முருகேசனும், வியனும் வந்திருப்பதைப் பார்த்த நிலா, வெடுக்கென்று, தன் முந்தானையை உறுவிக்கொண்டு அறையில் இருந்து வெளியேறியிருந்தாள்.
இங்கே அத்தனை நேரம், அவள் முந்தானையின் வாசமிழுத்து படுத்து கிடந்தவனுக்கு, அது சட்டென்று அவனை விட்டு செல்லவும், திடுக்கிட்டு எழுந்தான்.
எழுந்தவனின் கண்ணில், வெற்று அறை மட்டுமே அரை வெளிச்சத்தில் இருக்க, மாத்திரையின் வீரியத்தில், படுத்திருக்க, இப்போது பயங்கரமாய் தலை வலித்தது.
தூக்கம் வேறு பாதியில் கலைந்திருக்க, அவனுடைய கண்கள் ரத்தமாய் சிவந்திருந்தது. அப்படியே படுக்கவும் முடியாமல், சற்று மெல்லமாய் எழுந்து பாத்ரூமிற்கு சென்றான்.
நடக்க கொஞ்சம் சிரமம் இருந்தாலும், வலியெல்லாம் அவனுக்கு ஒரு விஷயமே கிடையாது. இப்போதே சென்று, அவனை வயலில் இறங்கி வேலைப்பார்க்க சொன்னால்கூட செய்வான்.
தாமரையின் ஆர்ப்பாட்டாத்தால் மட்டுமே, அவன் இங்கு படுத்திருக்கிறான். அதனால், முகத்தை அழுத்தி கழுவியவனின் நாசியில் ஏதோ புதிய வாசனை தெரிய, ஏனோ அதை அவனால் அந்த நொடி கண்டறிய முடியவில்லை.
இங்கே, தந்தையைப் பார்த்த பயத்தில், தந்தைக்கு முன் வீட்டுக்கு சென்றுவிட வேண்டும் என்று அவசரமாய் பெரிய வீட்டை விட்டு வெளியில் வந்தாள் நிலா.
அங்கே வியனோ, முருகேசனிடம், “நாளைக்கு, நானே உங்க வண்டிய கொண்டு வந்து விடுறேன் மாமா. நீங்க இதுக்காண்டி அலைய வேண்டாம்” என்றான்.
ஆனால் அவரோ, “இல்லப்பா. உனக்கு எதுக்கு சிரமம். நானே என் வேலைய பாத்துக்கிறேன். இவ்ளோ தூரம் என்னை கொண்டு வந்து விட்டதுக்கு ரொம்ப நன்றி” என்றார் முருகேசன்.
“என்ன மாமா? இதுல எனக்கென்ன சிரமம் இருக்கு. அதுவும் போக, நீங்க யாரு. எனக்கென்ன வெளியாளா? கதிரவன் ஊருக்கு போறப்பையே, வீட்டையும் சேத்து பாத்துக்கத்தான் சொல்லிட்டு போனான்” என்றான் வியன்.
“என் வூட்ட பாத்துக்க நான் இருக்கேன். அதுக்கும் மேல ஏதாச்சும்னா, எனக்குன்னு அக்கம் பக்கத்துல ஆள் இருக்காங்க. அதனால, என்வீட்ட எல்லாம் நீ பாத்துக்க வேண்டாம்” என்று நேரடியாகவே சொல்லிவிட்டார்.
ஏனெனில், கதிரவனுக்கு வேண்டுமென்றால், வியன் உயிர் தோழனாக இருக்கலாம். ஆனால் முருகேசனை பொறுத்தவரை, அவன் பாண்டியின் பையன். எப்படியும் அவனைப் போல்தான் இருப்பான் அவருடைய எண்ணம். ஆனாலும், அப்பன் செய்ததுக்கு, பிள்ளையை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று மட்டும்தான், கதிரவன் பழகும் போதும் எதுவும் சொல்லவில்லை.
