தென்றல் – 36

நிலாவை மலர் அடித்ததாக, அவள் சக வகுப்பு மாணவி சொல்ல, “இப்போ உங்க டீச்சர் எங்க?" என்று கேட்ட கதிர் விறுவிறுவென்று ஆசிரியர்களுக்கான அறைக்கு சென்றான். நிலாவோ பயந்து அவனின் பின்னே செல்ல, அங்கே மலரும், அவளுடைய தோழியும் கிளம்பிக் கொண்டிருக்க, மீதி ஆசிரியர்கள் கிளம்பியிருந்தனர்.

கதிரைப் பார்த்த மலரின் தோழி, “மலரு அங்கப் பாரு" என்று சிறு அச்சத்துடன் சொல்ல, “என்னடி?” என்றப்படி நிமிர்ந்துப் பார்க்க, அங்கே கதிரும் அவனின் பின்னே நிலாவும் நின்றிருந்தனர்.

ஒரு நொடி அதிர்ந்தாலும், அடுத்த நொடியே எதுவுமே நடக்காதது போல், அங்கிருந்து நகரப் போக, இங்கே கதிருக்கோ கோவம் கண் மண் தெரியாமல் வந்தது. ஆனாலும் இருக்கும் இடம், அவளுடைய பதவிக்கான மரியாதை அது இரண்டும், அவனை பிடித்து வைத்திருந்தது.

“நிலா இங்கன வா” என்று அவளை கதிர் முன்னே அழைக்க, அவளோ பயத்தில் அவனின் பின்னே மறைந்தாள்.

பின்னே மறைந்தவளை தன் முன்னே இழுத்து, அவள் கையைக் காட்டி, “என்ன இதெல்லாம்?” என்றான் கதிர். அவளோ வெகு சாதாரணமாய், “ஏன் பிடிச்சிருக்கிறவுகளுக்கு அது என்னென்னு தெரியலையா?” என்று அவள் எகத்தாளம் பேச, இங்கே கதிருடைய பொறுமை காற்றில் பறந்தது.

“ஸ்கூலுன்னு பாக்குறேன். இல்லன்னா” என்று கதிர் முடிக்கும் முன்னே, “அதான் ஸ்கூலுன்னு தெரியுதுத்தேன்ன, எதுனாலும், அவளோட அம்மா, அப்பாவ வர சொல்லுங்க. நான் பேசிக்கிறேன்." என்றாள் மலர்.

“அவளுக்குன்னா, நான் தான் வருவேன். எனக்கு பதில் சொல்லித்தான் ஆகனும்" என்று கதிர் அழுத்தம் திருத்தமாய் சொல்ல, “இன்னும் நீங்க ஒன்னும் அவள கட்டிக்கலத்தான. பொறவென்ன. சட்டப்படி, திருமதி நிலாத் தென்றல் கதிர் முகிலன்னு மாறட்டும். பொறவு உங்க கேள்விக்கு பதில் சொல்றேன்" என்று சொல்லியப்படி மலர் நகர முயன்றாள்.

அவள் சொல்லியதைக் கேட்டு அதிர்ந்த நிலாவை, மேலும் அதிர செய்வது போல், “என்ன சட்டம் வேண்டி கிடக்கு? இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, என் தென்றல் மேல இன்னொரு தடம் உன் கை பட்டிச்சு. டீச்சருன்னும் பார்க்க மாட்டேன், இது ஸ்கூலுன்னும் பார்க்க மாட்டேன். எப்போ அவ எனக்குன்னு முடிவு பண்ணாங்களோ? அப்பவே அவ என் பொண்டாட்டித்தான்” என்று அழுத்தம் திருத்தமாய் உரைத்தான் கதிர்.

அதில் மலருக்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது. “அப்போ கூட்டிட்டு போயி குடும்பம் நடத்துங்க. எதுக்கு படிக்க அனுப்புறீங்க? இவ எல்லாம் பத்து மாசத்துல புள்ளைய சுமந்துட்டு நிக்கத்தான் லாய்க்கு” என்று மலர் சொல்லி முடிக்கும் முன்னே, “ஹேய்" என்று அடிக்க கை ஓங்கியிருந்தான் கதிர்.

