தேன் – 10

படம் பார்க்க வேண்டும் என்று வேந்தன் சொல்லியதும், ஏதோ டிவியை போட்டு பார்ப்பான் என்று கவி எதிர்பார்த்திருக்க, அவனோ, அவளை அந்த வீட்டில் இருக்கும் அடுத்த மாடிக்கு அழைத்துச் செல்ல சொன்னான். அவளும் அங்கு அழைத்துச் செல்ல, அங்கே தியேட்டர் போன்ற செட்டப்பில் ஒரு அறை இருக்க, அவள் ஒரு நொடி திகைத்து நின்றாள். அதன் பின் அதை முகத்தில் காட்டாது, அவனுடன் சென்றாள்.

உள்ளே நுழையும் போதே, “இங்கையும் லேடிஸ் ஸ்பெஷல் எல்லாம் என்னால போட முடியாது. பட், நீயும், நானும் மட்டும் தனியா பார்க்கலாம்” என்று சொல்லி கண்ணடித்தான்.

அவனின் செயலில், அவளோ அதிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ, “கப்பிள் சீட்ல உட்கார்ந்து பாப்போமா? இல்ல சிங்கிள் சீட்லையே ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பார்ப்போமோ?” என்று அசாராது கேட்டான்.

அவனின் கேள்வியில், “நான் வரவே இல்ல” என்று சொல்லியப்படி விலக முயன்றாள். அதற்குள்ளாக அவள் கையை அழுத்திப் பிடித்தவன், “அரசியல்வாதி பொண்டாட்டின்றத அடிக்கடி நிருபீக்கிற பாத்தீயா? ஆனா கொடுத்த வாக்குறுதிய நீ மறந்தாலும், நான் மறக்க மாட்டேன்” என்றவன் அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான்.

எழவும் முடியாது, அவனருகில் அமரவும் இயலாது அவள் தடுமாற, சட்டென்று அவள் இடையில் அழுத்தி கரம் பதித்து, “சும்மா அசைஞ்சிட்டே இருந்தன்னா, இடுப்புல இருக்கிற கை, எங்க வேணும்னாலும் பதியும். அப்புறம் என்ன தப்பு சொல்லக் கூடாது” என்று அசராது சொல்லி, அவளை அசையவிடாது செய்திருந்தான்.

“நல்ல ஹாரர் மூவியா பார்க்கலாம். அப்பத்தான் பேயைப் பார்க்கிறப்பலாம், சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்” என்று குதர்க்கமாய் அவன் சொல்ல, அவளோ அவனை இப்போது பேயைப் பார்ப்பது போல் பார்த்தாள்.

“என்ன? தமிழ் சினிமாவுல பேய் எல்லாம் எவ்ளோ ஹாட்டா, டெம்டிங்கா இருக்கும் தெரியுமா? சரி விடு. பேயை சைட் அடிக்காம, உன்னையவே சைட் அடிச்சிட்டு போறேன்” என்று நக்கலாய் சொல்ல, அவளோ அவனை புரியா மொழி பேசுபவன் போல் பார்த்தாள்.

“என்னடி? எதுக்கெதுத்தாலும், ஹிந்தி படத்த சைனீஸ்ல பாக்குற மாதிரி மூஞ்ச வைக்கிற?” என்றான். அதில் அவளோ எதுவும் சொல்லாது முகத்தை திருப்பிக் கொள்ள, “டேய் வேந்தா, அவ அமைதியா இருக்கிறப்பையே படத்த போட்டுடுடா. அப்புறம் அவ காஞ்சனாவா மாறுனா, அப்புறம் நீத்தான் கஷ்டப்பட வேண்டி வரும்” என்று தனக்குள் சொல்லியப்படி படத்தை ஆன் செய்தான்.

பேய் படம் எல்லாம் இல்லை. ஏதோ சமீபத்தில் வந்த புது படம் போல் தான் அவளுக்கு தோன்றியது. கல்லூரி படிக்கும் போது வாரம் ஒரு முறையாவது விழியுடன் சேர்ந்து படத்துக்கு சென்று விடுவாள். அதன் பின் தியேட்டர் இருக்கும் திசைக்கு கூட அவள் சென்றது இல்லை. வீட்டில் அமர்ந்து டிவி கூட அவள் நிம்மதியாய் பார்த்தது கிடையாது. அதனால், அவளுக்கு சமீபத்தில் என்ன படம் வந்தது? என்பது கூட தெரியாது.

