தாபம் – 1

⚠️ காப்புரிமை எச்சரிக்கை

என்னுடைய இந்தக் கதை மற்றும் இதில் இடம்பெறும் அனைத்து அத்தியாயங்கள், கதாபாத்திரங்கள், உரையாடல்கள், காட்சிகள் மற்றும் உள்ளடக்கங்கள் அனைத்தும் காப்புரிமை (Copyright) சட்டத்தின்படி முழுமையாக பாதுகாக்கப்பட்டவை.

இந்தக் கதையை முழுமையாகவோ, பகுதியாகவோ நகலெடுக்கவும், காப்பி செய்யவும், மறுபதிப்பு செய்யவும், மாற்றி வெளியிடவும் அல்லது எந்த வடிவிலும் அனுமதியின்றி பயன்படுத்தவும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இதை மீறுபவர்கள் மீது இந்திய காப்புரிமைச் சட்டத்தின்படி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வானெங்கும் தீங்குழப்பாய் பொங்கி வழிவது போல், அந்த இருளில் மின்னல் கீற்றுடன் கலந்த பலத்த இடியோசையின் மத்தியில், வான்மேகங்கள் தன் தீரா தவிப்பை, மழையாய் கொட்டிக் கொண்டிருந்தது.

“ஏய் ருத்ரா? என்னடி பண்ற? மழையைப் பாரு. காரை விட்டு கீழ இறங்காத” என்று தோழிகள் கத்திக் கொண்டிருந்தது, அவளுக்கு கேட்டதா என்று கூட தெரியவில்லை. 

அவர்கள் கூறியதை பொருட்டாக கூட மதிக்காமல், காரை விட்டு இறங்கியிருந்தாள். அவள் வெண் பாதங்கள் நிலத்தில் ஊன்ற, ஒரு நொடி, அந்த இடமே சற்று அதிர்ந்தது. ஆனால், அதை அவள் சற்றும் உணரவில்லை. அடித்து பெய்த மழையின் ஒவ்வொரு துளியும், அவள் மேல் ஊசி இறங்கியது போல், நுழைந்து, அவளை அந்த காருக்குள் போக அறிவுறுத்தியது. ஆனால் அப்போதும் அவள் அசரவில்லை.

உள்ளுக்குள் ஏதோ ஒரு குளிர் பரவ, அவள் கரங்களில் இருந்த மென் முடிகள், ஏனோ, ஒரு பயங்கரத்தை சொல்ல முயற்சித்தது. அதையும், தன் உள்ளங்கைகலால், சரி செய்து விட்டு, சுற்றிப் பார்த்தாள். எங்கும் இருட்டாக மட்டுமே தெரிந்தது. கண்ணுக்கு தெரிந்த வரை, ஆள் நடமாட்டம் அந்த இடத்தில் சுத்தமாக இல்லை. 

“திஸ் பிளேஸ் இஸ் பெர்பக்ட்” என்று அவள் ஆரஞ்சு சுழை உதடுகள் முனுமுனுத்தது. நீண்ட நேர பயணம் செய்ததன் விளைவாக, மெதுவாக தன் இருகரங்களையும் சேர்த்து, சோம்பல் முறித்தாள். 

நீல நிற ஜீன்ஸ், அதற்கு ஏற்றார் போல், ஒரு வெள்ளை நிற டாப் அணிந்திருந்தாள் அந்தப் பாவை. அந்த இருளைப் பார்த்தால், எவ்வளவு பெரிய தைரியசாலி-யும் ஒரு நொடி ஸ்தம்பித்து தான் போவான். ஆனால் அவளோ அதைப்பற்றி சிறு அச்சமும் இல்லாமல், அந்த இருளில் மின்னிய அந்த இயற்கையை, ரசித்துக் கொண்டிருந்தாள்.

“ருத்ரா. கார்-ல ஏறுடி” என்று ஏறக்குறைய கெஞ்சினாள், அவள் தோழி தென்றல்.

தோழியின் கெஞ்சலில், திரும்பி நின்றிருந்தவள் காரின் பக்கம் திரும்புவதற்கும், அந்த மின்னல் கீற்றுகளின் வெளிச்சம் அவள் முகத்தில் விழுவதற்கும் சரியாக இருந்தது.

