ஊர் மொத்தமும் தாமரை வீட்டின் முன் அமர்ந்து, அவரவர் கருத்தை சொல்லிக் கொண்டிருக்க, கொஞ்சம் விட்டால், இப்போதே கதிரை அழைத்து வந்து, நிலாவின் கழுத்தில் தாலி கட்டி விடுவது போல் நிலைமை சென்றுக் கொண்டிருந்தது.
அதில் மொத்த கூட்டத்தையும் கலைப்பது போல், “இன்னும் புள்ளைய பெத்தவக உசுரோடத்தான் இருக்கோம். ஏங்க, இப்போ நீங்க பேசப் போறீகளா? இல்ல நானே பேசட்டுமா?” என்று தாமரை சற்று கோவமாக கணவரைப் பார்த்துக் கேட்டார்.
அதில் சட்டென்று அந்த இடத்தில் ஒரு வித இறுக்கம் கூடியது. செல்வியோ, தன் கணவரை மட்டுமே முறைத்தாள். பின்னே, அவன் தானே இது அத்தனைக்கும் காரணம். தன் அக்காவின் குணம் அறிந்தும், இங்கு கூட்டி வந்திருப்பவனை, திட்டக் கூட முடியவில்லை அவருக்கு.
“ஏத்தா, செத்த பொறு. அதான் ஆம்புளையாளுங்க பேசிட்டு இருக்காகுகள. இப்படி நீ ஊடால பேசுனா, அப்புறம் வூட்டு ஆம்பளைங்களுக்கு என்ன மருவாத இருக்கு?” என்று ஒருவர் குரல் கொடுத்தார்.
“ஆமா மருவாத ஒன்னுத்தான் இப்போ குறைச்சல்" என்ற தாமரை முகத்தை திருப்ப, “அடியே செத்த கம்முன்னு இரு. நான் தான் பேசிட்டு இருக்கேன்ல?" என்றார் செந்தில்.
பின்னே இப்போது சபையில் அவரை பேசவிட்டால், அவருடைய ஆண் கெளரவம் சண்டைக்கு வந்து விடுமே. அதனால் தன் மனைவியை அடக்கிவிட்டு சபையினரைப் பார்த்து, “ஊர் காரக எல்லாரும் என்னை மன்னிச்சிக்கோங்க. எமக்கு இந்த சம்பந்தத்துல விருப்பம் இல்ல" என்று சொல்லிவிட்டு எழுந்தார் செந்தில்.
அதில் அத்தனைப் பேரும் ஒருவரை ஒருவர் பார்க்க, “அதெப்டியா முடியாதுன்னு சொல்ல முடியும்?” என்று ஒருவர் கேட்டார்.
“அவ எம் புள்ள. அவளுக்கு எப்போ, என்ன நல்லது பண்ணனும்னு எனக்கு தெரியும். இதுல வேற ஆறும் தலையிட வேணாம். கிளம்புங்க" என்று செந்தில் கூறினார்.
“இப்படி எடுத்தோம், கவுத்தோம்னு சொன்னா எப்படி? நிலா உங்க புள்ளையா இருக்கலாம். ஆனா, அந்த புள்ள மேல எல்லா உரிமையும் மாமனுக்கு இருக்கு. மாமன் சம்மதம் இல்லாம, உங்க பொண்ணுக்கு வேற இடத்துல சம்பந்தம் பண்ணி கொடுத்துடுவீகளா?” என்றார் இன்னொருவர்.
அதற்கு செந்தில் மறுத்து ஏதோ பேசப் போக, மீண்டும் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சங்கரேயனுக்கோ, இப்படி தன் மகள் வீட்டின் முன் கூட்டத்தை கூட்டி அவமானப்பட கொஞ்சமும் விருப்பம் இல்லை. அதில் அவர் இருக்கையை விட்டு எழ சென்றார்.
அதற்குள் முருகேசன் தான், “செத்த பொறுங்க மாமா” என்று அவரை எழ விடாமல் மீண்டும் அமர்த்தி விட்டு, இருக்கையில் இருந்து எழுந்தான்.
அதில் இப்போது, மொத்தப் பேரும் முருகேசனைப் பார்க்க, “எண்ணே, ஒரு பொண்ணுக்கு அப்பாவா நீ உன் முடிவ சொல்லிட்ட, இப்போ நான் சொல்றேன். எங்க புள்ள நிலாவ, நான் என் மாப்பிள்ள கதிருக்குத்தேன் கல்யாணம் பண்ணி வைப்பேன். உன்னால என்ன பண்ணிட முடியும்?” என்று அழுத்தம் திருத்தமாக கேட்டார்.