அதனால் பிடிக்கவில்லை என்று சொன்னாலும் அவள் அந்தப் படத்தில் மூழ்கிவிட, அவனோ, அவள் பக்கம் திரும்பி அவளில் மூழ்கிவிட்டான். இப்படி அவளுடன், இத்தனை நெருக்கத்தில் ஒட்டி உரசி படம் பார்க்க வேண்டும் என்றெல்லாம் அவன் ஒரு நாளும் நினைத்தது இல்லை. ஆனால், இந்த மினி தியேட்டரை உருவாக்கியது அவளுக்காக. ஏனோ அன்று அவன் தங்கை, இவள் மற்றவர்களுடன் சேர்ந்து படம் பார்க்க தயங்குவதாக சொல்லிய நொடி சட்டென்று அவன் மூளையில் உதயமான விஷயம் இதுத்தான். அதை செய்யும் போது கூட, தங்கைக்காகத்தான் என்று சொல்லிக் கொண்டான். ஆனால் இப்போது இவளைப் பார்க்கும் போது, இவளுக்காகத்தான் என்று அவனின் மனம் அடித்து சொல்லியது.

அதில் கன்னத்தில் கை வைத்தப்படி அவளைப் பார்க்க ஆரம்பித்து விட்டான். அவளோ விழி எடுக்காது, திரையைப் பார்த்துக் கொண்டிருக்க, அந்த கலர் கலர் லைட்டின் வெளிச்சத்தில், அவள் முகத்தில் வந்துப் போகும் சின்ன சின்ன பாவனைகளையும் அசையாதுப் பார்த்தான்.

காதல் ஒருவனை எத்தனைப் பெரிய பைத்தியகாரனாக்கும் என்பதற்கு அவனே சிறந்த உதாரணம். இல்லை என்றால், அவனுக்கு இருக்கும் அத்தனை வேலையையும் போட்டு விட்டு, இவளுடன் இருப்பதற்காக, இப்படி கை, கால்களை உடைத்துக் கொண்டு வீட்டில் வந்து இருப்பானா? அவளுடைய இந்த அருகாமைக்காக, மட்டுமே அன்று அவன் அடி வாங்கி வந்தான்.

இப்போது அதை எல்லாம் யோசித்தவனுக்கு ஏனோ தன்னை நினைத்தே சிரிப்பு வந்தது. அங்கே அவளோ எதார்த்தமாய் அவனின் பக்கம் திரும்ப, தன்னந்தனியாய் சிரிப்பவனை கேள்வியாய் பார்த்தாள்.

பின்னே படத்தில் அத்தனைப் பேரும் அழுதுக் கொண்டிருக்க, இவளுக்கே அந்த காட்சியைப் பார்க்க இயலாதுத்தான் முகத்தை திருப்பினாள். ஆனால் அவனோ ஏதோ காதல் காட்சியைப் பார்ப்பது போல் சிரித்தால் அவளும் என்ன செய்வாள்.

“இப்போ எதுக்கு நீங்க இப்படி சிரிக்கிறீங்க?” என்றாள். அப்போதே இவ்வுலகம் வந்தவன், “என்னடா இது? சிரிக்க கூட கூடாதா?” என்று எதிர்கேள்வி கேட்க, “ச் இவர்கிட்ட போய் கேட்டேன் பாரு. என்ன சொல்லனும்” என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டவள், மீண்டும் படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.

ஆனால் குறுகுறுவென்று அவன் அவளையே பார்த்திருக்க, ஏனோ இப்போது அவளால் படத்தை கவனிக்க முடியவில்லை. அவன் பக்கம் திரும்பினாள். அப்போதும் அவன் பார்வையை திருப்பிக் கொள்ளவில்லை.

அவன் கண்ணில் தெரிந்த அந்த பளபளப்பு, அவளை என்னமோ செய்தது. உடல் நடுங்கி, இதயம் படபடக்க, அவனைப் பார்த்தாள். சட்டென்று இடையில் பதிந்திருந்த கரத்தில் அழுத்தம் கூட்டி தன் பக்கம் இழுத்தவன், “ஆனாலும் நீ அழகித்தாண்டி. என்னையவே உன் பின்னாடி சுத்த வச்சிட்டல்ல” என்றான்.

அவனின் நெருக்கத்தை விட, அவனின் அந்த வார்த்தைத்தான் அவளை மொத்தமாய் கலங்க வைத்தது. வேகமாய் அவனை விட்டு விலகி ஒரு இருக்கை தள்ளி அமர்ந்தாள். அவனோ தடுக்க வில்லை. இப்போது மாறாக, அவளுக்கு முன் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து அவள் பக்கம் திரும்பி அவளைப் பார்த்தான்.

