கதிரும், முருகேசனும் தங்களை மீறி யார் முறை செய்கிறார்கள், என்று பார்ப்போம் எனும் ரீதியில் வேஷ்டியை மடித்துக் கட்டியப்படி நின்றிருந்தனர். தாமரையோ சுற்றி யார் பேசுவதையும் சற்றும் காதில் வாங்காமல், அவர் நிலையில் அப்படியே இருந்தார். ஒரு கட்டத்தில், தாமரையின் மதினி, “தாமர செத்த பொறுத்தா. அதான் எல்லாரும் சொல்றாகல்ல" என்று மெல்லமாய் ஒதுங்கிக் கொள்ள முயற்சித்தார்.
அதை எல்லாம் கேட்ட தாமரையோ “அப்போ, நீங்களும் இவுக மாதிரியே ஒதுங்கிக்கிறீகளோ, சரி அப்போ பாண்டி வந்து குச்சி கட்டட்டும். அவெனும் எமக்கு தம்பி முறைத்தான?” என்று சொல்லி முடிக்கும் முன்னே தாமரையின் கன்னத்தில் பளாரென்று அடித்திருந்தார் தாமரையின் கணவன் செந்தில்நாதன்.
சட்டென்று வாங்கிய அடியில் தடுமாறி கீழே விழப் போக, இங்கே கதிருடைய இரத்தம் கொதித்தது. வேகமாய் அக்காவை நோக்கி அவன் அடி எடுத்து வைக்கப் போக, அதற்குள், “கேன சிறுக்கி, எம் புள்ளைய, இங்கன கூட்டியாந்ததே தப்பு. இதுல, இங்கன நின்னு வியாக்யானம் பேசிட்டு நிக்குறீயா? புள்ளைய கூட்டிட்டு வூட்டுக்கு வாடி. உன்ன அங்கன வச்சி பேசிக்கிறேன்” என்றப்படி, மீண்டும் தாமரையின் கன்னத்தில் அடிக்க கை ஓங்கினார் செந்தில் நாதன்.
“ஏப்பா பொறு” என்று சுற்றி இருப்பவர்கள் தடுக்கப் பார்க்க, அதற்குள் தெளிந்த தாமரையோ, “தப்புத்தான்யா. எல்லாம் என் தப்புத்தேன். அடியே நிலா, இன்னும் என்ன அங்கன உட்கார்ந்திருக்கவ. வாடி" என்று நிலாவை நோக்கி அடி எடுத்து வைத்தார்.
அதற்குள் இருவருக்கும் இடையில் வந்து நின்ற கதிரோ, “இவளுக்கு இங்கன வச்சித்தான் எல்லா சடங்கும் நடக்கும். அத நீ இல்ல, உம்ம வீட்டுக்காரர் நினச்சாலும் மாத்த முடியாது" என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான்.
அதில் அவனுடைய பார்வை மொத்தமும், தன் அக்காவின் கணவர் செந்திலின் மீது தான் இருந்தது. கதிர் கண்ணில் தெரிந்த கோவத்தில், தாமரைக்கே ஒரு கணம் பேச்சு வரவில்லை. இப்படி எல்லாம் அவன் அவனுடைய அக்காவை அத்தனை எளிதில் எதிர்த்து நிற்க மாட்டான். தாமரை எத்தனைப் பேசினாலும் ஒதுங்கிப் போவானே தவிர இப்படி எகிற மாட்டான். இப்போது அவனே எதிர்க்கவும், தாமரைக்கு ஒரு நொடி பேச்சு நின்றது.
“எம்புள்ளைக்கு எங்க வச்சி என்னத்த பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்ல. ஒழுங்கா ஒதுங்கிக்கோ. இல்லன்னா நடக்கிறதே வேற" என்று சொல்லியப்படி, அவனை எதிர்த்துக் கொண்டு வந்து நின்றார் செந்தில்.
“என்ன நடக்குதுன்னு நானும் பாக்கேன்" என்று சொல்லிய கதிரும், வேஷ்டியை மடித்துக் கட்டினான்.
“ஹேய் பிள்ளைய கூட்டிட்டு வாடி” என்று செந்தில் கத்த, தாமரையோ “டேய் விலகுடா” என்றார்.
