அசுரன் – 1

⚠️ காப்புரிமை எச்சரிக்கை

என்னுடைய இந்தக் கதை மற்றும் இதில் இடம்பெறும் அனைத்து அத்தியாயங்கள், கதாபாத்திரங்கள், உரையாடல்கள், காட்சிகள் மற்றும் உள்ளடக்கங்கள் அனைத்தும் காப்புரிமை (Copyright) சட்டத்தின்படி முழுமையாக பாதுகாக்கப்பட்டவை.

இந்தக் கதையை முழுமையாகவோ, பகுதியாகவோ நகலெடுக்கவும், காப்பி செய்யவும், மறுபதிப்பு செய்யவும், மாற்றி வெளியிடவும் அல்லது எந்த வடிவிலும் அனுமதியின்றி பயன்படுத்தவும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இதை மீறுபவர்கள் மீது இந்திய காப்புரிமைச் சட்டத்தின்படி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

“Please… என்ன விட்ருங்க. நா, நீங்க நெனைக்கிற மாதிரியான பொண்ணு கிடையாது. இல்ல. என்ன தொடாதீங்க. ஐயோ! ம்மா ப்பா” என்ற ஒரு இளம் பெண்ணின் கூக்குரல், அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.

அன்னேரம், “அஞ்சலி. இங்கப்பாரு. அஞ்சலி” என்று அவளை யாரோ தொட்டு எழுப்ப, அவளோ பதறியடித்து படுக்கையில் இருந்து எழுந்தாள்.

முகம் எல்லாம் வியர்த்திருக்க, அவளுடைய சிவந்த முகம், பயத்தில் வெளிறிப் போயிருந்தது. 

இன்னும் சிறு பிள்ளை முகம் கூட மாறியிருக்கவில்லை.

ஒருவித நடுக்கம், மனதிற்குள் அத்தனை போராட்டம். எதிர்காலத்தைப் பற்றிய பயம். இப்படி அத்தனையும் அவள் முகத்தில் தெரிந்தது.

ஆனால் அதில் கூட, அவள் தேவதையாகதான் தெரிந்தாள். 

அழகை, கொட்டிக்கொடுத்த அந்த கடவுள், அவள் வாழ்க்கையில் சிறு சந்தோஷத்தை கூட அவளுக்காக விட்டு வைக்கவில்லை.

பதினெட்டு வயது தான் ஆகிறது. ஆனால் அந்த வயதுக்கான கஷ்டங்களை தாண்டி அனுபவித்துவிட்டாள். 

இன்னும் அவளால் அதில் இருந்து வெளியில் வர முடியவில்லை.

“அஞ்சலி” என்ற குரல் மீண்டும் அவள் செவியில் ஒலித்தது. அவளின் முன்னே, அந்த Hostel Warden நின்றிருந்தார். 

அவரைப் பார்த்ததும், சற்று நிம்மதியடைந்தவள், மூச்சை இழுத்து விட்டாள். 

அவள் இந்த ஹாஸ்டலுக்கு வந்து, இன்றோடு மூன்று மாதம் ஆகப் போகிறது.

முதல் நாளில், எப்படி பயந்து எழுந்தாளோ? இப்போதும் அப்படியேத்தான் இருக்கிறாள்.

அதில் அவருக்கோ எரிச்சல் தான் வந்தது.

“இன்னும் எத்தன நாளைக்கு, இப்படியே இருக்கப் போற. உன்கிட்ட நா ஏற்கனவே சொல்லிட்டேன். எப்போ நீ இங்க இருந்து கெளம்ப போற?” என்று சற்று கோவத்துடன் கேட்டார்.

“இல்ல இல்ல… நான் போ மாட்டேன்” என்று சொல்ல அவளுக்கும் ஆசை தான். ஆனால். அவளுக்கு அந்த ஹாஸ்டலில் தங்கும் அளவுக்கு கூட வசதி இல்லை. 

