தென்றல் – 34

ஒற்றை ஆளாய் நின்று, ஊர் முன்னிலையில், கதிருக்கும், நிலாவுக்கும் சம்பந்தம் பேசி முடித்திருந்தார் முருகேசன். இப்போது வரை வீட்டில் இருப்பவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. வெத்திலை பாக்கு மாற்றிய கையோடு செல்வியின் கையில் பூவை கொடுத்து, “போத்தா. போயி பொண்னு தலையில இந்த பூவ வச்சி விடு" என்றனர்.

அவருக்கோ என்ன நடக்கிறது இங்கே? இது சரியா? தவறா? இப்படி எதுவுமே புரியாமல் தயங்கி தன் அக்காவைத்தான் பார்த்தார்.

“பார்க்குறேண்டி, எந்த கேன சிறுக்கி, அவெனுக்கு பொண்ணுக் கொடுக்கிறான்னு" என்று தாமரை பேசிய வார்த்தைகள், இப்போதும் செல்வியின் செவியில் ஓடியது. அங்கே தாமரைக்கோ கண் முன்னே நடப்பதை தடுக்க முடியாத நிலை. செந்திலுக்கோ சொல்லவே வேண்டாம். 

பெற்றவர்கள் கடுகடுவென்று நின்றிருக்க, அவர்களைக் கடந்து செல்லவே செல்விக்கு அத்தனை யோசனையாய் இருந்தது. அதற்குள் முருகேசன் தான், “போ செல்வி. போயி புள்ளைக்கு வச்சி விடு. இனி அவ நம்ம வூட்டு புள்ள” என்று செந்திலுக்கு கேட்கும் படி சற்று சத்தமாய் கூறினார்.

அதில் செந்தில் பல்லைக் கடிக்க, அங்கே நிலாவுக்கோ, வெளியில் நடந்த கலவரம் எதுவுமே தெரியவில்லை. அமைதியாய் அறைக்குள் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தாள்.

செல்வி உள்ளே செல்ல, அவளுடன் சேர்ந்து இன்னும் சில உறவுக்கார பெண்களும் வீட்டுக்குள் நுழைய தாமரை அப்படியே சுவரில் சாய்ந்து நின்றுவிட்டார்.

அங்கே சந்தோஷமான மன நிலையில் இருந்தது என்னவோ சங்கரேஸ்வரி மட்டும் தான். “ஆத்தா நான் நினைச்ச மாதிரியே நீ நடத்திக் காட்டிட்ட. அப்படியே இந்த கன்னாலத்தையும் எந்த குறையும் இல்லாம நடத்திக் கொடுத்துடுத்தா. இந்த ஊரு திருவிழால, உனக்கு பொங்கல் வச்சி. உன் கைக்கு தங்க காப்பு பண்ணிப் போடுறேன்த்தா” என்று அவசர நேர்ச்சை ஒன்றையும் வைத்திருந்தார்.

செல்வியைப் பார்த்த நிலா, “சித்தி" என்று அழைக்க, அதற்குள் அவருடன் வந்த மற்றவர்களைப் பார்த்து அப்படியே அமைதியாகியிருந்தாள்.

“பாருடி. அங்க இவ ஒருத்திக்காக, மொத்த ஊரும் பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்காக, இவ என்னென்னா, இப்பத்தே பரீட்சைக்கு உட்கார்ந்து படிக்கிறதுக்கணக்கா படிச்சிட்டு இருக்கா” என்று கேலி முறையில் உள்ள பெண் கிண்டல் செய்தாள்.

“பின்ன உம்ம கணக்காவா, பாதியில படிக்க மாட்டேன், இப்பவே கன்னாலம் பண்ணி வைன்னு சொல்லித் திரிய” என்று இன்னொருவள் அவளை சாடினாள்.

“ஏன் மச்சான் மாதிரி ஒருத்தர கட்டிக்க என்ன கசக்கவா செய்யும்” என்று இன்னொருவள் சொல்ல, “அடியே, உமக்கு கல்யாணம் ஆயிருச்சிடி அது நினப்புல இருக்கட்டும். அதுலையும் இப்போ அவென்னையும் கட்டிக்க பொண்ணு வந்திருச்சி. இனி உங்க பருப்பெல்லாம், அங்க அவியாது" என்று இன்னொருவர் கூறினார்.

