இரவு நேரத்தில், தான் கட்டிக் கொள்ளப் போகும், மாமனுடனான பைக் பயணம், மற்ற பெண்களுக்கு, பட்டாம்பூச்சியை பறக்க வைத்திருக்கும். ஆனால், அங்கே அவனின் சட்டையைப் பிடித்தப்படி, பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நிலாவுக்கோ, பயத்தில் புளியைக் கரைத்தது.
அந்த ஆள் இல்லாத சாலை அவளை சற்று திகிலூட்ட, அவன் சட்டையை சற்று அழுத்தம் கொடுத்துப் பிடித்தாள். அதில் கண்ணாடி வழியே பின்னே அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு, அவளுடைய பயம் தெரிய, அவளுடன் பேச்சுக் கொடுக்க நினைத்து, “நிலா” என்றான்.
அவளுக்கோ அவன் அழைத்தது கூட காதில் கேட்கவில்லை. அதில், அவள் கரத்தை ஒரு கரத்தால் மெலிதாய் பற்றினான். அப்போதே, சுய நினைவுக்கு வந்தவள், “என்ன மாமா?” என்றாள்.
“உனக்கு புடவை பிடிச்சிருக்கா?” என்று அவன் சகஜமாய் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்க, ஏனோ அவன் கைக்குள், தன்னுடைய ஒரு கை அடங்கியிருக்க, மறு கரம் தானாகவே, அவனுடைய இடையை சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டது. அதில் சற்று தைரியம் கிடைத்தவள், “ம் ரொம்ப பிடிச்சிருக்கு மாமா” என்றாள்.
அதை அவள் சொல்லும் போதே, அவளுடைய கண்கள் அபிநயம் பிடிக்க, அதைப் பார்த்தவனின் முகத்திலும் ஒரு விரிந்த புன்னகை.
“நகை எல்லாத்தையும் பார்த்தீயா? அதுல ஏதாச்சும் பிடிக்கல, மாத்தனும்னா கூட நம்ம மாத்திக்கலாம்" என்றான். “ஆ..ங் இல்ல. எல்லாமே அழகா இருக்கு" என்று வேகமாய் மறுத்தாள். கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் அவளிடமிருந்து வந்துக் கொண்டிருக்க, அவனுமே, மெயின் ரோட்டுக்கு வரும் வரையிலும், சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்.
மெயின் ரோடு வந்ததும், பளீச்சென்ற வெளிச்சம் முகத்தில் அடிக்க, அதன் பின்னே, நிலாவின் கரத்தை விடுவித்து, சாலையில் கவனத்தை பதித்தான். அவளோ இப்போது அவன் வயிற்றை இறுக்கமாய் பற்றியப்படி, சுற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். தூங்கா நகரம் என்று மதுரைக்கு ஏன் பெயர் வந்தது? என்று சொல்லுவது போல், அத்தனை கடைகளும், திறந்திருந்தது. மக்கள் எல்லாம், அங்கும், இங்கும் என்று பகல் போல் சுற்றிக் கொண்டிருந்தனர். மொத்த கூட்டமும், நடைப்பாதை கடையோரம் குவிந்திருந்தனர். பைக்கை ஓட்டவே அத்தனை சிரமமாய் இருந்தது.
ஒரு வழியாக, அந்த டெய்லர் கடைக்கு வந்து பைக்கை நிறுத்தினான். அவர்களுக்காகவே காத்திருந்தது போல், “வாங்கண்ணா. வா நிலா” என்று அவள் அழைக்க, இருவரும் உள்ளே சென்றனர்.
நிலாவுக்கு அளவு எடுக்க அவள் ஆரம்பிக்க, கதிரோ வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். அவர்கள் ஊர் தான் அந்தப் பெண்ணும், திருமணமாகி மதுரையில் செட்டில் ஆகியிருந்தார்.
அதனால், நிலாவை நன்றாகவே தெரியும். “இத அன்னிக்கே வந்து கொடுத்துட்டு போறதுக்கென்ன? மாமன் கூடத்தேன் வருவேன்னா, அன்னிக்கே அண்ணன்ன இழுத்துட்டு வர வேண்டியதுத்தேன்ன. இப்போ பாரு, இன்னேரத்துல வர்ற மாதிரி ஆயிடுச்சி" என்றாள் அவள்.