அவள் பார்த்துக் கொண்டிருந்த, part-time வேலையும் இப்போது அவளிடம் இல்லை. 

“எனக்கு இன்னும் ஒரு வாரம் மட்டும் டைம் கொடுங்க. எப்படியாச்சும், நான் வேற ஹாஸ்டல் பாத்து போயிடுறேன்.” என்று சிறு கெஞ்சலோடு கேட்டாள்.

“இத விட கம்மியா, உனக்கு வேற ஹாஸ்டல் கெடச்சிடும்னு நினைக்கிறீயா?” என்ற வார்டனின் பேச்சில், சற்று நக்கல் சேர்ந்திருந்தது. கூடவே ஏளனப் பார்வையும் தெரிந்தது. 

அதில் துக்கம் மீண்டும் தொண்டையை அடைத்துக் கொள்ள, அம்மா அப்பாவின் நினைவு தானாக வந்தது.

“என் அம்மா, அப்பா மட்டும் இருந்திருந்தா, எனக்கு இப்படி நெலம வந்திருக்குமா?” என்று யோசிக்காமல் அவளால், இருக்க முடியவில்லை.

இருந்தும் தன்னை மீட்டு, “ப்ளீஸ்க்கா. ஒரு வாரம் மட்டும்” என்று மீண்டும் கெஞ்ச தான் செய்தாள்.

“இதையேதான் நீ ஒரு மாசமா சொல்லிட்டு இருக்க. ஏற்கனவே ரெண்டு மூனு பேரு வந்து ரூம் கிடைக்குமான்னு கேட்டுட்டு இருக்காங்க. சீக்கிரம் நீ காலி பண்ணிட்டா நல்லது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவர் சென்றுவிட்டார்.

அவர் சென்றதும், தன்னுடைய பழைய பேக்கில் இருந்த, ஒரு சுடிதாரை எடுத்தாள். அது கூட அவளுடையது கிடையாது. யாரோ அவளைப் பார்த்து பரிதாபப்பட்டு கொடுத்தார்கள்.

அவளிடம் அவளுடையது என்று, எதுவுமே இல்லை. ஒரு காலத்தில் அத்தனையும் இருந்தது என்று சொல்லக் கூட, அவள் நினைவில் இப்போது எதுவும் இல்லை.

குளித்து முடித்து, உடை மாற்றியவள், தன்னை கண்ணாடியில் எல்லாம் பார்த்துக் கொள்ளவில்லை. ஏனோ அவள் முகம் எப்படி இருக்கும் என்பதை விட, அந்த கண்ணாடியை பார்த்தாலே அவளுக்கு பயம் தான்.

வழக்கம் போல், தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு, அந்த ஹாஸ்டல் விட்டு வெளியில் வந்தாள். 

ஆட்டோ பிடித்து செல்ல கூட அவளிடம் காசு இல்லை. அதனால் நடந்தே, ஏதாவது வேலை கிடைக்குமா? என்று பார்க்க கிளம்பினாள்.

அவள் தன் அழகை பார்த்துக் கொள்ளாவிட்டாலும், அவளுடைய அழகு முகத்தை பார்ப்பதற்காகவே, அந்த ஆதவன், உதயமாகியிருப்பான் போலும். அவள் முகத்தில் தன் கதிர்களை வீசினான்.

அதில் அவள் கண்கள் கூச தன் முகத்தை மறைக்க, சரியாக அவளைக் கடந்து மின்னல் வேகத்தில் ஒரு கார் சென்றது.

கொஞ்சம் விட்டிருந்தால், அவளையே அடித்து தூக்கிவிட்டு சென்றிருக்கும், அப்படி ஒரு வேகம். அதில், தன் கரத்தை விலக்கி அந்த காரைப் பார்த்தாள் அஞ்சலி.

அந்த காரை தொடர்ந்து அடுத்தடுத்து, சரசரவென கார்கள் சீறிப் பாய்ந்தது.