“ஏன்யா முருகேசா. அப்படி பாத்தா, உனக்கும், ஆதி அப்பனுக்கும்த்தேன்ன பஞ்சாயத்த. பொறவு எதுக்கு ஆதிய மட்டும் மொத்தமா ஒதுக்கி வெச்சிருக்க” என்று மனசாட்சி எப்போதும் கேட்கும் அதே கேள்வியை கேட்டது.
“பாண்டி என்னிக்குமே எனக்கு ஆவாதவந்தேன். ஆனா என் மாப்ள, நான் தூக்கி வளத்தவன். பாசத்த மட்டும் இல்ல, கோவத்தையும், உரிம இருக்குற இடத்துலத்தேன் காட்ட முடியும்” என்று வழக்கமாய் சொல்வதை சொல்லிக் கொண்டார்.
இங்கே வியனோ, “நீங்க பாத்துப்பீங்கன்னு தெரியும். இருந்தாலும், கதிரவன் சொல்லிருக்கான். என்னால அவென் பேச்ச மீற முடியாது மாமா. செத்த குடிக்க தண்ணி கொடுக்கிறீங்களா” என்றான்.
ஏனெனில் அவனுக்கும் தெரியும். அவராகவெல்லாம் அவனை இந்த நேரத்தில் வீட்டுக்கு அழைக்க மாட்டார் என்று.
அதனால் தான் அவனே கேட்டான். அதில் அவரோ அப்போதும், “இங்க இரு. கொண்டு வந்து தரேன்” என்றுத்தான் வீட்டை நோக்கி நடந்தார்.
“பெரிய இவரு. குடிக்க தண்ணி கேட்டா கூட வீட்டுக்குள்ள விடமாட்டாராம். இருக்கட்டும், என்னிக்கா இருந்தாலும், உங்க வீட்டுக்கு மருமவென்ன நான்தான வரப் போறேன். அப்போ, மருமவெனுக்கு எப்படி மருவாத கொடுக்கனும்னு உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்” என்று மீசையை நீவிக் கொண்டான் வியன்.
ஆனாலும் மனம், நிலா எங்கும் தெரிகிறாளா? என்று பார்த்தப்படியே அந்த வீட்டின் பின் பக்கம் நடக்க, இங்கே நிலாவோ, முன்வாசல் வழியே சென்றால் மாட்டிப்போம் என்று பின் வாசல் வழியே செல்ல நினைத்து வேகமாய் ஓடி வந்தாள்.
சரியாக வியனும் அங்கு வந்திருக்க, மூச்சு வாங்க ஓடி வந்தவளை கேள்வியாய் பார்த்தவன், “நிலா” என்றான்.
அதில் நிமிர்ந்து அவனைப் பார்த்தவளுக்கோ அத்தனை அதிர்ச்சி. அதில் அன்னிட்சையாய் அவள் பின் எட்டு வைக்க, “இன்னேரத்துல, நீ எங்க போயிட்டு வர்ற” என்று கேட்டான்.
அதில் இவளுக்கோ என்ன சொல்ல என்று தெரியவில்லை. சரியாக இக்காட்சியை, உறக்கம் வரவில்லை என்று பால்கனிக்கு வந்து நின்றிருந்த ஆதிரன் பார்த்திருந்தான்.
அவன் கண்ணில் விழுந்தது என்னவோ, இந்த நேரத்தில், நிலாவிடம் வியன் நின்று பேசிக் கொண்டிருப்பதைத்தான்.
அதுவும் போக, அந்த அரை இருளிலும் கூட, நிலாவின் நடுங்கிய தோற்றம், அவனுக்கு தெளிவாய் தெரிந்தது. சில விஷயத்தை பார்வ ஊணரும் முன்பே, மனம் உணர்ந்துக்கொள்ளுமே அதுபோல் தான்.
அடுத்த நொடி, அவனுடைய கோவம் கூடியிருக்க, சற்றும் யோசிக்காமல், வேகமாய் வீட்டை விட்டு வெளியில் வந்தான் ஆதிரன்.
