தேன் – 36

கை நிறைய பூவுடன் வந்த கவியைப் பார்த்த விழிக்கு, ஏனோ இத்தனை நேரம் இருந்த கவலை மறந்து சிறு புன்னகை பூத்தது. “இதுக்கப்புறம் நிச்சயமா என் அண்ணா இவள சந்தோஷமா பாத்திப்பாரு” என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

“பூவ தலையில வச்சிக்காம, இப்படி கையில வச்சிட்டு இருக்க” என்றாள். “ம் உன் அண்ணா தலையில வைக்கிற மாதிரித்தான் பூ வாங்கி கொடுக்கிறாரா? ஏதோ பூ கடை வைக்கப் போற மாதிரித்தான், பூ வாங்கிட்டு வர்றாரு” என்றப்படி அதை விழியிடம் நீட்டினாள்.

“ம் நீயாச்சு, என் அண்ணாவாச்சு, இந்த பஞ்சாயத்துக்கு நடுவுல நான் வரலப்பா. அதுவும் போக, இந்த பூவ நீயும், அவரும் சேர்ந்து என்னப் பண்ணலாம்னு யோசிங்க. எனக்கு இவ்ளோ ஸ்மெல் எல்லாம் ஆகவே ஆகாது. நீ போயி முன்னாடியே உட்காரு” என்று அவளை தன்னருகே அமர விடாது முன் பக்கம் அனுப்பினாள்.

அதில் தோழியை முறைத்தவளோ, இப்போது வேந்தனின் அருகில் சென்றமர, அவனோ காரை ஸ்டார்ட் செய்தான். அவளோ கையில் இருந்த பூவையே பார்த்துக் கொண்டிருக்க, வேந்தனும் அதை கவனித்தான். ஆனால் எதுவும் சொல்லாது, வீட்டின் முன் சென்று காரை நிறுத்த, விழி வேகமாய் இறங்கி உள்ளே சென்றாள்.

கவியோ இறங்காமல் அப்படியே இருக்க, “என்ன?” என்றான் வேந்தன். “இந்த பூவ என்னப் பன்றது?” என்று கேட்க, இப்போது அதைக் கேட்டு சிரித்தவனோ, “தலையில வச்சிக்கோ” என்றான்.

“ம் இவ்வளவு பூவ எப்படி வச்சிக்க முடியும்?” என்று அவள் திருப்பி கேட்க, “அப்போ உனக்கு வச்சிக்க முடிஞ்ச அளவுக்கு வச்சிக்கோ. மீதிய வேணும்னா நம்ம ரூம் கட்டில்ல போட்டுக்கலாம்” என்று சீண்டலாய் கூறினான்.

அதில் அவள் முறைக்க, அவனோ, “என்ன? இல்லன்னா, இந்த பூவ எப்படி பத்திரமா வச்சிக்கிடுறதுன்னு நான் வேணும்னா சொல்லவா?” என்று கேட்டு அவன் புருவம் உயர்த்த, “ம்” என்று தலையாட்ட வந்தவளுக்கு அப்போதே அன்றொரு நாள், பூவை வாடவிடாமல் பார்க்கிறேன் என்று, அவனை கட்டிப்பிடிக்க வைத்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.

“எப்படி? அன்னிக்கு பூவ வாட விடாம பாத்துக்கிட்டீங்களே அப்படியா?” என்று அவள் கோவமாய் கேட்க, “யா எஸ், இப்பவும் அதத்தான் சொல்றேன். என் பேச்ச கேட்டன்னா, அன்னிக்கு மாதிரியே இன்னிக்கும், இந்த பூவ பத்திரமா பாத்துக்கலாம்” என்று அவளை நெருங்கி அவள் காதுக்குள் கிசுகிசுத்தான்.

அவனின் மீசை ரோமங்கள், அவள் கன்னத்தை உரச, சட்டென்று விலகி, காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றாள். அவள் செய்கையைப் பார்த்து சிரித்தவனுக்கு முகம் மீண்டும் இறுகியது.

கோவிலில் வைத்து அவள் கலங்கி பேசியது மட்டுமே நினைவில் வந்து நிற்க கடந்த கால நினைவுகள் அவன் முன்னே வந்து நின்றது.

