தென்றல் – 44

நிச்சயம் முடிந்து, நாட்கள் அப்படியே எந்த சலனமுமில்லாமல் செல்ல, கதிர், நிலாவுடைய வாழ்க்கை இயல்புக்கு திரும்பியது. ஏனோ இப்போதெல்லாம் தாமரை முற்றும் முழுதாய் அமைதியை கையில் எடுத்திருந்தார்.

செந்திலோ, தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை ஒரு வேலையாய் வைத்திருக்க, சங்கரேஸ்வரியோ, “சேர கூடாதவனுங்களோட சேர்ந்து, நீ பண்ற எதுவுமே சரியில்ல" என்று புலம்பி தள்ளினார். “ஹேய் பெத்தவன்னு பாக்க மாட்டேன். நைட்டோட நைட்டா, கிணத்துல போட்டு கொண்ணுடுவேன்” என்றவர் நிலாவின் பக்கம் திரும்பி, “இங்கப்பாரு. அப்பா சொல்றவன் கூடத்தேன் உனக்கு கல்யாணம். அத வுட்டுட்டு, வேற ஆறும் சொல்றாங்கன்னு, ஏதாச்சும் ஆசைய வளத்துக்கிட்ட, பெத்த புள்ளைன்னு பாக்க மாட்டேன்" என்று மிரட்டே விட்டே அவருடைய அறைக்கு சென்றார்.

அதில் நிலாவுக்கோ உள்ளம் நடுங்க, இருந்தும் தன் விரலில் இருந்த நிச்சய மோதிரம் ஒரு வித தெம்பைக் கொடுத்தது. சட்டென்று கதிர் சொல்லிய, “இப்படி அழுதுட்டே இருந்தா எதுவும் நடக்காது. உனக்கு பிடிக்கலன்னா, பிடிக்கலன்னு சொல்லனும். உனக்கு பிடிக்காத எதுவும் உன் வாழ்க்கையில நடக்காது. நான் நடக்கவும் விட மாட்டேன்" என்ற வார்த்தை நினைவுக்கு வர, கலங்கிய கண்ணை துடைத்து விட்டு அறைக்கு சென்று விட்டாள்.

தாமரையோ தன் மகளுடைய மாற்றத்தை மட்டுமே பார்த்திருந்தார். அதுவே அவருக்குள் இன்னும் கலக்கத்தை கொடுத்தது. தன் கணவரின் விருப்பத்துக்கும் அவரால் ஒத்துப் போக முடியவில்லை. அதே நேரம் மற்றவர்கள் செய்து வைத்திருக்கும் வேலையும் அவருக்குப் பிடிக்கவில்லை. இதில் தன் மகள் வேறு, கதிரிடம் காட்டும் நெருக்கம் பெரிதாய் அச்சத்தையே கொடுத்தது. அவளை முன்பு போல் திட்ட முடியவில்லை. 

செல்வி அதற்கு அனுமதி கொடுக்கவே இல்லை. அதனால் அத்தனை கோவமும் தன் தம்பியின் மீது தான். “என் நிம்மதிய கெடுக்கனும்னே, என் கூட வந்து பொறந்திருக்கான்" என்று மனதிற்குள்ளே திட்டியப்படி, கிச்சனுக்குள் சென்று விட்டார் தாமரை.

அவ்வப்போது, கதிர் வெளியூர் செல்லும் வேலையில், பள்ளி செல்லும் நிலாவைப் பார்ப்பான். அவளும் பார்ப்பாள். பெரிதாய் பேசிக் கொள்ளாமல் இருவருமே கடந்து விடுவார்கள். யாராவது உடன் படிக்கும் மாணவி, அல்லது ஊர் காரர்கள் இருந்தால், ஏதாவது கேலி பேசுவார்கள்.

