தென்றல் – 25

கதிர் பிரியாவைப் பார்க்க, தன்னுடன் நிலாவையும் அழைத்துச் சென்றான். அவனைப் பொறுத்த வரை, அவள் சிறு பெண் என்ற எண்ணம் தான். ஆனால் அதைப் பார்ப்பவர்களும், அப்படியே எடுத்துக் கொள்வார்கள் என்றில்லையே. நிலா சுற்றி முற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் கரத்தை இறுக்கமாய் பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.

அங்கே பிரியாவோ, யாருடனோ மொபைலில் பேசியப்படி திரும்பி பார்க்க, கம்பீரமாய் அடர் நீல நிற ஷர்ட் மற்றும், கருப்பு ஜீன் சங்கீதமாய் வந்தவனை ஒரு நொடி ரசித்தது.

அடுத்த நொடியே அவன் கரத்திற்குள் அடங்கி நடந்து வந்துக் கொண்டிருந்த அந்த பெண்ணவளின் மீது பட்டது. அதில் ரசனைப் பார்வை நொடியில் மாறி, கேள்வியாய் புருவங்கள் சுருங்கியது.

இத்தனைக்கும் அவள் பள்ளி சீருடையில் தான் இருந்தாள். தங்கையாக இருக்கும் என்ற எண்ணம் கூட துளியும் அவளுக்கு வரவில்லை. காரணம், அவள், அவனுடன் ஒன்றி நின்றிருந்த விதம். அவனுமே அவள் கரத்தைப் பற்றியிருந்த விதம், இங்க பெண்ணவளின் மனதில் ஒரு புயலை உருவாக்கிக் கொண்டிருந்தது.

பிரியாவை புகைப்படத்தில் கண்டிருக்கிறான் என்பதில், அவளைப் பார்த்ததும் ஒரு அறிமுக புன்னகையுடன் கதிர் அவளிடம் சென்றான்.

“ஹாய் பிரியா. ஐயம் கதிர்" என்று அவன் கரத்தை நீட்ட, அவளோ இப்போதும் அவன் இடக்கரத்தைப் பற்றியிருந்த நிலாவைத் தான் பார்த்தாள். ஆனால் நிலாவோ, அதில் எதுவும் கலந்துக் கொள்ளாமல், சுற்றி அந்த கடையைத் தான் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரியாவின் பார்வை நிலாவின் மீது படவும், அதைக் கவனித்து, “இவ நிலா. என்னோட அக்கா பொண்ணு" என்றான்.

அப்போதே இவ்வுலகுக்கு வந்தவள், “அக்கா பொண்ணா, நான் கூட நீங்க லவ் பண்ற பொண்ண எனக்கு இண்ட்ரோ கொடுக்க வந்தீங்களோன்னு நினைச்சேன்" என்று கிண்டலாய் கூறினாலும், அவள் ஆழ் மனதில் உதிர்த்த கேள்வியை அப்படியே சொல்லியிருந்தாள்.

அதில் கதிர் கோவமாய், “ச் என்ன பேசுற பிரியா. அவ சின்ன பொண்ணு” என்றவன், நிலா இதை எப்படி எடுத்துக் கொள்வாள், என்று புரியாமல் வேகமாய் அவளைப் பார்த்தான். ஆனால் அவள் காதில் அது விழுந்தது போல் கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு புதிதாய் வந்திருந்த இடத்தை பார்த்திருந்தாள்.

“அச்சோ. நான் சும்மா ஜாலியா கிண்டல் பண்ணேன். அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு கோவம். சாரி. சாரி. உட்காருங்க" என்று காதைப் பிடித்து மன்னிப்பை சிறு கெஞ்சலோடு, கண்கள் சுருக்கி கேட்டாள்.

அதில் சற்று தணிந்தவன், நிலாவிடம் திரும்பி, “நிலா” என்று சற்று அழுத்தம் கொடுத்து அழைத்தான். அதில் அவள் திடுக்கிட்டு திரும்ப, “இவங்க பிரியா" என்று கதிர் அவளுக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

அவளோ அறியா பிள்ளையாய், பிரியாவைப் பார்க்க, அதற்குள் பிரியாத்தான், “அட என்னப்பா? இப்படி இண்ட்ரோ கொடுத்த, அந்த பாப்பாக்கு எப்படி புரியும். இனிமேல் நான் தான் உன்னோட அத்தை” என்றாள்.