இப்படி அத்தனைப் பேரும் ஏதேதோ பேச நிலாவுக்கோ எதுவுமே புரியவில்லை. அவள் செல்வியைத்தான் கேள்வியாய் பார்த்தாள். அவரோ, கையில் புத்தகத்துடன் நின்றிருப்பவளை வாஞ்சையாக பார்த்தார். ஏனோ இப்போதும் அவர் கண்ணுக்கு, தன் அக்கா மகள் பால் முகம் மாறாத மழலையாய் தான் தெரிந்தாள்.

அதில் அவள் அப்படியே நின்றிருக்க, “உம்ம அக்கா மவள, வூட்டுக்கு கூட்டிட்டு போயி கூட ரசிங்க. இப்போ அந்த பூவ அவ தலையில வச்சி விடுங்க” என்று ஒருவள் அவர் தோளில் இடித்தாள்.

அதில் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவர், தன் தங்கை முறையில் இருந்த ஒருவளை அழைத்து, “நீயே வச்சி விடு" என்று தயங்கி நின்றார்.

அவர் தயக்கத்தைப் பார்த்த மற்றவர்களோ, “ஏத்தா நீ எதுக்கு கலங்குறேன்னு தெரியுது. ஆனா, அந்த புள்ளைக்கும், உன் தம்பிக்கும் நீத்தேன் பெத்த ஆத்தாவா இருந்து வளத்தேன்னு, இந்த ஊர் மொத்தத்துக்கும் தெரியும். நீ உன் கைனால வைத்தா. அந்தப் புள்ள நல்லா இருக்கும்" என்று சங்கரேஸ்வரி கண் கலங்கியப்படி கூறினார்.

அதில் அவருக்கும் கண் கலங்கி விட, மற்றவர்களைப் பார்க்க, அவர்களுமே அதைத்தான் கூறினர். நிலாவோ, “சித்தி” என்று அவள் கரத்தைப் பிடித்தாள்.

அவளுடைய பரிஷத்தில் நிதானத்து வந்தவர், அங்கிருந்த மீனாட்சி அம்மனின் புகைப்படத்தையும், தெய்வமாகிப் போன தன் அன்னையுடைய புகைப்படத்தையும் பார்த்து, மனதார, “இதுத்தேன் நீ போட்ட முடிச்சு அப்படின்னா, அதுல நாங்க செய்றதுக்கு என்ன இருக்கு? என் தம்பியும், எம் புள்ளையும் நல்லப்படியா, இந்த ஊர் மெச்ச, குழந்தை குட்டின்னு சந்தோஷமா வாழனும்" என்று நினைத்தப்படி நிலாவின் தலையில் அந்த பூவை வைத்து விட்டார் செல்வி. நிலாவோ அறியா பிள்ளையாய், தன் தலையில் இருந்த பூவையும், தன்னருகே கண் கலங்கி நின்றிருந்த செல்வியையும், தன் முன்னே இருந்த கண்ணாடியில் பார்த்தாள்.

வந்த வேலை முடிந்தது என்று ஊர் மொத்தமும் கிளம்பியிருக்க, தன் தம்பியை முறைத்தார் செந்தில். அவரோ கொஞ்சமும் அசராமல், “எண்னண்ணே, நீ நினைச்ச மாதிரியே எல்லாத்தையும் நடத்திக் கொடுத்துட்டேன்னா. இனிமேல் நீ உம்ம வேலைய போய் தாராளமா பாக்கலாம். அப்புறம் சும்மா பேச்சு வார்த்தத்தானன்னு நீயா, ஏதும் வேலை பாக்க நினைக்காத. ஊர் மொத்தமும் நின்னுருக்கு. புரியும்னு நினைக்கிறேன்" என்று மீசையை நீவியப்படி, கட்டியிருந்த வேஷ்டியை மடித்துக் கட்டியப்படி அங்கிருந்து சென்றார் முருகேசன். நிலாவோ அன்று பள்ளிக்கு செல்லவில்லை. செந்தில் கோவமாய் அங்கிருந்து வெளியில் சென்று விட்டார். தாமரையோ திண்ணையில் அமர்ந்தவர் தான் எழ கூட இல்லை.

பெரிய வீட்டில், மகிழ்ச்சியா? இல்லை நிம்மதியா என்று புரியாத உணர்வு. அனைவரும் வீடு வந்திருந்தனர். முருகேசன் இப்போதும் செல்வியின் கண்ணில் படாமல் சென்றிருந்தார்.