அவளோ, மீண்டும் பேந்த பேந்த விழித்தாள். கதிரோ, அவர்கள் பேசுவது கேட்டாலும், அவன் சிறு சிரிப்புடன் வெளிப் பக்கம் பார்த்திருந்தான்.
“முதுகுக்கு, இவ்ளோ இறக்கம் வைக்கட்டுமாண்ணே” என்று கதிரிடம், அந்த டெய்லர் கேட்க, இப்போது அவன் முழித்தான். அவனுக்கு என்ன தெரியும்?
அவன் முழிப்பதைப் பார்த்த டெய்லரோ, “போச்சு போங்க. அவேத்தேன் வாய தொறக்க காசு கேட்பான்னு, உங்க கிட்ட கேட்டா, அட எண்ணண்ணே? உங்களுக்கு பொண்டாட்டி ஆகப் போற புள்ளத்தேன்ன. இந்தப் பக்கம் செத்த திரும்பிப் பாத்தா தப்பொண்ணும் இல்ல" என்று அந்த டெய்லர் சீண்டலாய் சொல்ல, கதிரோ, அப்போதே திரும்பினான்.
“போதுமான்னே” என்று அவள் நிலாவின் மேல் டேப்பை வைத்துக் கேட்க, நிலாவோ கூச்சத்தில் நெளிந்தாள்.
“அடியே எவடி இவ. இப்படி நெளிஞ்சா, அப்புறம் எப்படிடி? அண்ணே உங்க நிலைமை கஷ்டம்ந்தேன்" என்று டெய்லர், கிண்டலாய் கூறினாள். பொதுவாகவே ஊர் பக்கம் கேலி, கிண்டல் எல்லாம் சாதாரணம். அதிலும் ஜோடியாய் சிக்கினால் சொல்லவா வேண்டும்? கதிருக்கு அதெல்லாம் தெரியும் தான். ஆனா நிலா தான் மழலையாய் விழித்தாள்.
அதில் இவனின் மனமோ, மீண்டும் மீண்டும் சிறு பெண் என்று அடித்து சொல்லியது. அவர் காட்டிய இறக்கம் சற்று அதிகம் போல் தோன்ற, “இல்ல இன்னும் கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க" என்றான் அவன்.
“சரி" என்றவர், “அப்போ இடுப்புக்கு இந்தளவு ஒகேவா?” என்று அவள் தாவணியை சற்று விலக்கி, டேப்பை வைத்துக் கேட்க, அவனின் நிலைமைத்தான் மோசமனது.
“ம்" என்றவன் வேகமாய் முகத்தை திருப்பிக் கொண்டான். ஆனாலும் அந்த அடர் பச்சை நிற தாவணியில், அவளின் எழுமிச்சைப் பழ நிற, இடை பட்டும் படாமல், அவன் விழியில் பசைப் போட்டார் போல் ஒட்டிக் கொண்டது.
“என்னல கதிரு? சின்னப் புள்ளடா” என்று தன்னைத் தானே நொந்தவனுக்கு, அங்கே இருக்கவே முடியவில்லை. “நீங்க அளவு எடுங்க, நான் போன் பேசிட்டு வந்துடுறேன்" என்றப்படி கடைக்கு வெளியில் வந்து நின்றான்.
அங்கே டெய்லரோ, அவளிடம் ஊர் கதை பேசியப்படி, அளவெடுத்து முடிக்க, நிலாவோ, வெறும் “ம்" மட்டுமே போட்டாள்.
அதில் அவரோ, “அடியே! உன் மாமன் சொல்றதுக்கும் இப்படி வெறுமனே ம் போட்டேன்னா, பொழுது விடிஞ்ச மாதிரித்தேன்” என்று அவள் கன்னம் கிள்ளி சொல்ல, அவளோ புரியாமல் அவரைப் பார்த்தாள்.
அதன் பின் வெளியில் நின்ற கதிரைப் பார்த்து, “அளவெடுத்தாச்சுண்ணே, வந்து உங்க அக்கா மவள கூட்டிட்டு போங்க" என்று சொல்ல, அவனுமே உள்ளே வந்து, நிலாவைப் பார்த்தான்.