“அத்தையா?” என்றவளுக்கு அப்போதும் புரியவில்லை. ஆனாலும் “ம்" என்று மட்டும் தலையாட்டிக் கொண்டாள்.

“என்ன இது? உன் மாமாவ பேச வைக்கத்தான் போராடனும்னு பார்த்தா? நீ அதுக்கு மேல இருக்க. நான் தான் உன் மாமாவ கல்யாணம் பண்ணிக்கப் போறேன். என் கூடத்தான் நீயும் குப்பை கொட்டியாகனும்” என்று பிரியா வலுக்கட்டாயமாய், நிலாவின் மனதில், தன்னுடைய இடத்தை பதிய வைக்க முயன்றாள்.

நிலாவுக்கோ சட்டென்று அன்றொரு நாள், “உன் மாமாவுக்கு பட்டனத்து பொண்ணுங்களத்தான் பிடிக்கும்” என்று அவள் பள்ளி மாணவி சொன்ன வார்த்தை சட்டென்று நினைவுக்கு வந்தது. அதில் நொடிக்கும் குறைவாக பிரியாவை மேலிருந்து கீழாக பார்த்தாள்.

கதிருக்கோ, பிரியா நிலாவிடம் சுமூகமாக பேசுவதே, சற்று நிதானத்தை கொடுக்க, “அவ கொஞ்சம் சை டைப்” என்று அவளுக்கும் சேர்த்து பதில் சொல்லியவன், நிலாவை சேரில் அமர சொன்னான். அவளும் அமர்ந்துக் கொள்ள, இப்போது கதிர் பிரியாவின் பக்கம் திரும்பி அமர்ந்தான்.

“அப்புறம் மில் காரரே. போட்டோ தான் பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க. இப்போ நேர்லையாச்சும் கொஞ்சம் நல்லா பார்க்கலாம் தான?” என்று பிரியா சிறு புன்னகையுடன் கேட்டாள்.

அதில் அவனின் பார்வையோ, நிலாவின் மீது தான் திரும்பியது. சிறு பெண், அவள் முன் அமர்ந்து பிரியாவிடம் என்ன பேச? என்று சத்தியமாய் அவனுக்கு தெரியவில்லை. அதிலும் இப்போது அவனின் எண்ணம் எல்லாம், நிலாவை ஊரில் சென்று விட வேண்டும் என்பது மட்டுமாய் இருக்க, அவள் சொல்லியதற்கு சிறு புன்னகை மட்டுமே அவனிடம்.

ஆனால் நிலா அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. அமைதியாய் வெளியில் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னடா இது? அப்போ லைப் லாங், நான் இந்த ஸ்மைலுக்கு பின்னாடி இருக்கிற காரணத்த தேடிட்டு தான் சுத்தனுமா?” என்று அதற்கும் கிண்டலாய் கேட்டு வைத்தாள்.

அவனோ, “ஆக்சிவலி அக்கா சொன்னாங்க. நீங்க நல்லா பேசுவீங்கன்னு” என்றான். அதில், “அப்போ கோவமா பேசுறப்பலாம், உரிமையா, நீ போன்னு வந்திச்சு. இப்போ மட்டும் நீங்க, வாங்க, போங்கவா? அப்போ உங்க அக்கா மகள நான் சீண்டிட்டே இருக்கனும் போலையே” என்றாள் பிரியா.

அவனின் ஒரு வார்த்தைக்கு பிரியாவோ, நூறு வார்த்தை பேசி, அவனையே மடக்கினாள். அவனோ, எல்லாவற்றையும் சிறு புன்னகையுடன் பேசியவன், அவ்வப்போது நிலாவையும் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போதே அவள் சாப்பிட வில்லை என்ற நினைவு வர, “நிலா சாப்பிட என்ன வேணும்?” என்று கேட்டான். அதில் அவன் பக்கம் திரும்பியவள், அமைதியாய் அவனைப் பார்க்க, அதற்குள் பிரியாவோ, “இன்னிக்கு நான் ஆர்டர் பண்றேன்" என்றாள்.

