வீடு மொத்தமும், சொந்தங்களால் நிறைந்திருக்க, நாளை மறு நாள் திருமணம். கல்யாண பந்தல் போட்டு, ஊர் மொத்தமும் அங்குத்தான் இருந்தது. காலை, மாலை என்று அத்தனை வேளையும் பந்தி நடந்துக் கொண்டிருந்தது. யார் இந்த வேலையை செய்வது? என்று கேள்விக்கே இடமில்லாமல், நான் தான் இந்த வேலையை செய்வேன் என்று போட்டி போட்டு, கதிரின் சொந்தங்களும், நண்பர்கள் மற்றும் உறவினர்களும் இழுத்துப் போட்டு வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கதிர் தானும் பார்க்கிறேன் என்று சொல்லியும், எவரும் அவனை எந்த வேலையும் செய்ய அனுமதிக்கவில்லை. அதிலும் காப்பு கட்டியப் பின், பொண்ணும், மாப்பிள்ளையும் வீட்டையே தாண்ட கூடாது. மிக முக்கியமாக ஊரைத் தாண்டக் கூடாது. அதனால் கதிரும் தோட்டத்து வீட்டில் தான் அமர்ந்திருந்தான்.
அப்போது அங்கே வந்த சிவா தயங்கி தயங்கி, “எண்ணே, பசங்களாம், பார்டி கேட்கிறானுங்க" என்று மண்டையை சொரிந்தான். அதில் அவன் பக்கம் திரும்பி, “தங்கச்சி, இங்கனத்தான இருக்கா?” என்று அழுத்திக் கேட்டான்.
“ஐயோண்ணே, எனக்கு இல்ல” என்று அவன் பதற, “தெரியும்ல உம்மப் பத்தி. இன்னிக்கு கோவில் போனும். அதனால, நாளைக்கு ராவு போல அளவு மீறாம குடிச்சிட்டு, அம்புட்டு பேரையும் தோட்டத்து வீட்டுல படுக்க சொல்லு. எந்த சலம்பலும் வரக் கூடாது. ஏற்கனவே முருகேசன் மாமா, அங்கத்தேன் சரக்கு மொத்தமும் வாங்கி வச்சிருப்பாக” என்று அந்த வீட்டின் சாவியை அவன் கையில் கொடுத்தான்.
“சரிண்ணே” என்று தலையாட்டி விட்டு சிவா சிட்டாய் பறந்து விட, அவனோ, “ஏதும் ஏழரைய இழுக்காம இருந்தா சரித்தேன்" என்று சொல்லிக் கொண்டான்.
ஊரில் விசேசம் என்றால், குடிப்பதற்காகவே வருபவர்கள் அதிகம். அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பதுமே ஒரு வித முறை என்றாகியிருந்தது. ஏற்கனவே சொந்தக்காரர்களுக்கு, முருகேசன் வாங்கி மோட்டர் ரூமில் பதுக்கி வைத்திருந்தான். அப்போதே கதிர் தன்னுடைய கூட்டாளிகளுக்கும் சொல்லியிருந்தான். குடிப்பது தவறுத்தான். ஆனால் குடும்பமாய் சேரும் போது அவர்களுக்கு அதில் ஒரு மகிழ்ச்சி. பிரச்சனை ஏதும் செய்யாது அவர்களைப் பார்த்துக் கொள்ளவே, குடிக்காத நாலு பேரிடம் ஏற்கனவே சொல்லியிருந்தான்.
சிவ குடிக்க மாட்டான். அப்படியே குடித்தாலும் அளவாய் தான் குடிப்பான். அதனால், கதிருக்கு, அவர்களுடைய கூட்டளிகளைப் பற்றி கவலை இல்லை. ஆனால், அவனுடைய அங்காளி, பங்காளி சொந்தத்தை சமாளிப்பது தான் சற்று சிரமம். எப்போது எவன் எந்த ஏழரையைக் கூட்டுவார்கள் என்றே தெரியாது. நல்ல வேளையாக, பொண்ணு வீடும், பையன் வீடும் ஒன்றாக இருக்க, பெரிதாய், பையன் வீட்டு கெத்து காட்டப்படவில்லை. இல்லை என்றால், அதை வைத்து ஒரு பிரச்சனையை கிளப்புவார்கள்.
