“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்”
பரபரப்பான சாலைகளுக்கு, எதிரே, அந்த பரபரப்புக்குக்கு முழு காரணமும் தான் தான் என்று சொல்லும் அளவுக்கு, அந்த கட்டிடம் நிமிர்ந்து நின்றது. எந்தப் பக்கம் திரும்பினாலும், கருப்பு கோட் சகிதமாய் தான் அத்தனைப் பேரும் சுற்றிக் கொண்டிருந்தனர். இடை இடையே காக்கிச் சட்டைகளையும் அந்த இடத்தில் பார்க்க முடிந்தது. வெளியில் பெரிய எழுத்தில் சென்னை உயர் நீதி மன்றம் என்று எழுதப்பட்டிருந்தது.
போலீஸ் ஜீப்புகள் நிறுத்தப்படும் இடத்தில், ஒரு கல்லூரி பேருந்து நின்றிருக்க, அதில் இருந்து, மெல்ல இறங்கினாள் அவள். பூமிக்கு கூட வலித்து விடுமோ என்று பயந்துத்தான், காலடி எடுத்து வைத்தாள். அவள் பெயர் தேனிசைச் செல்வி.
அவளின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தது போல், அங்கே நீண்ட காலமாய் உயர்ந்து நின்றிருந்த அந்த பூவரச மரம், தன் பூக்களை அவள் மீது கொட்டி, அவளை வரவேற்றது. அதில் அவள் தன்னை மறந்து, அந்த உயர்ந்த மரத்தைப் பார்க்க, அவள் கன்னத்தில், ஒரு துளி நீர் சிந்தியது.
அதில் இவளுக்குள் மெல்லிய புன்னகைப் பூக்க, அப்படியே சில நொடிகள், அந்த மரத்தை அவள் பார்க்க, “ஹேய் தேனு” என்ற தோழியின் உழுப்பலில், சட்டென்று இவ்வுலகம் வந்தாள் அவள்.
“என்னடி?” என்று அவள் கேட்க, “என்னவா? அங்கப் பாரு. எல்லாரும் நம்மள விட்டுட்டு போயிட்டாங்க. நீ இப்படி ஆடி அசைஞ்சு வந்தன்னா, அப்புறம் அடுத்த மாசம் தான், இந்த இடத்த விட்டு காலி பண்ணுவோம்” என்றவள் சொன்னதோடு இல்லாது அவளை அப்படியே அங்கிருந்து கூட்டிச் சென்றாள்.
அவர்கள் அனைவருமே சட்டக் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே நின்றிருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு என்றால், இவளுக்கோ, இப்படி ஒரு மாணவியாய் நிற்பதே பெரிய கனவுத்தான்.
படித்து டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்கு தகுந்தாற்போல், மதிப்பெண்ணும் எடுத்திருந்தாள். ஆனால் ஆசைப்பட்டால் மட்டுமே போதாதே. அதற்கு சில பிடிவாதமும் இருக்க வேண்டுமே.
அவர்கள் வீட்டைப் பொறுத்தவரை, பெண் பிள்ளைக்கு படிப்பு எதற்கு என்று சிந்திக்கும் ரகம்.
வசதிக்கெல்லாம் வீட்டில் குறை இல்லைத்தான். ஆனாலும் அந்த கால சட்டம் பேசுபவர்கள். கல்லூரிக்கே அனுப்ப மறுத்தவர்கள், எப்படியோ அவளை, இந்த கல்லூரியில் படிக்க வைத்ததே பெரிய விஷயம் தான்.
அங்கிருந்து திரும்பி வரும் போது, அவள் தோழியிடம், “நம்மளும் அந்த அக்கா மாதிரி பெரிய லாயர் ஆகனும்” என்றாள்.
“ம் முதல்ல இத படிச்சு முடிக்கிறோமான்னு பாப்போம். அப்புறமா அவங்கள மாதிரி ஆகுறோம்மா? இல்லையான்னு பாக்கலாம்” என்றாள் வெண்ணிலா.
