தென்றல் – 41

வயசுப் பெண்களெல்லாம், கூட்டமாய் அமர்ந்து கதைப் பேசிக் கொண்டிருக்க, சிறுவர்கள் எல்லாம், அங்கு, இங்கு என்று ஓடிக் கொண்டிருக்க, கொஞ்சம் வயதானவர்கள் எல்லாம், மரத்தடியில் தலைசாய்த்திருந்தனர். தண்ணிப் பார்டிகள் எல்லாம், தோட்டத்துப் பக்கம் ஒதுங்கியிருந்தனர், ஒரு பக்கம் கிடா விருந்து, சொந்தக்காரர் இடையே சலம்பல் என்று குல தெய்வ கோவில் வழிப்பாடு சிறப்பாகவே சென்றுக் கொண்டிருக்க, முருகேசனோ செல்வியிடம், “நீ என் அண்ணன்ன எங்கேயும் பாத்த?” என்று, அவள் கொண்டு வந்திருந்த, ஈரலை சாப்பிட்டப்படி கேட்டார்.

அதில் தன் கணவரை முறைத்தவர், “இப்போ எதுக்கு என் வாய கிண்டுறீங்க?” என்றாள் செல்வி. ஏனெனில் சற்று முன் தாமரையிடம், இதையே கேட்க, தாமரையும் செந்திலுக்கு கால் செய்து விசாரித்தார். அவரோ திட்டி கால்லை வைத்திருந்தார்.

அக்கா கணவரின் மேலே காட்ட முடியாத கடுப்பை, தன் கணவரிடம் கொட்டியிருந்தார்.

“இப்போ என்னெத்த கேட்டுப்புட்டேன்னு, இப்படி குழம்புல கொதிக்கிற மீனாட்டம் துள்ளுற?” என்று முருகேசன் கேட்கும் போதே, அங்கு சங்கரேயன் வந்தார்.

அவரைப் பார்த்ததும், செல்வி அமைதியாகிவிட, வந்தவரோ, “ஏத்தா? மருமவெனுக்கு, இரத்தப் பொறியல்னா கொள்ள இஷ்டம்ல, அத கொண்டாட்டு வைத்தா” என்றார்.

“ஆமா, உங்க மருமவெனுக்கு, எல்லாமே இஷ்டம்த்தான். இங்கே வேற ஆறுமே இல்ல. எல்லாத்தையும், இவருக்கே எடுத்து வைக்க வேண்டியதுத்தேன்" என்று சடவாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் செல்வி.

செல்லும் தன் மகளைப் பார்த்தவர், “என்னாச்சு மருமவனே? புள்ளைக்கும், உங்களுக்கும் ஏதும் சண்டையா?” என்றார் சங்கரேயன்.

“போச்சு போங்க. என் பொண்டாட்டிக்கிட்ட நான் சண்டைப் போடுவேன்னா மாமா?” என்று பவ்வியமாய் சொல்லியவர், “பொறவு மாமா, உங்க மூத்த மாப்பிள்ள என்னத்தேன் சொல்றாரு?” என்று கையைக் கழுவியப்படி கேட்டார்.

“என்னத்த சொல்றாரு? அத்தேன் அவரு இங்கன வரவே இல்லையே” என்று சங்கரேயன் வருத்தப்பட, “எங்க போயிடப் போறாரு? அத்தெல்லாம் வருவாரு மாமா. நீங்க எத நினைச்சும் கவலைப்படாம, நிச்சய வேலையே ஆரம்பிங்க. சொச்சத்த நான் பாத்துக்கேன்" என்றான் முருகேசன்.

“என் மருமவென் இருக்கிறப்ப, எனக்கு என்னய்யா குறை?” என்று அவர் சொல்லும் போதே, சொந்தக்காரர்கள் எல்லாம் வந்து பேச்சுக் கொடுக்க, அந்த உச்சி வெயிலில், அவரவர், கிடைத்த நிழலில், அமர்ந்திருந்தனர்.

கதிரோ, அங்கிருந்த கிணற்றடியில் சாய்ந்து நின்றிருந்தான். அவனுடைய யோசனை மொத்தத்தையும், அவனின் அக்கா மகள் தான் நிறைத்திருந்தாள். அவன் கையைப் பற்றி, அவள் சொல்லிய, “நீங்களும் இந்த சட்டையில அழகா இருக்கீங்க. கொஞ்சம் சிரிச்சா இன்னும் அழகா இருப்பீங்க" என்ற வார்த்தைகள் ஓடியது.