“என்னடி இது? இம்புட்டு காரு நம்ம தெருவுக்குள்ள போயிட்டு இருக்கு” என்று அஞ்சலியின் அருகில் இருந்தவர்கள் பேசும் சத்தம் கேட்டது.

அவளுக்கும அதே கேள்விதான். ஏனெனில், அது ஒன்றும் வசதியானவர்கள் வசிக்கும் பகுதி எல்லாம் கிடையாது. தேர்தல் நேரத்தை தவிர்த்து, மீதி நேரம் எல்லாம், தண்ணீர் வண்டி கூட சரியாக வராது. அடிப்படைக்கும் குறைவான வசதியுடைய பகுதிதான் அது.

“ஊரு கத உனக்கு எதுக்கு? போயி உன் பொழப்ப பாரு” என்று அங்கே நின்றிருந்த பாட்டி, யாரிடமோ சொல்ல, ஏனோ அது தனக்கே சொல்லியது போல் அவளுக்கு தோன்றியது.

அடுத்த நொடி வேலைத் தேடி, அங்கிருந்து நடக்க ஆரம்பித்திருந்தாள்.

அதே நேரம் அங்கே அடுத்தடுத்து சீறிப்பாய்ந்த கார்களில் இருந்து இறங்கிய அதிகாரிகள் எல்லாம் ஒரு வித பதட்டத்துடன் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் பார்வை நொடிக்கு நொடி, அங்கிருந்த ஒரு காரில் பதிந்தது. அந்த காருக்குள், கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் அத்விக் அதிரூபன்.

AK Vika Group of கம்பெனியின் மூத்த வாரிசு. அவர்கள் குடும்பம் கால் வைக்காத தொழிலே கிடையாது. இப்போது இவனோ, கட்டிட சாம்ராஜ்யத்தை மொத்தமாய் தன் கை வசம் வைத்திருக்கிறான்.

அதனால் அரசியல்வாதிகளில் ஆரம்பித்து, அல்லக்கை வரை, அத்தனைப் பேரும், அவன் பேச்சை கேட்டாக வேண்டும்.

இதோ இப்போது கூட, இந்த மொத்த ஏரியாவையும் விலை பேசி விட்டான். 

அந்த ஏரியாவில் இருக்கும் மக்களை விரட்டி அடிக்கத்தான் அதிகாரிகளை அழைத்து வந்திருக்கிறான்.

அவனே அதை செய்திருப்பான். ஆனால், அவனுடைய வேலை அது அல்லவே. 

அதனால் அமைதியாய் தன்னுடைய காரில் பின் சீட்டில் அமர்ந்திருந்தான். ஆனால் ட்ரைவர் அருகே அமர்ந்திருந்த அவனுடைய Assistant நேசமணிக்குதான் திக் திக் என்றிருந்தது.

பின்னே அமர்ந்திருப்பவனுக்கு பேச தெரியுமா? என்று அவனே பலமுறை யோசித்திருக்கிறான். 

கிட்ட தட்ட, அவனுடன் கடந்த ஒரு வருடமாய் வேலை செய்கிறான். ஆனால் அத்விக் பேசி அவன் பார்த்ததே கிடையாது. அவன் எதிரே நின்றும் யாரும் பேசியது கிடையாது.

அவனின் அதிகபட்ச பேச்சு வார்த்தை, “முடிச்சாச்சா?” என்பதாக மட்டும் தான் இருக்கும்.

இப்போதும் தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை திருப்பி பார்த்தவன், “முடிஞ்சிருச்சா?” என்று கேட்டான்.

“இதோ போய் பாக்குறேன் சார்” என்று சொல்லிய நேசமணி அடுத்த நொடி அந்த அதிகாரிகளிடம் ஓடி சென்றான்.

