தேன் – 29

வேந்தன் சொல்லியதை எல்லாம் யோசித்த கவிக்கோ, இப்போது மீண்டும் கண் மண் தெரியாத கோவம் வந்தது. அதில் வேகமாய் அவனைப் பார்த்தாள். அவனோ, இவளிடம் மனதில் இருந்ததை கொட்டிவிட்டு, அசந்து உறங்கியிருந்தான். அதில் அவளின் முகம் இன்னுமே அதிக கோவத்தை காட்ட, வேகமாய் சென்று அவனை உழுப்பி எழுப்பினாள்.

அப்போதே உறக்கத்திற்கு சென்றிருந்தவன், இப்போது இவள் போட்டு உழுப்பவும், சட்டென்று எழுந்து அவளைப் பார்த்தான்.

அவனுக்கே ஒரு நொடி புரியவில்லை. அவளோ அவனையே பார்க்க, கண்ணைக் கசக்கி, நெற்றியை தேய்த்தப்படி, “என்னடி?” என்று சிறு எரிச்சலுடன் கேட்டான்.

“ஏன் நீங்க அப்படி சொன்னீங்க?” என்று இவள் கேட்க, “இப்போ என்னத்த சொல்லிட்டாங்க?” என்று கேட்டவனுக்கோ, உறக்கத்தில் இருந்து எழுந்ததில், அவன் என்ன பேசினான் என்பதே மறந்திருந்தது.

அதில் இன்னும் அவனை முறைத்தவள், “எப்படி நீங்க அப்படி சொல்லலாம்?” என்று கோவமாய் கேட்டாள். அவளின் கோவத்தில், தன்னை மீட்டு, சற்று முன் நடந்த நிகழ்வை நினைத்துப் பார்த்து பின், “ச் இப்போ நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு? உன் மனசுல இருந்ததத்தான நான் சொன்னேன்” என்றான்.

“என் மனசுல அதுத்தான் இருக்கா?” என்று அவள் கேட்க, அதில் அவனோ, “ச் ஆமா. அப்படி நினைச்சதாலத்தான இப்படி இருக்க” என்றான்.

“எங்க, என்னைப் பாத்து சொல்லுங்க” என்றாள். “ச் உனக்கு இப்ப என்ன பிரச்சன? எனக்கு தூக்கம் வருது. காலையில அவ்ளோ வேல இருக்கு” என்றவன் அவளைப் பார்க்க மறுத்தான்.

“அவ்ளோ பேசுனீங்கத்தான? இப்போ என்னைப் பார்த்து சொல்லுங்க” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

“ஸ்ப்பா. ச் சொல்லிட்டா என்னடி பண்ணுவ” என்று அவளை நிமிர்ந்துப் பார்த்து அவன் கேட்க, “சொல்லுங்க” என்று அத்தனை அழுத்தமாய் கேட்டாள்.

அவள் கண்ணில் இருந்த ஏதோ ஒன்று, அவனின் இதயத்தை சட்டென்று பாதிக்க, பட்டென்று வார்த்தையை எடுக்க முடியவில்லை. அவன் நொடி நேர தடுமாற்றத்தையும் இனம் கண்டுக் கொண்டவள், அவன் கையை எடுத்து, தன் இதயத்தில் வைத்து “என் மனசுல அப்படி நினைச்சிட்டு இருக்கேன்னு நீங்க நினைக்கிறீங்களா சுடர்?” என்று கேட்டாள்.

அவள் பார்வையையே எதிர்கொள்ள முடியாதவனுக்கு, இப்போது அவள் இதயத்துடிப்பை உணர்ந்துக் கொண்டிருந்த கரம் அவனை அசைத்துத்தான் பார்த்தது.

“சொல்லு வேந்தா” என்று அவனுடைய மனம் சொன்னாலும், ஏனோ, அவள் கண்கள், அவள் இதயத்துடிப்பு அதை செய்யவிடவில்லை.

அதில் மெல்ல தன் கரத்தை விலக்கிக் கொள்ள அவன் நினைக்க, விடாது மேலும் பிடித்துக் கொண்டவள், “இப்போ நீங்க சொல்லித்தான் ஆகனும்” என்றாள்.

அவள் பிடிவாதத்தில், மறு கரத்தால் தன் தலையைக் கோதி, ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன், “சரி நீ அப்படி நினைக்கல. ஆனா நீ இப்படி இருக்கிறத யார் பார்த்தாலும், நான் சொன்ன மாதிரித்தான் நினைப்பாங்க” என்றான்.

அதன் பின்னே அவள் மனம் சற்று அமைதியடைய, இருந்தும் அவளோ வேகமாய், “நான் இப்படி இருக்கிறதுக்கு நீங்கத்தான் காரணம்” என்றாள்.

