எழ சென்ற கதிரின் கையை பிரியா அழுத்திப் பற்ற, நிலாவோ, பிரியாவையும், கதிரையும் மாறி மாறிப் பார்த்தாள். அவனோ அவள் பிடித்த வேகத்தில் கரத்தை உதறியவன், “ஒரு தடவ சொன்னா உங்களுக்கு புரியாதா?” என்று கோவமாகவே கேட்டான்.
“உங்களுக்கும் நான் சொல்றது புரியலையா? நான் உங்க கிட்ட பேசனும்" என்று பிரியாவும் அத்தனை உறுதியாய், கூறினாள்.
அதுவரை அமைதியாய் நின்றிருந்த நிலா, பிரியாவிடம், “நீங்க ஏன் என் மாமாகிட்ட, இப்புடி குரல உசத்திப் பேசுறீங்க?” என்று அழுத்தம் திருத்தமாக கேட்டாள்.
அதில் கதிர் நிலாவைப் பார்க்க, அதற்குள் பிரியாவோ நிலாவிடம் திரும்பி, “உன் மாமா, எனக்கு துரோகம் பண்ணிட்டாரு. அதான் நான் என் உரிமைய கேட்டுட்டு இருக்கேன். இதுக்கு நடுவுல நீ வராத" என்றாள்.
“ச் அவ கிட்ட" என்று கதிர் பேசும் முன்னே, “என் மாமா, யாருக்கும் துரோகம் பண்ண மாட்டாரு. நீங்க பொய் சொல்றீங்க" என்றாள் நிலா. “யாரு பொய் சொல்றா. உன் மாமாத்தான் என்னைக் கட்டிக்கிறேன்னு, இதே மாதிரி ஒரு ஹோட்டல்ல வச்சித்தான் சொன்னாரு. அன்னிக்கு, நீயும் இருந்தத்தான?” என்றாள் பிரியா.
அவளின் குற்றச்சாட்டில் கதிர், வேகமாய், “நான்" எண்று பேச முயற்சி மட்டுமே செய்தான். ஆனால் அவனை பேசவே விடாமல், அவனின் முன் வந்து நின்ற நிலா, “என் மாமா அப்படி எல்லாம் உங்க கிட்ட சொல்லல. வீட்டுல பேசுனாங்க. அதுக்கு என் மாமா சரின்னு சொன்னாரு அவ்வளவுத்தான். உங்க வூட்டுல உள்ளவங்கத்தான் அந்த கல்யாணம் வேணாம்னு நிறுத்திட்டு போனாங்க. அப்படிப் பார்த்தா, உங்க வீட்டாளுங்கத்தான், எங்க மாமாக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாத்தியிருக்காங்க. என் மாமா ஒன்னும் இல்ல" என்றாள் அவனின் அக்கா மகள்.
“அவங்க சொன்னா? என்னைத் தான கல்யாணம் பண்ணிக்கப் போறாரு. என்னைப் பார்த்து ஒரு வார்த்த கேட்கனுமா? இல்லையா? அதுக்கப்புறம் எத்தன தடவ நான் கால் பண்ணி பேசனும்னு சொல்லிருப்பேன். ஒரு தடவ என்னைப் பார்த்து பேசியிருக்கனுமே” என்றாள் பிரியா.
“எதுக்கு பேசனும்? உங்க வூட்டுல உள்ளவங்க வேணாம்னு சொன்னதும், நீங்க உங்க வூட்டுல உள்ளவக கிட்ட, பேசியிருக்கனும். அத விட்டுட்டு, என் மாமா கூட ஏன் பேசனும்?” என்றாள் நிலா.
“ஹேய் நானும் பாத்துட்டே இருக்கேன். ரொம்பத்தான், மாமா, மாமான்னு உருகுற. அப்படி உன் மாமா யோக்கியனா இருந்தா, இப்படித்தேன், இன்னொருத்திக் கூட நிச்சயம் பண்ணிட்டு, உன் கூட ஊர சுத்திட்டு இருப்பாரா? பாத்து, ஐஸ்கிரீம் கொடுக்கிறேன்னு கூப்டு போயி, உனக்கும் ஒரு பிள்ளைய கொடுக்கப் போறாரு" என்றாள் பிரியா.
