எட்டு மணிப் போல், கதிர் அந்த பெரிய வீட்டின் முன் பைக்கை நிறுத்தினான். நிலாவோ பைக் நின்றது கூட தெரியாது, அவன் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
அதில் அவன், “நிலா” என்று மெதுவாய், தன் வயிற்றில் பதிந்திருந்த அவள் கரத்தை அழுத்தினான்.
அவன் உழுப்பலில், சிறிதாய் உதடு குவித்து, கன்னத்தை அவன் முதுகில் தேய்த்தவள், “இன்னும் செத்த நேரம்மா” என்று சிறுமியாய் அவனைக் கட்டிக் கொண்டு படுத்தாள். அவளின் செயலில், இங்கே இவனுக்குத்தான் பனிமலையில் மோதியது போல் ஒரு தடுமாற்றம்.
“நிலா” என்று அவன் சத்தமாய் அழைக்க, அவனின் குரலில், அடித்துப் பிடித்து, உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தாள் நிலா. அவளுடைய பதட்டத்தைப் பார்த்த கதிர், அவள் விழுந்து விடாதவாறு, அவள் கரத்தை அழுத்திப் பற்றினான்.
கண்ணை விழித்தவளோ, “அது நான் தெரியாம. அது" என்று திணறியப்படி பைக்கில் இருந்து இறங்க முயற்சித்தாள்.
“ஹேய் மெல்ல" என்று அவன் அழுத்தம் கொடுக்க, மெதுவாய் இறங்கினாள். அதன் பின்னே அவள் கண்ணைக் கசக்கியப்படி வீட்டைப் பார்த்தாள். கதிரோ, தன் அக்காவுக்கு கால் செய்து எங்கு வருகிறீர்கள்? என்று விசாரிக்க, அவர்கள் இன்னும் அங்கிருந்து கிளம்பவே இல்லை என்றனர்.
அதைக் கேட்டவன், “என்ன?” என்று ஒரு நொடி குழம்பி பின், மொபைலை வைத்து விட்டு நிலாவிடம், “உன்னை இங்க இறக்கி விடவா? இல்ல அங்க வீட்டுல விடவா?” என்றான்.
அவளுக்கோ, அந்த ஆளில்லாத வீடு அச்சத்தைக் கொடுக்க, சிறுமியாய், “சித்தி" என்று கேள்வி கேட்டாள்.
“அவங்க செத்த நேரத்துல வந்துடுவாங்க. அதுவரைக்கும், இங்க இருந்துப்பீயா?” என்று கதிர் பொறுமையாகத்தான் கேட்டான். அதில் அவளோ, “ம்" என்று தலையாட்டினாலும், அவன் சட்டையை விடாமல் பிடித்தாள்.
அவளின் செயலில், கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். அவனுக்கு மில்லில் சில வரவு கணக்கு வேலைப் பார்க்க வேண்டியிருந்தது. நாளைக் காலை, அவன் வருமான வரி துறையில் சில கோப்புகளை கொடுக்க வேண்டியுள்ளது. அதனால் தான், அவன் அங்கிருந்து முன்பே கிளம்பி வந்திருந்தான்.
அதில் ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டவன், “சரி வண்டியில ஏறு" என்றான். அவளோ, “எனக்கு அங்க வூட்டுல” என்று அவள் தடுமாற, “ஏறுன்னு சொன்னேன்" என்று சிறு அழுத்தம் கொடுத்தான்.
அதில் அவளும் சமத்தாய் பைக்கில் ஏறிக் கொள்ள, முருகேசனுக்கு கால் செய்து, “மாமா, நீங்க ஊரு கிட்ட வந்ததும் எனக்கு கால் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
நிலாவோ ஒரு வித அச்சத்தோடு, அவனைப் பார்க்க, அவனோ ஊரைக் கடந்து, அவனுடைய ரைஸ் மில் இருக்கும் பாதைக்கு சென்றான். இதுவரை அவள் அந்த ரைஸ் மில் வந்ததே கிடையாது. அதில் அவள் ஒரு மிரட்சியோடு சுற்றிப் பார்க்க, ரைஸ் மில் வந்ததும், பைக்கை நிறுத்தி அவளை இறங்க கூறினான்.