அந்த இருளிலும், அவள் முகத்தில் தெரிந்த ஒரு பளபளப்பு, அவள் இயற்கையிலேயே பேரழகு என்று சொல்லாமல் சொல்லியது. 

பால் வண்ண நிறத்துடன் போட்டி போட்டு நிற்கும் எழுமிச்சைப் பழ நிறம் அவள். குண்டு கண்களில், அங்கும் இங்கும் உருளும் கருவிழிகள், அதன் நிறத்தோடு தங்க நிறமும் சேர்ந்து மின்னும் அவள் கயல் விழிகள். பார்த்தவுடனே, மயங்கும் ஆண்களுக்கு மத்தியில், அவள் விழிகள் கண்டு நடுங்கும் ஆண்களே அதிகம். பேரிலே இருக்கும், அவள் துணிவு, அவள் உள்ளத்தில் மட்டுமல்ல, அவளின் ஒவ்வொரு அசைவிலும் இருக்கும். 

அழகு, தைரியம், திறமை, நேர்மை, எதற்கும் அவளிடத்தில் பஞ்சமில்லை. ஆனால், சொந்தம் என்றால் மட்டும் அவளுக்கு உயிர். அவளின் ஒரே பலவீனம் அவள் குடும்பம். அந்த குடும்பத்திற்காக, எதை வேண்டுமென்றாலும் செய்வாள். அதுதான், அவளின் கடந்த காலம், மற்றும் எதிர்காலத்தை கேள்விக் குறி ஆக்கி வைத்துள்ளது. 

இவளின் இந்த வரவுக்காகவே காத்து நிற்கும், அந்த அசுர அரசனின், உடலும் ஒரு நொடி அவள் அழகில், மூழ்கி பின், சிலிர்த்து நின்றது.

“வாருங்கள் இளவரசியாரே. வாருங்கள். உங்களுக்கான, தகுந்த வரவேற்பு என் மாளிகையில் காத்துக் கொண்டிருக்கிறது.” என்று, அவள் அழகினை, தன் முன் தெரிந்த வட்ட வடிவ ஒளிப்பிம்பத்தின் வழியாக பார்த்து, இல்லை பருகிக் கொண்டிருந்தவனின் விழிகள் ஏளனமாய் கூறியது. 

அதே நேரம், எங்கு செல்வது? எங்கு இருக்கிறோம்? என்ன செய்யப் போகிறேன்? என்று எதுவுமே தெரியாத ஒரு ஜீவன், மனதினுள் “இளவரசி, உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். என் உயிர் செல்லும் முன், ஒரு நொடியாவது உங்கள் முகத்தில் முழித்து பின் விழி மூட வேண்டும் என்று யாசிக்கிறேன். என்னை மன்னியுங்கள். உங்களை இக்கட்டில் மாட்டிவிட்டதற்காக, இந்த தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று புலம்பியது.

இவளின் வரவிற்காக, எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் இரு ஜீவன்களை பற்றி எதுவும் அறியாத, இவளோ, அந்த எழில் கொஞ்சும், இல்லை, இல்லை. இருள் கொஞ்சும் அந்த இயற்கை வனப்பை ரசித்துக் கொண்டிருந்தாள்.

“நீங்களும் காரை விட்டு இறங்குங்க. பாருங்க. இந்த வியூ எவ்வளவு சூப்பரா இருக்கு-ன்னு” என்று ருத்ரா சிறிதும் பயமின்றி அவர்களைப் பார்த்து கூறினாள்.

“ஏய் லூசு. என்னடி உளறிட்டு இருக்க. இருட்டுல எனக்கு கண்ணே தெரியல. இதுல வியூ சூப்பரா இருக்கா? ஒழுங்கா வண்டியில ஏறு” என்று ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்த, அர்ஜூன் கோவமாக கூறினான். 

“போடா பயந்தாங்கோலி. இதுக்குத்தான் உன்னை வர வேணாம்-னு சொன்னேன்” என்று ருத்ரா கடுப்பாக கூறினாள்.

