தென்றல் – 32

கதிருக்கு நிலாவை பெண் கேட்கப் போகிறோம் என்று முருகேசன் சொல்லியதைக் கேட்டு, வேலய்யா கிளம்பிவிட, செல்வியும், சங்கரேயனும் அதிர்ச்சியில் உறைந்துப் போயிருந்தனர். அவர்களுக்கு பெரிதாய் எந்த விளக்கமும் சொல்லாமல், நாளை அனைவரும் தாமரை வீட்டுக்கு செல்வதாக முடித்திருந்தான் முருகேசன். அதன் விளைவு, அடுத்த நாள் காலையே, அந்த பெரிய வீட்டில், ஊர் பெரியவர்கள் அத்தனைப் பேரும் கூடியிருந்தனர்.

கதிரோ அன்றும் வீட்டில் இல்லை. ரைஸ்மில்லில், ஏதோ பிரச்சனை என்று அங்கு கிளம்பியிருந்தான். செல்விக்கு எல்லாம் தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. முருகேசனுடன் இது குறித்து பேசலாம், இல்லை கேட்கலாம் என்றால், மனிதரோ, நேற்று செல்வியின் கண்ணில் பட்டவர் தான். அதன் பின், அந்த ஊர் பெரியவர்கள், சொந்தக்காரர்கள் அத்தனைப் பேரையும், ஏதோ போருக்கு செல்வது போல் திரட்டி வீட்டிற்கே அழைத்து வந்திருந்தார்.

அங்கே தாமரை வீட்டிலோ, நிலா பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த செந்தில், “அடியே, உம்ம கிட்ட நான் நேத்து என்ன சொல்லிட்டு போனேன்? உம்புள்ள என்னத்த பண்ணிட்டிருக்கா” என்று ஏறக்குறைய உறுமினார்.

அதில் சமையற்கட்டில் நின்றிருந்த தாமரையோ, எந்த பதிலும் சொல்லாமல், வெளியில் வந்து தன் கையில் இருந்த டிபன் பாக்ஸை அவளிடம் நீட்டினார். அவளோ, பயந்தப்படி தன் தந்தையைப் பார்க்க, “ரெண்டு இட்லிய பிச்சு தின்னுட்டு போன்னா கேட்க மாட்ற. பொறவு எதுக்கு நான் காலையிலையே எந்திச்சு சமைக்கனும்?” என்று சொல்லியவர் தன் மகளை அங்கிருந்து அனுப்ப முயன்றார்.

“ஏண்டி? நான் என்னத்த சொல்றேன். நீ என்னத்த பண்ணிட்டு இருக்க? உம் புள்ள ஒன்னும் இன்னிக்கு பள்ளிக்கூடம் போ வேணாம்” என்று சத்தமாக கத்தினார் செந்தில்.

அவருடைய கத்தலில், அவரின் பக்கம் திரும்பியவர், “அதேன். நீங்க என்ன பண்ணாலும், சம்மதம்னு சொல்லியாச்சித்தான்ன. பொறவென்ன. எல்லாத்தையும் நீங்க மட்டும்தேன்ன முடிவு பண்ணப் போறீக, இதுக்கு நானும், எம் புள்ளையும் இங்கன இருக்கனும்னு என்ன அவசியம் வந்திச்சு” என்று கணவரிடம் சொல்லிவிட்டு அப்படியே நிலாவை பார்த்து, “இன்னும் என்னடி நிக்கிறவ. கிளம்பு" என்றார்.

அதில் நிலா அங்கிருந்து வெளியில் செல்லப் போக, “அவ படிக்கவே வேண்டாம்னு சொல்லிட்டிருக்கேன்" என்று செந்தில் பேசும் போதே, வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டது. அதில் தாமரையும், செந்திலும் வெளியில் பார்க்க, ஊர் பெரியவர்களின் தலைகள் தெரிந்தது.

அதில் செந்தில் புருவத்தை சுருக்க, தாமரையோ, நிலாவிடம் அறைக்குள் செல்ல கண் காட்டினார். அவளுமே, சிறு பயத்துடன் அறைக்குள் சென்று விட்டாள்.

செந்திலோ ஒரு நொடி குழம்பி, பின் வெளியில் வர தாமரையுமே அவருக்கு பின்னே வந்தார்.

சங்கரேயன், நின்றிருக்க அவருக்கு அருகே செல்வியும், மற்ற பெண்களும் கையில் வெத்திலை பாக்கு, பழ தட்டுடன் நின்றிருந்தனர். 

ஊர் பெரியவர்களும் வந்திருக்க, செந்திலோ தாமரையை திரும்பி பார்த்தார். அவருமே ஒரு வித அதிர்ச்சியில் தான் நின்றிருந்தார்.