“ஏண்டி?” என்று தேனிசை கேட்க, “பின்ன என்ன! நம்ம வீட்டைப் பத்தி உனக்கு தெரியாதா? எப்படியும், என்னை படிக்க வைக்குறதே, உன் அண்ணன் இஞ்சினியர் படிக்கிறதாலத்தான். எப்படியும், நான் படிச்சு முடிக்கிறதுக்குள்ள, உன் அண்ணனுக்கு கட்டிக் கொடுத்து அனுப்பி வெச்சிடுவாங்க. என்னமோ, நானும், நீ சேர்ந்தீயேன்னு, வந்து சேர்ந்திருக்கேன்” என்றாள் அவளின் அத்தை மகள் மற்றும் தோழி வெண்ணிலா.
“உண்மையாவே உனக்கு என் அண்ணாவ பிடிச்சிருக்கா என்ன?” என்று தேனிசை கேட்க, “பிடிக்கலன்னு சொன்னா மட்டும் விட்டுடவா போறாங்க?” என்று சொல்லிய வெண்ணிலாவுக்கு, உலகம் புரிந்ததோ இல்லையோ, ஆனால் அவர்கள் வீட்டைப் பற்றி நன்றாக தெரியும். அதனாலையே அவளும், அதை மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.
தேனிசைக்குமே இதெல்லாம் தெரியும்த்தான். ஆனாலும், ஏனோ, அதை ஏற்கத்தான் முடியவில்லை.
வெண்ணிலா அவள் குடும்பம் பற்றி தெரிந்து ஆசையை வளர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் தேனிசையோ, எல்லாம் தெரிந்தும், பல லட்சியங்களை மனதிற்குள் வளர்த்துக் கொண்டிருந்தாள்.
“இல்ல இல்ல. எப்படின்னாலும் நான் நல்லா படிச்சு, ஒரு பெரிய லாயர் ஆவேன்” என்று தனக்குள் அழுத்தி சொல்லியப்படி வீட்டுக்கு வந்தாள்.
அவள் உள்ளே நுழையும் போதே, வீட்டில் நிறைய பேர் அமர்ந்திருந்தனர். அவளோ அவர்கள் எல்லாம் யார் என்று பார்க்கும் போதே, “வந்துட்டியா?” என்ற அவளின் அம்மா மலர்குழலி அவள் கையைப் பிடித்தார்.
“ம்மா இவங்களாம்” என்று தேனிசை கேக்கும் போதே, “மொத உள்ள வா” என்று அழைத்துச் சென்றவர், அவளுக்கு சேலை கட்டிவிட்டு, பூ வைத்து அவளை அந்த சபையில் அமர வைத்திருந்தார்.
அவள் என்ன என்று உணரும் முன்பே, “எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. பொண்னுக்கு நீங்க என்னப் பண்ணனும்னு நினைக்கிறீங்களோ அத பண்ணுங்க. எங்களுக்கு எந்த கட்டாயமும் இல்ல” என்றனர்
அவளை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அனைவரும் சென்றதும், அவளைப் பார்த்த அவள் அம்மா, “ஹேய் என்னடி? இன்னும் அந்த பேக்க கூட எடுத்து வைக்கலையா? இப்படி இருந்தன்னா, போற வீட்டுல எங்கள பத்தி என்ன நெனப்பாங்க. இனியும், அந்த புக்க தூக்கிட்டு திரியாம, என் கூட வந்து சமையல் கத்துக்கோ” என்றார்.
“ம்மா. இப்போ எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம்” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே, “அவெள்ள படிக்க அனுப்புறப்பவே என்ன சொல்லி அனுப்புனேன்? நான் சொல்ற பையன்ன கட்டிப்பேன்னு சொன்னாத்தான? இப்போ என்னத்துக்கு இப்படி நிக்குறா” என்று கோவமாய் கேட்டார் அவளின் அப்பா வேந்தன்.
“ஆ..ங் இல்லப்பா” என்றவளுக்கு அவரை எதிர்த்து எல்லாம் பேசி பழக்கமே கிடையாது. அதற்குள், அவளின் அம்மா மலர் தான், “அட என்னங்க? திடீர்னு கல்யாணம்னு சொன்னதும், அவ பயந்திருப்பா. அதெல்லாம் உங்க பேச்ச மீறி எதுவும் பண்ண மாட்டா” என்றார்.