அதில் மலர் மட்டும் அல்லாது, அவளின் தோழியும் அதிர்ந்து நிற்க, “இன்னொரு வாட்டி வார்த்த தடிச்சிச்சு. பழைய கதிர பாக்க வேண்டி வரும். ஆறு என்னென்னு பாக்க மாட்டேன். வெட்டி வீசிடுவேன். அவ படிப்பா. உன்னை விட. ஏன் இந்த ஊருல இருக்கிற அத்தனைப் பேரை விட அவ நல்லா படிப்பா. படிச்சு இந்த ஊருக்கே பெரிய அதிகாரியா வருவா. நான் வர வைப்பேன். இன்னொரு தடம். உன் கடுப்ப அவ மேல காட்டுன, மனுஷனா இருக்க மாட்டேன். பாக்குற வேலைக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ. இல்ல அசிங்கப்பட்டு போயிடுவ" என்று விரல் நீட்டி எச்சரித்தவன், நிலாவின் கரத்தைப் பிடித்து அங்கிருந்து அழைத்து சென்றிருந்தான்.

நிலாவுக்கோ அவன் சொல்லியதை புரிந்துக் கொள்ளவே சில நிமிடங்களுக்கு மேல் தேவைப்பட்டது. ஆனால் அதற்குள்ளே, அவளை தன்னுடைய பைக்கில் ஏற்றிக் கொண்டு, பள்ளியை விட்டு கிளம்பியிருந்தான்.

அதை எல்லாம் சற்று தள்ளி நின்று பார்த்த கங்காவோ, “ம் பரவாயில்ல அண்னனுக்கு, அக்கா மவ மேல பாசத்த தாண்டி, கட்டிக்கப் போற பொண்ணுன்ற நினப்பும் இருக்கு போலையே. இந்த மலருக்கு இன்னும் வேணும்" என்று தனக்குள் சொல்லியப்படி, தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.

இங்கே நிலாவோ உறைந்துப் போய் அமர்ந்திருக்க, அவள் கைப் பிடியையும் பிடிக்கவில்லை. அவனையும் பிடிக்கவில்லை. அவனுக்கோ கோவம் இறங்க மறுக்க, முழு வேகத்தில் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான். 

பள்ளத்தில், பைக் ஒரு குலுங்கு குலுங்க, “மாமா” என்றப்படி அவனின் சட்டையைப் பயந்து பிடித்தாள் நிலா. அதில் சட்டென்று வண்டியின் வேகத்தை குறைத்தவன், நேரே அவனுடைய தோட்டத்து வீட்டுக்குத்தான் பைக்கை விட்டான். மாலை நேரம் என்பதால், அங்கு யாரும் இல்லை.

பைக்கை நிறுத்தி விட்டு, அவளை இறங்க சொல்லி, அழைத்து சென்று, அங்கிருந்த திண்ணையில் அமர்த்தினான். அவளுக்கோ, இன்னமுமே அவன் சொல்லிய, “என் பொண்டாட்டி" என்ற வார்த்தையில் இருந்து வெளியில் வர முடியவில்லை.

பெரிதாய் விவரம் தெரியாவிட்டாலும், கல்யாணம், பொண்டாட்டி என்றால் என்ன என்று கூட தெரியாத அளவுக்கு அறிவில்லாதவள் இல்லையே. பாண்டியிடனும், இது போன்ற பேச்சு சென்றிருக்க, அவளுக்கோ இப்போது கண்ணக் கட்டியது.

அவளை வெளியில் விட்டு விட்டு, வீட்டுக்குள் சென்று தேங்காய் எண்ணெய்யையையும் கோழி முடியையும் எடுத்துக் கொண்டு வந்தான். அவளோ சிலையாய் அப்படியே அமர்ந்திருக்க, அவளின் அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.

ஏதோ ஒரு வேகத்தில், மலரிடம் பேசிவிட்டான் தான். அதற்காக, நிலாவை தன்னுடைய மனைவியாய் பார்க்க ஆரம்பித்து விட்டான் என்றெல்லாம் இல்லை. இப்போதும், அவனுக்கு அவனுடைய அக்கா மகள் சிறுமி தான். அந்த நினைவில் தான் சற்றும் யோசிக்காமல், அங்கே அழைத்து வந்திருந்தான்.

