கவியும், விழியும் அன்று முழுவதும் எந்த வேலையும் செய்யவில்லை. உண்மையில் அங்கு அவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது என்றும் இருவருக்கும் தெரியவில்லை. அருள் இவர்களுக்கான அறையை காட்டிவிட்டு சென்று விட்டான். அதன் பின் இவர்கள் கண்ணிலேயே படவில்லை.
மதியம் வரை பொழுதை நெட்டி தள்ளியவர்களுக்கு, சர்வ நிச்சயமாய் போர் அடித்தது.
கவியே ஒரு கட்டத்தில், “விழி மறுபடியும் சொல்றேன். இந்த ஆபிஸ் எல்லாம் உனக்கு சத்தியமா செட்டாகாது. நம்ம வேற ஆபிஸ் கூட போகலாம்” என்றாள்.
ஏனெனில் கவிக்கு பிரச்சனை இல்லை. அவள் அமைதியிலும் அமைதி. தனி அறை ஒன்றை கொடுத்து, இங்கேத்தான் பத்து நாள் இருக்க வேண்டும் என்று சொன்னால் கூட அவள் பாட்டுக்கு இருப்பாள். ஆனால் விழியோ அதற்கு நேரெதிர். அவளுக்கு துரு துருவென்று எதையாவது செய்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிலும் அவளுடைய ஆசையை, சிறந்த ரிப்போர்டர் ஆக வேண்டும் என்பதுத்தான். அதுவும் பெரிய பத்திரிக்கை சேனலில் வேலை செய்ய வேண்டும் என்பதுத்தான் அவள் லட்சியமே. அப்படி இருக்க, இப்போது இங்கு வந்து கஷ்டப்படுவது போல் தான் அவளுக்கு தோன்றியது.
“ஹேய் பிரஷர் இல்லாத ஒர்க் யாருக்கு கிடைக்கும்? வாயேன் கேண்டின் போயிட்டு வரலாம்” என்று விழி அழைக்க, கவியோ, “இங்க யாரு உங்க அண்ணா தனியா கேண்டின் கட்டி வெச்சிருக்காரா” என்று கடுப்பாய் கேட்டாள்.
“ச் இருக்கா? இல்லையான்னு போய் பார்த்தாத்தான தெரியும். வா” என்ற விழி கவியை அழைத்துக் கொண்டு வெளியில் செல்ல, அங்கே கேண்டின் என்ற ஒன்று இல்லவே இல்லை. ஆனால் ஒரு டீக்கடையும், டிபன் கடையும் இருந்தது. அங்கே கட்சி ஆட்கள் அத்தனைப் பேரும் குவிந்துக் கிடந்தனர்.
அதைப் பார்த்த கவியோ விழியை முறைக்க, விழியோ, “சரி சரி விடு. இங்க பக்கத்துல வேற ஏதாச்சும் கட இருக்கான்னு பாக்குறேன்” என்றாள்.
“ச் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். உனக்கென்ன? ஒரு காபி, இல்லன்னா செவன் அப் தான? நில்லு நான் போய் வாங்கிட்டு வரேன்” என்றப்படி கவி அங்கு செல்ல முயன்றாள்.
“ஹேய் ஹேய் கவி. அதெல்லாம் வேண்டாம்” என்று விழி அவள் கையைப் பிடிக்க, அதற்குள்ளாக வேந்தனுடைய ஜீப் அங்கு வந்து நின்றது.
அதில் இருவரும் அப்படியே நின்று விட, அவனோ இருவரையும் புருவம் உயர்த்திப் பார்த்தான். பின் சத்தமாய் “அருள்” என்று அழைக்க, அவனும் ஓடி வந்து, அப்போதே இவர்களைப் பார்த்தான்.
“அச்சோ மேடம். ரெண்டு பேரும் எதுக்கு இங்க வந்தீங்க?” என்று கேட்க, அவன் கன்னத்திலேயே அடித்த வேந்தனோ, “அத நான் வந்ததுக்கப்புறம் தான் கேட்பீயா?” என்றப்படி கவியைப் பார்த்தான்.