அவளும் மெதுவாய் இறங்க, “உள்ள வா” என்று அவள் கரத்தைப் பிடித்து அழைத்துக் கொண்டு, அவனுடைய அலுவலக அறைக்கு சென்றான். அதை எல்லாம் புதிதாய் பார்க்கும் ஆர்வத்தோடு சிறு ஆவலோடு பார்த்தாள்.
அங்கே இருந்த ஒரு மர சோபாவைக் காட்டி, “அங்க உட்காரு. எல்லாரும் வீட்டுக்கு வந்ததும், உன்னை கொண்டு போய் விடுறேன்" என்றான் கதிர்.
அவளும் ஒரு வித மகிழ்ச்சியோடு, “ம்" என்றவள், சமத்தாய் அங்கு சென்று அமர்ந்தாள்.
கதிரோ, தன்னுடைய பைக் கீயை மேஜையில் வைத்து விட்டு, அங்கிருந்த கபோர்டை திறந்து, ஒரு சாதாரண இலகுவான சட்டையை எடுத்தான்.
அணிந்திருந்த பட்டு சட்டையை வேறு அறை சென்று மாற்றிக் கொண்டு, அவனின் இருக்கையில் சென்றமர்ந்தான். ஒரு நொடி நிலாவைப் பார்க்க, அவளோ அந்த அறையை, சுற்றி சுற்றிப் பார்த்தப்படி இருந்தாள்.
“ஏதாச்சும் சாப்பிடுறீயா?” என்று கதிர் கேட்க, “ஆ..ங் அத் அது. இல்ல" என்று அவள் பதிலளிக்க, மீண்டும் இருக்கையில் இருந்து எழுந்து சென்றவன், அங்கிருந்த கபோர்டில் இருந்து அவள் சாப்பிட சில ஸ்னாக்ஸை எடுத்து வந்துக் கொடுத்தான்.
அதில் அவள் அவனைப் பார்க்க, அவனோ, “முகம், கை எதுவும் கழுவனும்னா, அங்கத்தான் பாத்ரூம் இருக்கு. பசிச்சா, இத சாப்டு. தூங்கம் வந்தா, பெட் சீட் இங்க இருக்கு. தூங்கு" என்று ஏதோ எட்டு வயது சிறுமியிடம் சொல்வது போல் கூறினான்.
அவளும் எல்லாவற்றுக்கும் தலையாட்ட, கதிரோ மீண்டும் தன்னுடைய இருக்கைக்கு சென்று தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
நிலாவோ ஸ்னாக்ஸை எடுத்துப் பிரிக்க, அதற்குள் கை எல்லாம் தூசியாய் இருப்பது போல் தோன்ற, பாத்ரூம் சென்று, கை, கால், முகம் கழுவி வெளியில் வந்தாள். பைக்கில் வந்ததில் அவளுடைய தாவணி எல்லாம் கலைந்திருக்க, அதையும் தன்னால் முடிந்த மட்டும் சரி செய்தாள். அதன் பின் அமைதியாய் மீண்டும் அந்த சோபாவில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
இங்கே கதிரோ, மும்முரமாய் கணக்கு வழக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, நிலாவுக்கோ தூக்கம் சுத்தமாய் வரவில்லை. எதார்த்தமாய் நிமிர்ந்துப் பார்த்தவன், “என் சட்டையில மொபைல் இருக்கு. அத எடுத்து ஏதாச்சும் விளையாடனும்னா விளையாடு" என்றான்.
அதில் அவளோ, “இல்ல எனக்கு வேணாம்" என்று அவள் சொல்ல, “அப்போ தூங்கு" என்றான்.
“இல்ல தூக்கம் வரல" என்று அவள் சொல்ல, “ஏதாச்சும் புக் படிக்கிறீயா?” என்று கேட்டான்.