இப்படியாக அரையாண்டுப் பரிட்சை முடிந்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணை எல்லாம் வந்திருந்தது. அதனால், முடிக்க வேண்டிய பிராக்டிகல் நோட், மாடல் டெஸ்ட் எல்லாம் தீவிரமாய் சென்றுக் கொண்டிருக்க, நிலாவும் எழுத வேண்டிய வேலையை எல்லாம் முடித்து விட்டாள். ஆனால் செயல்முறைத் தேர்வுக்காக, சில பூக்கள் எல்லாம் தேவைப்பட்டது,

முன்பாக இருந்திருந்தால், செந்திலிடம் கேட்டிருப்பாள். இப்போது அவர் தான் இவளிடம் முகம் கொடுத்தே பேசுவது இல்லையே. அதனால் பள்ளி விடும் வேலையில், குறிப்பிட்ட சில பூக்களைப் பறிக்க, தோட்டத்துப் பக்கம் சென்றாள். அத்தனைப் பூவையும் பறித்தவளுக்கு, செம்பருத்தி பூ மட்டும் கண்ணில் படவே இல்லை.

உடன் வந்தவர்கள் எல்லாம் சென்றிருக்க, அவளோ, நாளைக்கு அதை முடித்தே ஆக வேண்டும். ஏனெனில் மலர் தான் அவளுக்கு தாவரவியல் வகுப்பு எடுக்கிறாள். இவள் மட்டும் நாளை ரெக்கார்ட் நோட் வைக்க வில்லை என்றால், நிச்சயம் வைத்து செய்து விடுவாள்.

அதனாலையே, செம்பருத்தி பூவைத் தேடி அவள் சுற்ற, அந்தப் பூவோ, பாண்டியின் தோட்டத்திற்குள் தான் இருந்தது. அவளுக்கோ அங்கே செல்ல தயக்கம். அதே நேரம் அந்த செம்பருத்தி பூவும் வேண்டும். சில நிமிடம் யோசித்துப் பார்த்தவள், ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில், பாண்டியின் தோட்டத்துப் பக்கம் சென்றாள் நிலா.

ஏற்கனவே இருட்ட ஆரம்பித்திருக்க, சரியாக அன்னேரம் தான் கதிர் தன்னுடைய வயலுக்கு வந்திருந்தான். வந்திருந்தவனின் பார்வை, பாண்டியின் தோட்டம் பக்கம் செல்பளின் மீது பதிய அவனுக்கோ கோவத்தில் கை முஷ்டி இறுகியது.

அதில் சத்தமாய், “நிலா” என்று அழைக்க, அங்கே வயலில் நின்றிருந்தவர்கள் அத்தனைப் பேருமே நிமிர்ந்துப் பார்த்தனர். அங்கே நிலாவுமே திடுக்கிட்டு திரும்ப, அதற்குள், வேஷ்டியை மடித்துக் கட்டியப்படி கோவமாய் வந்தான்.

அவன் வந்த வேகமே, இவளுக்குள் அச்சத்தை விதைத்திருக்க, “இந்த நேரத்துல அங்க எங்க போறவ? உமக்கு புத்தி கித்தி ஏதாச்சும் இருக்கா? கண்ட நேரத்துல இபப்டி சுத்திட்டு திரியிற” என்று சற்று சத்தமாகவே கேட்டிருந்தான்.

அவன் வந்த வேகத்திற்கே நடுங்கியவள், இப்போது அவன் அப்படி சொல்லவும் சட்டென்று கண்ணெல்லாம் கலங்கி விட்டது. அதைப் பார்த்தவனுக்கோ, இன்னும் எரிச்சல் தான் கூடியது.

“ஏ புள்ள இப்ப என்னத்த சொல்லிப்புட்டேன்னு, இப்படி கண்ணக் கசக்கிட்டு நிக்கிறவ?” என்று சற்று எரிச்சலாய் கேட்டான் கதிர்.

“செம்பருத்தி பூவு" என்று சொல்லிய நிலாவுக்கு, சிறிது நேரத்தில் கண்ணெல்லாம் கலங்கி முகமெல்லாம் சிவக்க ஆரம்பித்திருந்தது.

“இன்னிக்கி என் பொழப்பு நடந்த மாதிரித்தேன்” என்று தனக்குள்ளே முணங்கியவன், கலங்கியவளை மேலும் கலவரப்படுத்தாமல், “நேரா வூட்டுக்கு போ, உனக்கு வேண்டிங்கிறத, கொடுத்தனுப்றேன்" என்று சற்று குரலைத் தாழ்த்திக் கூறினான் கதிர்.

“ம்" என்று தலையசைத்தவள், கையில் இருந்த பள்ளி பேக்கையும், பயத்தில் அங்கேயே போட்டு விட்டு ஓடியிருந்தாள்.