அதில் அவனையும் மீறி அவன் உதட்டோரம் புன்னகைப் பூக்க, அதற்குள் அங்கு வந்த சிவாவோ, “எண்ணன்னே, ஒத்தையில நின்னு சிரிச்சிட்டு இருக்கீக?” என்றான்.

அதில் சட்டென்று சிரிப்பை எல்லாம் மறைத்து, “வாடா நல்லவனே, இதுத்தான் நீ குல தெய்வ கோவில் வர்ற லட்சணமா? காலாமார தோப்பு பக்கம் போனவனுக்கு, இப்பத்தேன் நாங்க எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சோமா? இதுல, வயல்ல பாத்துக்கோடான்னு சொன்னதுக்கு, என்னப் பேசுன நீ?” என்றான் கதிர்.

“ஆ..ங் அதுண்ணே. அது" என்று சிவா தலையை சொரிய, “புதுசா கன்னாலம் கட்டியிருக்கிற. பொண்டாட்டிய எங்கையாச்சும் கூட்டிட்டு போலாம்த்தான? இங்கனையே சுத்திட்டு திரியிற" என்று கதிர் கூறினான்.

“அறுவடை நேரம் வேற. இன்னேரம் எப்படின்னே. இப்பவே விருந்து, மறுவீடுன்னு சுத்திட்டுத்தான இருக்கோம். பொறவு பாத்துக்கலாம்" என்றான் சிவா.

“க்கும் என்னமோ சொல்ற” என்ற கதிர், அதன் பின் சில வேலை விஷயங்களை பேசிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான். 

கதிர் சொல்லியது போல், நிலா செல்வியுடன் தான் இருந்தாள். அதனாலையே கதிர், அதன் பின் நிலா இருக்கும் பக்கம் கூட செல்லவில்லை. அவன் சென்றாலே, தாமரை கத்த ஆரம்பிக்க, இவனோ அந்த வம்புக்கே செல்லவில்லை.

ஒரு வழியாய், வந்த விஷயம் எல்லாம் சிறப்பாய் முடிந்திருக்க, கிளம்பும் நேரம் தான் செந்தில், அங்கு பாண்டியுடன் வந்தார்.

பாண்டியைப் பார்த்ததும், நிலா அன்னிட்சையாய், தன் அன்னைக்கு பின் சென்று மறைந்தாள்.

தாமரைக்கோ ஏற்கனவே கணவரின் மீது கோவம். இப்போது, பாண்டியையும் அங்கு அழைத்து வந்திருக்க, “நிலா நீ போய் வேன்ல உட்காரு" என்றார்.

“ம்" என்று சொல்லியப்படி, நிலா அங்கிருந்து நகரப் போக, “நிலா” என்று செந்தில் சத்தமாய் அழைத்தார். அப்போதே தன்னுடைய பைக்கை எடுக்க சென்ற கதிர், அங்கே எட்டிப் பார்த்தான். அங்கே நின்றிருந்த பாண்டியைப் பார்த்தவனுக்கு, கோவத்தில் கண்ணெல்லாம் சிவந்தது. அதில், பைக்கை சைட் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவன், வேஷ்டியை மடித்துக் கட்டியப்படி அங்கு சென்றான்.

அப்பாவின் சத்தத்தில், நிலா ஒரு நொடி நின்று, அவரைப் பார்க்க, பாண்டியோ அவளைத் தான் விசமமாய் பார்த்தான். அதில், அவளுக்கோ, உள்ளுக்குள் அப்படி ஒரு அறுவறுப்பு. 

அதற்குள் செந்திலோ, “வா, வந்து எங்க ரெண்டு பேருக்கும் இலைய எடுத்துப் போடு" என்றார்.

“அவ எதுக்குங்க? நான்" என்று தாமரை ஏதோ சொல்லப் போக, “நான் என் புள்ளைக்கிட்ட பேசிட்டு இருக்கேன்" என்றார் செந்தில்.

அதில் தாமரையோ செய்வதறியாது கையை பிசைய, செல்விக்கோ பெரிதாய் எந்த விசயமும் தெரியாது அல்லவா. அதனால், “போத்தா போயி ரெண்டு இலைய எடுத்துட்டு வா” என்றார் செல்வி.