அதில் சட்டென்று “ஹேய் சின்னப் புள்ளைட்ட என்னப் பேசுற நீ?” என்று கோவமாய் பிரியாவை அடிக்க கை ஓங்கியிருந்தான்.
“மாமா” என்று நிலா அவன் கரத்தைப் பிடிக்க, அதில் ஓங்கிய கரத்தை கீழே போட்டவன், மூச்சை இழுத்துப் பிடித்து, “போனா போது, பொம்பளைப் பிள்ளையாச்சேன்னு பொறுமையா இருந்தா, ஓவரா பேசுற? நான் கட்டிக்கப் போற பிள்ளைக் கூட, ஊரு சுத்துவேன். இல்ல என்ன வேணும்னாலும் பண்ணுவேன். அத கேட்க நீ ஆறு. ஏதோ வீட்டுல பாத்தாங்க. சரின்னு பாத்தோம். பேசுனோம். எப்போ உன் வூட்டுல வேணாம்னு சொன்னாங்களோ, அந்த செகண்டே, அது முடிஞ்சுப் போச்சு. இதை எல்லாம் நான் உன்கிட்டையும் தெளிவா போன்ல சொல்லத்தான் செஞ்சேன். அதுக்கப்புறமும், நான் போற வர இடமெல்லாம் நீ தான் வந்து நின்ன. பேசாம போனதுக்கு காரணம். உனக்கு பயந்து ஒன்னும் இல்ல. அடுத்த வூட்டுக்கு வாழப் போற புள்ள, நாளப் பின்ன உன் வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாதுன்னு தான். அதுக்குன்னு, உன் இஷ்டத்துக்கு பேசுவீயா? இது தான் நான் உன்னைப் பாக்குற கடைசி தடவையா இருக்கனும்" என்று விரல் நீட்டி எச்சரித்தவன், நிலாவின் கரத்தைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
இங்கே பிரியா அப்படியே அந்த இருக்கையில் அமர்ந்து விட்டா. அவளுக்கு நிலாத்தான் கதிருக்கு பார்த்திருக்கும் பெண் என்று தெரியாது. அவனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனதை மட்டுமே அவர்கள் வீட்டில் சொல்லியிருந்தனர். இப்போது எதார்த்தமாய் அவனைப் பார்க்கவும், அவளுக்கு கோவம், ஆதங்கம். அதை அப்படியே கொட்டி விட்டாள்.
ஆனால் இப்போது நிலாத்தான் அந்தப் பெண் என்று தெரிந்தவுடன், இன்னும் ஆத்திரம் தான் கூடியது. ஏனோ கதிர் வேண்டுமென்றே தன்னை ஏமாற்றியது போல் தான் இப்போதும் நினைத்தாள்.
இங்கே ஹோட்டலில் இருந்து வெளியில் வந்தவனுக்கோ, இப்போதும் கோவம் குறையவில்லை. ஏனோ நிலாவிடம் அவள் அப்படி பேசியதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதென்னவோ பிரியாவிடம் சரிக்கு சமமாய் பேசியவளுக்கு, கதிர் குரலை உயர்த்தவும், அன்னிட்சையாய் பயம் புகுந்திருந்தது.
அவள் விரல் நடுங்குவதை உணர்ந்து, சற்று தன்னிலைக்கு வந்தவன், “நான்" என்று ஏதோ சொல்ல முயன்றான். ஏனெனில், நிலாவின் மனதில் தேவையில்லாத விசயங்கள் பதிவதை அவன் விரும்பவில்லை.
ஆனால் அதற்குள் நிலாவோ, “பசிக்குது மாமா” என்றாள். அவளின் வார்த்தையில், மற்றது அத்தனையையும் மறந்து அவளைப் பார்த்தவன், அடுத்த நொடி அவளை பைக்கில் ஏற்றிக் கொண்டு வேறு ஒரு ஹோட்டலுக்கு சென்றான்.
அவளோ சமத்தாய் சாம்பார் சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்க, கதிரோ அவளை மட்டும் தான் பார்த்திருந்தான். அவள் பிரியாவிடம் பேசிய விதத்தை இப்போது நினைத்துப் பார்த்தான். அவனுக்கு அத்தனை ஆச்சர்யமாய் இருந்தது. அவளுக்கு இப்படி எல்லாம் பேச தெரியும்? என்றே அவனுக்கு அப்போதுத்தான் தெரிந்தது.