“வேணாம் ருத்ரா. கடுப்பேத்தாத. ஏற்கனவே இந்த ஏரியால சிக்னல் இல்ல. அது போக, இப்போ கார் ஹெட் லைட்டும் ஒர்க் ஆகல. இந்த பாதை வேற ஒரு மாதிரி குறுக்கும் நெடுக்குமா போயிட்டு இருக்கு. அதான் நான் வண்டியை நிறுத்துனேன். அது போக, காட்டுப்பாதை, மழை-ய பார்த்தத்தான? நடுவில மரம் எதுவும் உடைஞ்சு விழுந்திருந்தா அவ்வளவுத்தான். உனக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுன்னா? அப்புறம் நம்ம வீட்டுல என்னை கொண்ணே போட்டுருவாங்க. ஒழுங்கா வண்டியில ஏறு” என்று அர்ஜூன் தன் பொறுமை-யை கையில் பிடித்துக் கூறினான்.

“ஆமாம்-டி. அர்ஜூன் சொல்றதும் சரிதான். நீ வண்டியில ஏறு” என்று அர்ஜூனின் தங்கை அகல்யா கூறினாள். 

“என்ன அகல் நீ? எப்போ இருந்து உன் அண்ணன் பேச்சை கேட்க ஆரம்பிச்ச?” என்று கிண்டலாக ருத்ரா கேட்டாள்.

“விளையாடாத ருத்ரா. வா வண்டியில ஏறு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று தென்றல் சற்று பயந்துக் கொண்டே கூறினாள். 

“என்ன தென்றல்? நீ எப்பத்தான், பயப்படுறதை நிறுத்தப் போறீயோ?” என்று சலிப்பாக ருத்ரா சொல்லிவிட்டு, “சரி வரேன். உங்க யாருக்கும் இயற்கைய ரசிக்கவே தெரியல. நானாச்சும் ஒரு ரெண்டு செகன்ட் ரசிச்சிட்டு வரேன். அந்த கேமரா-வ கொஞ்சம் கொடு” என்று சாதாரணமாக கேட்டாள்.

இதற்கு மேல், அவளிடம் வாக்குவாதம் செய்தால், இன்னும் நேரம் அதிகமாகத்தான் செய்யும் என்பதை புரிந்துக் கொண்ட, அகல்யா, அவளிடம் கேமராவை நீட்டி 

“இங்கப்பாரு. பைவ் மினிட்ஸ் தான். நீ கேப்சர் பண்ண வேண்டியதை பண்ணிட்டு வண்டியில ஏறு” என்று கண்டிப்பான குரலில் கூறினாள்.

“சரிங்க மகாராணியாரே” என்று ருத்ரா கிண்டலாக சொல்லிவிட்டு, அந்த கேமாரா-வை வாங்கிக் கொண்டு, தன் கண்ணில் படும் காட்சிகளை படமெடுத்துக் கொண்டிருந்தாள்.

“என்ன அகல்யா நீ? அவளுக்குத்தான், மழையைப் பார்த்தாலே பையத்தியம் பிடிச்சிடுமே. அப்புறம் எதுக்கு அவளை அலோ பண்ண?” என்று அர்ஜூன் கோவமாக கேட்டான்.

“ம். அவ என்ன நம்ம கிட்ட பர்மிஷன் கேட்டா, இறங்கிப் போனா? இல்ல நம்ம அலோ பண்ணல அப்படின்னா? அவ நம்ம பேச்சை கேட்பாளா? அவளை யார் நினைச்சாலும் தடுக்க முடியாது அர்ஜூன்” என்று அகல்யா தன் தோழியை பற்றி நன்கு தெரிந்தது போல் கூறினாள்.

“இருந்தாலும். இந்த டைம்-ல அவ மழையில நனைஞ்சா அவ உடம்புக்கு என்னாகும்?” என்று அர்ஜூன் அக்கறையாக கேட்டான்.

“ம் உன் வருங்கால மனைவி மழையில நனையிறது உனக்கு பிடிக்கலன்னா? நீயே இறங்கிப் போயி கூப்டு வா. இல்ல இந்தா குடை. போயி அவளை நனையாம கூப்டு வா” என்று அகல்யா கிண்டலாக கூறினாள்.

இவர்கள் இருவரின் பேச்சை கவனிக்காத தென்றல், அந்த இருளைப் பார்த்து மிக பயந்துப் போயி, மழைக்கு ஒதுங்கிய கோழிக்குஞ்சு போல் அமர்ந்திருந்தாள்.

அதைப்பார்த்த, அர்ஜூனும், அகல்யா-வும் சத்தமாக சிரித்தனர்.