இப்போது மெல்ல அவள் கரத்தைப் பற்ற, அப்போதே இவ்வுலகம் வந்து சேர்ந்தாள் நிலா. அவனோ, அவள் முகத்தைப் பார்க்காமல், அவளுடைய உள்ளங்கைக்கு மருந்திட ஆரம்பித்தான்.

உள்ளங்கை பூ போல் அத்தனை மெதுவாய் இருக்க, அதில், அந்த தடம் அத்தனை பளிச்சென்று தெரிந்தது. ஏனோ அவளின் காயம், இவனுக்கு வலியைக் கொடுத்தது. அவளுக்கோ இப்போது வலி சுத்தமாய் தெரியவில்லை. அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்றொரு நாள், பாதி வழியில் மறித்து வண்டிய நிறுத்திய கதிரை நினைத்துப் பார்த்தாள்.

வீட்டில் பாண்டியுடனான திருமண பேச்சு சென்றுக் கொண்டிருக்க, செந்திலோ அவளை படிக்கவே வேண்டாம் என்று முடிவாய் சொல்லியிருந்தார்.

அந்த யோசனையில் வந்துக் கொண்டிருக்கும் போது, எதிரே கதிரைப் பார்க்க, அவனோ, “உன்கிட்ட பேசனும்" என்றிருந்தான்.

அதில் அவள் மிரண்டு விழிக்க, “வா” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு, சற்று தள்ளி ஒரு மரத்தடிக்கு சென்றான்.

அவளோ அமைதியாய் நிற்க, “கல்யாணம் பண்ணிக்கிறீயா?” என்று கேட்டான் கதிர். அவனின் கேள்வியில் அதிர்ந்து, “என்ன?” என்றாள். பின்னே வீட்டிலும் அதையே கேட்டிருக்க, இப்போது இவனும் இப்படி கேட்கவும், அவளுக்கு கண்ணீர் தான் வந்தது.

அதில் கடுப்பானவன், “ச் கேட்டா, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்" என்று அழுத்திக் கேட்க, “ம்ஹூம்" என்று தலையாட்டினாள்.

அப்போதே அவனுடைய முகத்தில் இருந்த இறுக்கம் குறைந்தது. அதில், சற்று இளகியவன், “படிக்கிறீயா?” என்று கேட்டான்.

“ம்" என்று அவள் வேகமாய் தலையாட்ட, “உனக்கு படிக்க பிடிக்கும் தான?” என்று கேட்டான் கதிர்.

“ம் பிடிக்கும். ஆனா வூட்டுல" என்றவளுக்கு கண்ணீர் வந்து விட, “ச் வூட்டுல என்ன வேணா நடக்கட்டும். உனக்கு படிக்கனும்னு தான ஆசை?” என்றான் கதிர்.

“ம்" என்று அவள் தலையாட்ட, “செரி நீ போ. நீ படிக்கிறத ஆறும் தடுக்க மாட்டாங்க. நீ எத பத்தியும் யோசிக்காம, நல்லா படிக்கனும்" என்றான் கதிர்.

“ம்" என்று அவள் அதற்கும் தலையாட்ட, “அப்புறம் இப்படி அழக் கூடாது. உனக்கு பிடிக்கல, வேணான்னா, தைரியமா அத சொல்லனும்” என்றான்.

அதற்கும் அவள் தலையாட்ட, “அந்த பாண்டி பையன் உன் கிட்ட ஏதாச்சும் வம்பு பண்ணான்னா?” என்று கதிர் கேட்க, அவளுக்கோ பயத்தில் உடல் நடுங்கியது. அதைக் கவனித்தவன், “இனிமே அவன் உன் முன்னாடியே வர மாட்டன். நான் பாத்துக்கிறேன். நீ வெசனப்படாம வூட்டுக்கு போ” என்றிருந்தான் கதிர்.

அதன் பின் கதிரும் அவள் கண்ணில் படவில்லை. பாண்டியும் அவளின் முன் வந்திருக்கவில்லை. ஆனால் செந்தில் மட்டுமே பாண்டியுடனான திருமணத்தை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். இந்த இரண்டு வாரமாய், அந்த விஷயமும் நின்றிருக்க, அவளோ வேறு எதையும் யோசிக்கவில்லை. ஒரு வாரமாய், மலர் இவளை திட்டி தீர்க்க, அவளுடைய கவனம் மொத்தமும் மலரிடமே இருக்க, இவளை சுற்றி நடக்கும் எதுவும் மூளையில் பதிந்திருக்கவில்லை.