அவனோ அசைவேனா நான் என்பது போல் நிற்க, அதற்குள், “அட என்ன மாமா நீ? அவென்ன நாலு தட்டி, நம்ம புள்ளைய வூட்டுக்கு கூட்டியாரத வுட்டுட்டு, அவெங்கிட்ட நின்னு பேசிட்டு இருக்கீக" என்று சொல்லியப்படி செந்திலின் பின்னே வந்து நின்றான் பாண்டி.
அவனைப் பார்த்ததும், இங்கே கதிருடைய கோவம் இன்னும் கடகடவென்று கூடியது.
“எவெம்லே அது? என் மாப்பிள்ள மேல கை வைப்பேன்றது?” என்று சொல்லியப்படி முருகேசன் கதிரின் அருகில் வந்து நின்றான்.
முருகேசனைப் பாத்ததும், செந்தில், “என் கூட பொறந்துட்டு, கண்ட நாய்க்கும் வக்காளத்து வாங்கிட்டு நிக்கிறீயோ?” என்று கோவமாய் கேட்டார்.
“நானும் அதேத்தேன்னே சொல்றேன். கண்டவங்க பேச்சக் கேட்டு நீத்தேன். சொந்தத்த சபையில விட்டுக் கொடுத்துட்டு நிக்க" என்றான் முருகேசன்.
“என்ன மாமோய்? பேச்செல்லாம் வழி மாறுது. நான் உமக்கு கண்டவென்னோ?” என்று பாண்டி செந்திலைத் தாண்டி, முருகேசனிடம் எகிறினான்.
அதில் முருகேசனுக்கு முன்னே வந்து, “ஏல, எங்கன வந்து ஆறு முன்னாடி குரல் உசத்திட்டு திரியிற, தோட்டத்துல வச்சு உம்ம ஆளுங்க வாங்குன அடி பத்தலையோ? எம்ம மாவன் முன்னாடி குரல் உசத்துற வேலை வச்சிக்கிட்ட, குரல்வளையே கடிச்சு துப்பிடுவேன்" என்றான் கதிர்.
பாண்டியும், கதிரும் கொஞ்சம் விட்டால், சட்டையைப் பிடித்து சண்டைப் போட ஆரம்பிப்பதைப் போல் தோன்ற, அங்கிருந்த பெரியவர் “இங்கப்பாரு பாண்டி. இது அவுக வீட்டு விவகாரம். அத அவுக பேசிப்பாக. நீ ஓரமா போய் நில்லு" என்றார்.
இங்கே கதிரோ பாண்டியை வெட்டுவது போல் முறைத்துக் கொண்டு நிற்க, “மாமா, நீ புள்ளைய கூட்டிட்டு வா. முற செய்ய நான் இருக்கேன். விழா எடுக்க மாளிகை கணக்கா எம்ம வீடு இருக்கு" என்று அசராமல் கூறினான் பாண்டி.
“என் அக்கா மவளுக்கு முற செய்ய நீ ஆறுடா?” என்று கதிர் பாண்டியனின் சட்டையை கொத்தாகப் பிடித்தான். அதில் பாண்டியும் கதிரின் சட்டையை இறுக்கிப் பிடிக்க, அங்கே வாய் சண்டை கை சண்டையாய் நீண்டது.
நிலாவுக்கெல்லாம் பயத்தில் மூச்சே வரவில்லை. அவளுக்கெல்லாம் மயக்கம் வராத குறைத்தான். ஏற்கனவே காலையில் இருந்து அவள் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம். இவர்கள் வேறு, முட்டை, எண்ணெய் என்று ஏதேதோ கொடுத்திருக்க, இத்தனைக் கூட்டம் வேறு அவளுக்கு என்னமோ செய்தது. அதிலும் இப்போது இந்த சண்டை பெரிதாக, பெரிதாக அவளுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.
ஒரு பக்கம் கதிரை சில பிடித்திழுக்க, இன்னொரு பக்கம் பாண்டியை நாலு பேர் பிடித்திழுக்க, கதிரோ கோவம் குறையாமல், “என்னை மீறி ஓலையில கை வையில. அதுத்தேன் உன்னோட பாடையா இருக்கும்" என்றவன் பாண்டியை ஓங்கி மிதித்தான். அதில் அவன் சென்று பைக்கின் கீழே விழ, அப்போதும் விடாமல் கதிர் பிடித்திருந்தவர்களை உதறிவிட்டு அவனை நோக்கி சென்றான்.