அவன் அவளையே பார்த்திருக்க, அவளோ “எனக்கு உங்களப் பத்தி தெரியும் மாமா” என்றாள்.
அவளின் வார்த்தையில், அவன் நிமிர்ந்து, “என்ன தெரியும்?” என்றான். இப்போதே அவனைப் பார்த்தவள், “நீங்க ரொம்ப நல்லவங்க" என்றாள்.
அதில் ஏனோ அவனுடைய இறுக்கம் தொலைந்து, புன்னகை பூத்தது. “அப்படின்னு ஆறு சொன்னா?” என்று கன்னத்தில் கை வைத்தப்படி கேட்டான் கதிர்.
“எனக்கே தெரியும்” என்று அவள் சொல்ல, “எப்படி?” என்ற கேள்வியோடு அவன் புருவம் உயர்த்தினான்.
அதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல், அவள் தடுமாற, அவளுடைய தடுமாற்றத்தைப் பார்த்து மேலும் இளகியவன், “சாப்பிடு" என்றான்.
“ம்" என்று அவள் சாப்பிடப் போக, சட்டென்று நிமிர்ந்து, “எப்படின்னு தெரியாது. ஆனா நீங்க நல்லவங்க" என்றாள்.
ஏனோ சாப்பிடாமலே, அக்கா மகளின் வார்த்தையில் அவன் வயதும், மனதும் நிரம்பியது.
அதன் பின் இருவருமே சாப்பிட்டு முடித்துக் கிளம்ப, வழியெங்கிலும், நிலா பிரியாவிடம் பேசியது தான் அவன் மண்டைக்குள் ஓடியது. ஆனால் அவளோ பிரியா என்ற ஒருவளையே மறந்து விட்டு வேடிக்கைப் பார்த்தப்படி வந்தாள். ஏனோ நிலாவுடனான வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றியது.
பெரிய வீட்டில் அவளை விட்டு விட்டு அவன் கிளம்ப போக, அங்கு வந்த செல்வியோ, நிலாவை உள்ளே அனுப்பிவிட்டு அவனின் பக்கம் திரும்பினார்.
அதிலேயே, அவர் தன்னிடம் ஏதோ பேச நினைக்கிறார் என்று புரிந்து, பைக்கை நிறுத்தி விட்டு அவருடன் அங்கிருந்த திண்ணையில் சென்றமர்ந்தான்.
அவர் என்ன சொன்னாரோ? இவன் என்ன பேசினானோ? ஆனால் இருவர் முகத்திலுமே அத்தனை இறுக்கம் இருந்தது. ஜன்னல் வழி அவர்களைப் பார்த்த நிலாவுக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும் அவர்களுடைய கலக்கமான முகம் ஏதோ தவறு நடக்கப் போவதை சொல்லியது.
அதற்குள் அங்கு வந்த ராணி, “இந்தாத்தா. இந்த பூஸ்ட் காபிய குடி. பரீட்சை எல்லாம் எழுதி சோர்வா இருப்ப" என்று நீட்டினாள். அவளும் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொள்ள, நிலாவோ மீண்டும் ஜன்னல் வழி வெளியில் தான் பார்த்தாள்.
அதன் பின் சிறிது நேரத்தில் முருகேசனும் அங்கு வர, சங்கரேயனுமே அங்கு வந்து ஏதோ பேசினார். கடைசியாய் கதிர் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப, முருகேசனும் அவனின் பின்னே சென்றிருந்தார்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே, ஊர் பெரியவர்களும் அங்கு வந்து சங்கரேயனிடம் எதையோ பேசி விட்டு சென்றனர். அவளுக்கு எதுவுமே புரியவில்லை.
இரவு வரை, செல்வியுமே ஒரு வித பதட்டத்தோடு தான் இருந்தார். நிலாவோ அவர் மடியில் அமைதியாய் படுத்திருந்தாள்.
நள்ளிரவு போல் கதிரும், முருகேசனும் வீட்டுக்கு வந்திருந்தனர். கதிரோ அத்தனை இறுக்கமாய் இருந்தான். முருகேசனோ, “இன்னும் ரெண்டு நாள்ல பஞ்சாயத்து என்ன முடிவெடுத்திருக்கிற?” என்றார்.
