கோவிலுக்கு வருகிறேன் என்று சொல்லியவள், திடீரென வரவில்லை என்று சொல்லவும், “ஹேய், என்ன? என் அண்ணா வந்தாத்தான் வருவீயா?” என்று கேலியாய் கேட்டாள் விழி.
அதில் கவியோ, “ஆ.ங் அதெல்லாம் இல்லையே. அது, கோவில்ல என்ன இருக்கப் போது? அதான் வேற எங்கையாச்சும் போகலாம்னு சொன்னேன்” என்று சமாளிக்க முயன்றாள்.
“கோவில்ல சாமித்தான் இருக்கும். அதுக்காகத்தான அங்கப் போறோம். சரி விடு. நீ என் அண்ணாக் கூடத்தான் போகனும்னு ஆசைப்படுற. அதனால அங்க போக வேண்டாம். பேசாம பீச்சுக்கு போவோம்மா?” என்றாள் விழி.
உடனே அவளோ ஒரு நொடி யோசித்து பின், “சரி” என்றாள். ஆனால் உள்ளுக்குள் தன் கணவனைத்தான் பாரபட்சமே இன்றி திட்டிக் கொண்டிருந்தாள்.
“ஒரு வார்த்தையாச்சும், ஊருக்கு போறத பத்தி என்கிட்ட சொல்லியிருப்பாரா?” என்றவள் அவளையும் அறியாமல் மனைவியாய் உரிமை எடுத்து திட்ட ஆரம்பித்திருந்தாள்.
அதன் பின், கவியும், விழியும் பீச்சுக்கு செல்ல, கவிக்கோ, அத்தனை தயக்கம். ஏனோ வெளி உலகத்தை சந்திக்க அத்தனை தயங்கினாள். அவள் தயக்கம் விழிக்கு புரிந்தாலும், அதை எல்லாம் அவள் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
“ஹேய் ஹேய் கவி உனக்கு ஞாபகம் இருக்கா? நம்ம காலேஜ் படிக்கிறப்ப, ஒரு நாள்” என்றவள், இதற்கு முன் இங்கு வந்த போது என்னவெல்லாம் செய்தோம்? என்று பேசிக் கொண்டே வந்தாள்.
ஒரு கட்டத்தில், கவிக்குமே அந்த நினைவுகள் எல்லாம் அலை மோத, அவள் முகத்திலும் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது. ஏதேதோ பேசி, கவியை சற்று தேற்றி, அங்கிருந்து ஹோட்டலுக்கும் அழைத்துச் சென்றாள்.
அங்கேயும் விழித்தான் விடாது பேசிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் கவியோ, “ஹேய். இப்போ நான் சாப்பிடனுமா? இல்ல நீ பேசுறத கேட்கனுமா? என்னால முடியல. காதுல இருந்து இரத்தம் வந்துடும். உண்மையாவே நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று கையெடுத்து கும்பிட்டாள்.
அதில் சிரித்தவளோ, “அதான, உனக்கு உன் வீட்டுக்காரர் பேசுனாத்தான் பிடிக்கும். அவர் பேசுனா மட்டும், விடிய விடிய உட்கார்ந்து கேட்டுட்டு இருப்ப” என்று சீண்டினாள் விழி.
அதில் தன் தோழியை முறைத்தவளோ, “அம்மா தாயே! மறுபடியும் ஆரம்பிக்காத. நீ வேணும்னா பேசு. நான் வேணும்னா, இப்படி படுத்துட்டே கூட கேட்கிறேன்” என்றாள் கவி.
“சரி சரி. எப்படியும், இனிமே அடிக்கடி வெளிய வருவோம்த்தான. மீதிய அப்போ பார்த்துக்கிறேன். இப்போ சாப்பிடு” என்று விழி சொல்லவும், “என்னது? அடிக்கடியா?” என்றாள்.
“ஆமா. இன்னும் ஒரு வாரம் தான் என் கூட இருப்ப. அதுக்கப்புறம் அண்ணன் வந்துடும். அடுத்து புல்லா அவர் கூடத்தான வெளிய போவ. சோ இந்த வீக்க வேஸ்ட் பண்ணாம, நம்ம யூஸ் பண்றோம்” என்றாள் விழி.