இங்கே செல்வியிடம் இருந்து தப்பித்த முருகேசனை, கதிர் மடக்கிப் பிடித்து தோட்டத்தில் நிறுத்தியிருந்தான். அவனுக்கு இப்போது தான், நிலாவின் வீட்டில் நடந்த விஷயமே தெரியும்.

“என்ன மாப்புள? போன வேலை எல்லாம் நல்லப்படியா முடிஞ்சிதா?” என்று எதுவுமே நடக்காதது போல் கேட்டார் முருகேசன்.

அவரின் கேள்வியில், “நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்? நீங்க என்னப் பண்ணிட்டு வந்திருக்கீங்க?” என்று கோவமாக கத்தினான் கதிர்.

அவரோ, காதைக் குடைந்தப்படி, “என்ன மாப்புள? நீ சொன்ன மாதிரித்தேன்ன பண்ணேன்” என்றார் முருகேசன்.

“எது இத நான் பண்ண சொன்னேன்னா?” என்று கோவத்தை இழுத்துப் பிடித்து வார்த்தைகளை கடித்து துப்பினான் கதிர்.

“ஆமா நீ தான ஊர் காரகள எல்லாம் கூட்டிட்டு தாமரை வூட்டுக்கு போக சொன்ன. நானும் அதத்தான் பண்ணேன்" என்று முருகேசன் சொல்ல, “யோவ்" என்று அவரின் சட்டையையே பிடித்திருந்தான் கதிர்.

“என்ன மாப்புள பொசுக்குன்னு மாமா சட்டைய புடிச்சிட்ட. ஆறாச்சும் பாத்தா என்ன நினைப்பாக?” என்று முருகேசன் சாதாரணமாய் கேட்க, “வேணாம்யா. அக்கா புருஷன்னு கூட பாக்க மாட்டேன். நான் என்னத்த சொல்லிட்டு போனா? நீ என்னய்யா பண்ணி வச்சிருக்க?” என்ற கதிருக்கு, இப்போது மரியாதை எல்லாம் பாதி தூரம் சென்றிருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு வரை கதிர், முருகேசனை அப்படித்தான் கூப்பிடுவான். பின் சில பல காரணங்களால் அதை மாத்தி மரியாதையாய் அழைத்து வந்தான்.

இப்போது மீண்டும் அவன் தன்னை அப்படி அழைக்கவும், அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. “எத்தன வருஷம் ஆச்சு மாப்புள, நீ என்ன இப்படி கூப்டு. எல்லாம் எம் மக உனக்கு பொண்டாட்டி ஆகப் போற நேரம்" என்று சீண்டலாய் கூறினார் முருகேசன்.

அதில் அவர் சட்டையை விட்டவன், “என்ன பண்ணி வச்சிருக்க மாமா?” என்று ஆதங்கமாய் கேட்டான்.

“இப்போ என்னாச்சுன்னு, இப்போ இந்த குதி குதிச்சிட்டு இருக்க. நீ தான சொன்ன. நாங்க எந்த பொண்ண பாத்தாலும் கட்டிக்கிறேன்னு. இப்போ என்ன? என் மகள உனக்கு பார்த்திருக்கேன். கட்டிக்கோ” என்று அசராமல் கூறினார் முருகேசன்.

“யோசனையோடத்தான் பேசுறீகளா? அவ பச்ச புள்ள. அவள. அதுவும் போக, நான் உங்கள எதுக்கு அங்க போ சொன்னேன். இப்போ அந்த பாண்டி நாயிக்கும், எனக்கும் என்ன வித்தியாசம்?” என்று கோவமாய் கேட்டான் கதிர்.

உண்மையில் கதிர், முருகேசனை அங்கு அனுப்பியதற்கு காரணமே, இன்று பாண்டி, நிலாவை பெண் கேட்டு வரப் போவதாக இருந்தது. அதை தடுக்கவும், அவள் படிப்பை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான். ஆனால் இவரோ தனக்கும், அவளுக்கும் திருமணம் பேசி விட்டு வந்திருக்க, அவனுக்கு அத்தனைக் கோவம்.

ஏற்கனவே தாமரைக்கும், அவனுக்கும் ஏழாம் பொருத்தம். அவரே வந்து அவனிடம் பேசியது, இந்த பாண்டி பிரச்சனைக்காகத்தான். இப்போது முருகேசன், செய்து வைத்த காரியத்தால், இருவருக்குமான பகை இன்னமும் அதிகமானது தான் மிச்சம். அதை எல்லாம் தாண்டி, நிலாவை அவன் இப்போது வரை சிறு பெண்ணாய் தான் பார்க்கிறான். அவளை எப்படி தன் மனைவியாய் பார்ப்பது? அப்படி அவன் கனவில் கூட சிந்தித்தது இல்லையே.