“ம்" என்று அவள் தலையாட்ட, கபோர்டை திறந்து, சில புத்தகங்களை எல்லாம் எடுத்து வந்து அவளின் முன் வைத்தான். அத்தனையும் டி என் பி எஸ் சி தேர்வு சம்பந்தப்பட்ட புத்தகங்கள்.
“கதை புக் எல்லாம் இல்ல. இதேன் இருக்கு" என்று சொல்லிவிட்டு கதிர் சென்று விட, நிலாவும் அதை எல்லாம் பிரித்து பார்க்க ஆரம்பித்தாள். சில நிமிடங்களில், அவள் மூழ்கிவிட, அவனும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
ஒரு கட்டத்தில் கதிர் நெற்றியை நீவியவன், சிவாவுக்கு கால் செய்தான். ஆனால், அவனுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. மணியைப் பார்க்க, பதினொன்று என்று காட்டியது.
அதில் மீண்டும் அந்த செலவு கணக்கை சரி பார்க்க, கிட்ட தட்ட ஐயாயிரம் ரூபாய் அடி வாங்கியது. முழுதாய் அரை மணி நேரத்துக்கும் மேலாக, அவன் அதையே சரி பார்க்க, மீண்டும், மீண்டும் தவறாகவே வர, “ச் சிட்" என்று கையில் இருந்த பேனாவையும், நோட்டையும் தூக்கி மேஜையில் வீசினான்.
அந்த சத்தத்தில் நிலா நிமிர்ந்து கதிரைப் பார்க்க, அவனோ தலையில் கையை வைத்தான். அவனின் முகத்தில் அப்பட்டமான எரிச்சல் தெரிந்தது. அதைக் கவனித்தவளுக்கு, மனதில் சிறிதாய் அச்சம். இருந்தும் தன் காலடியில் வந்து விழுந்த பேனாவை எடுத்தவள், எழுந்து அவனின் அருகில் சென்றாள்.
அவனோ, “இவென்கிட்ட எத்தன தடம் சொல்றது. எல்லாத்தையும் சரியா எழுதி வைன்னு. சொன்னா கேட்கவே மாட்டான்" என்று சிவாவை திட்டியப்படி இருக்கையில் சாய்ந்தமர்ந்தான்.
“மாமா” என்ற நிலாவின் குரலில் வேகமாய் அவன் நிமிர்ந்துப் பார்க்க, அப்போதே அங்கு அவள் இருப்பதே மூளையில் பதிந்தது.
“என்ன? ஏதும் வேணுமா?” என்று அவன் கேட்க, “பேனா” என்று அவள் அந்த பேனாவை அவனிடம் நீட்டினாள்.
“ச் அத அங்க வச்சிட்டு நீ போ” என்று கதிர் சொல்ல, அவளும் அவன் சொல்லியதை செய்து விட்டு நகர சென்றாள். ஆனாலும் அவனுடைய கலங்கிய தோற்றம், அவளை என்னமோ செய்தது.
அதில், “என்னாச்சு மாமா?” என்று கேட்டாள். அதில், தன்னை நொடியில் சமன் செய்து, “ஒன்னும் இல்ல. நீ போ” என்றான். அவளோ நகராமல், அந்த நோட்டையும், அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
“கணக்குக்கு சரியா விடை கிடைக்கல. அதேன். நீ போ” என்று அவன் சொல்ல, “நான் பாக்கட்டுமா?” என்று வேகமாய் கேட்டாள் நிலா.
அதில் அவனுக்கு ஒரு நொடி சிரிப்பு வந்தது. அந்த வருடத்துக்கான, மொத்த வரவு செலவும் அடங்கிய நோட்டை, அவள் ஏதோ வீட்டுப்பாடம் முடிப்பது போல் நினைத்து சாதாரணமாய் கேட்க, “இது கொஞ்சம் கஷ்டமான கணக்கு. நீ போய், அந்த புக்ல இருக்கிறத படி” என்றான்.
“நான் ஒரு தடவ பாக்கட்டுமா?” என்று நிலா மீண்டும் அழுத்திக் கேட்க, ஏனோ அவளுடைய விருப்பத்தை மறுக்க முடியவில்லை. அதனால் அவளிடம் அந்த நோட்டைக் காட்டி, அவளுக்கு புரியும் படி சிறியதாய் விளக்கம் கொடுத்து, பிரச்சனை என்ன என்றும் சொல்லி அவளிடம் கொடுத்தான்.