அவர்களின் சத்தத்தில், தன் பய உலகில் இருந்து, இவ்வுலகிற்கு வந்தாள் தென்றல். 

மஞ்சள் வண்ண சுடிதாரில், அந்த பால்வண்ண நிலவுக்கு போட்டியாக இருக்கும் அமைதியின் உருவானவள் இவள். அழகு என்றுப் பார்த்தால் ருத்ரா, தென்றல் இருவரும் பேரழகு தான். ஆனால் குணத்தில், ருத்ரா-விற்கு நேரெதிர் தான் தென்றல். அவள் பெயரைப் போலமே சாந்த சொரூபி. அதட்டிக் கூட பேசத் தெரியாத அப்பாவி பேதை. அச்சத்தில் அவள் கருவிழிகள் அங்கும், இங்கும் நாட்டியம் ஆட, அவள் விழிகளோ அபிநயம் பிடித்தது. அவளைப் பார்த்தவுடன் மயங்கும் ஆடவர்களைப் பார்த்துக் கூட பயம் கொண்டு ஒதுங்கிப் போகும் மங்கை அவள். 

இவர்களின் சிரிப்பில் மேலும் பயந்து, காரோடு ஒன்றி அமர்ந்தாள் தென்றல்.

“ஏய் தென்றல். நீ உண்மையாவே ருத்ரா-வுக்கு பிரண்டா?” என்று கேலியாக கேட்டான் அர்ஜூன்.

அவன் கேள்வியின் அர்த்தம் புரியாமல், பார்த்த தென்றலை “சத்தியமா தென்றல். ருத்ரா உன்னை முதல் முதலா, என் பிரண்ட்-னு எங்க வீட்டுக்கு கூப்டு வந்தப்ப, நீயும் அவளை மாதிரி ஒரு அராத்து-ன்னு தான் நினைச்சேன்” என்று அர்ஜூன் தன் மனதில் இருந்ததை அப்படியே கூறினான்.

“ஏன்?” என்ற அவளின் வார்த்தைகள் கூட மிக மென்மையாகத்தான் வந்தது.

“ம். உனக்கு பேசவே வராது. அவளுக்கு பேசாம இருக்கவே முடியாது. நீ சத்தமா காத்து அடிச்சாலே பயந்து நடுங்குவ. ஆனா, அவ, இடியோட மழை அதுவும் ராத்திரி நேரத்துல வந்தா அவ அதுல நனைய ஆரம்பிச்சிடுவா. உங்க ரெண்டு பேருக்கும் ஒரு விசயத்துலையும் ஒத்துப் போகாது. சொல்லப் போனா ரெண்டு பேரும் நேரெதிர். ஆனா. சின்னப்பிள்ளையில இருந்து, நீ அவளோட பெஸ்ட் பிரண்ட்” என்று அகல்யா விளக்கமாக கூறினாள்.

அதைக்கேட்டு மெல்லமாக சிரித்த தென்றல் இருவரும் முதல் முதலாக பள்ளியில் சந்தித்ததை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள். 

தென்றலுக்கு அப்பா, அம்மா என்று யாரும் கிடையாது. பொள்ளாச்சியில் உள்ள, அநாதை ஆசரமத்தில் ட்ரஸ்டின் உதவியுடன் தான் பள்ளிக்கூடமே படிக்க வந்தாள்.

பத்தாம் வகுப்பில், நல்ல மதிப்பெண் எடுத்த காரணத்தினால், அவளுக்கு மிகப்பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தென்றலுக்கு அதில் பெரிதாக விருப்பமில்லை. மேலும் தனியாக சென்று படிக்க மிக பயம். ஆனால் அவளுடைய ஆசிரம நிர்வாகி தான், வற்புறுத்தி சென்னை-க்கு அனுப்பி வைத்தார்.

அவள் பள்ளிக்குள் நுழையும் போது சுற்றி பயந்து பார்த்துக் கொண்டே செல்வதைப் பார்த்த, அந்தப் பள்ளியின் பிளஸ்டூ மாணவ மாணவிகள், ஒரு பிளஸ் ஒன் மாணவியை அழைத்து, அவள் காதில் ஏதோ ஒன்று சொல்லி அனுப்பி வைத்தனர்.