அவர் சொல்லவும், நிலாவும் வேனில் இருந்த இலைக் கட்டில் இருந்து ரெண்டு இலையை எடுத்து வந்தாள். பாண்டியோ, அவளையே மேலிருந்து கீழாய் பார்த்திருந்தான்.

அங்கே கோவமாய் வந்த கதிரை முருகேசன் இழுத்து சென்றிருக்க, “யோவ் மாமா. இப்போ எதுக்குயா என்னத்த இழுத்துட்டு வர்ற நீ?” என்று அவர் கையில் இருந்து திமிறினான்.

“ச் செத்த பொறு மாப்பிள்ள. நல்ல காரியத்துக்காக வந்திருக்கோம். இங்க வச்சு ஏதும் வேணா. உனக்கு மில்லுல்ல வேல கெடக்குத்தான நீ கிளம்பு. நான் பாத்துக்கிறேன்" என்றார் முருகேசன்.

அதில் அவரை விட்டு விலகி நின்றவன். “என்னத்த பாக்கப் போறீங்க? அவென் நிழல் கூட நிலா மேல படக்கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னென்னா?” என்று கோவமாய் கதிர் கேட்க, “ச் நிலா கூட நாங்க எல்லாரும் இருக்கோம்ல. அவென் எங்கள மீறி என்னப் பண்ணிடுவான். நீ இன்னேரம் அவன் கூட சண்டைப் போட்டு வீண் பிரச்சனை வேணாம்" என்றார்.

அங்கே நிலாவோ ஒரு வித பதட்டத்தோடு, செந்திலுக்கும், பாண்டிக்கும் இலையை வைத்து விட்டு, அங்கிருந்து செல்ல முயற்சிக்க, “வெறும் இலைய மட்டும் போட்டா எப்படி, தண்ணி ஆறு ஊத்துவா?” என்று பாண்டி, அவளைப் பார்த்து விசமமாய் கேட்டான்.

“ஏங்க" என்று தாமரை அங்கிருந்து நிலாவை அனுப்ப முயற்சிக்க, ஆனால் செந்திலோ, “அந்த தண்ணிய எடுத்து ஊத்து" என்றார்.

செல்வியோ தண்ணீர் பாத்திரத்தை எடுத்து நிலாவிடம் கொடுக்க, அவளோ, “சித்தி" என்றாள்.

“போத்தா, இது நம்ம வூட்டு விசேசம். நம்மத்தான வந்தவகள கவனிக்கனும்" என்று செல்வி பொறுமையாய் சொல்ல, நிலாவுக்கோ, அப்போதும், பாண்டியின் முன்னே செல்ல விருப்பம் இல்லை.

ஆனாலும் வேறு வழியின்றி, அந்த தண்ணீர் பாத்திரத்தை அவள் வாங்கப் போக, அதற்குள் அங்கு வந்து நிலாவின் கரத்தைப் பிடித்த கதிர், “நிலாவ நான் கூட்டிட்டு போறேன். நீங்க எல்லாரும். எல்லாத்தையும் முடிச்சிட்டு வேன்ல வாங்க" என்று சொல்லிவிட்டு, அவளுடன் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

தாமரைக்கு கூட, அந்த நொடி கதிரை தடுக்க முடியவில்லை. செல்வியோ, ஒரு வித பதட்டத்தோடு, தன் அக்காவைப் பார்க்க, செந்திலோ கோவமாய், “எம்புள்ளைய கூட்டிட்டு போக இவன் ஆறு" என்று கத்தினான்.

“உங்க வருங்கால மருமவெண்ணே” என்று சொல்லியப்படி முருகேசன் அங்கு வந்திருக்க, பாண்டிக்கோ, அத்தனை எரிச்சல், அதில் கடுப்பாய் அங்கிருந்து எழ முயற்சித்தான்.

அதற்குள், “செல்வி, அங்கன என்னப் பராக்க பாத்துட்டு நிக்கிற. பசியில வந்தவகளுக்கு சாப்பாட்ட வை. கறி சோறு சாப்பிடனும்னு வந்திருக்காகள்ள?” என்று சீண்டலாய் கூறினான் முருகேசன்.