இங்கே நிலாவுக்கோ சும்மாவே பேச்சு வராது. இப்போது அவள் ஓடி வேறு வந்திருக்க, மூச்சு வேறு வாங்கியது. அதிலும் அவனுடைய கேள்விக்கு, என் மாமனை பார்க்க சென்றேன் என்று சொல்லி ஒரு நொடி போதாதுதான்.
அதை சொல்லவும் அவளுக்கு தயக்க எல்லாம் இல்லைத்தான். ஆனால், இவனிடம் சொன்னால், அது கதிரவனுடைய காதுக்கு சென்றுவிடுமே என்ற பயம். அதில் அவள் எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.
அவள் முகம் எங்கும் வியர்த்திருக்க, “என்னாச்சு நிலா? ஏன் உன் முகம் இம்புட்டு பதட்டமா இருக்கு?” என்றவன், அவளை நெருங்கி, அவள் முகத்திற்கு நேரே கையை கொண்டு சென்றான்.
அதற்குள், அவன் கையை மடக்கிப் பிடித்தப்படி, நிலாவின் முன்னே வந்து நின்றிருந்தான் ஆதிரன். சட்டென்று, அவன் அவளை மறைத்திருக்க, அந்த நொடி, அந்த வெண்ணிலாவும் மேகத்துக்குள் மறைந்துக் கொண்டது.
ஆதிரனை, அந்த நொடி பார்த்ததும், வியனுடைய முகத்தில் இருந்த இளக்கம் எல்லாம் இறுக்கமாய் மாறியிருக்க, சட்டென்று அவனாகவே கற்பனை செய்துக் கொண்டு, “என்னடா? கதிரவன் வீட்டுல இல்லன்னதும், உன்னோட ரவுடித்தனத்த, அந்தப்பிள்ளட்ட காட்டுறீயா” என்றான் வியன்.
அதில் நக்கலாய் சிரித்த ஆதியோ, “என்னேரமும், இப்படி காக்கி சட்டைய போட்டுட்டே சுத்து. ஏன்னா, எல்லா நேரமும், உன்னை அது என்கிட்ட இருந்து காப்பாத்தாது. ஆனாலும் சில சமயம் காப்பாத்தும்” என்றான்.
“ஹேய்” என்றவன் தன் கையை அவனிடம் இருந்து உறுவ, அவனோ விடாது இறுக்கி பிடித்தான். அதுவும், அடிப்பட்ட கையாலையே பிடித்திருக்க, இங்கே ஆதியுடைய கை கட்டில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது.
ஆனால், வலியை உணர்ந்தது என்னவோ வியன் தான். ஆம். அவனால் ஆதிரனின் கையில் இருந்து தன் கையை உறுவிக்கொள்ளவே முடியவில்லை. அதிலும் அவன் அத்தனை கோவமாய் அவன் கையை மடக்கி திறுக, வியனுடைய முகமெல்லாம் இறுகியது.
“என்ன சொன்ன? என் ரவுடித்தனத்த, என் வூட்டு புள்ளைட்ட காமிக்கிறேன்னா? எனக்கு உன்ன மாதிரி பொம்பள புள்ளைட்ட நின்னு வீரத்த காட்டி பழக்கம் கெடையாது” என்றவனின் பிடி கூடியது.
ஏற்கனவே இளநிலாவை பைக்கில் ஏற்றி சென்றதே இன்னும் அவன் கண்ணுக்குள் ஓடிக் கொண்டிருக்க, இப்போது, அந்த கோவம் மொத்தத்தையும், பிடித்திருந்த வியனின் கரத்தில் காட்டினான்.
“ஹேய், என் கைய விடு” என்று வியன் உறுவ முயற்சிக்க, “இளநிலா” என்று சத்தமாய் அழைத்தான் ஆதிரன். அவனின் குரலில், அவனின் முதுகுக்கு பின்னால், பதுங்கியிருந்தவள், மெல்லமாய் வெளியில் எட்டிப் பார்த்தாள்.
“நீ இவன்கிட்ட பேச வந்தீயா” என்று கேட்க, ஏனோ நிலாவுக்கு கண்ணெல்லாம் கலங்க ஆரம்பித்தது. அவள் பதில் பேசாமல் இருக்கவும், “உன்கிட்டதான கேக்குறேன்” என்றவன் அவளைப் பார்க்கவில்லை.
