“டேய் வேணாம் டா. ருத்ராவைப் பத்தி உனக்கு நல்லா தெரியும். நீதான் இதை பண்ணேன்னு அவளுக்கு மட்டும் தெரிஞ்சிச்சி. உன்னை கொலை பண்ண கூட தயங்கமாட்டா” என்று ஒருவன் விக்ரமிற்கு அறிவுரை கூறினான்
அதை சற்றும் கண்டுக்கொள்ளாமல் இன்னொருவனிடம் “என்னடா நான் சொன்னதை பண்ணிட்டியா?” என்று விக்ரம் கேட்டான்.
அதை பார்த்து கடுப்பான, அவனின் நண்பன் “நான் சொல்றது உனக்கு கேட்குதா இல்லையா?” என்று சற்று கடுமையாக கேட்டான்.
“இப்ப என்னடா உன் பிரச்சனை. நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளை தான? சும்மா ஒரு பொண்ணுக்கு போயி இப்படி பயப்புடுற. என்ன பெரிய ருத்ரா? அவ அப்படியே பத்து பேரை பத்து செகன்ட் ல அடிச்சு தும்சம் பண்ணிடுவாளா? பெரிய இவ மாதிரி என்னையவே அடிக்கிறா. அதுவும் எவனோ ஒரு ராஜா-வ சொன்னதுக்கு” என்று விக்ரம் கோவமாக கூறினான்.
“என்னமோ பண்ணுங்க. என்னை ஆளை விடுங்க” என்று அவன் அங்கிருந்து சென்றான்.
அதே நேரம் ருத்ரா-வும், தென்றலும் எடுத்த புகைப்படத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ருத்ரா “ஆமா தென்றல். எல்லாரையும் எடுத்தேன். ஆனா உன்னை எடுக்கவே இல்ல பாரு. போ அந்த பெயிண்டிங் பக்கத்துல போயி நில்லு” என்று கூறினாள்.
“இல்ல இல்ல, அதெல்லாம் ஒன்னும் வேணாம். சீக்கிரம் இங்க இருந்து கிளம்புனா போதும்” என்று கடைசி வார்த்தையை தனக்குள் தென்றல் முனுமுனுத்தாள்.
“என்ன? மயின்ட்வாய்ஸா? அதெல்லாம் போட்டோ எடுத்திட்டு பேசிக்கலாம்”என்று ருத்ரா தன் கேமராவை எடுத்தாள்.
தென்றலும் வேறு வழியின்றி அவள் கூறிய இடத்திற்கு சென்று நின்றாள்.
ருத்ரா கேமராவை எடுக்கும் போது, அவள் வகுப்பு தோழி தெரியாமல், அதை தட்டி விட்டாள். அதில், அந்த கேமராவின் முகப்பு பகுதி கீழே விழுந்தது.
அதை எடுத்து தன் கேமராவில் மாட்டிவிட்டு, லென்சை ஒரு முறை சரிசெய்துவிட்டு ருத்ரா திரும்பி பார்க்க, தென்றல் அங்கு இல்லை.
“அதுக்குள்ள இவ எங்க போனா?” என்று ருத்ரா யோசித்துக் கொண்டிருந்த நேரம், அங்கு வந்த விக்ரமின் நண்பன் “ருத்ரா, தென்றலை இங்க இருக்கிற ரூமுக்குள்ள, பூட்டி வைக்கணும்-னு விக்ரம் பிளான் போட்டுருக்கான்.” என்று அவன் கூறினான்.
“வாட்? அவனுக்கென்ன பையத்தியமா?” என்று ருத்ரா பொறுமையை இழுத்து பிடித்துக் கேட்டாள்.
“இல்ல ருத்ரா, நான் எவ்வளவோ சொன்னேன். ஆனா அவன் தான், உன்னை பழிவாங்குறேன்னு இப்படி பன்றான்” என்று உண்மையை கூறினான்.
அதைக்கேட்டு வேகமாக தென்றலை தேடி ருத்ரா சென்றாள். செல்லும் அவசரத்தில் கையில் வைத்திருந்த கேமராவை தன் கைப்பையில் வைத்துவிட்டு அதை எடுக்க மறந்தவளாக அங்கிருந்து சென்றாள்.
