இளந்தளிர் – 2

“ஹாய் நிலா” என்ற வியனின் குரலில், நிலா நிமிர்ந்துப் பார்க்க, அங்கே காக்கி சட்டை, காக்கி பேண்டில் கம்பீரமாய் நின்றிருந்தான் அவன்.

அவனைப் பார்த்ததும், அன்னிட்சையாய், தன் கையில் இருந்த, ஆதிரனின் சட்டைப் பட்டனை அழுத்தி, தன் உள்ளங்கைக்குள் பதுக்கி கொண்டாள்.

அவள் எதுவும் சொல்லாமல் இருக்கவும், “ஹேய், என்னாச்சு? உன் கண்ணுக்கு நான் தெரியலையா என்ன” என்று சிறு புன்னகையுடன் கேட்டான்.

“அவ என்னிக்கு ஆறுட்ட பேசி, நீ பாத்திருக்க” என்ற துளசியின் குரலில், வியன் திரும்பினான்.

அதுவரை அவன் முகத்தில் இருந்த புன்னகை சட்டென்று மாறியிருக்க, அதை உணர்ந்தாலும், “இப்பத்தேன் வாறீயா? போ போயி சாப்பிடு” என்றார்.

“ம்” என்று இறுக்கமாய் சொல்லியவன், நிலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு கடக்க, துளசியோ, “இங்க என்னத்த தனியா நின்னுட்டு இருக்கவ” என்றார்.

“இல்லத்த அது” என்றவளுக்கு வார்த்தை அவ்வளவுத்தான் வந்தது. “போயி உன் அம்மாக்கூட நில்லு. பொறவு எவனாச்சும் பாத்தான், ஏதாச்சும் சொன்னான்னு, உன் அண்ணன்காரன் காதுல விழுந்தா, அடுத்த பஞ்சாயத்த கூட்டிட்டு நிப்பான்” என்ற துளசியோ, “அழகா இருக்கடி” என்று அவளுக்கு சுற்றி போட்டார்.

அதில், இப்போது அவள் கன்னக்குழி கொஞ்சமாய் தெரிய, “செரி செரி, உள்ளார போ” என்று சொல்லிவிட்டுதான் சென்றார்.

அங்கே வியனைப் பார்த்த செல்வியோ, “வாய்யா, இப்பத்தேன் வந்தீயா?” என்று கேட்க, “கதிரவன எங்க அத்த? ஆளையே காணும்” என்றான் வியன்.

அதற்குள், கல்யாண வீட்டுக்காரர் வந்து, “வாங்க தம்பி. மொத சாப்பிட உக்காருங்க” என்று அவனை அழைத்து செல்ல, இப்போது செல்வியின் அருகில் வந்த இளநிலாவோ, “ம்மா, வீட்டுக்கு போலாம்” என்றாள்.

அதில் மகளைப் பார்த்த செல்விக்கோ, மகளின் அழகு சற்று பயத்தையும் சேர்த்து கொடுக்கவே செய்தது.

அதே நேரம் அவர் மனதில் ஒன்று இருந்தது. ஆனால் அது நடக்கவே போறதில்லை என்பது புரிந்து, மகளின் மனதிலும் தெரியாமல் கூட அவர் அந்த ஆசையை வளர்த்திருக்கவில்லை.

இங்கே கல்யாண வீட்டில் இருந்து கிளம்பிய ஆதிரனோ, நேரே அவனுடைய தோட்டத்துக்குத்தான் சென்றான்.

அவனைப் பார்த்ததும், வேலையாட்கள் எல்லாம் வணக்கம் தெரிவிக்க, அவர்களுக்கு எல்லாம் தலையசைப்பை கொடுத்துவிட்டு, உள்ளே சென்றான்.

அங்கே இருந்த வேலையாளிடம், “உரமூட்ட எல்லாம் வந்திருச்சா? எப்போ, இந்த லோடெல்லாம் அனுப்புறதா இருக்கீங்க?” என்று சற்று கராராகத்தான் கேட்டான்.

ஏனெனில், வேலை விஷயத்தில், அவனுக்கு சிறு தவறு கூட நடக்க கூடாது. அதிலும், இரண்டு நாட்களாய், அவன் இந்தப் பக்கம் வந்திருக்கவில்லை.

எல்லா வேலையும் முடிந்திருக்கும் என்று நினைத்து அவன் வந்திருக்க, அதெல்லாம் அப்படியே கிடந்தது.