“இந்த கல்யாணம் மட்டும் நடக்கலன்னா, அடுத்து நான் என்னப் பண்ணுவேன்னு தெரியாது” என்று மீசையை நீவி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும், “என்னடி நீ? உனக்கு படிக்கனும்னுத்தேன்ன ஆச. கல்யாணம் கட்டிக்கிட்டு போயி படி. மாப்ள ரொம்ப தங்கமானவராம். அதெல்லாம் அவெர்ட்ட சொன்னா கேட்டுப்பாரு. அதுக்குன்னு மூஞ்ச இப்படி வெச்சிட்டு இருக்காத” என்றவர் ஏதேதோ சொல்ல, இவளுக்கோ என்ன செய்ய என்றே தெரியவில்லை.
இரவெல்லாம் ஏதேதோ யோசித்தவளுக்கு, அவள் குடும்பத்திடம் எதிர்த்து பேச தைரியம் எல்லாம் வரவில்லை. அதனால் அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை சந்தித்து பேச முடிவு செய்தாள். அடுத்த நாள் அவள் தோழி வெண்ணிலாவின் உதவியுடன், அவள் அப்பா மொபைலில் இருந்து, மாப்பிள்ளையின் நம்பரை வாங்கியிருந்தாள். நீண்ட நேர தயக்கத்துக்குப் பின், அந்த நம்பருக்கு கால் செய்தாள்.
அழைப்பு ஏற்றதும், “ஹலோ” என்ற ஆடவனின் குரல் கேட்க, ஒரு நொடி அவள் மனம் தயங்கியது. ஆனால் அடுத்த நொடியே சற்று தன்னை தேற்றி, “ஹலோ. நான் தேனிசைசெல்வி பேசுறேன்” என்றாள்.
அந்தப் பக்கம் ஒரு நொடி அமைதிக்குப் பின், “ம் சொல்லுங்க” என்று அவன் சொல்ல, “அது வந்து நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்” என்றாள்.
“ம் பேசுங்க. இப்போ நான் தனியாத்தான் இருக்கேன்” என்று அவன் சொல்ல. “ஆ..ங் இல்ல இல்ல. அது உங்கள மீட் பண்ணி பேசனும்” என்றாள்.
அந்தப் பக்கம் இருந்தவனோ, “ம் பேசலாமே. நான் வேணும்னா உங்க வீட்டுக்கு கெளம்பி வரவா?” என்று கேட்க, “ஐயோ! அதெல்லாம் வேண்டாம்ங்க. பக்கத்துல இருக்கிற கோவிலுக்கு நாளைக்கு வர முடியுமா?” என்று கேட்டாள்.
“கோவிலுக்கா?” என்று ஒரு நொடி யோசித்தவன் பின், “கோவில் பக்கத்துல இருக்கிற காபி ஷாப்ல மீட் பண்ணுவோம்மா?” என்றான்.
“காபி ஷாப்பா?” என்று அவள் தயங்கினாலும், இப்போதைக்கு அவனிடம் பேச வேண்டுமே அதனால், “ம்” என்று தலையாட்டினாள். உடனே அவனும், “சரி நாளைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாம். எனிவேய்ஸ் உங்க வாய்ஸ் செம்ம கியூட்டா இருக்கு” என்று சொல்லிவிட்டே கால்லை கட் செய்தான்.
இங்கே இவளுக்குத்தான் அவனின் வார்த்தை, சிறு அச்சத்தை கொடுத்தது. அவன் தான் சொல்ல வருவதை புரிந்துக் கொள்வானா? என்ற பலத்த யோசனையோடே, கட்டிலில் சென்று படுத்தாள்.
அடுத்த நாள் மாலை, வெண்ணிலாவுடன், தேனிசை அந்த காபிஷாப்பிற்கு வந்திருக்க, சட்டென்று அவள் முன் வந்து நின்றவன், “ஹாய் ஐயம் இளமதிபிரியன்” என்று கையை நீட்டினான்.
அதில் அவள் நிமிர்ந்துப் பார்க்க, அலை அலையான கேசம், அழகான முகம், ஆண்மகனுக்கே உண்டான கம்பீரத்துடன் அவன் இருந்தான். அவனை பிடிக்கவில்லை என்று சட்டென்று சொல்ல முடியாத ஒரு தோற்றம் தான். ஆனால் அவளுக்கோ அதெல்லாம் பதியவில்லை.
“நான் இங்க வந்தது” என்று அவள் ஏதோ சொல்ல வர, “என்கிட்ட தனியா பேசனும்னுதான சொன்னீங்க” என்றான்.
