தென்றல் – 49

கதிர் தன்னை கோவிலுக்கு அழைத்து சென்றதைப் பற்றி நிலா சொல்ல, அதைக் கேட்டு மொத்த குடும்பமும், அதிர்ச்சியாய் அவளைப் பார்த்தனர். ஆனால் அதற்குள், வாசலில் இருந்து கதிர் நிலாவை அழைக்கவும், அவள் அங்கு சென்றாள்.

அவனோ, “வா என் கூட" என்று அவள் கரத்தைப் பிடித்து அங்கிருந்து அழைத்து செல்ல, இங்கே அவனின் குடும்பம் ஒரு வித அதிசயத்தைப் பார்த்தது போல் நின்றிருந்தனர்.

“நீங்க சொன்னப்ப கூட பெருசா யோசிக்கல மாப்பிள. ஆனா, நீங்க எந்த முடிவெடுத்தாலும் சரியாத்தேன் இருக்கும்" என்று சங்கரேயன் சொல்லிவிட்டு சென்றார்.

செல்வியோ முருகேசனிடம், “நீங்க ஏதும் அவன் கிட்ட பேசுனீகளா?” என்று சந்தேகமாய் கேட்டாள்.

“அடியே!, உம் தம்பி என்ன சின்னப் புள்ளைய? அவனுக்கே தெரியும். சும்மா எல்லாத்துக்கும் என்னையவே பாக்காத. கட்டிக்கப் போற புள்ள ஆசைப்பட்டு கேட்டிருக்கும். கூட்டிட்டு போயிருப்பான். ஏன், நீயும், நானும் சுத்தாத கோவிலா?” என்று கேட்டு கண்ணடித்தார் முருகேசன்.

அதில் சட்டென்று முகம் சிவந்தவர், “ச் உங்க கிட்ட போயி கேட்டேன் பாருங்க. என்ன சொல்லனும்" என்று சொல்லிவிட்டு செல்வி சென்று விட, முருகேசனோ, “ம் பரவாயிலல் மாப்புள்ள பொழச்சிப்பான்" என்று சொல்லியப்படி, கல்யாண வேலையைப் பார்க்க சென்றார்.

இங்கே பின் பக்க தோட்டத்துக்கு அழைத்து வந்த கதிரோ, நிலாவைப் பார்த்து, “உன் அம்மாக்கிட்ட என்ன சொன்ன?” என்று சிறு கோவத்துடன் கேட்டான்.

அவன் கண்ணில் தெரிந்த கோவத்தில், இங்கே இவளுக்கோ அத்தனை பதட்டம். அதில் அவள் பயத்துடன் அவனைப் பார்த்தாள்.

“ச் உன்கிட்டத்தேன் கேட்கிறேன். என்னத்த சொன்ன?” என்று மீண்டும் கோவமாய் கேட்டான்.

அதில் திடுக்கிட்டாலும், சற்று தைரியத்தை வரவழைத்து, “உங்கள பிடிச்சிருக்குன்னு சொன்னேன்" என்றாள்.

“ம்ஹூம் வேற என்ன சொன்ன?” என்று அவன் அழுத்தம் திருத்தமாய் கேட்டான். ஏனெனில், அவனுக்கு நிலாவை விட, தாமரைப் பற்றி தெள்ளத் தெளிவாய் தெரியும். அப்படி எல்லாம், அவர் அத்தனை சாதாரணமாய் பஞ்சாயத்தில் வந்து அப்படி பேசியிருக்க மாட்டார். அதிலும், நிலாவைப் பற்றி அவர் பேசும் போது, அவருடைய உடல் நடுங்கியதை அவன் கவனித்தான். அப்படி என்றால், நிச்சயம் நிலா ஏதோ செய்திருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.

“எனக்கு நீங்க வேணும்னு சொன்னேன்" என்றாள் நிலா. அதில் நொடிக்கும் குறைவாய், அவன் மனதில் மெல்லிய சாரல் அடித்தது. ஆனாலும் “இல்ல வேற என்னெல்லாம் சொன்ன?” என்று மீண்டும் அதையேத்தான் கேட்டான்.

“ஆ.ங் அத் அது" என்றவளுக்கு, சொல்லும் போது பெரிதாய் தெரியவில்லை. ஆனால், இப்போது இத்தனை கோவமாய் கதிர் கேட்க, தவறிழைத்த சிறுமியாய் தயங்கி நின்றாள்.