“உன்ன கொல்லப் போறேன். அமைதியா சாப்பிடு” என்றவள், தன் முன்னே இருந்த கத்தியை எடுத்து அவள் பக்கம் காட்ட, “பாத்தீயா? எம் எல் ஏ ஒயிப் ஆனதும், பட்ட பகல்ல கொல பண்ண கத்திய எடுக்கிற” என்று அதற்கும் சீண்டினாள்.
இப்படியாக, விழி கவியை போட்டு படுத்து எடுத்தி, ஒரு வித நிம்மதியுடனே வீட்டுக்கும் வந்து சேர்ந்தனர். ஏனோ வீடு வரை கூட தெரியவில்லை. வீடு வந்ததும் மனம் தானாக வேந்தனைத் தான் தேடியது. அவள் நினைத்தது சென்னையில் இருந்தவனுக்கு கேட்டதோ? என்னவோ உடனே தன் தங்கைக்கு அழைத்திருந்தான்.
வேகமாய் அட்டண்ட் செய்து, “ஐயோ அண்ணா! உங்களுக்கு ஆயுசு நூறு. இப்பத்தான் வீட்டுக்குள்ள நுழைஞ்சோம் கரெக்டா கால் பண்ணிட்டீங்க” என்றவள், இன்னும் சில விஷயத்தை சொல்லிவிட்டு, கவியின் காதில் மொபைலை வைத்தாள்.
அதில் கவியோ என்ன பேச என்று தெரியாது விழியைப் பார்க்க, “என்ன? நான் இருக்கிறதால வெட்கப்படுறீயா? நில்லு. நான் வேணா போறேன். நீங்க பேசுங்க” என்றப்படி அவள் மேலே செல்ல முயன்றாள்.
“ஹேய் அதெல்லாம் இல்ல” என்ற கவி விழியின் கையைப் பிடித்து நிறுத்த, அந்தப் பக்கம் வேந்தனோ, “நான் இல்லாம ஹாப்பியா இருக்கீங்க போல” என்றான்.
அவன் வார்த்தையில் மெல்லிய ஏக்கம் கூட தென்பட்டது. அதை உணர்ந்தாலும், “ஆமா ஹாப்பியாத்தான் இருக்கோம்” என்று பட்டென்று கூறினாள்.
அதில் அந்தப் பக்கம் இருந்தவனுடைய முகத்தில் மெல்லிய இறுக்கம் கூட, “ரொம்ப நாள் ஹாப்பியா இருக்கலாம்னு நினைக்காத. ஒரு வாரம் தான். அதுக்கப்புறம் என் கூடவேத்தான் நீ இருக்கப் போற” என்று சிறு கோவத்துடன் கூறினான்.
அவனின் கோவம், இவளுக்குள் ஒரு வித இதத்தை கொடுத்தது. “என்கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு போனீங்களா? அப்போ எனக்கும் இப்படித்தான் இருந்திருக்கும்” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
அவள் அமைதியாய் இருக்கவும், “என்ன? என்கிட்ட பேச உனக்குத்தான் ஒன்னுமே இருக்காதே” என்று எரிந்து விழுந்தான்.
அவன் எரிச்சலில், இவளோ, “ஆமா” என்று பதில் சொல்ல, அந்தப் பக்கம் இருந்தவனுக்கு மண்டை சூடானது.
“இங்கப்பாரு. என் தங்கச்சி முன்னாடி, நமக்குள்ள இருக்கிற டிஸ்டன்ஸ காமிக்க கூடாதுன்னு, உனக்கு முன்னாடியே சொல்லிருக்கேன்” என்று பல்லைக் கடித்தான்.
“ஆமா” என்று அவள் அதற்கும் ஆமா போட, இங்கே இவனுடைய பொறுமையோ காற்றில் பறந்தது.
“என்னடி? நான் அங்க இல்லன்ற தைரியத்துல பேசுறீயா?” என்று அவன் கேட்க, “ஆமா” என்றாள் இவள். “வெறுப்பேத்துறீயா?” என்று அவன் பல்லைக் கடிக்க, இவளோ, “ஆமா” என்று அவள் அதற்கும் சொல்லப் போக, அதற்கு முன்னே, “ஹேய் லவ்வர்ஸ் தான், ம் ஒகேன்னு பேசுவாங்கன்னு பாத்தா, ஹஸ்பண்ட் அண்ட் ஒயிப் நீங்களும் இப்படித்தான் பேசுவீங்களா? இப்படி எல்லாத்துக்கும் ஆமா போடுறதுக்கு, உன் நம்பர்ல இருந்து நீயே என் அண்ணாக்கு கால் பண்ணி, இந்த ஆமாவ போடு. நான் என் மொபைல்ல, ஏதாச்சும் நல்ல சைனீஸ் ட்ராமாவாச்சும் எடுத்துப் பார்ப்பேன்” என்ற விழி மொபைலை பிடுங்கியிருந்தாள்.