“என்னப்பா செந்திலு? இப்படியே பார்த்துட்டு நின்னா எப்படி? உள்ளார கூப்டு. பெரியவங்க எல்லாம் வந்திருக்காகள்ல" என்று பக்கத்து வீட்டில் இருந்த பாட்டி ஒருவர் கூறினார்.

“எவெடி அவ நான் இருக்கிறப்ப, என் வூட்டு நியாயம் பேசுறது?” என்று கேட்டப்படி அப்போதே சங்கரேஸ்வரி வீட்டின் பின் கட்டில் இருந்து திண்னைக்கு வந்தார்.

தன் அண்ணனையும், அண்ணன் மகளையும் பார்த்ததும், மகிழ்ச்சியாய், “அடியே இவளே, வூட்டுக்கு வந்தவங்கள, வாங்கன்னு சொல்லாம்ம, இங்க என்னத்தடி பரக்க பார்த்துட்டு நிக்கிறவ, அண்ணே. வாண்ணே, உள்ளார வாங்க” என்று வேகமாய் வாசல் படியை தாண்டி சென்றார்.

“ஏத்தா. வாசல்ல தாண்டிப் போன, கால உடைச்சி திண்ணையில சாய்ச்சிடுவேன்" என்று செந்தில் மிரட்ட, சங்கரேயனோ முருகேசனைத் தான் பார்த்தார்.

அவன் தானே ஒற்றைக் காலில் நின்று இவர்கள் அத்தனைப் பேரையும் அழைத்து வந்திருந்தான். அதனால் இப்போது தான் தான் பேச வேண்டும் என்று சூழ்நிலை உணர்ந்து, “எண்ணன்ணே? உறவுக்காரக நாங்கத்தேன் உமக்கு பகையாளியா போயிட்டோம். ஊர் காரக எல்லாம் உமக்கு என்னப் பண்ணாக? அவுகளுக்குலாம் சோழி இல்லாமலா, இங்கன வந்து நின்னுட்டு இருக்காக, ஏன் மதினி, நீங்களாச்சும், உம்ம வூட்டுக்காரருக்கு சொல்லலாம்தான" என்றார் முருகேசன்.

தாமரைக்கோ கதிர் மீது தானே விரோதம், அப்பாவையும், தங்கையையும் அப்படியே நிற்க வைக்க மனம் வரவில்லை. “ஏங்க உள்ளார கூப்டுங்க" என்று தாமரை சொல்ல, “என்னத்தடி கூப்பிடுறது. என்ன நீயும் உன் குடும்பத்தாளுங்க கூட சேர்ந்து என் தலையில மிளகா அரைக்கப் பார்க்குறீயா? அவுக என்னத்துக்கு வந்திருக்காகன்னு முதல்ல சொல்ல சொல்லு" என்றார் செந்தில்.

“ஏய்யா விரோதியா இருந்தாலும் வாசல் தேடி வந்தா, உள்ளார கூட்டிப் போய் பேசுறதுதான் முற. அதுலையும் வந்திருக்கவுக ஒன்னும் ஆறோ இல்ல. அவுக வூட்டுலத்தேன் பொண்ணு எடுத்திருக்க. அந்த மருவாதயாச்சும் கொடுக்கனும்” என்று கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுத்தார்.

“கண்ட முற கெட்டவனுங்களோடையும் சேர்ந்து, இவனுக்கும் புத்தி மலுங்கிப் போச்சு" என்று சங்கரேஸ்வரி தன் மருமகளின் காதில் கிசுகிசுத்தார்.

தாமரைக்கோ, அவர்கள் கையில் இருக்கும் பூ, பழ தட்டு எங்கேயோ இடித்தது. அவருமே ஒரு வித குழப்பத்தில் நிற்க, “ஆறுக்கு மருவாத கொடுக்கனும்னு எமக்கு தெரியும்? ஆறும் சொல்லத் தேவை இல்ல" என்றார் செந்தில்.

“ஏய்யா சபையில நிக்கிறப்ப எது பேசுறதா இருந்தாலும் பாத்து பேசனும். மொத்த ஊரும் நிக்கிறப்ப, நீரு இப்படி பேசுனா, நாங்க என்னத்துக்குன்னு நினைக்கிறது. ஊரையே விரோதியா பார்க்குறீயோ?” என்று ஊர் தலைவர் மீசையை நீவியப்படி சற்று கோவமாகவே கேட்டார்.

“அப்படி ஒன்னும் ரோஷம் கட்டு போயி இங்கன யாரும் இல்ல. ஏதோ பெரிய வூட்டு காரவுக முகத்துக்காக வந்து நிக்கிறோம்” என்று இன்னும் ஒரு பெரியவர் விரைப்பாக கூறினார்.

