தென்றல் – 27

இன்னும் திருமணத்துக்கு பத்து நாளே இருக்க, பத்திரிக்கை எல்லாம் அடித்து வீடு வந்து சேர்ந்திருந்தது. திருமண நாளும், நிலாவுடைய பத்தாம் வகுப்பு ரிசல்ட் நாளும் ஒன்றாக அமைந்திருந்தது. அவளின் எண்ணம் மொத்தமும், எப்படியாவது நன்றாக மார்க் எடுத்து விட வேண்டும் என்பது மட்டுமே. ஆனால் தாமரைக்கோ நாளுக்கு நாள் அச்சம் கூடிக் கொண்டே இருந்தது.

நேற்று தாமரை இல்லாத நேரம் வீட்டுக்கு வந்த பாண்டி நிலாவிடம், “என்ன மாமன் வந்து நிக்கிறேன். என்னென்னு கேட்காம போறவ?” என்று அவன் அவள் கையைப் பிடித்து நிறுத்தியிருக்க, அவளோ அழுது பயந்து பின் பக்கம் ஓடியிருந்தாள். எதார்த்தமாக அங்கு வந்த சங்கரேஸ்வரியின் கண்ணில் அது விழுந்து விட, பேத்தியை அணைத்துக் கொண்டவர், வீட்டுக்கு வந்த மகனையும் கத்து கத்து என்று கத்திவிட்டார்.

“இப்போ என்னாச்சுன்னு இப்படி கத்திட்டு கிடக்கிறவ, உரிமை உள்ளவன் தான, செத்த விளையாட்டா ஏதாச்சும் பேசியிருப்பான். அதே ஏன் நீ ஊதி பெருசாக்கிட்டு இருக்கிறவ, அதுவும் போக, உம்ம பேத்திய பத்தி தெரியாதாக்கும், நான் சத்தமா குரல்ல உசத்திட்டாளே மூக்கு விடைக்க அழுவா. அதுக்கெல்லாம் பஞ்சாயத்து கூட்டிட்டு" என்று செந்தில் சொல்லிவிட்டு சென்றிருந்தார்.

“எவெம்ல, என் பேத்திக்கு முறை? உனக்கு கூறு கீறு கெட்டுப் போயிடுச்சாள்ல? எம்ம வீட்டுக்காரர் மட்டும் இன்னேரம் உயிரோட இருந்திருந்தா இப்படி எல்லாம் நடக்குமா? எம் பேத்தி கைய பிடிச்சவன் கைய உடைச்சு விட்டிருப்பானே” என்று சங்கரேஸ்வரியும் புலம்பியப்படி சென்று விட்டார்.

ஏனோ தாமரைக்கு செந்திலின் போக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. பெத்த தகப்பனுக்கு அப்படி என்ன, பிள்ளையை விட அவன் உயர்ந்து போய் விட்டான் என்ற எண்ணம். செந்திலோ வேறு ஒரு பிரச்சனையில் சிக்கியிருந்தார். அவர் புதிதாய் ஆரம்பித்த தொழில் மொத்தமும் நஷ்டமாகியிருக்க, அவருக்கு பாண்டி தான் வட்டிக்கு வாங்கி பணம் கொடுத்திருக்கிறான். அந்த விஷ்வாசம், அவரை, அவனைப் பற்றி தவறாக சிந்திக்க விடவில்லை.

அங்கே செல்வியோ சற்று சோர்வாய் தான் அமர்ந்திருந்தார். ஏனோ தினமும் நாள் தவறாமல் அழைத்து பேசும் பிரியா, இந்த ஒரு வாரமாய் அழைக்கவில்லை. அவரே அழைத்தாலும் அவளுடைய அம்மாத்தான் ஏதோ பேசி கால்லை வைத்திருந்தார்.

அதை வீட்டுக்கு வந்திருந்த முருகேசனிடம் அப்படியே சொல்லிவிட அவரோ, “அடியே புருஷன் நான் பேசலன்னு கவலைப்பட்டா செரி. நாத்தனார்காரி பேசலன்னா, இப்புடி மூஞ்ச தூக்கி வச்சிருக்க. எப்படியும் வீட்டுக்கு வந்ததும், நாத்தனர் மதினி சண்டைத்தான போடப் போறீக" என்று சீண்டலாய் கேட்டான்.

அதில், தன் கணவரை முறைத்தவரோ, “ச் என்ன மச்சான்? நானே குழம்பி போய் கெடக்கேன். நீங்களும் கேலி பண்ணிட்டு இருக்கீக" என்று சோர்வாய் கேட்டாள் செல்வி.