அதைப் பார்த்த பெரியவர்கள், வேகமாய் கதிரைப் பிடித்து, “ஏப்பா கதிரு. நீயாச்சும் செத்த பொறுய்யா. பெரியவங்கன்னு நாங்க என்னத்துக்கு இருக்கோம்? நாங்க பேசிக்கிறோம்" என்றார்.
“இதுல பேசுறதுக்கு என்ன இருக்கு? இது என் உரிமை. அதெல்லாம் என்னால விட்டுக் கொடுக்கவே முடியாது" என்று அத்தனை சத்தமாய் கத்தினான் கதிர்.
அவனின் குரலில், ஒரு நொடி அங்கே பலத்த அமைதி நிலவியது. இங்கே கீழே விழுந்த பாண்டியோ, கோவமாய் அங்கிருந்த அரிவாள் ஒன்றை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி ஓடி வந்தான்.
“ஹேய்.” “ஏல” “அவென்ன பிடிங்க” என்று பல குரல்கள் கேட்க, அதற்குள், கதிருடைய கழுத்தின் அருகே, அந்த அரிவாள் பாய்ந்திருக்க, “மா. மா” என்றவளின் குரல் வெளியில் வரும் முன்னே அப்படியே மயங்கியிருந்தாள்.
ஒரு நொடியில் அத்தனைப் பேரும் அதிர்ந்து நிற்க, கதிரோ வெகு சாதாரணமாய், அந்த அரிவாளை, கையால் பிடித்து தடுத்திருக்க, இப்போது அவன் கரத்தில் இருந்து இரத்தம் கொட்டியது.
அதற்குள், பாண்டியை முருகேசன் வந்து அடித்து அவனை கீழே தள்ளி விட்டான். சுற்றி இருந்தோரும், அவனைப் பிடித்துக் கொள்ள, “ஏய்யா கதிரு" என்று செல்வி அவனிடம் நெருங்கப் போக, திரும்பி பாக்காமலே, “முதல்ல நிலாவ பாரு" என்று அழுத்திக் கூறினான்.
அப்போதே செல்வி, நிலாவைப் பார்க்க, “அம்மாடி நிலா” என்று வேகமாய் நிலாவிடம் செல்ல, தாமரையும் மகளிடம் ஓட, சில கணங்களில், யாருக்கு எதைப் பார்க்க என்றே தெரியவில்லை.
அருகில் இருந்த துணியை கிழித்து, கையில் முடிச்சிட்டு கட்டியவன், கீழே கிடந்த பாண்டியின் முன் சென்று, “வெட்டுல்ல. உன்னால முடிஞ்சா எம்ம வெட்டிட்டு, நீ போய் முறை செய் பார்ப்போம்" என்று சொல்லியவன், அவன் சட்டைக் காலரை கொத்தாய் பிடித்திழுத்து, வெட்டுப் பட்ட கரத்தாலையே, ஓங்கி அவன் முகத்திலேயே குத்தினான்.
அதில் இப்போது பாண்டியின் வாய் கிழிந்து அப்படியே இரத்தம் கொட்டியது. அங்கே தடுப்பதற்கோ, கேட்பதற்கோ எதுவுமே இல்லை என்பது போல் மாறியிருக்க, முருகேசன் பாண்டியின் ஆட்களை அடிக்க, கதிர் பாண்டியை அடிக்க, ஒரு கட்டத்தில் அங்கே கிடந்த அரிவாளை கையில் எடுத்தான் கதிர்.
சற்றும் யோசிக்காமல், பாண்டியை வெட்ட கரத்தை ஓங்க, பாண்டிக்கு முன்னே வந்து நின்றார் செந்தில். அதில் ஓங்கிய கரத்தை அப்படியே நிறுத்தினான் கதிர்.