“இல்ல தம்பி. இன்னிக்கு எல்லாத்தையும் ஏத்திடலாம்” என்று அவர் சொல்ல, அதில் அவரை ஒரு பார்வை அழுத்தி பார்த்தவனோ, “நாளைக்குள்ள அத்தனையும் முடிஞ்சிருக்கனும்” என்றவன், அடுத்தடுத்து, பார்க்க வேண்டிய வேலைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான்.

இங்கே, அவனைப் பார்த்தப்படியே இருந்த, பெண்ணின் தலையில் தட்டியவளோ, “ஏண்டி, நீ இப்புடி அவர வெறிச்சு பாக்குறதே, அண்ணே பாத்திச்சு, பொறவு, இந்தப்பக்கமே வர வுடாம பண்ணிடும்” என்றாள்.

“என்னடி? நான் என்ன அவர கன்னாலம் கட்டி குடும்பம் நடத்தவா பாத்தேன். ஏதோ கண்ணுக்கு அழகா அம்சமா இருக்காரே. இவர எந்த மகராசி கட்டிக்கப் போறாளோன்னுத்தேன்ன நெனச்சி பாத்தேன்” என்று சிறு ஏக்க பெருமூச்சோடு பார்த்தாள்.

“ஏன்? நீ வேண்ணா போயி கெட்டிக்கோயேன்” என்று இன்னொருத்தி சீண்டலாய் சொல்ல, “ம் கெட்டிக்க முடிஞ்சா மாட்டேன்னா சொல்லப் போறேன். அதேன். இவர கட்டிக்கன்னே ஒருத்தி இருக்காளே” என்றாள் மயில்.

“அது ஆறுடி” என்று இன்னொருத்தி கேட்க, “ஏண்டி தெரியாதக்கணக்கா கேக்குற. அதேன் அவீக அத்தமவ இருக்காத்தேன்ன. எப்புடியும், அவெள்ளத்தேன்ன கட்டி வைப்பாக” என்றாள்.

“ஆறு நீ இளநிலாவ சொல்றீயா?” என்று ஒருத்தி கேட்க, “ஆமா பின்ன அவருக்கென்ன அம்பது அத்த மவளா இருக்கு. அவ ஒருத்தித்தேன்ன இருக்கா” என்றாள்.

“ஏண்டி? அதெல்லாம் நடக்குற காரியம்மா? அதுவும் போக, அவ அண்ணனுக்கும், இவருக்கும் இருக்கிற பஞ்சாயத்து தெரியாதா என்ன? அதெல்லாம், அந்த கதிரவன், அவன் தங்கச்சிய, இவருக்கு கட்டிக்கொடுக்க மாட்டான். இவரும், அந்த வூட்டுல பொண்ணெடுக்க மாட்டாரு. இத்தன ஏன், இந்த ஊருலத்தேன்ன அந்தப்புள்ள இருக்கு. இவரு, அந்தப்புள்ள இருக்கிற திசபக்கம் கூட திரும்ப மாட்டாரு” என்றாள்.

“க்கும், இவரு என்னிக்கு எந்தப்புள்ளைய பாத்தாரு. ஆனாலும், அந்த இளநிலா புள்ளையும், பாக்க தேவதக்கணக்காத்தேன்ன இருக்கா. அவெள்ள பாத்தே மயங்கலன்னா, நம்ம எல்லாம் எம்மாத்திரம்” என்றவளுக்கு பெருமூச்சுத்தான் வந்தது.

“செரி செரி. வந்த வேலைய பாப்போம். பொறவு சம்பளத்துல பாதியத்தேன் அந்த வெற்றி கொடுப்பான்” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கே ஆதிரன், “ஆமா வெற்றி எங்க போனான்?” என்றான்.

“அது வந்து தம்பி” என்று வேலையாள் முடிக்கும் முன்னே, “லோடு ஏத்துன காச, பேங்குல போட்டுட்டு வர போனேண்ணே” என்றப்படி அங்கு வந்தான் வெற்றி.

ஆதிரனின் வலக்கை, இடக்கை அத்தனையும் அவன் தான். ஆதி இல்லாத நேரத்தில், அத்தனையையும் வெற்றிதான் பார்த்துக் கொள்வான்.

இருவரும் ஒரே கல்லூரியில் தான் படித்தனர். ஆனால், அவனுடைய ஜூனியர் பையன். படித்து முடித்ததோடு, ஆதி விவசாயம் செய்யப் போவதாக சொல்ல, இவனும் படித்து முடித்து, இவனுடன் ஒட்டிக் கொண்டான்.