“என்ன? நான் என்ன பண்ணேன்?” என்று அவன் கேட்க, “ஆமா, நீங்க பூவும், பொட்டும் வாங்கி கொடுத்தீங்களா? நீங்க கொடுத்து நான் வச்சிக்கலையா?” என்றாள்.

உண்மையில் அவள் என்ன நினைத்து கேட்டாள்? என்பதை விட, அதை அவன் எப்படி புரிந்துக் கொள்வான் என்பதை அவள் யோசித்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ ஒரு வித கோவம், அழுத்தம், அதில் ஏதோ மிட்டாய், பிஸ்கட்டை கேட்பது பொல் கேட்டு விட்டாள்.

ஆனால், இங்கே வேந்தனின் முகம் தான் அத்தனை கனிந்துப் போய் இருந்தது. அவள் சொல்லியதைக் கேட்டவன், இப்போது அவள் பிடித்திருந்த கரத்தை அவனும் அழுத்திப் பிடித்து, “நான் கொடுத்தா? நீ வச்சிப்பீயா?” என்றான்.

அதில் மெல்லிய எதிர்பார்ப்பு தெரிய, அது அவள் மதியை மயங்க வைக்க, “நீங்க கொடுத்து நான் எத வச்சிக்கல?” என்றாள். ஏனெனில், அவளிடம் இருக்கும் அனைத்துமே அவன் கொடுத்தது தான். அப்படி அவன் கொடுத்ததை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், இந்த நொடி அவளிடம் அவளின் உயிர் கூட இருக்காது.

விழியின் கட்டாயத்தில் சில விஷயத்தை அவள் வாங்கிக் கொண்டாலும் கூட, அவன் கொடுத்ததை அவளுக்கு வாங்கித்தான் பழக்கம், அந்த நினைவில் தான் கூறியிருந்தாள்.

அவளின் அந்த வார்த்தையில் வேகமாய் அவன் படுக்கையில் இருந்து எழ, அவளோ அவனை கேள்வியாய் பார்த்தாள்.

அவனோ, அங்கிருந்த சட்டையை எடுத்து அணிந்துக் கொண்டு, வெளியில் கிளம்ப, “இன்னேரத்துல எங்கப் போறீங்க?” என்றாள். “நீ கேட்டத வாங்கிட்டு உடனே வந்துடுறேன்” என்றவன், அவளுடைய மறுப்பை எல்லாம் சற்றும் கணக்கில் எடுக்காது, தன் ஜீப்பை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

“அச்சோ சார். இப்போ வேணும்னு கேட்கல” என்று அவள் சொல்லிய வார்த்தை காற்றில் தான் கரைந்தது. அவன் ஜீப் கன்ணை விட்டு மறைந்தப் பின் தான், இவளுக்கு இத்தனை நேரம் அவனிடம் என்ன பேசினோம்? என்பதே நினைவுக்கு வந்தது.

“ஐயோ கவி! என்னடி உளறி வச்சிருக்க, இப்போ அவர்கிட்ட பூவு வாங்கிட்டு வர சொல்லியிருக்கேன்னா, அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? நீ இந்த கல்யாணத்த முதல்ல அக்சப்ட் பண்ணிக்கிட்டீயா? இல்ல, சுடர ஏத்துக்க ரெடியாகிட்டீயா? இப்படி எதுவுமே இல்லன்னா, எதுக்கு அப்படி சொன்ன? அவர் தான் ஏதோ சொன்னாருன்னா, உனக்கு என்னாச்சு? அப்போ நீ அவர் கூட வாழப் போறீயா? உன்னால அது முடியுமா? வேந்தன் சாரோட மனைவியாகுற தகுதி உனக்கு இருக்குன்னு நினைக்கிறீயா? கடந்த காலத்த எல்லாம் மறந்துட்டீயா? சாரோட அம்மாவ பத்தி நீ யோசிச்சீயா? அவங்க உன்ன மருமகளா நினைப்பாங்களா முதல்ல? இல்ல உன்னால விழியோட வாழ்க்க என்னாகும்னு யோசிச்சீயா? எப்படி நீ இப்படி ஒரு முடிவு எடுத்த?” என்று அவளின் மனசாட்சி அடுத்தடுத்து பல தரப்பட்ட கேள்விகளை கேட்க, இவளோ முழித்தாள்.

அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட, “இல்ல இல்ல. நான் அதுக்காக எதுவும் சொல்லல. ஆனா அதுக்காக, அவர் அப்படி பேசுறப்ப, நான் எப்படி அமைதியா இருக்க முடியும்? இந்த தாலிய நான் ஏத்துக்கலன்னாக் கூட, இப்போ அது என் கழுத்துல இருக்கிறது நிஜம் தான? அப்படின்னா, அவர் சொல்ற மாதிரி, அதெல்லாம் நான் வச்சிக்கனும்த்தான” என்றாள்.