அதில் செந்திலுக்கோ ஊர் காரர்களே பகைக்க மனமின்றி, “வாங்க" என்று வேண்டா வெறுப்பாய் அழைத்தான்.

அதில் இப்போது யாருக்கும் அவர் வீட்டுக்குள் செல்ல விருப்பம் இல்லை. அனைவரும் அப்படியே நிற்க, அதற்குள் முருகேசன் தான், “ஏன் மதினி? மொத்த ஊரும் எப்படி உள்ளார வர முடியும், உள்ளார கிடக்குற சேரை எடுத்துட்டு வாங்க. இப்படி மரத்தடில உட்கார்ந்தே வந்தத பேசி முடிச்சிடலாம்" என்றான்.

அதில் தாமரையோ செந்திலைப் பார்க்க, “அதெல்லாம் அண்ணன் ஏதும் சொல்லாது மதினி. நீங்க போயி எடுத்துட்டு வாங்க" என்று சொல்லியவன், பக்கத்து வீட்டில் இருந்தும் நாலு சேரை வாங்கி போட்டான். தாமரையும் சேரை எடுத்து வெளியில் போட, ஏதோ பஞ்சாயத்து போல் வீட்டு வாசலில் ஒட்டு மொத்தமாய் கூடி அமர்ந்திருந்தனர்.

யார் முதலில் ஆரம்பிப்பது? என்பது போல் அனைவருமே ஒருவர் முகத்தை மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, “இப்படியே மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி, வந்தத பேசிட வேண்டியதுத்தான" என்று ஒருவர் குரல் கொடுத்தார்.

இதற்கென்றே காத்திருந்தது போல், இன்னொருவர், “எதுக்கு வந்திருக்கோம்னு தெரியாமலா இருக்கும். கையில பூ பழத்தோட எதுக்கு வரப் போறாக" என்று குரல் கொடுத்தார்.

சத்தம் மட்டுமே வந்தது. யார் பேசுகிறார்கள்? என்று கூட பார்க்க முடியாத அளவுக்கு முக்கிய உறவுகளின் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம்.

“மாமா” என்று முருகேசன் சங்கரேயனிடம் பேச சொல்லி கரத்தைப் பிடித்தார். அதில் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவர் செந்திலிடம், “நீங்க வேணும்னா எங்கள வேத்தாளா பாக்கலாம். ஆனா என்னிக்குமே உங்களையும், என் புள்ளைங்களையும் வேற வேறன்னு பிரிச்சு பார்த்தது கிடையாது. இப்போ பொண்ணு கொடுத்த மாமனாரா இல்லாம, என் பையனுக்கு அப்பாவா இங்க வந்திருக்கேன்" என்றார்.

“அப்பா” என்று தாமரை ஏதோ சொல்ல வர, “ஏத்தா அண்ணே பேசுறாகள்ள செத்த பொறு" என்று மருமகளை பேசவிடாமல் தடுத்தார் சங்கரேஸ்வரி.

செந்திலுக்கோ ஊர் கூடி வந்திருப்பவரை எதிர்த்து பேசவும் முடியவில்லை. இருவரும் பெரிதாய் பேசிக் கொண்டது இல்லை. ஆனால் ஊரே அவர் வார்த்தைக்கு மரியாதைக் கொடுக்கும் போது, இப்போது தான் இடையூறாய் பேசினால், மொத்த ஊரும் பகைக்கும் அதில் இழுத்துப் பிடித்த பொறுமையோடு அமர்ந்திருந்தார்.

“என்ன சித்தப்பா? செந்திலு என்ன ஆறோவோ. நம்ம வீட்டாளுத்தேன்ன. எதுக்கு சுத்தி வளைச்சி பேசிக்கிட்டு நேரா விஷயத்த போட்டு உடைங்க" என்று இன்னொருவர் சத்தம் கொடுத்தார்.

“அதான்ன மாமா. நீங்க கேட்டு, அண்ணனும், மதினியும் முடியாதுன்னு  மறுக்கவா போறாக. இல்ல அவுகளாலத்தான் மறுக்க முடியுமா. நீங்க கேளுங்க மாமா” என்று முருகேசன் சமயம் பார்த்து செக் வைத்தான்.

அதில் தன் தம்பியை செந்தில் முறைக்க, அவனோ இப்போது செல்வியிடம், “செத்த சிரிச்சாத்தான் என்னவாம்? ஏன் நேத்துல இருந்து, இப்படி உம்முன்னே இருக்க" என்று சீண்டினான்.

அவரின் பேச்சில், செல்வி தன் கணவரை முறைத்துப் பார்த்து, “உங்க மனசுல என்னத்தேன் நினைச்சிட்டு இருக்கீக?” என்றார்.

