தாபம் – 4

அந்த அரண்மனையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் “ஆமா-டா இவ்வளவு பெரிய அரண்மனைய கட்டுன ராஜா-க்கு, ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் கட்டனும்-னு தோணலப் பாரு” என்று கிண்டலாக கூறினான்.

“என்னடா சொல்ற?” என்று அவனின் தோழன் புரியாமல் கேட்டான்.

“ஆமாம்டா, நீ இந்த ராஜா-வோட வரலாறு படிக்கலையா?” என்று கிண்டலாக கேட்டான்.

“இவரோட வரலாறா? அது எந்த புக்-ல இருக்கு?” என்று அவன் குழப்பமாக கேட்டான்.

“இங்க வரப்போறோம்-னு சொன்னதும், எங்க பாட்டிகிட்ட இந்த அரண்மனையப் பத்தி கேட்டேன். அந்த ராஜா லாஸ்ட் வரைக்கும் யாரையுமே கல்யாணம் பண்ணிக்கலையாம். அதனாலத்தான், அவரோட தலைமுறை அவரோட முடிஞ்சு போயிருச்சாம்” என்று சோக கீதம் வாசித்தான்.

“சரி அதனால இப்ப என்னடா உனக்கு?” என்று மற்றொருவன் கேட்க,

“இல்ல மச்சி. இவ்வளவு பெரிய அரண்மனைய கட்டுறது முக்கியம் இல்ல, நம்ம பேரை சொல்றதுக்கு ஒரு வாரிசு கூட இல்லாம, இப்போ இந்த சொத்து-லாம் அநாமத்தா போயிருச்சி. இதனால நான் சொல்ல வர்ற கருத்து என்னன்னா? அரண்மனைய, ஆண்டு அனுபவிச்சதுக்கப்புறம் கூட கட்டிக்கலாம். அதுக்கு முன்னாடி, சரியான வயசுல கல்யாணம் பண்ணி வாழ ஆரம்பிக்கனும் அதான் முக்கியம். சோ இன்னிக்கே என் ஆள்கிட்ட லவ்-வ சொல்லப் போறேன்” என்று அவன் விளையாட்டாக கூறினான்.

அவன் கூறியதைக்கேட்ட அவனின் நண்பர்கள் கோரஸாக காரி துப்பி “நீலாம் உருப்படவே மாட்ட-டா.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

அவர்கள் சென்ற பின், அவனிடம் வந்த ருத்ரா அவனின் கன்னத்தில் ஓங்கி அடித்தாள்.

“இப்ப எதுக்கு என்னை அடிச்ச?” என்று கோவமாக அவன் கேட்டான்.

“உண்மை என்னன்னு தெரியாம, உன் பாட்டுக்கு பேசிட்டு இருக்க. நீ பார்த்தியா. அவர் கல்யாணம் பண்ணலன்னு. இல்ல அவர் வந்து உன்கிட்ட அட்வைஸ் கேட்டாரா? சும்மா வாய் இருக்குன்னு, என்ன வேணும்னாலும் பேசுவியா நீ? பல்லை உடைச்சி கையில கொடுத்துடுவேன். அமைதியா சுத்தி பார்க்கிறதா இருந்தா சுத்திப் பாரு. இல்லையா மூடிகிட்டு, இடத்தை காலி பண்ணு. வந்துட்டான். ஏதோ நேர்ல வந்து பார்த்த மாதிரி” என்று ருத்ரா கோவமாக எச்சரித்தாள்.

“இவ்வளவு பேசுறீயே உனக்கு மட்டும், இந்த அரண்மனை ஹிஸ்டரி தெரியுமா? சும்மா ஓவரா பண்ற ருத்ரா” என்று கோவமாக அவன் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அவன் சென்ற பின்னும் கோவம் தணியாமல் நின்றிருந்த ருத்ரா-வை பார்த்த தென்றலுக்கு முதலில் எதுவும் புரியவில்லை. 

“ஏய் என்னாச்சு ருத்ரா? ஏன் விக்ரம் கிட்ட இவ்வளவு ஹார்சா பேசுன?” என்று மென்மையாக கேட்டாள்.

“நீயும் கேட்டத்தான தென்றல். அவன் இஷ்டத்துக்கு, தப்பு தப்பா பேசுறான். அதான்” என்று ருத்ரா தன்னை மீறி கூறினாள்.

“அவன் தப்பா சொல்றான்னு உனக்கெப்டி தெரியும்?” என்று தென்றல் குழப்பத்துடன் கேட்டாள்.