அப்போதே, “நீங்க இன்னும் சாப்பிடலையா?” என்று கேட்டான் கதிர். “பாருடா இப்பையாச்சும் கேட்கனும்னு தோணுச்சே” என்று சொல்லிய பிரியா வெயிட்டரை அழைத்து, அவளுக்கு பிடித்ததையே மூன்று பேருக்கும் ஆர்டர் செய்தாள்.

அதன் பின் கதிரிடம், “இங்க இந்த புட்ஸ் எல்லாமே சூப்பரா இருக்கும்” என்றாள் பிரியா.

“நீங்க இங்க அடிக்கடி வருவீங்களா? ஆனா நீங்க சென்னையிலத்தான படிச்சதா சொன்னாங்க” என்று கேட்டான் கதிர்.

“அடேங்கப்பா! கட்டிக்கப் போற பொண்ணப் பத்தி இதையெல்லாம் கூட தெரிஞ்சு வச்சிருக்கீங்களா? நாட் பேட்" என்று சீண்டினாலும், “படிச்சது சென்னைத் தான். பட் வீக்கெண்ட் வீட்டுக்கு வந்தா, இங்கத்தான்” என்று அவன் கேட்டதுக்கும் பதிலளித்தாள்.

இப்படியாக அவர்கள் ரெண்டு பேரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, வெயிட்டர் உணவு பொருட்களை எல்லாம் வரிசையாய் வந்து வைத்தார்.

அவள் மூன்று டிஷ் ஆர்டர் செய்திருக்க, கதிரோ, “உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணீங்க?” என்றான். “இந்த மூனுமே நம்மளுக்குத்தான் ஷேர் பண்ணி சாப்டுக்கலாம்” என்றாள் பிரியா.

“சரி” என்று சொல்லியவன், தன்னருகில் அமர்ந்திருந்த நிலாவைப் பார்த்தான். அவளோ அந்த உணவை எல்லாம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் பிரியா, நிலாவுக்கு சேர்த்து எடுத்து வைத்திருக்க, “இத டேஸ்ட் பண்ணு நிலா. சூப்பரா இருக்கும். என்னோட பாவரேட்” என்றாள். “ம்" என்று தலையாட்டிய நிலாவுக்கு, இப்போது ஏனோ அந்த ஹோட்டல் பிடிக்காமல் போயிருந்தது. ஆனாலும் வேறு வழியின்றி, அதில் அவள் கை வைக்கப் போக, அவள் கரத்தைப் பிடித்து தடுத்தான்.

அதில் நிலா மட்டும் அல்லாது பிரியாவும் அவனைப் பார்க்க, “உனக்கு மட்டன் பிடிக்காதுத்தான?” என்று அழுத்தி நிலாவிடம் கேட்டான். “இது மட்டன் கிரேவி எல்லாம் இல்ல. ஜஸ்ட் சின்ன ப்ளேவர் தான்" என்று பிரியா சொல்ல, அவனோ, “இல்ல அவளுக்கு மட்டன் ஸ்மெல்லே பிடிக்காது" என்று அழுத்தி கூறினான்.

அதில் பிரியா, அமைதியாகிவிட, நிலாவோ, “இல்ல. நான் சாப்பிடுறேன்" என்று பயந்து சாப்பிட சென்றாள்.

அவளின் செய்கையில், அவளுக்கு முன் இருந்த தட்டை தனக்கு மாற்றிக் கொண்டவன், வெயிட்டரை மீண்டும் அழைத்து, என்னவெல்லாம் இருக்கிறது என்று கேட்டான்.

அவர்கள் வரிசையாய் மெனுவை சொல்ல, கதிரோ நிலாவை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஏனெனில் நிச்சயம் அவளாய் தனக்கு இது வேண்டும் என்று அவள் கேட்கப் போவதில்லை. அதனால், அவள் விழி அசைவிற்கான மொழியை அந்த நொடியில் படிக்க ஆரம்பித்தான் கதிர்.

வெயிட்டர், “சிக்கன் பிரியானி” என்று சொல்லும் போது அவள் கண்களில் மின்னல் வெட்ட, அதை சரியாய் கணித்து, “ஒரு சிக்கன் பிரியாணி கொண்டு வாங்க" என்றான்.

