“கல்யாண வயசுல தங்கச்சிய, வீட்டுல வச்சிட்டு, ஒரு அண்ணன்காரன் பண்ற காரியமாடா இது?” என்று தன் கோவத்தைக் கூட முழுதாய் தன் மகனின் மீது காட்ட இயலாது, முந்தி சேலையால் வாயை மூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார் அவனின் அம்மா.
“அதெல்லாம் யோசிச்சிருந்தா, இப்படி ஒரு வேலைய பார்த்துட்டு வந்து நிப்பானா? என் நெஞ்செல்லாம் எரியுது? இனிமே நான் எந்த மூஞ்ச வச்சிட்டு வெளிய நடப்பேன்.” என்று ஆங்காரமாய், அங்கிருந்த பூந்தொட்டியை எட்டி உதைத்தார் அவனின் அப்பா.
சுற்றி இருந்த அத்தனைப் பேருமே, ஒரு வித இறுக்கத்தில் நின்றிருக்க, அது அத்தனைக்கும் காரணமானவனோ, “இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே கத்திட்டு இருக்கப் போற. போ. போயி எனக்கும், உன் மருமகளுக்கும் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வா” என்று சொல்லியவன், அத்தோடு விடாது, சுற்றி இருந்தவர்களைப் பார்த்து, “இன்னிக்கு அத்தன பேருக்கும் நம்ம வீட்டுலத்தான் கல்யாண விருந்து. அதனால யாரும் கிளம்ப கூடாது” என்று கூறினான் அவன். அவன் பெயர் சுடர் வேந்தன்.
“புருஷன முழுங்கி, முழுசா மூனு நாளு முடியல. அதுக்குள்ள, இன்னொரு புருஷன தேடிட்டு வந்து நிக்கிற இவ என் மருமகளா?” என்று அவனின் தாய் கோவமாய் அவன் கைவளைவில் மயக்கத்தில் இருந்தவளை அடிக்க பாய்ந்தார்.
“அம்மா” என்று அந்த இடமே அதிரும் அளவுக்கு கத்தியவன், “அவ புருஷன் நான்த்தான். உன் கண்ணு முன்னாடி நான் உயிரோடத்தான நின்னுட்டு இருக்கேன். உனக்கு கோவம்னா, அத என்கிட்ட காட்டு. அத விட்டுட்டு, அவள ஒரு வார்த்த பேசுன, அப்புறம் உனக்கு மகன்னு ஒருத்தன் இருக்க மாட்டான்” என்று சொல்ல, அவனின் அம்மாவோ, அப்படியே அதிர்ந்து நின்று விட்டார்.
“அவன் என்ன சொல்றது? நான் சொல்றேன். இன்னியல இருந்து நீ என் புள்ள கிடையாது. இப்பவே நீ இந்த வீட்ட விட்டு போயிடு” என்று அவனைப் பார்த்து கத்தியவர், அதிர்ந்து நின்றிருந்த தன் மனைவியைப் பார்த்து, “ஒரு செம்புல தண்ணிய மோந்துக் கொடு, இவன இப்பவே, இங்கேயே தல முழுகிடுறேன்” என்றார்.
“அட என்ன சித்தப்பா, நம்ம வீட்டு புள்ள மனச கெடுத்த, அவள வெட்டி விடுறதுக்கான வேலைய பாக்காம, இப்புடி நம்ம வீட்டு புள்ளைய போக சொல்லிட்டிருக்கீங்க. விசயம் வெளிய தெரியிறதுக்குள்ள, அந்தப் புள்ளைக்கு காசு பணத்த கொடுத்து அனுப்புற வழிய பாருங்க” என்று ஒருவன் சொல்லி முடிக்கும் முன்னே, தன் மனைவியை ஒரு கையில் தாங்கியிருந்தவன், மறு கையால் அவன் கழுத்தை நெறித்திருந்தான்.
அத்தனைப் பேரும் அதிர்ந்து அவனைப் பார்க்க, “உங்க எல்லாருக்கும் ஒரு தடவ சொன்னா புரியாதா? அவ என் பொண்டாட்டி. அவளுக்கு இந்த வீட்டுல இடம் இல்லன்னா, எனக்கு இந்த வீடு தேவை கிடையாது. இன்னும் ஒரு வார்த்த என் பொண்டாட்டிய பத்தி பேசுனீங்க, அப்புறம் பேசுறதுக்கு வாய் இருக்காது” என்று சொல்லியப்படி கர்ஜித்தான்.
அவனின் சத்தத்தில், மயக்கத்தில் இருந்த அவள் மெதுவாய் கண் திறக்க, அவனை அத்தனை நெருக்கத்தில் பார்த்து திடுக்கிட்டு விலக முயன்றாள். அவனோ அவளை விடாது, இறுக்கிப் பிடிக்க, அப்போதே அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தன் தாலியைப் பார்த்தாள். பார்த்தவளுக்கு நடந்த அத்தனையும் கண் முன்னாடி வர, கோவமாய், “ஏண்டா இப்படி பண்ண? உன்ன நான் உயிரோடவே விட மாட்டேன்” என்று அவனை தன் ஆத்திரம் தீறும் மட்டும் அடிக்க ஆரம்பித்தாள் அவள். அவள் பெயர் தேன் கவி.
“உன்னால முடிஞ்சா என்ன கொன்னுக்கோ” என்று புன்னகை முகமாய் தன் இரு கையையும் விரித்து அவள் அடிக்கும் அடியை சுகமாய் தாங்கிக் கொண்டான் அவளின் சுடர் வேந்தன்.
‘அதிர்ந்து கூட பேச தெரியாத பெண்ணவள், ஆங்காரமாய் அடித்துக் கொண்டிருக்க, யாருக்கும் அடங்க மறுக்கும் ஆண்மகன், அதை ஆசையாய் வாங்கிக் கொண்டிருந்தான்.’
இந்த கதைய நீங்க முழுசா படிக்க, கீழ உள்ள லிங்க் கிளிக் பண்ணி படிக்கலாம்.
https://lovebeatnovels.com/my-creation-blog/uyirai-kollum-thensudare/
(யார் இவர்கள்? இது அத்தனைக்கும் காரணம் என்ன? நிச்சயம் அதன் பின் காதல் இல்லை. காதல் இல்லை என்றால், பின் எதற்கு இந்த திருமணம்? அவன் புன்னகையின் பின்னால் இருக்கும் வலியை அவள் உணர்வாளா? இல்லை தொலைந்துப் போன தன் முதல் கல்யாண வாழ்க்கையின் பின் ஒளிந்துக் கொள்வாளா? இந்த தேன் சுடரின் காதல், ஊடல், காமம், கோவம், வெறுப்பு போன்ற அத்தனை உணர்வுகளையும், உயிரை கொல்லும் தேன்சுடரே கதையில் படிக்கலாம்)
0 Comments
No comments yet.