இளந்தளிர் – 8

செல்வி சொல்லிய வார்த்தையில், இளநிலாவோ அன்னையைப் பார்த்தாள். “எனக்குத் தெரியும்த்தா, நீ வேணும்னு போயிருக்க மாட்ட, இருந்தாலும், ஆகாதவகன்னு ஆயிப்புட்டா, அவீக என்ன சொன்னாலும் தப்பாத்தேன் தெரியும்” என்றார்.

அவர் கதிரவனையும், ஆதிரனையும் நினைத்து சொல்ல, சட்டென்று அவள் செவியில், “உன் தங்கச்சி என்னிக்குமே எனக்கு ஆகாதவத்தேன்” என்று ஆதிரன் சொல்லியது நினைவுக்கு வந்தது.

அதில் காரணமேயின்றி கண்கள் கலங்க, அன்னிட்சையாய் அவள் கழுத்தில் கிடந்த அவன் சங்கிலியைப் பிடித்தாள். இன்னும் அதை அவள் கழுத்தில் தான் போட்டிருந்தாள். செல்விக்கு அதை கழட்ட சொல்ல மனம் வரவில்லை.

அதே நேரம், அந்த செயின், கணவர் கண்ணிலோ, இல்லை மகன் கண்ணிலோ பட்டால், அதை வைத்து ப்ரச்சனை செய்வார்கள் என்பதால், “அடுத்த தடம் பாக்குறப்ப, அந்த செயின்ன ஆதிக்கிட்ட கொடுத்துடலாம். அதுவரைக்கும் கழுத்துல கவனமா போட்டுக்கோ” என்றார்.

அப்போதே அவளுக்கு, அவன், கோவமாய் அவன் செயினை கழட்டி போட்டது நினைவுக்கு வர, இப்போது அந்த செயினைப் பார்த்தாள்.

டாலரில் ஆதிரனின் அடையாளமாய், காலை சூரியனின் பிம்பம் இருக்க, அவனையே தொட்டு தழுவிய உணர்வு. அதில் சட்டென்று தன் கரத்தை அதில் இருந்து விலக்கி கொண்டாள்.

அங்கே, வீட்டுக்கு செல்ல மனமின்றி நேரே தோட்டத்து வீட்டுக்கு வந்த ஆதிக்கோ அத்தனை குமைச்சல். அவள் வேண்டாம் என்று மறுத்தது ஒரு பக்கம், கதிரவனுடைய பேச்சு மறு பக்கம் என்று அவனின் கோவம் கடகடவென்று கூடியது.

இங்கே தாமரையோ ஆதிக்கு கால் செய்ய, அப்போதே தன் கோவத்தை இழுத்துப் பிடித்தவன், “என்ன ஆத்தா, இன்னும் தூங்கலையா நீ” என்று கேட்டான்.

“நீ சாப்பிட வூட்டுக்கு வர மாட்டன்னு தெரியும். அதேன், உனக்கு சாப்பாட்ட கொடுத்தனுப்பிருக்கேன். சாப்டு படுய்யா” என்றார்.

“ச் பசிச்சா, நானே வரப் போறேன்” என்று ஆதி சொல்ல, “நான் இருக்கிற வரைக்கும், உன்ன பாத்துப்பேன். அதுக்கு பொறவு, உன் ஆத்தா, அப்பன் வந்து பாத்துக்கட்டும்” என்று சோககீதம் வாசித்தார்.

அதில் கடுப்பானவனோ, “பாட்டி. ஏற்கனவே, செம்ம கடுப்புல இருக்கேன். என்கிட்ட ஏதாச்சும் சொல்லி பேச்சு வாங்காத. என்னை ஆறும் பாத்துக்க வேண்டாம். என்ன பாத்துக்க எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு அழைப்பை கட் செய்தான்.