“இங்கப்பாரு மாப்புள. உனக்கு கோவம் இருந்தா, என்ன ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ. ஆனா கண்ட நாய் கூட எல்லாம் உன்னை சேர்த்து பேசாத. நீ என்ன நினைச்ச? இன்னிக்கு அந்த பாண்டி சம்பந்தத்த தட்டி விட்டுட்டா, அடுத்து அவன் அப்படியே போயிடுவான்னா? தினமும், நம்ம நிலா புள்ள கிட்ட வம்பிழுத்துக்கிட்டேத்தான் இருப்பான். அதுலையும் என் அண்ணா இருக்கான்னே. முழுசா கிறுக்குப் பிடிச்சு திரியிறான். நீயும், நானும் ஊருல இல்லாத சமயம், அந்த புள்ளைய, அந்த நாயிக்கு கல்யாணம் கூட பண்ணி வச்சிடுவான். அந்தப் புள்ள நிம்மதியா இருக்க வேண்டாமா? அதெல்லாத்தையும் யோசித்தான் நான் இப்படி பண்ணேன்" என்றார் முருகேசன்.

“அவென் அப்படி பண்றதெல்லாம் பாத்துட்டு, நான் என்ன சும்மா இருப்பேன்னா? அவன் தட்ட தூக்கிட்டு, என் அக்கா வூட்டு முன்னாடி வரனும்னு யோசிச்சதுக்கே அவ கழுத்தறுத்திருப்பேன். இப்பவும், என் கையில அதே பலம் இருக்கு. எப்போவோ சாக வேண்டியவன். இப்போ செத்துட்டு போறான். அவெனுக்கெல்லாம் பயந்து, நீங்க இத பண்ணீகளா?” என்று கோவத்தில் கத்தினான். நீண்ட வருடங்களுக்கு பின், அந்த கோவக்கார பழைய கதிரைப் பார்த்தார் முருகேசன்.

“ஆமாடா. நீ அவென்ன வெட்டிட்டு ஜெயிலுக்கு போயிடு. மொத்த குடும்பமும் மேல போய் சேரட்டும். இப்படி எல்லாம் நீ கிறுத்தனம் பண்ணுவேன்னு யோசிச்சித்தான் இப்படி பண்ணேன்" என்றார் முருகேசன்.

“அதுக்குன்னு, படிக்கிற புள்ளைக்கு கன்னாலம் முடிவு பண்ணிட்டு வருவீகளா?” என்று கதிர் கோவமாய் கத்த, “இப்பவே ஒன்னும் கல்யாணம் வைக்கிறோம்னு சொல்லலையே. ஒரு வருஷம் கழிச்சுத்தான” என்றார் முருகேசன்.

“யோவ் மாமா. உனக்கு புரியுதா? இல்லையாயா? அவ பச்ச புள்ள" என்றான் கதிர்.

“அதான்ல நானும் சொல்றேன் அவ பச்ச புள்ள. அவள உம்ம தவிர வேற யாரும் பச்ச புள்ளையா பார்க்க மாட்டாய்ங்க. உன்னால மட்டும்ந்தேன் எம்புள்ளைய பத்திரமா பாத்துக்க முடியும்னு நான் நம்புறேன். ஏன் நீ எம் புள்ளைய பத்திரமா பாத்துக்க மாட்டீயா? நீ என்ன அம்புட்டு மோசமானவனா?” என்று அவனை அவன் வழியிலேயே மடக்கியிருந்தார் முருகேசன்.

(யோவ் முருகேசா. உமக்கு நான் பேன் ஆயிட்டேன்யா. நீத்தேன் இவுக எல்லாருக்கும் சரி. செரி. அடுத்து என்னத்தேன் நடக்கப் போது. நம்ம நிலாக்கு முதல்ல இது புரியுமா? கல்யாண கனவெல்லாம் வருமா? வராதான்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு நம்ம முருகேசன்ன பத்தி நாலு வார்த்த சொல்லிட்டு போங்க. அப்படியே எப்பவும் போல உங்க ரேட்டிங்க கொடுத்துட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணிக்கோங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   0

*** தென்றல் – 34 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***