தென்றல் – 29

நிலா பத்தாம் வகுப்பில், பள்ளியிலேயே முதல் மாணவியாய் வந்திருந்தாள். அதை அறிந்துக் கொண்ட கதிருக்கு, அத்தனை சந்தோசம். கதிருக்கு மட்டும் அல்ல, அந்த பெரிய வீடு மொத்தமுமே, சோகம் மறந்து நிலாவின் வெற்றியைத் தான் கொண்டாடியது. அன்று முழுவதும் நிலா அங்குத்தான் இருந்தாள்.

கதிர் டவுனுக்கு சென்று, நிலாக்கு பிடித்த ஸ்வீட், பழங்கள் அத்தனையையும் வாங்கிக் கொடுத்திருந்தான். அது பத்தாது என்று அவளிடம், “உனக்கு ஏதாச்சும் வேணுமா?” என்று கேட்டான்.

அவளோ, “ம்ஹூம்" என்று வேகமாய் தலையாட்ட, “செரி. இதே மாதிரி ப்ளஸ் டூ லையும் நல்ல மார்க் எடுத்துடனும். செரியா?” என்று கேட்டான் கதிர்.

“ம்" என்று அதற்கும் அவள் தலையாட்ட, “செரி போ” என்றான் அவன். அவளோ, அப்படியே அங்கேயே நிற்க, அதைப் பார்த்து, “என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.

“அந்த பேனாவ நான் வச்சிக்கலாம் தான?” என்று கேட்டாள் நிலா. “எந்த பேனா?” என்றவனுக்கு சட்டென்று அது நினைவிலேயே இல்லை. சில நிமிடங்களுக்கு பின்னே அன்று அவன் கொடுத்த பேனாவைப் பற்றி பேசுகிறாள் என்பதே அவனுக்கு புரிந்தது.

அதில் அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது. இப்போது அவன் இருக்கும் மன நிலையில், அவள் வந்து, இந்த ஊரைக் கேட்டிருந்தால் கூட, வாங்கி கொடுத்திருப்பான். அவளோ, நூறு ரூபாய் பேனாவை கேட்டாள்.

“செரி நீயே வச்சுக்கோ” என்று அவன் சொல்ல, “ம் தேங்க்ஸ்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஓடியிருந்தாள். ஓடுபவளைப் பார்த்தவன், அவளுக்கென்று வாங்கி வந்த தங்க செயினைப் பார்த்தான்.

அதில் மீண்டும், “நிலா” என்று அவன் அழைக்க, ஓடியவள் நின்று திரும்பி அவனைப் பார்த்தாள்.

“இங்க வா” என்று அவன் அழைக்க, அவளும் அவனின் முன் வந்து நின்றாள். வந்து நின்றவளின் கரத்தில், அவன் வாங்கி வந்திருந்த அந்த டாலர் செயினை கொடுத்தான்.

நிலா வடிவ டாலருடன் இணைந்து கோர்க்கப்பட்டிருந்த மெல்லிய செயின், நிச்சயம் அவளுக்கு அழகாகவே இருக்கும்.

அவளோ அதை வாங்க தயங்க, “பரீட்சையில நல்ல மார்க் வாங்குனதுக்கு, என்னோட கிப்ட். இதே மாதிரி நீ நிறையா கிப்ட் என்கிட்ட இருந்து வாங்கிக்கனும்” என்றவனுக்கு, மனதில் சிறிதாய் கூட வேறு யோசனை எல்லாம் கிடையாது.

வாங்கிக் கொண்டவளுக்கும் கிடையாது. அதிலும் அவளுக்கு, அதில் இருந்த நிலா டாலர் அத்தனை பிடித்திருந்தது. ஆனாலும் அன்னையை நினைத்து பயம் வர, “ஆ..ங் இல்ல வேணாம்" என்றாள்.

“ஏன் பிடிக்கலையா?” என்று கேட்டான் கதிர். “ஆ..ங் பிடிச்சிருக்கு. ஆனா அம்மா” என்றவளுக்கு, இப்போது கூட தன் அன்னை, அவன் தனக்கு சீராய் செய்த நகைகளை எல்லாம் போட விடாமல், இவளிடம் இருந்து பிடுங்கி, செல்வியிடம் கொண்டு வந்து கொடுத்து விட்டு வந்தது நினைவில் இருந்தது.

