தென்றல் – 10

மயங்கி விழுந்த நிலா மெல்ல கண் விழித்து சுற்றி நின்ற அத்தனைப் பேரையும் பார்த்தாள். சுற்றி இருந்த அத்தனைப் பேரும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் குழப்ப முகத்தைப் பார்த்து, “ஒன்னும் இல்லத்தா. நீ வெசனப்படாத. முதல்ல இந்த தன்ணீய செத்த குடி” என்று செல்வி அவளுக்கு தண்ணீரை கொடுத்தார்.

அவளோ அதை வாங்காமல், “எனக்கு எதுவுமே வேணாம் சித்தி" என்று செல்வியைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் அழுகையைப் பார்த்த செல்விக்கு மனம் ஆறவே இல்லை.

“ஐயோ, இந்த கிறுக்கியால, எம் பேத்தி இப்படி அழுதுட்டிருக்காளே. இதெல்லாம் பாக்கனும்னா, நான் இன்னும் இந்த உசுர பிடிச்சிட்டு இருக்கேன். அம்மா மீனாட்சி தாயே, எம் புள்ளைக்கு இதேன் நிலையா?” என்று சங்கரேஸ்வரி புலம்ப ஆரம்பித்தார்.

இங்கே கதிருக்கே ஒரு கணம், வழக்கம் போல் தான் ஒதுங்கி நின்றிருக்கலாமோ? என்று கூட தோன்றியது. அதில் கடுப்பாய் நிலாவின் பக்கம் கூட திரும்பாமல், தன்னுடைய பைக்கை நோக்கி விறுவிறுவென்று நடந்தான்.

“நில்லு மாப்பிள்ள" என்று சொல்லியப்படி, முருகேசன் கதிரின் பின்னே சென்றான். இங்கே சுற்றி இருந்தவர்கள், அத்தனைப் பேரும் மீண்டும், தாமரையை திட்ட ஆரம்பித்தனர்.

“அவ, அவ முற செய்ய கூட பொறந்த பிறப்பில்லையேன்னு அழுதுட்டு கிடக்கா. இவ என்னென்னா, கருவேப்பிள கொத்து மாதிரி இருக்க, புள்ளைய வேண்டாம்னு ஒதுக்கி தள்ளுறா” என்று ஒரு பெரியவர் சத்தமாகவே கூறினார்.

“இங்கப்பாரு செந்தில். உங்க குடும்ப சண்டைக்குள்ள நாங்க ஆறும் வரல. ஆனா ஊரு வழக்கம்னு ஒன்னு இருக்கு. ஆயிரம் சண்டைனாலும், தாய் மாமன், செய்ய வேண்டிய சடங்க தட்டி கழிக்க, பெத்த தாய்க்கு கூட உரிமை கிடையாது. இந்த ஊரும், நாங்களும் வேணும் அப்படின்னா, அமைதியா நில்லு. இல்ல உனக்கும், உம்ம பொண்டாட்டிக்கும் ஆறும் வேண்டாம்னு நீ நினைச்சா, உன் இஷ்டப்படி என்ன வேணா பண்ணு. ஆனா, அதுக்கப்புறம் எதுக்கும் நீ ஊர் முன்னாடி வந்து நிக்க கூடாது" என்று ஊர் தலைவர் சற்று உரத்த குரலிலேயே கூறினார்.

அதில் செந்தில் சற்று யோசிக்க, அதற்குள் பாண்டியோ, “மாமா, என்ன ஊரு? உனக்கு நான் இருக்கேன். இவனுங்க இல்லன்னா விடு. நீ புள்ளைய கூட்டிட்டு வா” என்றான்.

“ஏலே பாண்டி, உம்ம சோழி கழுதைய பாத்துட்டு செவனேன்னு இரு. உறுத்தான பங்காளிகளே, அமைதியா நிக்கிறப்ப, பொழைக்க வந்த நாயீ குழைச்சிட்டிருக்க. உமக்கு முற செய்ய ஆளு வேணும்னா போயி, உன் ஆத்தா, அப்பன் கிட்ட போய் நீ ஆறு, உன் குலம் என்னென்னு போய் விசாரில்ல. வந்துட்டான் பெரிய இவனாட்டாம்” என்று சங்கரேஸ்வரி பாண்டியைப் பார்த்து கோவமாய் திட்டினார்.

