தேன் – 41

தன்னைக் கட்டிக் கொண்டு அழும் தங்கையைப் பார்க்க, பார்க்க கவியின் மீது அத்தனை கோவம் முளைத்தது. அதில் தங்கையை சற்று விலக்கி, “அண்ணா மேல உனக்கு நம்பிக்க இருக்குல்ல” என்றான்.

“எண்ணென்னா?” என்று அவள் கேட்க, “இதுக்கப்புறம், அவ விஷயத்துல நம்ம தலையிட வேண்டாம். நீ அதுக்காக, உன் லைப்ப ஸ்பாயில் பண்ணிக்க கூடாது” என்றான்.

“ஆனா அண்ணா” என்ற விழிக்கோ, கவியைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் இருக்கவே முடியாது. ஆனாலும் அண்ணனின் வாழ்க்கை, வீணாகப் போவதை அவளால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை.

சில நிமிடங்களுக்கு முன்பு வரை, கவிக்கு வேந்தனைப் பிடிக்கும் என்றுத்தான் நினைத்திருந்தாள். ஆனால் அவள் சொல்லிய, “உன் அண்ணா வேனும்னா, உனக்காக என்ன ஏத்துக்கலாம். நான் எதுக்கு ஏத்துக்கனும்? நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு உயிர் பிச்ச கொடுத்தீங்க. அதுக்காக நீங்க சொல்றத எல்லாம் நான் செய்வேன்னு எப்படி நினைச்சீங்க? எப்பவாச்சும் உன்கிட்ட வந்து, எனக்கு உன் அண்ணாவ பிடிக்கும்னு நான் சொல்லியிருக்கேன்னா? நீயா ஒன்ன கற்பன பண்னி, உன் அண்ணன் வாழ்க்கைய மட்டும் இல்ல. என் நிம்மதியையும் கெடுத்துட்ட. அப்படி இருக்கிறப்ப, உன் அண்ணா மேல எனக்கு எப்படி அக்கறையோ, பாசமோ வரும். எனக்கு வெறுப்பா இருக்கு. இதுக்கு அந்த ஆக்ஸிடெண்ட்ல நான் செத்திருக்கலாம். தயவு செஞ்சு என்ன விட்டுடுங்க. இல்லையா, எனக்கு பைத்தியம் பிடிச்சு. உங்க அண்ணாவ கொன்னாலும் கொண்ணுடுவேன்” என்று சொல்லி முடிக்கும் முன்னே அவள் கன்னத்தில் பளாரென்று அடித்திருந்தாள் விழி.

நினைவில் இருந்த விழிக்கு குடிக்க தண்ணீர் புகட்டியவன், “எனக்கு நீத்தான் குட்டிமா முக்கியம். நீ இப்படி அழுதா அத என்னால தாங்கிக்கவே முடியாது” என்றான்.

“அழலண்ணா” என்றவள், கண்ணீரை துடைத்துக் கொள்ள, வேந்தனோ, தன் தோளில் சாய்த்து, தட்டிக் கொடுத்து தங்கையை தூங்க வைத்தான். அவள் தூங்கியதும், அவளை தன் படுக்கையிலேயே படுக்க வைத்து விட்டு கவியைத் தேடி வந்தான்.

கவனமாய் கதவை சாற்றியவன், விழியின் அறையில் சென்றுப் பார்க்க அவள் அங்கு இல்லை.

அதில் தன்னுடைய அலுவலக அறைக்குள் நுழைந்தவன். சில டாக்குமெண்ட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு, அவளைத் தேடி மேலே மொட்டை மாடிக்கு சென்றான்.

அங்குத்தான் அந்த நிலாவை வெறித்தப்படி நின்றிருந்தாள் தேன் கவி. பார்த்த உடனேயே அவனுக்கு அத்தனை கோவம் வந்தது. ஆனாலும் விழி சொல்லிய உண்மை அவனுக்கு புரிய, மூச்சை உள்ளிழுத்து அவளின் அருகில் வந்தான்.

