காதல் – 5

செந்நிற வானம் காரிருள் சூழும் வேளையில், தன் வேலைகளை முடித்துக் கொண்டு, தன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள், மித்ரா.

காரணமேயின்றி மனம் பாரமாய் இருப்பதைப் போல் தோன்ற, வண்டியை பீச்சின் அருகில் நிறுத்தினாள். 

சில நிமிடம் கண் மூடி எதையோ யோசிக்க, மனம் மீண்டும் மீண்டும் எதையோ தேடி சோர்ந்துப் போனது.

அதில் மறு நொடி, காரிலிருந்து இறங்கி, அந்த கடற்கரை மணலில், கால் பதித்தாள்.

அங்கே ஓங்கியடித்து ஓய்ந்து போன அலைகளையும், தோல்வியடைந்தும் மீண்டு எழும் அதன் விடாமுயற்சியையும், அமைதியாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் என்ன நினைக்கிறாள்? எதை நினைக்கிறாள்? இப்படி அத்தனை கேள்விக்குமான பதில் அவளிடம் மட்டுமே இருந்தது.

அப்படியே அங்கிருந்த கடலைப் பார்த்தாள். ஆனால் அவளின் எண்ணம் சுத்தமாய் அங்கு இல்லை. எதையோ வெறித்தப்படி நின்றிருந்தாள்.

சில மணி நேர அமைதிக்கு பின் அவள் சுற்றிப்பார்க்க. காரிருள் முழுவதுமாய் அவளை சூழ்ந்திருந்தது. 

வேகமாய் மொபைலை எடுத்து மணியை பார்க்க, மணி ஒன்பதாகியிருந்தது. அதனோடு அவர்கள் வீட்டில் இருந்து பல முறை தவறவிட்ட அழைப்புகளும் இருந்தது. 

உடனே வீட்டிற்கு கால் செய்து, ‘இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவேன்’ என்று சொல்லிவிட்டு காரினை நோக்கி நடந்தாள். 

ஆனால் மனம் ஏனோ, அவளை அங்கேயே நிற்க சொல்ல, மனமேயில்லாமல் அங்கிருந்து கிளம்பி வீட்டை நோக்கி தன் காரை செலுத்தினாள். 

கடலலைகளைப்போல் அவள் மனமும், ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தது. 

வீட்டிற்கு வந்த பின்னும் அவள் மனம் ஓரிடத்தில் இல்லை. தடக் தடக் என்ற ரயிலின் ஓசை அவள் காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. 

அறையினுள் நுழைந்து தன் இரு காதுகளையும், இறுக்க மூடினாள். அப்போதும் இதயம் தாடுமாறாய், தடம்கெட்டு போய் துடித்தது.

“எனக்கு இன்னிக்கு என்னதான் ஆச்சு” என்று அவளே தனக்குள் பல முறை கேட்டுவிட்டாள்.

அவளுக்குமே காரணம் கிடைக்கவில்லை. அதற்கு மேல் முடியவே முடியாது என்று மனம் அவளிடம் போராடியது. 

உடனே கபோர்டினை திறந்து, அதிலிருந்து சில பொருட்களை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து, தன் வேதனையை போக்க முயற்சி செய்தாள் மித்ரா.

அதே நேரம் “முகில்” என்று வந்தனா அழைக்க அழைக்க, அதை காதில் வாங்காதது போல் படியேறிக் கொண்டிருந்தான், முகிலன்.

அதற்குள் “வந்தனா” என்ற நந்தனின் அதட்டலில், ஒரு நொடி அப்படியே நின்றான். அப்போதும் திரும்பி பார்க்கவில்லை. 

சற்று பக்கவாட்டாய் தலையை திருப்பி, ஓரப்பார்வையால் மேலே இருந்து டைனிங் டேபிள் அருகில் அமர்ந்திருக்கும் தன் அப்பாவையும், கண்ணில் வலியோடு நின்றுக்கொண்டிருந்த தன் அம்மாவையும் பார்த்தான்.

மனம் ஒரு நொடி, அன்னையை நினைத்து கலங்கியது. ஆனாலும் மின்னலென சில நினைவுகள் எல்லாம் கண் முன்னே வரிசையாய் வந்து நின்றது. 

அதில் கண்ணில் தோன்றிய ஒரு நொடி பாசத்தை, அப்படியே தனக்குள் புதைத்துவிட்டு, எதுவும் பேசாமல் அங்கிருந்து வேகமாக அவனறைக்குள் புகுந்தான். 