அதில் பாண்டியுடைய ஆத்திரம் கூட, “ஹேய் கெழவி” என்று உள்ளுக்குள் கருவியப்படி, “என்ன மாமா? உம்ம ஆத்தா, பேசுறத கேட்டு கம்முன்னு இருந்தா, நீங்களும் என்ன அப்படித்தேன் நினைக்கிறீகளோ? உங்களுக்காகத்தான வந்தேன். அம்புட்டுத்தேன் நம்ம பழக்க வழக்கமா?” என்று பாண்டி செந்திலை உசுப்பேத்தினான்.

“ஏய் ஆத்தா” என்று செந்தில் ஏதோ பேசப் போக, அதற்குள், “ஆயிரம் சொன்னாலும், பிரச்சனைன்னா, ஊரும், சொந்தமும் தான்லே வரும். கூட சேர்ந்து குடிக்கிறவன் எல்லாம் நம்ம குடிய காப்பாத்த மாட்டான் பாத்துக்கோ.” என்று இன்னொரு பாட்டியும் சத்தமாய் வாய் திறந்தார். 

“அப்படி சொல்லு மதினி. பேச்சு வார்த்தைக்கு, அக்கா, மாமன்னு கூப்டா, அவென்லாம் எம் பேத்திக்கு மாமனாகிட முடியுமா? எம் பேத்திக்கு எம் மருமவென் தான் முற செய்வான். இல்லன்னா, இதுக்கப்புறம் அவென் வூட்டு வாசல்ல நான் காலடி எடுத்து வைக்க மாட்டேன். சாகப் போற எனக்கு என் அண்ணன் கஞ்சி ஊத்துவான்” என்று சங்கரேஸ்வரியும் முறைத்துக் கொண்டார்.

இப்படி மாறி மாறி பேச, செல்விக்கோ, நிலாவை சமாதானப்படுத்துவதே, அத்தனை சிரமமாய் இருந்தது. அழுது, அழுது முகமெல்லாம் சிவந்து போனது.

ஊர் காரர்கள், ஒரு பக்கமும், சொந்தக்காரர்கள் மறு பக்கமும் நின்று பேச, ஒரு கட்டத்தில் செந்தில், “செரி. அவென்னையே வந்து முற செய்ய சொல்லுங்க" என்று கத்தினார். ஏனெனில் ஆயிரம் சொன்னாலும், ஊரை அவரால் பகைத்துக் கொள்ள முடியாது. அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே சம்மதித்தார்.

“என்னய்யா? நீயும், அவென் எப்படியா எம் புள்ளைக்கு" என்று தாமரை ஏதோ பேச வர, மீண்டும் அவர் கன்னத்தில் ஓங்கி அடித்தார்.

அதில் அவர் அதிர்ந்து அவரைப் பார்க்க, “அவென் கூட பொறந்ததுக்கு, உன்ன அப்பவே அத்து விட்டிருக்கனும். என் கிரகம். உன்னை கட்டிட்டேன். இப்படி ஒன்ன பெத்துட்டேன். இதுக்கு மேல, மிச்சத்த எல்லாம் பட்டுத்தான ஆகனும். என்னத்தையோ பண்ணுங்க. பண்ணித் தொலைங்க" என்று சொல்லியவர் அங்கிருந்து பாண்டியோடு கிளம்பியிருந்தார்.

இங்கே செந்தில் சொல்லிய வார்த்தையைக் கேட்ட தாமரை, அப்படியே அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றார். அதன் பின் நடந்த எதுவும் அவர் மூளையில் பதியவே இல்லை.

இங்கே கதிரோ, “விடு மாமா. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சதுதேன?” என்றான்.

“அதுக்குன்னு முறைய விட்டுக் கொடுக்கப் போறீயா?” என்றார் முருகேசன். “உறவே இல்லன்னு நிக்கிறவ கிட்ட, என்ன முறைய மாமா பேச" என்ற கதிருக்கு, அத்தனை ஆதங்கமாய் இருந்தது.

“ஏல விடு. இன்னிக்கு, நேத்தா உன் அக்கா, உன்ன முறைச்சிட்டு நிக்கா. அதெல்லாம் சரியா போயிடும், நீ வா” என்று முருகேசன் கதிரைப் பிடித்திழுக்க, அவர்களை கடந்து செந்திலும் பாண்டியும் சென்றனர்.