எப்பையாவது நடக்கும் விஷயம் என்றால், அதற்காக கவலைப்பட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனால், இதுதான் அடிக்கடி நடப்பதாயிற்றே. அதனால், அடுத்த இரண்டு நாட்களில், இந்த விஷயம் மறைந்து போயிருக்க, ஆதி தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

பொதுவாகவே, நிலா ஆதி இருக்கும் திசை பக்கம் வர மாட்டாள். இப்போது சொல்லவும் வேண்டாம். கல்லூரிக்கு கூட, கதிரவன் தான் கூட்டி சென்று அழைத்து வந்தான்.

ஆதியோ அதற்கும் மிச்சம். அப்படி ஒருத்தி இருக்கிறாள் என்பதே அவனுடைய நினைவில் இல்லை. அவ்வப்போது அவள் மோதிரத்தை பார்க்கும் போது மட்டும் நினைத்துக் கொள்வான்.

அப்படியே ஒரு மாதம் மின்னலென ஓடியிருந்தது.

ஊரே வரப் போகும் தீபாவளிப் பண்டிகைக்காக, இப்போதே ஜவுளி எடுப்பது. வேட்டு வெடிப்பது, பலகாரம் செய்வது என்ற வேலையில் இருந்தனர்.

அப்போதுத்தான், கதிரவனுக்கு, ப்ரைவேட் கம்பெனியில் வேலைக்கான இண்டர்வியூ ஒன்று வந்திருக்க, அவனோ செல்ல மறுத்தான்.

“ஏண்டா, அம்புட்டு லட்சம் பணத்த கொட்டி படிக்க வெச்சது எதுக்கு? இப்படி நீ வூட்டுல உக்கார்ந்து ஊர் வம்ப வாங்கிட்டு வர்றதுக்கா. ஒழுங்கா இண்டர்வியூக்கு போயிட்டு, அந்த வேலையில சேருற வேலைய பாரு” என்றார் முருகேசன்.

ஏனெனில், இவனும், இவனுடைய கூட்டாளிகளும் சேர்ந்து, ஆதியின் வயலில் விளைந்த பொருட்கள் செல்லும் லாரியை மறித்து பிரச்சனை செய்ய பார்க்க, அதற்குள், அங்கு வெற்றி அவனுடைய ஆட்களுடன் வந்திருந்தான்.

கொஞ்சம் விட்டிருந்தால், கதிரவனை போலீஸ் பிடித்து சென்றிருக்கும், ஆனால் ஆதிதான் கம்ப்ளைண்ட் எதுவும் கொடுக்க விருப்பமில்லை என்றிருந்தான்.

அதனால் தான் கதிரவனை இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்று, வெளியூருக்கு வேலைக்கு அனுப்ப நினைத்தார்.

“இப்போ என்னத்துக்கு என்னைய இங்க இருந்து அனுப்புறதுலையே குறியா இருக்கீங்க” என்று கதிரவன் முனுமுனுக்க, “என்னடா நெனச்சிட்டு இருக்க நீ? உனக்கப்புறம் உன் தங்கச்சி இருக்கா. அவளுக்குன்னு ஏதாச்சும் செய்யனும்ன்ற நெனப்பு இருக்கா? அவ நகையவும் வெச்சித்தேன்ன, உனக்கு பீஸு கட்டுனேன்” என்றார் முருகேசன்.

ஏனோ தங்கை என்று சொன்னதும், கதிரவனுக்கு சிறு குற்றவுணர்வாகியிருக்க, “செரி நான் போறேன்” என்றிருந்தான்.

போகும் முன் தங்கையிடம், அத்தனை கவனம் சொல்லிவிட்டு சென்றவன், வியனுடன் தான் மதுரை பஸ் ஸ்டாப்பிற்கு வந்திருந்தான்.

“உனக்கு டூட்டிக்கு நேரமாச்சுன்னா நீ கெளம்பு மாப்ள. பஸ்ஸு இப்போ வந்துடும்” என்றான் கதிரவன்.

“உன்னைய பஸ் ஏத்திவிட்டுட்டு போறத விட, முக்கியமான வேல எதுவும் இல்ல. நீ இரு. உனக்கு குடிக்க வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வரேன்” என்றப்படி சென்றான் வியன்.