விசேசம் என்றாலே, இதெல்லாம் சாதாரணம். அதெல்லாம் இருந்தால் தான், கல்யாணமும் கலைக் கட்டும். அதை நினைத்தப்படி திரும்பியவனின் முன்னே, செல்வியும், நிலாவும் நின்றிருந்தனர்.
நீண்ட நெடிய ஒரு வாரத்துக்குப் பின் அவளைப் பார்க்கிறான். ஆனாலும், அக்கா உடன் இருக்க அவனின் பார்வை நிலாவின் பக்கம் திரும்பவில்லை.
“சொல்லுக்கா” என்று கதிர் கேட்க, “கொஞ்சம் நிலாவ, டவுன் வரைக்கும் கூட்டிட்டு போயிட்டு வறீயா?” என்றார்.
அதில், “என்னக்கா சொல்ற? காப்பு கட்டுனப்புறம் ஊர தாண்ட கூடாதுன்னுத்தேன்னா, என்னை இப்படி உட்கார வச்சிருக்கீக" என்றான் கதிர்.
“ஊர தாண்டக் கூடாதுத்தேன். அதேன் உன்கிட்ட வந்து சொல்றேன். எப்படியும் வேறாரும் கிட்ட சொன்னா, சம்மதிக்க மாட்டாக" என்றாள் செல்வி.
செல்வியுமே இதெல்லாம் பின்பற்றுவார் தான். ஆனால் எதார்த்தத்தையும் புரிந்துக் கொள்வார். அதிலும், திருமணத்துக்கு முதல் நாள் இரவு, முருகேசன் அழைத்தார் என்று, அவருடன் சினிமாவுக்கே சென்றவர்.
“டவுனுக்கு எதுக்கு?” என்று கதிர் கேட்க, “முகூர்த்தப் புடவைக்கு அளவுக் கொடுத்த சட்டைய, அந்த டெய்லர் புள்ள தொலைச்சிருச்சாம். வேற ஏதாச்சும், கொடுத்தனுப்பலாம்னு பார்த்தா, ஏதோ புது மாடல்ல தைக்கிறாளாம். நிலா வந்து அளவுக் கொடுத்தா நல்லா இருக்குன்னு சொல்றா. நிச்சய புடவைக்கே, அளவு சரி இல்லாம, கஷ்டமாயிடுச்சி. நீ, நிலாவ கூட்டிட்டுப் போயி, அளவு மட்டும் கொடுத்துட்டு வா. அப்புறம் நாளைக்கு போல, நான் உன் மாமாவ வுட்டு வாங்கி வர சொல்றேன்” என்றார்.
“சரி ஒரு ஐஞ்சு நிமிஷம். சட்டைய மட்டும் மாத்திட்டு வரேன்" என்று கதிர் கிளம்பப் போக, “இல்ல இல்ல இப்போ வேணாம். இன்னும் செத்த நேரத்துல கோவிலுக்கு கிளம்பனும்” என்றார் செல்வி.
“பொறவு எப்போ போறது?” என்று கதிர் கேட்க, “கோவிலுக்கு போயிட்டு வந்ததும், ரெண்டு பேரும் போயிட்டு வாங்க" என்றார் செல்வி.
“எக்கா. தெரிஞ்சுத்தான் பேசுறீயா? இவ அம்மா, சும்மா இருப்பாகன்னு நினைக்கிறீயா?” என்றவனுக்கு, சொந்தப் பந்தம் யாருக்கும் தெரியாமல், அவளை அழைத்து செல்ல முடியுமா? அவனை ஏதாவது சொன்னால், அவனுக்கு பிரச்சனை இல்லை. ஆனால், நிலாவை அல்லவா பல் பட பேசுவார்கள். அதனால் தான் அவன் அத்தனை தயங்கினான்.
“ச் அதெல்லாம் நான் பாத்துக்கிறேண்டா. நீ கூட்டிட்டுப் போ” என்று செல்வி சொல்ல, “ஏன் நம்மூருல டெய்லரையே இல்லன்னு, டவுன்ல கொடுத்தீயாக்கும்” என்றான் கதிர்.
