இளநிலாவுக்கோ ஆதிரனை சென்று பார்க்க வேண்டும் என்று தோன்ற, ஆனால், தான் மட்டும் அங்கு செல்வதை தந்தையோ, இல்லை அண்ணனின் கூட்டாளிகள் யாராவது பார்த்தால் என்னவாகும் என்று யோசித்து யோசித்தே, வீட்டை அளந்துக் கொண்டிருந்தாள்.
“இப்போ நீ போய் பாக்குறதால, என்னாவாகிடப் போகுது? அதுவும் போக, உன்னாலத்தேன் அவருக்கு இப்படி ஆயிருக்கு” என்று மனசாட்சி அவளையே குற்றம் சுமத்தியது.
“நீ ஆறு கூட பைக்ல போனா, அவருக்கு என்னவாம்? அவருக்குத்தேன் உன்னை ஆகாதுத்தேன்ன” என்று இன்னொரு மனம் முரண்டு பிடித்தது.
அவளுக்கு தெரியும். அவள் வேறு யாரு கூடவாவது சென்றிருந்தால், நிச்சயம் அவன் இந்தளவுக்கு கோவப்பட்டிருக்கமாட்டான். அவள் வியனுடன் சென்றதுதான் அவனின் பிரச்சனையே.
இது இப்போது என்றெல்லாம் கிடையாது. சிறு வயதில் இருந்தே ஆதிரனுக்கும், வியனுக்கும் சுத்தமாய் ஆகாது. வியன் அவளிடம் பேசினால் கூட ஆதிரனுக்கு பிடிக்காது. அவன் ஏதாவது கொடுத்து இவள் வாங்கிவிட்டால், ஆதி, அடுத்த இரண்டு நாள், அவள் முன்னே கூட வந்திட மாட்டான்.
அதென்னவோ அவனுக்கு வியனை பிடிக்காது என்பதாலையே, இவள், வியனை விட்டு விலகியேத்தான் இருப்பாள். ஆனால் வியன் தான் அவள் பின்னாலையே சுற்றுகிறான்.
அதிலும், கதிரவனுக்கோ, ஆதிக்கு வியனை பிடிக்காது என்பதாலையே, அவனை கூட்டு சேர்த்து வைத்திருக்கிறான்.
இப்போது அது இது என்று அத்தனையையும் யோசித்தவள், நகத்தை கடித்து துப்பியதுதான் மிச்சம். ஆதியை பார்க்க சென்ற செல்விக்கூட வீட்டுக்கு வந்துவிட்டார்.
அதன் பின்னே அவளின் அப்பா முருகேசனும் வந்துவிட, நிலாவோ, ஜன்னல் வழியே தெரிந்த அந்த பெரிய வீட்டைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனம் ஆதிரனை மட்டுமே யோசிக்க, சாப்பாடு கூட அவளுக்கு உள்ளே செல்ல மறுத்தது.
“என்னாச்சுடா? சாப்பாடி பிடிக்கலையா? அப்பா வேனும்னா போயி புரோட்டா வாங்கிட்டு வரட்டா” என்றார் முருகேசன்.
அப்போதே இவ்வுலகம் வந்தவளோ, “இல்ல இல்லப்பா. இதுவே போதும்” என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்றுவிட்டாள்.
“புள்ளைக்கு என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கா” என்று முருகேசன் கேட்க, “அவெளுக்கு என்ன? அதெல்லாம் அவ நல்லாத்தேன் இருக்கா. நீங்க சொல்லுங்க. அந்த பேங்க் மேனஜர்ட்ட பேசனும்னு சொன்னீங்களே” என்றாள்.
அதில் முருகேசனோ, அமைதியாகிவிட, “உன் தம்பி மவன் ஏதாச்சும் சொன்னான்னா” என்றார்.