ஓடுபவளை ஒரு ஏக்கப் பெருமூச்சோடு பார்த்தவன், கீழே அவள் விட்டு சென்ற பேக்கையும், அவள் போட்டு விட்டு சென்றிருந்த, பூக்களையும் குனிந்து எடுத்தான்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய அண்ணன் முறையில் இருந்த ஒருவன், “என்னலே அலப்பற எல்லாம் ஜாஸ்தியா கிடக்கு?” என்று கேலி பேசினான்.

“ஆயிரம் சொன்னாலும் பொஞ்சாதியாகப் போற புள்ள இல்லையா, அதான் மருமவேன், இத்தன பதவீசா நிக்குறாப்புள" என்று சுற்றி இருந்த பெரியவரும் அவர் பங்குக்கு கேலி பேசினர்.

அவனுக்கோ, அவர்களுடைய கேலி பேச்சு எதுவும் மூளையில் பதியவே இல்லை. அவனின் எண்ணம் எல்லாம், தன்னைப் பார்த்து அஞ்சி பயந்து ஓடும், அந்த பெண்ணவளின் மீது தான் இருந்தது. கையில் இருந்த பள்ளி புத்தகம், அவளை இன்னும் சிறுமியாய் தான் பார்க்க சொல்லியது. இன்னும் ஒரு மாதத்தில், அவளுக்கும், அவனுக்கும் திருமணம். இதெல்லாம் சரிபட்டு வருமா? என்று மீண்டும் ஒரு முறை அவனுக்குள்ளே யோசித்தான். யோசிக்கும் நிலை எல்லாம் தாண்டியாயிற்று. இத்திருமணத்தை நிறுத்த முடியும் என்ற பேச்சுக்கே இடம் இல்லைத்தான். ஆனாலும் இதற்கு முன் எப்படியோ? இப்போது அவள் தன் மனைவியாகப் போகிறாள். அப்படி இருக்க அவளின் முகவாட்டம் அவனை என்னமோ செய்தது. பொறுமை என்பதே இல்லாதவன், இப்போது அவள் சிதறிவிட்டு சென்றிருந்த பூவை ஒவ்வொன்றாய் எடுத்தான்.

அப்படியே அந்த பள்ளிப் பேக்கையும் எடுக்க, உள்ளே ரெக்கார்ட் நோட் இருந்தது. அவனுக்கு புரிந்தது. அங்கே வீட்டுக்கு சென்ற நிலாவோ, அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. ஏனோ மற்றவர்களிடம் எப்படியோ? இதுவரை கதிர் அவனிடம் இத்தனை கோவமாய் பேசியதில்லை. அவன் அப்படி கேட்டிருக்கவும், அவளுக்கு நாளை பள்ளி செல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட இன்றி, அப்படியே அழுதப்படியே படுத்துறங்கி விட்டாள்.

அடுத்த நாள், தாமரைத்தான், “இன்னிக்கு பள்ளிக்கூடம் இருக்கா? இல்லையா? இப்படி ஏழு மணி வரைக்கும் தூங்கிட்டு இருக்க?” என்று திட்டியப்படி அவளுக்கு காபியை நீட்டினார்.

அப்போதே தான் இன்னும் ரெக்கார்ட் நோட் எதுவும் முடிக்கவில்லை என்பதே மூளையில் பதிய, பதட்டமாய் எழுந்தாள். ஏனோ பயத்தில் இப்போதே அவளுக்கு நடுங்க ஆரம்பித்தது.

“ஸ்கூலுக்கு போலம்மா” என்று சொல்லக் கூட நிலாவுக்கு வார்த்தை வர வில்லை.

“கெளம்புடி" என்று தாமரை அழுத்தி சொல்ல, வேறு வழியின்றி, வீட்டில் இருந்து பள்ளியை நோக்கி நடந்தாள். ஆனால், ஏனோ அவளுக்கு ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதுமே அத்தனைப் பயம். இப்படி எல்லாம், அவள் ஒரு நாளும் கொடுத்த வீட்டுப் பாடத்தை முடிக்காமல் சென்றதே கிடையாது. அதனாலையே அவளுக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது.

அந்த யோசனையிலேயே அவள் சென்றிருக்க, அவளின் முன்னால் வந்து நின்ற பைக்கை கவனிக்காமல், அதைக் கடந்து சென்றாள்.