“ஏன்டி? உமக்கு தெரியாதா. உன் மச்சான் மனசு புல்லா உன் நினைப்புத்தேன்" என்று சொல்லி கண்ணடித்தான் முருகேசன்.

ஊர் கூடி அமர்ந்திருக்க தன் கணவன் செய்யும் சேட்டையில், அவரை முறைக்க கூட முடியாமல், முகத்தை திருப்பிக் கொண்டார்.

“கோவப்படுறப்ப கூட, என் மாமன் மக அழகாத்தேன் இருக்கா” என்று முருகேசன் சொல்ல, “ஐயோ செத்த நேரம் அமைதியா இருங்களேன்" என்று கண்களால் கெஞ்சினாள் செல்வி.

அதில் சன்ன சிரிப்புடன் அவன் மீண்டும் தன் அண்ணன் பக்கம் திரும்ப, அவர்களோ, அப்படியே தான் அமர்ந்திருந்தனர்.

“ம்ஹூம் இது ஆகுற கதையா இல்ல" என்று தனக்குள்ளே சொல்லியவன், “மாமா இப்போ நீங்க கேட்குறீகளா? இல்ல நம்ம வீட்டு மருமகன்ற முறையில நானே கேட்கட்டுமா?” என்றார் முருகேசன்.

“ஏய்யா செத்த பொறுய்யா. ஆயிரம் இருந்தாலும், பொண்ண பெத்தவகளும், பையன பெத்தவகளும் நேரடியா பேசட்டும்யா” என்று இன்னொருவர் சொல்ல, முருகேசனோ தன் மாமனாரைப் பார்த்தான்.

அதில் தொண்டையை செருமியவர், “என் பையன் கதிருக்கு, உங்க பொண்ணு நிலாவ பொண்னு கேட்டு வந்திருக்கேன். உங்களுக்கு சம்மதமா?" என்று சொல்லியிருந்தார் சங்கரேயன். அது தான் விஷயம் என்று செந்திலுக்கு புரிந்திருந்தது. இப்போது அவரே கேட்கவும், “எனக்கு இதுல விருப்பம் இல்" என்று செந்தில் சொல்ல வர, அதற்குள்ளே முருகேசன் ஒருவரிடம் கண் காமித்தான்.

அவரோ செந்திலை பேச விடாமல், “இதுல சம்மதம் கேட்கிறதுக்கு என்ன இருக்கு. சொந்த மாமனுக்கு இல்லாத உரிமையா, பெத்தவங்களுக்கு இருக்கு?” என்று ஒருவர் இடையிட்டார்.

அதற்கு செந்தில் மறுத்து பேசப் போக, “அதான உரிமைக்காரன்ன வச்சிட்டு, பொண்ண என்ன அந்நியத்துலையா கொடுத்துட போறாக. இல்ல அத பாத்துட்டுத்தேன் நம்மளாம் சும்மா இருந்துடுவோம்மா. தூக்கிட்டு போய் தாலி கட்ட வச்சிட மாட்டோம்?” என்று ஆளாளுக்கு பேசினர்.

“இப்படி மத்தவகளே பேசிட்டு இருந்தா எப்படி? பொண்ணு கையில காபி தட்ட கொடுத்தனுப்புனா, அப்படியே பொண்ணு பாக்குற சம்பிராதயத்தையும் முடிச்சிட்டே கிளம்பிடலாம்" என்று இன்னொருவர் சொல்ல, செந்திலுக்கோ தலைக்கு மேல் சென்றது போல் இருந்தது.

முருகேசனோ, கடைசியாய் பேசிவரைப் பார்த்து, “கலக்குற சித்தப்பு. உனக்கு இன்னிக்கு நைட் கோழி பிரியாணியும், குவாட்டரும் பார்சல்" என்று கிசுகிசுப்பாய் கூறினான்.

“போதும் நிறுத்துறீகளா? பொண்ண பெத்தவக இன்னும் உசுரோடத்தேன் இருக்கோம். இப்படி எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணிடுவீகளா? ஏங்க. அவுகத்தான் பேசிட்டே இருக்காங்கன்னா, நீங்க இப்படி அமைதியா இருந்தா, அவுக என்ன நினைப்பாக?. பேசுங்க" என்று தாமரை அங்கு அத்தனைப் பேருடைய பேச்சையும் ஒரே நொடியில் கலைத்திருந்தார்.

(அதான? என்னடா இன்னும் தாமரை அக்கா அமைதியா இருக்கேன்னு பார்த்தேன். சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் (பஞ்சாயத்து) எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   1

*** தென்றல் – 32 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***