“உன்கிட்டத்தேன் கேட்கிறேன் நிலா. என்ன பேசுன?” என்று அவன் அதையே இன்னும் அழுத்தம் கூட்டி கேட்டான்.

“உங்கள கல்யாணம் பண்ணலன்னா?” என்றவளுக்கு அதற்கு மேல் சொல்ல முடியவில்லை. மீண்டும் வார்த்தையை முடிக்க முடியாமல், சுற்றி யாராவது வருகிறார்களா? என்றுப் பார்த்தாள். அவளின் நேரத்துக்கு யாரும் அங்கு வரவில்லை.


“என்னை கல்யாணம் பண்னலன்னா?” என்று அவன் மீண்டும் அதையே திருப்பி கேள்வியாய் கேட்க, அவளோ ஒரு நொடி தயங்கி, பின் “உங்கள கல்யாணம் பண்ணலன்னா, நான் கிணத்துல குதிச்சிடுவேன்னு சொன்னேன்" என்று பட்டென்று கூறியிருந்தாள்.

அதில் இங்கே இவன் கோவமாய் அடிக்கவே கை ஓங்கியிருந்தான். எவ்வளவு பெரிய வார்த்தையை சொல்லிவிட்டாள். ஏனோ ஒரு நொடி, அவனுடைய இதயம் துடிப்பை மறந்திருந்தது.

கண்கள் எல்லாம் கோவத்தில் சிவக்க, அங்கே அவனின் வேகத்தில், இங்கே நிலாவின் உடல் பயத்தில் நடுங்கியது. இறுக்கமாய் கண்ணை மூடி விட, கடைசி நொடியில், கரத்தை கட்டுப் படுத்தி, “கிறுக்கா பிடிச்சுக்கெடக்கு. படிச்சப் புள்ளத்தான்ன நீ? பேசுற பேச்சா இது?” என்று கோவமாய் திட்டினான்.

அவன் திட்டியதும், நிலாவுக்கு கண் கலங்கி விட, அழுகையோடே, “எனக்கு நீச்சல் தெரியும்" என்றாள்.

அவள் அழுகையில், இங்கே இறுக்கத்தை தொலைத்தவன், அவள் சொல்லியதைக் கேட்டு ஒரு நொடி குழம்பி, பின், “என்ன?” என்றான்.

“அம்மாகிட்ட சும்மாத்தேன் அப்புடி சொன்னேன். எனக்கு நீச்சல் தெரியும்" என்று விசும்பியப்படியே கூறினாள்.

“சும்மானாலும் அப்படி சொல்லலாம்மா?” என்று கதிர் அப்போதும் கோவமாய் கேட்க, “நான் அப்படி சொல்லலன்னா, அம்மா, எப்போ பார்த்தாலும் ஏதாச்சும் சொல்லிட்டே இருப்பாக. எனக்கு அவுக, உங்கள பத்தி தப்பா பேசுறது பிடிக்கல. அதேன் அப்புடி சொன்னேன்" என்றாள் நிலா.

அதில் அப்படியே இளகியவன், கோவத்தை குறைத்து, “அவுக என் அக்கா. என்னை என்னமோ பேசிட்டு போறாக. அதுக்குன்னு, நீ இப்படி பேசுவீயா?” என்று பொறுமையாய் கேட்டான்.

“எனக்கு கஷ்டமா இருக்கு" என்று அழுதுக் கொண்டே கூறினாள் நிலா. அவ்வளவுத்தான், அந்த கதிருடைய வீராப்பு எல்லாம் அப்படியே அந்த நொடி கரைந்துத்தான் போனது.

சட்டென்று அவளை இழுத்து அணைத்தவன், “இனிமேல் இப்படி எல்லாம் பேசக் கூடாது" என்றான்.

“ம்" என்று அழுதப்படியே அவள் தலையாட்ட, அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது. அதில் மெல்ல அவளை விலக்கி, அவள் கண்ணீரைத் துடைத்தவன், “அழாத" என்றான். ஏனோ அவள் அழுவதை, இவனால் தான் பார்க்க முடியவில்லை.