இங்கே ஆதியும், வெற்றியும் கூட வேலை விஷயமாக, அங்கு வந்திருக்க, “எண்ணன்னே, ஒத்தபுறா ஒத்தையில நிக்குது” என்றான் வெற்றி.

“என்னல்ல சொல்ற நீ” என்று ஆதி கேட்க, “இல்லண்ணே, உங்க மச்சான், அங்க தனியா நிக்குறாரு. வழக்கமா, பாதுகாப்புக்கு போலீஸ பக்கத்துல வெச்சிட்டே நிப்பாரே அதேன்” என்றான் வெற்றி.

அதன் பின்னே கதிரவனைப் பார்த்த ஆதியோ, ஒரு நொடி நெற்றியை சுருக்க, அதற்குள் வியன் அங்கு வந்திருந்தான். 

“அதான. உங்க மச்சான்ன செத்த நேரம் தனியா விட மாட்டானே. அவீகள கெடுக்குறதே, இந்த போலீஸ்காரன் தான்” என்றான் வெற்றி.

“ஏல வந்த சோழிய பாருல்ல. நேரமாச்சு. எனக்காண்டி, அங்க பாட்டி காத்துட்டு இருக்கும்” என்றவன் அவர்களை கண்டுக்கொள்ளாமல், கடந்து நடந்தான்.

சரியாக அன்னேரம், கதிரவனோ, “மாப்ள, நான் ஊருல இல்லாதப்ப, செத்த என் தங்கச்சிய பாத்துக்கல்ல. அவகிட்ட அந்த ஆதி பையன், வம்பு கிம்பு இழுத்தாலும் இழுப்பான்” என்றான்.

அதைக் கேட்ட ஆதியுடைய தாடை இறுக, அப்போதே கதிரவனின் சட்டையை பிடித்து, நாலு விட தோன்றியது. ஆனாலும் அதை அவன் இழுத்துப் பிடித்து நகர நினைத்தான்.

ஆனால் அதற்குள், “அட என்ன மச்சான். அதெல்லாம் நீ சொல்லனுமா? அதெல்லாம் நிலாவ நான் பாத்துக்கிறேன். நீ எதப்பத்தியும் யோசிக்காம, இண்டர்வியூ அட்டண்ட் பண்ணிட்டு வா” என்றான்.

ஏனோ, அதைக் கேட்டு, இன்னும் ஆதிக்கு கடுப்பானது. “இவன் யாரு எங்க வூட்டு புள்ளைய பாத்துக்கிடுறதுக்கு” என்று கோவம் ஏற, அந்த எரிச்சலில் தான் ஊருக்கே வந்து சேர்ந்தான்.

அன்றிரவு எப்படியோ ஓட்டியவன், அடுத்த நாள், எதார்த்தமாய் நிலா படிக்கும் கல்லூரி வழியே செல்ல, அங்கே வியனின் பைக்கில் சென்று கொண்டிருந்தாள் இளநிலா.

இவனைப் பார்த்ததும், வேண்டுமென்றே வியன், பைக்கின் வேகத்தை குறைக்க, இளநிலாவோ அவனைப் பார்த்து அதிர்ந்தாள். அதிர்ச்சியில் அவள், சற்று தடுமாற, “ஹேய் பாத்து நிலா. வேணும்னா என் சட்டைய பிடிச்சிக்கோ” என்றான் வியன்.

அவன் சத்தமாகவே சொல்லியிருக்க, இங்கே ஆதியோ, ஆக்ஸிலேட்டரை முறுக்க, அவனுடைய பைக் வேகமெடுத்து சீறிப்பாய்ந்தது. அவனுடைய வேகத்தைப் பார்த்த இளநிலாவுக்கு இதயம் பலமாய் துடிக்க, இங்கே இவள் வீட்டுக்கு வரும் போது, ஆதிக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு என்ற செய்திதான் அவள் செவியை முதலில் அடைந்தது.

“நான் போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுறேன்த்தா. அப்பா வந்தா, அம்மா இங்க பக்கத்துலத்தேன் போயிருக்குன்னு சொல்லு” என்ற செல்விக்கோ மனம் ஆறவே இல்லை.