காலடி சத்தம் கேட்டு அவள் திரும்ப, அவனைப் பார்த்ததும் மெல்லிய அச்சம் அவளுக்குள் சூழ்ந்தது. அவன் தங்கையை அல்லவா, அழ வைத்து விட்டு வந்திருக்கிறாள். எப்படியும் அவன் அடித்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதில் அன்னிட்சையாய் ஒரு அடி பின்னே எடுத்து வைத்தாள்.

கழுத்தில் அவன் பிடித்த பிடியில், அவனின் விரல் தடம் பதிந்திருக்க, விழி அடித்த அடியில் அவளின் மறு கன்னம் சிவந்து வீங்கியிருந்தது. அவளையே சில நொடிகள் நின்று பார்த்தான்.

அதன் பின் “உனக்கு எங்கள விட்டு போகனும் அவ்வளவுத்தான? சரி போ” என்றான்.

அவனின் வார்த்தையில் அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க, “பட் ஒரு கண்டிஷன்” என்றான்.

அதில் அவளோ அலட்சியமாய், “அதான, என்ன நிம்மதியா இருக்க விட மாட்டீங்களே” என்று பட்டென்று கூறினாள். அதில் உள் நாக்கு வரை வந்த கோவத்தை இழுத்துப் பிடித்து, “இது எல்லாம். உன் பேர்ல நான் வாங்குன பிராபர்டீஸ். உன்ன என்னிக்கு என்னோட பொறுப்பா ஏத்துக்க ஆரம்பிச்சேன்னோ, அப்பவே உன்னோட முழு பொறுப்பும் என்னோடதா இருக்கனும்னு நினைச்சேன். அதனால நான் சம்பாதிச்சதுல உனக்கும், என் தங்கச்சிக்கும் சரி சமமாத்தான் எல்லாமே வாங்குவேன்” என்றான் வேந்தன்.

அதில் அவனை நிமிர்ந்துப் பார்த்தவளுக்கோ உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து போகும் உணர்வு. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது, “இத எதுக்கு என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க? ஈவன் எனக்கு நீங்க சாப்பாடு போட்டு படிக்க வச்சிருக்கீங்க. அதுவே எனக்கு பெரிய விஷயம் தான்” என்றாள்.

“எஸ் அப்படித்தான் நானும் நினைச்சிட்டேன் போல. அதான் உன் மனசுல, நான் இல்லன்னு தெரிஞ்சும், என் தங்கச்சி ஆசைக்குன்னு உன் கழுத்துல தாலிய கட்டிட்டேன். பட் ஒரு தாலிய கட்டுறதால, யாரும் யாரோட வாழ்க்கைக்குள்ளையும் போக முடியாது. வாட்டெவர். இதுக்கு மேல, நீ அந்த தாலிய சுமக்க வேண்டிய எந்த அவசியமும் இல்ல. உனக்கு நான் என்கிட்ட இருந்து விடுதல கொடுக்கிறேன்” என்றான்.

அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும், அவள் அவனை அதிர்ந்து பார்த்தாலே தவிர, வேறு ஒன்றும் பேசவில்லை. “ஆனா, இந்த பிராபர்டீஸ எல்லாம் நீ அக்சப்ட் பண்ணிக்கனும்” என்று அவள் கையில் அந்த பேப்பர்களை எல்லாம் திணித்தான்.

“இல்ல முடியாது” என்று கவி சொல்ல, “இங்கப்பாரு. இதெல்லாம் உன்னோட பேர்லத்தான் இருக்கு. உனக்கு, இதெல்லாம் வச்சிக்க விருப்பம் இல்லன்னா, அத உன் விருப்பப்படி என்ன வேனும்னாலும் பண்ணிக்கோ. பட், நான் என் திருப்திக்காக கொடுக்கிறேன். இத நீ அக்சப்ட் பண்ணிக்கிட்டுத்தான் ஆகனும்” என்றான்.

அவளின் மனமோ அடுத்து அவன் சொல்லப் போகும் அந்த வார்த்தையை நினைத்து பதறியது. ஆனாலும் திடமாய் அதை முகத்தில் காட்டாது அவனைப் பார்த்தாள். “உன் கழுத்துல இருக்கிற தாலிய கழட்டிக் கொடுன்னு என்னால கேட்க முடியாது. பிகாஸ், அந்த தாலியும் உனக்காக வாங்குனதுத்தான். சோ அத அழிச்சிட்டு உனக்கு பிடிச்ச மாதிரி செயின் பண்ணிக்கோ. இல்லையா? அதையும் தூர வீசனும்னா வீசிக்கோ. அது உன் விருப்பம்” என்றான்.