“அவன் என்கிட்ட என்ன சொல்லப் போறான். அவென்ன நான் பாக்க போனதுக்கே, எதுக்கு வந்தீங்க, என்னால உங்க வீட்டுல ப்ரச்சன வேண்டாம்னுத்தேன் சொன்னான். நான்தான் மனசு கேக்காம செத்த நேரம் இருந்துட்டு வந்தேன்” என்று சிறு கோவத்துடன் கூறினார்.
“உன்ன நான் அங்க ஏன் போனேன்னு கேக்கவே இல்லையே” என்று முருகேசன் சொல்ல, “இதுல கேக்குறதுக்கு என்ன இருக்கு? அதேன் ஊருக்கே தெரிஞ்ச கதத்தான. என் தம்பி மவென் அடிப்பட்டு வந்து கெடக்கான். என்னால அவனுக்கு ஒத்த வாய் சோறாக்கி போட முடியல. அப்படி என்னத்தேன் பொல்லாத வீராப்போ” என்ற செல்விக்கு நொடியில் கண்ணெல்லாம் கலங்கி விட்டது.
“இப்போ மனுஷன் சாப்பிடனுமா? இல்ல வேண்டாமா” என்று கோவமாய் முருகேசன் கேட்க, அதில் கண்ணைத் துடைத்துக் கொண்டவரோ, “நான் எதுவும் பேசல, நீங்க சாப்டுங்க” என்று அவருக்கு பரிமாறினார்.
ஆனாலும் கூட, அத்தை மகளின் கண்ணீர் அவரை வாட்டவே செய்ய, “இங்குட்டு பாரு. உனக்கு என்னப் பண்ணனுமோ பண்ணு. ஆனா, இந்த வூட்டுல இருந்து அங்க எதுவும் போவ கூடாது. அதே மாதிரி அங்க இருந்தும் நீ எதையும் எடுத்துட்டு வரக்கூடாது. அம்புட்டுத்தேன். உனக்கு அப்படி அவென்ன கூட இருந்து பாத்துக்கனும்னா, அங்க போயி இருந்து பண்ணிக்கொடுத்துட்டு வா” என்றார்.
இப்படித்தான் சொல்வார் என்று செல்விக்குமே தெரியும். அதனால் எதுவும் சொல்லாமல், அமைதியாய் அவர் இருக்க, “என்ன? அதுக்கு, உன் தம்பி மகன் வேண்டாம்னு சொல்லிருப்பான்னே. அவெனுக்கே அம்புட்டு வீம்பு இருந்தா, எனக்கு இருக்காதா” என்றார் முருகேசன்.
“அவீகவீக, அவங்க வீம்ப புடிச்சிட்டு தொங்குங்க. ஏதோ மனசு கேக்காம ரெண்டு வார்த்த பேசிட்டேன். அம்புட்டுத்தேன். சாப்டு முடிச்சிட்டீங்கன்னா சொல்லுங்க, நான் பாத்திரத்த எடுத்து வெச்சிட்டு படுக்கனும்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அதில் அவருக்குமே அதற்கு மேல் உணவு உள்ளே செல்லவில்லை. மனம் நடந்த விஷயங்களை அசைப்போட, வீட்டில் இருக்கவும் மனம் வரவில்லை. அதனால், பைக்கை எடுத்துக் கொண்டு அவருடைய உரக்கடைக்கு சென்று விட்டார்.
அவர் செல்லவும், செல்வியும் அவருடைய அறைக்கு சென்று படுத்துவிட்டார். இப்போது நிலாவோ வெளியில் இருந்த திண்ணையில் வந்தமர்ந்தாள்.
ஊரே அந்த இரவில் அத்தனை அமைதியாய் இருக்க, அவளோ வானில் ஜொலித்த அந்த பால்நிலாவைப் பார்த்தாள்.