“தென்றல் எங்க இருக்க?” என்று ருத்ரா ஒவ்வொரு அறையாக தேடினாள்.
ஆனால் தென்றல் எங்கும் இல்லை. ஒரு நொடி அவளுக்குள் சற்று பயம் தோன்றியது.
“பரவாயில்லை இளவரசி. உமக்கு, உம் மேல் பாசம் வைப்பவர்கள் மீது அக்கறை எல்லாம் இருக்கிறதா? சற்று ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. மேலும், உம் கலங்கிய முகத்தை காணும் போதும், என்னுள் சொல்லமுடியா ஒரு ஆனந்த பரவசம் உருவாகிறது.” என்று சிவந்த விழியோன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அதற்குள் அங்கு வந்த அவளின் சக வகுப்பு மாணவி “என்ன ருத்ரா? இங்க என்ன பண்ற? வா. மேம் எல்லாத்தையும் கிளம்ப சொன்னாங்க” என்று கூறினாள்.
“இல்ல தென்றல்” என்று ருத்ரா சொல்ல வரும் முன், “என்னாச்சு ருத்ரா?” என்று கேட்டுக்கொண்டே அங்கு தென்றல் வந்து நின்றாள்.
தென்றலைப் பார்த்த ருத்ரா அவளை வேகமாக கட்டிக் கொண்டாள்.
“ஏய் உனக்கு எதுவும் ஆகல தான?” என்று ருத்ரா சற்று பதட்டமாகவே கேட்டாள்.
“எனக்கு எதுவும் ஆகல. உனக்கு என்னாச்சி. என்னை மாதிரி உனக்கும் ஏதாச்சும் வித்தியாசமா கேட்டுச்சா? அதுக்குத்தான் அப்பவே சொன்னேன், இங்க இருந்து போகலாம்னு” என்று தென்றல் வேகமாக கூறினாள்.
“ஐயோ மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா?” என்று ருத்ரா சலிப்பாக கேட்டாள்.
அதற்குள், அவர்களின் ஆசிரியர் அவர்கள் அனைவரையும் அழைக்க, ருத்ரா விக்ரமை தேடி கோவமாக அங்கிருந்து வெளியில் சென்றாள்.
தென்றலுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும், அவளும் அவள் பின்னே சென்றாள்.
மாணவர்கள் அனைவரும் பஸ்ஸில் ஏறிக் கொண்டிருந்தினர். ஆனால் அங்கு எங்குமே விக்ரம் இல்லை. அவன் நண்பர்களிடம் சென்ற ருத்ரா “எங்கடா உங்க பிரண்ட்?” என்று கோவமாக கேட்டாள்.
“இல்ல அவன் இன்னும் வரல” என்று ஒருவன் வேகமாக கூறினான்.
“வரட்டும் இன்னிக்கு. அவனுக்கு நான் கொடுக்கிறதுல, இன்னிக்கு இந்த கோட்டைய விட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. அவனுக்கு இன்னிக்கு இருக்கு” என்று ருத்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விக்ரம் காலில் அடியுடன், உள்ளே இருந்து நொண்டி அடித்து வந்துக் கொண்டிருந்தான்.
அதைப்பார்த்ததும் ருத்ரா மட்டுமில்லாமல், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியாகி பார்த்தனர்.
வேகமாக அவனின் நண்பர்கள் அவனிடம் ஓடிச்சென்று “என்னாச்சு மாப்பிள்ள?” என்று கேட்டனர்.
“அ..து.. உ....ள்.... உள்..ள. ரூ..ம்.. பெயி..ன்.. அங்க..” என்று எதையோ பார்த்து மிரண்டு விக்ரம் உளறினான்.
“என்னடா? கால்-ல தான அடிப்பட்டு இருக்கு. வாய்-ல என்ன கொளுக்கட்டையா வச்சிருக்க” என்று ருத்ரா சலிப்பாக கேட்டாள்.
ருத்ரா-வை பார்த்ததும், விக்ரம் இன்னும் அதிகமாக பயந்து அவள் கேமராவை, அவள் கையில் கொடுத்து “என்னை மன்னிச்சிடு ருத்ரா. இனிமேல் நான் அப்படி பண்ண மாட்டேன். என்னை மன்னிச்சிடு” என்று பதட்டமாக மன்னிப்பு கேட்டான்.
