அன்றுடன், காலாண்டு பரீட்சை முடிந்திருக்க, அடுத்த பத்து நாள் விடுமுறை என்று அத்தனை மாணவ, மாணவிகளும் சற்று அதிக சந்தோஷத்தில் வீடு வந்துக் கொண்டிருந்தனர். வேலை விஷயமாக, டவுனுக்கு செல்வதற்காக, கதிர் பைக்கில் அந்த வழியில் செல்ல, சட்டென்று நிலாவைப் பற்றிய யோசனை மின்னலென நினைவடுக்கில் வந்து நின்றது.
“அன்னிக்கு பாத்தது. அதுக்கப்புறம், அவெளுக்கு ஏதும் பிரச்சனையான்னு கூட கேட்கல” என்று தனக்குள்ளே அவன் கேட்க, அவனின் மனமோ, “நிலாவ பாக்கனும்னு தோணுனா, அவெ வீட்டுல போயி பாக்க வேண்டியது தான. அதுக்கெதுக்கு இத்தன சாக்கு சொல்லனும்" என்று சீண்டியது.
அதன் பின் என்ன நினைத்தானோ, நிலாவை பற்றிய சிந்தனையை சற்று ஒதுக்கிவிட்டு மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்தான். சட்டென்று நிலா சொல்லிய, “எனக்கு பிடிச்சிருக்கு" என்ற வார்த்தை மீண்டும் அவன் செவியில் ஒலித்தது.
அதில் புருவத்தை நீவியவன், அந்த வழியில் சென்ற பள்ளி மாணவர்களைப் பார்த்தான். ஏனோ சட்டென்று நிலாவின் நினைவில் புன்னகை பூத்தது. அதில் வண்டியை வளைத்து மீண்டும் பெரிய வீட்டுக்கு வந்தான். அவசரமாய் கிளம்பி சென்றவன், திரும்பி வரவும் செல்வி, “என்னாச்சுப்பா? ஏதும் வச்சிட்டு போயிட்டீயா? ஒத்த போன்ன போட்டிருந்தா, இந்த குமாருகிட்ட கொடுத்தனுப்பிருப்பேன்ல" என்றார்.
“ஆ..ங் அத்தெல்லாம் ஒன்னுமில்லக்கா. மாமா வூட்டுக்கு வரேண்னு சொன்னாரே, உம் கிட்ட ஏதும் சொன்னாரா?” என்று கேள்வியாய் கேட்டான் கதிர்.
அதில், தன் தம்பியை ஒரு வித ஆர்வத்தோடு பார்த்தவர், “உமக்கு இஷ்டமாயா?” என்றார். அவர் சட்டென்று அப்படி கேட்கவும், ஒரு நொடி அவன் முகத்தில் ஒரு வித இறுக்கம். எந்த பதிலும் சொல்லாமல், “மாமா வந்தா அப்புறமா அவர வயல்ல வெச்சி பாக்குறேன்னு சொல்லிடுக்கா” என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.
செல்லும் தம்பியை கேள்வியாய் பார்த்தவர், அடுத்து தன் கணவருடைய வரவைத்தான் எதிர்பார்த்தார். அப்படி கிளம்பி சென்றவன், அதன் பின் அடுத்த இரண்டு நாள் ஊருக்கே வரவில்லை. மதுரையிலேயே தங்கிக் கொண்டான்.
அவன் மனதில் என்ன இருக்கிறது? என்று அவனுக்கே புரியவில்லை. எப்படி யோசித்தாலும், நிலா சின்னப் பெண் என்பதைத் தாண்டி வேறு வகையில் யோசிக்க முடியவில்லை. வேண்டாம் என்று மொத்தமாகவும் மறுக்க முடியவில்லை. அவள் அன்று அப்படி சொல்லாமல் இருந்திருந்தால் கூட, இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம் என்று சொல்லியிருப்பான். இப்போது அவனுக்கு அத்தனை குழப்பமாய் இருந்தது.