‘மச்சான்’ என்ற அவளின் அழைப்பெல்லாம், குழப்பமாய் இருக்கும் போது மட்டுமே அழைப்பார். அதிலேயே தன் மாமன் மகள் மனம் சரியில்லை என்று தெளிவாய் புரிந்தது.

அதில் அதுவரை இருந்த விளையாட்டுத்தனத்தை ஒதுக்கிவிட்டு, “அங்கேயும் கன்னால வேலை எல்லாம் ஆரம்பிச்சிருப்பாக. அந்தப் புள்ளைக்கு தெரிஞ்சவங்க, எல்லாருக்கும் பேசும் தான. அதுவும் போக நாள் நெருங்கிட்டு இருக்கு இல்லையா? இன்னேரம் எதையாச்சும் பேசி, பிரச்சன வந்துட கூடாதுன்னு கூட அவுக வூட்டுல யோசிச்சிருக்கலாம். எப்படியும் முத பத்திரிக்கை சம்பந்தி வீட்டுக்குத்தான வைக்கனும். அங்கப் போயி பேசிக்கலாம்" என்று மனைவியை சமாதானப்படுத்தினார்.

அவர் சொல்வதில் இருக்கும் நியாயமும் புரிய, “செரிங்க. இப்பவே நான் அவுகளுக்கு போன்ன போட்டு, எப்போ வரலாம்னு கேட்கிறேன்" என்று செல்வி அங்கிருந்து சென்றிருந்தார்.

என்னத்தான் மனைவியிடம் சமாதானமாய் பேசி அனுப்பிவிட்டாலும், அவருக்கு சற்று உறுத்தலாய்தான் இருந்தது. அதனால் கதிரைப் பார்க்க உடனே கிளம்பியிருந்தார்.

கதிரோ, அப்போது தான் கலெக்டர் ஆபிஸ் செல்வதற்காக, கிளம்பிக் கொண்டிருந்தான்.

“என்ன மாப்பிள்ள? ஏதும் தூரம் கிளம்புறீகளா?” என்று கேட்டப்படி அவன் தங்கியிருக்கும் வீட்டுக்குள் நுழைந்தான் முருகேசன்.

மாமனைப் பார்த்ததும் ஏதோ பலம் கிடைத்தது போல், “மாமா, இப்பத்தேன் உங்க கிட்ட பேசனும்னு யோசிச்சிட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டீக. இன்னிக்கு உங்களுக்கு ஏதும் முக்கியமான சோழி இருக்கா மாமா?” என்றான் கதிர்.

அதிலேயே பேச வந்ததை விட்டு விட்டு, “அப்படி ஏதும் இல்லையா. என்ன சேதி?” என்று முருகேசன் கேட்க, “அப்போ அப்படியே போயிட்டே பேசுவோம்மா” என்ற கதிருக்கு வீட்டில் வைத்து பேச மனம் இல்லை.

“சரி" என்று முருகேசனும், கதிரும் கிளம்ப, அதைப் பார்த்த செல்வியோ, “ஏய்யா. நாளைக்கு முகூர்த்த கால் ஊண்டனும். அதனால ரவைக்குள்ள வீடு வந்து சேர்ந்திடுய்யா” என்று நினைவுப் படுத்தினார்.

“ம்" என்று கதிர் தலையாட்டினாலும், செல்வி முருகேசனிடமும் “கூட்டிட்டு வந்திடுங்க" என்று சொல்லிவிட்டே உள்ளே சென்றார்.

“என்ன மாமா, அக்காக்கும், உங்களுக்கும் ஏதும் சண்டையா? அக்கா முகம் வாடி கெடக்கு?” என்றப்படி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

“ஏன்ல? பொண்டாட்டிட்ட ஐஞ்சு நிமிஷம் பேச முடியாம கெடக்கேன். இதுல நானு உம்ம அக்கா கூட சண்டைப் போடுறேனாக்கும். உன் அக்கா என்ன ஊரையா யோசிப்பா. உன் கன்னால வேலை நடக்குதுல்ல, அதத்தேன் யோசிச்சுட்டு இருப்பா” என்று முருகேசனும் கிண்டலாய் சொல்ல, கதிருக்கோ அப்போதே, கல்யாண வேலை எல்லாம் இருப்பதே மூளையில் எட்டியது.