அதைப்பார்த்த ருத்ரா-விற்கு எதுவுமே புரியவில்லை. ஆனால் தென்றலுக்கோ, சட்டென்று உடலெல்லாம் குளிர் பரவ ஆரம்பித்தது. உள்ளங்கையில் விருட்டென்று ஒரு உணர்வு. யாரோ அவள் கரத்தை இறுக்க பிடிப்பது போல் பிரம்மை தோன்றியது. சட்டென்று அவள் திரும்பி பார்க்க, அங்கே புகை போல் ஒரு உருவம் தோன்றி மறைந்தது.
காதருகில், “அவன் வருகிறான். இளவரசியாரை அழைத்து செல்” என்று உரக்க ஒரு குரல் கேட்டது.
தென்றல் அசையாமல் அப்படியே நிற்க, அந்த புகை உருவம் மீண்டும் ஒரு முறை தோன்றி “செல். என் இளவரசியை அழைத்து செல்” என்று கட்டளையாக கூறியது.
அதில் ஏதோ ஒரு வித அச்சம் தோன்ற “ருத்ரா வா” என்று தென்றல் ருத்ராவின் கையைப் பிடித்து அங்கிருந்து இழுத்தாள்.
அந்நேரம் சரியாக புழுதியுடன் கூடிய காற்று பலமாக அடிக்க ஆரம்பித்தது. அதில் ருத்ரா-வின் கையில் இருந்த கேமரா அவள் கையை விட்டு நழுவி சென்றது.
சட்டென்று அந்த இடம் முழுவதும் இருட்டாக ஆரம்பித்தது. அதைப்பார்த்த மற்ற மாணவர்கள் எல்லாரும் பயந்து வேகமாக, பஸ்ஸில் ஏறினர்.
“ஸ்டூடன்ட்ஸ் கம் குயிக்” என்று அவர்களின் ஆசிரியர் அழைத்தனர்.
ஏதோ ஒரு ஈர்ப்பு விசை, அவளை கோட்டை-யை நோக்கி இழுத்தது. ருத்ரா அவளையும் மீறி அந்த கோட்டைக்குள் செல்ல ஆரம்பித்தாள். அவளை கட்டாயப்படுத்தி தென்றல் அங்கிருந்து பஸ் இருக்கும் பக்கம் இழுக்க ஆரம்பித்தாள்.
“மீண்டும் என்னை விட்டு செல்கிறாயா?” என்று ஒரு வலி மிகுந்த குரல் மட்டுமே ருத்ரா-வின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த குரலில் கசிந்த காதலும், அந்த வார்த்தையில் இருந்த வலியும், அவள் இதயத்தை பலமாக தாக்கியது. அவள் கண்களில் இருந்து அவளையும் மீறி கண்ணீர் சுரந்தது.
“நான் செல்லேன்” என்று ருத்ராவின் உதடுகள் துடிக்க முயற்சித்தது.
ஆனால் அதற்குள் தென்றல் “ருத்ரா” என்று உழுக்க ஆரம்பித்தாள்.
தென்றலின் குரலில் தன்னிலை பெற்று ருத்ரா நிமிர்ந்துப் பார்க்க, அவள் அந்த பஸ் படிக்கட்டு அருகில் நின்றிருந்தாள்.
ஏதோ ஒரு உள்ளுணர்வு, அவளை அக்கோட்டையை விட்டு போகாதே என்று சொல்லியது. அதற்கு மேலும், அவளுக்காய் ஏங்கும் ஒரு உயிர் ஒன்று உள்ளே துடித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது.
“என் உயிர் கொண்டு, இம்மண்ணை தாண்டி செல்” என்று வேறு ஒரு குரல் அவள் காதில் கேட்டது.
அவள் கோட்டையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நொடி,தென்றல் தன் முழு பலத்தையும் திரட்டி, அவளை பேருந்தின் உள்ளே இழுத்தாள்.
ருத்ராவின் பாதம் அம்மண்ணை விட்டு நகர்ந்ததும், பலமாக அடித்துக் கொண்டிருந்த காற்றும், இருள் பூசியிருந்த வானமும், சட்டென்று சகஜ நிலைக்கு திரும்பியது.