அதிலும், அவளுக்கு சீராய் வந்திருந்ததிலேயே, அந்த மயில் வடிவிலான நீண்ட டாலர் செயின் அவளுக்கு அத்தனை பிடித்திருந்தது. அதை எடுத்து கழுத்தில் போட்டு பார்க்கும் முன்னே தன்னிடம் இருந்து பறித்து சென்றிருந்தார். அதன் பின் செல்வி தான் சண்டைப் போட்டு, தாமரையிடம் அந்த நகையை மீண்டும் கொடுத்து விட்டு சென்றார். அதன் பின் தெரியாமல் கூட அந்த நகைகளை எல்லாம் அவள் தொடவில்லை.

இப்போது இதை எல்லாம் யோசித்து அவள் தயங்க, அவனுக்குமே தன்னுடைய அக்கா குணம் தெரியுமே. அதனால் எதுவும் சொல்லாமல், அதை வாங்கிக் கொண்டு நகர்ந்தான்.

சட்டென்று அவன் சட்டையை மெல்ல பிடித்தாள் நிலா. அதில் அவன் திரும்பி பார்க்க, அவனுடைய முகம் அத்தனை இறுகியிருந்தது.

“இத நான் போட்டுகட்டுமா?” என்று அவன் கரத்தில் இருந்த செயினைப் பார்த்துக் கேட்டாள்.

சில நொடிகள் முன் அவள் தான் வேண்டாம் என்று கூறினாள். இப்போது அவளே கேட்கவும், “உங்கம்மாக்கு பிடிக்காது" என்றான் கதிர்.

“எனக்கு பிடிச்சிருக்கு" என்று அவள் சொல்ல, அவனின் புருவம் சில நொடிகள் அவளை அதிர்ச்சியும், ஆச்சர்யமுமாய் பார்த்தது. ஏனோ அவள் பிடித்துள்ளது என்று சொல்லிய பின், அதை அவளிடம் கொடுக்காமல் இருக்க மனம் வரவில்லை.

அதனால், அவள் கரத்திலேயே மீண்டும் கொடுத்தான். உடனே தான் அணிந்திருந்த செயினை கழட்டிவிட்டு, அவன் கொடுத்ததை போட்டுக் கொண்டாள்.

அவள் கழுத்துக்கு, அந்த டாலர் செயின் அத்தனை அழகாய் இருந்தது. அவளுமே அதை தொட்டுப் பார்க்க, அவளுக்குமே அத்தனைப் பிடித்திருந்தது. “செரி போ” என்று அவன் சொல்ல, “ஒரு நிமிஷம்" என்றாள் நிலா.

அதில் அவன் மீண்டும், “என்ன?” என்றான். “அத் அது. அம்மா கேட்டா, சித்தி வாங்கி கொடுத்தாகன்னு சொல்லட்டுமா?” என்று சிறு கெஞ்சலோடு கேட்டாள். ஏனெனில் எப்படியும், தன் அன்னைக்கு, இவனைப் பிடிக்காது. இவன் வாங்கி கொடுத்தது என்றால், நிச்சயம் இதையும் தன்னிடம் வைத்துக் கொள்ள விட மாட்டார். ஆனால் அவளுக்கோ அந்த செயின் அத்தனைப் பிடித்திருந்தது. அதை தன்னிடமே வைத்துக் கொள்ள ஆசை. சிறு பிள்ளைத் தனம் தான். ஆனாலும் அக்காவின் குணம் அறிந்ததால் அவனும், “செரி. ஆனா இப்படி வேற எதுக்கும் அம்மா கிட்ட பொய் சொல்லக் கூடாது. ஏன்னா பொய் சொல்றது தப்பு” என்று அழுத்தம், திருத்தமாய் கூறினான்.