“அண்ணா, நீங்க அவ நம்பருக்கு கால் பண்ணி பேசுங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பை கட் செய்ய, இப்போது கவியோ, “அதெல்லாம் வேண்டாம்” என்றாள்.
அதற்கு முன்பே கவியுடைய மொபைலுக்கு வேந்தனிடம் இருந்து அழைப்பு வந்தது. அதையும் விழியே அட்டண்ட் செய்து கவியிடம் கொடுத்து விட்டு அவளறைக்கு சென்றாள்.
இப்போது கவியோ, “ஹலோ” என்று மெல்லமாய் சொல்ல, அந்தப் பக்கம் இருந்து “இச்” என்ற அழுத்தமான முத்தச் சத்தம் மட்டுமே அவள் செவியில் விழுந்தது. அதில் இவள் இதயம் மட்டும் அல்லாது, அவள் உடலிலேயே ஏதோ ஒரு அதிர்வு.
அவள் அந்த அதிர்வில் இருக்கும் போதே, “இச், இச்” என்று அடுத்தடுத்து பல முத்தம் அவள் செவிப்பறை வழி புகுந்து, அவள் இதயத்தை தட்டி எழுப்பி, கோவமாய், “சார் என்னப் பண்றீங்க?” என்றாள்.
“ஒ உனக்கு அப்போ, ஆமாவ தவிர வேற வார்த்த பேச வரும்மா?” என்று நக்கலாய் கேட்டான்.
அவனின் நக்கலில், இவள் இப்போது பல்லைக் கடிக்க, “என்ன? எலிக்கிட்டத்தான் பேசுவீயா? இத முன்னாடியே சொல்லிருந்தா, அப்பவே எலிய வர சொல்லியிருப்பேன்னே” என்று மீண்டும் நச்சென்று ஒரு “இச்” முத்தத்தை அவளுக்கு கொடுத்தான் வேந்தன்.
“ஐயோ சுடர்” என்றவள் கத்த, “பாருடா. அப்போ இப்படி பேசுனா, என்கிட்டையும் பேசுவீயா? சரி அப்போ இனிமே இப்படியே பேசுறேன்” என்றவன் மீண்டும் முத்தம் கொடுக்கப் போக, “சாப்டீங்களா?” என்றாள்.
அதில் அந்தப் பக்கம் இருந்தவனோ ஒரு நொடி அமைதிக் காக்க, கவியோ, “நாங்க மட்டும் சாப்டோமா? இல்லையான்னு நேரத்துக்கு விசாரிக்க தெரியுதுல்ல. அப்போ அந்த டைமுக்கு நீங்களும் சாப்பிட வேண்டாமா?” என்றாள்.
ஏனோ மனைவியின் அக்கறை, ஒரு கூடை ஐஸை எடுத்து தலையில் வைத்தது போல், குளுகுளுவென்று இருந்தது. “ஏன்? மேடம் கால் பண்ணி சாப்பிட சொன்னா குறைஞ்சுப் போயிடுவாங்களா?” என்றான்.
“அப்படியே நான் சொல்றத மட்டும் தான் நீங்க செய்றீங்களா? அதான் உங்க தங்கச்சி சாப்பிட சொன்னாத்தான?” என்றாள் கவி.
“என்னத்தான் சொன்னாலும், பொண்டாட்டி சாப்பிட சொல்ற மாதிரி வரும்மா?” என்று அவன் ஆசையாய் கேட்க, அப்போதே இத்தனை நேரம் தான் செய்துக் கொண்டதே நினைவுக்கு வர, சட்டென்று இறுக்கமாகியிருந்தாள்.
அவளுடைய அந்த அமைதியே, அவளின் மன நிலையை அவனுக்கு காட்டியிருக்க, அதைக் கண்டுக் கொள்ளாது, “சரி. எப்படியும் வெளிய அலைஞ்சது டயர்டா இருக்கும். போயி ரெஸ்ட் எடு” என்றான்.