“செரி நாளையில இருந்து அப்பாக்கு ஒத்தாசையா நம்மளும் கன்னால வேலைய பார்க்க ஆரம்பிக்கனும்” என்று நினைத்துக் கொண்டான் கதிர். கல்யாண செலவுக்கென்று, அவன் சேமித்து வைத்திருந்த பணத்தில் ஒரு பகுதியை ஏற்கனவே முருகேசன் மூலமாய் தன் அப்பாவிடம் கொடுத்திருந்தான். ஆனாலும் தான் கல்யாண வேலையைப் பற்றி யோசிக்கவில்லை என்ற எண்ணம்.

ஆனால் உண்மையில், கல்யாண வேலையைப் பார்க்கவெல்லாம் அவனுடைய குடும்பத்தில் ஆட்களுக்கு பஞ்சமே இல்லை. செல்வி ஒரு போன் போட்டு அழைத்து விட்டால், அங்காலி, பங்காலியில் ஆரம்பித்து அத்தனை சொந்தமும், நீ, நான் என்று எடுத்துப் போட்டு பார்க்க ஆரம்பித்து விடும். உறவுக்கோ? இல்லை பணத்துக்கோ? அங்கே எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அங்கே வேறு விதமான பிரச்சனைத்தான் நிகழ்ந்துக் கொண்டிருந்தது.

இப்படி இத்தனைப் பிரச்சனை நிகழ்ந்துக் கொண்டிருக்க, அதைப் பற்றிய சிறு சிந்தனைக் கூட இல்லாது, நிலா அறைக்குள் அமர்ந்து டைரி எழுதிக் கொண்டிருந்தாள். தினமும் எழுதும் பழக்கம் எல்லாம் அவளுக்கு கிடையாது.

எப்போதாவது தோன்றினால் எதையாவது எழுதுவாள். இல்லை என்றால் வரைவாள். நிலாவோ நேற்று கண்ட கனவையும், தன்னுடைய பயத்தையும் எழுதிக் கொண்டிருந்தாள்.

தாமரைக்கோ மனம் கேட்காமல், நிலாவுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு, பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் பக்கத்து ஊரில் இருக்கும் ஜோசியர் ஒருவரை பார்க்க சென்றிருந்தார். அப்படியே அங்கிருக்கும் கோவில் ஒன்றுக்கும் செல்லவிருக்க, அன்று இரவு வர தாமதமாகும் என்று நிலாவிடம் சொல்லியவர், சங்கரேஸ்வரி பாட்டியையும் துணைக்கு வைத்து விட்டே சென்றார்.

அதுவும் போக, அன்று பாண்டியும், செந்திலும் வேறொரு வேலையாக வெளியூர் கிளம்பியிருக்க, அந்த தைரியத்தில் மட்டுமே நிலாவை தனியே விட்டு சென்றிருந்தார். முன்பாக இருந்தால் செல்வியிடம் ஒப்படைத்திருப்பார். ஆனால் அங்கேயும் கல்யாண வேலை நடந்துக் கொண்டிருக்க, பிடிக்கிறதோ? இல்லையோ எப்படியும் அங்கேயே ஆயிரம் வேலை இருக்கும். இவளை அங்கே அனுப்பினால், இவள் பின்னால் தான் சுற்றி திரிவாள். அதனாலையே மகளை அங்கு அனுப்பவில்லை.

தனக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது தான், மற்றவர்களுக்கும் தாங்கள் செய்த தவறெல்லாம் நினைவுக்கு வரும் என்பது போல், இப்போதெல்லாம் கதிர் என்ற ஒருவனை நினைக்க கூட அவர் விரும்பவில்லை.

எப்படியோ போகட்டும்? தப்பு செய்தவனுக்கு தண்டனை தானாகவே கிடைக்கும். என்ற எண்ணத்தோடு இந்த திருமண விஷயத்தில் அவர் தலையிடவில்லை.

ஆனால் அவர் தலையிடாமலே, அங்கே பிரியா வீட்டில் ஆயிரம் குழம்பம், சண்டைகள் ஓடிக் கொண்டிருந்தது. செல்வி கால் செய்து பத்திரிக்கை வைக்க வரவா என்று கேட்டியிருக்க, அவர்கள் வீட்டிலோ, “இல்ல எல்லார்கிட்டையும் கேட்டு சொல்றேன். அப்போ வாங்க" என்று முடித்திருந்தார். ஏனோ அவருடைய ஒட்டாத்தன்மையான பேச்சு, செல்விக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. இருந்தும் கடவுளின் மீது பாரத்தை போட்டு விட்டு தன் அப்பாவிடம் அதை சொல்லாமல் மறைத்து விட்டார்.

