வர மாட்டேன் என்று சொல்லிய கவியை விழித்தான் கட்டாயப்படுத்தி தியேட்டர் அழைத்து வந்திருந்தாள். முன்னனி நடிகருடைய படம் வெளியாகியிருக்க, டிக்கெட்க்கு வரிசை தியேட்டரைத் தாண்டி சென்றது.
அதில், கவியோ, “இதுக்குத்தான் தியேட்டர் எல்லாம் வேண்டாம்னு சொன்னேன்” என்றாள்.
ஆனால் விழியோ அவள் பேசுவதை காதில் வாங்காது, சுற்றி யாரையோ தேடினாள்.
“ஹேய் உன்கிட்டத்தான பேசிட்டு இருக்கேன். இருக்கிற கூட்டத்த பார்த்தத்தான. நமக்கெல்லாம் டிக்கெட் கிடைக்காது. பேசாம வா வீட்டுக்கு போகலாம்” என்றாள் கவி.
“ஹேய், அண்ணாக்கு கால் பன்ணி சொன்னா, உடனே டிக்கெட் கிடைக்கப் போகுது” என்றப்படி விழி வேந்தனுக்கு கால் செய்ய முயல, அவள் கையில் இருந்த மொபைலை பிடுங்கினாள் கவி.
“என்ன? நீயே உன் வீட்டுக்காரர் கிட்ட கேட்கப் போறீயா? அப்போ அத உன் மொபைல்ல இருந்தே கேட்கலாமே” என்றாள் விழி.
அதில் தன் தோழியை முறைத்தவளோ, “ச் சும்மா சும்மா அவரை வேல நேரத்துல கூப்டுட்டு இருக்கிறது சரி கிடையாது. அதுவும் போக, ஒரு டிக்கெட்க்குலாம், அவரை தொந்தரவு பண்ணனுமா? படம்லாம் ஒன்னும் பாக்க வேண்டாம். வா வீட்டுக்கு போவோம்” என்றப்படி தோழியை அழைத்துக் கொண்டு நகர்ந்தாள்.
அதற்குள்ளாக, அவர்கள் முன் வந்து நின்ற ஒருவனோ, “டிக்கெட் வேணுமா?” என்று கேட்க, “அதெல்லாம் வேண்டாம்ங்க” என்றப்படி கவி நகர, அதற்குள் விழியோ, “ஆமா வேணும். டிக்கெட் எவ்வளவு?” என்றாள்.
அதில் தோழியை அவள் முறைக்க, நின்றிருந்தவனோ, “பிரண்ட்ஸ் ரெண்டு பேர் வரேன்னு சொல்லிருந்தானுங்க. கடைசி நேரத்துல சொதப்பிட்டானுங்க. நீங்க ஸ்னாக்ஸுக்கு மட்டும் ஸ்பான்சர் பண்ணுங்க. போதும்” என்றான் அவன்.
அதில் விழியோ, “இதுக்கு டிக்கெட் ரேட்ட விட, ஒரு மடங்கு அதிகமா வேணும்னே கேட்டிருக்கலாம்” என்று சொல்ல, “அப்படி சொன்னா பிளாக்ல டிக்கெட் விக்கிறோம்னு பிடிச்சிட்டு போயிடுவாங்களே சிஸ்டர்” என்று அவனின் அருகில் நின்றிருந்த இன்னொருவன் கூறினான்.
“விவரமாத்தான் பேசுறீங்க” என்று விழி சொல்லியப்படி அந்த டிக்கெட்டை வாங்கப் போக, “ஹேய் என்னப் பண்ற நீ” என்று கவி அவளை தடுத்து தனியே இழுத்துச் சென்றாள்.
“என்ன? அதான் டிக்கெட் கிடைச்சிருச்சே” என்று விழி சொல்ல, “ஹேய் கொஞ்சமாச்சும் உனக்கு அறிவு இருக்கா? அவங்க யாருன்னே தெரியாது. அவங்க கூட படம் பாக்கப் போறேன்னு சொல்ற” என்று கோவமாய் கேட்டாள் கவி.
