கதிர் நிலாவை அத்தனை அக்கறை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க, பிரியாவுக்கோ, நிலாவின் மீது காரணமேயின்றி வெறுப்பு படர்ந்தது. ஆனால் கதிர் அப்படி எல்லாம் யோசித்து எதையும் செய்யவில்லை. நிலாவை, செல்வி அப்படி சிறு குழந்தையாகவே பார்த்து விட்டார். அதை கதிரும் பார்த்திருக்கிறான். இப்போது அவனை நம்பி அவள் வந்திருக்கிறாள். அதனால், அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவனுடையது. அப்படி மட்டுமே யோசித்தான்.
ஒரு வழியாய் சாப்பிட்டு முடித்து, கதிர் கிளம்ப போக, நிலா சற்று தள்ளி நின்று ஐஸ்கீரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“அடுத்து எப்போ மீட் பண்ணலாம்?” என்றாள் பிரியா. அதில் புருவத்தை நீவியவன், “இன்னிக்குத்தான மீட் பண்ணிருக்கோம். அடுத்து குல தெய்வ கோவில் போற வேலை வேற இருக்கு. அடுத்தடுத்து பார்க்கத்தான போறோம்" என்றான்.
“அதெல்லாம் பேமிலி மீட்டப் தான? நீங்களும், நானும் தனியா பேச வேண்டியதெல்லாம் இருக்கே” என்றாள் பிரியா. “கல்யாணத்துக்கு முன்னாடி தனியா பேச என்ன இருக்கு? கல்யாணத்துக்கப்புறம் பேசிக்கலாம். அப்புறம் எல்லாத்தையும் இப்பவே பேசிட்டா, அப்புறம் பேசுறதுக்கு எதுவும் இல்லாம போயிடும்" என்று சொல்லிவிட்டு நிலாவைப் பார்க்க, அங்கே கடையில் நின்றிருந்தவனோ, “என்ன படிக்கிறீங்க? எந்த ஸ்கூல் யூனிபார்ம் இது" என்று அவளிடம் சிரித்துப் பேசியப்படி அவளை தொடப் போக, சட்டென்று அங்கே விரைந்திருந்தான் கதிர்.
அவளோ புதிதாய் ஒருவன் தன்னிடம் பேசவும், பயந்துப் போய் பின்னே செல்ல, அதற்குள் கதிரின் மீது மோதி நின்றிருந்தாள். கதிரைப் பார்த்ததும் அவன் கரத்தை இறுக்கமாய் பற்றி அவனுக்குள் பாதியாய் ஒளிந்துக் கொள்ள, கதிரோ அவள் வாங்கிய ஐஸ்கிரீமுக்கு பணத்தை அவனை எரித்து விடுவது போல் தூக்கி வீசினான்.
அதில் அவனோ சட்டென்று சுதாரித்து, “தனியா நின்னுச்சா. அதான் சும்மா பேசிட்டு இருந்தேன்" என்று பதில் கொடுத்தப்படி மீதி சில்லறையை எடுத்து நீட்டினான்.
அவனோ, மீசையை முறுக்கியப்படி அவனை முறைத்து விட்டு, நிலாவை கையோடு அழைத்துக் கொண்டு அங்கிருந்து ஒரு வேகத்தில் கிளம்பியிருந்தான். அவனுக்கு அத்தனைக் கோவம். அதை விட, நிலாவின் மீதும் வந்தது.
இப்போதிருக்கும் சமுகத்தில், இவள் இப்படி பயந்து ஒதுங்கினாள், அவர்கள் ஆட்டி வைக்க மாட்டார்களா? இது குறித்து செல்வியிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
பைக்கை ஸ்டார்ட் செய்யும் போதே பிரியாவின் நினைவு வர, “சிட்” என்று வேகமாய் திரும்பி பார்த்தான்.
அதற்குள் அவனின் அருகில் வந்த பிரியா, “நான் கூட, இன்னிக்கு ஒரு ஆக்சன் சீன் இருக்கும்னு நினைச்சேன். ஜஸ்ட் மிஸ்" என்று சீண்டலாக சிரித்தப்படியே கூறினாள்.