அப்போதே, “அது. இல்ல எனக்கு என்னமோ, அப்படி எதுவும் இருக்காதோன்னு தோணுது.” என்று ருத்ரா வேகமாக கூறினாள்.

“எப்படி?” என்று தென்றல் சந்தேகமாக வினவ, “ம். அப்படி.. அந்தப்பக்கம் தான் எல்லாரும் போனாங்க. நீயும் வா” என்று ருத்ரா தென்றலையும், இழுத்துச் சென்றாள்.

அவள் சென்ற பின், அந்த இடத்தில் இருந்த மனுவேந்தன் வரைந்த ஓவியத்தின் வழியே “பரவாயில்லை இளவரசி. காலம் கடந்த பின்னும், காதல் உம் நெஞ்சில் மிச்சம் இருப்பதைக் கண்டு நான் வியக்கிறேன். ஆனால் காலம் கடந்த காதலும், தாகம் தீர்க்கும் என்று எண்ணும், கானல் நீரும் ஒன்று. இரண்டுமே அர்த்தமில்லாதது. இன்று இத்தனை வாக்கியங்கள் சேர்த்து பேசிய நீ, அன்று ஒற்றை வார்த்தை பேசியிருந்தால், நான்… இந்த மனுவேந்தன், சிவந்த விழியோனாய் மாறியிருக்க மாட்டேனே” என்று ஒரு நொடி இளகிய குரலில் பேசியவன், மறு நொடியே “நீ செய்தது பிழை இல்ல இளவரசி. கொலை. என் உயிர் இருக்கும் போதே உடலை, உயிரை விட்டு பிரித்து, என்னை மட்டுமல்ல, என் மனதையும் எரித்த பாவியடி நீ. அதை இன்றல்ல, ஏழு ஜென்மம் எடுத்தாலும் மறவேன் நான்” என்று கோவமாய் உரைத்தான் சிவந்த விழியோன். 

ருத்ராவின் பேச்சு, தென்றல் மனதில் பல குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

யாரோ ஒரு ராஜா-விற்காக, இவள் பக்கம், பக்கமாக பேசியதை பார்த்த தென்றலுக்கு அதை, அவ்வளவு எளிதில் விட முடியவில்லை.

அதை யோசித்துக்கொண்டே ருத்ரா செல்லும் திசைக்கு செல்லாமல், வேறு திசைக்கு சென்றாள் தென்றல்.

திடீரென தன் பின்னால் வந்த தென்றலை காணாததால், ருத்ரா அவளை தேடி மற்றொரு பக்கம் சென்றாள்.

அந்த அரண்மனை ஏதோ குகை போல் தான் இருந்தது. காரணம் பல வழிகள் பிரிந்து சென்றிருந்தது. நிச்சயம் வழி தப்பினால் திரும்பி செல்வது சாத்தியமற்றதாகவே தெரிந்தது. அதிலும் ருத்ரா-விடம் வாங்கிய அடிக்கு அவளுக்கு பதிலுக்கு நல்ல பாடம் கத்துக் கொடுக்க வேண்டும் என்ற முடிவோடு விக்ரம் சுற்றிக் கொண்டிருந்தான்.

இதை அறியாதோ ருத்ராவோ அவனிடமே சென்று “விக்ரம், தென்றலை பார்த்தியா?” என்று கேட்டாள்.

அவனோ வேண்டுமென்றே, வேறுபக்கம் கையை நீட்டினான். அவளும் அந்தப்பக்கமாக சென்றாள்.

“எங்கப்போனா இவ? சும்மா-வே பயப்படுவா? இதுல தனியா எங்கப் போனா? தென்றல்” என்று சத்தமாகவே ருத்ரா கூப்பிட்டாள்.

ஆனால் அவளிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.

தென்றலும், ருத்ராவைத் தேடி ஒரு அறைக்குள் நுழைந்தாள். அங்கே அந்த காலத்தில் மன்னர்கள் உபயோகப்படுத்திய பொருட்கள் எல்லாம் இருந்தது. அதைப்பார்த்து தென்றலுக்கு முதலில் பயம் தான் தோன்றியது. 

“ருத்ரா மட்டும் இந்த ரூம்மை பார்த்திருந்தா? இந்நேரம் இதை பிரிச்சு மேய்ஞ்சிருப்பா” என்று தான் தென்றலிற்கு தோன்றியது.  

எவ்வளவு நேரம் அந்த அறையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் என்பது அவளுக்கே தெரியாது. அங்கே ஒரு ஓவியம் துணி போட்டு மூடி வைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்க்க சொல்லி மனம் உந்தியது.தன்னை மறந்து அந்த ஓவியத்தின் அருகில் தென்றல் சென்றாள்.