“ம்” என்று அவள் தலையாட்ட, “அப்போ இவங்க” என்று வெண்ணிலாவைப் பார்த்து அவன் கை நீட்ட, “என் ப்ரண்ட்” என்றாள். “அப்போ நானும் என் ப்ரண்ட்ஸ கூட்டிட்டு வரட்டுமா” என்று கேட்டான்.
அதில் தேனிசை, வெண்ணிலாவைப் பார்க்க, “சரி நான் அந்தப் பக்கம் இருக்கேன். நீ பேசிட்டு வா” என்றப்படி கிளம்பினாள். செல்லும் போது அவள் காதோரம் குனிந்து, “சும்மா சொல்லக் கூடாது. அண்ணா செம்ம ஸ்டைலா சூப்பரா இருக்காரு” என்று சொல்லிவிட்டே சென்றாள்.
அதில் தேனிசை முறைக்க, இங்கே இவனோ, “அப்புறம் என்ன சாப்பிடுறீங்க” என்று கேட்டப்படி, அவனே இருவருக்கும் சேர்த்து ஆர்டர் செய்தான்.
“இல்ல வேண்டாம்” என்று அவள் சொல்லும் முன்னே, “சரி சொல்லுங்க என்ன பேசனும்” என்று சொல்ல, அதில் அவளோ சிறு தயக்கத்துக்குப் பின், “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்றாள்.
“பாடர்ன்?” என்று அவன் கேட்க, “அது வந்து எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். எனக்கு நிறையா படிக்கனும். படிச்சு பெரிய வேலைக்கு போகனும்” என்று கூறினாள்.
“சரி. இதெல்லாம் என்கிட்ட எதுக்கு சொல்றீங்க? இதுல நான் என்ன பண்றது?” என்று அவன் கேட்க, இப்போது அவளோ, “அது வந்து நீங்க என்னைப் பிடிக்கலன்னு சொல்லனும்” என்றாள்.
அதைக் கேட்டவனுக்கு சட்டென்று புரையேற, அவளோ அவனுக்கு குடிக்க தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்.
அதை வாங்கி குடித்தவன், “எதுவும் ப்ராங் பண்றீங்களா?” என்று கேட்க, “ஐயோ இல்லைங்க. உண்மையாவே எனக்கு இப்ப இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம். எங்க வீட்டுல என்னால பேச முடியாது. சோ ப்ளீஸ் நீங்க வேண்டாம்னு சொல்லிடுங்க” என்று கெஞ்சலாய் கேட்டாள்.
அதில் அவளையே சில நொடிகள் பார்த்தவன், பின், “சரி ஒகே. சொல்லிடுறேன்” என்றப்படி அங்கிருந்து எழுந்து சென்றான்.
அவளுக்கு நம்பவே முடியவில்லை. ஆனாலும் அத்தனை நிம்மதியாய் இருந்தது. அந்த சந்தோஷத்தோடே, அவள் வீட்டுக்கு செல்ல, அங்கே அவளின் அம்மாவோ, “அடுத்த முகூர்த்தத்துலையே நிச்சயத்த வெச்சிக்க சொல்லிட்டாங்களாம். உன் அப்பாவ கையிலையே பிடிக்க முடியல” என்று சொல்லிவிட்டு சென்றார்.
“என்ன?” என்றவள் மீண்டும் அவசரமாய் இளமதிக்கு கால் செய்ய முயற்சிக்க, அவன் எடுக்கவில்லை. அவள் ஒன்று நினைக்க, ஆனால் எல்லாம் அவளுக்கு எதிராக நடந்து முடிய, இதோ அடுத்த நாள் இருவருக்கும் நிச்சயதார்த்தம். இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம் என்று தாம்பூலதட்டுகள் மாற்றப்பட்டிருந்தது.
அவளின் அருகில் நின்று, அவள் விரலைப் பிடித்திருந்த இளமதியை முடிந்த மட்டும் முறைத்தாள். ஆனால் அவனோ அதை சற்றும் கண்டுக் கொள்ளாது, அவள் முன் மண்டியிட்டு அவள் கையில் அதை போட்டுவிட்டான்.