ஒரு வேளை, அவளை திரும்பி பார்த்திருந்தால், அவளின் மனம் அவனுக்கு புரிந்திருக்குமோ என்னமோ? ஆனாலும் கண்ணீரை உள்ளிழுத்து, “இல்ல” என்று மெதுவாய் முனுமுனுத்தாள்.
அதற்குள், அவன் நிலாவிடம் பேசிய தருணத்தை உபயோகித்து, அவனிடம் இருந்த கையை உறுவிய வியனோ, ஆதிரனை பிடித்து தள்ளிவிட்டான்.
அதில் அவன் சற்று தடுமாற, “மாமா” என்றவளின் உதடுகள் முனுமுனுக்க, அன்னிட்சையாய் அவளின் கரங்கள் அவனை பிடிக்கும் முன்னே, முருகேசன் வந்து அவனை தாங்கிப் பிடித்தார்.
அதில் சட்டென்று தன்னை நிலைப்படுத்தியவன், கோவமாய் வியனை அடிக்கப் போக, அதற்குள், “மாமா, இவென் நம்ம நிலாக்கிட்ட வம்பிழுத்துட்டு இருந்தான். அதனாலத்தான் நான்” என்றான் வியன்.
ஏனோ அவன் நம்ம நிலா என்று சொல்லியது ஆதிரனுடைய கோவத்தை கூட்ட, “யாருடா, வம்பிழுத்தா?” என்று மீண்டும் ஆதிரன் அவனை அடிக்க பாய்ந்தான்.
அதற்குள் முருகேசனோ, நிலாவின் பக்கம் திரும்பி, “இன்னேரத்துல இங்க எதுக்கு வந்த” என்று கேட்டார்.
“அத் அது” என்று நிலா பதிலளிக்கும் முன்னே, “இவன்தான் மாமா, அந்தப்புள்ளைய பயமுறுத்தி வர வெச்சிருப்பான்” என்றான் வியன்.
அதற்கு நிலா மறுப்பு தெரிவிக்கும் முன்னே, “என் மருமவெனுக்கு, பயமுறுத்தி அவெள்ள வர வைக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. என் மருமவென்ன பாக்கனும்னு சொன்னா, என் மவள்ள நானே கூட்டிப் போயி காட்டிட்டு வந்திருப்பேன். அடுத்து இது எங்க குடும்ப விஷயம். இதுக்குள்ள நீ வராத. தண்ணிய குடிச்சிட்டு இடத்த காலி பண்ணு” என்றார் முருகேசன்.
அதில் வியனுக்கோ அத்தனை எரிச்சல். அதில், தன் கசங்கிய சட்டையை சரி செய்தவன், “கதிரவன் வரட்டும். அதுக்கப்புறம் உன்ன பாத்துக்கிறேண்டா” என்று கருவியப்படிதான் அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றதும், இங்கே ஆதிரனுடைய கோவமோ கடகடவென்று கூடியது. அதில், அவனோ முருகேசனை கண்டுக்கொள்ளாமல், அவரின் முன்னே சற்று பயந்தப்படி நின்றிருந்தவளைப் பார்த்தான்.
“இன்னேரத்துல, எதுக்கு மொத நீ வெளிய வந்த?” என்று நிலாவிடம் தான் பாய்ந்தான். முருகேசன் அவனை தடுக்க கூட இல்லை.
“அத் அது” என்றவளோ, இப்போது அன்னிட்சையாய், ஆதரவுக்காக, தந்தையின் கையைப் பிடித்தாள்.
ஆனாலும் அவரோ, அவன் கேள்விக்கு பதில் சொல் என்பது போல் தான் நின்றிருந்தார்.
அந்த அரை இருளில், ஒருவரின் முகம் மற்றொருவருக்கு பெரிதாய் தெரிந்திருக்கிறதுதான். ஆனால், அவளின் பயமும், அவனின் கோவமும் அப்பட்டமாய் மற்றொருவருக்கு தெரிந்தது.
