தேன் – 12

வேந்தன் குடித்து விட்டு வந்திருப்பதை கவியால் நம்பவே முடியவில்லை. அப்படியே ஆணி அடித்தாற்போல், அங்கேயே அசையாது அடுத்த அடி எடுத்து வைக்காது நின்றாள்.

அவளைப் பார்த்தவனோ, அப்படி ஒருவள் நிற்கிறாள், என்பதை பொருட்படுத்தாது அவளைக் கடந்து அடி எடுத்து வைத்தான். போதையில் அவன் நடக்க முடியாமல் தடுமாறி கீழே விழப் போக, கவியோ அப்படியேத்தான் நின்றிருந்தாள்.

அதில் கேலியாய் உதட்டை சுழித்தவன், “ஒரு மனுஷனா நீ என்ன யோசிச்சிருந்தாக் கூட, என்னைப் பிடிச்சிருப்ப. நீத்தான் அப்படி கூட என்ன யோசிக்கலையே. நீங்கத்தான் வேலைக்காரி ஆச்சே. போங்க போயி உங்க வேலையப் பாருங்க” என்று சொல்லியவன், கீழே விழாது தள்ளாடியப்படி எழுந்து நின்றான்.

அவளோ அவனை முறைத்தப்படி நின்றிருந்தாள். அவள் கோவத்தை எல்லாம் சிறிதும் கண்டுக் கொள்ளாது அவன் வீட்டை நோக்கி நடக்க, இப்போது அவனின் சட்டையைப் பிடித்து அப்படியே நிறுத்தியிருந்தாள்.

சட்டென்று அவள் இழுக்கவும், இவனோ கோவமாய், “ஹே என்ன விடு. ஆப்ட்ரால் நீ ஒரு வேலைக்காரி. நீ எதுக்கு என்ன தடுக்குற” என்று கத்தினான்.

அவன் கத்தி முடிக்கும் முன்னே அவனின் கன்னத்தில் பளாரென்று ஓங்கி அடித்திருந்தாள். நிச்சயம் அவளிடம் இருந்து அப்படி ஒரு அடியை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். குடித்த போதை எல்லாம் எங்கோ செல்வது போல் ஒரு மாயை. கன்னத்தில் கை வைத்தப்படி அவளைப் பார்த்தான்.

ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருந்தவன், இப்போது அவளின் அடியில் ஒரு அடி பின் சென்று, தன்னை மீட்டான். இப்போது அவனுடைய கோவம் தலைத் தூக்க, “ஹேய் எவ்வளவு தைரியம் இருந்திருந்தா, நீ இந்த வேந்தனையே அடிச்சிருப்ப. உன்ன” என்றப்படி அவளை நோக்கி வர, அவளோ அவன் சட்டையைப் பிடித்து இழுத்தப்படி நடக்க ஆரம்பித்தாள்.

அவன் தெளிவாக இருந்திருந்தால், அவனுடைய சுண்டு விரலைக் கூட அவளால் அசைத்திருக்க முடியாது. இப்போது அவன் போதையில் இருக்க, அவள் இழுத்த இழுப்புக்கு நடந்தான்.

ஆனால் அவனுடைய கோவம் கடகடவென்று கூட, “என்னப் பண்ணிட்டிருக்க நீ? நான் யார் தெரியுமா? வேந்தன் எம் எல் ஏ. என்னைப் பார்த்தா சட்ட சபையே எந்திரிச்சு நிக்கும் தெரியுமா?” என்றவன் சொல்லி முடிக்கும் முன்னே, அவனை அங்கிருந்த நீச்சல் குளத்துக்குள் மொத்தமாய் பிடித்து தள்ளியிருந்தாள்.

கடைசி நொடியில், அவன் அவளையும் பிடித்திருக்க, இப்போது அவளும் சேர்ந்து அவனுடன் விழுந்தாள். நட்ட நடு ராத்திரியில், அந்த குளிரில் பைத்தியம் கூட இந்த நீச்சல் குளத்தின் அருகில் வந்திருக்காது. அந்தளவுக்கு தண்ணீர் அத்தனை ஜில்லென்று இருந்தது.

ஊசியென உடலில் இறங்கிய அந்த குளிர், இப்போது அவனுடைய போதையை மொத்தமாய் இறங்க வைத்திருந்தது. அவன் ஒரு நொடி தண்ணீரில் மூழ்கி, மீண்டும் மேலே வர, அவளோ அப்போதும் கூட அவனை முறைத்தப்படி, அங்கிருந்த படி வழியே மேலே ஏறினாள்.