அதில் கதிரும், முருகேசனும் அவர்கள் இருவரைப் பார்க்க, “என்னல ஜெயிச்சிட்டோம்னு நினைக்கீயோ? என்னிக்கா இருந்தாலும், உம்ம நிம்மதியா இருக்க விடமாட்டேன்ல" என்று செந்தில் கோவமாய் கூறினார்.

“ஏன்னே நீ தப்பு பண்ற" என்று முருகேசன் சொல்ல, “ச்சை நீ எல்லாம் என் மூஞ்சுலையே முழிக்காதல்ல, கூட பொறந்தவனுக்கு குழி தோண்ட நினைக்கிறவன் கூட கூட்டு சேர்ந்தா நிக்கிற" என்றார் செந்தில்.

அங்கே முருகேசனும், செந்திலும் முறைத்துக் கொண்டு நிற்க, கதிரின் பார்வை மொத்தமும், பாண்டியின் மீது தான் இருந்தது. அதில் கட்டுப் போட்டிருந்த கரத்தை மேலும் இறுக்கி மூடியவன், “உன் சாவு என் கையிலத்தான்ல" என்று சொல்லியப்படி அங்கிருந்த பைக்கில் ஓங்கி குத்தினான்.

“ஐயா மாப்பிள்ள என்னப் பண்ணுற நீ? நீ வா. இவுக எல்லாம் பட்டாத்தான் திருந்துவாக” என்று முருகேசன் கதிரை இழுத்துக் கொண்டு நகர்ந்தான்.

பாண்டியும், செந்திலும் அங்கிருந்து கிளம்பியிருக்க, இங்கே ஓடி வந்த குமார், “அண்ணே, உங்கள் செல்விக்கா வர சொன்னாக” என்றான்.

“நீ போ. நான் கூட்டியாரேன்" என்று குமாரை அனுப்பிவிட்டு கதிரிடம் திரும்பி, “நீ போய் முறைய செய்யுல. ஆயிரம் பேர் சொன்னாலும், நீ செய்ற இந்த முற, உனக்கும், உன் அக்காக்கும் இருக்கிற பந்தத்த சொல்லிக்காட்டிட்டே இருக்கும்” என்றார் முருகேசன்.

அதில் சற்று இறுக்கத்தை தொலைத்தவன், அங்கிருந்து சென்றான். இங்கே நிலாவை சற்று சமாதானப்படுத்தியிருக்க, இப்போது அவளிடம் மெல்லிய விசும்பல் மட்டுமே இருந்தது.

அதுவும் கதிர் அந்த கூட்டத்துக்குள் வரும் வரைத் தான். அவனைப் பார்த்தவுடனே, அவளுடைய பார்வை, அவன் கைக் கட்டைத்தான் தழுவியது.

ஏனோ தன்னால் தான், அவனுக்கு இந்த கஷ்டமோ என்று தோன்றியது. அதில் நிலா அவன் கையையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவனோ கொண்டு வந்த ஓலையை சரசரவென்று பிரித்து, அதை பின்னவே ஆரம்பித்திருந்தான். 

அடுத்த சில நிமிடங்களில், தன் அக்கா மவளுக்காக குச்சி கட்டியவனுக்கு, அக்கா வந்து மாலை போட சொல்ல, தாமரையோ முடியவே முடியாது என்று மறுத்து விட்டார்.

“எம்ம தம்பிக்கு நான் போடுறேன்" என்று சொல்லிய செல்வியோ, தன் கணவருடன் சேர்ந்து மாலை அணிவித்து, தாமரையும், செந்திலும் செய்ய வேண்டிய அத்தனை முறையையும் அவர்கள் இருவர் தான் செய்து முடித்தனர்.

ஏனோ மனம் அத்தனை நிறைவாய் இருந்தது. இருவருக்கும் குழந்தை இல்லை என்று செல்வியும், முருகேசனும் ஒரு நாளும் பெரிதாய் வருந்தியதில்லை. நிலாவையும், கதிரையும் அவர்கள் தங்கள் பிள்ளைப் போல் தான் நினைத்தனர். இப்போது தங்கள் பிள்ளைக்கு, தாங்களே முறை செய்ததில் அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. அதில் செல்வி கண் கலங்கி விட, “அட என்னல செல்வி, நல்ல நேரத்துல போயி இப்படி கண்ண கசக்கிட்டு, பாரு இப்பத்தேன் புள்ள அழுகைய நிறுத்தியிருக்கு, மறுபடியும் பயப்படப் போறா” என்றார் முருகேசன்.