“எல்லா நேரமும் சண்டைப் போட்டுட்டு சுத்த, நான் ஒன்னும் ரவுடி இல்லைங்க" என்று சீண்டலாய் சொல்லியவன், “சரி நீங்க பார்த்து கிளம்பிடுவீங்கத்தான?” என்று கேட்டான்.
“இல்லன்னு சொன்னா, நீங்க கொண்டு போய் வூட்டுல விடுவீங்களா?” என்று பிரியா சிறு எதிர்பார்ப்போடு கேட்க, நிலா இல்லை என்றாலும் கூட அவன் அழைத்து சென்றிருக்க மாட்டான்.
இப்போது நிலாவும் இருக்க, “ஆ.ங் கல்யணத்துக்கு அப்புறம் கொண்டு போய் விடுறேன். இப்போ ஏற்கனவே லேட்டாயிருச்சி. நாங்க கிளம்புறோம்" என்றவன் நிலாவை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்.
செல்பவனை சில நொடிகள் பார்த்த பிரியா, அதன் பின் அதைப் பற்றி யோசிக்காமல் அங்கிருந்து சென்றிருந்தாள்.
அதன் பின் கதிரும், பிரியாவும் சந்தித்துக் கொள்ளவில்லைத்தான். ஆனால் பிரியா கால் செய்து கதிருடன் பேசிக் கொண்டிருந்தாள். நிலாவுக்கு விடுமுறை விட்டிருக்க, அவளும் கூட கதிரின் கண்ணில் படவில்லை.
அதன் பின்னான வாரம் சட்டென்று சென்று விட, அன்று குடும்பத்துடன் குல தெய்வ கோவில் போக வேண்டியிருந்தது. நிலா செல்வியிடம், “நானும் வரட்டா சித்தி. எனக்கு இங்கன நேரமே போகல" என்று சினுங்கிக் கொண்டிருந்தாள்.
“சும்மாவே உட்கார்ந்திருந்தா எப்படி போகும், இங்கன வந்து துவைச்ச துணிய எடுத்து பிழிஞ்சு காயப் போடு. ஒத்த புள்ளன்னு செல்லம் கொடுத்தா, ஒத்த வேலை பாக்குறது இல்ல" என்று திட்டியப்படி தாமரை துணியை உதறினார்.
“இப்போ ஏன், எங்க மேல உள்ள கடுப்ப, அவெ மேல காட்டுறவ? ரெண்டு நாள் தான, இன்னிக்கு போயிட்டு நாளைக்கு வரப் போறோம். அவ வந்தாத்தேன் என்ன?” என்றாள் செல்வி.
“ஆவாதவன் வீட்டு விஷேசத்துக்குலாம் என் புள்ள வராது. என் ஆத்தாவ கொண்ணவன, என் குல சாமியும் ஏத்துக்காது. நீங்க போறது ஒன்னும்" என்று தாமரை சொல்லி முடிக்கும் முன்னே, “நிறுத்துக்கா. தப்புத்தேன். இங்கன வந்து உம்புள்ளய அழைச்சது தப்புத்தான். அத்தோட விட்டுடு" என்று சொல்லிய செல்வியும் அங்கிருந்து சென்றிருந்தார்.
ஒரு வழியாக குடும்பமாய் காரில் கிளம்பி செல்ல கதிர் தன்னுடைய வண்டியில் சிவாவுடன் வருவதாக சொல்லியிருந்தான். பிரியாவின் குடும்பமும் நேரே கோவிலுக்கு வந்திருந்தனர்.
பிரியாவின் பார்வை முழுவதும் வெள்ளை வேஷ்டி சட்டையில் வந்திருந்த கதிரின் மீது தான்.
அதைப் பார்த்த சிவாவோ, “எண்ணண்ணே, மதினி வச்ச கண் வாங்காம பாக்குறாக, நீங்களும் செத்த அங்கன பாக்கலாம்தான?” என்றான்.
அதில் அவனை முறைத்தவன், அதன் பின் பிரியாவின் பக்கம் திரும்பி நேர் பார்வை பார்த்து, “என்ன?” என்று கேட்டான்.
அவளோ ஒற்றைக் கண் அடித்து, “சூப்பரா இருக்கீங்க" என்றாள். அவளின் செயலில், அவன் சுற்றி பதட்டமாய் பார்க்க, நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை.