அவன் கதவை அடித்து சாத்தும் சத்தம், கீழே ஹாலில் இருந்த இருவருக்கும் கேட்டது. 

அதில் இருவரின் மனமும் சில நொடிகள் ஒரு வித அமைதியை உணர்ந்தது.

அதற்குள் நந்தன் தான், “என்ன வந்தனா, இன்னிக்கு உன்னோட சாம்பார் சூப்பரா இருக்கு. என்ன விசேசம்” என்று பேச்சை மாற்றினார். 

அதில் அவரும், தன் கணவருக்காக தன் மன சுமையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு சிறு புன்னகையுடன் அவருக்கு பரிமாறினார்.

ஆனாலும் மனதினுள், மகனின் பாராமுகம் தான் ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்து இதை எல்லாம் சரிசெய்ய என்று அவருக்கும் தெரியவில்லை.

அதே நேரம் அங்கே அறையினுள் நுழைந்த முகிலனுக்கோ, அப்படி ஒரு கோவம், ஆத்திரம்.

அந்த கடுப்பில் வேகமாக உடற்பயிற்சி அறைக்குள் சென்றவன், அங்கிருக்கும் பஞ்சிங் பேக்கில் ஓங்கி குத்தினான். 

ஏனோ அப்போதும் அவனுடைய கோவம் தணிய வில்லை. அதில் அதை விடாமல் குத்திக்கொண்டே இருந்தான். 

எத்தனை நேரம் அதையே செய்தானோ? ஒரு கட்டத்தில் அவன் கையில் ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. அதில் இன்னும் இன்னும் அதை ஓங்கி அடிக்க, அப்படியே அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்கினான். 

“காரணம் அறியேன், காயமும் அறியேன், வலியை மட்டும் உணர்கிறேன்”

அடுத்த நாள், “மே ஐ கமின்” என்று கேபினின் வெளியிலிருந்து, சத்தம் கேட்க. “எஸ் கமின்” என்றாள் மித்ரா. 

உள்ளே ஒரு ஐம்பது வயது மதிப்புமிக்க ஒரு பெண் உள்ளே வந்தார். அவரைப் பார்த்தவள் வேகமாக எழுந்து, “வாங்க மேடம்” என்று சிறு பணிவுடன் உள்ளே அழைத்தாள்.

“எப்படி இருக்க மித்ரா?” என்று அவர் கேட்க, “எனக்கென்ன மேடம், நீங்க எனக்கு வகுப்புல பாடம் மட்டுமில்ல, வாழ்க்கையில எப்படி வாழனும்னு கூட கத்துக் கொடுத்திருக்கீங்க. அப்படி இருக்கிறப்ப உங்களோட ஸ்டூடன்ட் எப்படி இருப்பேன்” என்று சிறு புன்னகையுடன் கேட்டாள்.

“சந்தோசம்மா. உன்ன பத்தி எல்லாரும் பெருமையா பேசுறத கேட்கிறப்ப மனசுக்கு ரொம்ப நிம்மதியாவும், கர்வமாவும் இருக்கு. குருவ மிஞ்சுன சிஷ்யைனு நான் பெருமையா சொல்லிப்பேன்” என்று அந்த மூத்த வழக்கரிஞரும் புன்னகை முகமாகவே கூறினார்.

“இல்ல மேடம். எப்பவுமே நான் உங்க சிஷ்யை மட்டும்தான். உங்கள எல்லாம் யாரும் மிஞ்ச முடியாது மேடம்” என்று பெருந்தன்மையாய் கூறினாள் மித்ரா.

அதில், அவள் தோளில் தட்டிக் கொடுத்தவரோ, “இந்த தன்னடக்கம் தான் மித்ரா. உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது. ஆனா இப்ப எனக்கு ஒரு ஹெல்ப் கேக்கிறதுக்கு தான் உன்கிட்ட வந்தேன்” என்றார்.

அதில் நெற்றியை சுருக்கிய மித்ராவோ, நொடியும் தாமதிக்காமல், “என்ன மேடம், ஹெல்ப் அது இதுன்னு சொல்லிட்டு இருக்கீங்க. நீங்க எனக்கு ஆர்டரே போடலாம். நான் செய்வேன்” என்றாள் மித்ரா.