“அதெப்டி முடியும்? இத்தன வருஷமா, நாங்க இங்கதான் இருக்கோம். இப்போ நீங்க திடீர்னு வந்து காலி பண்ண சொன்னா, நாங்க எங்க போவோம்?” என்று சில பேர் நியாயம் கேட்டனர்.

“இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்னு சார் கேக்குறாரு” என்று நேசமணி அந்த ஏரியா கவுன்சிலரிடம் கேட்டான்.

“முடிஞ்சிருச்சி சார். பேசிட்டோம். ஒரு ஐஞ்சு நிமிஷம் மட்டும்” என்று சொல்லியவர், உடனே தன்னுடைய ஆட்களை கண் காட்டினார்.

“இன்னும் ஒரு வாரத்துல, அத்தன பேரும் காலி பண்ணியிருக்கனும். இல்லன்னா, நாங்க காலி பண்ண வேண்டியிருக்கும்” என்று ஒருவன் மிரட்டினான்.

“என்ன மெறட்டுறீங்களா?” என்று கோவமாய் ஒருவன் கேட்டான்.

“இங்கப்பாருங்க. ப்ரச்சன பண்ணாம கெளம்பிட்டா. உங்க இடத்துக்கு தகுந்த மாதிரியான பணத்த நா வாங்கி தரேன். இல்ல, எங்களுக்கு பணம்லா வேண்டா. இங்கதா இருப்பீங்கன்னா, நாளைக்கு உங்க வீட்டுல நடக்குறதுக்கு நா பொறுப்பாக மாட்டேன். யாரும் என்கிட்ட வந்து நிக்க கூடாது. நான் நம்ம ஏரியா ஆளுங்களுக்கு நல்லது பண்ணனும்னுதான் இங்க வந்து நிக்குறேன்” என்று கவுன்சிலர் அழகாய் ஸ்கெட்ச் போட்டார்.

“இருக்க இடம் இல்லாம, நீங்க கொடுக்குற பணத்த வெச்சிட்டு என்ன பண்றது” என்று இன்னொருவர் கேட்டார்.

இப்படியாக பேச்சு நீண்டுக் கொண்டே போக, காரில் அமர்ந்திருந்த அத்விக்குடைய பொறுமை காற்றில் பறந்தது. 

கார் கதவை திறந்துக் கொண்டு அவன் இறங்க, இப்போது அதிகாரிகளில் ஆரம்பித்து, பின்னே காரில் இருந்த MLAவும் அடித்து பிடித்து ஓடி வந்தார்.

“சார் சார். இந்த சின்ன விஷயத்துக்கு போய், நீங்க போலாமா? நீங்க கார்ல இருங்க. நான் பேசுறேன்” என்றார் MLA

ஏனெனில் அவன் சென்று பேசினால், அவருடைய பதவிகூட பறிபோகும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் அத்விக்கோ யார் பேச்சையும் காதில் வாங்காது, விறுவிறுவென்று நடந்து முன்னே சென்றான்.

கோட் சூட்டில் திடீரென ஒருவன் வந்து இறங்கவும், இப்போது அத்தனைப் பேருடைய பார்வையும் அவன் மேல் விழுந்தது.

பார்த்தாலே ராஜா வீட்டு கண்ணுக்குட்டி என்று சொல்லிவிடலாம். வெயில் என்றால் என்னவென்று கூட அறிந்திருக்க மாட்டான் போலும், அவனுடைய நிறம், அப்படி இருந்தது.

கண்ணில் கூலர் அணிந்திருக்க, அவனுடைய கண்கள் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவனுடைய அந்த நெற்றியே அவனைப் பற்றி சொல்லியது.

ஆறடி உயரம், அழகிய உருவம் என்று. பெண்களின் கனவுநாயகனுக்கான அத்தனை தகுதியும் அவனிடம் இருந்தது.

அதையெல்லாம் தாண்டி, இப்போது அவனுடைய நடையில் இருந்த கம்பீரம், அத்தனைப் பேரையும் சற்று மிரட்சியடைய வைத்தது.