அவனும் எத்தனையோ சொல்லி பார்த்துவிட்டான். ஆனால், “ராமனுக்கு அனுமான் மாதிரி. இந்த ஆதிக்கு வெற்றி” என்று முடித்திருந்தான்.

“செரி. இங்க என்ன, சம்பள பாக்கி இம்புட்டு கெடக்கு. அன்னிக்கே இதெல்லாம் முடிச்சு வைன்னு சொன்னேன் தான” என்று ஆதி கேட்க, “அண்ணே, அதெல்லாம் சம்பள பாக்கி இல்லன்னே, அவீக வேல பாக்காம, சும்மா ஓபி அடிச்சிட்டு இருந்தாக, அதனாலத்தேன்” என்று ஏதோ சொல்ல வந்தான்.

“அதுக்குன்னு, அவீக பாத்த வேலைக்கு பணத்த கொடுக்காம இருப்பீயா. எதுனாலும் இன்னிக்குள்ள பாத்து முடிச்சி விடு” என்றான்.

“சரிண்ணே” என்ற வெற்றியோ, எதையோ சொல்ல வந்து பின் சொல்லாமல் நிறுத்தினான்.

ஒரு கட்டத்தில், ஆதிரன், “செரி. வேலையில எந்த தாமதமும் நடக்க கூடாது. நான் மில்லு வரைக்கும் போயிட்டு வரேன்” என்று நகர்ந்தான்.

“அண்ணே” என்று வெற்றி அழைக்க, அவனை திரும்பி பார்த்தவனோ, “என்ன?” என்று கேட்க, “அது வந்துண்ணே. பேங்குக்கு போற வழியில, உங்க மாமாவ பாத்தேன். அவீக” என்றவனுக்கு அதை சொல்ல முடியவில்லை.

இங்கே அவன் சொல்லாமலே, என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்தவன், “நான் அந்த பேங்க் மேனஜர்ட்ட பேசிக்கிறேன்” என்றான்.

ஏனெனில், அவனின் மாமா முருகேசனுக்கு, கடந்த ஐந்து வருடங்களாகவே தொழிலில் அத்தனை நஷ்டம். இவன் உதவ முன் வந்தும், அவர் அதை ஏற்க தயாராக இல்லை. வாங்கிய கடனை கட்ட முடியாத சூழலில் தான் அவர் இருக்கிறார். ஆனாலும், வீராப்பும், கோவமும் மட்டும் கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை.

அதனால் இந்த முறை நேரடியாய் உதவி செய்ய முயற்சிக்காது, மறைமுகமாய் உதவி செய்ய நினைத்தான். என்னதான் பகையாக இருந்தாலும், உறவு முறை என்றும் மாறப் போறது கிடையாது. அடித்தாலும், பிடித்தாலும், ஆதிரனைப் பொறுத்தவரை, உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பான். அதே நேரம் கொடுத்த வாக்கிற்காக, எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வான்.

அதுதான் அவன் வாழ்க்கையையே  தலைகீழாய் மாற்றி வைத்திருக்கிறதோ என்னவோ? 

அன்று கல்லூரிகள் திறக்கும் நாள் என்பதால், கிராமமே அந்தக் காலையிலிருந்து பரபரப்பாக இருந்தது.

புதிதாக வாங்கிய சுடிதார்களை அணிந்து, நீண்ட பின்னலில் மல்லிகைப் பூவை சூடிய இளம்பெண்கள், தோளில் புத்தம் புதிய பைகளுடன் வீட்டைவிட்டு மகிழ்ச்சியாய் கிளம்பினர்.

வாசலில் நின்று வழியனுப்பும் அம்மாக்கள், "பாத்துப் போடீ... சாப்பாட்ட மறக்காம சாப்பிடு." என்று சொல்ல, அப்பாக்கள் பஸ்ஸுக்கான காசை கையில் திணித்தப்படி, “காசு போதும்மா தாயீ” என்று தங்கள் பாசத்தை கொட்டினர். 

தோழிகளைப் பார்த்ததும், தனியாக வந்தவர்கள் கூட கூட்டமாக மாறி, சிரிப்பும் பேச்சுமாக பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.

அதே போல் தான் நிலாவும், அன்று கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள். மதுரையில் இருக்கும் அரசு கல்லூரியில், இளநிலை மூன்றாம் வருடம் படித்து கொண்டிருக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரிதான். என்ன ஆங்கிலம் மட்டும் சற்று தகராறு அவளுக்கு. அதனாலையே, இஞ்சினியரிங் எடுக்க மறுத்துவிட்டாள்.