“ச் என்னல? நீ ரொம்பத்தேன் அலுத்துக்குற. செரி விடு. நானே நிலாவ கூட்டிட்டுப் போயிட்டு வரேன். இல்லன்னா, என் மச்சான் கிட்ட சொல்லி அழைச்சிட்டு போ சொல்றேன்" என்றார் செல்வி.
“ஏன்க்கா, இப்போ நிலாவ கூட்டிட்டு போ மாட்டேன்னு சொன்னேன்னா?” என்று கதிர் சற்று அழுத்தமாய் கேட்க, செல்விக்கோ சிரிப்பு வந்தது. இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “பாத்து சூதானமா கூட்டிட்டு போயிட்டு வா” என்றார்.
“என்னத்தா. இப்போ சந்தோசம்மா. உன் மாமாவே உன்னை கூட்டிட்டு போவான். நீ வா” என்று நிலாவை தன்னோடு அழைக்க, அவளோ மழுங்க மழுங்க விழித்தாள். பின்னே, அவள் அப்படி எல்லாம் சொல்லவே இல்லையே.
அவள் முழித்த முழியிலேயே, நிலா அதை சொல்லவில்லை என்பது புரிய, “ஏன்க்கா? மாமாவும், நீயும் கன்னாலத்துக்கு முத நாள் என்ன படத்துக்கு போனீக?” என்று சீண்டலாய் கேட்டான் கதிர்.
அதில் அவனின் பக்கம் திரும்பியவர், “ஏல, புள்ளைய படத்துக்கு, கிடத்துக்கு கூட்டிட்டு போயிடாதல்ல, அப்புறம் இவ ஆத்தா, என்னை அம்மி கல்ல வச்சி அரைச்சிப் புடுவா. டெய்லர் கடைக்கு மட்டும் போயிட்டு வாங்க" என்று சிறு பதட்டத்துடன் கூறினார்.
“ஊரைத் தாண்டுனனும்னு ஆகிப் போச்சு. அப்படியே ஊரை சுத்திட்டு வரலாம்த்தான?” என்று கதிர் தன் அக்காவை மீண்டும் சீண்டினான்.
“டேய் நல்லவனே. உம்ம நம்பி புள்ளைய அனுப்ப முடியாது. ஏண்டி, நீ அவ எப்படி தைச்சிக் கொடுக்கிறாளோ, அதையே போட்டுக்கோ. பொறவு பிடிச்சு தச்சிக்கலாம்" என்று நிலாவிடம் கூறினார் செல்வி.
“ம்" என்று நிலா தலையாட்ட, “பொறவென்ன, பொறவு. முகூர்த்த புடவை கட்டுறதே ஒரு நாளுத்தேன். அன்னிக்கு ஒழுங்கா கட்ட வேணாம்மா, நான் கூட்டிட்டு போயிட்டு வரேன்" என்று கூறினான் கதிர்.
அதில் இப்போது நிலா அவனைப் பார்க்க, அவனோ ஓர விழியால் அவளைப் பார்த்து “என்ன?” என்று புருவம் உயர்த்தினான். அதில் சட்டென்று, “ம்ஹூம்" என்று விழியை தாழ்த்தினாள்.
“செரில, கோவிலுக்கு போடுறதுக்கு, குமார் கிட்ட புதுத் துணி கொடுத்தனுபுனேன்னே. கொண்டு வந்து கொடுத்தான்னா? இல்லையா? அதத்தேன் போடனும்” என்றார் செல்வி.
“ம் கொடுத்தான்க்கா. நான் மாத்திக்கிறேன்" என்று கதிர் சொல்ல, நிலாவை அழைத்துக் கொண்டு செல்வியும் வெளியில் சென்றார்.
அதன் பின், அவசர அவசரமாய், குடும்பமாய் கோவிலில் வந்து நின்றிருக்க, தாமரை மட்டுமே சங்கரேஸ்வரியுடன் வந்திருந்தார். அன்று நிலாவிடம் பேசியவர் தான். அதன் பின் மகளிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இப்போதும் நிலா, “ம்மா” என்று அழைக்க, அவரோ, ராணியிடம் ஏதோ பேசியப்படி கடந்து சென்றிருந்தார்.
அதில் அவளின் முகம் வாட, அதுவும் அவள் மாமனின் கண்ணில் தெளிவாய் விழுந்தது. ஏனோ அக்காவின் மீது கோவம் வந்தது.
