கதிர் திருமணத்துக்கு நேரடியாக சம்மதம் சொல்லாவிட்டாலும், ஏதோ செய்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியதே, சங்கரேயனுக்கும், செல்விக்கும் சற்று நிம்மதியாய் இருந்தது. எங்கே அவன் திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிடுவானோ? என்று பயந்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அது சற்று ஆறுதலாய் இருந்தது.
அதனால், முன்பை விட இம்முறை கூடுதல் கவனத்தோடே பெண் தேட ஆரம்பித்திருந்தனர். கதிருக்கோ, அதில் எல்லாம் சிறிதும் உடன்பாடில்லை. அவனுக்கு ரைஸ்மில்லிலேயே வேலை குவிந்துக் கிடக்க, அங்கு கணக்கு, வழக்குப் பார்க்கவே சரியாக இருந்தது. சிவாவுக்கும், இப்போதே திருமணம் ஆகியிருக்க, அவனையும் அடிக்கடி தொந்தரவு செய்ய மனம் இல்லாமல், அவனே வயல், தோட்டம் என்று அத்தனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.
வயலில் இருக்கும் போதே, தோட்டத்து வேலை நினைவுக்கு வர, மதிய சாப்பாட்டைக் கூட சாப்பிடாமல், தோட்டத்துக்கு வந்திருந்தான். மாலை நேரம் என்பதால், சம்பளத்தை வாங்கிக் கொண்டு அனைவரும் கிளம்பியிருந்தனர். கதிரும் கூட அவர்களிடம் பேசிவிட்டு கிளம்ப எத்தனித்தான். சரியாக அன்னேரம் அவனின் முன்னே நின்றிருந்தார் அவனின் அக்கா தாமரை.
ஒரு நொடி, குழம்பி, அடுத்த நொடியே எதுக்கு பிரச்சனை? எனும் ரீதியில் அங்கிருந்து நகர முயன்றான்.
“நான் உன்கிட்ட பேசனும்" என்று கூறினார் தாமரை. அவரின் வார்த்தையைக் கேட்டவனுக்கு, அதை நம்பவே முடியவில்லை. அது அவனுக்கு, அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் சேர்த்தே கொடுக்க, எத்தனை வருடங்களுக்கு பின், தன்னுடைய அக்கா தன்னிடம் பேசுகிறார் என்பதே அவனுக்கு அத்தனை சந்தோஷத்தைக் கொடுத்தது. ஆனால் அடுத்த சில நிமிடத்திலேயே, அவனுடைய கை நரம்புகள் எல்லாம் கோவத்தில் புடைத்தது. அவரோ, வந்த வேலை முடிந்து விட்டது எனும் ரீதியில், அங்கிருந்து கிளம்பியிருந்தார்.
அவர் கிளம்பியதும், தோட்டத்து வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு, கோவம் ஒரு பக்கம், ஆதங்கம் மறு பக்கம், அதெல்லாத்தையும் தாண்டிய குழப்பம் இன்னொரு பக்கம் என்று முற்றிலும் குழம்பித் தவித்தான். சட்டென்று எந்த முடிவுக்கும் வரவில்லை. அதன் பின் அவனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை.
அங்கே செல்வியோ முருகேசனிடம், “ஏங்க, நான் ஒன்னு சொல்லட்டா?” என்றார். அதில் காபியைக் குடித்துக் கொண்டிருந்தவர், “ஒன்னென்ன, ஒம்பது வேணா சொல்லு, நான் இப்படி ஓரமா உட்கார்ந்து கேட்டுட்டே போறேன்" என்றார்.
அதில் தன் கணவரை முறைத்தவர், “ச் கேலி பண்ணாம கேளுங்க மச்சான்" என்றார். “செரிடி சொல்லு. என்ன சொல்லனும்?” என்றவர் திரும்பி தன் மனைவியைப் பார்த்தார்.
“ஏங்க பேசாம, கதிருக்கு நம்ம மலரையே பார்த்தா என்ன?” என்று கேட்டார் செல்வி. அதில், “மலரா?” என்றவருக்கு அதில் பெரிதாய் உடன்பாடில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.
“நம்மளவுக்கு வசதி இல்லங்காட்டியும். பாக்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கா. அதுவும் போக டீச்சர் உத்யோகம் வேற. சொந்தத்துலையே பார்த்தா, நம்ம குடும்பத்த அனுசரிச்சு பாத்துப்பாத்தான?” என்றார் செல்வி.
“சொந்தத்துல கட்டுனா, குடும்பத்த அனுசரிச்சு நடப்பான்னு ஆறு சொன்னா?” என்று கேட்டவனின் பார்வை, தன் மனைவியை சீண்டியது.