அதுவும் போக, வீட்டின் சூழ்நிலையும் அவளுக்கு தெரியும். தேவையில்லாமல் செலவு வைக்க வேண்டாம் என்ற எண்ணம். அவளின் அண்ணன் கதிரவன், இஞ்சினியரிங் தான் முடித்திருக்கிறான். ஆனால் அந்த வேலைக்கு செல்லாது, இப்போது கவர்ன்மெண்ட் வேலைக்கு படித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுக்கு எப்படியாவது, அந்த ஆதிரனை முந்தி காட்ட வேண்டும். ஆதிரன் செல்லாத அந்த கவர்ன்மெண்ட் வேலைக்கு அவன் செல்ல வேண்டும். எல்லாவற்றிலும் அவனுக்கு போட்டிதான். அதனால் தான் வீம்புக்கென்றே அத்தனையும் செய்து வைத்திருந்தான்.

இவளோ, கதிரவனுக்கு அப்படியே நேரெதிர். “பஸ்ல போயிடுவீயாத்தா” என்று செல்வி சற்று தயக்கமாய் மகளைப் பார்க்க, “போயிடுவேன்ம்மா” என்றாள்.

ஏனெனில், வழக்கமாய், முருகேசனோ, இல்லை என்றால் கதிரவன் தான் பைக்கில் கொண்டு சென்று விடுவர். பஸ்ஸில் எல்லாம்  பெரிதாய் தனியே செல்ல மாட்டாள். அதனால் தான் செல்விக்கு சிறு அச்சம்.

உண்மையில், அவளுக்கும் கூட சிறு அச்சம் இருக்கவேத்தான் செய்தது. ஆனாலும், அவளுடைய தோழிகளுடன் செல்வதால், சரி என்று தலையாட்டியவள், கல்லூரி பேக்கை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

சரியாக அன்னேரம் இளநிலாவின் தோழி செம்பாவும் வந்திருக்க, “என்னம்மா தாயீ, கெளம்பிட்டீயா? போவோம்மா” என்றாள்.

“ம்” என்று அவள் தலையாட்ட, செல்வியோ, “பாத்து போயிட்டு வாங்கம்மா” என்றார்.

“கவலைய விடுங்க அத்த. அதெல்லாம் உங்கப் பொண்ண, எப்புடி கூட்டிட்டு போறேன்னோ, அப்படியே கூட்டிட்டு வந்து விட்டுடுறேன்” என்றாள் செம்பா.

அதில் சிரித்தவரோ, “செரி கவனமா போயிட்டு வாங்க” என்று சொல்ல, “ஏண்டி, என்னமோ மொத வருஷம், காலேஜூக்கு போறதுக்கணக்காத்தேன், உங்க வூட்டுல உள்ளவங்க பதறுறாங்க” என்று செம்பா கிசுகிசுத்தாள்.

“ச் வாடீ” என்று செம்பாவை அவள் இழுத்துக் கொண்டு நடக்க, ஆதிரனோ அப்போதுதான் பெரிய வீட்டில் இருந்து வெளியில் வந்தான்.

அவன் புல்லட்டின் சத்தம் கேட்டு, நிலாவை தவிர்த்து, அந்த ரோட்டில் சென்று கொண்டிருந்த அத்தனை இளம்பெண்களும், நிமிர்ந்து அவனைப் பார்த்தனர்.

ஆனால் அவனோ வழக்கம் போல் எவரையும் கண்டுக்கொள்ளாமல், கடந்து செல்ல, நிலாவை கடக்கும் நொடி, ஒரு நொடி புருவத்தை உயர்த்தினான்.

ஏனெனில், அவனின் அத்தை மகள், இப்படி ரோட்டில் நடந்து செல்பவள் கிடையாதே. அதனால், மெல்ல அவன் பைக்கின் வேகத்தை குறைக்க, செம்பாவோ, “ஏண்டி உன் மாமா கூட வேண்ணா பைக்ல போறீயா” என்றாள்.

“என்ன” என்று நிலா அதிர்ந்து நிமிர, சரியாக அவளின் மருண்ட விழிகள், கதிருடைய பைக் கண்ணாடியில் விழுந்தது. அதில் சட்டென்று சடன் ப்ரேக் அடித்து நிறுத்தினான்.