ஏனோ அதிலும் கூட, ஆதிரனின் உருவம் மட்டுமே தெரிய, “பேசாம நம்ம நேர்ல போயி பாத்துடலாம். யாராச்சும் கேட்டா, செயின்ன கொடுக்குறதுக்குன்னு சொல்லிடலாம்” என்று தனக்குள் சொல்லியப்படி, அந்த பெரிய வீட்டை நோக்கி நடந்தாள்.
உண்மையில், அவளை யாராவது பார்த்தால் கூட, ஏன் அங்கு செல்கிறாய் என்றோ? இல்லை ஏன் வந்தாய்? என்றோ நிச்சயம் கேட்கப் போவதில்லை.
ஆனாலும் அவளாகவே அத்தனை காரணத்தை மனதில் நினைத்துக் கொண்டு அவள் செல்ல, அங்கே ஆதியுடைய பைக்கை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டாள்.
பைக்கின் நிலையே அத்தனை மோசமாய் இருக்க, அவனுக்கோ என்னவாயிற்றோ என்று மனதில் பயம் அதிகரித்தது.
அதனால் சற்றும் யோசிக்காமல், ஹேட்டில் கை வைக்கப் போக, “யாரு அது” என்ற குரல் கேட்டது. அதில் இவளுக்கோ சட்டென்று வியத்துவிட, அவசரமாய் திரும்பினாள்.
அவர்கள் வீட்டில் வேலைப் பார்க்கும் ராணிதான் நின்றிருந்தார்.
அவள் முகத்தைப் பார்த்ததும், “ஆறு, நம்ம நிலா பாப்பாவா. உங்க பெரியம்மாவ பாக்க வந்தீயாத்தா” என்றாள் ராணி.
அவளுக்குமே அவர் என்ற பின் தான் சற்று நிம்மதி வந்தது. “ம்” என்று அவள் தலையாட்ட, “உங்கத்த தலையாட்டுறதுக்கணக்காவே ஆட்டுற பாப்பா. செரி உள்ளார போ” என்று சொல்லிவிட்டு சென்றார்.
அதன் பின் மேலும் அங்கேயே நின்றால் வேறு யாராவது கேட்பார்கள் என்று யோசித்தப்படி, இப்போது நிலா உள்ளே சென்றாள்.
அவள் வீட்டிற்குள் நுழைய, வீடே அத்தனை அமைதியாய் இருந்தது. ஏனெனில் அத்தனைப் பேரையும், ஆதி கிளம்ப சொல்லியிருக்க, தாமரையும் மாத்திரையை போட்டுவிட்டு படுத்திருந்தார்.
இப்போது நிலாவோ உள்ளே வந்துவிட்டாள். ஆனால், ஆதிரனுடைய அறைக்கு செல்லவெல்லாம் சத்தியமாய் தைரியம் இல்லை.
ஆனாலும், “இம்புட்டு தூரம் வந்தாச்சித்தேன்ன. போயி பாத்துட்டு வந்துடலாம்” என்று தனக்கு தானே தைரியம் சொல்லியப்படி அவள் ஒவ்வொரு படியையும் அத்தனை பார்த்து பார்த்து வைத்தாள்.
அவள் இதயம் துடிக்கும் சத்தம் அவளுக்கே திருப்பி கேட்டது. ஒரு வழியாய் ஆதிரனுடைய அறைக்கு முன்னே வந்திருக்க, அந்த கதவை திறக்க மேலும் சில நிமிடம் தயங்கித்தான் நின்றாள்.
“வேண்டாம் நிலா. திரும்பி போயிடு” என்று மனசாட்சி சொல்ல, அவளுமே திரும்பி நடக்கப் போக, அதற்குள் உள்ளே ஆதிரனின் இருமல் சத்தம் விடாமல் கேட்டது.
“என்னாச்சு அவருக்கு” என்றவள் அடுத்த நொடி எதையும் யோசிக்காது, கதவைத் திறந்து, உள்ளே செல்ல, அங்கே அவனோ உறக்கத்தில் தான் இருந்தான்.