“ம்" என்று அவள் தலையாட்டுவதற்கும், “நிலா” என்று செல்வி உள்ளே இருந்து அழைப்பதற்கும் சரியாக இருக்க, “உன்னத்தேன் கூப்பிடுறாக, உள்ளாரப் போ” என்றான். அவளும் தலையாட்டிவிட்டு அப்படியே வேகமாய் ஓடினாள். ஓடியவள், செல்வியிடம் கதிர் வாங்கிக் கொடுத்த செயினைக் காட்டினாள். பின் அவரிடமும், அன்னையிடம் நீங்கள் வாங்கி கொடுத்ததாக சொல்ல கூறினாள். அவருக்கும் கூட, நிலா பொய் சொல்ல சொல்வதிலோ? இல்லை கதிர் அவளுக்கு வாங்கி கொடுத்ததிலேயோ, எந்த தவறும் தெரியவில்லை.

ஏனோ, சோகம் மறந்து அந்த வீடு இயல்புக்கு மீண்டிருக்க, நிலா ஆசைப்பட்டப்படியே முதல் க்ரூப்பே எடுத்திருந்தாள்.

தாமரைக்கோ, அவள் முதல் மதிப்பெண் எடுத்து வந்ததிலோ? அவள் கழுத்தில் கிடக்கும் செயினோ எதுவுமே மூளைக்கு பதியவில்லை. அவர் ஜோசியர் சொல்லிய விஷயத்தை கேட்டு நொறுங்கிப் போயிருந்தார்.

அதனால் நிலா தன் அன்னையிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியமே வந்திருக்கவில்லை.

இப்படியே ஒரு பத்து நாள் கடந்திருக்க, கதிரும் அந்த நிலப் பிரச்சனைக்கு கோர்டில் மனு கொடுத்திருந்தான். அதனால் இப்போது கேஸ் கோர்டில் இருக்க, இப்போதைக்கு எந்த பிரச்சனை என்ற நிலைத்தான்.

பிரியாவும் ஓரிரு முறை வேறு வேறு நம்பரில் இருந்து கால் செய்து பார்த்து விட்டாள். அவனோ அவள் குரல் கேட்ட அடுத்த நொடியே, அந்த நம்பரையும் ப்ளாக் செய்து விட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டான். நிலாவும் பள்ளி செல்ல ஆரம்பித்திருந்தாள். பள்ளி விட்டு வரவும், ஒரு வித மகிழ்ச்சியோடு, வீட்டுக்கு வந்தவளை, உள்ளே கேட்ட குரல் அப்படியே வாசலில் நிறுத்தியிருந்தது.

பாண்டியும், செந்திலும் தான் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஏனோ பாண்டி பார்க்கும் பார்வை இப்போதெல்லாம் நிலாவுக்கே பிடிக்கவில்லை. என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. பெண்ணுக்கே உண்டான எச்சரிக்கை உணர்வு, அவன் இருக்கும் பக்கமே அவளை அடி எடுத்து வைக்க விட வில்லை.

வீட்டில் தாமரையும், பாட்டியும் இருப்பது போல் கூட தெரியவில்லை. அதில், வீட்டிற்குள் செல்லாமல், அப்படியே செல்ல முயன்றாள்.

அதற்குள், “வூட்டுக்கு வந்துட்டு, எங்கன போற? உள்ளார வா” என்று செந்தில் அதட்டி அழைக்கவும், வேறு வழியின்றி உள்ளே சென்றாள்.

பாண்டியின் பார்வையோ, அவளை மேலிருந்து கீழாய் பார்த்தது. “நல்லா வளர்ந்துட்டாளே மாமா” என்று பேசியவனின் விசம வார்த்தையின் அர்த்தம் செந்திலுக்கு புரியவில்லை.

அவரோ, “பொம்பள புள்ளன்னா அப்படித்தேன் மாப்பிள்ள. சட்டுன்னு வளர்ந்திருங்க" என்று சாதாரணமாய் சொல்ல, அவனோ அவளை மீசையை நீவியப்படி பார்த்தான். அதில் இவளுக்கு உடல் கூசியது. ஒரு வித அச்சம் சூழ, அப்படியே அறைக்குள் செல்ல முயன்றாள்.

அதற்குள் செந்திலோ, “அம்மா எங்க? உன்கிட்ட ஏதாச்சும் சொல்லிட்டு போனாளா?” என்றார்.