விழி, என்னத்தான் கவியையும், வேந்தனையும் சேர்த்து வைத்து பேசி விளையாடினாலும், இருவருக்குள்ளும் அப்படி ஒரு எண்ணம் இருந்ததே இல்லை. கவியைப் பொறுத்த வரை, வேந்தன் அவளுடைய கார்டியன். வேந்தனைப் பொறுத்தவரை கவி அவனுடைய பொறுப்பு. தங்கைக்காக என்று அவளுக்கு உதவி செய்ய நினைத்திருந்தாலும், அவள் பொறுப்பை முழுதாய் சிறு வயதிலேயே ஏற்றுக் கொண்டிருந்தான்.

அப்படித்தான் இருவருமே நினைத்தனர். ஆனால் நடுவில் விழி மட்டுமே இருவருக்குள்ளும் இல்லாத காதலை இருப்பதாய் கற்பனை செய்து, அவள் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருந்தாள். கவியும் அவளிடம் சொல்லி சொல்லி பார்த்து விட்டு, ஒரு கட்டத்தில் என்னமோ பேசிக் கொள் என்று விட்டு விட்டாள்.

கவியை வேந்தனுடைய அம்மா, அப்பா இருவருக்குமே பிடிக்காது. பல முறை முகத்தில் அடித்தாற்போல் பேசியிருக்கின்றனர். ஆனால், வேந்தனும் சரி. விழியும் சரி எந்த இடத்திலும் அவளை விட்டுக் கொடுத்தது கிடையாது.

கல்லூரி முடியும் நேரம் அது. வேந்தனுடைய பிறந்த நாளுக்காக விழி கவியை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றிருந்தாள். அவளோ முதலில் மறுக்க பின், அவளுக்குமே அவனுடைய பிறந்த நாள் அன்று ஒரு வாழ்த்தாவது சொல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அதனால் சென்றாள்.

அங்கு சென்றப் பின் தான், அங்கு சென்றிருக்கவே கூடாதோ? என்று யோசித்தாள். அங்கு என்ன நடந்தது? என்று வேந்தனுக்கோ, விழிக்கோ தெரியாது. ஆனால் அதன் பின், கவி விழியை விட்டும், வேந்தனை விட்டும் விலக ஆரம்பித்திருந்தாள்.

திடீரென ஹாஸ்டலை காலி செய்து விட்டு, ஆசிரமத்திற்கே சென்று விட்டாள். அது குறித்து வேந்தன் கேட்டப் போது கூட, “ஸ்டடி ஹாலிடே தான. எப்படியும் இதுக்கப்புறம் நான் இங்கத்தான இருக்கனும். அதுவும் போக, வேலைக்கு ட்ரைப் பண்ணிட்டு இருக்கேன். அதுக்கு இங்கத்தான் கம்பர்டபிள்” என்று முடித்துக் கொண்டாள்.

அவனும் கூட பெரிதாய் கண்டுக் கொள்ளவில்லை. ஏனெனில் அப்போதுத்தான் அவன் அரசியலில் நுழைந்திருந்த தருணம். அவனுக்கும் பெரிதாய் நேரமில்லை.

அடம்பிடித்த விழியிடம் வந்த வேந்தனோ, “என்ன குட்டிமா? இன்னும் டூவீக்ஸ் தான காலேஜ் இருக்கு. அதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துத்தான வேலை பாக்க போறீங்க. ஏற்கனவே மூனு வருஷம் காலேஜ் ஹாஸ்டல்ல த்தான நீ இருந்த. இந்த மூனு மாசமாச்சும், அம்மா, அப்பா கூட இருக்கலாம்ல” என்றிருந்தான்.

ஏனெனில் முன்பு போல் அவன் ஊரில் இருக்க முடிவதில்லை. அப்படி இருக்கும் போது தங்கையை தனியாய் ஹாஸ்டலில் விட மனம் கேட்கவில்லை. வீட்டில் இருந்தால் அவளும் பாதுகாப்பாக இருப்பாள் என்று நினைத்தான்.

வெறும் மூனு மாதம் தானே என்று விழியும், சுடரும் நினைத்திருக்க, கவியோ அடுத்த ஆறு மாதம் வரை இருவரின் கண்ணிலும் படவில்லை. மொபைலில் பேசிக் கொள்வதோடு சரி. விழி நேரில் பார்க்கலாம் என்றால் கவி சம்மதிக்கவே இல்லை.