அவனின் அந்த வார்த்தையில், அவன் கண்கள் சிறிதாய் கலங்கியது. அதையும் தலையைக் குலுக்கி ஒதுக்கி தள்ளியவன் அவளைப் பார்த்தான். அவள் கண்ணில் சின்னதாய் கூட கலக்கம் தெரியவில்லை. அதுவே அவள் மனதில் அவன் இல்லை என்பதை வெளிச்சம் போட்டு காமித்தது.

“நாளைக்கு காலையில நானே கொண்டு போய் உன்ன ஆசிரமத்துல விட்டுறேன். பட் ஒரே ஒரு அட்வைஸ். உனக்கு என்ன பிடிக்கலன்னு தெரியும். அட்லீஸ்ட் உனக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தன மீட் பன்ணா, அவன கல்யாணம் பண்ணிக்கோ. ஏன்னா லைப்ல ரொம்ப நாள் தனியாவே இருக்க முடியாது. எப்போ என்ன ஹெல்ப் வேணும்னாலும், நீ தாராளமா, விழிக்கு கால் பண்ணலாம். அவளுக்கு உன் மேல கோவம்லாம் இல்ல. உனக்கு என்ன பிடிக்காதுன்றத என்கிட்டையே சொல்லிருக்கலாம். அவகிட்ட சொல்லியிருக்க வேண்டாம்.” என்று சிறு ஆதங்கத்தோடு கூறினான்.

அவனின் வார்த்தையில், அவள் பூமி அவள் கால்லை விட்டு நழுவியது போல் இருக்க, ஆனாலும் அத்தனை அழுத்தம். முகத்தில் சிறிதாய் கூட எதையும் காமிக்கவில்லை.

“நானே போயிக்கிறேன்” என்று கவி சொல்ல, “சரி உன் விருப்பம்” என்றவன் அங்கிருந்து கிளம்பினான். அவளோ அப்படியே நின்றிருக்க, சென்றவன் ஒரு நொடி நின்று மீண்டும் அவள் பக்கம் திரும்பி, “உனக்கு என்னத்தான பிடிக்காது. குட்டிமாவ பிடிக்கும்த்தான. அவள மட்டும் வெறுத்துடாத. அவளுக்கு நீன்னா ரொம்ப இஷ்டம்” என்று சொல்லிவிட்டு சென்றிருந்தான்.

அவன் சென்றதும் அப்படியே அங்கிருந்த சுவற்றில் சாய்ந்தவள், கையில் இருந்த டாக்குமெண்டைப் பார்த்தாள். அவள் கண்களில் ஒரே ஒரு சொட்டு கண்ணீர் அதில் விழுந்தது.

இங்கே கீழே தோட்டத்துக்கு வந்த வேந்தனின் மனமோ ஒரு நிலையிலேயே இல்லை. தங்கைக்காகத்தான் கவியை அழைத்து வந்தான். இப்போதும் அவளின் மீது காதல் இருக்கிறதா? என்று கேட்டால் அவனுக்கு பதில் சொல்ல தெரியாது. ஆனால், தங்கைக்காக அவளை திருமணம் செய்ய நினைத்தான். ஆனால் தங்கை கவியைத் தவிர வேறு ஒருத்தியை திருமணம் செய்ய கூறியிருந்தால், அவன் அதை செய்திருப்பானா? என்பது கேள்வியே. அவனுக்கு கவியைப் பிடிக்கும். அதற்கு காதல் என்ற பெயரெல்லாம் இல்லை. எப்போது அவள் கழுத்தில் தாலி கட்டினான்னோ, அந்த நொடியில் இருந்து, அவளை தன் மனைவியாய் நினைத்துத்தான் நெருங்கினான். ஆனால், அவளுக்கு அவனைப் பிடிக்கவே பிடிக்காது என்று யோசித்திருக்கவில்லை.