அதில் கண்ணீரை துடைத்தவர், “என் மவராசி. நீ நூறு வயசுக்கு சந்தோஷமா இருபப்த்தாயி" என்று நிலாவின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டார் செல்வி.

அவளோ சற்று தள்ளி அமர்ந்திருந்த தாமரையைப் பார்த்தாள். அதைப் பார்த்த செல்வி சங்கரேஸ்வரியிடம் கண் காமிக்க, “செத்த பொறுத்தா. அவள இப்போ நான் எப்படி கூட்டி வாரேன்னு பாரு" என்று சொல்லிவிட்டு தாமரையிடம் சென்றார்.

தாமரைக்கோ, தன்னுடைய கணவர் பேசிய வார்த்தை நெருஞ்சி முள்ளாய் அவர் மனதை தைத்தது.

“அடியே இவளே, புள்ள அங்கன அம்மாவ எங்கன்னு பார்த்துட்டு இருக்கு. நீ இங்கன உங்காந்து என்னத்தடி பாத்துட்டு இருக்கிறவ. போடி புள்ளைய போய் ஆசிர்வாதம் பண்ணு” என்றார் சங்கரேஸ்வரி.

அதில், அவரை நிமிர்ந்து பார்த்து முறைத்தவர், “ஓ உங்க எல்லாருக்கும், இப்பத்தேன் நான் அவ அம்மான்னு தெரியுதோ?” என்றார்.

“என்னடி இவ, இப்படி கூறுகெட்டத்தனமா கேட்டுட்டு, நீத்தேன் அவ அம்மா. இப்போ உன் புள்ளைக்கு உன் தங்கச்சி முற செஞ்சது புடிக்கலையோ?” என்று வேண்டுமென்றே கேட்டார் சங்கரேஸ்வரி.

அதில், “கெழவி என்னத்த பேசுற நீ? எம்ம புள்ளைக்கு எம் தங்கச்சியும் அம்மாத்தேன். இப்போ ஆறு இல்லன்னா, இப்படி எதையாச்சும், அவெ முன்னாடி பேசி, அவள கலங்கடிக்காத” என்று சற்று கோவமாய் கூறினார் தாமரை.


தாமரை கோவக்காரி தான். அதுவும் தன் தம்பியிடம் தான் அத்தனைக் கோவமும். அதே நேரம் தாமரை பாசக்காரி. தங்கை என்றால் அவருக்கு உயிர். 

“நான் எங்கடி கலங்கடிக்கிறேன். நீத்தேன். இப்படி உக்கார்ந்து, அவுக அத்தன பேரையும் கலங்கடிச்சிட்டு நிக்கிறவ. எங்க உன் ஊட்டுக்காரன? அவனையும் குச்சிக்குள்ள போறதுக்குள்ள வந்து ஒரு எட்டு பாக்க சொல்லு. அப்புறம் முப்பதானாத்து தான், ஆம்புளைங்க முகத்துலையே முழிக்கனும்" என்று சங்கரேஸ்வரி சொல்ல, தாமரை தன் கணவருக்கு கால் செய்தார்.

ஆனால் அங்கே செந்திலோ, பாண்டியின் தோட்டத்தில் அமர்ந்து அவனுடன் சேர்ந்து குடித்துக் கொண்டிருந்தார்.

“இந்த வாட்டி அவென்ன பெருசா ஏதாச்சும் செய்யனும் மாமா” என்று பாண்டி சொல்ல, செந்திலும், “ஆமா மாப்பிள்ள, அவென்ன கொண்ணாத்தேன் என் ஆத்திரம் தீரும்” என்றார்.

“இந்த தடவ திருவிழால வச்சி, அவென்ன முடிச்சிவிடனும் மாமா” என்று மீசையை நீவியப்படி குரோதமாய் கூறினான் பாண்டி.

(எதே? முடிச்சி விடுறதா? அதுவரைக்கும் உம்ம உடம்புல உசுரு இருக்கான்னு பாப்போம். சரி அது என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Author:    1 Sarmi SS
Comments   0

*** தென்றல் – 10 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com