பிளஸ் ஒன் வகுப்பு எந்தப்பக்கம் என்று கூட கேட்கவே பயந்து நின்றுக்கொண்டிருந்த தென்றல், ஒவ்வொரு வகுப்பறையும் பார்த்துக் கொண்டே நடந்தாள். அப்போது வேண்டுமென்றே அவளை நோக்கி ஓடி வந்தனர் மற்ற மாணவிகள். இவள் அவர்களிடம் இருந்து விலக முயற்சிக்கும் போது, அங்கிருந்த தூணில் இடித்து கீழே விழ சென்றாள்.

சரியாக அந்நேரம், அவள் கைப்பிடித்து உதவினாள் ருத்ரா. பார்த்த உடனே இருவருக்குள்ளும் ஏதோ ஒரு உள்ளுணர்வு. ஏதோ விட்ட குறை, தொட்ட குறை என்பது போல். அந்த நொடியே அவர்களுக்குள் நட்பு பந்தம் படர ஆரம்பித்தது.

“ஏய் பார்த்து” என்று ருத்ரா சொல்ல, “தேங்க்ஸ்” என்று தென்றல் மெலிதாக புன்னகைத்தாள்.

“நீ அழகா சிரிக்கிற. என் பேரு ருத்ரா. உன் பேரு என்ன?” என்று ருத்ரா கேட்டாள்.

“என் பேரு. தென்றல்” என்று அவளும் தன் பெயரைக் கூறினாள்.

அதைக்கேட்டு சிரித்த ருத்ரா “தென்றலா? உனக்கு பொருத்தமாத்தான் பேர் வச்சிருக்காங்க” என்று சொல்லிவிட்டு, சற்று தள்ளி நின்றிருந்த பிளஸ் டூ மாணவிகளைப் பார்த்து முறைத்தாள்.

ஆனால் அவர்களோ, ருத்ரா-வையும் சேர்த்து வம்புக்கு இழுத்தனர்.

ஆனால் அதற்கெல்லாம் அசரும் ஆளா அவள்? விறுவிறுவென தென்றலில் கையைப் பிடித்து, எச்.எம் அறைக்கு இழுத்துச் சென்ற ருத்ரா, அவர்கள் மேல் கம்பிளைன்ட் லெட்டரை கொடுத்துவிட்டே, அவளுடன் சேர்ந்து வகுப்பறைக்கு சென்றாள்.

அப்படி ஆரம்பித்த அவர்களின் நட்பு, இப்போது வரை தொடர்கிறது. இதற்கிடையில் பள்ளி விடுமுறைக்கு தென்றலை கட்டாயப்படுத்தி, அவர்களின் வீட்டிற்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

ருத்ரா-வைப் பொருத்தவரை அனைவரிடமும் நன்றாக பழகும் குணம் கொண்டவள். ஆனால், அவள் தோழி என்று முதன் முதலில் வீட்டுக்கு அழைத்து வந்தது தென்றலைத்தான். ஆரம்பத்தில், அர்ஜூன் நினைத்தது போல் தான், தென்றலைப் பற்றி குடும்பத்தினர் அனைவரும் நினைத்தனர். ஆனால் அவளுடன் பழகிய ஒரு நாளிலேயே, அந்த வீட்டுடன் தென்றலும் ஒன்றிப் போய்விட்டாள்.

அதனால் தென்றலைப் பொறுத்தவரை, ருத்ரா தான், அவளுக்கு எல்லாமே. அவளின் தைரியமே ருத்ராதான். அதை நினைத்துப் பார்த்துக் கொண்டே காரின் வெளியில் இருந்த ருத்ரா-வை பார்த்தாள். 

அப்போதே மற்ற இருவரும் அவளைத் தேடினர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவள் இல்லை.

“ஆமா ருத்ரா எங்க?” என்று அகல்யா-வும், அர்ஜூனும் பார்க்க, தென்றல் காரை விட்டே இறங்கி விட்டாள்.

அவள் பாதம் அந்த தரையில் வீழ்ந்ததும், அவளுக்குள் ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு உணர்வு. 

சுற்றி இருந்த இயற்கை காட்சிகள் அவளுக்குள் ஏதோ ஒரு எச்சரிக்கையை விடுப்பது போல் இருந்தது. சட்டென்று அவள் காதருகே “தேவி, இளவரசியை உடனே இங்கிருந்து அழைத்து செல்லுங்கள். ஆபத்து வந்துக் கொண்டிருக்கிறது” என்ற அசரதீயின் ஒலி, அவள் செவி மடல் வழியே இதயத்தில் துடிப்பாய் ஒலித்தது.

