சில நொடிகளில், பேசிவிட்டு வந்த நிரூவோ, “நா பேசிட்டேன். வா” என்று அழைத்து சென்று, ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விட்டாள்.
“ரொம்ப thanks” என்ற வார்த்தையைக் கூட, அஞ்சலியால் சொல்ல முடியவில்லை. ஏனெனில், நிரூ செய்தது அத்தனைப் பெரிய உதவி.
“இந்த thanks எல்லாம் வேண்டாம். உண்மையாவே நீ எனக்கு thanks சொல்லனும்னு நெனச்சா, இத வாங்கிக்கோ” என்றப்படி சில கவர்களை அவளிடம் நீட்டினாள் நிரூ.
அவள் “என்ன” என்று கேள்வியாய், நிரூவைப் பார்க்க, “இத, ஹெல்பா நெனச்சிலாம் பண்ணல. எனக்கு ஒரு குட்டி தங்கச்சி இருந்தா, உன்ன மாதிரிதான் இருப்பா. அப்படி நெனச்சிதா கொடுக்கிறேன். வாங்கிக்கோ” என்று அத்தனை உரிமையாய் அஞ்சலியின் கையில், அந்த துணிப்பையை கொடுத்தாள்.
சாதாரணமாக கொடுத்திருந்தால் மறுத்திருப்பாளோ? என்னவோ! ஆனால், இப்போது, இத்தனை உரிமையாய் கொடுக்கவும், கண்களில் நீரோடு வாங்கிக் கொண்டாள்.
உண்மையில், அவளிடம் மாற்று உடைக்கு கூட வழியில்லைதான். அதை புரிந்து வாங்கி கொடுத்த நிரூ, நிச்சயம் கடவுளாய்தான் தெரிந்தாள்.
“உனக்கு இங்க எந்த ப்ரச்சனையும் இருக்காது. உன்னப் பத்தி யாரும், எதுவும் கேக்க மாட்டாங்க. நீ என்னப் பண்ணனும்னு நினைக்கிறீயோ, அதப் பண்ணு. At the same time, உனக்கு ஏதாச்சும் தேவைன்னா, எனக்கு கால் பண்ணு. நானும் time கிடைக்கிறப்ப, உன்ன வந்து பாக்குறேன்” என்று சொல்லிவிட்டு சென்றிருந்தாள் நிரூ.
அப்படியே அங்கிருந்த பார்க் பெஞ்சில் அமர்ந்துவிட்டாள். அவளுக்கான அறை தயாரானதும், அதை அந்த ஆசிரமத்தில் வேலைப் பார்க்கும் ஒருவர் வந்து கூறினார்.
அவளும் அங்கு சென்றுப் பார்த்தாள். வசதியாகவே இருந்தது. உண்மையை சொல்லப் போனால், இதற்கு முன் இருந்த இடத்திலெல்லாம் கிடைக்காத, அந்த நிம்மதி இங்கு கிடைத்தது. அப்படியே அமர்ந்துவிட்டாள்.
அங்கே அவளுக்கு நேரத்திற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தனர். ஒரு கட்டத்தில், அவளுக்கு அப்படியே இருப்பது ஒரு மாதிரி இருந்தது.
அதனால், அவளே வெளியில் வந்து, மற்ற சிறுவர்களை எல்லாம் பார்த்தாள். பின் அங்கு வேலைப் பார்ப்பவர்களோடு சேர்ந்து இவளும் வேலை செய்தாள்.
முதலில் வேண்டாம் என்று தான் அவர்களும் கூறினார்கள். ஆனால் எத்தனை நாளைக்கு, இப்படியே, சாப்ட்டு சாப்ட்டு அவர்களுக்கு சுமையாய் இருக்க முடியும்.
“நானும் சின்ன சின்ன வேல பாக்குறேன்” என்று சொல்லியவள், அடுத்த ஒரு வாரத்திலேயே, அந்த ஆசிரமத்துடன் ஒன்றிப் போயிருந்தாள்.
அப்படியே கிட்டதட்ட இரண்டு மாதங்கள் ஓடியிருந்தது. ஏனோ, இங்கு வந்தப் பின், இந்த உலகத்தில் தான் மட்டுமே அனாதை இல்லை. இங்கே பல பேருடைய வாழ்க்கை, அப்படித்தான் இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டாள்.
ஆசிரம குழந்தைகள் எல்லாம், “அஞ்சலி அஞ்சலி” என்று இவள் பின்னேதான் சுற்றிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த முதியவர்களை எல்லாம், கண்ணும் கருத்துமாய், உடனிருந்து கவனித்துக் கொண்டாள்.