“சின்னப் புள்ளைக்கிட்ட மூஞ்ச காட்டிட்டு இருக்கா” என்று அவன் முனுமுனுக்க, “இன்னும் ஒரு நாள்தான்ல. அப்புறம், அந்தப் புள்ள மூஞ்சத்தேன் நீ முழுசா பாத்துட்டு இருக்கப் போற. அதனால, இப்போ செத்த அந்த முருகனையும் பாரு" என்று முருகேசன் அவன் காதிற்குள் சத்தமாய் கூறினார்.
அதில் கதிர் முருகேசனை முறைக்க, “அங்கப் பாரு மாப்புள்ள" என்று சொல்ல, அவனும் அங்கே வள்ளி தெய்வானையுடன் காட்சி தந்த அந்த முருகனைப் பார்த்தான். இதுவரை கடவுளிடம் அவன் பெரிதாய் எதுவும் வேண்டியதில்லை. ஆனால், இப்போது முதன் முதலாக தன் எதிரே நின்றிருந்த, அந்த நிலாப் பெண்ணுக்காக வேண்டினான்.
“அவ சின்னப் பொண்ணு. அவளுக்கு எந்த கஷ்டமும், எப்பவும் வரக் கூடாது. நானும் எக்காரணத்துக்கும், அவள கஷ்டப்படுத்திடக் கூடாது. அவளோட ஆசை எல்லாத்தையும் நிறைவேத்திக் கொடு" என்று முழு மனதாய், அந்த முருகனிடம், தன் அக்கா மகளுக்காக வேண்டினான்.
அங்கே அவனுக்கு எதிரில் நின்றிருந்தவளோ, கண்ணை மூடி, “மாமாக்கு எப்பவும் எந்த பிரச்சனையும் வரக் கூடாது. சீக்கிரமே மாமாவ அம்மாவும், அப்பாவும் புரிஞ்சிக்கிடனும். மாமா எப்பவுமே சந்தோஷமா இருக்கனும்" என்று வேண்டிக் கொண்டாள்.
இருவரின் விருப்பத்தையும் ஏற்றுக் கொண்டது போல், கோவில் மணி சத்தமாய் ஒலித்தது. அதில் இருவரும் கண் திறக்க, இருவரின் விழிகளிலும், மற்றொருவருடைய பிம்பம் விழுந்தது.
நொடிக்கும் குறைவாக, இருவரின் பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க, “சரி இப்பவே கிளம்புன்னாத்தேன் கருக்கல் குள்ள வூடு போ முடியும். பொண்ணு, மாப்பிள்ளைக்கு வாடக்காத்து ஆகாது" என்று யாரோ ஒருவர் குரல் கொடுத்தார்.
அதன் பின் கோவிலில் இருந்து அனைவரும் வீடு சென்று சேர, அசதியில் பெரியவர்கள் எல்லாம் கண் அசந்தனர். அந்த நேரத்தில், நிலாவை பின் பக்க வாசல் வழியாய் செல்வி அழைத்து வர, கதிரோ தன்னுடைய பைக்கில் காத்திருந்தான்.
“ஏன்ல பைக்லையா அம்புட்டு தூரம் போற?” என்று செல்வி கேட்க, “நம்மூரு பாதையில, பைக்ல போனாத்தேன் விரசா போயிட்டு வர முடியும்” என்றான் கதிர்.
“சரிய்யா. ஆனாலும் கொஞ்சம் கவனம். ஏத்தா நிலா, தூங்கிடாதடா” என்றவருக்கு ஏனோ தேவையில்லாத வேலை பார்க்கிறோமோ? என்று கூட தோன்றியது. ஆனாலும் கடவுளின் மீது பாரத்தைப் போட்டு இருவரையும் அனுப்பி வைத்திருந்தார் செல்வி.
(ரைட்டு, வீட்டையே தாண்ட கூடாதுன்னு சொல்லிட்டு, நம்ம செல்விக்கா ஊரைத் தாண்டி அனுப்பி வைக்குது. இது மட்டும் தாமரைக்கு தெரிஞ்சிச்சு. அம்புட்டுத்தேன். சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்டல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?
Ayesha Shahul
nice story 😍👌🏻👌🏻👌🏻 sis
Vaishnavi Arumugam
please give a thought about giving us a crazy update please