“டேய் அண்ணன் தம்பி உறவே முறிஞ்சுப் போச்சு, அப்படி இருக்கிறப்ப, நீ என்னல்ல? எம்புள்ள மேல உரிமை கொண்டாடுறது?” என்று கோவமாய் கேட்டார் செந்தில்.
“அண்ணன், தம்பி உரிமையில ஒன்னும், உங்க வாலை பிடிச்சிட்டு நான் நிக்கல. நிலா எங்க புள்ள. அத நான் இல்ல. நீயும், மதினியும் தான் குல தெய்வ கோவில்ல வச்சி, எம்ம கிட்ட சொன்னீங்க. அன்னியில இருந்து, இன்னி நாள் வரைக்கும், நானும் என் பொஞ்சாதியும் நிலாவ எங்க புள்ளையாத்தான் பாக்கோம். பேச்சு வார்த்தைக்கு சொன்னதெல்லாம் சபைக்கு ஆகாதுன்னு நீ சொன்னா. அன்னிக்கு ஊர் மொத்தமும் கூடியிருந்த கோவில்ல, சாமிய சாட்சியா வச்சு நீங்க சொன்னது சும்மா பேச்சுக்குன்னு, இப்போ, இன்னிக்கு இந்த சபையில எல்லார் முன்னாடியும், நீயும் மதினியும் சொல்லுங்க. இதுக்கப்புறம் நானும், என் பொஞ்சாதியும் இதுல கலந்துக்காம விலகிக்கிறோம்" என்றார் முருகேசன்.
அதில் செந்தில் தடுமாற, தாமரைக்கோ அன்றைய நினைவில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அதெப்டி தாமரையால் சொல்ல முடியும்? அன்று செல்வி மட்டும் தன்னுடைய கருவை பெரிதுப்படுத்தாமல், நிலாவை காப்பாற்றாமல் இருந்திருந்தால், இப்போது நிலா உயிருடன் இருக்க மாட்டாளே. அதனால் தானே செல்வியுடைய குழந்தை கலைந்து, இப்படி அத்தனைப் பேரிடமும் மலடி என்ற பட்டத்தை வாங்கிக் கொண்டு நிற்கிறாள்.
அங்கு இருந்த அனைவருக்குமே எட்டு வருடங்களுக்கு முன் நடந்த காட்சிகள் நிழல்படமாய் இப்போது ஓடியது.
செல்விக்கும், முருகேசனுக்கும் திருமணமாகி ஒரு வருடம் இருக்கும். செல்வி கர்ப்பமாக இருக்கிறாள் என்ற விசயம் அறிந்து, ஊருக்கே விழா எடுக்க முடிவெடுத்திருந்தார் சங்கரேயன். அதனால் கோவில் குல தெய்வ கோவிலில் பொங்கல் வைத்து, விருந்து ஏற்பாடு செய்திருக்க, அப்போது அங்கே பத்து வயது சிறுமி நிலா ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது கரு நாகம் ஒன்று அவளை தீண்டி விட, சில நிமிடத்தில், விஷம் ஏறி மயங்கி விழுந்திருந்தாள் நிலா. குல தெய்வ கோவில் இருந்ததோ நடு காட்டுக்குள். எப்படியும் அங்கிருந்து மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் உயிரே போய் விடும் என்ற நிலைத்தான்.
கடித்த பாம்பும் கடும் விஷம் என்று அத்தனைப் பேரும் விஷத்தை எடுக்க தயாராக இல்லை. அதில் சற்றும் யோசிக்காமல், செல்வி முன்னேற ஊர் மொத்தமும் அவளை தடுத்தது. ஏன் தாமரையே வேண்டாம் என்று கதறி அழுதார். முருகேசனும், செந்திலும், அங்கு இருந்திருக்கவில்லை.
“கர்ப்பமா இருக்கிற புள்ள, இப்படி விஷத்த உறிஞ்சு எடுத்தா, உன் உசுரு மட்டும் இல்ல தாயி கருவுல இருக்கிற புள்ளைக்கும் ஆவாது” என்று பெரியவர்களும் தடுக்கத்தான் செய்தனர். அவளுக்கோ கண் முன்னே, மயங்கி கிடந்த நிலா மட்டுமே பெரிதாய் தெரிய, தன் குழந்தையைக் கூட தூர தூக்கிப் போட்டு விட்டு, நிலாவின் காலில் இருந்த விஷத்தை அவர் எடுக்க, கடைசியில், நிலா பிழைத்து விட்டாள். ஆனால் செல்வியின் கருவில் இருந்த குழந்தைக்கு மட்டும் அல்ல, அவளுடைய கர்ப்ப பையிலும் விஷம் பரவியிருக்க, முழுதாய் ஒரு மாதம் கழித்து தான் செல்வி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தார்.