“தைரியம்தேன்" என்று மனதிற்குள் சொல்லியவன், வெளியில் சாதாரணமாகவே நின்றிருந்தான். அதன் பின்னும் பிரியா அவனையே பார்க்க, “என்ன?” என்றான் மீண்டும்.
தான் கட்டியிருந்த புடவையை காட்டி, “எப்படி இருக்கு?” என்றாள். அப்போதே அவளை சற்று அழுத்தமாய் பார்த்தவனின் கண்ணுக்கு அழகாகவே தெரிந்தாள்.
“அழகாத்தான் இருக்கு" என்று அவளை நெருங்கும் போது சொல்லி சென்றவன் தான். அவள் நிமிர்ந்து பார்க்கும் போது அவன் இல்லை. அதன் பின்னும் அவள் கண்ணில் அவன் விழவில்லை.
இங்கே பிரியா கையால் பொங்கல் வைக்க சொல்ல, குடும்பம் கூடி தெய்வத்தை நினைத்து பொங்கல் வைத்து, சாமிக்கு படைத்தனர். அதன் பின் குறி கேட்க செல்ல, கதிரும், பிரியாவும் அங்கு செல்லவில்லை.
செல்வி, முருகேசன், சங்கரேஸ்வரன் ஒரு பக்கமும், பிரியாவின் குடும்பம் மறுபக்கமும் நின்றிருந்தனர். குறி சொல்ல வேண்டிய சாமியோ, கண்ணை மூடியவர் தான் திறக்கவே இல்லை.
அதில் அனைவரும் அவரையேப் பார்த்துக் கொண்டிருக்க, “இந்த கல்யாணம் நடக்காது. அதுக்கு மேல நடத்துனா உயிர் பலி நிச்சயம்" என்று கண்ணைத் திறக்காமலே சொல்லிவிட்டு சென்றிருந்தார்.
அதில் மொத்த குடும்பத்துக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி. பிரியாவுடைய அப்பாவுக்கெல்லாம் பெரிதய் நம்பிக்கை இல்லைத்தான். ஆனால் பிரியாவுடைய அம்மாவில் ஆரம்பித்து அவர்கள் குடும்பத்தில் இருந்த மீதி பேருக்கும் அச்சம் தான். செல்விக்கெல்லாம் தாமரை சொல்லியது போலே ஆகிவிட்டதே என்று நொந்து தான் போனார்.
ஆனால் சங்கரேயன் தான், “என்னா ஆனாலும் இந்த கன்னாலம் நடக்கும், எங்கள இத்தன வருஷம் காப்பாத்தி நின்ன எங்க சாமி நம்மள காப்பாத்தும்" என்று சொல்லிவிட்டு வந்திருந்தார்.
அத்தோடு அங்கேயே வைத்து, அடுத்த ஒரு மாதத்தில் திருமணம் என்று முடிவாகியிருந்தது. பிரியாவுக்கோ, கதிருக்கோ, சாமியார் சொன்னதை யாரும் சொல்லவில்லை. சொன்னாலும் இருவரும் அதை நம்புவார்களா? என்றால் நிச்சயம் இல்லைத்தான். அதனால் விட்டிருந்தனர்.
கல்யான வேலை எல்லாம் ஒவ்வொன்றாய் நடக்க ஆரம்பிக்க, இரண்டு பக்கமுமே அடுத்தடுத்த பல அடிகள். இருந்தும் யாரும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தான் சென்றிருந்தனர்.
ஆனால் அங்கே பிரியாவின் அம்மாவுக்கு உறுத்த, அவர்கள் பக்கம் ஜோசியரை சென்று பார்த்தனர். அவரோ, “என்னம்மா? கல்யாண தேதிய எல்லாம் முடிவு பண்ணிட்டு, இப்போ வந்து கேட்கிறீங்க? இப்போ நான் என்ன சொல்றது?” என்று புருவத்தை நீவினார்.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்கய்யா. ஏனோ மனசுக்கு நடக்கிற விஷயம் எதுவும் பெருசா ஒப்பல” என்றார் அவர்.
“பையன் ஜாதகத்துல பெரிய கண்டம் ஒன்னு இருக்கு. அதுல தப்புறது சந்தேகம் தான். அதுலையும் ரெண்டு வருஷத்துக்கு, கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்ல. அதையும் மீறி உங்க பொண்ண கொடுத்தா, அங்க அவ சந்தோஷமா இருக்க மாட்டா. பையனுக்கு ரெண்டு தாரம் கூட அமையலாம்னு இருக்கு" என்று அசராமல் அவரின் தலையில் இடியை இறக்கியிருந்தார்.