அந்த அசரீதி கூறியதைக்கேட்டு, ஒரு நொடி, அவள் உள்ளமெல்லாம் பதறியது. தன் இருகாதுகளையும் இறுக்க மூடினாள் தென்றல், அந்த மழையின் துளிகளைத்தாண்டி, அவள் உடலில் வியர்வை பூத்தது.

“ருத்ரா” என்று தன்னால் முடிந்த அளவுக்கு தென்றல் சத்தமாக கூப்பிட்டாள்.

தென்றல் இறங்கியதும், அவளைத் தொடர்ந்து, அர்ஜூன் மற்றும் அகல்யா இறங்கினர்.

“இவ இருக்காளே? எப்பவும் இப்படித்தான். சரி நீங்க ரெண்டு பேரும் காருக்குள்ள இருங்க. நான் போயி அவளை கூப்டு வரேன்” என்று அர்ஜூன் கூறினான்.

“இல்ல நானும் வரேன்” என்று தென்றல் வேகமாக கூறினாள்.

“என்ன? நீயா? ஏய் தென்றல் என்னாச்சு உனக்கு? எவ்வளவு இருட்டா இருக்கு. அவளுக்கு ஒன்னும் இருக்காது. இங்கத்தான் பக்கத்துல போட்டோ எடுத்திட்டு இருப்பா.” என்று அர்ஜூன் கையில் வைத்திருந்த குடையை விரித்து அங்கிருந்து செல்ல முயற்சித்தான்.

அகல்யா தென்றலின் கையை பிடிக்க, சரியாக அந்நேரம் அங்கு புயல் காற்று வேகமாக அடிக்க தொடங்கியது. ஏற்கனவே முற்றிலும் இருட்டு. இதில் திடீரென்று வந்த புயலால், அவர்கள் நிற்க கூட முடியாமல் தள்ளாடினர்.

அந்த காற்றின் இடையே வந்த புகை போன்ற ஒரு உருவம் தென்றலின் பின்னே வந்து “நீயும் இங்குத்தான் இருக்கிறாயா தேவி? உன் வருகை இப்போது என் திட்டத்திற்கு முற்றுக்கட்டாக நிற்கிறதே. திரும்பி செல் தேவி” என்று எச்சரிக்கை விடுத்தது. 

ஒரு நொடி தென்றலுக்கு எதுவும் புரியவில்லை. கனவா? இல்லை பிரம்மையா? இல்லை உண்மையா? என்று தன் இரு காதுகளையும் இறுக்க மூடினாள். புழுதிக் காற்றால், அனைவரும் கண்களை மூடியிருந்தனர். ஆனால் அவர்களுக்கே தெரியாமல். அவர்களை சுற்றி ஒரு நெருப்பு வளையம் சூழ்ந்திருந்தது. 

மூவராலும் ஒரு அடிகூட வேறுபக்கம் எடுத்து வைக்க முடியவில்லை.

“என்ன திடீர்னு இப்படி காத்தடிக்குது? ருத்ரா” என்று அர்ஜூன் தன்னால் முடிந்த மட்டும் கத்தினான்.

ருத்ரா என்ற பெயரில் தன் காதுகளில் இருந்து கரத்தை விலக்கிய, தென்றல் அப்போதே கண்களை விரித்துப் பார்த்தாள். 

அவளுக்கு எதிரே கையில் கேமராவுடன், ருத்ரா எதையோ மும்முரமாக படம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

அவளை சுற்றி இருந்த அவள் சக தோழிகள். “ருத்ரா.. எனக்கு காட்டு” என்று அவள் எடுத்த புகைப்படத்தை காமிக்க சொல்லி சூழ்ந்து நின்றிருந்தனர்.

அப்போதே அவள் இருந்த அறையை சுற்றிப் பார்த்தாள். அது அவர்கள் கல்லூரி விடுதி. சற்று முன் தெரிந்த காட்சிகள் அனைத்தும் கனவா? இல்லையே அனைத்தும் அப்படியே உண்மையாக நடந்தது போல் அல்லவா இருந்தது” என்று யோசனையாக தலையைப் பிடித்தாள் தென்றல்.