“நீங்க என்னை வையாதீங்க மாமா. எனக்கு அழுகையா வருது" என்றவள், அவன் சட்டையில் மீண்டும் முகத்தைப் புதைத்தாள்.

அவளின் வார்த்தையில், இங்கே இவனுக்குத்தான், அந்த பெண்ணவளை புரிந்துக் கொள்ள முடியவில்லை.

சில நொடி கழித்து மீண்டும் அவளை தன்னில் இருந்து பிரித்து நிறுத்தி, “சரி இனி வைய மாட்டேன். ஆனா இதுக்கப்புறம் விளையாட்டுக்கு கூட இப்படி எல்லாம் பேசக் கூடாது" என்றான்.

“ம்" என்று அவள் தலையாட்ட, அவள் முகத்தை அங்கிருந்த ஈரத் துண்டால் துடைத்தவன், “பிடிச்சிருக்கா?” என்றான்.

“ம் எனக்கு உங்கள எப்பவும் பிடிக்கும்" என்று மூக்கை உறிஞ்சியப்படியே கூறினாள். அதில் இவன் முகத்தில் புன்னகை விரிந்தது. அதில் அவளுக்கு நிகராய் குனிந்தவன், “நான் என்னைக் கேட்கல. நீ கட்டியிருக்கிற வாட்ச கேட்டேன்" என்று அவள் மணிக்கட்டை சுட்டிக் காட்டிக் கேட்டான்.

அதில் சட்டென்று அழுகையை விட்டு, “அழகா இருக்கு மாமா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்று சிறுமியாய் சிறு புன்னகையுடன் கூறினாள்.

ஏதோ அன்னை அடித்ததுக்கு, அழும் பிள்ளை. பின் அன்னையையே கட்டிக் கொண்டு முத்தமிடும் மழலையாய் தான் அவள் தெரிந்தாள்.

சில நொடி அவள் புன்னகையையே பார்த்தவன், “வேற ஏதாச்சும் வேணுமா?” என்று கேட்டான்.

“ம்ஹூம். இதுவே போதும்" என்று அவள் சொல்ல, “ஆமா, ஏன் நான் கொடுத்த புடவைய கட்டல?” என்றான்.

“ஆ.ங் அத் அது" என்று அவள் திணறியப்படி அவனைப் பார்க்க, அவனோ, “ஏன் அது பிடிக்கலையா?” என்றான்.

“ஆ..ங் இல்ல. பிடிச்சிருக்கு. ஆனா எனக்கு சேலை கட்ட தெரியாது" என்று கூறினாள்.

அதில், கனவு உலகத்தில் இருந்து வெளியில் வந்தவனுக்கு, மீண்டும் அவள் சிறு பெண் என்று அவனின் மனம் நிதர்சனத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

ஏதோ ஒரு ஆர்வத்தில் சேலையை வாங்கி வந்துவிட்டான். இப்போது அவள் சொல்லியப் பின்னே, சேலை வாங்கி வந்திருக்க கூடாதோ? என்று தோன்றியது.

“அடுத்த தடவ சுடிதார் வாங்கித் தரேன்” என்றான் கதிர். “ஆ..ங் இன்னொரு நாள் சித்திக்கிட்ட சொல்லி, அந்த புடவைய கட்டிக்கிறேன். இல்லன்னா, இப்பவே போயி கட்டிட்டு வரட்டா?” என்றாள் அவனின் அக்கா மகள்.

அவளின் பேச்சில், ஏனோ அவளுடன் இப்படியே நின்று பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அதிலும் அவனுக்காக, அவள் ஒவ்வொன்றையும் சொல்ல, இங்கே இவனின் மனதில் மொட்டவிழ ஆரம்பித்தது.

“ஆ..ங் அதெல்லாம் வேணாம். இதுவே அழகா இருக்கு" என்று அவன் சொல்ல, “ம். தேங்க்ஸ்" என்று பளீச்சென்ற புன்னகையுடன் கூறினாள். இங்கே அவளின் புன்னகையில், இவன் தான் மதி மயங்கினான்.