“தெரிஞ்சே இப்படி உன் வாழ்க்கைய கெடுத்துக்கிட்டீயேடி” என்று தாமரை சொல்லி அழ, செந்திலுக்கும் தன் தம்பியின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த நேரத்திலும் முருகேசன் மட்டுமே, “இப்போ என்னாயிடுச்சி. என் பொஞ்சாதி இடத்துல நான் இருந்தாலும் அதத்தேன் பண்ணியிருப்பேன். எங்களுக்கு நிலா வேற, எங்க புள்ள வேற கிடையாது. எங்க புள்ள பொறக்கும் முன்னே போய் சேரனும்னு இருக்கு. அதுக்கு ஆறு என்னப் பண்ண முடியும்? விடுங்க” என்று பேசினான்.
அதில் செந்திலுக்கும், தாமரைக்கும் அவர்களின் செயலில் கண்ணீர் வந்து விட, அவர்களை கையோடு அழைத்து சென்று, குல தெய்வம் முன்னிலையில், நிலாவை பிடித்து, அவர்கள் இருவர் கையில் கொடுத்திருந்தார்கள்.
ஆனாலும், அப்போதும் முருகேசன் நிதானமாய், “எண்ணே, நீ அவசரத்துல முடிவு பண்ற. இப்படி எல்லாம் நீ பண்ணாட்டியும், நிலா எங்க புள்ளத்தேன். அதுல என்னிக்கும் எந்த மாற்றமும் வாராது. ஆனா உமக்கும் ஒரு புள்ளத்தேன் இருக்கா. அதனால இந்த தத்துக் கொடுக்கிற எண்ணம் எல்லாம் வேண்டாம். எமக்கும், என் பொண்டாட்டிக்கும் வயசா இல்ல. இன்னும் பத்து வருஷம் கழிச்சுக் கூட நாங்க குழந்த பெத்துக்கிறோம். இல்ல, நிலாவையே எங்க புள்ளையா நினைச்சிட்டு போறோம்” என்று கூறியிருந்தான்.
இப்போது அந்த நினைவில், அத்தனைப் பேரும் செந்திலைப் பார்க்க, அவருக்கோ, பாசம், தியாகத்தை விட பகை மட்டுமே பெரிதாய் தெரிய, “ஆமா அப்போ சும்மா பேச்சுக்குத்தான் சொன்னேன்" என்று சொல்ல முயன்றார்.
அதற்குள் தன் கணவரின் கரத்தைப் பிடித்து தடுத்த தாமரை, “அப்படி மட்டும் சொல்லிட்டாதய்யா. சொன்னா, அந்த ஆத்தாவே உம்மையும், எம்மையும் சும்மா விட மாட்டா” என்றார்.
“என்னடி? அவுக கூட சேர்ந்து நாடகமாடிட்டு திரியிறீயா?” என்று செந்தில் தாமரையிடமும் கத்தினார்.
“இங்கப்பாருண்ணே. இப்போ எதுக்கு மதினிக்கிட்ட பாயுற. நீ சொன்னாலும், சொல்லலன்னாலும், ஊருக்கே தெரியும். அங்க என்னாச்சுன்னு. அதனால செத்த பொறுத்து பேசு" என்றான் முருகேசன். செல்விக்கோ அன்றைய நினைவின் கனத்தில், அவளுடைய கரம் அன்னிட்சையாய் தன்னுடைய அடி வயிற்றைப் பற்றியது. அதைப் பார்த்த ஊர் காரர்களுக்கே பொறுக்க முடியவில்லை.
“அதான்ன. முருகேசன் சொல்றதும் வாஸ்தவம் தான. அன்னிக்கு நீயும் தான, உம்ம பொஞ்சாதி கூட சேர்ந்து நிலாவ அவுக புள்ளன்னு ஒப்படைச்ச. அப்போ அவ வாழ்க்கைய பத்துன முடிவா, அவுகளும் எடுக்கலாம் தான" என்று பெரியவர் ஒருவர் பேசினார்.