முன்பு போல் இல்லை இப்போது சங்கரேயனுக்கு கதிரின் திருமணத்தை நடத்தீயே தீருவேன் என்று அப்படி ஒரு முனைப்பு. திருமணத்தில் சின்னதாய் தடை வந்தால் கூட அவருடைய உடல் நிலை பலமாய் அடிவாங்கும். அதனாலையே செல்விக்கு இன்னும் பயம் தான் கூடியது.

அங்கே பிரியாவோ, கதிருக்கு விடாமல் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தாள். அவனோ கலெக்டர் ஆபிஸில் அமர்ந்திருக்க மொபைலை சைலண்டில் போட்டிருந்தான். முருகேசனும் உடன் இருக்க, அவனுக்கு மொபைலை எடுக்க கூட நேரம் கிடைக்கவில்லை.

கதிருக்கும், முருகேசனுக்கும் அன்றைய தினம் முழுவதும் கவர்மெண்ட் ஆபிஸிலேயே கரைந்திருந்தது. இரவு போல் தான் இருவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கதிரோ ஏதோ யோசனையில் இருக்க, முருகேசன் தான் பேசியப்படி வந்தார்.

“என்னல? அரசாங்க உத்யோகம்னு வந்துட்டா, சட்டைய தூக்கிவுட்டுட்டுத்தான் திரியிறானுங்க. இவனுங்க மட்டும் ஆகாயத்துல இருந்து தொப்புன்னு குதிச்சிட்டானுங்களா என்ன? எல்லாம் அதிகாரம் கையில இருக்குன்ற திமிரு” என்ற முருகேசனுக்கோ, வந்த வேலை முடியவில்லை என்பதைத் தாண்டி, அதிகாரிகளுடைய அலட்சிய பதில் கோவத்தை தான் வரவழைத்தது.

ஆனால் அதைக் கேட்ட கதிரின் கைகள் தான் இறுகியது. ஆசை, ஆசையாய் தன்னுடைய செலக்சன் லெட்டருக்காக காத்திருந்தவனின் கைகளில் ஏறியது என்னவோ கை விலங்குத்தான். அதை இப்போது யோசித்தவனுக்கு, சாலை என்ற கவனம் சிதறி பைக்கை பள்ளத்தில் விட்டிருக்க, அவன் கண் விழிக்கும் போது மருத்துவமனையில் தான் இருந்தான். அவனைச் சுற்றி அவனுடைய மொத்த குடும்பமும் நின்றிருந்தது. செல்வி எல்லாம் அழுது அழுது ஓய்ந்து போய் விட்டார்.

அதில் உடன் வந்த தன் மாமாவுக்கு என்ன ஆனதோ? என்று பதறி, “மாமா” என்று வேகமாய் எழுந்தான்.

காலில் சுள்ளென்ற வலி எடுக்க, அதற்குள் அங்கு வந்த முருகேசனோ, “ஏய்யா மாப்பிள்ள செத்த படு. எனக்கு ஒன்னுமில்ல" என்றார். அவருக்குமே நெற்றியிலும், கையில் அடிப்பட்டிருக்க கட்டு போடப்பட்டிருந்தது. ஆனால் அவர் புல் தரையில் விழுந்திருக்க ஆழமான காயம் ஏதும் இல்லை.

அவருக்கு பெரிதாய் ஒன்றும் இல்லை என்று தெரிந்தப் பின்னே அவனுடைய இதயம் சீராக துடிக்க ஆரம்பித்தது.

அதற்குள் பிரியாவின் வீட்டில் இருந்தும் அவனைப் பார்க்க வந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும், செல்வியோ கண்ணைத் துடைத்து விட்டு, “வாங்க அத்தை, வாங்க மாமா” என்றார்.

அவர்கள் முகத்திலோ அத்தனை சங்கடம் தெரிந்தது. அதுவே செல்விக்கு ஒரு வித அச்சத்தைக் கொடுத்தது.

“எப்படி இருக்கீங்க?” என்று பொதுவாய் இருவரிடமும் நலம் விசாரித்தார்கள். கதிருக்கோ எதுவோ சரியில்லை என்று அடித்து சொல்லியது.

முருகேசன் தான் சூழ்நிலையை கையில் எடுத்து, “அது ஒன்னும் பெருசாலாம் இல்ல. ரெண்டு நாள்ல சரியாகிடும்னு டாக்டர் சொல்லிருக்காரு" என்றான்.

(அவங்க முதல்ல எதுக்கு வந்திருக்காங்கன்னு கேளு. சரி அடுத்து என்னத்தான் நடக்கப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, பிரியா வீட்டுல என்ன சொல்லுவாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க? அத கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க.)

தென்றல் தீண்டுமா?

Comments   0

*** தென்றல் – 27 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***