“அவளோட பாதுகாப்புக்காக, நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னே வச்சிப்போம். பொண்டாட்டிய எத்தன நாள், பொண்டாட்டியா பார்க்காம இருக்க முடியும்" என்ற கேள்வி அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. கல்யாணம்ன்றது பாசம் அப்படின்ற தாண்டுன ஒரு சொந்தம். அந்த உணர்வு வராமல் எப்படி நிலாவை திருமணம் செய்துக் கொள்வது. அது அவளுடைய வாழ்க்கையையும் சேர்த்துத்தானே கெடுக்கும்.
“எல்லாத்துக்கும் காரணம், இந்த மாமாத்தான். இவர நான் அனுப்பியிருக்கவே கூடாது" என்று முருகேசனை மனதில் வறுத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவரோ, அவனுடைய நிம்மதியை மேலும் கெடுப்பது போல், சங்கரேயனிடம், “பொறவென்ன மாமா, நாளைக்கே குல தெய்வ கோவில் போயி சாமிக்கிட்ட, நிச்சய தேதியும், கல்யாண தேதியும் கேட்டுடலாம்" என்றார் முருகேசன்.
“நீங்க சொன்னா சரித்தான் மருமவெனே. என்னப் பண்ணனுமோ பண்ணிடுங்க” என்றவருக்கு இப்போது தான் பழைய திடம் மீண்டிருந்தது. தன் பேத்தியே தன் மருமகளாய் வரப் போவதை நினைத்துப் பார்த்தவருக்கு அத்தனை சந்தோஷம்.
“இனிமேலாச்சும் எம் புள்ள சந்தோஷமா இருக்கனும்" என்று தன் மனைவியின் புகைப்படம் முன் வேண்டிக் கொண்டார்.
அடுத்த கணம், முருகேசனும், செல்வியும் தாமரையின் வீட்டின் முன் நின்றிருந்தனர். “என்ன மதினி? நீங்களும் அண்ணன்ன மாதிரியே, வூட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு சொல்லாம அப்படியே நிக்குறீக" என்றார் முருகேசன்.
“வாங்க" என்ற தாமரைக்கு தன்னுடைய கொழுந்தன் மீது கொலைவெறியே இருந்தது. அது செல்விக்கும் புரிய, “ச் செத்த அமைதியா இருங்க. நானே பேசிக்கிறேன்" என்று அவருடைய காதில் கிசுகிசுத்தார்.
“ரைட்டு. உன் சொல்ல நான் மீறியிருக்கேன்னா?” என்று கேட்ட தன் கணவரை முறைக்க கூட முடியவில்லை. வீட்டினுள் செல்ல, இவர்களைப் பார்தத்தும், “சித்தி, சித்தப்பா" என்றப்படி நிலா அங்கு வந்தாள்.
“வூட்டுக்கு ஆறு வந்தாலும் ரூம்ம தாண்ட மாட்டா. இப்போ மட்டும்" என்று தாமரை தன் மகளை திட்ட, “இப்போ எதுக்கு, எங்க மேல உள்ள கடுப்ப புள்ள மேல கொட்டுற. நீ வாடா” என்று செல்வி நிலாவை தங்களின் அருகில் அமர்த்திக் கொண்டார்.
“என்ன சேதி?” என்று தாமரை வேண்டா வெறுப்பாய் கேட்க, “என்ன மதினி. கொளுந்தன் வந்திருக்கேன். குடிக்க ஏதும் வேணுமான்னு கூட கேட்க மாட்டீகளோ?” என்று முருகேசன் நக்கலாய் கேட்க, செல்வி முறைத்தார்.
அதில் தாமரையும், உடனே சமையலறைக்கு சென்று, அவர்களுக்கு குடிக்க காபி போட ஆரம்பித்தார்.
“என் ஆத்தாகிட்ட சொல்லி மாமியார் மவுச காமிக்க சொல்லனும். அப்பத்தேன் இந்த வூட்டுல எல்லாம் சரியா நடக்கும்” என்று தாமரை காதில் விழும் படி சொல்லிவிட்டு நிலாவிடம் திரும்பி, “படிப்புலாம் எப்படி தங்கம் போது?” என்றார்.
“நல்லா போது சித்தப்பா" என்று அவள் சிறு புன்னகையுடன் தலையாட்ட, “அம்புட்டுத்தேன்த்தா. என்ன நடந்தாலும், நீ பாட்டுக்கு படிச்சிட்டே இருக்கனும். அதுக்காக, நானும், உன் மாமனும் என்ன வேணும்னாலும் பண்ணுவோம். சரியா?” என்று கேட்டார் முருகேசன்.
