தென்றல் – 30

பாண்டி நிலாவுக்கு தன்னுடைய செயினை போட்டு விட செல்ல, அவளோ அதை தட்டி விட்டிருந்தாள். அதில், செந்தில் கோவமாய் நிலாவை அடித்து விட, அவள் அழுதுக் கொண்டே தாத்தா வீட்டுக்கு ஓடியிருந்தாள்.

இங்கே அப்போது தான், செல்வியிடம் ஏதோ ஒரு பத்திரத்தை கொடுப்பதற்காக, கதிர் வீட்டு வாசலுக்கு வர, அதற்குள் அவனை ஓடி வந்து கட்டிக் கொண்டாள் நிலா.

“எக்கா” என்று அழைக்க வாய் திறந்தவனின், வார்த்தை அப்படியே தொண்டைக்குள்ளேயே சிக்கியிருக்க, நிலாவோ அவன் சட்டையைப் பிடித்து அழுக ஆரம்பித்திருந்தாள்.

ஒரு நொடி அவனுக்கு என்ன என்றே புரியவில்லை. அவனுடைய மூளை வேலையை நிறுத்தியிருக்க, அப்போதே நிலாவின் கண்ணீர் அவன் சட்டையை நனைப்பதே புரிந்தது. கடைசியாய், அவளுக்கு ரிசல்ட் அன்று சிறு புன்னகையுடன் பார்த்தது தான். அதன் பின் இப்போது தான் பார்க்கிறான்.

இப்படி அழுகவும், “நிலா. என்னாச்சு?” என்று அவளை தன்னில் இருந்து விலக்கவே முயற்சித்தான். ஆனால் அவளோ அவனை விட்டு இம்மியும் நகராமல் ஒட்டிக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுதாள்.

அவளின் அழுகை அவனை என்னமோ செய்ய, “இங்கனப்பாரு. என்னாச்சு?” என்று வார்த்தையில் சிறு அழுத்தம் கொடுத்துக் கேட்டான். அவளோ, சிறு பிள்ளையாய் தேம்பி தேம்பி அழ, வலுக்கட்டாயமாய் அவளை தன்னில் இருந்து பிரித்து, அவள் கண்ணீரைத் இரு கரத்தால் துடைத்தான்.

அப்போதும் அவள் அழுகையை நிறுத்தாமல் அழுதுக் கொண்டே இருக்க, அவனின் மொத்த இறுக்கமும் அந்த நொடி தொலைந்து தான் போனது. அவளுக்கு நிகரே குனிந்து, “என்னாச்சுடா?” என்றான்.

“அத் அத்.. அது.. அப்...பா. என்னை” என்றவளுக்கு வார்த்தையை விட அழுகைத்தான் சத்தமாய் வந்தது. அதில் மீண்டும் அவள் கன்னம் தாண்டி கண்ணீர் சிந்த, “ச் அழாத. அழாம என்னாச்சின்னு சொல்லு" என்று மீண்டும் அவள் கண்ணீரைத் துடைத்தான்.

ஏற்கனவே அத்தனை நிறமாய் இருப்பாள். இப்போது அழுது அழுது முகம் இரத்தமாய் சிவந்திருந்தது.

“அத்தி பழம் செவப்பா? 

இந்த அக்கா மக செவப்பா?

ஒரு வெள்ளைக் கார பொண்ணு

இந்தியா வந்தாலும் 

உன்னைக் கண்டு திகைப்பா!”

“அப்பா. என்னை” என்றவளுக்கு அழுகையில் அடுத்த வார்த்தை வரவே இல்லை. அதில், மென்மையை தொலைத்து, “அப்பாக்கு என்ன?” என்று அழுத்திக் கேட்டான் கதிர்.

அவனின் அதட்டலில், மேலும் பயந்து, “அப்பா. என்னை. என்னை… அடி.ச்சிட்டாரு" என்று சொல்லியப்படி மீண்டும் அவன் சட்டையைப் பிடித்தப்படி அழுது கரைந்தாள்.

அதைக் கேட்டவனுக்கு அத்தனைக் கோவம். “அவர் எப்படி அடிக்கலாம்?” என்றவனுக்கு, இவள் என்ன செய்தாள்? என்று கூட கேட்க தோணவில்லை.