அதைப் பார்த்த யாருக்குமே எதுவும் புரியவில்லை. ஆனால் இங்கு இதற்கு மேல் இருப்பது மட்டும் நல்லது இல்லை என்று அனைவருக்கும் புரிந்தது. அதனால், பேருந்து ஓட்டுனர், வேகமாக அங்கிருந்து பஸ்ஸை திருப்பினார்.
அங்கிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் சென்ற பின்னே, ருத்ரா தன்னிலை பெற்றாள். அப்போதே தன் கையில் இருந்த கேமராவை அங்கேயே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது.
கோட்டை கண் விட்டு மறைந்த பின்னே தென்றலுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
ஆனால் அதற்குள் இவர்கள் வந்த பேருந்து திடீரென்று பழுதாகி நின்றது,
அதில் நின்றுக் கொண்டிருந்த மாணவர்கள் எல்லாரும் ஒரு அடி முன் சென்று குலுங்கி நின்றனர்.
“என்னாச்சு ட்ரைவர்?” என்று ஆசிரியர் கேட்டார்.
“நில்லுங்க மேடம் என்னன்னு பார்க்கிறேன்” என்று ட்ரைவர் இறங்கி செல்ல, உடனே மாணவர்களும் இறங்க ஆரம்பித்தனர்.
ஆனால் விக்ரம் மட்டும் ஏதோ ஒரு பேயை பார்த்து பயந்தது போல், பஸ்ஸை விட்டு இறங்காமல் அவன் சீட்டிலேயே அரண்டு அமர்ந்திருந்தான்.
“வண்டியில என்ன பிரச்சனையின்னே தெரியல- மேடம். எப்படியும் ஆள் வர வைச்சு தான் பார்க்கனும்” என்று ட்ரைவர் கை விரித்தார்.
“அச்சச்சோ இப்ப என்ன பண்றது?” என்று ஆசிரியர்கள் யோசிக்க,
“வேணும்னா மேனேஜ்மென்ட் கிட்ட பேசி பார்க்கலாம்” என்று பேராசிரியர் ஒருவர் கூறினார்.
இந்த கலவரங்களுக்கு நடுவே ருத்ரா தென்றலிடம் “தென்றல் என் கூட வா” என்று கூப்பிட்டாள்.
“எங்கடி?” என்று தென்றல் குழப்பமாக கேட்டாள்.
“சொன்னா நீ வர மாட்ட. அதான் கூப்பிடுறேன். போறப்ப உனக்கே தெரியும்” என்று ருத்ரா கூறினாள்.
“அதான் வரமாட்டேன்-னு உனக்கே தெரிஞ்சிருக்கே. அப்புறம் எதுக்கு கூப்பிடுற” என்று தென்றல் கடுப்பாக கூறினாள்.
“ம், நீ தெரியாம கூட என் பின்னாடி வராத. நீ இங்கேயே இரு. நான் மட்டும் போயிட்டு வரேன். நான் வர்ற வரைக்கும் இவங்களை மட்டும் சமாளிச்சிக்கோ” என்று ருத்ரா சாதாரணமாக கூறினாள்.
அதைக்கேட்ட தென்றலுக்கு, ருத்ரா-வின் மீது கோவம் தான் வந்தது.
“நீயும் எங்கேயும் போகக்கூடாது. இப்ப எதுக்கு திரும்பவும் அங்க போகனும்” என்று தென்றல் வேகமாக கேட்டாள்.
“ம். அங்க போனாத்தான, என் பிரண்ட் தென்றலுக்கு கோவம் வருது. அதான்” என்று ருத்ரா கிண்டலாக பதிலளித்தாள்.
அதைக்கேட்டதும் தான், தென்றலுக்கு இவ்வளவு நேரம் கோவமாக பேசியதே புரிந்தது.
“ஐயோ .. இல்ல .. அது” என்று தென்றல் தயங்கினாள்.
“சரி சரி. நீ இங்க நின்னு, இப்படி அ... ஆ... இ.. ஈ கத்துக்கோ. நான் அதுக்குள்ள போயிட்டு வந்துடுறேன்” என்று ருத்ரா அங்கிருந்து செல்ல முயன்றாள்.