அவளை பார்த்து சிரித்தவர். “உன்னோட இந்த மனசுக்குத்தான், நீ இந்த சின்ன வயசுலையே இவ்வளவு உயரத்துல இருக்க” என்று பாராட்டினார்.

“மேடம் என்ன பண்ணனும்னு நீங்க சொல்லவே இல்லையே?” என்று மித்ரா நேரடியாய் விஷயத்துக்கு வந்தாள்.

“வக்கில் ஆச்சே. அதான் ஸ்ட்ரைட்டா பாயிண்டுக்கு வர சொல்ற. சரி நேரா விசயத்துக்கு வரேன். நீ அந்த பெரியவரோட கேசை எடுக்க கூடாது” என்றார்.

அதைக் கேட்டு வேகமாக தன்சீட்டில் இருந்து எழுந்தாள் மித்ரா. அவள் என்னவோ ஏதோ என்று எதிர்பார்த்திருக்க, அவரிடம் இருந்து இப்படி ஒன்றை அவள் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. 

அதிம் ஒரு நொடி அதிர்ச்சியாய் அவரைப் பார்த்தவள், மறு நொடி, “யாரும் உங்களை என்கிட்ட இப்படி சொல்ல சொல்லி போர்ஸ் பண்ணாங்களா?” என்று தன் சந்தேகத்தை கேட்டாள்.

“நான் யாருக்கும் பயந்து உன்கிட்ட வந்து பேசுவேன்னு நினைக்கிறீயா?” என்று திருப்பி கேட்டார் அவர்.

அதில் “இல்ல மேடம். ஆனா உங்களுக்கே தெரியுமே. இந்த கேஸ்ல அந்த பெரியவரோட பையன் மேல எந்த தப்பும் இல்ல. அந்த பையன் ஒயிப் பண்ண தப்புக்கு, அவர ஜெயிலுக்கு அனுப்புறது அநியாயம் மேடம்” என்றாள் மித்ரா.

இதையே வேறு யாரோ கேட்டிருந்தால் ஒரு வார்த்தையில் முடியாது என்று மறுத்திருப்பாள். ஆனால், அவளுக்கு தொழில் கற்றுக் கொடுத்த குருவே வந்து கேட்பதால் தான் அத்தனை தயங்கினாள்.

அதற்குள் அவரோ “மித்ரா. எப்பவுமே எல்லார் பக்கமும் ஒரு நியாயமான கருத்து இருக்கத்தான் செய்யும். நீ அந்த பக்கத்துல இருந்து பார்க்கிறப்ப, உனக்கு அது சரியாவும், இது தப்பாவும், தெரியுது. ஒரு வேளை நீ இந்தப்பக்கம் வந்து பார்த்தா, உனக்கு இந்தப்பக்கம் இருக்கிற நியாயமும் தெரியும்” என்றார்.

“மேடம். நீங்க அந்த கணவன் மனைவி அப்படின்ற ரெண்டு பேர பத்தி மட்டும் யோசிக்கிறீங்க ஆனா நான் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நிக்கிற அந்த குழந்தையையும், சேர்த்து யோசிக்கிறேன்” என்றாள் மித்ரா.

“நம்ம தொழில்ல, சென்டிமென்ட்ஸ் பார்க்க கூடாதுன்னு உனக்கே தெரியுமே?” என்று அவர் அவளை மடக்கினார்.

“சென்டிமென்ட்ஸ் பார்க்க கூடாது, அதே நேரத்துல தப்பு செய்யாத ஒருத்தருக்கு நம்ம தண்டனையும் வாங்கி கொடுக்க கூடாதே. அதையும் தாண்டி. நம்ம ஒரு விசயத்துல இறங்கிட்டா, அதுல இருந்து எப்பவும் பின் வாங்க கூடாது. அதை எனக்கு சொல்லிக் கொடுத்ததே நீங்கத்தான். அப்படி இருக்கிறப்ப, நான் எப்படி பின் வாங்க முடியும்?” என்று மித்ரா திருப்பிக் கேட்டாள்.

அவரும் கூட அவளிடம் இருந்த் இப்படி ஒரு பதிலைத்தான் எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ.

“நீ கொஞ்சம் கூட மாறவே யில்ல மித்ரா” என்று அவர் சிறு புன்னகையுடன் கூறினார்.