அதில் தன் மெளனத்தை கலைத்து, “ஒழுங்கா டைமுக்கு சாப்பிடுங்க. இத ஒயிப்பாலாம் சொல்லல. எனக்கு எப்பவுமே அந்த தகுதி கிடையாது. நான் அப்படி நினைக்கவும் மாட்டேன். நான் சாப்பிடுற சாப்பாடே, நீங்களும், உங்க தங்கச்சியும் கொடுத்தது தான். அந்த நன்றி உணர்வுலத்தான் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள் கவி.
அதைக் கேட்டவனுக்கோ அப்படி ஒரு கோவம். நேரில் இருந்திருந்தால், ஏதாவது திருப்பிக் கொடுத்திருப்பான். ஆனால் அவன் அங்கே இருக்க, ஒரு வித கடுப்புடனே அவனுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
இங்கே கவியின் மனமோ, “ஏன் கவி இப்பவும் உன் மனசுல வெறும் நன்றி உணர்வு மட்டும் தான் இருக்கா? வேந்தனப் பத்தி வேற எதுவுமே உன் மனசுல இல்லையா?” என்று கேள்வி கேட்டது.
“உண்ட வீட்டுக்கு எப்பவும் துரோகம் நினைக்க கூடாதுன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அப்படி பார்த்தா, வேந்தன் சாரும், விழியும், எனக்கு சாப்பாடு மட்டும் இல்ல, எனக்கு உயிர் பிச்சையே கொடுத்திருக்காங்க. அப்படி இருக்கிறப்ப, அவங்க வீட்டுக்கு எந்த பாதகமும் வர நான் அனுமதிக்க மாட்டேன். என் துரதிஷ்டம் என்னோடவே போகட்டும். அவங்க ரெண்டு பேர் வாழ்க்கை, எப்பவுமே சந்தோஷமா நிம்மதியா இருக்கனும். அதுக்கு நான் அவங்க வாழ்க்கையில இருக்க கூடாது” என்று தனக்குத் தானே அழுத்தம் திருத்தமாய் சொல்லிக் கொண்டாள் கவி.
ஆனால் எல்லா நேரமும் நாம் நினைப்பது மட்டுமே நடந்துவிடாதே. விதி எல்லா சக்திக்கும் அப்பாற்பட்டது. அப்படி இருக்க, அது என்ன முடிவு செய்திருக்கிறது? என்பதை அடுத்த ஒரு வாரத்திலேயே அவளுக்கு தெரிய வைக்க அந்த நிகழ்வு நடந்தது.
அடுக்கடுத்த நாட்களும், விழியும் கவியும், வெளியில் செல்வதை வழக்கமாக்கியிருந்தனர். கவிக்குமே முதல் நாள் இருந்த தயக்கம் எல்லாம் சென்று, இப்போது மகிழ்ச்சியாகவே விழியுடன் சுற்றிக் கொண்டிருந்தாள். நாளை வேந்தன் வந்து விடுவான். இன்று, விழியோ, “தியேட்டர் போலாம் கவி” என்றழைத்தாள்.
“ஹேய் உன் அண்ணன் தான் உனக்காக தியேட்டரே கட்டி வச்சிருக்காரே. இங்க உட்கார்ந்து பாரு” என்றாள் கவி.
“ம்ஹூம். அதெல்லாம் அண்ணா இருக்கிறப்ப பார்த்தாத்தான் நல்லா இருக்கும். இப்போ நம்ம தியேட்டர் போயி பார்க்கலாம். வா” என்று வலுக்கட்டாயமாய் விழி கவியை இழுத்துக் கொண்டு சென்றிருந்தாள். அவளுக்கோ விருப்பம் இல்லைத்தான். ஆனாலும் அவள் வற்புறுத்தவும் வேறு வழியின்றி செல்ல, அங்கே அவளுடைய மொத்த நிம்மதியும் பறிபோனது.
(அப்படி என்னாகியிருக்கும்? சரி அது என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். சாரி பிரண்ட்ஸ். ஹெல்த் இஸ்யூ. இன்னிக்குத்தான் கொஞ்சம் பெட்டராகியிருக்கேன். அதான் அப்டேட் பண்ணல. இனிமே ரெகுலரா வந்துடும். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தேன் தித்திக்குமா?..
Shree Ram
enna aachu🤔🤔🤔🤔🤔