இப்போது தாமரையால் ஒரு வார்த்தைக் கூட பேச முடியவில்லை. செல்வியுடைய அந்த கலங்கிய தோற்றம் அவரை சிலையாய் மாற்றியிருந்தது. செந்திலுக்கோ இத்தனைப் பேரையும் எதிர்த்து பேசமுடியவில்லை. ஆனால் கதிர் என்பவனின் மீது கோவம் மட்டும் வன்மமாய் மாற காத்துக் கொண்டிருந்தது.
மீண்டும் வாய் வார்த்தை, அங்கும், இங்கும் என்று தொடர ஒரு கட்டத்தில், “முருகேசா. நீ சொல்லுய்யா. உமக்கு இந்த கல்யாணத்துல விருப்பம்த்தான? பொறவென்ன, ஐயா, நீங்க வெத்தலை பாக்க, செல்வி முருகேசன் கையில கொடுங்க. கல்யாணத்த அடுத்த முகூர்த்தத்துலையே, கோவில்ல வச்சுக்கலாம். எவென் வந்து தடுக்கிறான்னு பாக்கலாம்" என்றனர்.
அதில் இப்போது செந்தில் வேறு வழியின்றி, “எல்லாரும் செத்த நிறுத்துங்க. எம் புள்ளைக்கு இன்னும் பதினெட்டு வயசு கூட ஆகல. அப்படி இருக்கிறப்ப, சட்டத்த மீறி கல்யாணம் பண்னி வச்சிருவீகளா?” என்று எதை சொல்லவே கூடாது என்று நினைத்திருந்தாரோ அதை சொல்லியிருந்தார்.
இப்போது முருகேசன் முகத்தில் வெற்றிப் புன்னகை. இதற்குத்தானே அத்தனையும் அவர் செய்தார். ஆனால் அதையும் தாண்டி அவர் பார்க்க வேண்டிய வேலை இன்னொன்று இருந்தது.
அதனால், “நாங்களும் இப்போவே, ஒன்னும் கன்னாலம் வச்சிக்கலாம்னு சொல்லவே இல்லையே. கதிருக்குமே ஒத்த படை வயசுத்தேன் நடக்குது. புள்ள பண்ணிரெண்டு படிச்சு முடிச்சதுக்கப்புறமே கன்னாலத்த வச்சிக்கலாம்" என்றார் முருகேசன்.
அதில் சங்கரேயன் குழப்பமாய் தன் மருமகனைப் பார்க்க, செந்திலுக்கும், தாமரைக்கும் அப்போதே மூச்சு வந்தது.
“பொறவென்ன. கிளம்புங்க. அப்புறமா வந்து இத பத்தி பேசுங்க" என்றார் செந்தில்.
“பொறவுன்னா? எப்போன்னே, உமக்கு வேற ஞாபக மறதி அதிகமா இருக்கு. அப்படி எல்லாம் வந்துட்டு சும்மா போ முடியாது. ஊர் கூடியிருக்கிற சபையில் தட்ட மாத்தி உறுதி பண்ணிக்கலாம். அப்புறம் ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயத்த வச்சிக்கலாம். ஏன்னா பொண்ணு மாறிட கூடாது பாரு. அப்புறம் அடுத்த வருஷத்துல ஒரு முகூர்த்த நாள் பாத்து கன்னாலத்த வச்சிக்கலாம்" என்று முருகேசன் சொல்ல, இப்போது தாமரைக்கோ பேச்சே வரவில்லை.
அவர் இதை எதிர்பார்கக்வே இல்லையே. தன் மகளை அவனுக்கு கொடுக்க அவருக்கு விருப்பமே கிடையாதே. அவர் தடுமாற, செந்திலோ, “அதெல்லாம் முடியாது" என்று சொல்லப் போக, மீண்டும் ஒரு கலவரம்.
அதன் பின் வேறு வழியின்றி, அங்கே அந்த ஊராரின் முன்னிலையில், நிலாவை, கதிருக்குத்தான் கட்டிக் கொடுப்போம் என்று உறுதிக் கொடுத்து பாக்கு வெத்திலை மாற்றப்பட்டிருந்தது.
இந்த செய்தி கேட்டு முதலில் கொந்தளித்தது என்னவோ கதிர் என்பவன் தான். அவன் விஷயம் அறிந்து வீடு வரும் முன்னே அத்தனையையும் நடத்தி முடித்திருந்தார் முருகேசன்.
(அப்போ இதெல்லாம் நம்ம கதிருக்கு தெரியாதா? ரைட்டு. சரி அடுத்து என்னத்தான் ஆகப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க.)
தென்றல் தீண்டுமா?
0 Comments
No comments yet.