“நேரத்துக்கேற்ப மாறிகிட்டே இருந்தா அது மனுச குணம் இல்லயே. எனக்கு எப்பவுமே பஞ்சோந்தியா இருக்கிறது பிடிக்காது மேடம். நான் இப்படித்தான். சரியோ, தப்போ, கஷ்டமோ நஷ்டமோ, நான் இப்படியே இருந்திட்டு போறேன்” என்று மித்ரா அழுத்தமாக கூறினாள்.

“ம். குட். எனக்கு நீ இததான் சொல்லுவேன்னு நல்லாவே தெரியும், ஆனாலும் என் ஹஸ்பண்ட்காக தான், உன்கிட்ட கேட்க வந்தேன். அவர்தான் உனக்கு எதிரா வாதாட போறாரு” என்றார்.

அது மித்ராவுக்கு புது செய்தியே. ஆனாலும் இதற்காக எல்லாம் அவளால் மனதை மாற்றிக்கொள்ள முடியாதே. 

அதை உணர்ந்த அவரோ “ஒரு உண்மைய சொல்லவா மித்ரா. அவருக்கு உன்ன எதிர்த்து வாதாட பயம். அதான் என்ன பேச சொன்னாரு” என்றார்.

“சாரி மேடம். என்னால இதை கண்டிப்பா செய்ய முடியாது. நீங்க என்கிட்ட தனிப்பட்ட முறையில என்ன கேட்டாலும் நான் செய்யுறேன். ஆனா என் தொழில் விசயத்துல” என்று சொல்லி ஒரு நொடி நிறுத்தியவள், “சாரி மேடம்” என்று முடித்திருந்தாள்.

அதில் அவரோ இப்போது அவள் கையைப் பிடித்து “ஒரு வேள நான் கேட்டு நீ சம்மதிச்சிருந்தா, நான் சந்தோசம் மட்டும்தான் பட்டுருப்பேன். ஆனா இப்ப உன்ன நெனச்சு எனக்கு பெருமையா இருக்கு. ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தார்.

அதே நேரம் அங்கே முகிலனின் அலுவலகத்தில், “பாஸ்” என்று வேந்தன் ஏதோ சொல்ல வந்தான்.

ஆனால் அதற்குள் அவனை தடுத்து, “சரி. அந்த ஜெய் கேஸ் எந்த லெவல்ல இருக்கு?” என்று தன் கோட்டை சரி செய்துக்  கொண்டே கேட்டான்

“ஆல்மோஸ்ட் பினிஷ் பாஸ். எப்படியும் அவங்க மூனு பேரும் ஆறு வருஷத்துக்கு வெளியவே வர முடியாது” என்றான் வேந்தன்.

“தட்ஸ் குட். பை தி வே மீட்டிங்-கு எல்லாம் ரெடியா?” என்று முகிலன் அடுத்த கேள்வியை வேந்தனை பார்த்து கேட்க, “எஸ் சார். பட். சில லீகல் டாக்குமெண்ட்ஸ் மட்டும் இன்னும் முடியல. எப்படியும் மீட்டிங் ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடி ரெடியாகிடும்” என்றான் வேந்தன்.

“வாட்! இன்னும் ரெடியாகலையா? நான் நேத்தே எல்லாம் சரியா இருக்கனும்னு சொன்னேனே?” என்று முகிலன் திருப்பி கேட்டான்.

“இல்ல பாஸ். நம்ம சைட்ல இருந்து, பைல் மூனு நாள் முன்னாடியே ரெடி பண்ணிட்டோம் . பட், அந்த மூர்த்தி சார் தான் இன்னும் பினிஷ் பண்ணல“ என்று வேந்தன் விளக்கமளித்தான்.

அதில் கடுப்பானவனோ “வாட்! நேத்தே நான் என்ன சொன்னேன்? என்று முகிலன் கோவமாய் கேட்டான்.

“ஐயோ! பாஸ், மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாரே. இந்நேரம் மூர்த்தி சார் சொன்னத சொன்னா மனுசன் காண்டாகிடுவாறே. என்ன பண்றது?” என்று தனக்குள் புலம்பினான் வேந்தன்.

(அப்படி மூர்த்தி என்ன சொன்னான்? முகிலனின், மித்ராவின் சந்திப்பு நிகழுமா? இப்படி அத்தனைக்குமான கேள்விகளை அடுத்தடுத்த எபிசோடில் பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தொடரும்…

Author:    1 Sarmi SS
Comments   3

*** காதல் – 5 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com