அருகில் நின்றிருந்த வெண்ணிலாவோ, “வாவ் அண்ணா செம்ம ரொமாண்டிக் போல” என்று சொல்ல, அதற்கும் அவளை முறைத்தாள். அதன் பின்னான நாட்கள், இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
அப்படியான ஒரு நாளில், கல்லூரியில் அமர்ந்திருந்த தேனிசையின் மொபைலுக்கு இளமதியிடம் இருந்து அழைப்பு வந்தது. கோவமாக கட் செய்ய நினைத்தவள், பின் அட்டண்ட் செய்து, “எனக்கு எதுக்கு கால் பண்றீங்க” என்று கேட்க வந்தாள்.
அதற்குள் அவனோ, “காலேஜூக்கு வெளிய வறீயா? இல்ல நான் உள்ள வரட்டுமா?” என்று கேட்டான். அதில் பதறியவள், அடுத்த நொடி வேகமாய் வெளியில் சென்றுப் பார்க்க, அவனோ, கையில் கல்யாண பத்திரிக்கையுடன் நின்றிருந்தான்.
அவனைப் பார்த்ததும் இவளுக்கு அத்தனைக் கோவம் வந்தது. ஆனால் அவனோ இவளைப் பார்த்ததும், “ஹாய் இசை? எப்படி இருக்க?” என்று கேட்டு கண்ணடித்தான்.
அதில் அவள், “ஏன் இப்படி பண்ணீங்க?” என்று கேட்க, “எப்படி பண்ணேன்?” என்று அவன் திருப்பி கேட்க, “உங்கள பிடிக்கலன்னு சொன்ன சொன்னேன் தான” என்று கேட்டாள்.
“பட் எனக்கு பிடிச்சிருக்கே. அப்புறம் எப்படி பொய் சொல்ல முடியும்” என்று அவன் சாதாரணமாக சொல்ல, “ச்.. உங்களுக்கு பிடிச்சா போதும்மா?” என்று கேட்டாள்.
“ம் போதாதுத்தான். அதான் உனக்கும் பிடிச்சிருக்கான்னு கேக்கத்தான் வந்தேன். நம்ம வெட்டிங் கார்ட் எப்படி இருக்கு?” என்று அவளிடம் நீட்டினான்.
அதில் கோவமாய் அதை கிழித்து எறிந்தவள், “இந்த கல்யாணத்த நிறுத்திடுங்க” என்றாள்.
அதில் அவனோ இப்போதும் புன்னகை மாறாது, “இப்பவும் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. bye இசை. சீக்கிரமே பர்ஸ்ட் நைட்ல பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவனுடைய காரை எடுத்துக் கொண்டு சென்றிருந்தான் இளமதி. செல்லும் அவனைப் பார்த்து இவளால் முறைக்க மட்டுமே முடிந்தது.
இதோ விடிந்தால் கல்யாணம். ஒட்டு மொத்த சொந்தமும் அவர்கள் வீட்டில் தான் இருந்தனர். ஆனால் இதுவரை ஒருவர் கூட, அவளுக்கு மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா? இல்லையா? இந்த திருமணம் செய்துக் கொள்ள விருப்பமா? என்று கேட்டிருக்கவில்லை.
அதை நினைத்துப் பார்த்தவளுக்கு ஒரு வித விரக்தி உருவாகியது. அவள் அப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஐயர் மணமேடைக்கு பெண்ணை அழைத்து வர சொல்ல, மாப்பிள்ளை வீட்டு உறவுகள், அவளை அழைத்து சென்று அவனின் அருகில் அமர வைத்தனர்.
அவள் அவனை நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை. அதில் அவள் காதோரம் குனிந்தவனோ, “என்ன? பர்ஸ்ட் நைட்லத்தான் என்னை நிமிர்ந்துப் பாக்கனும்னு எதுவும் விரதமா?” என்று கிண்டலாய் கேட்டான்.
அதில் பட்டென்று நிமிர்ந்து அவனை அவள் பார்க்க, அவனோ, அவளைப் பார்த்தப்படியே, அந்த திருமாங்கல்யத்தை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான்.
பின் அவளை உரிமையாய் தொட்டு அவள் நெற்றியில் குங்குமத்தை வைக்க, அவள் கண்கள் கலங்கியது. அதையும் கூட சுற்றி இருந்தவர்கள், அவள் பிறந்த வீட்டை விட்டு செல்வதால் அழுகிறாள் என்று அவர்களாகவே முடிவு செய்துவிட்டனர்.