அதற்குள் அவள் கையைப் பிடித்து தடுத்த தென்றல் “பிளீஸ் ருத்ரா. இந்த ஒரே ஒரு தடவை மட்டும் என் பேச்சை கேளு. எங்கேயும் போகாத. எனக்கென்னமோ, இந்த ஊர்-ல ஏதோ மர்மம் இருக்கிற மாதிரியே இருக்கு” என்று கூறினாள்.
“ஆமா தென்றல் நீ சொல்றது உண்மை தான். எனக்கும் அப்படித்தான் தோணுது” என்று ருத்ரா-வும் சற்று பயத்தோடு கூறினாள்.
“பார்த்தியா. இதுக்குத்தான், நான் அப்பவே சொன்னேன். நீதான் கேட்கல. சரி இனிமேல் அந்தப் பக்கமே நம்ம போக கூடாது” என்று தென்றல் சொல்லிவிட்டு நிமிர்ந்துப் பார்க்க, ருத்ரா அங்கே இல்லை.
“ருத்ரா” என்று தென்றல் சுற்றிப் பார்க்க, அவளோ அங்கிருந்து பத்தடி தூரம் சென்றிருந்தாள்.
“ஆமா டி நீயும் வந்ததுல இருந்து மர்மம் இருக்கு இருக்குன்னு சொல்லிட்டு இருக்க. அதை கண்டு பிடிச்சாதான் எனக்கு தூக்கம் வரும். அதனால, நான் போயி அது என்னன்னு பார்த்துட்டு வரேன். நீ பத்திரமா இங்கேயே இரு” என்று ருத்ரா சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடினாள்.
“ஏய் ருத்ரா சொன்னா கேளுடி. நில்லு. அங்க போகாத” என்று தென்றல் ஏறக்குறைய கெஞ்சினாள்.
ஆனால் அவள் பேச்சை சற்றும் காதில் வாங்காமல், முன்னால் சென்ற ஆட்டோ-வில் ஏறி சென்றாள்.
தென்றலும் வேறு வழியின்றி அந்த ஆட்டோ-வின் பின்னால் ஓடினாள். ஆனால் அவள் நெருங்கும் முன்னே, அது அங்கிருந்து சென்றிருந்தது.
அந்நேரம் “ஹா.. ஹா..” என்ற பலத்த சத்தம் தென்றலின் காதில் ரீங்காரமிட்டது. அதைக்கேட்டு தன் இரு காதுகளையும் இறுக மூடினாள்.
“இனி உன் இளவரசியை நீ மறந்து விடு தேவி” என்று அவள் காதில் அசரீதி ஒலித்தது.
அதே நேரம், அங்கே ருத்ரா, ஆட்டோவில் அந்த கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.
“ஏன்மா. பார்கிறதுக்கு ஏதோ காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரி இருக்க. இந்த நேரத்துல எதுக்கு மா, கோட்டைக்கு போகனும்-னு சொல்ற” என்று அந்த ஆட்டோ ட்ரைவர் அக்கறையாக கேட்டார்.
“இல்ல அந்த கோட்டைய விக்கிறதா சொல்லிருந்தாங்க, அதான் வாங்குறதுக்காக போறேன்” என்று கிண்டலாக பதிலளித்தாள் ருத்ரா.
“என்னமா விளையாடுறீங்களா? அந்த கோட்டையைப் பத்தி தெரிஞ்சவுங்க யாரும் அந்தப் பக்கம் கூட போக மாட்டாங்க. ஆனா நீங்க என்னன்னா, விளையாண்டுட்டு இருக்கீங்க.” என்று ஆட்டோகாரர் கூறினார்.
“ஓ. பாருடா. பெரிய சந்திரமுகி அரண்மனை மாதிரி பில்டப் கொடுக்கிறீங்க” என்று கிண்டலடித்தாள் ருத்ரா.
“என்னமா வெளியூரா? அதான் இப்படில்லாம் பேசுறீங்க” என்று ஆட்டோ காரர் கூறினார்.