இருந்தும் அதை எல்லாம் சற்று தூர ஒதுக்கிவிட்டு, மீண்டும், அவள் விழிநீரைத் துடைத்தான். அவளோ, “நான். என்ன.. நான்” என்று அவள் திக்கி திணற, ஏனோ அவனுடைய அக்கா மகளின் கண்ணீர் இவன் இதயத்தை ரணமாக்கியது.

“ச் இனிமே அவர் அடிக்க மாட்டாரு" என்று அத்தனை அழுத்தமாய் கூறினான் கதிர். “இல்ல. நான். என்னை” என்றவள் அப்போதும் தேம்பி தேம்பி அழ, “நான் சொன்னா கேட்பீயா? இல்லையா?” என்று சத்தம் போட்டுக் கேட்டான்.

அவனின் சத்தத்தில், கண்ணீரை விழுங்கி, சிறு மிரட்சியோடு, “ம்" என்று தலையாட்டினாள்.

“இதுக்கப்புறம் உன்னை யாரும், எதுக்கும் அடிக்க மாட்டாங்க. செரியா?” என்று கேட்டான் கதிர். அதில் அவளுக்கு என்ன புரிந்தது? என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அப்படியே கண்ணீரை உள்ளடக்கிக் கொண்டாள்.

அவள் அழுகையை நிறுத்த போராடுவது அவனுக்கே புரிந்தது. அதில் கொடியில் காய்ந்துக் கொண்டிருந்த துண்டை எடுத்து அவள் முகத்தை துடைத்து விட்டான். அவளோ உதட்டைக் கடித்து அழுகையை விழுங்கினாள்.

அவளைப் பார்க்கவே மனம் தாங்கவில்லை. “காபி தண்ணி எதும் குடிச்சீயா?” என்று கேட்டான். ஏனெனில் பள்ளி சீருடையைக் கூட கழட்டாமல் அவள் நின்றிருக்க, அவள் அப்படியே பள்ளியில் இருந்து ஓடி வந்தது போல் இருந்தது.

“ம்ஹூம்" என்று அவள் தலையாட்ட, “செரி வா” என்றவன் ஏதோ ஒரு வேகத்தில், அவள் கைப் பிடித்து அழைத்துக் கொண்டு, அந்த பெரிய வீட்டின் வாசல் வரை சென்று விட்டான்.

உள்ளே காலடி எடுத்து வைக்கும் போதே, இவ்வுலகம் வந்தவன். உள்ளே அடி எடுத்து வைக்காமல், “எக்கா” என்று கத்தி அழைத்தான்.

சமையற்கட்டில் இருந்த செல்வி சத்தம் கேட்டு, ஹாலுக்கு வர, வாசலில் நின்றிருந்த தம்பியை சிறு ஆச்சர்யத்தோடு பார்த்தார். அதில் வேகமாய் அங்கு வந்தவர், அப்போதே அவனின் அருகில் நின்றிருந்த நிலாவையும் பார்த்தாள். பார்த்த உடனே அவள் அழுதிருக்கிறாள் என்று புரிந்தது.

“என்னாச்சுத்தா? ஏன் முகமெல்லாம் இப்படி சிவந்து கெடக்கு" என்றவர் வேகமாய் நிலாவை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார். அவளோ மீண்டும் அழுக தயாராக, “ச் முதல்ல அவளுக்கு குடிக்க ஏதாச்சும் கொடு. அப்புறமா உன் விசாரணைய வச்சுக்கோ” என்று சிடுசிடுத்தான் கதிர்.

அவனுக்கோ அத்தனைக் கோவம். செந்திலைத் தவிர இதை வேறு யாராவது செய்திருந்தால், இன்னேரம் அடித்தவனின் கையை உடைத்து அவனிடமே கொடுத்திருப்பான். தம்பி முகத்தில் தெரிந்த சிடுசிடுப்பில், நிலாவை உள்ளே அழைத்துச் சென்றார்.

கதிரோ அப்படியே வாசலிலேயே நிற்க, “இம்புட்டு தூரம் வந்துட்டள்ளயா. செத்த உள்ளார வரலாம் தான?” என்றார் செல்வி.