அவளோ, “சும்மா சும்மா கை நீட்டுற பழக்கத்த எப்பத்தான் விடப் போறாரோ?” என்று தனக்குள் முனுமுனுத்தப்படி, “எம்மா தாயே! அதான் உன் அண்ணா வந்துட்டாரே. நீ அவர்கிட்டையே கேளு. அவருத்தான் நீ கேட்டா மலையவே பிய்ச்சு எடுத்து வந்து கொடுப்பாரேன்” என்று கடுப்பாய் கூறினாள்.
அதில் கவியைப் பார்த்தாலும், அவளிடம் எதுவும் பேசாது, “என்னாச்சு குட்டிமா? இப்போ எதுக்கு இங்க நின்னுட்டு இருக்கீங்க? அதுவும் வேல நேரத்துல” என்றான்.
“அடேங்கப்பா பொல்லாத வேல” என்று இவள் முனுமுனுக்க, விழியோ, “ச் சும்மா இரு கவி. அண்ணா கேட்டா கோவப்படுவாரு” என்றாள்.
“கோவப்பட்டா படட்டும். எனக்கென்ன? என்னமோ அங்க நீயும், நானும் பாக்கிறதுக்குத்தான் வேல கொட்டி கெடக்குற மாதிரி சொல்றாரு. அங்க விரட்டி அடிக்கிறதுக்கு ஈ கூட இல்ல” என்று நக்கலாய் கூறினாள்.
அவளின் நக்கலில், வேந்தனோ அருளை மீண்டும் முறைத்தான். “ஆ..ங் இல்ல இல்ல சார். நீங்க வந்ததும், நீங்களே என்ன வேலன்னு சொல்லுவீங்கன்னு நினைச்சித்தான் நான் எந்த வேலையும் சொல்லல” என்றான்.
“அப்படியே சொல்லியிருந்தாலும் என்ன பெருசா சொல்லியிருக்க போறீங்க. பேப்பர் அடுக்கி வைக்கிற வேலத்தான?” என்ற கவியும் அசராது வாரினாள்.
இப்போது வேந்தனோ கவி பேசுவதை பொருட்டாய் எடுத்துக் கொள்ளாது, விழியிடம், “சொல்லு குட்டிமா. எதுக்கு இங்க வந்தீங்க?” என்றான்.
“அதொன்னுமில்லன்னா, சும்மா கேண்டீன் போலாம்னு வந்தோம்” என்று அவள் சொல்ல, அதில் கவியோ உதட்டை சுழித்து நக்கல் செய்தாள்.
“சரி நீங்க உங்க கேபினுக்கு போங்க” என்று வேந்தன் சொல்ல, விழியும், கவியை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். அவர்கள் சென்றதும் அருள் பக்கம் திரும்பினான் வேந்தன். அதில் அவனோ “என்ன சார்? பேசாம, நம்மளே ஒரு கேண்டீன் ஒன்னு ஆரம்பிச்சிடுவோம்மா?” என்று கேட்டான்.
“வாங்குன அடி உனக்கு பத்தலையா? அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு பண்ணத்தான உங்க இங்க விட்டுட்டு போனேன்” என்றான்.
“ஆ.ங் இல்ல சார். திடீர்னு மந்திரி பிஏ கால் பண்ணி சில டீடெய்ல்ஸ் எல்லாம் கேட்டாரு. அத முடிச்சிட்டு வர்றதுக்குள்ள மேடம் வெளிய வந்துட்டாங்க” என்றான்.
அதில் அவனை முறைத்தவனோ கையில் இருந்த காசை எடுத்து கொடுத்து, “அவங்க கேட்கிறத வாங்கி கொடு” என்றப்படி மீண்டும் ஜீப்பில் ஏறி அமர்ந்தான்.
இங்கே விழியோ, கவியிடம், “இப்போ எதுக்கு நீ இப்படி எல்லாம் நடந்துக்கிடுற. பாவம் அண்ணா முகமே வாடிப் போச்சு” என்றாள்.
கவியோ அதைக் கேட்காது, சூடான டீயை எடுத்து ரசித்து குடித்துக் கொண்டிருந்தாள். அதில் அவள் கையில் இருந்த கிளாஸை பிடுங்கிய விழியோ, “ச் உன்கிட்டத்தான பேசிட்டு இருக்கேன்” என்றாள்.
“ச் இப்போ என்ன? இதுக்குத்தான் இங்க வேலைக்கு வர வேண்டாம்னு சொன்னேன். நீத்தான் கேட்கல. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. வா நம்ம சர்வா ப்ரோ கம்பெனியில ஜாயின் பண்ணிக்கலாம்” என்றாள் கவி.