பெரிய ஆக்ஸிடெண்ட் எல்லாம் இல்லை. ஆனால் கை, காலில் மட்டும் சற்று அடிப்பட்டிருப்பதாய் சொல்லி சென்றிருக்க, ஊரே, ஆதியுடைய வீட்டில் தான் இருந்தது.

செல்வி அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது, முருகேசனும் அங்குத்தான் இருந்தார்.

கணவரைப் பார்த்ததும், ஒரு நொடி அதிர்ந்தாலும், ஆதியை பார்க்க வேண்டும் என்ற வேகத்தில், அவரை கடந்து சென்றார்.

“என்னய்யா, நீ அந்த குடும்பமே வேண்டாம்னு இருக்க. உன் பொண்டாட்டி, அந்த வீட்டுக்குள்ள போவுது” என்று ஒருவர் தூண்டிவிட, “அது அவீக அப்பா வீடு. அங்க போகக்கூடாதுன்னு சொல்றதுக்கு ஆறுக்கு உரிம இருக்கு. அதுவும் போக, ஆதி அவ தூக்கி வளத்த பையன். என் மருமவன். அவெனுக்கு ந்னுன்னா, விலகியே இருப்போம்னு எந்த கிறுக்கன் உம்மகிட்ட வந்து சொன்னது” என்று அசராது கேட்டார் முருகேசன்.

அவர் அப்படித்தான். கோவம், வீம்பு இதெல்லாம் தனியாக இருக்கும் போது மட்டும் தான். பொதுவில் வைத்து தெரியாமல் கூட ஆதியை விட்டு கொடுத்திட மாட்டார். இப்போதும் அப்படித்தான்.

அடுத்து, கதிரவனை போல், முருகேசன் ஒன்றும் அவர்களை எதிரியாய் எல்லாம் பார்ப்பது கிடையாது. அவர்களுடைய உறவு வேண்டாம். குறிப்பாய் மறுபடியும் ஒட்டி உறவாட முடியாது என்பது மட்டும்தான் அவர் எண்ணம்.

அதனால் தான் மனைவியையோ, மகளையோ அங்கு செல்லக்கூடாது என்று சொல்லியது கிடையாது. ஆனால் அவர்களாகவே ஒதுங்கி நின்றார்கள். இவரும் அதை ஏன் என்று கேட்கவில்லை.

அங்கே தாமரையோ முந்தி சேலையால் வாயை மூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, ஆதியோ காதில் ரத்தம் வராத குறையாய் படுத்திருந்தான்.

“எந்த எடுபட்ட சிறுக்கி கண்ணுப்பட்டிச்சின்னு தெரியலையே. இப்படி என் ராசா விழுந்து அடிப்பட்டு வந்திருக்காண்ணே” என்றார் தாமரை.

“ஐயோ பாட்டி. இப்போ எனக்கு என்னாச்சுன்னு, நீ இப்புடி ஊர கூட்டி ஒப்பாரி வெச்சிட்டு இருக்க” என்றான் ஆதிரன்.

அதற்குள் அங்கு வந்த துளசியோ, “மதினி இப்படி ஒப்பாரி வைக்கிறத வுட்டுட்டு, நான் கொண்டு வந்த அந்த ஆட்டுக்கால் சூப்ப எடுத்து குடிக்க கொடு. அப்பத்தேன் உடைஞ்ச எலும்புலாம் சீக்கிரம் ஒன்னா சேரும்” என்றார்.

“ஐயோ பெரியம்மா. நீங்களுமா? எனக்கொன்னும் இல்ல. வேணும்னா பாருங்க” என்று அவன் தன் கையை மடக்கி புஜத்தை காட்டினான்.

“அடேய் சும்மா இருடா. டாக்டருத்தேன் கைய கால ஆட்டக்கூடாதுன்னு சொல்லிருக்காருல்ல” என்றார் தாமரை.