பன்னிரெண்டாம் வகுப்புதான் படித்திருந்தாள். ஆனாலும் கணக்கு வழக்கு எல்லாம், அவள் நன்றாக பார்க்க, அவளுக்கு ஆசிரம அலுவலகத்திலேயே வேலையும் கிடைத்தது. அதனால், அஞ்சலியின் நாட்கள், தெளிந்த நீரோடை போல் ஓடியது.
அது எல்லாவற்றையும் விட, இங்கே, அவளுக்கு அந்த தாலியை காட்டி, தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதனால், அந்த தாலியை சுடிதாருக்குள் மறைத்துதான் வைத்திருந்தாள்.
அன்று குளிக்கும் போது, எதார்த்தமாய், அந்தத் தாலி, அவள் மேனியை உரச, சட்டென்று, அத்விக்கின் முகம் நினைவுக்கு வந்தது.
அதில், வெளியில் வந்தவளின் மனமோ, “இன்னும் எதுக்கு தேவையில்லாம, இத கழுத்துல போட்டுட்டு இருக்க” என்று கேட்டது.
“பேசாம, இத கழட்டி சாமி உண்டியல்ல போட்டுடலாம்” என்று முடிவெடுத்து, கோவிலுக்கு கிளம்பினாள்.
சரியாக அன்னேரம் நிரூ, அஞ்சலியைப் பார்க்க வந்தாள். இவள் கிளம்பி இருக்கவும், “எங்கேயும் வெளிய கெளம்புறீயா என்ன?” என்றாள் நிரூ.
“இல்ல மேடம், கோவிலுக்கு போலாம்னு நெனச்சேன்” என்று சிறு தயக்கத்துடன் கூறினாள்.
அதென்னவோ, வாரம் ஒரு முறை, நிரூ அங்கு வருவாள். அஞ்சலியிடம் நன்றாக பேசுவாள். ஆனாலும், நிரூ, தன்னை அக்கா என்று அழைக்க சொல்லியும், அஞ்சலி அதை ஏற்கவில்லை.
நிரூவும் அவளை கட்டாயப்படுத்தவில்லை.
அஞ்சலிக்கோ, தேவையில்லாமல் யாரிடமும், எந்த உறவும், வளர்த்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணம். இது இப்போது வந்தது கிடையாது. அவள் சிறு வயதில் இருந்தே, அவளின் சூழ்நிலை அப்படித்தான் இருந்தது.
அதிலும் பணக்காரர்கள் என்றாலே, அவளுக்கு பயம் தான். எத்தனை நெருங்கிப் பழகினாலும், ஏனோ அவர்களுடன் ஒன்ற, அஞ்சலிக்கு விருப்பமில்லை.
ஆனால் நிரூ அதை எதையும் கண்டுக்கொள்ளாது, அஞ்சலியுடன் அத்தனை இயல்பாய் பழகினாள். அஞ்சலியுடன் மட்டும் அல்ல, அந்த ஆசிரமத்தில் இருக்கும் அத்தனைப் பேரிடமும், பாசமாக நடந்துக் கொள்வாள்.
ஏனெனில் ஒரு காலத்தில், நிரூவும், இந்த ஆசிரமத்தில் தான் வளர்ந்தாள். அதனால், அவளால் முடிந்த உதவியை செய்ய நினைப்பாள்.
ஆனால், அஞ்சலி விஷயத்தில் மட்டும் நிரூ ஒரு படி மேல் யோசித்தாள்.
அதென்னவோ அஞ்சலியைப் பார்த்த நொடியிலேயே பிடித்துவிட்டது. அவள் சம்மதித்தால், அவளை தன் தங்கையாகவே தத்தெடுத்துக்கொள்ள நினைத்தாள். ஏன் மகளாக கூட தத்தெடுத்துக்கொள்வாள்.
நிரூவுக்கு இருபத்தி ஒன்பது வயது ஆகிறது. திருமணம் செய்ய சொல்லி வீட்டில் எவ்வளவோ பேசிவிட்டார்கள். ஆனால், அவளுக்கு திருமண வாழ்க்கையின் மீது சுத்தமாய் ஈடுபாடில்லை.
அதற்கு, அவளுக்கு பல காரணங்கள் இருந்தது. இப்போது அவளுடைய எண்ணமே. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதுதான்.
ஆனால் வீட்டில் உள்ளவர்களோ, “ஒரு குழந்த இல்ல. நீ ஒரு லட்சம் குழந்தைங்கள கூட தத்தெடுத்துக்கோ. ஆனா, நீ கல்யாணம் பண்ணிக்கிடனும். உனக்குனு ஒரு தொண வேணும்” என்று அவளின் ஒரு அண்ணனும், இரு அண்ணியும் முடிவாய் சொல்லிவிட்டனர்.