லைட் ஆப் செய்யப்பட்டிருக்க, அறை சற்று இருளாகத்தான் இருந்தது. ஏதோ ஜன்னல் திறந்திருப்பதால், சற்று நிலா வெளிச்சம் உள்ளே வந்தது.
வலிக்காக தூக்க மாத்திரை சேர்த்து கொடுத்திருக்க, அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
இவள் வேகமாய் அவனின் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து, “மாமா” என்று மெல்லமாய் அவனை உழுப்பினாள்.
தூக்க மாத்திரையும், வலி நிவாரணியும், அவனை கண்ணை திறக்க விடவில்லை. பாட்டியோ என்று நினைத்து, அவள் கையில் இருந்த செம்பை வாங்கி குடித்தான்.
சற்று படுத்த வாக்கில் அவன் குடித்திருக்க, பொறையேறியது. “அச்சோ மாமா பாத்து” என்றவள், வேகமாய் அவள் தாவணி முந்தானையால் அவன் முகத்தை துடைத்தாள்.
அவள் தாவணியில் இருந்து வந்த வாசனை, அவனுக்கு தன் அன்னையை நினைவுப்படுத்த, அதை சற்று இழுத்துப் பிடித்தான்.
அதில் இவள் அதிர்ந்து, அவன் கையில் இருந்து அதை உறுவ முயற்சிக்க, அவனோ, இன்னுமே அதை சுருக்கிப் பிடித்து அதில் கன்னத்தை பதித்தான். அவன் இழுக்க இழுக்க, இவள், தாவணியை காப்பாற்ற நினைத்து அவனின் அருகில் நெருங்கியிருந்தாள்.
அறையில் பெரிதாய் வெளிச்சம் இல்லை. அவனின் சீரான சுவாசமே அவன் உறக்கத்தில் இருக்கிறான் என்பதை அவளுக்கு சொல்ல, வேறு வழியின்றி கட்டிலில் அவனின் அருகிலேயே அமர்ந்தாள்.
அவள் அமரவும், அவனுக்கு இன்னுமே வசதியாகிப் போக, தன்னால் முடிந்த மட்டும் அவள் முந்தானையை எடுத்து, தன் முகத்தில் போர்த்திக் கொண்டவன், திரும்பி படுத்தான்.
அதில் இப்போது சட்டென்று அவள் அவன் மேல் சென்று விழப் போக, கடைசி நொடியில், கட்டிலின் முனையை பிடித்து அதை தடுத்தாள்.
அதற்கே அவளுக்கு மூச்சு வாங்க, அவளின் சுவாசம், அவன் மூச்சில் கலந்தது. அது அவனுக்கு இன்னுமே ஒரு வித சுகத்தை கொடுக்க, இன்னுமாய் அவள் தாவணியை பிடித்துக் கொண்டான்.
“இதுலாம் தேவையாடி உனக்கு” என்று மனசாட்சி கேட்க, அவள் மட்டும், இப்படி எல்லாம் ஆகும் என்று கனவாய் கண்டாள்? இன்னேரம் அவன் மட்டும் முழித்திருந்தால், நடந்திருப்பதே வேறாக இருக்கும்.
“இப்ப என்ன பண்றது?” என்று யோசித்தவள், அப்போதே அவனைப் பார்த்தாள். அரை இருளில், அவனின் முகம் தெளிவாய் தெரியவில்லை.
ஆனால் அவன் கையிலும், காலிலும் போடப்பட்டிருந்த அந்த வெள்ளை நிற கட்டு நன்றாகவே தெரிந்தது. அதைப் பார்த்ததும், மற்ற அனைத்தையும் மறந்தவளுக்கு, அவனின் காயம் மட்டுமே முன் வந்து நின்றது.
“எதுக்கு மாமா, உங்களுக்கு இம்புட்டு கோவம்? அதுக்கு அப்பவே என்னை இறங்க சொல்லிருந்தா, நானே வண்டியில இருந்து குதிச்சிருக்கப் போறேன்” என்றவளின் கண்கள் கலங்க, அவன் காயத்தை மெல்ல வருடினாள்.