தீடீரென ஒரு நாள் விழிக்கு கால் செய்தாள். “என்னாச்சு கவி? ஏன் உன் குரல் இப்படி இருக்கு? அழுதீயா? என்னாச்சு?” என்று பதட்டமாய் கேட்டாள் விழி.

“விழி. என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க” என்று அவள் சொல்ல, விழிக்கோ புரியவில்லை. “என்ன சொல்ற? யாரு? நீ இப்போ எங்க இருக்க? நில்லு. நான் உடனே கிளம்பி வரேன்” என்றாள்.

“இல்ல. எனக்குன்னு இருக்கிற ஒரே சொந்தம் நீ தான். பட் நீ கூட இல்லாம என் கல்யாணம் நடக்கப் போது. அதுத்தான் எமோசனல் ஆகிட்டேன். மத்தப்படி பிரச்சன இல்ல வைக்கிறேன்” என்று வைத்து விட்டாள்.

“என்ன சொல்றா இவ?” என்றவள் அடுத்த நொடி தன் அண்ணனுக்குத்தான் கால் செய்தாள். அவனோ கட்சி மீட்டிங் ஒன்றிற்காக சிட்டியை விட்டு சற்று தள்ளி வந்திருந்தான்.

தங்கையிடம் இருந்து அழைப்பு வரவும், “சொல்லு குட்டிமா” என்று சொல்ல, அவளோ தனக்கு தெரிந்த விஷயத்தை சொல்ல, “என்ன?” என்றவனுக்கும் அதிர்ச்சித்தான். அதற்காக அவன் அவளை காதலித்தான் என்றெல்லாம் அர்த்தம் இல்லை. திடீரென கவிக்கு திருமணம். அதுவும் இவர்களுக்கு கூட தெரியாமல் என்றால், அவனுக்கு குழப்பமாய் இருந்தது.

“ஹேய் நீ டென்சன் ஆகாத. நான் போய் என்னென்னு பாக்கிறேன்” என்று சொல்லிய வேந்தன் அடுத்த நொடி தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அங்கே ஆசிரமம் சென்று விசாரிக்க, கவியை அவர் உறவினர் யாரோ ஒருவர் அழைத்துச் சென்றதாய் சொல்ல, அவர்களுடைய விலாசத்தை வாங்கிக் கொண்டு வேந்தன் மண்டபம் வந்து சேரும் முன்னே கவியுடைய திருமணம் முடிந்திருந்தது.

அவன் அவள் முன் மூச்சு வாங்க வந்து நிற்கும் போது, கவியுடைய கண்களில் கண்ணீர். அவள் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் இணைந்திருந்த தாலியை அவள் கைகள் இறுக்கமாய் பற்றியிருந்தது.

அதன் பின்னே அவளின் அருகில் சிரித்தப்படி நின்றிருந்தவனைப் பார்த்தான். பார்த்த நொடி அவனுடைய கண்கள் கோவத்தில் சிவந்தது.

சுற்றுப்புறத்தை பற்றி யோசிக்காது, “என் கூட வா” என்று கவியின் கையைப் பிடிக்க போனான். அதற்குள்ளாக, “யாருப்பா நீ? கல்யாண வீட்டுல வந்து பொண்ணு கைய பிடிக்க வர்ற?” என்றார்.

அப்போதே கவியுடைய சித்தியைப் பார்த்தான். இதற்கு முன்பும் அவரை ஒரு முறை பார்த்துள்ளான். அது கவியுடைய அம்மா, அப்பா மரணத்தில். கவியை பற்றிய அக்கறை சிறிதும் இன்றி, “அந்தப் புள்ளைய எல்லாம் என்னால பாத்துக்க முடியாது. எங்க குடும்பமே கஷ்டத்துல இருக்கு” என்று அவர் கையைப் பிடிக்க சென்ற கவியின் கையை உதறிவிட்டு சென்றிருந்தார்.

அதில் இவனுக்கோ எரிச்சல் கூடியது. “நான் யாருன்னு, உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல” என்றவன் யாரையும் பொருட்படுத்தாது கவியுடைய கையை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்த அறை ஒன்றிற்கு சென்று கதவை மூடினான்.

“ச் என்னப் பண்றீங்க?” என்று அவள் கேட்க, “நீ என்னப் பண்ணி வச்சிருக்க?” என்று கோவமாய் கேட்டான்.