அடுத்து அடுத்து என்று, அவளை நிற்க கூட விடாது, இதோ, முதலிரவு அறைக்கும் அனுப்பியிருந்தனர். அவள் நினைத்த எதுவுமே நடக்கவில்லை. அதில் அவள் சோர்ந்துப் போய் கட்டிலில் அமர, அவள் கன்னத்தில் மெல்லமாய் முத்தமிட்டான் இளமதிப்பிரியன்.
அதில் பட்டென்று அவள் விலகி எழப் போக, “ஹேய் ரிலாக்ஸ் நான் தான்” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்ல, அவளோ, அவனை முறைத்தாள்.
“என்ன? பர்ஸ்ட் நைட் டெகரேசன் எல்லாம் ஒகேவா?” என்று கேட்டவனின் விரல்கள், அவள் விரலைப் பிடிக்கப் போக, சட்டென்று அவன் கையை தட்டிவிட்டாள்.
அதி அவன் அவளைப் பார்க்க, “ப்ளீஸ், எனக்கு இதெல்லாம் பிடிக்கல. என்னை கொஞ்சம் தனியா” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே, அவளை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டவன், அதன் பின் அவளை பேசவிடாது, அந்த இரவுப்பொழுதை அவனுக்கு சொந்தமாக்கிக் கொண்டான்.
அதிகாலையில் அவள் எழும் போது, அவனோ, எதுவுமே தெரியாத சிறுவன் போல் உறங்கிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தவளுக்கு, இரவு நடந்தது எல்லாம் சிறு கோவத்தை கொடுத்தாலும், கணவன் என்ற எண்னம் நினைவுக்கு வர அமைதியாய் எழுந்து குளியலறைக்கு சென்றாள்.
அவள் குளித்து முடித்து வெளியில் வரும் போது, அவள் மீது ரோஜாவை தூக்கி வீசியவன். “குளிக்கப் போறன்னா, என்னையும் எழுப்பியிருக்கலாம்தான? நானும் கம்பேனி கொடுத்திருப்பேன் தான” என்று சொல்லி அவளிடம் இருந்து ஒரு அடியை வாங்கிக் கொண்டான்.
“என்னடி அடிக்கிற?” என்று அவன் கேட்க, “போயிடுங்க” என்று சொல்லியவள், படுக்கையை சரி செய்ய, அவனோ, “நான் ஹெல்ப் பண்ணவா” என்று சீண்டலாய் கேட்டான்.
அதில் அவள் அவனை முறைக்க, அவனோ அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு குளியலறைக்குள் செறிருந்தான்.
இப்படியாக அடுத்தடுத்து ஒரு மாதம் ஓடியிருக்க, இதுத்தான் வாழ்க்கை என்று அவள் ஏற்றுக் கொண்டு வாழ நினைக்கும் போதே, இளமதியின் பாட்டி வேதவள்ளி, “கல்யாணத்துக்கப்புறம் படிக்க அனுப்புறதெல்லாம் நம்ம குடும்பத்துல கெடையாது. அதனால உன் மருமகள ஒழுங்கா, புருஷனுக்கு சமைச்சி போட்டுட்டு வீட்டுல உக்கார சொல்லு” என்றார்.
அவரின் வார்த்தையில், இப்போது தேனிசை வேகமாய், அருகில் நின்றிருந்த இளமதியைப் பார்த்தாள். ஆனால் அவனோ, “சாம்பார் கொஞ்சம் ஊத்து இசை” என்றான்.
அவனின் வார்த்தையில் இவளுக்கோ கோவம் எட்டிப் பார்க்க, அவனோ, “நைட் வர்றப்ப, மல்லிப்பூ வாங்கிட்டு வரேன். ரெடியா இரு” என்று சொல்லிவிட்டு அலுவலகம் சென்றிருந்தான்.
அறைக்கு வந்தவளுக்கோ அத்தனைக் கோவம் வந்தது. “வீட்டுக்கு வரட்டும் அப்போ அவர்ட்ட பேசிக்கிறேன்” என்று திட்டிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவனோ, வழக்கம் போல் அவளை பேசவிடாது அவளை மொத்தமாய் ஆக்கிரமித்துக் கொள்ள, அவளால் அந்த ஒரு வாரமும் அவனிடம் பேச முடியாமல் போனது.