அதற்குள், அவனிடம் அசைவு தெரிய, சட்டென்று தன் கரத்தை எடுத்துக் கொள்ள, ஏனோ அவனுக்கு அடிப்பட்டதுக்கு பதில், தனக்கு இப்படி ஆகியிருக்கலாம் என்றுத்தான் தோன்றியது.
அதில் நொடிகள் செல்வது தெரியாது. அவள் அப்படியே அமர்ந்திருக்க, அன்னிட்சையாய் அவளுடைய விரல், அவள் கழுத்தில் கிடந்த செயினை வருடியது.
அப்போதுத்தான் அவளுக்கு அதை அவனிடம் கொடுக்க வேண்டும் என்ற விஷயம் நினைவுக்கு வர, அதை கழட்ட நினைத்து கை வைத்தாள்.
ஆனால் அடுத்த நொடியே, அவன் அதை அவள் கழுத்தில் போட்டு விட்டது நினைவுக்கு வர அதை அவளால் கழட்ட முடியவில்லை.
“என்னால நீங்க கொடுத்த எதையுமே திருப்பி கொடுக்க முடியாதுன்னு உங்களுக்கே தெரியும்த்தான மாமா. அப்புறம் எதுக்கு இத என் கழுத்துல போட்டு விட்டீங்க” என்றாள்.
இதெல்லாம் அவன் உறக்கத்தில் இருப்பதால் மட்டுமே அவள் வாயில் இருந்து வந்தது. மற்றப்படி அவன் முழித்திருந்தால், இவளுக்கு வாயில் காற்றுக்கூட வந்திருக்காது.
அவனையே அவள் பார்த்துக் கொண்டிருக்க, அதற்குள், வீட்டுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்க, திடுக்கிட்டு எழ முயற்சித்தாள். ஆனால் அவள் தாவணை முனை அவனிடம் இருக்க, அங்கிருந்தே மெல்ல எட்டிப் பார்த்தாள்.
வியன் தான், முருகேசனுடன் அங்கு வந்திருக்க, அவளுக்கோ அதிர்ச்சி, அதில் பதட்டத்தில் அவன் கையில் இருந்த தாவணையை வெடுக்கென்று பிடுங்கியவள், அடுத்த நொடி அங்கிருந்து ஓடியிருந்தாள்.
இங்கே தன் கையில் இருந்த ஏதோ ஒன்று வஇடுப்பட்ட உணர்வில், சட்டென்று எழுந்தான் ஆதிரன். இங்கே மூச்சு வாங்க ஓடி வந்தவளின் முன்னே, வியன் வந்து நிற்க, அவளோ அப்படியே பின் எட்டு வைத்தாள்.
(என்னது? இல்ல எனக்கு புரியல, அவன் என்னன்னா, நீ அவன் கூட போனதுக்கு, இவன் எங்கையோ விழுந்து எந்திரிச்சு வந்திருக்கான். இப்போ நீ என்னென்னா, ஓடுற பைக்ல இருந்து குதிச்சிருப்பேன்னு சொல்ற. க்கும், உங்க ரெண்டு பேர வச்சிக்கிட்டு, இந்த கதைய நான் எப்படி எழுதப் போறேன்னோ தெரியல. இதுல, இந்த வியன் வேற என்னெல்லாம் பண்ணப் போறான்னோ? சரி அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
இம்சிக்குமா?..
Keerthi S
viyan la oru aalu nu bayapadara nila 🤭🤭🤭
r.barani06061994
சூப்பர் சிஸ்டர் next eppavarum
Karthiga p
un appa ku ne bayapadarathu sari nila ,yathuku intha viyanu ku ellam bayapadara 🤦🏻♀
Ammu Sathish
சூப்பர் ❤