அதே நேரம் தென்றலை தேடி ருத்ரா வேறு ஒரு அறைக்குள் சென்றாள். அந்த அறைக்குள் அவள் நுழைந்த உடனே அந்த அறை தானாக மூடி கொண்டது. ஆனால் இதை அறியாதோ அவளோ “தென்றல்” என்று அழைத்துக் கொண்டே சென்றாள். அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. அதைப் பார்த்ததும், அவள் மனதுக்குள் ஒரு வித துள்ளல் எழுந்தது.

அனைவருக்கும் இருள் பயத்தை கொடுக்கும். ஆனால் சிறுவயதில் இருந்தே ருத்ராவிற்கு இருட்டு என்றால் அத்தனை பிரியம். காரணத்தை இதுவரை அவளும் யோசித்ததே இல்லை. வெளிச்சத்தில் அவளுடன் இருக்கும் உறவுகளை விட, இருளில் அவளுக்கு துணையாக யாரோ இருப்பது போல், ஒரு பிரம்மை அவள் மனதில் எப்போதும் இருக்கும்.

தன் கையில் வைத்திருந்த கேமராவை எடுத்து அங்கு கிளிக் செய்தாள். அதிலிருந்து வந்த கிளிக் என்ற சத்தத்திற்கு நடுவில், கிரீச் கிரீச் என்ற சத்தமும் சேர்ந்து ஒலித்தது. முதலில் அதை கவனிக்காத ருத்ரா அவள் எடுத்த புகைப்படத்தை பார்த்தாள்.

அந்த புகைப்படத்தை பார்த்தவளின் விழிகள் ஆச்சர்யத்தில் மின்னியது. பின் இருக்காதா? என்ன? அந்த இடம் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட பொருட்கள் நிரம்பி வழிந்தன.

அதை கண் கொண்டு பார்க்கும் ஆர்வத்தில், அங்கிருந்த அறையில் சுவிட்ச் போர்டு எங்கே என்று தேடினாள். அதை தேடும் கவனத்தில் ஏதோ ஒரு வளவளப்பான பொருளின் மீது மிதித்தாள். அது என்ன என்று உணரும் முன், அவள் விரல்கள் சுவிட்ச் போர்டின் மீது பட்டது.

அந்த சந்தோசத்தில் அவள் அதை ஆன் செய்யப்போக, அவள் மிதித்திருந்த ராஜ நாகத்தின் வால் பகுதி, அவள் காலில் இருந்து நழுவ முயற்சித்தது. 

அவளுக்கு ஏதோ தரை விரிப்பு வழுக்குவது போல் தான் தோன்றியது. 

அவள் விளக்கை ஒளிர விடுவதற்கும், அந்த ராஜ நாகம் அவளை நோக்கி தன் சூடான மூச்சுக்காற்றை விடுவதற்கும் சரியாக இருந்தது. அந்த சுவாசத்தின் தாக்கத்தில் கலந்திருந்த நச்சு காற்று, அவளையும் மீறி அவளை மயக்கத்தில் வீழ்த்திக் கொண்டிருந்தது.

சட்டென்று “ருத்ரா” என்ற தென்றலின் பயந்த குரல், அவள் செவியைத் தீண்டி, மயக்கத்திற்கு செல்ல விடாமல் தடுத்தது. 

“தென்றல்” என்று ருத்ரா அந்த அறையை பார்க்காமல் வேகமாக அங்கிருந்து ஓடினாள்.

ருத்ராவின் காலடி பட்டதும், அந்த அறை வாசல் தானாக திறந்துக் கொண்டது. ஆனால் தென்றலுக்கு எதுவும் ஆபத்தோ என்று ஓடியதால் அவளுக்கு எதுவும் புலப்படவில்லை.

அவள் சென்ற பின் அந்த ராஜநாகம் அந்த அறை உயரத்திற்கு எழுந்து, அங்கிருந்த சுவற்றில் மாற்றியிருந்த ஓவியத்தை பார்த்து சீறியது. அந்த அறை மீண்டும் இருள் பூசிக் கொண்டது. 

“இந்த அறைக்கு இப்போது மட்டுமல்ல, இனி எப்போதும் விமோசனம் கிடைக்காது. ஆனால் அந்த சாபத்தை அளித்த உன்னை அழித்தே தீருவேன் இளவரசி. இருள் மேல் உனக்கு தான் இத்தனை காதலா? ஆனால் என் வாழ்க்கையை இருளில் வீழ்த்திய உன் மேல் எனக்கிருக்கும் இந்த வஞ்சம் எப்போதும் தீராது” என்ற சிவந்த விழியோனின் வார்த்தைகள், தங்க விழியானின் செவியில் விழுந்ததோ என்னவோ? ஒரு நொடி அவள் கால்கள் நின்று பின் பயணத்தை தொடங்கியது.