அதில் நிலா கதிரைப் பார்க்க, “என்ன சிக்கன் பிரியாணி ஒகேத்தான?” என்று கேட்டான்.

“ம்" என்று அவள் தலையாட்ட, அதன் பின் பிரியாவின் பக்கம் திரும்பி, “இந்த மூனையும் நம்ம ஷேர் பண்ணிக்கலாம்" என்றான்.

“வாழ்க்கையே ஷேர் பண்ணிக்கத்தான போறோம்" என்று பிரியா சீண்டலைத் தொடர, அவனோ மீண்டும் நிலாவின் பக்கம் திரும்பி, “ஹேண்ட் வாஸ் பண்ணிட்டு வருவோமா?” என்று கேட்டான்.

“ம்" என்று அவள் தலையாட்ட, அவளை அழைத்துக் கொண்டு வாஷ் பேஷன் சென்றான்.

இங்கே பிரியாவுக்குள்ளோ, ஏதோ தேவையில்லாத சிந்தனைகள் ஒடியது. அதன் பின், அவன் சொல்லிய சின்ன பெண் என்ற வார்த்தை ஒலிக்க, அவளும் அப்போதைக்கு அதை தூக்கி எறிந்திருந்தாள்.

அவர்கள் இருவரும் கை கழுவி வருவதற்குள், நிலாவுக்கான உணவும் வந்திருக்க, நிலா அமைதியாய் சாப்பிட, கதிர் பிரியாவுடன் சற்று சரளமாய் பேசினான்.

பேசிக் கொண்டிருக்கும் போதே, “அதென்ன? போன்ல பேசுறப்பலாம் ஊர் காரங்க பேச்சு அப்படியே வந்திச்சு. இப்போ அப்படி தெரியலையே” என்று கேட்டாள்.

“பேசுறது நமக்கு மட்டும் இல்ல. எதிர்ல இருக்கிறவங்களுக்கும் புரியனும் இல்லையா?” என்று கேட்டான் கதிர்.

அதில், “ஏன்? எங்களுக்குலாம் ஊர் பேச்சு புரியாதா? எங்கம்மாவும் அந்த ஊர்த்தேன்" என்றாள் பிரியா.

அதில் மெலிதாய் சிரித்தவன், “அத்தைக்கு எங்கூருன்னு தெரியும். ஆனா அவுக பொண்ணுக்கும் தெரியும்னு எனக்கு தெரியாதே. அதுவும் போக, ஊருக்கு வாங்க. அப்புறமா, ஊர் பேச்சு பேசலாம்" என்று சீண்டினான்.

அதில் பெண்ணவளுக்குள் கல்யாண கனவு பூக்க, “இப்பவே கூட கூப்டு போங்க, எனக்கொன்னும் இல்ல" என்றாள்.

அவளின் பேச்சில், இவனுக்கும் மெல்லிய நகை படர, அதற்குள் நிலாவுக்கு பொரையேறியது. அதில் பதறி, “ச் மெதுவா சாப்டு. இப்போ என்ன அவசரம்" என்றவன், அவள் தலையை தட்டிக் கொடுத்து குடிக்க தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.

அவளோ அவனுடைய அந்த அழுத்தமான குரலில், பயந்து முகம் சிவக்க, குரலை தாழ்த்தி, “சரி நான் எதுவும் சொல்லல. தண்ணி குடி" என்று ஏதோ குழந்தையிடம் பேசுவது போல் தான் பேசினான்.

அவளும் அவனைப் பார்த்தப்படியே அதை வாங்கி குடிக்க, இப்போது சிந்தியிருந்தாள். “ச் என்ன நிலா?” என்றவன், அங்கிருந்த டிஸ்யூவை எடுத்து, அவள் கன்னத்தை துடைத்து விட்டான். அதன் பின் இன்னொரு டிஸ்யூவை எடுத்து அவள் கரத்தில் கொடுத்து துடைக்க கூறினான்.

இக்காட்சியைப் பார்த்த பிரியாக்குத்தான் நிலாவின் மீது ஒரு பொறாமை தீ கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

(எரியனும் தான? சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி கதிர் பண்றது சரியா? இல்ல தப்பா? இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   1

*** தென்றல் – 25 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***