மாமன் என்ற வார்த்தையில், நிலாவுடைய விழிகளில், கதிர் சிறிதாய் முறைத்தப்படி வந்து நின்றான். “அவ படிப்பா, உங்க எல்லாத்தையும் விட அவ நல்லாப் படிச்சு இந்த ஊருக்கே அதிகாரியா வருவா” என்று அன்று மலருடன் பேசிய, கதிர் நினைவில் வந்து அவள் நெஞ்சை நிறைத்தான்.
அதற்குள் தாமரை அங்கு வந்து விட, “போடி. போயி, அந்த கழுவி வச்ச பாத்திரத்த எடுத்து அடுக்கு" என்று நிலாவை அங்கிருந்து அனுப்ப முயற்சிக்க, “ஏன் அத அப்புறமா அடுக்குனா ஆவாதா?” என்றார் செல்வி.
அதில் தாமரை தன் மகளை முறைக்க, “சித்தி வந்துடுறேன்" என்ற நிலா அமைதியாய் அங்கிருந்து அடுப்பறைக்குள் சென்றிருந்தாள்.
“புள்ளைய பயமுறுத்தாதக்கா” என்று செல்வி சொல்ல, “எதுக்கு வந்திருக்கீங்கன்னு இன்னும் நீங்க சொல்லல" என்றார் தாமரை.
“ஏன் ஏதாச்சும் இருந்தாத்தேன் வரனுமா?” என்று செல்வி கேட்க, “விஷயம் இல்லாம, கொளுந்தன் எதுக்கு வரப் போறாக?” என்ற தாமரையின் வார்த்தையில் அத்தனை சடவு தெரிந்தது.
“ஏத்தா நான்த்தேன் சொன்னேன்ல. எம் மதினி புத்திசாலின்னு. பாத்தீயா. எம்புட்டு செரியா கணிச்சிருக்குன்னு. வேற ஒன்னுமில்ல மதினி. நாளைக்கு குடும்பமா குல தெய்வ கோவில் போலாம்னு இருக்கோம். அதான் உங்க கிட்ட ஒத்த வார்த்த சொல்லிடலாம்னு வந்தோம்" என்றார் முருகேசன்.
செல்வியோ தன் கணவரைப் பார்த்து தலையிலேயே அடித்துக் கொண்டார். அதற்குள் தாமரையோ, “நீங்க குடும்பமா போறீகன்னா. போ வேண்டியதுத்தேன்னா, அத எதுக்கு இங்கன வந்து சொல்லிட்டு இருக்கீக?” என்றார்.
“என்னக்கா? இன்னும் இப்படியே பேசுனா எப்படி? ஊரு கூடி எல்லாம் பேசி முடிச்சிருக்குல்ல" என்றார் செல்வி.
“ஊர் கூடி முடிவு பண்ணிட்டா?” என்று தாமரை கோவமாய் கேட்க, “ஊர் கூடி இல்ல மதினி. நாங்களும் நின்னுத்தேன் முடிவு பண்ணோம். நீங்களும் சம்மதிச்சித்தேன் தட்ட கை நீட்டி வாங்குனீக. அண்ணனுக்குத்தேன் மறதின்னு பார்த்தா, உங்களுக்குமா? ஏத்தா செல்வி நீத்தேன், அந்த வல்லார கீரைய செத்த உன் அக்காக்கு வச்சி கொடுக்க வேண்டியதுத்தேன்ன?” என்றார் முருகேசன்.
அவரின் பேச்சில், அக்கா, தங்கை இருவருமே அவரை முறைக்க, அவரோ கொஞ்சமும் அசராமல், “நாளைக்கு கிளம்புறோம். நீங்க வந்தா, உம்மையும் சேர்த்து கூப்டு போறோம். இல்லையா, எங்க புள்ளைய நாங்க கூட்டிட்டு இப்பவே கிளம்புறோம்" என்றார்.
அதில் தாமரை ஏதோ சொல்லப் போக, “எதுக்கு? நாங்க வறோம்" என்றப்படி செந்தில் அங்கு வந்தார்.