“ஐஞ்சு நிமிஷம் மாமா” என்று சொல்லியவள், அந்த பெரிய நோட்டையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு சோபாவுக்கு சென்றாள். அவனோ, “சின்னப் பொண்ணுன்னு ப்ரூவ் பண்ணிட்டே இருக்கா” என்றப்படி, அவன் அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
அவள் சொல்லியது போலவே, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், “இப்போ சரியாகிடுச்சு மாமா” என்றப்படி அந்த நோட்டை நீட்டினாள் நிலா.
அதில் ஒரு நொடி அதிர்ந்து பின், அவள் தெரியாமல் சொல்கிறாளோ? என்று யோசித்தப்படி, “சரி அங்க வச்சிடு. நான் பொறவு பாத்துக்கிறேன்" என்றான் கதிர்.
“இல்ல மாமா. இத நீங்க சரி பாத்து முடிச்சாத்தான், வரவு கணக்க சரி பாக்க முடியும்" என்று அத்தனை தெளிவாய் கூறினாள். அவளுடைய அந்தப் பதிலில், கதிரின் புருவங்கள் சில நொடி வியந்தது. அதனாலையே அவன் அவள் கரத்தில் இருந்த, அந்த நோட்டை வாங்கிப் பார்த்தான்.
அவன் எதை விட்டிருந்தானோ, அதை கோடிட்டு, அதை சரி செய்து வைத்திருந்தாள். அது மட்டும் அல்லாது. அடுத்தடுத்த பக்கங்களையும் சரி பார்த்து மொத்த விடையை எழுதியிருந்தாள்.
அவனுக்கு அத்தனை ஆச்சர்யம். அதில் மீண்டும், மீண்டும் அவன் அதை சரி பார்க்க, அத்தனை தெளிவாய் முடித்திருந்தாள்.
அவளோ, வீட்டுப்பாடத்தை டீச்சரிடம் காட்டி விட்டு, டீச்சர் என்ன பதில் சொல்வார் எனும் ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எப்படி தென்றல்?” என்றவனுடைய வார்த்தையில் அத்தனை ஆச்சர்யம். கூடவே ஒரு வித மகிழ்ச்சியும் பொதிந்திருந்தது. “நான் தான் மாமா, நீங்க கொடுக்கிற தோட்டத்து கணக்கு வழக்கு எல்லாம் சித்திக்கு பாத்துக் கொடுப்பேன்" என்றாள்.
அது அவனுக்கு முற்றிலும் புதிதான செய்தி. தன் அக்கா மகள் சிறுமி மட்டும் அல்ல, புத்திசாலி என்று உணர்ந்த தருணம் அது.
அதில் அவளைப் பார்த்தவனுக்கு, இப்போதே அவளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அவசரமாய் தன்னிடம் எதையோ தேடியவன், பின் தன்னுடைய சுண்டு விரலில் போட்டிருந்த மோதிரத்தை கழட்டி அவள் மோதிர விரலில் போட்டு விட்டான். அதுவே அவளுக்கு பெரிதாய் தான் இருந்தது.
“எதுக்கு மாமா?” என்றெல்லாம் அவள் கேட்கவில்லை. “நூல் சுத்தி போட்டுக்கிறேன் மாமா” என்று பதிலளித்தாள். அதில் அவன் முகத்தில் புன்னகை விரிந்தது. அவன் சிரிப்பதைப் பார்த்து, “சிரிக்கிறப்ப அழகா இருக்கீங்க மாமா” என்றாள்.
(அவன் சிரிக்கிறப்ப அழகா இருக்கான்னோ? இல்லையோ, நீ இப்படி சொல்லி சொல்லியே அவன அழகா சிரிக்க வச்சிடுவ. சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்னுங்க)
தென்றல் தீண்டுமா?..
Vaishnavi Arumugam
cuteee 🥰