அதில் மேலும் இறுகியவன், “இந்த பத்திரத்த கொடுக்கலாம்னுத்தேன் வந்தேன்" என்று கையில் இருந்த பத்திரத்தை அவரிடம் கொடுத்து விட்டு, நிலாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றிருந்தான். செல்பவனையே, நிலாவும், செல்வியும் பார்த்தனர்.

அங்கிருந்து நேரே தோப்பிற்கு சென்றவனுக்கு, மனம் ஆறவே இல்ல. “எப்படி கை நீட்டலாம்?” என்று தனக்குள்ளே கேட்டான். அவனின் அக்கா, நிலாவை திட்டுவார் தான் அடிக்க கூட கை ஓங்குவார் தான். ஆனால், அடித்ததாய் அவனுக்கு நினைவில் இல்லை. அவர் அடிக்கும் முன்னே, இவள் பயந்து, அழுது அவரின் முந்தானைக்குள்ளையே ஒளிந்துக் கொள்வாள். அதனாலையே தாமரையும் கூட, திட்டி விட்டு அவளை சமாதானப்படுத்துவார். இல்லை என்றால் செல்வி முன்பெல்லாம், தாமரையை திட்ட கூட விட மாட்டார். தாமரையும் கூட கணவரிடம், மகளை விட்டுக் கொடுக்கவெல்லாம் மாட்டார். இப்போது அவர் வீட்டில் இருந்தால், நிச்சயம் நிலாவை அடிக்கவெல்லாம் விட்டிருக்க மாட்டார். கோவமாய் வந்தது.

“அவுக புள்ள அவுக அடிக்கிறாக, உனக்கென்ன வந்திச்சு. அதுவும் போக, ஆறாச்சும் சும்மா அடிப்பாகளா? அந்தப் புள்ள என்ன பண்ணிச்சின்னு ஏதாச்சும் கேட்டீயா நீ?” என்று மூளை கேள்வி கேட்டது.

“அவெ என்ன வேணும்னாலும் பண்ணிட்டு போட்டும். அதுக்குன்னு அடிப்பாகளா? சின்னப் புள்ளைய அடிக்கிறதுலாம் என்ன பழக்கம். முதல்ல செல்விக்காட்ட சொல்லி, பேச சொல்லனும்" என்று நினைத்துக் கொண்டான்.

ஆனால் அதற்கெல்லாம் வேலையே இல்லை என்பது போல், பக்கத்து வீட்டுப் பெண், நிலா அழுதுக் கொண்டு தாத்தா வீட்டுக்கு சென்றதை தாமரையிடம் சொல்ல, நேரே அங்குத்தான் சென்றார்.

அதற்கு முன்னே செல்வியிடம் நிலா, தன் தந்தை அடித்ததை சொல்லியிருக்க, தாமரையைப் பார்த்ததும், “இங்கப்பாருக்கா, மாமா பண்றது ஏதும் சரியாப்படல, அதென்ன வயசு வந்த புள்ளைய கை நீட்டி அடிக்கிறது. இப்படில்லாம் புள்ளைய அடிக்கிறதா இருந்தா, அவள உன் கூட அனுப்ப மாட்டேன். அவெள்ள நானே வச்சிக்கிறேன். நீயும், உன் புருஷனும், ஒருத்தர ஒருத்தர் அடிச்சுக்கோங்க” என்று திட்டினார் செல்வி.

அங்கே தாமரைக்கோ, “உங்க பொண்ணு, உங்க பொண்ணா உங்க வீட்டுல இருக்கிற வரை, அந்த பொண்ணு உசுருக்கு ஆபத்துத்தான்" என்று ஜோசியர் சொல்லிய வார்த்தைகள் சட்டென்று நினைவுக்கு வந்து அவரை பயமுறுத்தியது.

அதில், ஒரு நொடி தேங்கி நின்றவர், “இன்னிக்கு நிலா இங்கனையே இருக்கட்டும். ஸ்கூல் ட்ரஸ கொடுத்து விடுறேன்" என்று சொல்லிவிட்டு தாமரை சென்றிருந்தார்.

தாமரை முகத்தில் தெரிந்த கவலை, செல்வியை யோசிக்க வைத்தாலும், “சரி அப்புறமா கேட்டுக்கலாம்" என்று அவரும் உள்ளே சென்றுவிட்டார்.