அவளையே அவன் பார்த்திருக்க, “பஞ்சாயத்துல ஆறும் உங்கல ஏதும் சொல்லலத்தான மாமா?” என்றாள். அதில் மெலிதாய் சிரித்தவன், “அத்தேன் என் அக்கா மக, அவுக அம்மாவ அனுப்பி எனக்காக பேச சொல்லிட்டாளே. என் அக்காவ மீறி ஆறும் என்னை ஏதும் சொல்லிட முடியுமா என்ன?” என்று மீசையை நீவியப்படி, புருவம் உயர்த்திக் கேட்டான். அதில் அழகாய் புன்னகைத்தவள், முகத்தில் மெலிதாய் ஒரு வெட்கப் புன்னகை.

அதையும் அவனின் மனம் அழகாய் படம் பிடித்துக் கொண்டது. வேலை அத்தனை இருக்க, அவனோ, அவள் முகத்தைப் பார்த்த்தப்படி நின்றிருந்தான். அதற்குள் கதிருடைய மொபைல் அடிக்க, அப்போதே இவ்வுலகம் வந்தவன், நிலாவிடம் திரும்பி, “செரி நீ உள்ளக்க போ” என்றான்.

“ம்" என்று தலையாட்டியப்படி அவள் செல்ல, அவள் கொஞ்ச தூரம் சென்றதும் ஏதோ தோன்ற, “தென்றல்" என்றான் கதிர்.

அதில் அவள் திரும்பி அவனைப் பார்க்க, அவனோ, “நானே வைஞ்சாலும், நீ அழக் கூடாது" என்றான். “ம்ஹூம் நீங்க வைஞ்சா, நான் அழுவேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடியிருந்தாள்.

அவளின் பேச்சில், இங்கே இவனுக்குத்தான் ஏதேதோ உணர்வுகள், அவனுக்குள் எட்டிப் பார்த்தது. யாரிடமும் தோன்றாத உணர்வு, அவளிடம் இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஏதோ புது உலகில் சஞ்சலிப்பது போல் தோன்றியது. மீண்டும் அவன் மொபைல் அடிக்கும் போதே இவ்வுலகம் வந்தான் கதிர்.

அதன் பின் நிலாவை தனியாக சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவே இல்லை. வீட்டில் கல்யாண வேலை நடந்துக் கொண்டிருக்க, மொத்த சொந்தமும் அவர்கள் வீட்டிற்கு படையெடுக்க ஆரம்பித்திருந்தது. அடுத்த நாளே, முகூர்த்தக் கால் ஊன்றியிருந்தனர்.

செந்திலோ, தாமரையிடம், “கடைசியில, நீயும் மத்தவுக மாதிரி என் கழுத்தறுத்திட்டல்ல. இனிமேல் உமக்கும், எமக்கும் எந்த சம்பந்தமுமில்ல. உம் புள்ள கழுத்துல தாலி ஏறாது. ஏறுனாலும் அது நிலைக்காது. என்னிக்கா இருந்தாலும் உம் தம்பிக்கு என் கையாலத்தேன் சாவு" என்று கத்திவிட்டு சென்று விட்டார்.

திருமணத்துக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தது. அன்று காலையில் தான் பெண், மாப்பிள்ளை இருவருக்கும் நலங்கு வைத்து காப்பு கட்டியிருந்தனர். அவர்கள் குடும்ப வழக்கப்படி, திருமணத்துக்கு முன்பே, பெண்ணுக்கோ, இல்லை பையனுக்கோ ஏதாவது நேர்த்திக் கடன் இருந்தால், அதை நிறைவேற்றிட வேண்டும்.

அதனால், அன்று மாலை அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டிய வேலைகள் தான் அங்கு பரபரப்பாய் ஓடிக் கொண்டிருந்தது. பாண்டியோ, கதிர் எப்போது ஊரைத் தாண்டுவான்? என்று காத்துக் கொண்டிருந்தான்.

அதற்கு தகுந்தாற் போல், அன்று நிலாவை அழைத்துக் கொண்டு, கதிரின் முன் வந்து நின்றார் செல்வி. 

(நீ இப்படியே காத்துக்கிட்டே இருடா. ஒரு நாள் இல்ல ஒரு நாள். உமக்கு கதிர் கையாலத்தேன் சாவு. செரி இப்போ செல்வி எதுக்கு நிலாவ கூட்டிட்டு வந்திருக்காகன்னு அடுத்து எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்டல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

  • தென்றல் தீண்டுமா?

 

Comments   0

*** தென்றல் – 49 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***