ஆனால் இப்போது கதிரையே பார்த்திருந்தவள், “நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா மாமா? நான் உங்க பொண்டாட்டியா?” என்று கேட்டாள்.

அதில் சட்டென்று அவள் கரத்தை விடுவித்தவனுக்கு, அப்போதே மலரிடம் பேசியதெல்லாம் நினைவில் வந்தது. “ச் சின்ன புள்ள முன்னாடி என்னத்தடா பேசிட்டு வந்திருக்க" என்று தன்னைத் தானே நொந்தவனுக்கு, அவளுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்ல என்றே தெரியவில்லை.

அவள் முகம் பார்க்க முடியாமல் அவன் தடுமாற, அவளோ அவனையே தான் அசையாது பார்த்திருந்தாள். சில நிமிடங்களில் தன்னைத் தேற்றிக் கொண்டவன், அவளைப் பார்த்து, “இங்கப்பாரு அன்னிக்கு சொன்னது தான். உனக்கு பிடிக்காத விஷயம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு நீ படிக்கிறத மட்டும் யோசி. இனிமேல் மலர் உன்னை திட்ட மாட்டா” என்றான்.

அவளோ, “எனக்கு பிடிச்சிருக்கு" என்று பட்டென்று நிலா சொல்ல, இங்கே கதிருடைய இதயம் ஒரு நொடி துடிக்க மறந்து நின்றது.

அவன் அவளையே பார்த்திருக்க, “எனக்கு பாண்டியத்தான் பிடிக்கல. உங்கள எனக்கு பிடிக்கும்" என்று அடுத்த வார்த்தையை அசராமல் சொல்லியிருந்தாள்.

தன் அக்கா மகளுக்கு பேச தெரியும் என்றே அவனுக்கு தெரியாது. அப்படி இருக்க, இப்படி கண்ணைப் பார்த்து பேசுபவளை, இமைக்க மறந்து பார்த்தான் கதிர்.

அவளோ அதோடு விடாமல், “நான் உங்கள கட்டிக்கிட்டா, எங்கம்மா உங்கள வையாதுத்தான? அப்போ நான் கட்டிக்கிறேன்” என்றிருந்தாள். அதில் அவனுக்கு சட்டென்று கண் கலங்கிவிட, அந்த நொடி, நிலா அவனை விட பெரியவளாய் தெரிந்தாள். அவனையும் மீறி, அவள் உள்ளங்கையை அழுந்தப் பற்றினான்.

அதில் அவன் விரல் பட்டு, அவள் காயம் வலியைக் கொடுக்க, “ஸ்" என்றாள் நிலா. அதில் பிடித்திருந்த கரத்தில் மெதுவாய் மீசை முடி உரச முத்தமிட்டான். அதில் அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் அவள் உள்ளங்கைக்குள் பதிந்தது.

சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டவன், தன் கரத்தை விலக்கப் போக, அவன் கரத்தை பற்றி அவன் உள்ளங்கையில் இருந்த தழும்பில் இதழ் பதித்தாள் நிலா. அதில் அவனுடைய மனமோ, “சின்ன புள்ளடா” என்று எடுத்துரைத்தது.

ஆனால் அவளுக்கோ, அந்த முத்தத்தில் பெரிதாய் ஏதும் தோன்றவில்லை. செல்வியும் அடிக்கடி கன்னம் கிள்ளி முத்தமிட்டிருக்க, அவளும் செல்விக்கு திருப்பி முத்தம் கொடுத்திருக்க, இப்போதும் அவன் கொடுக்கவும், அவளும் அதை திருப்பிக் கொடுத்திருக்க அந்த நொடி அவள் சிறு பெண் தான் என்று நிரூபித்திருந்தாள்.

(சின்னப்புள்ள, சின்னப்புள்ளன்னு கொஞ்சம் எல்லை மீறி போறீங்க. சரி இது எங்க போய் முடிய போதோ? அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, நம்ம நிலாவ பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல ரேட்டிங் கொடுத்துட்டு, உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   1

*** தென்றல் – 36 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***