இப்போது ஓரளவுக்கு போதை தெளிந்திருக்க, அவனோ கோவமாய் அவள் கையைப் பிடித்து மீண்டும் அந்த தண்ணீருக்குள் இழுத்தான். அதை எதிர்பாராத அவளோ, அவன் மார்பிலேயே வந்து விழுந்தாள்.

கோவமாய் அவனை விட்டு அவள் விழப் போக, இடையோரம் அத்தனை அழுத்தமாய் கரம் கொடுத்து அவளை இறுக்கி அணைத்தான். அவனின் செயலில், அவளுடைய கோவம் இன்னும் கடகடவென்று கூட, அவனோ அவளை விட கோவமாய், “ஆப்ட்ரால் நீ ஒரு வேலைக்காரித்தான. நான் குடிச்சா உனக்கென்ன” என்று சொல்லி முடிக்கும் முன்னே மீண்டும் அவன் கன்னத்தில் அடித்திருந்தாள்.

“ஹேய், என்னடி நீ சொன்னதத்தான நான் சொல்றேன். நீ” என்று அவன் ஆரம்பிக்கும் போதே அவள் மீண்டும் அவனை அடிக்க கை ஓங்க, இம்முறை அதை லாவகமாய் பிடித்து தடுத்தவன், “சொல்லு. நீ என்ன என் பொண்டாட்டியா? எந்த உரிமையில நீ என்ன அடிச்ச?” என்றான்.

“நீங்க என் விழியோட அண்ணன். அவளோட அண்ணன், இப்படி குடிச்சிட்டு வந்து நின்னா, அவ என்னப் பண்ணியிருப்பாளோ? அதத்தான் நான் பண்ணேன்” என்று கோவமாய் சொல்லிவிட்டு தன் கரத்தை அவனிடம் இருந்து உறுவினாள்.

அதில் அவனோ, “அப்போ உன் பிரண்டோட அண்ணன்னுத்தான் என்னை அடிச்ச?” என்று அவன் மீண்டும் அதையே கேட்க, இவளோ கோவமாய், “நீங்க ஏன் இப்படி பண்ணிட்டிருக்கீங்க? நீங்க எவ்வளவு பெரிய பொறுப்புல இருக்கீங்கன்னு கொஞ்சமாச்சும் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? எலெக்சன் அப்போ, ஏதோ பெருசா குடிய ஒழிக்கிறேன்னு சொல்லித்தான வோட் வாங்குனீங்க. இப்போ நீங்களே இப்படி குடிச்சிட்டு வந்து நிக்குறீங்க” என்றாள்.

அதை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாதவன், “அரசியல் வாதி ஆயிரம் பேசுவான், சொல்லுவான். அதை எல்லாம் பாலோ பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல” என்று அசராது கூறினான்.

“என்ன அவசியம் இல்ல. எல்லா அவசியமும் இருக்கு. நீங்க நல்லது பண்ணுவீங்கன்னு நம்பித்தான், உங்களுக்கு மக்கள் வோட் போட்டிருக்காங்க” என்றாள். அவளின் பேச்சில் காதைக் குடைந்தவன், “எனக்கு அவங்கள பத்தி எந்த கவலையும் கிடையாது. நீ சொல்லு. என்ன ஹஸ்பண்டா நினைச்சி சொல்லு. நான் கேட்குறேன். மத்தப்படி அடுத்தவங்களுக்காகலாம் என்னால எதையும் மாத்திக்க முடியாது” என்றான்.

அவனின் வார்த்தையில் எரிச்சலானவளோ, “என்னாலையும், யாருக்காகவும் எதையும் மாத்திக்க முடியாது” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு அங்கிருந்து மேலே சென்றாள்.

அவளின் பேச்சில் இவனோ, “போடி. அப்போ நீயும் என்னை மாத்தலாம்னு நினைக்காத. இன்னிக்கு ஒரு பாட்டில் புல்லா குடிச்சேன். நாளைக்கு பத்து பாட்டில் குடிப்பேன். அதுக்கப்புறம் இன்னும் முப்பது பாட்டில் சேர்த்து குடிப்பேன்” என்று கத்தி விட்டு அங்கிருந்த கம்பியைப் பிடித்து ஏற முயற்சித்தான்.

அவனின் பேச்சில் அவளோ சென்ற வேகத்தில் திரும்பி, “இன்னிக்கு சுவிம்மிங் பூல்ல தள்ளி விட்டேன். நாளைக்கு எதுல தள்ளி விடுவேன்னு தெரியாது” என்றாள்.