“ம் இல்லப்பா” என்றவளுக்கு அங்கே நிற்கவே முடியவில்லை. “செரி அப்போ நீயே போயி காபி போட்டு எடுத்துட்டு வா” என்றார் செந்தில்.

“ம்" என்றவள் சமையல்கட்டுக்குள் செல்லப் போக, “அட என்ன மாமா. புள்ளயே இப்பத்தேன் ஸ்கூல் விட்டு வந்திருக்கு, அந்தப்புள்ளட்ட வேலை சொல்லிட்டு, அதெல்லாம் எனக்கு ஏதும் வேணாம்” என்றான் பாண்டி.

“என்னத்த படிக்கிறாளோ?” என்ற செந்திலுக்கு படிப்பின் மகிமை புரியவே இல்லை. “ஸ்கூல் பர்ஸ்டுன்னு சொன்னாக. எத்தன மார்க்கு" என்றான் பாண்டி.

“அதான் கேட்கிறாருல, வந்து சொல்லு" என்று செந்தில் சொல்ல, அவளோ, மெதுவாய், “496” என்றாள். அவள் பொதுவாகவே மெதுவாய் தான் பேசுவாள். இப்போது சுத்தம்.

“கிட்ட வந்து சொன்னாத்தேன்ன எமக்கு கேட்கும்” என்று பாண்டியோ இன்னும் அவளை கிட்ட நிறுத்தி பார்க்க கூறினான். அவளோ நின்ற இடத்தை விட்டு நகராமல், “496” என்று இம்முறை சற்று சத்தமாகவே பதிலளித்தாள்.

“பெரிய மார்க்குத்தேன் வாங்கிருக்க. மாமன் முறையில நானும் ஏதாச்சும் கொடுக்கனும்ல" என்று கேட்டவனின் பார்வை அவள் கழுத்துக்கு கீழ் இறங்க, அவளோ வேகமாய் முகத்தை திருப்பினாள்.

“அட என்ன மாப்பிள்ள? அதெல்லாம் ஏதும் வேணாம்" என்று செந்தில் சொல்ல, “அது எப்படி மாமா? என் மாமா பொண்ணு, இம்புட்டு மார்க் எடுத்திருக்கா. அப்போ நான் ஏதாச்சும் கொடுக்கனும்ல” என்று கேட்டப்படி எழுந்தவன், தான் கழுத்தில் அணிந்திருந்த செயினைக் கழட்டியப்படி அவளை நெருங்கினான்.

செந்திலுக்கோ பெரிதாய் எதுவும் தவறாய் தெரியவில்லை. ஆனால் நிலாவுக்கோ அவன் நெருங்குவது சுத்தமாய் பிடிக்கவில்லை. அதிலும் அந்த செயினில் இருந்த பாண்டி என்ற பெயரே அவளுக்குள் ஒரு அறுவறுப்பைக் கொடுத்தது.

அவனோ அவள் மறுப்பை மீறி அந்த செயினை போட்டு விடப் போக, வேகமாய் அந்த செயினை தட்டி விட்டாள் நிலா.

அதில் பாண்டிக்கு அவமானமாகிவிட, அந்த செயினை கூட எடுக்காமல், அங்கிருந்து வெளியில் சென்றிருந்தான். அதைப் பார்த்து செந்திலோ கோவமாய், “அப்படி என்ன பிடிவாதம் உனக்கு?” என்று அவள் கன்னத்தில் ஓங்கி அடித்திருந்தார்.

தந்தை அடித்ததில், அவளுக்கு கண்ணெல்லாம் கலங்கி விட, அழுதுக் கொண்டே, வீட்டை விட்டு வெளியில் தன் தாத்தா வீட்டுக்கு ஓடினாள்.

கதிர் அப்போதே, செல்வியிடம் ஏதோ கொடுக்க அங்கு வாசலுக்கு வர, அவனை வந்து கட்டிக் கொண்டாள் நிலா.

(ரைட்டு, அடுத்த பஞ்சாயத்த இழுக்க ரெடியாகிட்டா. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அப்புறம் காலையில ஏழு மணிக்கு புது எபிசோட் அப்டேட் ஆகிடும். சோ மிஸ் பண்ணாம படிங்க. அப்புறம், இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மிஸ் பண்ணாம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   0

*** தென்றல் – 29 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***