அவள் வாழ்க்கை மொத்தமுமே, ஏதோ அடுத்தவர் விருப்பத்தில் நகர்வது போல் தோன்ற, அவளுக்கே அவள் மீது அத்தனை வெறுப்பு வந்தது. அம்மா, அப்பாவில் ஆரம்பித்து இப்போது கணவர் வரை யாருமே, அவளுக்கான விருப்பத்தை நிறைவேத்த அனுமதிக்கவில்லை.
ஒரு வித எரிச்சல் தோன்ற, அடுத்த நாள் கல்லூரிக்கு கிளம்பினாள்.
அதைப் பார்த்த இளமதியின் பாட்டி கோவமாய், “நீ படிக்க எல்லாம் போக கூடாது. ஹேய் அரசி. உன் மருகமளுக்கு புரிய வை. அவ இந்த வீட்ட தாண்டிப் போனான்னா அடுத்து வீட்டுக்குள்ளையே வரக் கூடாது” என்றார்.
அவளோ அதைக் கண்டுக் கொள்ளாது அவள் அத்தையைப் பார்த்து, “நான் காலேஜ் போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றாள்.
அவள் திரும்பி வீட்டுக்கு வரும் போதே, இளமதியிடம், அவனின் பாட்டி, ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவனோ வழக்கம் போல் எதுவும் சொல்லாது அறைக்கு வந்தான்.
அவள் கட்டிலில் அழுதுக் கொண்டிருந்தாள். அவனோ அதைக் கண்டுக்கொள்ளாது குளியலறைக்கு சென்றான். அவளுக்கு கோவமாய் வந்தது.
அதன் பின் அன்றிரவு, அவன் வழக்கம் போல் அவளை அணைக்க, பட்டென்று அவன் கன்னத்தில் அடித்திருந்தாள். அதில் அவன் அதிர்ந்து அவளைப் பார்க்க, “எனக்கு பிடிக்கலன்னு சொன்னா புரியாதா?” என்று கோவமாய் சொல்லிவிட்டு மொட்டை மாடிக்கு சென்றாள் தேனிசை.
சில பல நிமிடம் அப்படியே அவள் நின்றிருக்க, ஏதோ நிழல் அசைவு தெரிந்து அவள் திரும்ப அங்கே ஒரு கேக் உடன் நின்றிருந்தான் இளமதிப்பிரியன். அதில் அவள் குழப்பமாய் அவனைப் பார்க்க, அவனோ அதே புன்னகையுடன், “ஹாப்பி இண்டிபெண்டன்ஸ் டே மை ஒயிப்” என்றான்.
அதில் அவள் அவனை முறைக்க, அதில் சிரித்தவன், “இப்பத்தான் உனக்கான டிசிசன்ன நீ எடுத்திருக்க. ஈவன், நீ என்னப் பண்ணனும்னு நீ தான் டிசைட் பண்ணனும். எங்கம்மான்னு இல்ல உங்கம்மா சொன்னாக் கூட, உனக்கு பிடிக்காத விஷயத்த செய்யனும்னு அவசியமே கிடையாது. ஈவன் எனக்கு உன்ன பாத்த உடனே பிடிச்சிருந்திச்சு. அதனாலத்தான் உனக்கு பிடிக்கலன்னு நீ சொன்னப்ப கூட நான் இந்த கல்யாணத்த பண்ணேன். ஐ நோ, உனக்கு என்னை பிடிக்கலன்னு. பட் உனக்கு என்னைப் பிடிக்கலன்னா, அதுக்கான ஸ்டெப்ப நீ தான் எடுத்து வைச்சிருக்கனும். பட் நீ அத பண்ணல. உனக்கானத நீயே பண்ணாதப்ப, உன்னை சுத்தி இருக்கிறவங்க பண்ணனும்னு நினைக்கிறது என்ன நியாயம்?” என்று கேட்டான் இளமதிப்பிரியன்.