சட்டென்று அவள் நெருங்க, இவனோ அன்னிட்சையாய் பின்னே கால் வைக்க, ஈரத்தின் உதவியால் அது வலுக்கியது. ஏற்கனவே வயிற்றில் இருந்த காயம் வலியைக் கொடுக்க ஆரம்பித்திருக்க, இப்போது மீண்டும் தண்ணீரில் விழ சென்றான்.

அதற்குள்ளாக அவன் கையைப் பிடித்து அவனை தாங்கினாள் கவி. அதில் அவளைப் பார்த்தவனோ, “என் கையை விடு” என்றான்.

“ச் ஒழுங்கா ஏறி மேல வாங்க” என்று அவள் கோவமாய் சொல்ல, “முடியாது” என்று அவன் அப்படியே நின்றான்.

“என்கிட்ட இந்த பிடிவாதம் எல்லாம் வேண்டாம் சார்” என்று அவள் சொல்ல, “இந்த வேந்தனோட பிடிவாதத்த நீ இன்னும் முழுசா பாக்கல” என்றான் அவன்.

அதில் அவளோ அவன் கையை விட்டு விட்டு அவள் நீச்சல்குளத்தில் குதித்திருந்தாள். அவளின் செயலை எதிர்பார்க்காதவன், “ஹேய் என்னப் பண்ற?” என்று கத்தினான். ஏனெனில் அவனுக்கே குளிர் உடலை அத்தனை வாட்டி எடுத்தது. அவளெல்லாம் நிச்சயம் இந்த குளிரைத் தாங்க மாட்டாள். 

“நீங்க மேல போகாம, நானும் இந்த தண்ணியில இருந்து மேல வர மாட்டேன்” என்று ஒரு திண்டில் சாய்ந்து நின்றாள். அவள் பேசும் போதே அவள் முகமெல்லாம் சிவக்க ஆரம்பித்தது.

“ஹேய் ராங்கித்தனம் பண்ணாம மேல போ” என்றான். “உங்க பிடிவாதத்த விட இது ஒன்னும் பெருசு இல்ல” என்றாள் அவள்.

அவளின் பேச்சில் இன்னும் இன்னும் கடுப்பானவனோ, ஒரு கட்டத்தில், “சிட்” என்றப்படி அவளை இழுத்துக் கொண்டு மேலே வந்தான். தண்ணீருக்குள் இருக்கும் வரைக் கூட குளிர் தெரியவில்லை. ஜில்லென்று வீசிய காற்று, அவளை அப்படியே நடுங்க வைத்தது. அவனுக்குமே உடல் மெல்ல நடுக்கம் கொடுக்க ஆரம்பிக்க, அதிலும் வயிற்றில் இருந்த காயம் வேறு வலியை கொடுக்க ஆரம்பித்தது.

அங்கிருந்த துண்டை எடுத்து அவளிடம் கொடுக்க, இன்னும் கூட, அவனுடைய கண்கள் அத்தனை சிவப்பாய் இருந்தது. அதைப் பார்த்தவளுக்கு, அவனின் மீது இன்னும் இன்னும் கோவம் கூடியது.

அவள் முறைக்கவும், “என்னடி உன் பிரச்சன?” என்று கோவமாய் கேட்டான் அவன். அவன் கையைப் பிடித்து தன் தலையில் வைத்தவள், “இதுக்கப்புறம் நீங்க குடிக்க கூடாது” என்றாள்.

அதில் வேகமாய் கரத்தைப் உறுவியவனோ, “நான் அப்படித்தான் குடிப்பேன்” என்றான்.

அதில் மீண்டும் அவனை அடிக்க கை ஓங்கியவள், அதை செய்யாது மறுபடியும் தண்ணீரில் குதிக்கப் போக, “ஹேய்” என்று அவள் வயிற்றோரம் கரம் கொடுத்து அவளை பிடித்திழுத்தான்.

அதில் அவள் மொத்தமாய் அவனுடன் ஒட்டியப்படி நிற்க, அவனோ, “நான் குடிச்சா உனக்கென்ன?” என்றான்.

“நீங்க குடிக்க கூடாது” என்று அவள் அதையே சொல்ல, “ஏன்?” என்றான். “நீங்க என் வேந்தன் சார். என்னோட ரோல்மாடல், இப்படி குடிக்கிறது எனக்குப் பிடிக்கல” என்று கண்ணில் நீரோடு கூறினாள்.