“படம் பாக்க பிடிக்கலன்னா போலாம்” என்று அவள் அவனைப் பார்க்காது சொல்ல, “உன்னை இப்படி பார்க்க ரொம்ப பிடிச்சிருக்கே” என்றான்.

அதில் பட்டென்று திரும்பி அவனை அவள் பார்க்க, “ஆக்சிவலி, அன்னிக்கு உன்ன நான் விட்டிருக்க கூடாது. அப்பவே மொத்தமா எனக்கு சொந்தமாக்கியிருக்கனும். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல, எனக்கு மொத்தமா சொந்தமாகிடேன். சத்தியமா அதுக்கப்புறம், உன்ன என்னைவிட்டு விலக்கிக்கவே மாட்டேன். எனக்குள்ளையே பத்திரமா உன்ன வச்சிக்கிறேன்” என்றான்.

அவன் வார்த்தையிலும், அவன் கண்களில் தெரிந்த அந்த காதலிலும், இவளால் சில நொடிகள் சுவாசிக்க கூட முடியவில்லை. எப்பேற்பட்ட வார்த்தைகள்? இதற்கு மேல் ஒருவனால் அவன் மனதில் இருப்பதை அழகாய் சொல்லிவிட முடியுமா? ஆனால் அது அவளால் முடியாதே. அதில் மனதை கல்லாக்கி, “நீங்க பத்திரமா வச்சிக்கிடுற அளவுக்கு நான் ஒன்னும் வைரமோ, வைடூரியமோ கிடையாது. பல காலடி பட்ட வெறும் கூழாங்கல்” என்றாள்.

“வைரத்தையும், வைடூரியத்தையும் பூட்டித்தான் வைக்கனும். ஆனா கூழாங்கல்ல வச்சித்தான் வீடே கட்டனும். இப்போ எனக்குள்ள உன்ன வச்சிக்க விருப்பம் இல்லன்னா விடு. நான் உனக்குள்ள வந்துடுறேன். நீ என்ன பத்திரமா பாத்துக்கோ” என்று அசராது கூறினான்.

அவனிடம் பேசி அவளால் வென்று விட முடியுமா என்ன? அந்த கடுப்பில், “இதையெல்லாம் போய் மேடையில பேசுனா நாலு பேர் கை தட்டுவாங்க. ரெண்டு ஓட்டாச்சும் விழும், இங்க பேசி ஒன்னும் ஆகுறது இல்ல” என்று சொல்லிவிட்டு எழுந்தாள்.

“என்ன ஆகனுமோ, அது தானா ஆகும். சோ அத பத்தி எல்லாம் நீ கவலைப்படாத. எனக்கு ஆக வேண்டியத நான் பாத்துப்பேன்” என்று அத்தனை அசராது கூறினான்.

இப்போது அவளுடைய தன்மானம் சீண்டப்பட, “நீங்க நினைக்கிறத ஒரு நாளும் என்கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது. என் விருப்பம் இல்லாம, உங்களால அத நினைச்சிக் கூட பார்க்க முடியாது” என்று கோவமாய் கத்தினாள்.

“வரே வாவ். பரவாயில்ல என்கிட்டையாச்சும். உனக்கு இத சொல்ல தைரியம் வந்திச்சே. ஏன்னா, நீங்கத்தான், தமிழ் மகளாச்சே, குடிமகனாவே இருந்தாலும், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்றத மீற மாட்டீங்களோன்னு நினைச்சிட்டேன்” என்று அத்தனை எள்ளலாய் கூறினான்.

ஏனோ அந்த வார்த்தையில் இருந்த மறைப் பொருள் அவளை மொத்தமாய் வீழ்த்தித்தான் பார்த்தது. அதென்னவோ ஆரம்பத்தில் இருந்தே அவனிடம் காட்டும், இந்த ஒதுக்கம், வீம்பு, திமிர் இது எதையும் அவள் மற்ற யாரிடமும் காமித்தது இல்லையே. ஒரு வேளை இதை எல்லாம் ஆரம்பத்திலேயே காமித்திருந்தால், அவளுக்கு இந்த நிலை வந்திருக்காதோ? முதன் முறை அவளுடைய இயலாமையை நினைத்து கண்ணீர் வடித்தாள்.

அவள் கன்ணீரைப் பார்க்கும் வரை மட்டுமே வேந்தனால் சுடு சொல்லை வீச முடியும். அவளின் ஒரு துளி கண்ணீர் அவனை இப்போது மொத்தமாய் சாய்க்க, “ச் என்னடா வேந்தா” என்று தன்னைத் தானே திட்டியவன் எழுந்து அவளின் அருகில் சென்றமர்ந்தான்.