“ஹேய், அவங்க மட்டுமா தியேட்டர்ல இருக்காங்க. அதுவும் போக அவங்கள பார்த்தா, நல்ல பசங்க மாதிரித்தான் தெரியுது” என்றாள் விழி.
“உனக்கும், உன் அண்ணாக்கும், எல்லாமே நல்லதுத்தான்” என்று சொல்லியவள், “பேசாம வா, நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று கவி இழுத்தாள்.
“அச்சோ என்னாச்சு சிஸ்டர்?” என்று அந்த இருவரும் அவர்கள் முன்னே வந்து நிற்க, கவியோ, “அந்த டிக்கெட்ட வேற யாருக்காச்சும் கொடுங்க” என்றாள்.
“படமே ஆரம்பிக்கப் போறாங்க. இதுக்கு மேல நாங்க யார்ட்ட போயி கேட்கிறது? உண்மையாவே நாங்க நல்லப் பசங்கத்தான் சிஸ்டர். நம்புங்க” என்று இருவரும் அப்பாவியாய் சொல்ல, கவியோ, “இல்ல” என்று சொல்லும் முன்னே, அவர்கள் கையில் இருந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டு அவளையும் இழுத்துக் கொண்டு சென்றிருந்தாள் விழி.
இப்போது அந்த இருவரும், சற்று தள்ளி நின்றிருந்த காரைப் பார்த்து, “இப்போ சந்தோஷமா?” என்று கடுப்பாய் கேட்க, உள்ளிருந்தவனோ ஒரு வித மர்ம புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
இங்கே தங்கள் இருக்கைக்கு வந்தமர்ந்த விழியோ படம் ஆரம்பித்த பின்னும் கூட கவியிடம் திட்டுத்தான் வாங்கிக் கொண்டிருந்தாள்.
“ஹேய் எதுவா இருந்தாலும், படம் முடிஞ்சதுக்கப்புறம் திட்டு. நான் வாங்கிக்கிறேன்” என்றவள் படத்தில் மூழ்க, அந்த இருவருமே ஒரு இருக்கை விட்டு தள்ளித்தான் அமர்ந்திருந்தனர்.
“என்ன ப்ரோ? இந்த சீட்டுக்கு ஆள் கிடைக்கலையா?” என்று கிண்டலாய் கேட்டாள் விழி.
“அது வேற யாரோ வாங்கியிருக்காங்க சிஸ்டர்” என்று சொல்லிவிட்டு படத்தில் மூழ்கிவிட, இடைவேளையின் போது, விழி அவர்கள் கேட்டது போல், அவர்களுக்கும் சேர்த்து ஸ்னாக்ஸ் வாங்கிக் கொடுத்தாள்.
கவியுமே, அவர்கள் நல்ல விதமாய் பேசவும், அமைதியாய் படத்தை பார்க்க ஆரம்பித்திருக்க, அதில் ஒரு காதல் காட்சி ஓடியது. சட்டென்று நினைவில் காரணமேயின்றி வேந்தனின் முகம் வந்து நிற்க, நொடிக்கும் குறைவாய் அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.
அதை கவனித்த விழியோ, “என்னடி? ட்ரீம்மா?” என்று கிண்டலாய் கேட்க, அதில் மீண்டும் முகத்தை இறுக்கமாய் மாற்றிக் கொண்டவளோ, “படத்த பாரு” என்றாள்.
அதன் பின் படம் முடிந்து, அந்த இருவருடன், இவர்கள் இருவரும் தியேட்டரை விட்டு வெளியில் வர, கவியோ அசையாது அப்படியே நின்று விட்டாள்.
விழியோ அந்த இருவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க, கவி வராததை அவள் கவனிக்கவில்லை. இங்கே கவியைப் பார்த்த அந்த நபரோ, எதிரில் இருந்த டீக்கடையில் இருந்து வேகமாய் அவளின் முன்னே வந்து நின்றார்.
“என்னடி ரொம்ப சந்தோஷமா இருக்கப் போல? அதான, உனக்குத்தான் தினம் ஒரு புருஷன் கேட்குமே. அதுக்கு என் புள்ள இடைஞ்சலா கிடந்தான். இப்போ அதுவும் இல்ல. அப்புறம் உன் பவுசுக்கு என்ன குறைச்சல் இருக்கப் போது? புருஷன் செத்து முழுசா மூனு மாசம் ஆகல. ஆனா, உன் உடையும், நடையும் அப்படியா இருக்கு?” என்று நாக்கில் விஷத்தை வைத்துப் பேச, அவளோ நொருங்கித்தான் போனாள்.