அதன் பின்னான நாட்கள், நிலா அந்த பெரிய வீட்டில் தங்கித்தான் பள்ளி சென்று வந்தாள்.

செந்தில் தாமரையிடம் எவ்வளவோ சொல்லியும், அவரோ பிடிவாதமாய், “நான் இல்லாத நேரத்துல புள்ளைய கை நீட்டியிருக்கீங்க. இப்போ என்ன என் பொண்னு, என் தங்கச்சி கூடத்தான இருக்கா. அவ கூட இருக்கட்டும்" என்று முடித்து விட்டார்.

அவரும் அதன் பின் எதுவும் சொல்லவில்லை. 

“ஆத்தாவும், பொண்ணும் என்னவோ பண்ணிட்டு போங்க" என்று திட்டிவிட்டு அவர் வேலையைப் பார்க்க சென்றார்.

அதன் பின்னான, நாட்கள், சரசரவென மாதங்களாய் மாறி விறுவிறுவென்று கழிந்தது. நிலா மீண்டும் அவளுடைய வீட்டுக்கு சென்றிருந்தாள். ஆனால் அவள் அங்கு இருந்ததை விட, தாத்தா வீட்டில் தான் அதிக நேரம் இருந்தாள். 

எப்போதாவது, கதிரும், நிலாவும் எதேட்சையாய் பார்த்துக் கொள்வார்கள். அவள் அழுகாமல் இருப்பதே நல்லது என்பது தான் அவனின் எண்ணம். கண் மூடி கண் திறக்கும் முன், நிலா பதினொன்றாம் வகுப்பு முடித்து பன்னிரெண்டாம் வகுப்புக்குள் அடி எடுத்து வைத்திருந்தாள்.

இங்கே மீண்டும் கதிருக்கு பெண் பார்க்கும் படலத்தை அனைவரும் ஆரம்பித்தனர். ஆனால் கதிரோ, வேண்டவே வேண்டாம் என்ற முடிவோடு மறுத்திருந்தான்.

இதற்கிடையில், பிரியா வேறு கதிரைப் பார்க்க, அவனுடைய மில்லிற்கே வந்து விட்டாள். அவனோ அப்போதும் அவளிடம் பேச மறுத்து அங்கிருந்து சென்றிருந்தான். ஏனோ ஒரு முறை திருமணம் தடைப்பட்டிருக்க, மீண்டும் அதை பற்றி சிந்திக்க கூட அவனுக்கு நேரமிருக்கவில்லை.

ஆனால் இப்போது சங்கரேயன் உடல் நிலையும் மோசமாய் இருக்க, செல்விதான் கதிரிடம் பேசினார்.

“நான் சொன்னாலும் கேட்க மாட்டீங்க. என்னமோ பண்ணுங்க" என்று விட்டு விட்டான். அவனுக்கு உடன்பாடில்லை தான். ஆனாலும், தந்தை உடல் நிலையைக் காரணம் காட்டி கேட்கும் போது அவனுக்கு மறுக்க முடியவில்லை.

இங்கே நிலாவோ முற்றும் முழுதாக பாடப் புத்தகங்களுக்குள் மூழ்கி விட்டாள். படித்து முடித்து என்ன செய்யப் போகிறாள்? என்றெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பிலும், நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்பது மட்டுமே அவளுடைய ஒரே கனவாய் இருந்தது.

இப்படி இரு வேறு திசையில் சென்றுக் கொண்டிருந்தவர்களை இழுத்து ஒரு கயிற்றில் கட்டுவது போல், தாமரை கதிரின் முன் வந்து நின்றிருந்தார்.

(எதே? இல்லையே, இந்தக்கா ரோஷக்காரவுகளாச்சே. உசுரே போனாலும், தம்பி முன்னாடி வர மாட்டாகளே. செரி என்ன விஷயம்னு, அடுத்த எபிசோட்ல பார்கலாம். அதுக்கு முன்னாடி, கதை எப்படி போயிட்டு இருக்கு? உங்களுக்குலாம் பிடிச்சிருக்கா? இல்லையா? இப்படி எதையாச்சும் கமெண்ட்ல மறக்காம சொல்லிடுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணிக்கோங்க)

  • தென்றல் தீண்டுமா?

 

Comments   3

*** தென்றல் – 30 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***