அந்த ஒற்றையடி பாதையில் சட்டென்று நிறுத்தியதில், பைக் ஒரு நொடி தடுமாறியிருக்க, இவளின் உதடுகள் அன்னிட்சையாய், “மாமா” என்று பதட்டமாய் முனுமுனுத்தது.

ஆனால், அவளின் குரல், அவள் தொண்டையை விட்டு வெளி வந்திருக்கவில்லை. அதற்குள், அவர்களுக்கு எதிராக, வியன், அவனுடைய புல்லட்டில் வந்தான்.

அதில், ஆதிரனின் உடல் இறுகியது. வியனின் பார்வையும் ஆதிரனின் மீது பட்டு, பின் இளநிலாவின் மீது விழுந்தது.

அவளைப் பார்த்ததும், அவளின் முன் சென்று வண்டியை நிறுத்திய வியன், “வந்து வண்டியில ஏறு நிலா” என்று அத்தனை உரிமையாய் அழைத்தான்.

அதில் ஆதியோ ஆக்ஸிலேட்டரை அழுத்தி திருக, அதுவே சொல்லியது, நீ அவனுடன் செல்லக் கூடாது என்று. அவனுக்காக இல்லை என்றாலும் கூட, நிலா வியனுடன் சென்றிருக்க மாட்டாள் என்பது வேறு கதை.

“இல்ல” என்று இளநிலா முடிப்பதற்குள், “உன் அண்ணன் தான், உன்னை கொண்டு போய் விட சொன்னான். எனக்கு இன்னிக்கு, உங்க காலேஜ் பக்கத்துலத்தேன் டூட்டி” என்றான் வியன்.

அண்ணன் என்ற வார்த்தையில், இளநிலாவால் மறுக்க முடியவில்லை. ஆனாலும், அவனுடன் செல்லவும், அவளுக்கு அத்தனை தயக்கம். அதில் தோழியின் கையை அழுத்திப் பிடித்தாள்.

“ஏன் போலீஸ்காரரே. என் ப்ரண்ட் ஒரு நாள் எங்க கூட வரக்கூடாதா? அதுக்குள்ள வரிசையா வந்து நிக்குறீங்க” என்றாள் செம்பா.

“நிலாக்கு பஸ்ல போயி பழக்கம் கிடையாது” என்று வியன் சொல்ல, “அதெல்லாம் இனி பழகிப்பா. நீ வா நிலா. நம்ம போவோம். போலீஸ்காரர், பின்னாடியே வருவாரு” என்று செம்பா நிலாவின் கையை பிடித்து அழைத்து சென்றாள்.

அதன் பின்னே ஆதியின் உடல் சற்று தளர்ந்திருக்க, வியனோ, ஆதியைத்தான் பார்த்தான். ஆதியும் அவனைத்தான் பார்த்தான். இருவருடைய கண்ணிலும், என்ன மாதிரியான உணர்வுகள் இருக்கிறது என்று வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை.

வியனுமே, ஆக்ஸிலேட்டரை அழுத்தி திருக, இருவரில் ஒருவர் வழி விட்டால் தான். அந்த பாதையில் செல்ல முடியும். ஆனால் இருவருமே, பாதையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லையோ என்னவோ.

அதனால் மேலும் சில நொடிகள் அப்படியே நின்றிருக்க, அதற்குள், இவர்களால், பின்னே வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் பின் தங்கியிருக்க, அதில் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்ட ஆதிரனோ, தன் புல்லட்டை திருப்பி வேறு வழிக்குள் சென்றிருந்தான்.

அவன் அப்படித்தான். வீம்புக்காக எதையும் செய்ய பிடிக்காது. ஆனால் வியனின் விஷயத்தில் மட்டும் சற்று வீம்பு பார்ப்பான். ஆனாலும், ஊர், நீதி, நியாயம் என்று வந்தால், சில நேரத்தில் அதை விட்டுவிடுவான்.

ஆனால் வியனோ மற்ற எல்லாரிடமும் காட்டும் முகம் ஒன்று, ஆதிரனிடம் மட்டும் அவனுக்கு இருக்கும் முகம் வேறு. அவனிடம் எதையும் விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் தீவிரம் அதிகம்.

இவர்களின் வீம்புக்கு நடுவே, இளநிலா வந்தால், அவளின் வாழ்க்கை என்னவாகும்? சரி அடுத்து என்ன நடக்க போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க.

இம்சிக்குமா?..

Author:    1 Sarmi SS
Comments   8

*** இளந்தளிர் – 2 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com