அதற்குள், “ஆதி” என்று செல்வி வந்திருக்க, “வாங்க மதினி. பக்கத்து ஊருக்காரி நானு, அப்பவே வந்துட்டேன். பக்கத்து வூட்டுல இருந்து வர்ற நேரம்மா” என்றாள் துளசி.

அதில் அவருக்கோ ஒரு மாதிரி ஆகிவிட, அதில் ஆதிரனோ, “இப்போ நான் என்ன செத்த போயிட்டேன். அம்புட்டு பேரும் வந்து பாக்கிறதுக்கு. அத்த, எனக்கொன்னும் இல்ல. நீங்க எதுக்கு, இங்கலாம் வந்துட்டு. பொறவு, வீணா உங்க புள்ள மறுபடியும் கம்பு சுத்துவான்” என்றான்.

அதில் செல்வி சட்டென்று அழுதுவிட, ஏனோ, அவன் அன்னைக்கு பின் அவனுக்கு எல்லாமுமே, அவர் தான். அவர் அழவும், அதை அவனால் தாங்கவே முடியவில்லை. “ஐயோ அத்த. நான் சும்மாத்தேன் சொன்னேன். இங்கப்பாருங்க” என்றவன் வேகமாய் படுக்கையில் இருந்து எழ முயற்சித்தான்.

ஆனாலும், கை கால்லி கட்டு போட்டிருக்க, செல்வியோ, “ஐயோ கண்ணு. அசையாதய்யா. வலிக்க போவுது” என்று அவன் தோள்பட்டையில் கை வைத்து அவனை படுக்க வைத்தார்.

“உங்க கண்ணுல தண்ணிய பாத்து வலிக்காததா, இந்த காயத்தால வலிச்சிட போவுது” என்று சிறு கோவத்துடன் கூறினான்.

அதில் கண்ணை துடைத்துக் கொண்ட செல்வியோ, “நான் அழலையா. செத்த கவனமா போயிருக்க கூடாதா” என்றவர் அவன் காயத்தைப் பார்த்தார்.

அதில், மீண்டும் இளநிலா வியனுடன் பைக்கில் சென்ற காட்சி மட்டுமே நினைவுக்கு வர, அவனுடைய உடல் இறுகியது.

அதே நேரம் அங்கே இளநிலாவின் மனமோ, “உன்னாலத்தேன் அவருக்கு இப்படி ஆச்சு” என்று அவளை போட்டு படுத்தி எடுத்தது. அவள் வியனுடன் வர மாட்டேன் என்று தான் கூறினாள். ஆனால் கதிரவனே அவளுக்கு கால் செய்து சொல்லியிருக்க, வேறு வழியின்றிதான், அவன் பைக்கில் ஏறியிருந்தாள். அப்படி இருக்க, அதில் ஆதியை எல்லாம் சுத்தமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. இத்தனைக்கும், வியன் அவளை ஊர் வரைக்கும் கூட அழைத்து வந்திருக்கவில்லை. கல்லூரியில் இருந்த பஸ் ஸ்டாப் வரைத்தான் அழைத்து சென்றிருந்தான். அதற்குள் அவள் எதிர்பார்க்காத அத்தனையும் நடந்து முடிந்திருந்தது.

மனமோ அவனைப் பார்க்க சொல்ல, ஆனால் எப்படி அவனை சென்று பார்க்க என்றுதான் தெரியவில்லை. அதில் அவன் செயினை அழுத்திப் பிடிக்க, “பேசாட்டி, இந்த செயின்ன கொடுக்கிறதுக்கணக்கா போயி பாத்துட்டு வந்துடலாமா” என்று தனக்குள் யோசித்தாள் இளநிலா.

(ம்ஹூம். இப்பத்தேன் உன் மேல இருக்கிற கடுப்புல, பைக்க கொண்டு போய் எங்கேயோ விட்டுட்டு வந்திருக்கான். இப்போ இந்த செயின்னையும் கழட்டி கொடு. ரொம்ப சந்தோஷப்படுவான். சரி அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

இம்சிக்குமா?..

Author:    1 Sarmi SS
Comments   4

*** இளந்தளிர் – 8 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com