அதில், “இப்போ நான் என்னத்த, உங்க குடும்பத்த அனுசரிச்சு நடக்கல?” என்று சண்டைக்கு சென்றார். அவரின் பேச்சில் சத்தமாய் சிரித்தவர், “நான் எப்போடி அப்படி சொன்னேன். சும்மா பாத்ததுக்கே, நீயே ஏதாச்சும் கற்பணை பண்ணிக்கிட்டா நான் என்னத்தப் பன்றது?” என்று சிரித்தப்படி கூறினார் முருகேசன்.
“ச் விளையாடாம, கேட்டதுக்கு பதில் சொல்லுங்க மச்சான்" என்றார் செல்வி. “இப்படி கேட்டா நான் என்னத்த சொல்றது? அந்த புள்ளைக்கு கூட, மாப்பிள்ள மேல இஷ்டம்தேன் போல. ஆனா மாப்பிள்ள அந்த புள்ளைய பாத்தாலே, எண்ணெயில போட்ட கடுகாட்டம்ல நிக்கிறான். அதேன் யோசிக்கிறேன்" என்றார் முருகேசன்.
“அதெல்லாம் கல்யாணமானா சரியா போயிடும்" என்றார் செல்வி. “ம் நீ ஒரு முடிவெடுத்துட்ட, எதுக்கும் ஒரு வார்த்த மாமா கிட்ட பேசிடு. அவருக்கு சம்மதமுன்னா, நம்ம மத்தத பேசலாம். ஆனா போன வாட்டி மாதிரி எடுத்தோம், கவுத்தோம்னு நிக்காம, கொஞ்சம் பொறுமையாவே போலாம். எப்படியும் இப்போ மாப்பிள்ளைக்கு இருபத்தாருத்தேன்ன நடக்குது” என்றார் முருகேசன்.
“ம் செரிங்க" என்று சொல்லியவர் இது குறித்து தன் அப்பாவிடம் அடுத்த நாளே பேசியிருந்தார். நெருங்கிய சொந்தம் இல்லாவிட்டாலும், அவர்களும் முறைத்தானே. சரி என்றிருந்தார்.
“அப்போ அடுத்த வாரம் ஒரு எட்டு போய் அவுக கிட்ட பேசிட்டு வந்துடலாம்" என்று செல்வி சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்க சென்றார்.
இங்கே நிலாவோ, தாத்தா வீட்டுக்கு கூட செல்லாமல், அறையினுள்ளேயே அடைந்துக் கிடந்தாள். அழுது அழுது முகமெல்லாம் வீங்கிப் போயிருந்தது. ஒரு வாரமாகவே அழுதுக் கொண்டு தான் இருக்கிறாள். அவள் அழுகையை நிறுத்த தான் அங்கு ஆள் இல்லாமல் போனது.
தாமரையோ, “நாளைக்கு ஸ்கூலுக்கு போறீயா? இல்ல இங்கனையே அழுதுட்டு கெடக்கப் போறீயா?” என்று கோவமாய் கேட்டார். தாயின் சுடு சொல்லும், தந்தையின் முக கடுப்பும், நிலாவை அழுது கரையத்தான் வைத்தது.
அடுத்தடுத்த நாட்கள் செல்ல, செல்வியும், முருகேசனும் மலருடைய அப்பாவிடம் பெண் பார்க்க வருவது குறித்து பேச, கிளம்பினர். அன்னேரம் பார்த்து சொந்தக்காரர் ஒருவர் பத்திரிக்கை வைக்க வீட்டுக்கு வந்திருக்க, அவர்களால் அன்று செல்ல முடியவில்லை.
கதிரோ வீட்டுக்கு வராமல் இருக்க, அவனிடமும் இது குறித்து யாரும் எதுவும் கேட்கவில்லை. எப்படியும் அவர்கள் பார்க்கும் பென்ணை தம்பி கட்டிக் கொள்வான் என்ற எண்ணம். அவனுமே அப்படித்தானே சொல்லியிருந்தான்.
அப்படியே அன்றைய வாரம் சென்றிருக்க, நிலாவோ சோகத்தின் விளிம்பில் தான் நின்றிருந்தாள். ஏதோ ஒரு யோசனையில், அந்த ஒற்றையடி பாதையில் நடந்துக் கொண்டிருந்தாள். சட்டென்று அவளின் முன் சடன் பிரேக் அடித்து பைக் வந்து நிற்க, அச்சத்தில் பயந்து பின்னே அடி எடுத்து வைத்தாள்.
இங்கே அன்று தான், சங்கரேயன் மலருடைய அப்பாவை வீட்டுக்கு வர சொல்லியிருந்தார்.