அவர்களின் பேச்சு சத்தத்தில் நிலா கண் விழித்துப் பார்க்க, செல்வியோ இருவருக்கும் தண்ணீர் எடுத்துக் கொடுக்க சென்றார்.
“படிச்சப் புள்ள இப்படிப் பண்ணுவான்னு நான் நினைக்கல டா. நான்த்தேன், அந்தப் புள்ள மனசுல ஆசைய வளத்துட்டேன்னோ” என்று செல்வி கவலையாய் சொல்ல, “ச் அதெல்லாம் ஒன்னுமில்ல செல்வி. நீ எதையாச்சு போட்டு உளட்டிக்காத" என்று முருகேசன் கூறினார்.
கதிரோ எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்க, நிலாவோ என்ன என்று புரியாமலே அமர்ந்திருந்தாள்.
“என்னல? நீ ஏன் இப்புடி உட்கார்ந்திருக்க? உன் அக்கா மாறி நீ ஏதும் வேற மாறி யோசிக்கிறீயா?” என்று முருகேசன் சற்று எரிச்சலாய் கேட்டார்.
அதில் செல்வியைப் பார்த்தவன், “அக்கா என்ன யோசிக்கிறாக?” என்று அழுத்தம் திருத்தமாய் கேட்டான் கதிர்.
“இல்லப்பா. உமக்குமே, அந்த பிரியா புள்ளைய பிடிச்சுச்சுத்தான, இங்கையும் அக்கா அப்படியேத்தான் இருக்கா. பேசாம" என்று செல்வி சொல்லி முடிக்கும் முன்னே, “ முத பத்திரிக்கை குல தெய்வ கோவிலுக்குத்தேன்ன. நிலாக்கு நாள் சரிபடுமான்னு கேளுங்க. சரின்னா, கோவிலுக்கு போயிட்டு, அப்படியே நாளைக்கே எல்லாருக்கும் பத்திரிக்க கொடுக்க ஆரம்பிச்சிடலாம்" என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான் கதிர்.
“பஞ்சாயத்து" என்று முருகேசன் யோசிக்க, “நம்ம பாக்காத பஞ்சாயத்தா மாமா” என்று மீசையை முறுக்கியப்படி கேட்டவன், செல்வியிடம் திரும்பி, “இந்த ஜென்மத்துல, நிலாத்தேன் என் பொண்டாட்டி. அவளுக்கும், எனக்கும்த்தேன் கன்னாலம் நடக்கும். அத ஆறு நினைச்சாலும் மாத்த முடியாது” என்று சொல்லியவன், அங்கிருந்து அவன் தங்கும் வீட்டிற்கு சென்றிருந்தான்.
“பாத்தத்தான, என் மாப்புள்ள சொன்னத. நீத்தேன் தேவையில்லாம ஏதேதோ சொன்ன" என்று முருகேசன் திட்டினார். அதில் அவரோ, “இல்ல மச்சான், அந்தப் புள்ள, இவனுக்காக மருந்தையே குடிச்சிருக்கா. இவனும் உம்முன்னே இருந்தான்னா. அதான் ஒரு மாதிரி மனசு குழம்பிடுச்சி. ஏன்னா, தம்பி வாழ்க்கை எம்புட்டு முக்கியமோ, அதே அளவுக்கு நிலா வாழ்க்கையும் முக்கியமில்லையா? அத்தேன் அப்படி கேட்டேன். இப்போ நிம்மதியா இருக்கு. என் நிலாவ, என் தம்பி பத்திரமா பாத்துப்பான்" என்று சந்தோஷமாகவே சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார்.
இங்கே நிலாவுக்கோ, கதிர் சொல்லிய வார்த்தை மட்டுமே மனதினுள் ஓடியது. அதே நேரம் பிரியா விஷம் குடித்திருக்கிறாள் என்ற செய்தி, அவளுக்குள் ஒரு வித அச்சத்தைக் கொடுத்தது. அந்த அச்சம் பிரியாவின் மீதல்ல, கதிருக்கு, இதனால் எந்த பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்று.
(செரி பஞ்சாயத்து வேறையா? ம் அதையும் ஒரு கை பாத்திடலாம். அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு எபிசோட் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?
Vaishnavi Arumugam
i hope it will go smoothly