அதில் அவள் அவனைப் பார்க்க, “இங்கப்பாரு இசை. நான் ஒன்னும் உன்னை மாதிரி தியாகி எல்லாம் கிடையாது. என் சந்தோஷத்த விட்டுக் கொடுத்து, நல்லவன்னு பேர் எடுக்கிறதுக்கு. அதே மாதிரி நீயும். உனக்கு என்ன வேணுமோ? அத யார் தடுத்தாலும் செய்யனும். ஏன்னா எல்லாருக்கும் தடங்கல் ஏதோ விதத்துல வந்துட்டேத்தான் இருக்கும். அதையெல்லாம் பாத்து நின்னுட்டே இருந்தா நின்னுட்டே இருக்கனும். சோ ப்ரீடம்ன்றது யாரும் யாருக்கும் கொடுக்கிறது கிடையாது. என்னாலையும் உனக்கு கொடுக்க முடியாது. ஏன்னா, உன் ப்ரீடம் என்கிட்ட கிடையாது. பட் கண்டிப்பா என் லவ்வ உனக்கு கொடுப்பேன். என்னால முடிஞ்சா, மேபி உனக்கு சப்போர்டா உன் பக்கத்துல நிப்பேன் அவ்வளவுத்தான்” என்றான்.
அப்போதுத்தான் அவளுக்கு ஒரு விஷயம் தெளிவாய் புரிந்தது. இதுவரை அவளுக்காக, அவள் எதுவுமே செய்திருக்கவில்லை. அவளுக்காக மற்றவர்கள் பேசுவார்கள் என்று அவள், ஒவ்வொரு இடத்திலும் ஒதுங்கி நின்றிருந்தாள். அதன் விளைவு, அவளுக்கு பிடித்த விஷயத்தை அவள் செய்திருக்கவில்லை.
அதில் அவள் அவனைப் பார்க்க, இப்போது மெல்ல அவள் கையை பிடித்தவன், “உன் வாழ்கையில நீ என்னப் பண்ணனுமோ, அத நீ தனியா பண்ணனும். யாரும் உதவி பண்ணுவாங்கன்னு எதிர்பாக்க கூடாது. இப்போ நீ என்னை அடிச்சு உனக்கு பிடிக்கலன்னு சொன்னல்ல, அத நீ முத நாளே சொல்லியிருந்தா, கண்டிப்பா அப்பவே நான் விலகியிருப்பேன். புருஷன் தொட்டா, அனுசரிச்சிக்கனும்னு உனக்குள்ள இருந்த எண்ணம் தான் என்னை அனுமதிச்சிச்சு. இப்பவும் உனக்கு என் மேல கோவம் இருக்கலாம். ஏன் நான் வேண்டாம்னு கூட தோணலாம். பட் அதுக்கு நீதான் போராடனும். பிகாஸ், நான்லாம் அவ்ளோ ஈஸியா உன்னை விட்டுக் கொடுத்திட மாட்டேன். நீ கோர்டுக்கே போனாலும், அங்க வந்து உன்னை ஹக் பண்ணி என் லவ்வ சொல்லுவேன்” என்று சிரித்துக் கொண்டே அவன் சொல்ல, அடுத்த நொடி அவனைக் கட்டிக் கொண்டாள் தேனிசைச்செல்வி.
இதன் பின் நிச்சயம் அவள் அவளுக்காகவும், அவள் கனவுக்காகவும் என்றும் உறுதியாய் நிற்பாள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நமக்கு என்ன வேண்டும் என்பதில், நாம் தான் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் இது உங்களுடைய வாழ்க்கை. மற்றவர்கள் அனைவரும், உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. அப்படி இருக்க, அவர்களிடம் எதிர்பார்த்து, உங்களையும், உங்கள் வாழ்க்கையையும் நீங்கள் தொலைத்து விடாதீர்கள்.
இந்தக் கதை நான் என்னுடைய உலக சாதனைப் போட்டிக்காக எழுதியது. விரைவில் அதில் பெற்ற சாதனையை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். அதற்கு முன் இந்தக் கதையைப் பற்றிய உங்களுடைய கருத்தை மறக்காமல் தெரிவிக்கவும். மிகவும் பிடித்திருந்தால் மறக்காமல், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
Gowri Babu
super 💓💓
Ramya Iyer
exactly said naam dan namakaga porada vendum. Namakku illadha akkarai namel veru aarukum kidaiyadhu so fight for your 👍
Ponmalar M
super sis 😍😍😍 very inspiring 👏👏👏👏🔥🔥🔥🔥
Sarmi SS
October 13, 2025thank you sis ❤