நிச்சயம் அந்த கண்ணீர், அவனை அத்தனைக் குளிரிலும் சுட்டது. அதன் பின்னே சொல்ல முடியாத பல வலிகள் அதற்குள் இருக்க, ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தன்னை சமன்படுத்த முயற்சித்தான்.

“ஏன் சார் இப்படிப் பண்றீங்க?” என்று அவள் அத்தனை வேதனையாய் கேட்க, “நீ ஏண்டி இப்படி இருக்க? உனக்கும், எனக்கும் நடுவுல ஆயிரம் இருக்கட்டும். நீ என்ன புருஷன்ன நினைக்க வேண்டாம். உன் வேந்தன் சாரா நினைச்சிருந்தா கூட, செல்லம்மாகிட்ட அப்படி சொல்லியிருப்பீயா? நமக்குள்ள இருக்கிற பிரச்சனைய அவங்க முன்னாடி சொல்லி என்னை அசிங்கப்படுத்திட்டல்ல” என்றான்.

அவனின் வார்த்தையில், “யாரு உங்கள அசிங்கப்படுத்துனா? நானா? நீங்கத்தான் தேவையில்லாம, இத என் கழுத்துல கட்டி, உங்கள நீங்களே அசிங்கப்படுத்திக்கிட்டீங்க. இதெல்லாம் யாரோட நல்லதுக்கு பண்ணிருக்கீங்க? உங்க தங்கச்சிக்காகவா? இல்ல எனக்காகவா? இப்படி யாருக்காக நீங்க பண்ணியிருந்தாலும், இதனால யாருக்குமே நிம்மதி கிடைக்கப் போறது இல்ல. உங்களுக்கு வேனும்னா இந்த மாதிரி ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்ததுல நிம்மதி கிடைச்சிடலாம். ஆனா, என்னிக்குமே என்னால உங்க கூட வாழ முடியாது. அதுவும் எவனோ ஒருத்தன் கூட வாழ்ந்துட்டு, உங்க வாழ்க்கைக்குள்ள என்னால நுழையவே முடியாது. அது உங்களுக்கும் தெரியும். உங்க தங்கச்சிக்கும் தெரியும். தெரிஞ்சும் எதுக்காக இப்படி பண்ணீங்க?” என்று அத்தனை ஆதங்கமாய் கேட்டாள்.

அவளின் எந்த கேள்விக்கும் அவனிடம் அந்த நொடி பதில் இல்லை. ஆனால், அவன் அவளை அதற்கு மேல் பேச விட முடியாதப்படி, “என்னோட பிறந்த நாளுக்கு ரொம்ப நல்ல பரிசு கொடுத்துட்ட கவி. ப்பா என்னா அடி?” என்று கன்னத்தில் கை வைத்தப்படி, கூறினான் வேந்தன்.

ஒரு நொடி அவன் என்ன பேசுகிறான்? என்று புரியாது அவனைப் பார்த்தவள், அதன் பின்னே அவன் சொல்லியது புரிய, “என்ன?” என்றாள். சரியாக அன்னேரம் வேந்தனின் மொபைல் சத்தமாய் அடித்தது. மொபைலைப் பார்க்க, அதுவோ 12.30 என்று காட்டியது. விழிதான் அழைத்திருந்தாள்.

வழக்கமாய் 12 மணிக்கு அழைத்து விடுவாள். இன்று வேண்டுமென்றே தான் அரை மணி நேரம் கழித்து கால் செய்திருந்தாள். அவனோ அவளைப் பார்த்தப்படியே அட்டண்ட் செய்து, “சொல்லுடா குட்டிமா” என்றான்.

அந்தப் பக்கம் அவள் என்ன சொன்னாளோ? இல்லை கேட்டாளோ, இங்கே இவனோ, “உன் அண்ணி இதுவரைக்கும் யாருமே எனக்கு கொடுக்காத கிப்ட கொடுத்திருக்கா. சோ அவளுக்கு என் ரிட்டன் கிப்ட கொடுத்துட்டு உனக்கு கூப்பிடுறேன். நீ போய் தூங்கு” என்றப்படி கால்லை கட் செய்தான். இப்போது கவியோ இன்னுமே அப்படியேத்தான் அதிர்ச்சி விலகாது நின்றிருந்தாள்.

(இப்போ எதுக்கு இந்தப் புள்ள இப்படி நிக்குது? ஆனாலும் அவன விட இவ தான் பெரிய ரவுடியா இருப்பாப் போல. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 12 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***