“நோ வே. முடியவே முடியாது. நம்ம இங்கத்தான் ஒர்க் பன்ணப் போறோம்” என்று விழி சொல்லிவிட, அதன் பின் மாலை போல் அங்கிருந்து கிளம்பினர். அருள் அதன் பின்னும் கூட அவர்களுக்கான வேலையை சொல்லவில்லை.
அன்றும் வேந்தன் தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான். வந்தவனிடம் கவியோ, “தங்கச்சிக்கு எது நல்லதுன்னு கூட யோசிக்காம, அவ கேட்டான்னு, நீங்க தேவையில்லாத வேலைய பாத்து வச்சிருக்கீங்க. இந்த மாதிரி ஒரு ஆபிஸ்ல வேல பார்த்தா, அவளோட ட்ரீம் கண்டிப்பா சேட்டிஸ்பைட் ஆகாது” என்றாள்.
அவனோ அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவளும் விழியிடமும் சொல்லி பார்த்து விட்டாள். அடுத்த நாள் அருள் வந்து அவர்கள் பார்க்க வேண்டிய வேலைப் பற்றி கூறினான்.
கவியோ மும்முரமாய் பார்க்க, விழியோ அந்த பைல்களை எல்லாம் பார்த்து தூங்கி வழிந்தாள். அவளுக்கு இப்படி ஒரு இடத்துக்குள் அடைந்து கிடப்பது சுத்தமாய் பிடிக்கவில்லை.
அது கவிக்கும் தெரிந்தது. வேந்தனுமே பெரிதாய் அங்கு இருக்க மாட்டான். கிட்ட தட்ட ஒரு வாரம் ஓடியிருந்தது.
அன்று திடீரென சிறு பதட்டத்துடன் அங்கு வந்த வேந்தன் அருளை அழைத்து, “ரெண்டு பேரையும் வீட்டுல விட்டுடு” என்றான். ஏனெனில், அன்று அங்கே மினிஸ்டர் வருவதாக இருந்தது. அதுவும் போக, சில பிரச்சனைகளும் வரும் என்பதை அறிந்து அவர்களை முன் கூட்டியே வீட்டுக்கு அனுப்பியிருந்தான்.
அன்றிரவு வீட்டுக்கு வரும் போது, இரத்த காயத்துடன் தான் வீட்டுக்கு வந்தான். மினிஸ்டரை குத்த வந்தவனை இவன் பிடிக்க போய், அவன் கையில் இருந்த கத்தி இவனை பதம் பார்த்திருந்தது.
அரசியலில் இதெல்லாம் வெறும் சாதாரணம். மற்ற எம் எல் ஏக்கள் என்றால், எப்போதுமே பாதுகாப்புக்கு என்று ஆட்களை நிறுத்தி வைத்திருப்பார்கள். இவன் அப்படி கிடையாதே. ஏதோ வார்டு கவுன்சலர் போல் தான் ஊரை சுற்றி வருவான். எலெக்சன் வந்தால் மட்டுமே கன்ணுக்கு தெரியும் அரசியல் வாதிகளுக்கு மத்தியில், இவன் எப்போதுமே தொகுதிக்குள் தான் சுற்றிக் கொண்டிருப்பான்.
இதெல்லாத்துக்கும் பின்னே அவனுக்கு ஆக வேண்டிய காரியங்களும் சிலது இருந்தது. அரசியலில் முன்னுக்கு வர வேண்டும் என்றால், இப்படி காயம், கன்ணீர் இதெல்லாம் பட்டுத்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் நடித்துத்தான் ஆக வேண்டும்.
அத்தனை எளிதில் எல்லாம், வேந்தனின் மீது கை வைத்து விட முடியாது. சுயட்சையாய் நின்று ஜெயித்திருக்கிறான். அதனாலையே அந்த கட்சி தலைவருக்கு வேந்தனின் மீது நல்ல அபிப்ராயம் உண்டு. எப்படியும் அடுத்த எலெக்சனில் வென்று விட்டால், மினிஸ்டர் பதவி கூட கிடைக்க வாய்ப்பு வெகுவாக உள்ளது. ஆனால் அதற்கிடையில் பல சூழ்ச்சிகளும் உள்ளனர்.