“இல்ல அது. வந்து சும்மாத்தேன் ஏதோ சத்தம் கேட்டுச்சின்னு. அது” என்றவள் வாழ்க்கையில் பெரிதாய் பொய் சொல்லியது கிடையாது என்பதால் சற்று தடுமாறினாள்.
அதில் ஆதிரனுக்கோ இன்னும் கோவம் கூடியது. “படிக்கிற புள்ளத்தேன்ன நீ? நாட்டுல என்ன நடக்குதுன்னு உமக்கு தெரியாதா?” என்று கேட்டான்.
அவளோ தலைக்குனிய, “இன்னொரு தடம், இப்புடி, சத்தம் கேட்டுச்சி, அது கேட்டுச்சின்னு, இப்புடி தனியா வந்து நிக்க கூடாது. புரிஞ்சிதா?” என்று கேட்டான்.
நிச்சயம் அது ஏதோ, ஆசிரியர் மாணவியிடம், மிரட்டும் தோரணையில்தான் இருந்தது. உடனே அவளும் வேகமாய் தலையாட்டினாள்.
“மூஞ்ச கழுவிட்டு உள்ளார போயி தூங்கு” என்று ஆதிரன் சொல்ல, அதற்கும், “ம்” என்று தலையாட்டினாள்.
இப்போது முருகேசனோ, “என் புள்ள, இங்க என் வீட்டு முன்னாடி இருக்குது. ஆனா பெரிய வீட்டுக்காரரு. எதுக்கு, இன்னேரத்துல இங்க வந்து நிக்குறாரு. அதுவும், இன்னும் முழுசா கூட காயம் ஆறல” என்றார்.
“உங்களுக்கு வேணும்னா, நான் ஆகாதவன்னா இருக்கலாம். ஆனா அதுக்குன்னு, எம்ம வூட்டு புள்ளைக்கு ஒன்னுன்னா, பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன். நான் வந்து கேப்பேன். அத தடுக்க ஆறுக்கும் உரிம கிடையாது” என்று கோவமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான் ஆதிரன்.
அதில் சிரித்த முருகேசனோ, “என்ன? உன் மாமன பாத்துட்டீயா? நல்லா இருக்கான்னா? இனியாச்சும் நீ போயி நிம்மதியா உறங்குறீயா” என்று கேட்டார்.
அவரின் வார்த்தையில், நிலா அதிர்ந்து தன் தந்தையைப் பார்க்க, “நீ ஒன்னும் சின்ன பிள்ள கிடையாது நிலாம்மா. அதே நேரம். உன் அத்தை மேலையோ, இல்ல உன் அத்த பையன் மேலையோ பாசம் காட்ட கூடாதுன்னு நான் சொல்லவே இல்ல. ஆனா அந்த பாசம், பாசமா மட்டுமே இருக்கனும். நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்” என்று சற்று அழுத்தியேத்தான் கூறினார்.
அதில் அவளோ, “இல்லப்பா. அது” என்று நிலா முடிக்கும் முன்னே, “ரொம்ப நேரம் ஆவுது. போயி தூங்கு” என்றிருந்தார். ஏனெனில் அதற்கு மேல், அவர் அதைப் பற்றி பேச தயாராக இல்லை. அது புரிய நிலாவும் சென்று கட்டிலில் படுத்தாள். இங்கே ஆதிரனும் சென்று அந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த அந்த கட்டிலில் அமர்ந்தான்.
அவனுக்கோ கோவம், அவளுக்கோ ஆறாத வலி. அதில் இருவருக்குமே அதற்கு மேல் உறக்கம் வரவில்லை.
(ரைட்டு. அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
இம்சிக்குமா?..
Keerthi S
enna thaan ya sandai sollitu sandai podunga…. paasathaium thaan solluren
Karthiga p
apo Murugesanum nila va adhi ku kalyanam panna vendamnu thaan ninachuttu irrukara 🥲
Ammu Sathish
சூப்பர்
Sri Viji
vera level sister ♥ waiting for the next episode sister ♥♥♥♥♥♥♥♥♥