இது என்ன மாதிரியான நியாயம்? தாலியை ஏற்றுக் கொள்ளாதவள், அதற்கான கடமையை மட்டும் சரியாய் செய்ய நினைப்பாளா? அவளுக்கு சாதகமாய் ஏதோ ஒன்றை சொல்லி தன் மனதை அடக்க முயற்சித்தாள். ஆனாலும் இன்னேரத்தில் வேந்தன் கிளம்பி சென்றது மெல்லிய அச்சத்தையும் சேர்த்தே கொடுத்தது. 

ஏனெனில் சற்று முன் தான் அவன் மரணத்தைப் பற்றி எல்லாம் பேசியிருக்க, இப்போது அதெல்லாம் அவள் செவியில் கேட்க, இதயம் பலமாய் துடிக்க ஆரம்பித்தது. அதில் அவள் வெளியில் பார்க்க, வேந்தன் வந்திருக்கவில்லை. அதில் சோர்வாய் திரும்பியவளின், கண்ணில் அங்கிருந்த பூஜையறை தெரிய, வேகமாய் அங்கு சென்றாள்.

அங்கிருந்த கடவுளிடம் கண் மூடி நின்று, “வேந்தன் சார் ரொம்ப நல்லவரு. அவருக்கு அவர் தங்கச்சின்னா ரொம்ப பிடிக்கும். அவளுக்காக என் கழுத்துல இந்த தாலிய கட்டியிருக்காரு. இந்த தாலிக்குள்ள அவரோட உயிர் இருக்கு அப்படின்னா, அந்த உயிருக்கு பதிலா, என் உயிரைக் கூட நீ எடுத்துக்கோ. அவருக்கு எந்த பிரச்சனையும் வந்திடக் கூடாது. அவரோட வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல பொண்ண அவருக்கு நீத்தான் கொடுக்கனும். அதுவரைக்கும், இந்த தாலியையும், குங்குமத்தையும் நான் வச்சிப்பேன்” என்றப்படி அங்கிருந்த குங்குமத்தை எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டாள்.

அதன் பின் மீண்டும் வாசலிலேயே வந்து அமர்ந்து விட்டாள். “ச் ஒரு பேச்சுக்கு சொன்னா, உடனே கிளம்பி போயிடுவாரா? ஒரு எம் எல் ஏ மாதிரியா நடந்துக்கிடுறாரு. ஏதோ சின்னப் பையன் மாதிரி பிகேவ் பண்றாரு. இன்னேரத்துல, யாரு இவருக்காக பூக்கடைய வச்சிட்டு இருக்காங்களாம்” என்று தனக்குள் திட்டியவள், வாசலைப் பார்த்தாள்.

அவன் வருவது போல் தெரியவில்லை. அதனால், அவனுக்கு கால் செய்துப் பார்க்கலாம் என்று நினைத்து தன் மொபைலை தேடினாள். அதுவோ அவர்கள் அறையில் இருக்க, அதை எடுப்பதற்காக அங்கிருந்து அறைக்கு வந்தாள். வந்தவள், விழி அவளுக்காய் வாங்கி வந்திருந்த அந்த மொபைலைத் தேடினாள்.

அதை அவள் கொடுக்கும் போதே, “எனக்கு எதுக்கு இதெல்லாம்?” என்று கேட்டு அவளிடமே திருப்பி கொடுக்கவே நினைத்தாள். ஆனால் விழித்தான் கட்டாயப்படுத்தி கொடுத்திருந்தாள்.

ஒரு வழியாய் அதை தேடி கண்டுப்பிடித்தவள், அதை ஆன் செய்ய முயற்சிக்க, அதுவோ சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

“ச்சே. அன்னிக்கு போட்ட சார்ஜ். எப்படி இத்தன நாளைக்கு இருக்கும்?” என்று தன்னைத் தானே திட்டியவள், வேகமாய் சார்ஜரை எடுத்து சார்ஜ் போட்டாள். இரண்டு நிமிடம் ஏறும் முன்னே வேகமாய் அவள் மொபைலை ஆன் செய்தாள்.

அதில் வால்பேப்பராக, வேந்தனும், கவியும் நிற்கும் புகைப்படம் தான் இருந்தது. அதில் ஒரு நொடி, “இந்த போட்டோ எப்படி?” என்று தான் யோசித்தாள்.