“என்ன கொண்ணுட்டு, என் மாப்பிள்ள மேல கைய வைடா நீ” என்று செந்தில் சொல்ல, “ஏண்ணே விலகு, அவென்னப் பத்தி உமக்கு தெரியாது. அவென் காரியக்காரன். அவென் உம்ம உசுப்பேத்துறான். அவென் ஒரு நாள் இல்ல ஒரு நாள். உன் கழுத்தறுப்பான். அவெனுக்காக, நம்ம சொந்தத்த இழக்காதேன்னே” என்று முருகேசன் செந்திலின் கையைப் பிடித்திழுத்தான்.
“எவென் கறுத்தறுக்கிறவன்னு எமெக்கு தெரியும். நீ ஒன்னு சொல்ல தேவல்ல” என்று செந்தில் கதிரை முறைத்துக் கொண்டு நின்றார்.
அதற்குள் தாமரையோ, “எங்காத்தாவ கொண்ண மாதிரியே, என் ஒட்டு மொத்த குடும்பத்தையும் கொல்ல கங்கணம் கட்டிட்டு திரியிறானே. அடியே நிலா. உமக்கு என்னாச்சுடி. கண்ணத் தொறடி" என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.
அதில் ஓங்கிய அரிவாளை அப்படியே கீழே போட்ட கதிர், ஒதுங்கி செல்ல, “விலகுடி, என் புள்ள மேல இவனுங்க மூச்சுக் காத்து கூட பட கூடாது” என்று சொல்லிய செந்தில், தன் மகளை தூக்க சென்றார்.
கீழே கிடந்த பாண்டியோ, தன் சட்டையில் ஒட்டியிருந்த மண்ணைத் துடைத்தப்படி, “இதுக்கெல்லாம் நீ அனுபவிப்பல்ல. உன்ன நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லியப்படி எழுந்தான்.
அதில் கதிரின் கோவம் இன்னும் கூட, முருகேசன் தான் வந்து கதிரின் கரத்தைப் பிடித்து தடுத்தார்.
செந்தில் நிலாவை தூக்கப் போக, “நிறுத்துடா, எவெனும் எம் பேத்திய தொடக் கூடாது. அம்புட்டுக்கும் காரணமே, நீயும் உன் பொண்டாட்டியும் தான்" என்று சங்கரேஸ்வரி நிலாவை மறைத்தப்படி வந்து நின்றார்.
“ஆத்தா விலகு. அப்புறம், ஆத்தான்னு கூட பாக்கமாட்டேன்.” என்று செந்தில் தன்னுடைய அம்மாவை திட்டிக் கொண்டிருக்க, அதற்குள் செல்வி, அங்கிருந்த தண்ணீரை எடுத்து வந்து நிலாவின் முகத்தில் தெளித்தார்.
அதில் அவள் மெல்ல கண் விழித்தாள். அவளின் பார்வை முதலில் கதிரின் அடிப்பட்ட கரத்தின் மீது தான் விழுந்தது. அவன் உள்ளங்கையை சுற்றி கட்டியிருந்த அவளின் மஞ்சள் தாவணி, அவனின் இரத்த்துடன் கலந்து நிறம் மாறியிருந்தது. அதுவே எத்தனை ரத்தம் சிந்தியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அதைப் பார்த்து அவளுக்கு மீண்டும் மயக்கம் வருவது போல் தோன்ற, அதற்குள் செல்வி அவளை தன் தோளில் சாய்த்து, “இத கொஞ்சம் குடித்தா” என்று தண்ணீரை கொடுத்தார்.
அவளோ அதைக் குடிக்காமல், தன் பெற்றோரைப் பார்த்தாள். ஊர் காரர்கள் மொத்தமும், அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளின் பார்வை அந்த இடத்தை வட்டமடித்தது.
“வெசனப்படாத்தா. ஒன்னும் இல்ல" என்று சங்கரேஸ்வரி தன் பேத்தியின் முகத்தை துடைக்கப் போக, “எனக்கு எதுவுமே வேணாம் சித்தி" என்று செல்வியை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் நிலா.
(நீ வேணாம்னா மட்டும் இவனுங்க விட்டுட போறானுங்களா? சரி அடுத்து என்னத்தேன் நடக்குதுன்னு அடுத்த எபிசோட்ல பாப்போம். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு எபிசோட் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? அதுல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?
0 Comments
No comments yet.