அதில் செந்தில் ஏதோ சொல்லப் போக, ஊர் பெரியவர்களும் வந்துவிட, செந்திலும், பாண்டியும் எதுவும் செய்ய முடியாமல் முறுக்கிக் கொண்டு பந்தியில் அமர்ந்திருந்தனர்.

அங்கே நிலாவை அழைத்து சென்ற கதிரோ, “வண்டியில ஏறு" என்றான். “ம்" என்று தலையாட்டியவள், அடுத்த நொடி அவன் கையைப் பற்றி பைக்கில் ஏறினாள்.

அதில் கண்ணாடி வழியே பின்னே பார்த்தவன், “பாதை கரடு முரடா இருக்கும். கெட்டியா பிடிச்சிக்கோ” என்றான். அதில் அவள் அவன் சட்டையை மேலும் அழுத்திப் பிடித்துக் கொண்டாள். 

அதில் பைக்கை ஸ்டார்ட் செய்யாமல், அவள் பக்கம் திரும்பி, அவன் கை சட்டையைப் பிடித்திருந்தவளின் கரத்தை எடுத்து தன் தோளில் வைத்தான்.

அவள் அவனைப் பார்க்க, “அந்தக் கையையும் வச்சுக்கோ” என்று அவன் சொல்ல, அவளும் அவன் சொன்னது போல் அவன் இரு தோளிலும் கரத்தைப் பதித்தாள்.

அதன் பின்னே அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, பைக் அந்த ரோட்டில் சற்று அதிகமாகத்தான் குலுங்கியது. அதில் சற்றும் யோசிக்காமல், அவன் வயிற்றை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள்.

அதில் சட்டென்று அவன் சடன் பிரேக் அடித்து நிறுத்த, அவன் முதுகில் மோதி, நிமிர்ந்தாள் நிலா. இங்கே இவனுக்குள் தான், ஒரு வித தடுமாற்றம்.

“இல்ல நீ சட்டைய மட்டுமே பிடிச்சிக்கோ” என்று அவன் சொல்ல, அவளோ அதற்கும், “ம்" என்று தலையாட்டியப்படி சட்டையைப் பிடித்துக் கொண்டாள். அதன் பின்னே அவன் பைக்கை மீண்டும் ஸ்டார்ட் செய்தான்.

சின்னப் பெண், சின்னப் பெண் என்று அவன் மனதில் அழுத்தமாய் பதிய வைக்க முயன்ற தருணம் அது. 

இடையில் ஒரு கடையில் நிறுத்தி, அவளுக்கு குடிக்க பால் வாங்கிக் கொடுத்தான். நீண்ட தூர பயணம், இப்படி எல்லாம் பைக்கில் அவள் வந்ததே கிடையாது. எதிர் காற்று முகத்தில் அடிக்க, அவளோ சட்டையை மேலும் மேலும் சுருட்டிப் பிடித்தாள்.

அதை உணர்ந்தவன், “சரி பிடிச்சுக்கோ” என்றான். அவளுக்கோ காற்றின் சத்தத்தில், அவன் சொல்லியது கேட்கவே இல்லை.

அதில், அவள் கரத்தை எடுத்து தன் வயிற்றில் பதித்துக் கொண்டான். அவனின் செயலில், அவள் மீண்டும் அவனைப் பார்க்க, “தூக்கம் வருதா?” என்றான்.

“ம். இல்ல. அது. ஆமா” என்று இரண்டு பக்கமும் தலையாட்ட, “இன்னும் கொஞ்ச தூரம் தான்" என்றான்.

அதற்கும் அவளிடம் இருந்து வெறும் “ம்” மட்டுமே. சிறிது நேரத்தில், தூங்கி அவன் முதுகிலேயே சாய்ந்திருந்தாள். அதில் அவளை எழுப்பவும் மனம் வரவில்லை. அதில் வயிற்றில் பதிந்திருந்த அவள் கரத்தை, ஒரு கரத்தால் பிடித்துக் கொண்டு தான் பைக்கை ஓட்டினான்.

ஏதோ கண்ணாடிப் பொருளை கொண்டு சேர்ப்பது போல் தான் அவன் அவளைப் பார்த்தான்.

(க்கும். இருக்கட்டும். இருக்கட்டும். அக்கா மவள நல்லாத்தான்பா பாத்துக்கிடுற. சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்டல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க. )

தென்றல் தீண்டுமா?

Comments   1

*** தென்றல் – 41 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***