“எனக்கு கல்யாணம்” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே, “அடிச்சேன்னு வை. பல்லு எல்லாம் உடைஞ்சிடும். உனக்கென்ன வயசாகிடுச்சி? இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன். சின்ன வயசுல இருந்து உன்ன அவங்கத்தான் பாத்துக்கிட்டாங்களா? பாத்துக்கிட்டது நான் தான. எனக்கு தெரியாதா? உனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைக்கனும்னு?” என்று கோவமாய் கேட்டான்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்” என்று அவள் கேட்க, “ச் ஒழுங்கா கழுத்துல கெடக்கிறத கழட்டி வீசிட்டு என் கூட கிளம்பு. உனக்கும், விழிக்கும் நான் பாரீன் காலேஜ்ல அட்மிஷன் வாங்கி வச்சிருக்கேன்” என்றான்.

ஏனெனில் கவிக்கு படிக்க எவ்வளவு பிடிக்கும்? என்று அவனுக்கு தெரியும். இதை அவன் சர்பிரைஸாக வைத்திருந்தான். இன்னும் விழியிடம் கூட சொல்லியிருக்கவில்லை. இப்போது படிப்பை காரணம் காட்டியாவது அவளை இங்கிருந்து அழைத்துச் செல்ல நினைத்தான்.

“என்ன பேசுறீங்க நீங்க? எனக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சி. இதுக்கப்புறம் எனக்கு எல்லாமே அவர் தான்” என்றாள் கவி. அதைக் கேட்டவனுடைய புஜங்கள் இறுகியது. இங்கு வந்து நிற்கும் அந்த நொடி வரைக் கூட கவியின் மீது காதலெல்லாம் இல்லை. ஆனால் இப்போது எவனோ ஒருவன் அவளுக்கு முக்கியம் என்று சொல்லியதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அதில் கோவமாய், “என்ன அவன்? அவன் யாரு? அவன் எப்படிப்பட்டவன்னு ஏதாச்சும் உனக்கு தெரியுமா?” என்று கத்தினான். “அவர் யாரா இருந்தா என்ன? அவர் தான் என் ஹஸ்பண்ட். இனிமே தேவையில்லாம, இப்படி என் முன்னாடி வந்து நிக்காதீங்க. இதுவரைக்கும் நீங்க எனக்கு பண்ண எல்லா உதவிக்கும் ரொம்ப நன்றி. சீக்கிரமே நீங்க எனக்கு செலவு பண்ண காச, திருப்பி கொடுத்துடுறேன்” என்றாள்.

அவளின் வார்த்தையில் இவனின் கோவம் கடகடவென்று கூட, “என்னடி திருப்பி கொடுப்ப?” என்றவன் அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்தான். அத்தனைக் கோவம். கவியோ அத்தனை அழுத்தமாய் அவனைப் பார்த்தாள்.

அதற்குள்ளாக, அவன் கையை தட்டிவிட்டு, “என் ஒயிப் மேல கை வைக்கிற வேலை எல்லாம் வேண்டாம்” என்று கவியின் கணவனாய் நின்றிருந்தவன் கூறினான்.

அதை எல்லாம் கேட்ட வேந்தனுக்கோ வாழ்வில் முதன் முறையாய் எதிலோ தோற்றுப் போன உணர்வு. அந்த ஒருவன் கவியின் கையை இறுக்கமாய் பற்றி, அவளை தன் தோளோடு அணைத்து நின்றிருக்க, வேந்தன் வெந்துத்தான் போனான். அதிலும் அந்த ஒருவனின் மறு கரம் அவள் வெற்றிடையில் பதிந்திருப்பதை பார்த்த வேந்தனுக்கு இரத்தம் கொதித்தது. கண்கள் சிவந்தது.

அதில் இன்னும் கோவமாய், அந்த ஒருவனை அடித்து விடும் வேகத்தில் பாய, அதற்குள்ளாக, விழியிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை எடுத்து காதில் வைத்தவன் அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பியிருந்தான். கிளம்பும் நொடி கவியை அத்தனை அழுத்தமாய் பார்த்து விட்டு சென்றான். கடந்த கால நினைவில் மூழ்கியிருந்தவனை, நிகழ்கால போன் அழைப்பு நடப்புக்கு இழுத்து வந்தது.

(கவி ஏன் அந்த திருமணத்தை செய்துக் கொண்டாள்? வேந்தன் அவளுடைய பழைய வாழ்க்கையில் இருந்து அவளை மீட்டெடுப்பானா? இப்படி எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 36 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***