“முதல்ல அவர் கிட்ட பேசிட்டு, அப்புறம் வூட்டுக்கு போயி முறைப்படி பேசிக்கலாம்" என்று முருகேசன் சொல்லியிருக்க, மாப்பிள்ளை சொல்வதும் சரி தான் என்று சங்கரேயனும் அவரை வர சொல்லியிருந்தார்.
இதற்கிடையில் முருகேசனுக்கோ, கதிரிடம் இது குறித்து பேசாமல், செய்வதில் சற்று உறுத்தலாக இருந்தது. அதனால் செல்வியிடம், “நான் மாப்பிள்ளக்கிட்ட எதுக்கும் ஒரு வார்த்த பேசிடுறேன். அதுக்கப்புறம் மலரோட அப்பாக்கிட்ட பேசுங்க” என்று சொல்லியப்படி முருகேசன் அங்கிருந்து கிளம்பினார்.
“இப்போ அந்த மனுஷன் வந்துடுவாரு. இன்னேரத்துக்கு சொல்லிட்டுப் போனா எப்படி?” என்று கேட்டப்படி செல்வியும், முருகேசன் கூறியதை சங்கரேயனிடம் கூறினார்.
இங்கே மலரின் அப்பா வேலய்யாவும் அவர்கள் வீட்டுக்கு வந்திருக்க, “உள்ளார வாங்க மாமா” என்று செல்வி வாசலுக்கு அழைத்து வரவேற்றார்.
உள்ளே நுழைந்த வேலய்யாவிடம், சங்கரேயனும் திருமணம் குறித்த பேச்சு வார்த்தை ஏதும் பேசாது தொழில் விசயமாக சில விபரங்களை பேசிக் கொண்டிருந்தார்.
செல்வியோ, முருகேசனுக்கு அழைக்க, அவரோ எடுத்த எடுப்பிலேயே “வேலு சித்தப்புக்கு ஏதும் வாக்கு கொடுக்கலத்தான்ன?” என்றார்.
“ஏங்க? தம்பி ஏதும் வேண்டாம்னு சொல்லிட்டான்னா?” என்று செல்வி சிறு பதட்டத்தோடு கேட்டார். “ஆ..ங் நானும், மாப்பிள்ளையும் அங்கனத்தான் வந்துட்டு இருக்கோம். இப்போதைக்கு அவர்கிட்ட இத பத்தி பேசாம, வீட்டுக்கு அனுப்பு. நாங்க வந்து மீதிய பேசிக்கலாம்" என்றார்.
கணவனின் குரலில் தெரிந்த அழுத்தமே பிரச்சனை பெரிது என்று புரிய, சங்கரேயனிடம், பேச வேண்டாம் என்று மெதுவாய் கூறினார் செல்வி.
அதற்குள் வேலய்யாவே, “ஐயா, உங்க வசதிக்கு நானே இத கேட்க கூடாதுத்தேன். அதுவும் போக பொண்ண பெத்தவனா, இத பேசக் கூடாது. முற இல்லன்னு தெரியும். ஆனாலும் புள்ள ஆசைப்படுறா” என்று அவரே தான் வந்த நோக்கத்தை பேச ஆரம்பித்தார்.
சங்கரேயன் தன்னை அழைக்கவுமே, தன் மகளை எடுப்பது பற்றி தான் பேசப் போகிறாரோ? என்று அவருக்கும் சிறு ஆசை பிறந்திருந்தது. அதற்கு தண்ணீர் ஊற்றுவது போல், அவருடைய மகளுமே மறைமுகமாக கதிரைப் பிடித்திருக்கிறது என்று கோடிட்டு காட்டியிருந்தாள்.
சங்கரேயன் அது குறித்து பேசாமல் இருக்கவும், அவரே, அதைப் பற்றி பேச ஆரம்பித்தார்.
செல்விக்கு அவர் பேச வருவது புரிய, அதற்குள், “முதல்ல காபி எடுத்துக்கோங்க மாமா” என்று காபியை வேலய்யாவிடம் நீட்டினார்.
எங்கே தன் தந்தை அவருக்கு வாக்கு கொடுத்து விடுவாரோ என்ற அச்சம் அவருக்கு. ஏனெனில் அந்த ஊரைப் பொறுத்த வரை, எத்தனை நெருங்கிய சொந்தமாக இருந்தாலும், பையன் வீட்டினர் தான், பெண் வீட்டுக்கு சென்று இது குறித்து பேச வேண்டும். பெண் வீட்டினர், மாப்பிள்ளை வீட்டினருக்கு வந்து பேசுவது மிகப்பெரிய கெளரவ குறைச்சல். ஆனால் அதையும் தாண்டி கேட்கிறார்கள், என்றால் அதை மறுப்பது அந்த நபருக்கு பலத்த அவமானம். இப்போது வேலய்யா கேட்டுவிட்டால், சங்கரேயன் நிச்சயம் வாக்களித்து விடுவார்.