ருத்ரா தென்றலின் குரல் வந்த அறைக்குள் நுழைந்து “தென்றல் என்னாச்சு?” என்று கேட்க, ருத்ராவை பார்த்ததும், தென்றல் ஓடிச் சென்று கட்டிக்கொண்டாள்.

“என்னாச்சு தென்றல்” என்று ருத்ரா வேகமாக கேட்க, அவளோ சற்றும் பயம் தெளியாதவளாக நின்றிருந்தாள்.

“ஏய் என்னாச்சிடி? சொன்னாத்தான தெரியும்” என்று ருத்ரா அதட்டலாக கேட்டாள்.

“அங்க... அ.... அத்...” என்று ஒரு பக்கம் தென்றல் கையை நீட்டினாள்.

அந்தப் பக்கம் ருத்ரா பார்க்க, அதைப் பார்த்து அவளின் கண்கள் மலர்ந்து விரிந்தது. அவள் உதடுகள் “வாவ். அற்புதம்” என்று முணுமுணுத்தது.

தென்றலை விட்டு மெதுவாக விலகி, அந்த ஓவியத்தை நோக்கி சென்றாள். அதில் இருவர் நடனம் ஆடிக்கொண்டிருப்பது போல் இருந்தது. ஆனால் அவர்களின் முகம் தெரியவில்லை. துணியால் மறைத்திருந்தது. அதை ருத்ரா விலக்க போகும் போது “வேணாம் ருத்ரா. வா இங்க இருந்து முதல்ல போவோம்” என்று தென்றல் கைப்பிடித்து தடுத்தாள்.

“ஏய் எவ்ளோ அழகா இருக்கு. அதை ஒரு போட்டோ கூட எடுக்காம எப்படி வர்றது?” என்று ருத்ரா கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். வா” என்று தென்றல் அடம்பிடித்தாள்.

“உன்கூட வந்தேன் பாரு. என்னை சொல்லணும்.”என்று ருத்ரா கடுப்பாக சொல்லிவிட்டு,தென்றலுடன் வெளியே சென்றாள்.

ஆனால் தென்றல் வாசல் தாண்டும் முன், மீண்டும் அந்த அறையில் இருந்த ஒரு ஓவியத்தை வெறித்துப் பார்த்தாள்.

அதில் இருந்த ஆடவனின் முகம், அவளுக்குள் சொல்ல முடியாத துக்கத்தை கொடுத்தது. அதற்கு மேலும், அவள் இதயத்தை தன் கண் முன்னே யாரோ ஈட்டியால் குத்தி கையில் எடுத்தது போல், மனம் ரணமாய் கொதித்தது. அவள் கண்களில் இருந்து ஒரு துளி நீர், அந்த புகைப்படத்தில் அவளையும் அறியாமல் வீழ்ந்தது. அவள் கண்ணீர் பட்ட கணம், அந்த புகைப்படம் ஒழிர ஆரம்பித்தது. அவள் விழிகள் பயத்திலும், அதிர்ச்சியிலும் விரிந்தது.

“நீ அழுவதற்கு நேரம் இல்லை தேவி. இளவரசி ஆபத்தில் இருக்கிறார். அவரை காப்பாற்று, மண்ணை விட்டு சென்ற எனக்காக கலங்குவதை விட, இப்பூவுலகை காக்கும், எம் குலத்தை காக்க முயற்சி செய். இளவரசிக்கு ஆபத்து. உடனே இங்கே இருந்து வெளியில் சென்று விடுங்கள்” என்று தென்றலின் காதுக்குள் அசரீதி ஒலித்தது.

அந்த அசரீதி கூறியது காதில் விழவில்லை என்றாலும், ருத்ராவிற்கு ஏதோ ஆபத்து என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. என்ன செய்வது? ஏது செய்வது? என்று எதுவும் புரியாமல், அப்படியே நின்றாள்.

அதில், அவள் கையில் வைத்திருந்த ஓவியத்தின் வழியே ருத்ராவின் கண்ணில் இருந்து ரத்தம் வழிந்து மயங்கி விழுவது போல் ஒரு பிரம்மை தோன்றியது.

அதை நினைத்துப் பார்த்த தென்றலுக்கு, இப்போதும் பயத்தில் உடல் நடுங்கியது.

அந்த அறையை விட்டு வெளியே வந்து விட்ட பின்னும், தென்றல் “வா வெளிய போவோம்” என்று தொடர்ந்து கூப்பிட்டுக்கொண்டே இருந்தாள்.