“நிலா” என்று கதிர் அழைக்க, அப்போதே இவ்வுலகம் வந்து திரும்பிப் பார்க்க, அங்கே பைக்கில் சாய்ந்தப்படி நின்றிருந்தான் கதிர்.

அவனைப் பார்த்ததும், இப்போது அவளுக்கு கோவம். அவன் திட்டியதால் தானே, இவள் அவளுடைய வேலையை செய்ய வில்லை. 

அதில் அவளோ எதுவ்ம் சொல்லாமல் அப்படியே அமைதியாய் இருக்க, “எங்கப் போற?” என்றான்.

அவனின் கேள்வியில் அவனைப் பார்க்காமலே, “ஸ்கூலுக்கு" என்றாள் நிலா. “சரி வா நான் கொண்டுப் போய் விடுறேன்" என்றான் கதிர்.

அதில் சட்டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், “இல்ல நானே போயிப்பேன்" என்றப்படி அங்கிருந்து நகர முயன்றாள்.

“அந்தப் பக்கம் ஸ்கூல் இல்ல" என்று அவன் சொல்ல, “என்ன?” என்றப்படி அவள் வேகமாய் அவள் செல்ல இருந்த திசையைப் பார்க்க, பள்ளிக்கு எதிர் திசையில் நடந்திருந்தாள்.

அதில் அவள், மறுப் பக்கம் செல்லப் போக, அவளின் முன்னே வந்து வழி மறித்து நின்றான்.

அவனின் செய்கையில், அவள் ஒரு வித தடுமாற்றத்தோடு அவனை நிமிர்ந்துப் பார்க்க, “பிடிச்சிருக்குத்தான?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான்.

ஏனோ அந்த நொடி அவன் மீதிருந்த கானல் கோவம் எல்லாம் மறைந்திருக்க, வேகமாய், “ம்" என்று தலையாட்டினாள்.

“பொறவென்ன, வா நான் ஸ்கூல்ல விடுறேன்" என்று கதிர் அழைக்க, அவளுக்கோ வேறு வழியே தெரியவில்லை. அவனுடைய பைக்கில் ஏறி அமர்ந்தாள். ஆனால் அவன் சட்டையைக் கூட பிடிக்காமல், கம்பியை பிடித்துக் கொண்டாள்.

அவளின் சிறு பிள்ளைக் கோவத்தில் கதிருக்கு புன்னகை ததும்ப, இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “பப்ளிக் எக்ஸாம் டைம் டேபிள் எல்லாம் வந்திருச்சா?” என்றான்.

“ம்" என்று அவள் தலையாட்ட, “நல்ல மார்க் எடுக்கனும்" என்றான். அதற்கும் அவள் “ம்" என்று தலையாட்ட, “அந்த மலரு எதுவும் உன்கிட்ட வம்பு பண்ணலத்தான?” என்றான்.

அவளோ வேகமாய், “ம். இல்ல இல்ல" என்று சொல்ல, அதன் பின்னும் கதிர் தான் கேட்டுக் கொண்டிருக்க, நிலா வெறும் “ம்” மட்டுமே கூறினாள்.

பள்ளி வந்ததும், அவன் பைக்கை நிறுத்த, அவளோ ஒரு வித பதட்டத்தோடு அங்கிருந்து கிளம்ப முயல, அவள் கரத்தைப் பிடித்து தடுத்தான் கதிர்.

அதில் அவள் அவனைப் பார்க்க, அவனோ, “மறந்துட்டு போற?” என்றான். அதில் அவள் குழப்பமாய் பார்க்க, அவள் கரத்தில் ரெக்கார்ட் நோட்டையும் செயல் முறை பாடத்திற்கான பிராஜக்ட் ஒர்க்கையும் வைத்தான்.

அதைப் பார்த்தவள் விழி விரிக்க, அவனோ, “இதுக்கெல்லாம் அழக் கூடாது" என்றான். அதற்குள் பள்ளி மணி அடிக்க, சற்றும் யோசிக்காமல், எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து ஓடியிருந்தாள் நிலா.

(எக்ஸ் கியூஸ் மீ. இது ஸ்கூல்லு. என்னமோ போங்க. சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம்.  சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   1

*** தென்றல் – 44 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***