருதே” என்றான்.
“என்னல்ல சொல்ற” என்று கடுப்பாய் ஆதி கேட்க, “உங்க அத்த மவ வருதுண்ணே. பேசாம, அந்தப்புள்ள கையில கொடுத்து பூஜைய முடிக்கலாம்” என்றான் வெற்றி.
அதே நேரம் அந்த வயலுக்கு பக்கத்தில் இருந்த தோட்டத்தில், கதிரவனோ, வியனிடம் “இந்த தடம் அவன் வயல்ல வெளையிற எதையும் சந்தைக்கு போக விட கூடாது” என்று கோவமாய் கூறினான்.
(ரைட்டு. அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
இம்சிக்குமா?..
Keerthi S
super nalla varuvinga da
Jebaselvi Jeba
good❤
Karthiga p
kathir um Murugesan num sanda pottu ipti pesama irrukangarathe ennala namba mudila , yathukavum mudila 🫠 💔 ithula intha kathirum viyan num yan thaan avaniye kanganam katittu moorachuttu muttitu irrukanungalooo 😤
Arockia Ammu
onnu mattum nalla puriyuthu pandi place viyanum senthil place katiravanum fill panranga intha season la future la nila Thendral senthil verutha mathiri kadhiravanai ilanila verukka pora