அதில் ஏகக்கடுப்பான, ருத்ரா “இதுக்கு மேல வெளிய போகணும்னா, பக்கத்துல இருக்கிற ரூமுக்குள்ள தான் போகணும். அந்த ரூம்மை விட்டு வந்து பத்து நிமிஷம் ஆச்சு” என்று கூறினாள்.

அப்போதே தென்றல், சுற்றிப் பார்த்தால், அந்த அறையை விட்டு வந்துவிட்டால் தான், ஆனால், அவளுக்குள் இந்த அரண்மனைக்குள் இருப்பதே பயத்தை தான் கொடுத்தது.

“சரி வா. நம்ம பஸ்-க்கு போவோம்.” என்று தென்றல் கூப்பிட்டாள்.

“ஏன்டி, என்னை படுத்தி எடுக்கிற. அங்க பாரு டி, ஊர்ல பத்து பதினைஞ்சு பிரண்ட் வச்சிருக்கிறவேன் எல்லாம் நிம்மதியா அரண்மனைய சுத்தி பாக்குறான். ஆனா ஒரே ஒரு பிரண்ட் உன்னை வச்சிகிட்டு, அரண்மனை என்ன? அரண்மனை அப்படின்ற வார்த்தைய கூட சுத்தி பார்க்க முடியாது போல. தப்புத்தாண்டி. நீ இல்லாம, இந்த டூருக்கு வர மாட்டேன்- னு சொன்னேன் பார்த்தியா. என்னை சொல்லணும். போ. இப்ப உன்னால, என்னோட ஆசை எதுவும் நடக்காம போயிருச்சி” என்று ருத்ரா சோகமாக கூறினாள்.

அதைக்கேட்டதும் தென்றலின் முகம் சட்டென்று வாடியது.

“சாரி ருத்ரா.”என்று தென்றல் மன்னிப்பு கேட்டாள்.

ருத்ராவிற்கும் நன்கு தெரியும். தென்றலைப் பொறுத்தவரை அவள் பயப்படமால் இருக்க வேண்டும் என்றால், அவள் ஒன்று கோவமாக இருக்க வேண்டும். இல்லை கவலையாக இருக்க வேண்டும். அவளை கோவப்படுத்துவது, அதிலும் ருத்ராவின் மீது அவளுக்கு கோவம் வர வைப்பது எல்லாம் நடக்காத காரியம். அதனால் தான், தென்றலிடம் அவள் மீது தப்பு என்பது போல் ருத்ரா கோவமாக பேசினாள். அது நன்றாகவும் வேலை செய்தது.

“சாரி-லாம்  வேணாம். அதுக்கு பதிலா, எனக்கு போட்டோஸ் எடுக்க ஹெல்ப் பண்ணு. அது போதும்” என்று ருத்ரா கூறினாள். அவளும் சரியென்று தலையாட்டினாள்.

“இப்பதாண்டி நீ என் பிரண்ட் மாதிரி பேசியிருக்க” என்று ருத்ரா அவள் தோளில் கைபோட்டு அங்கிருந்து அழைத்து சென்றாள்.

அதன் பின் மற்ற மாணவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுப்பது, கலாய்ப்பது, என்று சாதாரணமாக சென்றது. ஆனால் தென்றலுக்கு மட்டும் அங்கிருந்து எப்போது கிளம்புவது என்றிருந்தது.

“இப்போ எடுத்த போட்டோஸ் வச்சி, ஒரு ஆர்டிகிள் என்ன?ஒன்பது ஆர்டிகிள் ரெடி பண்ணலாம்” என்று ருத்ரா தன் கேமராவை தூக்கி சந்தோசமாக கூறினாள்.

அதைக் கவனித்த விக்ரம், “உனக்கு தென்றல், அப்புறம் இந்த கேமரா, இது ரெண்டும் தான உயிரு. நில்லு. அந்த ரெண்டுக்கும் ஆப்பு வைக்கிறேன்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

இதையறியாத ருத்ராவோ, அங்கிருந்து கிளம்ப மனமே இல்லாமல் அந்த அரண்மனையை மீண்டும் ஒரு முறை சுற்றி பார்த்தாள்.

(இதன் பின் என்ன நடக்கும் என்பதை வரும் அத்தியாயங்களில் காண்போம். உங்களுடைய கருத்துகள் எதுவாயினும் மறைக்காமல் கூறவும்...)

சாபம் தீருமா?

Author:    1 Sarmi SS
Comments   4

*** தாபம் – 4 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com