தன் மகளின் பதட்டமான முகம், சங்கரேயனுக்கும் அதை தெரியப்படுத்த, அவருமே “முதல்ல காபி எடுத்துக்கோங்க மச்சான். அப்புறம் பொறுமையா பேசலாம்" என்றார்.
அதில் வேலய்யன் காபியை எடுத்துக் கொள்ள, செல்வியோ முருகேசனை எதிர்பார்த்து வாசலைப் பார்த்தார்.
“அப்பா, நீங்களும் எடுத்துக்கோங்க" என்று சங்கரேயனிடமும் காபியைக் கொடுத்தார் செல்வி. அவரும் அதை எடுத்துக் கொள்ள, இங்கே வேலய்யாவுக்கோ, எப்படி மீண்டும் ஆரம்பிப்பது என்று சிறு குழப்பம்.
அதில் இன்னும் சில நிமிடங்கள் அப்படியே நீண்டது. ஒரு கட்டத்தில் வேலய்யா, மீண்டும் அந்த பேச்சை ஆரம்பிக்க, அதற்குள், “வாங்க சித்தப்பா, எப்போ வந்தீக? வீட்டுல எல்லாரும் செளக்யமா” என்றப்படி அங்கு வந்திருந்தார் முருகேசன்.
தன் கணவரைப் பார்த்தப் பின்னே செல்விக்கு மூச்சே வந்தது. இனி அவர் பார்த்துக் கொள்வார் என்ற நிம்மதியும் தோன்றி மறைந்தது.
அதற்குள் சங்கரேயனோ, மருமகனை தன் அருகில் அமர்த்திக் கொள்ள, செல்வியோ முருகேசனுக்கும் காபியை நீட்டினார்.
“இப்பத்தேன், பெரியப்பாரு வூட்டுல மோரு குடிச்சிட்டு வந்தேன். அப்படியே சித்தப்பா வூட்டுக்கு போகனும்னு நினைச்சிட்டே வந்தேன். பார்த்தா சித்தப்பா இங்கன இருக்காரு" என்றான் முருகேசன்.
அதில் வேலய்யா, “என்னய்யா? ஏதும் விசேசமா?” என்று கேட்க, “ஆமா சித்தப்பா, விசேசம் தான். நம்ம கதிருக்கு நாளைக்கு பொண்ணு கேட்டு போலாம்னு இருக்கோம். அதான் அங்காளி பங்காளிங்க எல்லாம் ஒன்னா போனாத்தேன்ன, நம்ம குடும்பம் பத்தி தெரியும். அதேன். நாளைக்கு ஏதும் முக்கிய சோழி வச்சுக்காதீகன்னு சொல்ல நினைச்சேன்" என்றார் முருகேசன்.
அதைக் கேட்ட, சங்கரேயன், செல்விக்கு குழப்பம் என்றால், வேலய்யாவுக்கோ பேரதிர்ச்சி. தன் மகளை பெண் கொடுக்க, அவர் கேட்க வந்தால், முருகேசன் இப்படி சொல்லவும், சட்டென்று முகத்தை மாற்றி, “பொண்ணு அசலாய்யா?” என்றார் வேலய்யா.
“அசல் எல்லாம் இல்ல சித்தப்பு. சொந்தம்ந்தேன்" என்றார் முருகேசன். “நம்மூர்ல ஆறுய்யா” என்றவருக்கு மனதினுள் சிறு வருத்தம் இருந்தாலும், ஒரு உறவினராக, கதிருக்கு நல்ல சம்பந்தம் அமைந்தால் அவருக்கும் சந்தோஷம் தான்.
“வேற ஆறும் இல்ல. நம்ம நிலாவத்தேன் கதிருக்கு பேசலாம்னு இருக்கோம். என்னத்தேன் முறை இருந்தாலும், குடும்பமா போயி கேட்டாத்தேன்ன, எல்லாருக்கும் பெருமை. அத்தேன்" என்று முருகேசன் சொல்ல, அதைக் கேட்ட வேலய்யா அதிர்ந்தாரோ? இல்லையோ சங்கரேயனுக்கும், செல்விக்கும் பேரதிர்ச்சி.
(க்கும், இங்க என்னத்தான்யா நடக்குது? யாராச்சும் சொல்லிட்டு பண்றீகளா? இதுத்தேன் நடக்கும்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா ஏன் நடக்கது? எதுக்கு நடக்கது? சரி அடுத்து என்னத்தேன் நடக்கப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?
0 Comments
No comments yet.