அதைக் கேட்டவருக்கோ, அவர் தானே, ஊரில் இல்லாத சம்பந்தம் என்று சொந்த ஊரில் மாப்பிள்ளை எடுக்க நினைத்து கணவரிடம் பேசினார். இப்போது என்ன செய்ய என்றவருக்கும் ஒன்னும் ஒடவில்லை. ஒரு வித குழப்பத்தோடே சென்றிருந்தார்.
அங்கே கதிருக்கோ, அவன் புதிதாய் வாங்கியிருந்த நில பிரச்சனை சற்று பூதாகரமாக கிளம்பியிருந்தது. அங்கு ஏதோ புதிதாய் சாலை வரப் போவதாகவும், அதனால் அந்த இடத்தை கவர்ன்மெண்ட் எடுத்துக் கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. அவனுடைய சேமிப்பின் பெரும் பணத்தை அந்த இடத்தை நம்பி கொட்டியிருக்கிறான். அதில் நஷ்டம் என்றால், அவனுக்கு அதைத் தவிர்த்து வேறு எதைப் பற்றியும் சிந்திக்கும் எண்ணமே இல்லை. அதனால் பிரியாவுடைய அழைப்பையும் தவிர்த்தான்.
அவன் குடும்ப சொத்தின் முன்பு இதெல்லாம் பெரிய விஷயம் இல்லைத்தான். ஆனாலும், அவனுடைய சொந்த உழைப்பில் விழுந்த முதல் அடி. அதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
இங்கே மூகூர்த்த நாளும் நெருங்கியிருக்க, தாமரையின் மனமோ, முற்றும் முழுதாக தன் மகளின் எதிர்காலத்தை குறித்த அச்சத்தில் நிரம்பியிருந்தது.
பாண்டி அடிக்கடி வீட்டுக்கு வருவது, அவருக்கு உவர்ப்பாகவே தெரியவில்லை. அதை மறைமுகமாக தன் கணவனிடம், “ஏங்க, முன்ன மாதிரி இல்ல. இப்போ புள்ள சமைஞ்சிட்டா. இப்படி எல்லாரும் அடிக்கடி வீடு வரைக்கும் வர்றது நல்லதா படல" என்றார்.
அதில் அவரை முறைத்த செந்திலோ, “நீ எல்லாரும்னு ஆற சொல்றேன்னு எனக்கு நல்லாவே புரியுது. பாண்டியத்தான சொல்ற” என்றார்.
அதில், “இல்லங்க, நான் பாண்டிய தப்பு சொல்லல. பாக்குறவக கண்ணுன்னு ஒன்னு இருக்குல்ல" என்ற தாமரைக்கு அதற்கு மேல் அதை எப்படி சொல்ல என்றே தெரியவில்லை.
“நான் சாக கெடந்தப்ப, மொத்த ஊரும் சுத்தி நின்னு வேடிக்கத்தான பாத்துச்சு. அவெந்தான ஒத்த மனுஷனா என்ன காப்பாத்துனான். அவெனுக்கு, இந்த வூட்டுல இல்லாத உரிமையா? கண்டவனுக்காக எல்லாம், என் உயிர காப்பாத்துனவன வர கூடாதுன்னு சொல்ல முடியாது" என்றவர் சாப்பாட்டில் கை கழுவியிருந்தார்.
இப்படி, அந்த ஒரு மாதமும்.. யாருக்கும் நிம்மதியின்றி குழப்பமாய் தான் சென்றது. அதனாலையே இம்முறை கதிரின் திருமணத்தை நிறுத்த அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை. தன் பிள்ளை வாழக்கையே என்னாகுமோ? என்ற கவலை படர்ந்திருந்தது.
(அப்படி என்னத்தேன் சொந்த பொண்டாட்டி, புள்ளைங்கள விட கூட சேர்ந்து சுத்துறவனுங்க மேல நம்பிக்கையோ? செரி நம்ம சொல்லி என்னாகப் போது? அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு என்ன பிடிச்சிருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?
0 Comments
No comments yet.