ஏனெனில், வேந்தனும், கவியும் சேர்ந்து எல்லாம் ஒரு நாளும் போட்டோ எடுத்துக் கொண்டது கிடையாது. இப்போது இவர்கள் இருவரும் அருகருமே நிற்கும் புகைப்படம், இது எப்போது?” என்று அவளையும் மீறி அந்தப் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மின்னலென அன்று நடந்த நிகழ்வு அவள் கண் முன்னே ஓடியது. அன்று விழியுடைய பிறந்த நாள். அவளுடைய விருப்பத்துக்காக, கவியும், அவளுடன் சேர்ந்து வேந்தன் புதிதாய் கட்டியிருந்த வீட்டுக்கு வந்திருந்தாள்.

ஏனெனில் பெரும்பாலும், கவி, வேந்தன், விழியுடைய வீட்டுக்கு வர சம்மதிக்க மாட்டாள். அதிலும் அவளுடைய அம்மாவும், அப்பாவும் அவளை நல்லப்படியாக நடத்தமாட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியும். அதனால் தான் வேந்தன் புதிதாய் வாங்கியிருந்த அந்த வீட்டில் வைத்து கேக் கட் பண்ணலாம் என்று சொல்லியிருந்தாள் விழி.

வேந்தனும் அதற்கு சம்மதித்திருக்க, அந்த வீடோ கடற்கரையை ஒட்டி, சற்று தனிப்பட்ட இடத்தில் இருந்தது. அங்குத்தான், கவியும், விழியும் இருந்தனர். வீட்டின் பின் பக்க தோட்டத்தில் நின்று பார்த்தால், கடல் நன்றாகவே தெரியும். அதை அவள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது விழியோ தன் அண்ணன், தனக்கு கிப்டாக கொடுத்த கேமராவை வைத்து, அவளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள்.

“உண்மையாவே உன் அண்ணாவோட வீடு சூப்பரா இருக்கு” என்று கவி சொல்ல, “அதென்ன அண்ணாவோட வீடு. உன் வீடு” என்றாள் விழி.

அதில் அவளோ, “ச் சும்மா இப்படி பேசிட்டு இருக்காத விழி. உன் அண்ணன் கேட்டா, என்னைப் பத்தி என்ன நினைப்பாரு?” என்று தோழியை முறைத்தாள்.

“என்ன நினைப்பாரு? என் தங்கச்சி எனக்காக சூப்பரா ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கான்னு நினைப்பாரு” என்று சீண்டலாய் கூறினாள்.

“ச் நீ இப்படியே பேசிட்டு இருந்தேன்னா? நான் இப்பவே கிளம்புறேன்” என்றப்படி அங்கிருந்து அவள் செல்ல, அங்கே அப்போது வந்த வேந்தனின் மீதே மோதியிருந்தாள்.

அதில் அவளோ, “ஐயோ சாரி சாரி சார்” என்று அவள் பதட்டமாய் விலக, “எங்க கிளம்புற?” என்றான். பெரிதாய் எல்லாம் அவன் அவளிடம் கேள்வி கேட்க மாட்டான். இப்போது அப்படி கேட்கவும், “அத் அது வந்து” என்றவளுக்கு உதடுகள் தந்தியளித்தது.

“என்ன?” என்று அவன் புருவம் உயர்த்திக் கேட்க, “இல்ல லேட்டாயிடுச்சி. அதான் ஹாஸ்டலுக்கு” என்றாள். அதில் அவளை அழுத்தமாய் பார்த்தவனோ, “இன்னிக்கு என் தங்கச்சி கூட நான் இருக்கனும்னு ஆசைப்படுறேன்” என்றான்.

“ம்” என்று அவள் தலையாட்ட, அவனோ, “சோ நீயும் இங்கத்தான் இருக்கனும். அவ உன் கூடத்தான் இருப்பா” என்று அழுத்தமாய் சொல்ல, அதற்கும் “ம்” என்று வேகமாய் தலையாட்டினாள். அப்போது எடுத்த புகைப்படம் தான் அது.

“நான் சொல்றப்பல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு, இப்போ சரி சொல்லிட்ட” என்ற விழியின் கேலி பேச்சில் இருந்தவளில் தலையில் வேந்தன் பூவை வைத்து விட, நினைவுக்கும், நிஜத்துக்கும் இடையில், அவளோ தலையை குழப்பி இவ்வுலகம் வர, வேந்தனின் இதழ்கள் அவள் கன்னத்தில் அழுத்தமாய் பதிந்தது.

(ரைட்டு அடுத்த சீன்ல கவியோ கை, வேந்தன் கன்னத்துல படப் போகுது. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சாரி ஹாய்ஸ். கொஞ்சம் ஹெல்த் இஸ்யூஸ். அதனாலத்தான் அப்டேட் பண்ண முடியாம போயிடுச்சி. இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 29 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***