இதை எல்லாம் கடந்து அவன் வர வேண்டும் என்றால், தலைமையிடத்தில் இவனின் பெயர் அடிக்கடி அடிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் தான் இவனும் சில விஷயங்களை தானாகவே தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருந்தான்.
கையில் இரத்தத்துடன் வந்தவனைப் பார்த்த பெண்கள் இருவருமே பதறினர். என்ன விழி வெளிப்படையாகவே, “ஐயோ என்ன அன்ணா ஆச்சு? இரத்தம் வருது” என்று பதறினாள்.
கவியோ வெளிப்படையாக இல்லாவிட்டாலும், வேகமாய் ஓடி சென்று பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வந்து விழியிடம் கொடுத்தாள்.
அவள் கண்களிலும் பதட்டம் இருந்ததுத்தான். ஆனால் வேந்தனின் அருகில் கூட அவள் வரவில்லை. விழியோ, “கவி நீயே பர்ஸ்ட் எய்ட் பண்ணேன். எனக்கு பிளட் பார்த்தா சேராது” என்றாள்.
அதில் கவியும் அவனின் அருகில் வர அவனோ கோவமாய், “தேவையில்ல. ஆல்ரெடி டாக்டர பாத்துட்டுதான் வரேன். சின்ன காயம் தான். கட்டெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சோ நான் போய் கொஞ்சம் தூங்குறேன்” என்று விட்டு அவனின் அறைக்கு சென்று விட்டான்.
அவனின் கோவத்துக்கான காரணம் கவிக்கு புரியத்தான் செய்தது. என்னத்தான் செய்வாள்? ஒவ்வொரு முறை அவன் காயத்துடன் வந்து நிற்கும் போதெல்லாம். என்னவோ அவளால் தான் அவளின் ராசியால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று நினைத்துக் கொள்கிறாள். அதனாலையே அவனை விட்டு விலகி ஒடி விடுகிறாள். இப்போதும் ஏனோ அவள் கழுத்தில் தாலி கட்டியதால் தான், இவனுக்கு இப்படி நேர்ந்ததோ என்றுத்தான் பலமாய் யோசித்துக் கொண்டிருக்கிறாள்.
இதெல்லாம் அவனுக்கும் புரியவில்லை. அவனுக்கோ கோவம் தனியாக கவி எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், தங்கையின் முன் கூட, தன் மீது அக்கறை இருக்கும் படி நடிக்க கூட மாட்டேன் என்று சொல்பவளின் மீது கோவம் வந்தது.
விழியோ கவியிடம், “கவி. அண்ணாவ பாத்துக்கோ. அண்ணா ஏதோ மூட் ஆப்ல இருக்காரு போல” என்றாள்.
“சரி. நீ வொரி பண்ணிக்காத. உன் அண்ணாக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. நீ போயி நிம்மதியா தூங்கு” என்று அனுப்பி வைத்தாள் கவி. அதன் பின் அவனறைக்கு அவனுக்கு சூடாக மஞ்சள் போட்ட பால்லை எடுத்துக் கொண்டு சென்றாள்.
“பால் எடுத்துக்கோங்க” என்று அவள் நீட்ட, அவன் மறுத்து விட்டு நகர முயற்சிக்க, இவளோ, “ச் ரொம்ப பண்ணாதீங்க. பால்ல குடிச்சிட்டு படுங்க. உங்க தங்கச்சித்தான் கொடுத்து விட்டா” என்று சலிப்புடன் சொல்லி முடிக்க, அடுத்த நொடி அந்த பால் கிளாஸை அத்தனை கோவமாய் சுவற்றில் தட்டி விட்டான் வேந்தன்.
அதை சற்றும் எதிர்பார்க்காதவள், அதிர்ந்து அவனைப் பார்க்க, சூடான பால் அவன் காயத்தில் பட்டு மேலும் அது தீ சுட்டது போன்ற வலியைக் கொடுத்தது. அதில் அவளோ அவன் கையைப் பிடிக்கப் போக, வேகமாய் விலகி நின்றான் வேந்தன்.
(ரைட்டு. வேந்தன டென்சன் பண்ணிட்டா. அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
வேந்த😱💕💕💕💕💕💕💕💕💕