“ம்மா பாரும்மா. நம்மத்தேன். அண்ணாவ நினைச்சி அழுதுட்டு இருக்கோம். இவ என்னென்னா, சினிமா பாக்க வந்திருக்காம்மா. அன்னிக்கே நான் சொன்னேன். இவதான்மா நம்ம அண்ணன்ன ஆள் வச்சி கொண்ணுருப்பா. கொஞ்சம் அழகா இருக்கால்ல, அதான் ஒருத்தன் பத்தல போல” என்று கூறினாள் ஒருவள். எப்படியும் கவியை விட நிச்சயம் அவளுக்கு வயது கம்மியாகத்தான் இருக்கும். ஆனால் அவளுடைய பேச்சோ, கரு நாகத்தை விட மோசமானதாய் இருந்தது.
அவர்களிடம் ஏச்சு பேச்சுக்கள் வாங்கியே பழக்கப்பட்டவளுக்கு, அவர்களை எதிர்த்து பேச இப்போதும் வாய் எழவில்லை. ஆனால் அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையும், அவளுக்குள் ஒரு மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியது. அவர்கள் மேலும் பேசும் முன்னே, விழி, கவியைத் தேடி அந்தப் பக்கம் வர, விழியைப் பார்த்ததும், அந்த இருவரும் அப்படியே சென்றிருந்தனர்.
செல்லும் போதும், “பாக்குறேண்டி. இந்த ஆட்டம் எல்லாம் எத்தன நாளைக்குன்னு நானும் பாக்குறேன். உன் கழுத்துல தொங்குற அந்த தாலிக்கு ஆயுசு கம்மித்தாண்டி” என்று சாபம் கொடுத்துவிட்டே செல்ல, ஏனோ இப்போது அவளின் கரம் அன்னிட்சையாய் அந்த தாலியை இறுகப் பற்றியது. இத்தனை நேரம் அவளை அத்தனை தர குறைவாய் பேசும் போது கூட, அவளுக்கு அத்தனை வலிக்கவில்லை. ஆனால் இப்போது அவள் இதயம் பதறியது.
“இல்ல என் சுடருக்கு எதுவும் ஆகாது” என்று தனக்குள்ளே சொல்லியவளுக்கு, தலை எல்லாம் சுற்றியது, தடுமாறி விழ சென்றவளை ஓடி வந்து தாங்கிப் பிடித்த விழி, “ஹேய் கவி என்னாச்சு?” என்றாள்.
தோழியைப் பார்த்ததும், தன்னை தேற்றியவளுக்கு வீடு வரும் வரையிலும் கூட அந்த இருவர் பேசிய பேச்சுத்தான் ஓடிக் கொண்டிருந்தது. காரை விட்டு இறங்கியவள், வீட்டுக்குள் கூட செல்லாது அப்படியே நின்று விட, “இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே நிக்கப் போற?” என்ற வேந்தனின் குரலில் பட்டென்று நிமிர்ந்தாள்.
அவனோ வழக்கமான அவன் முறைப்புடன் நின்றிருக்க, “சுடர்” என்றவள் ஒடி சென்று அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள். அதைப் பார்த்த விழியோ சிரித்தப்படி மேலே சென்று விட, வேந்தனோ, புரியாது தடுமாறினான்.
ஏனெனில், அவனுக்கு தெரியாதா? அவள் எப்போது அவனை தேடுவாள் என்று. “என்னாச்சு?” என்றான். ஆனால் அவன் கேட்டது எதுவும் அவள் செவியில் விழுந்தது போலவே தெரியவில்லை. அவன் சட்டையை மேலும் மேலும் பிடித்து கசக்கியவள், “ஏன் என்னை விட்டு போனீங்க?” என்று அழுதுக்கொண்டே கேட்டாள்.