ஆனால் மூத்த அண்ணன் அதிரூபன் மட்டும், “உனக்கு என்ன தோனுதோ அதப் பண்ணு. யார் பேச்சையும் நீ கேக்காத” என்று சொல்லிவிட்டான்.
அஞ்சலியை பார்த்த அன்றே, தன் அன்னை சாந்தினியிடம் சென்று, “அம்மா, நான் ஒரு பொண்ண தத்தெடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்ம்மா” என்றாள்.
“கல்யாணம் பண்ணிக்கோ நிரூ” என்று சாந்தினி சொல்லவும், “ப்ளீஸ் மா. எனக்கு இந்த கல்யாணம் மேல எல்லாம் சுத்தமா interest இல்ல. அதப்பத்தி பேசாதீங்க” என்றாள்.
“சரி இப்போ எந்த பொண்ண தத்தெடுக்கப் போற” என்று சாந்தினி கதை கேட்க, உடனே அஞ்சலியைப் பற்றிக் கூறினாள்.
“அந்தப் பொண்னுக்கு உன்னவிட, ஒரு பத்து வயசுதான் நிரூ கம்மியா இருக்கும்” என்று சாந்தினி சிறு அயர்வுடன் கூறினார்.
“அப்போ நீங்க அவள தத்தெடுத்துக்கோங்கம்மா. அவள நான் தங்கச்சியாக்கிக்கிறேன்” என்று சிறுமியாய் தன் தாயை கட்டிக் கொண்டு கேட்டாள்.
மகளுடைய மனம், அவருக்கு புரிய, “நிரூமா.அம்மாக்கு உன் மனசு புரியுது. ஆனா அந்தப் பொண்ணு மேஜர். நீ சொல்றத வச்சி பாத்தா, அந்தப் பொண்ணுக்கு பணக்காரங்களையே பிடிக்காது போல. அப்படி இருக்கிறப்ப, அவ எப்படி சம்மதிப்பா?” என்று மெல்ல மகளின் தலையை கோதியப்படி கேட்டார் சாந்தினி.
“அப்போ அவ சம்மதிச்சா, நீங்க accept பண்ணிப்பீங்கதான” என்று நிரூ வேகமாய் கேட்டாள்.
அதில் சிரித்தவரோ, “அப்போ நீயும் கல்யாணத்துக்கு சம்மதிப்பீயா?” என்றார்.
“ச் போங்கம்மா” என்று நிரூ முகத்தை சுருக்கினாள்.
உடனே சாந்தினியும், “சரிடா. அந்தப் பொண்ணு சம்மதிச்சா, நம்ம லீகலா, அந்தப் பொண்ண adopt பண்ணிக்கலாம்” என்றிருந்தார்.
அதுக்குறித்து கேட்கதான், ஒவ்வொரு முறையும் நிரூ அஞ்சலியைப் பார்க்க வருகிறாள்.
ஆனால் எப்படி கேட்க என்று தெரியாது, அப்படியே சென்றுவிடுவாள்.
இப்போது அஞ்சலி கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லவும், அங்கு வைத்து கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.
“என்ன? என் கூட எங்க வீட்டுக்குதான் வர மாட்ட. கோவிலுக்கு கூட வர மாட்டீயா?” என்று புருவம் உயர்த்திக் கேட்டாள் நிரூ.
“அச்சோ, அப்படில்லாம் இல்லைங்க. வரேன்” என்று சொல்லிய அஞ்சலியும் நிருவுடன் அவளுடைய காரிலேயே சென்றாள்.
அந்த கோவிலைப் பார்த்ததும், மனம் தானாக அன்று நடந்த விஷயத்தை ஓட்டிப் பார்த்தது.
அதில் காரை விட்டு இறங்காது, அவள் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அதற்குள் நிரூதான், “வா. என்னாச்சு” என்று கேட்டாள். அதன் பின்னே இவ்வுலகம் வந்தவளும் வேகமாய் இறங்கினாள்.
நீருவைப் பார்த்ததும், கோவில் நிர்வாகி ஓடி வந்து, “வாங்க மேடம்” என்று பணிவாய் அழைத்தார்.
கூடவே, அவள் அருகில் நின்றிருந்த அஞ்சலியையும், யோசனையாய் பார்த்தார்.
அஞ்சலி அடிக்கடி, அந்த கோவிலுக்கு வருவாள் தான். ஆனால் பாவம் அவருக்கு தெரியவில்லை போலும்.
எப்படி தெரியும், அஞ்சலியும் நிரூவை போல், அத்தனைப் பெரிய காரில் வந்திருந்தால், மனதில் பதிந்திருப்பாளோ என்னவோ?