“சமத்துப் பொண்ணுன்னே. நல்லாப் பாத்துக்கோங்க” என்றாள் அவள். அதில் மெலிதாய் புன்னகைத்தவன், நிலாவைப் பார்த்து, “ம்ஹூம் இனிமேல் பாக்கவே கூடாது" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
பின் ஜாக்கெட் தைப்பதற்கான காசை எடுத்து அவன் கொடுக்க, “தைச்சிக் கொடுத்துட்டு நாளைக்கு வாங்கிக்கிறேன்னே, மாப்பிள்ள ஆகப் போறவக, ராவு நேரத்துல, இப்படி லட்சுமிய நீட்டாதீக. பத்திரமா வூடு போயி சேருங்க” என்றாள் அவள்.
அதில் அவனோ, “சரி" என்றப்படி நிலாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான். வரும் போது இருந்த கூட்டத்தை விட, இப்போது அதிக கூட்டமாய் இருக்க, பைக்கை நிறுத்தி நிறுத்தி ஓட்ட வேண்டிய நிலை. நிலாவுக்கோ உறக்கமே வர ஆரம்பித்தது.
அதில் அவன் வயிற்றைக் கட்டிக் கொண்டு, முதுகில் முகம் புதைக்க, அவனுக்கோ, அவன் உணர்வுகள் அவனுடன் விளையாடியது. மதுரையை தாண்டியதுமே அவள் உறங்கி விட, கண்ணாடி வழியே அவளை ஒரு பார்வை பார்த்தப்படி தான் வண்டியை ஓட்டினான். அவர்கள் ஊர் பாதைப் பக்கம் வண்டியை திருப்ப, கரடு முரடான பாதையில் வண்டி குலுங்கியது.
அதில் சட்டென்று உறக்கம் கலைந்தவள், வேகமாய் அவன் வயிற்றை அழுத்திப் பற்றிக் கொள்ள, இங்கே இவனின் இதயம் தான் பலமாய் துடித்தது.
மீண்டும் அந்த இருள் அவளை சற்று திகிலூட்ட, பற்றாக்குறைக்கு குளிர் வேறு அவள் உடலுக்குள் ஊசியாய் பாய்ந்தது. அதில் இன்னும் அவனின் பக்கம் நெருங்கி அமர்ந்தவள், அவனுடன் ஒன்றினாள்.
அதில் அவள் தலையில் இருந்த மல்லிகையின் மணம் அவனை மதி மயக்க, “நிலா செத்த தள்ளி உட்காரு" என்றான். அவளோ பாதி உறக்கத்தில் இருக்க, அவன் சொல்லியதெல்லாம் அவள் மூளையில் பதியவே இல்லை. அதிலும் காற்று வேறு பலமாய் அடிக்க, அவளுடைய தாவணி முந்தானை வேறு, அவன் கன்னத்தை தழுவி விலகியது.
பைக்கில் சிக்கிக் கொண்டாள் என்ன செய்வது என்று யோசித்தப்படி, அவன் ஒரு கரத்தால், அந்த தாவணி முந்தானையைப் பிடித்து அவள் கரத்தில் திணித்தான்.
அப்போதே இவ்வுலகம் வந்தவள், அவன் எடுத்துக் கொடுத்த தாவணி முந்தானையைப் பிடிக்கிறேன் என்று, அவனைப் பிடித்திருந்த கரத்தை விலக்க, சரியாக அன்னேரம் பள்ளம் ஒன்றில், பைக் சென்றிருக்க, “மாமா” என்றப்படி தவறி விழ சென்றாள் நிலா.
அப்போதே முன்னே சாலையைப் பார்த்தவன், பைக்கைப் நிறுத்தும் முன், நிலா விழப் போக, “ஹே தென்றல்" என்றவன், அவள் இடையோரம் கரம் பதித்து அவளை விழாமல் தடுக்க, அவனின் ஒரு கரத்தில் இப்போது பைக் தடுமாறியது.