அவள் அழுகையில், அவனுடைய ஒட்டு மொத்த இறுமார்ப்பும் தளர்ந்துப் போக, அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன், “என்னாச்சுடா?” என்றான்.
அவளோ எதுவுமே சொல்லாது தேம்பி தேம்பி அழ, இங்கே சுடருக்குத்தான் மனம் பதறியது.
ஒரு வாரமாய் போன் பேசும் போதெல்லாம், கவி அவனை வெறுப்பேத்தியிருக்க, அதனால் தான் இப்போதும் சொல்லாமலே கிளம்பி வந்திருந்தான்.
ஆனால் வந்ததும், வராததுமாய் கவியுடைய இந்த வரவேற்பை அவன் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.
“சுடர் உங்களுக்கு ஒன்னும் ஆகாதுத்தான?” என்று சிறுமியாய் மாறி அவள் கேட்க, “எனக்கு என்னாகப் போது? உன் முன்னாடித்தான நிக்குறேன்” என்றான்.
“நீங்க ஏன் என் கழுத்துல தாலி கட்டுனீங்க?” என்றவள் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க, “இப்போ என்னாச்சுடி?” என்று பொறுமையை இழுத்துப் பிடித்துக் கேட்டான்.
அவளோ ஏதோ பித்து பிடித்தது போல், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல, “செரி. நான் பண்ணது தப்புத்தான் போதும்மா” என்று இறங்கி வந்தான்.
அவன் அப்படி சொல்லவும், “நான் உங்களுக்கு வேண்டாம்” என்று அவள் சொல்ல, “செரி வேண்டாம்” என்று அவனும் அவளுக்கு ராகம் போட ஆரம்பித்தான்.
சில நிமிடம் அவளை பேச விட்டவன், பின் அவளை மெல்ல தன்னில் இருந்து விலக்கி, அவள் கன்னம் தாங்கினான். அழுது அழுது அவள் முகமெல்லாம் சிவந்திருந்தது. அதில் அவள் கண்ணீரை துடைத்து விட்டவன், “உன்னை நான் அழக் கூடாதுன்னு சொல்லிருக்கேன் தான?” என்றான்.
“நான் அழுறதுக்குத்தான் வரம் வாங்கிட்டு வந்திருக்கேன் சுடர். என்னைத் தொடாதீங்க. அப்புறம் உங்களுக்கும் கஷ்டம் தான்” என்றவள் விலகப் போக, அவளை விலக விடாது தன்னோடு சேர்த்தணைத்துக் கோண்டான் அவன்.
அதில் அவன் மார்பில் வேகமாய் அவள் முகத்தை புதைக்க, மெல்ல அவள் தலைக் கோதியவனோ, “யாரையாச்சும் பாத்தீயா?” என்று சரியாய் கணித்துக் கேட்டான்.
அதில் அவள் உடல் நடுங்கியது. அந்த அதிர்வை வைத்தே அவனுக்கு புரிந்தது. அதில் அவனுடைய கண்கள் இரத்தமாய் சிவக்க, அதற்குள் கவியோ, “இல்ல நான் யாரையும் பாக்கல” என்றாள்.
“அவங்க என்ன சொன்னாங்க?” என்று அவன் அடுத்த கேள்வியை கேட்கும் போதே, அவனுடைய தாடை எல்லாம் இறுகியது. அப்போதே அவன் முகத்தில் தெரிந்த ரெளத்திரத்தைப் பார்த்தாள் கவி. அவனின் ரெளத்திரம் அடுத்து எந்த எல்லைக்கு செல்லும் என்று அறிந்தவள், அவனின் கோவத்தை குறைக்க நினைத்தாள்.
“நீ சொல்ல மாட்ட. நானே போயி தெரிஞ்சிக்கி” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே, எக்கி அவன் இதழில் அழுத்தமாய் முத்தமிட்டாள் கவி.
(நீத்தான் முத்தம் கொடுப்ப. அப்புறம் நீயேத்தான் அவனை முட்டி போட வைப்ப. என்னமோ பண்ணு. நீ என்னப் பண்றேன்னு உனக்காச்சும் தெரிஞ்சா சந்தோஷம் தான். சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
super vedha 👍💞💞💕💕💕💞💞