அப்படியே அங்கிருந்த ஊஞ்சலில் சென்று அவன் படுத்து விட கவியோ மொட்டை மாடியில் நின்று அவனைத்தான் பார்த்திருந்தாள். பார்த்தவளுக்கு கண்ணெல்லாம் கலங்கியது. அவளுடைய மனம் அவள் கடந்த காலத்தை எண்ணிப் பார்த்தது. அதில் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், “நான் உங்களுக்கு வேண்டாம் சுடர். அதுத்தான் இந்த ஜென்மத்துல உங்களுக்கு நான் செய்ற ஒரே நன்றிக்கடனா இருக்கும்” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லிக் கொண்டாள்.

இப்படியாக அன்றைய இரவு கடக்க, அடுத்த நாள் காலையில், கவி கீழே இறங்கி வரும் போது வீட்டில் யாருமே இல்லை. அதில் குழப்பமாய், அவள் நின்றிருக்க, வீட்டின் முன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

உடனே அவள் சென்று வெளியில் பார்க்க, விழித்தான் மகிழ்ச்சியாய் அவளின் முன்னே வந்து நின்றாள். ஏனோ தோழியைப் பார்க்க குற்ற உணர்ச்சியாய் இருந்தது.

“விழி நான்” என்றவள் ஏதோ சொல்லும் முன்னே, “என்ன கவி அதுக்குள்ள எந்திரிச்சிட்டீயா? லேட்டாத்தான் தூங்குனேன்னு அண்ணா சொன்னாரு” என்று அக்கறையாய் விழி கேட்க, அவளுக்கோ நடந்த அனைத்தும் கனவோ என்று தோன்றியது.

அதற்குள் அவள் நினைவை கலைப்பது போல் இன்னொரு பெண்ணின் சிரிப்பு சத்தம் அவள் செவியை நிறைத்தது. அதன் பின்னே விழியின் பின்னே அவள் எட்டிப் பார்க்க, அங்கே வேந்தனின் கையைப் பிடித்து நின்றிருந்தவளைப் பார்த்து பற்றிக் கொண்டு வந்தது.

அவள் கண்கள் கோவத்தில் சிவக்க, வேந்தனோ அன்னிட்சையாய் தன் கரத்தைப் பிடித்தவளின் கரத்தை விலக்க முயற்சித்தான்.

“மாமா. இன்னிக்கு எனக்கு இந்த ஊர சுத்தி காமிப்பீங்கத்தான?” என்று ஆசையாய் அவள் கேட்க, “எனக்கு வேல இருக்கு” என்று சொல்லியவன், “குட்டிமா, இவ ரூமுக்கு கூட்டிட்டு போ” என்றப்படி மீண்டும் திரும்பினான்.

“என்ன மாமா? அதுக்குள்ள கிளம்புறீங்க. அம்மா, உங்களுக்கு பிடிக்கும்னு” என்றவள் ஏதோ சொல்லும் முன்னே அவனோ, விழியை முறைத்தான். பின்னே அவள் தானே, இவளை அழைத்துக் கொண்டு வந்தாள்.

அதற்குள் விழி தான், “ஹேய் உன் மாமா எங்கேயும் போ மாட்டாரு. இங்கத்தான் வருவாரு. அதுக்கு முன்னாடி நீ வா. உனக்கு நான் ரூம்ம காமிக்கிறேன்” என்றாள்.

அதில் தன் தோழியையும் சேர்த்து முறைத்தவளோ, “இப்போ இவ எதுக்கு இங்க வந்திருக்கா?” என்று கேட்டாள் கவி.

(அட நீ யாரும்மா? ஏற்கனவே அந்த கவி எப்போ எப்படி இருப்பான்னு தெரியல. எனக்கே நடந்தது கனவா? நிஜமா என்னாச்சின்னு புரியல. அதுக்குள்ள நீ வேற வந்து என்ன கன்பியூஸ் பண்ற. சரி என்னத்தான் நடக்குதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் பத்தி உங்க கருத்த மறக்காம சொல்லலாம். அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

  • தித்திக்குமா?..

 

Comments   1

*** தேன் – 41 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***