ஆக மொத்தத்தில், பைக் விழுந்து விட, அவளுக்கு அடிபடாதவாறு தன்னுள் சேர்த்து பிடித்தவன், ஒரு செடியோரம் சென்று விழுந்தான். சட்டென்று நடந்து விட்ட நிகழ்வில் நிலாவின் மொத்த தூக்கமும் கலைந்திருக்க, அவள் அவன் மீது கிடந்தாள்.
இப்போது அவள் தாவணி, அவன் முகத்தை மொத்தமாய் மூடியிருக்க, அவளுக்கே உண்டான வாசமும் சேர்த்து அவனை தடுமாறத்தான் வைத்தது. சட்டென்று எழ வேண்டும் என்ற சிந்தனையேயின்றி, அவன் ஆழ்ந்து மூச்சை உள்ளிழுக்க, “அச்சோ மாமா” என்று அவன் கன்னம் தட்டினாள் நிலா.
எங்கே விழுந்ததில், அவனுக்கு அடிப்பட்டு விட்டதோ என்ற பதட்டம். அதில் தன்னை மீட்டெடுத்தவன், “ஒன்னுல்ல. எந்திரி" என்றவன், அவளை எழுப்பி, தானும் எழுந்து பைக்கைத் தூக்கினான். நல்ல வேளையாக பெரிதாய் அடி எதுவும் படவில்லை.
சகதி மட்டுமே ஒட்டியிருந்தது. அதுவும் பைக்கின் மீதும், அவனின் மீதும் மட்டுமே நிலாவின் மீது தூசி கூட படவில்லை.
“உனக்கு ஒன்னுமில்லத்தேன்ன?” என்று அவன் கேட்க, அவளோ, “ம்ஹூம்" என்றவள், அவனை நெருங்கி அவன் சட்டை, கையில் ஒட்டியிருந்த மணலை தன் தாவணியால் துடைத்து விட்டாள்.
அவளின் செயலில், அவனின் மனம் அவளிடம் செல்ல முயற்சிக்க, அவளோ எக்கி, அவன் தலையில் இருந்த தூசியையும் தட்டிவிட்டாள். அந்த செயலில், இங்கே, இவன் தன் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டான்.
சிறு பெண் என்று பதிய வைக்க முயன்றாலும், அவன் தடுமாற ஆரம்பித்த கணம் அது. கண்ணை இறுக்கி மூடி, தன் உணர்வுகளை இழுத்துப் பிடித்தவன், கண்ணைத் திறக்காமலே, அவள் தோளில் கரம் பதித்து அவளை விலக்கி நிறுத்தினான்.
அவளோ மீண்டும் அவனை நெருங்கப் போக, “கிளம்பலாம்" என்று சற்று அழுத்தமாய் கூறினான்.
“ம்" என்றவள் அதன் பின் துளியும் உறங்கவில்லை. ஏனோ தன்னால் தானோ என்ற அச்சம். அதை உணர்ந்தது போல், “இப்படி விழுந்துட்டோம். அது, இதுன்னு அக்காட்ட சொல்லிட்டு இருக்காத" என்றான்.
அதில் அவள் அவனை கேள்வியாய் பார்க்க, “அவுக தேவையில்லாம யோசிப்பாக. செரியா?” என்றான். உடனே அவளும் “ம். சாரி மாமா. நான்தேன் தூங்கிட்டேன்” என்று உதடு பிரித்து அழுகைக்கு தயாரானாள்.
அதில், “ஹேய் நான்த்தேன், பள்ளத்த பாக்கல” என்று வேகமாய் அவளை சமாதானப்படுத்தி அந்த பெரிய வீட்டுக்குள் வந்து பைக்கை நிறுத்தினான். அங்கே முருகேசனும், செல்வியும் ஒரு வித பதட்டத்தோடு நின்றிருந்தனர். ஏனோ இருவரையும் பார்த்தப் பின் தான் செல்விக்கு மூச்சே வந்தது. அதில், அவன் கேள்வியாய் முருகேசனைப் பார்க்க, அவரோ கோவமாய் நின்றிருந்தார்.
(இப்போ இவர் எதுக்கு கோவத்துல இருக்காருன்னு தெரியலையே. சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்டல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?
0 Comments
No comments yet.