அவளோ அதை உணர்ந்தாலும் முகத்தை தொங்கப்போட்டு அழுதுக் கொண்டிருக்க, மெல்ல அவள் தோள் மீது கையைப் போட்டான். அவளோ அவன் கையை தட்டிவிடப் போக, அதற்குள்ளாக அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

இப்போது அவள் மொத்தமாய் அவன் சட்டைக்குள் புகுந்தாள். கணவனாக அல்ல, ஒரு அன்பனாய் அவள் அவனிடம் அந்த நொடி ஆதரவை தேடினாள்.

ஏனோ அவளுக்கு என்று அழ கூட நேரம் கிடைக்கவில்லை. இப்படி தோள் சாயவும் யாரும் இல்லை. அதனால் அவன் சட்டையை முற்றும் முழுதாய் கசக்கியப் பின்னும் கூட அவள் அவன் மார்பில் இருந்து விலகிக் கொள்ளவில்லை.

அவனுமே அவள் வலி தீரட்டும். இப்படியாவது அவளுக்குள் இருக்கும் அத்தனை கவலையும் பின்னுக்கு செல்லட்டும் என்று அவளை அணைத்து, தன் நெஞ்சுக்கூட்டை அவளின் வீடாக்கி அவளை பொத்திக் கொண்டான்.

அவள் கண்ணீர் அவன் சட்டையைத் தாண்டி அவன் தேகத்தை சுட்டது. அது அவனுக்கு வலித்தது. அவளோ அழும் வேகத்தில், அவன் வயிற்றை இறுக்கி கட்டிக் கொள்ள, அடிவயிற்றில் இருந்த காயத்தில் வலி எடுக்க ஆரம்பித்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது, அவள் ஆறுதலுக்காக தன்னை மொத்தமாய் அவளிடம் கொடுத்தான்.

சில பல நிமிடங்கள் அப்படியே செல்ல, “டொப் டொப்” என்று ஸ்பீக்கரில் ஒலித்த சத்தத்திலேயே இவ்வுலகம் வந்தவள், திடுக்கிட்டு அவனை விட்டு வேகமாய் விலகினாள்.

இத்தனை நேரம் அவனை அவள் அணைத்துக் கொண்டிருந்தாள் என்பதே அவளுக்கு அத்தனை பலவீனமாக்கியது. அது அவனின் மீதுத்தான் கோவமாய் திரும்பியது.

“என்னை பலவீனமாக்கி, நீங்க நினைச்சத அடையனும்னு நினைக்கிறீங்கத்தான? அப்போ உங்களுக்கும், மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம்? எல்லாத்தையும் எடுத்துக்கிட்ட இந்த கடவுள், என்னை ஒரு கூணாவா? இல்ல ” என்று அவள் அடுத்து என்ன சொல்வாள் என்பதை முன்பே யூகித்தவன், அவள் பேசும் முன்னே, “நீ எப்படி இருந்திருந்தாலும், நான் இப்படித்தான் இருந்திருப்பேன். நீ என் கண்ணுக்கு அழகியாத்தான் தெரிவ. இன்னொரு தடவ என் மேல கோவத்த கொட்டுறேன்னு, உன்னை நீயே ஏதாச்சும் சொன்ன, கொன்னுடுவேன்” என்றான். அவன் முகத்தில் அத்தனைக் கோவம்.

“ஆமாடி நீ அழகாத்தான் இருக்க. ஊர் உலகத்துல இருக்கிற அத்தனப் பேரை விட நீ பேரழகித்தான். அதுக்காக ஒன்னும் நான் உன் பின்னாடி வரல. மத்தவங்களுக்கும், எனக்கும் என்ன வித்தியாசம்னு நீ கேட்டத்தான. அதுக்கு இப்போ நான் பதில் சொல்றேன். கேட்டுக்கோ. இந்த தேன்ன, இந்த சுடரால மட்டும் தான் ருசி பார்க்க முடியும். இந்த சுடர, இந்த தேனால மட்டும் தான் தொட்டு தழுவ முடியும். போதும்மா?” என்று கோவமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான் தேன்கவியின் சுடர் வேந்தன்.

(ஒரு வாசகமா சொன்னாலும், சும்மா திரு வாசகமா சொன்னப் பாரு. ப்பா. வேற லெவல் சுடர். நெக்ஸ்ட் எலெக்சன்ல என் வோட்டு உனக்குத்தான்யா. சரி அடுத்து என்னாகப் போது? கவியோட மனசு கொஞ்சமாச்சும் மாறுமா? இப்படி எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 10 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***