“இவங்க என்ன சொன்னாங்க. நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க? இதபத்தியெல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது. இந்த எடத்த, நா வாங்க போறேன். சோ இன்னும் ஒரு வாரத்துல, இந்த எடம் காலியாகியிருக்கனும். இல்லன்னா” என்று ஒரு நொடி அப்படியே நிறுத்தினான்.

கண்ணில் இருந்த கூலரை கழட்டி சுற்றி இருந்தவர்களைப் பார்த்தான். சிறு புன்னகை அவன் முகத்தில் உதயமானது.

அது அவனை இன்னும் அழகனாய் காட்டியது. 

“இல்லன்னா, நா சொல்ல மாட்டேன். செஞ்சிடுவேன்” என்று அழுத்தி சொல்லிவிட்டு, மீண்டும் கூலரை அணிந்தப்படி அவனுடைய காருக்கு சென்றமர்ந்தான்.

அவ்வளவுதான். பேசிவிட்டான். இனி அந்த இடம் அவனுடையது. அதை மாற்ற, இனி எவராலும் முடியாது.

நேசமணியும், அத்விக்கின் பின்னே ஓடி வந்து காரில் ஏறியிருக்க, கார் அங்கிருந்து கிளம்பியது.

“ஏம்பா கந்தா. இவர் பேசி நான் பாக்கனும்னு உன்கிட்ட சொல்லவே இல்லையே. இப்போ பாவம், அந்த ஏரியா ஆளுங்களோட நெலம என்னாகப் போகுதோ?” என்று நேசமணி தனக்குள் புலம்பினான்.

அன்னேரம் அத்விக்குடைய மொபைல் அடித்தது. அதை எடுத்து அட்டண்ட் செய்தவனின் புருவங்கள் முடிச்சிட்டது.

“எனக்கு தெரியாது. நீங்க அவெள்ள கண்டுப்பிடிச்சே ஆகனும். இல்லன்னா” என்று அந்த வார்த்தையில் அத்விக் கொடுத்த அழுத்தமே, அதை செய்தாக வேண்டிய அவசியத்தை சொல்லியது.

இப்படித்தான், அத்தனைப் பேரையும் ஒற்றை வார்த்தையில், ஆட்டம் காண வைப்பான்.

அங்கே அவன் அப்படி இருக்க, இங்கே அஞ்சலியோ, வேகாத வெயிலில், கிடைக்காத வேலையை தேடி, லோ லோ என்று அலைந்துக் கொண்டிருந்தாள்.

படித்தது, பன்னிரெண்டாம் வகுப்பு. இதற்கு என்ன, அவளுக்கு கலெக்டர் வேலையா கொடுப்பார்கள்?

இல்லை அவள் தான் IT கம்பெனியில் வேலையை தேடி அலைந்துக் கொண்டிருப்பாளா?

இரண்டும் இல்லை. 

சாதாரண ஜவுளி கடை, மொபைல் கடை, இத்தனையேன், வீட்டு வேலை செய்யக்கூட ரெடியாக இருக்கிறாள்.

ஆனால் அவளுக்குத்தான் வேலை கிடைக்கவில்லை. ஏனெனில், அவளின் அழகை பார்த்து வரும் வேலைகளைப் பார்த்தாலே அவளுக்கு பயம் தான்.

இப்போதும் அப்படித்தான், வேலை கேட்டு வந்தவளிடம், பல்லை காட்டி காட்டி, பேசிக் கொண்டிருந்தான் அந்த பேக்கரி கடை மேனஜர்.

(அஞ்சலியின் நிலைமை மாறுமா? இல்லை அத்விக் அதை இன்னுமே மோசமானதாய் மாற்றுவானா? இப்படி எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தேவதை வருவாள்…

Author:    1 Sarmi SS
Comments   5

*** அசுரன் – 1 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com