அவர் அஞ்சலியை பார்ப்பதை கவனித்த, நிரூவோ, “என் தங்கச்சி அஞ்சலி” என்று அறிமுகப்படுத்தினாள்.
அதில் அஞ்சலி அதிர்ந்து நிரூவைப் பார்க்க, அவளோ, அதை கண்டுக்கொள்ளாது, “நட இன்னும் க்ளோஸ் பண்ணலதான” என்று கேட்டாள்.
“அதெல்லாம் இல்ல மேடம். உள்ள வாங்க. ஸ்பெஷல் தரிசனத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்றேன்” என்றார்.
அதில் அஞ்சலியின் மனமோ, “எவ்ளோ நேரம் சாமி கும்பிட்டுட்டு நிப்ப. பின்னாடி வர்றவங்க கும்பிட வேண்டாமா? போ போ” என்று அவள் உடையைப் பார்த்து விரட்டி விட்டது அன்னிட்சையாய் நினைவுக்கு வந்தது.
“காசுதான், இங்க எல்லாமே” என்று மீண்டும் ஒரு முறை மனதினுள் அழுத்தமாய் சொல்லிக் கொண்டாள்.
அதற்குள், நிரூவோ, “நீ இவர் கூட போ அஞ்சலி. எனக்கு இங்க கொஞ்சம், அன்னதான அலுவலகத்துல வேல இருக்கு, அத முடிச்சிட்டு வரேன்” என்றாள்.
“இல்ல. பரவாயில்ல. நான் தனியாவே” என்று அத்தனை தயங்கினாள். அதை புரிந்துக் கொண்ட நிரூவும், “சரி. பட் எங்கேயும் போயிடாத” என்று சொல்லித்தான் அனுப்பி வைத்தாள்.
“ம்” என்று தலையாட்டிய அஞ்சலியும் சற்று தள்ளி வந்தாள். இங்கே நிரூவோ donation ஆபிஸுக்கு நடந்தாள்.
அஞ்சலியின் பின்னே, அந்த நிர்வாகி வர, இப்போது அவர் பக்கம் திரும்பினாள்.
அவரோ அத்தனைப் பணிவாய் அவள் முன்னே நிற்க, அதைப் பார்த்து, அவளுக்கு விரக்தி புன்னகைதான் வந்தது.
“நான் அந்த மேடமோட, கூட பொறந்த தங்கச்சி எல்லாம் இல்ல. நான் அவங்கள மாதிரி வசதியான வீட்டு பொண்ணும் கிடையாது. அதனால, என் முன்னாடி இப்படி நிக்க வேண்டாம். போயி உங்க வேலைய பாருங்க” என்றிருந்தாள்.
பெரும்பாலும் அவள் பேசுவதில்லை. ஆனால் இப்போதெல்லாம், வார்த்தைகள் வெளி வந்தால், அது சற்று அழுத்தமாகத்தான் இருந்தது.
அதில் நிர்வாகியோ குழம்பியப்படி, அங்கிருந்து சென்றுவிட்டார்.
இப்போது அவளோ, அங்கிருந்த அம்மன் சன்னதியின் முன் சென்று நின்றாள்.
கண்ணை மூடி கை கூப்பி அந்த கடவுளின் முன் நின்றிருந்த அஞ்சலி, இப்போது தன் கழுத்தில் இருந்த தாலியை வெளியில் எடுத்தாள்.
“இந்த தாலி, என் கழுத்துல எந்த மாதிரியான சூழ்நிலையில ஏறிச்சின்னு, உனக்கே தெரியும். அது வெறும் பொம்ம கல்யாணம்தான். ஆனாலும், என் கழுத்துல இருக்கிறதுக்கு பேரு தாலி. அதனால இத, நா கோவில் உண்டியல்ல போட்டுடுறேன். எனக்கு, இந்த தாலியும் வேண்டாம். இதனால எனக்கு வேற எந்த ப்ரச்சனையும் வேண்டாம்” என்று சொல்லியப்படி அதை கழட்டி, கோவில் உண்டியலில் போட்டாள்.
(இதன் பின், அஞ்சலியுடைய வாழ்க்கைக்குள் அத்விக் வர மாட்டானா? இல்லை இந்த தாலியை கழட்டியதால், இவள் இன்னும் எவ்வளவு ப்ரச்சனைகளில் மாட்டிக் கொள்ளப் போகிறாள்? அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தேவதை வருவாள்…
Anitha Satheesh
super
Keerthi S
semma
Malathi Malathi
sarmi sis en chellatha konjam kamichingana nalla irukum romba miss panren