“நோ. நோ, நான் எடுத்த போட்டோ-வ முதல்ல என் தென்றல் கிட்ட தான் காமிப்பேன்” என்று தன் கேமரா-வை தூக்கிக் கொண்டு ருத்ரா தென்றலின் அருகில் வந்தமர்ந்தாள்.

“என்னாச்சிடி? வழக்கமா எனக்கு முன்னாடியே எந்திச்சிடுவ. இன்னிக்கு என்ன இவ்வளவு நேரம் தூங்குற? சரி. இங்கப்பாரு. யெஸ்டர்டே நைட் எடுத்த போட்டோஸ்” என்று அவள் எடுத்த புகைப்படங்களை எல்லாம் காமித்தாள்.

ஆனால் தென்றலின் மனமோ அதில் எந்தவொரு ஆர்வத்தையும் காமிக்காமல், ருத்ரா-வை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.

“ருத்ரா உனக்கு ஒன்னும் இல்லல்ல” என்று தென்றல் சற்று பதட்டமாக கேட்டாள்.

அப்போதே தென்றல் எதற்கோ பயந்திருக்கிறாள் என்பது ருத்ரா-விற்கு புரிந்தது.

“ஏய். எனக்கு என்ன? எதுவும் கனவு கண்டீயா?” என்று ருத்ரா நேரடியாகவே கேட்டாள்.

“இல்ல. அது. ஆமா..” என்று தென்றல் திணற, சத்தமாக சிரித்த ருத்ரா “என்ன? இன்னிக்கு நீ என்னை காப்பாத்துனீயா? இல்ல அந்த அரக்கன் என்னை கடிச்சு தின்னுட்டானா?” என்று கிண்டலாக கேட்டாள்.

ஆம், இந்தமாதிரி கனவு தென்றல் காண்பது புதிதல்ல. என்று, இருவரும் நட்பு என்ற பந்தத்தில் இணைந்தார்களோ? அந்த நாளில் இருந்து, இந்த கனவுகள் தொடர்கதை தான்.

ஆரம்பத்தில் ருத்ரா கூட, அவளுக்கு ஆறுதல் கூறினாள். ஆனால் அடிக்கடி நிகழ்வதால், அவள் இப்போது கிண்டல் செய்யும் நிலைக்கு வந்துவிட்டாள். அது போக ருத்ரா-விற்கு இதன் மீதெல்லாம் சிறிதும் நம்பிக்கை கிடையாது. ருத்ரா-வை பொறுத்தவரை தென்றல், அம்மா, அப்பா இல்லாமல் தனியாகவே வளர்ந்ததால், அவளுக்குள் ஒரு பாதுகாப்பின்மை உள்ளது. அதனால் தான் இவ்வாறெல்லாம் கனவு காண்கிறாள் என்பது தான். அதனால் அவள் மனதை மாற்றும் பொருட்டு 

“சரி தென்றல், உன் கனவுல இந்த போட்டோஸ் எதுவும் வந்திச்சான்னு பார்த்து சொல்லி” என்று ருத்ரா சீரியஸாக கேட்பது போல் அவள் பேச்சை மாற்ற முயற்சித்தாள்.

அதைப் புரிந்துக் கொண்ட தென்றலும் சிரித்துக் கொண்டே அவள் காட்டிய புகைப்படத்தை பார்த்தாள். ஒவ்வொரு புகைப்படமாக, ருத்ரா காமிக்க, ஒரு புகைப்படத்தைப் பார்த்து தென்றல் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டாள். அவள் உடல் முழுவதும் ஏதோ ஒரு அச்சம் பரவி வியர்க்க ஆரம்பித்தது. 

(தென்றலின் அதிர்ச்சிக்கு என்ன காரணம்? ருத்ரா-வை சுற்றி நடக்கப் போவது என்ன? அது வெறும் கனவா? இல்ல பூர்வ ஜென்ம பந்தமா? என்ற கேள்விக்கான பதிலை அடுத்தடுத்த அத்தியாயத்தில் காண்போம். அதற்கு முன் இந்த கதையைப் பற்றிய உங்களுடைய கருத்தை கூறுங்கள்.)

சாபம் தீருமா?

Author:    1 Sarmi SS
Comments   9

*** தாபம் – 1 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com