அவருடைய பதிலில் முருகேசன் புருவம் சுழிக்க, தாமரையோ, “என்னங்க நீங்க?” என்றார்.
“வாய திறந்த அம்புட்டுத்தேன். அன்னிக்கு அத்தன பேரு முன்னாடி, அவுக கூட சேர்ந்து என் மூக்கறுத்துட்டு, இப்போ அப்படியே நடிக்கிறீயோ?” என்றார் செந்தில்.
அதில் செல்வி வேகமாய், “இப்போ என்னத்துக்கு மச்சான், என் அக்கா மேல பாயுறீக. அவெ உள்ளதத்தேன் சொன்னா” என்றார்.
அவரோ, “எதுக்கு வந்தீகள்ளோ. சொல்லிட்டீகள்ள, நாங்க வறோம். இப்போ கெளம்புங்க" என்று எங்கோ பார்த்தப்படி கூறினார் செந்தில்.
“அதெப்டிண்ணே. இந்த வூட்டுல உமக்கிருக்கிற உரிமை எனக்கும் இருக்கு. நாங்க கெளம்புவோம். இல்லன்னா, இப்படியே பாய போட்டு படுப்போம். உமக்கென்ன. வந்தா சாப்டு இடத்த காலி பண்ண வேண்டியதுத்தேன்ன. ஏத்தா செல்வி போ, போயி மதினி என்ன சாப்பாடு வச்சிருக்குன்னு பாரு. நாளைக்கு கோவிலுக்கு போறதால, கவுச்சி சேக்க கூடாது. அதத்தாண்டி வேறென்ன இருக்கோ, அத எடுத்துட்டு வா” என்று முருகேசன் சேரில் சாய்ந்தமர்ந்தப்படி தன் அண்ணனை சீண்டினார். அதில் செந்திலோ ஏதும் சொல்லாமல் அறைக்குள் சென்று விட்டார்.
தாமரைக்கோ தலைக்கு மேல் வெள்ளம் போகும் உணர்வு. அதிலும் நேற்று வரை, அந்த சம்பந்தத்தை நடத்தவே விட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், திடீரென்று இப்படி உடனே சம்மதிப்பதும் அவருக்கு குழப்பத்தைத்தான் கொடுத்தது.
செல்வியோ நிலாவிடம் சென்று, “நிலா வூட்டுல நடக்கிறதெல்லாம் உமக்கு தெரியும்த்தேன்ன? உனக்கு அதுல ஏதும் சங்கடமா?” என்று சிறு தயக்கத்தோடு கேட்டார்.
அதில் நிலாவோ, தன் சித்தியைப் பார்த்து, “எனக்கு மாமாவ பிடிக்கும் சித்தி" என்று பளீச்சென்று பதிலளித்தாள்.
அதைக் கேட்ட செல்விக்கு அத்தனை மகிழ்ச்சி. “இது போதும்த்தா. இதுக்கப்புறம், இந்த சித்திக்கு எந்த கவலையும் இல்ல. உன்னை அவென் கைக்குள்ள வச்சி என் தம்பி பாத்துப்பான்த்தா” என்று அவள் கன்னம் வருடி, அவள் நெற்றியில் முத்தமிட்டார். செல்வியின் கண்களில் ஆனந்த கண்ணீர்.
சட்டென்று அன்று கதிர் அவள் உள்ளங்கையில் கண்ணீருடன் முத்தமிட்ட காட்சி நிலாவின் சிந்தனையில் ஓடியது. பிடித்திருப்பதற்கும், கல்யாணம் செய்து வாழ்வதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அவளுக்கு யார் சொல்லி புரிய வைப்பது?.
எப்படியோ செல்விக்கு நிலாவுடைய அந்த ஒரு வார்த்தையே போதுமானதாய் இருக்க, மொத்த குடும்பமும் இப்போது குல தெய்வ கோவிலின் முன் நின்றிருந்தனர். கதிர் தன் மாமனை முறைத்துக் கொண்டிருந்தான். நிலா கதிரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
(நடக்கட்டும். நடக்கட்டும். செரி அந்த குல சாமி என்ன சொல்லப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்டல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பன்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?
Vaishnavi Arumugam
😍😍