“ஆமா வெளியூர் காரங்கன்னா இப்படி, அப்படி சொல்லி, ஆட்டோ-க்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் வாங்க போறீங்க அப்படித்தான். கவலைப்படாதீங்க அண்ணா, மீட்டருக்கு மேல போட்டுக் கொடுக்கிறேன்” என்று அவரையும் சேர்த்து வாரினாள்.
அதற்கு மேல், அந்த ஆட்டோகாரர், எதுவுமே பேசவில்லை. இந்தப் பெண்ணிடம் பேசுவது வீண் என்று நினைத்துக் கொண்டு, கோட்டையின் வெளியிலேயே, இறக்கிவிட்டார்.
“தாங்க்ஸ் அண்ணா. இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் நில்லுங்க. நான் வந்துடுறேன்” என்று ருத்ரா சொல்லிவிட்டு அந்த கோட்டைக்குள் சென்றாள்.
அவள் உள்ளே நுழைந்ததும். அந்த வெளிக் கதவு தானாக மூடியது.
அதைப்பார்த்து மிரண்டு நின்ற ஆட்டோகாரரின் முன்னால், புகை வடிவிலான, ஒரு உருவம் தோன்றி “உன் உயிர் மேல் உனக்கு ஆசை இருக்கிறதா? இல்லையா?” என்று கம்பீரமான ஒரு குரல் கேட்டது.
அவ்வளவுத்தான், அரக்க பறக்க மிரண்டு தப்பித்தோம், பிளைத்தோம் என்று அவர் அங்கிருந்து சென்றார்.
ஆனால் இதைப்பற்றி எதுவுமே தெரியாமல், ருத்ரா தன் கேமராவை ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டிருந்தாள்.
மணி ஏற்கனவே ஏழை கடந்திருக்க, அவ்விடம் முழு இருட்டின் முற்பகுதியில் இருந்தது. சிறிது நேரத்திலேயே இருட்ட ஆரம்பித்தது. மொபைல் லைட்டின் உதவியுடன், தேடினாள். ஆனால், அது எங்கு விழுந்தது என்றே தெரியவில்லை.
அவள் கொஞ்சம் கொஞ்சமாக தேடிக்கொண்டே, கோட்டையின் பின்புறம் சென்றிருந்தாள்.
அவளின் பின்னாலே, அந்த புகை உருவம் அவளுக்கு தெரியாமல் சென்றுக் கொண்டிருந்தது. அதை அவள் சற்றும் உணரவில்லை.
“இளவரசி. கடைசியில் உமக்கு தண்டனை கொடுக்கும் நேரம் நெருங்கிவிட்டது. இன்று உம்மை என்னிடம் இருந்து காப்பாற்ற யாராலும் முடியாது” என்று சத்தமாக சொல்லியது.
அதே நேரம் தென்றல், அந்த ரோட்டில் வரும் காரில் லிப்ட் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் எந்த காரும் நிற்கவில்லை. தென்றலும் நடந்துக்கொண்டே இருந்தாள்.
“கடவுளே, நீதான் ருத்ரா-வுக்கு எந்த ஆபத்தும் வராம பார்த்துக்கனும்” என்று மனமார கடவுளை வேண்டினாள் தென்றல்.
அப்போது தூரத்தில், ஒரு கார் சத்தம் கேட்டு அவள் திரும்பினாள்.
தென்றலும் கையை நீட்டி அந்த காரில் லிப்ட் கேட்டாள். நிற்காமல் சென்றது. அவளை விட்டு பத்து அடி கடந்து சென்று மீண்டும், ரிவர்ஸ் எடுத்து அந்த கார் அவள் முன்னால் வந்து நின்றது.
கார் ஜன்னலை கீழே இறக்க, உள்ளே இருந்தவரை பார்த்த தென்றல் அதிர்ச்சியாகி அப்படியே நின்றாள்.
(ருத்ரா-வை காக்க போவது யார்? தென்றல் சந்தித்த நபர் யார்? போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு அடுத்தடுத்த அத்தியாயத்தில் பதிலை காணலாம். கதையைப் பற்றிய உங்களுடைய கருத்துகள் வரவேற்கப்படுகின்றன)
சாபம் தீருமா?..
Keerthi S
semma ❤️❤️❤️
Ramya Iyer
ore suspense pa
Deepa K
super
Sam Novel reader
darlz eppo thaan hero intro kudukka poringha😑😑