வேந்தன் பேசிக் கொண்டிருக்க, கவியோ அடுத்தடுத்து அவனுடைய காயின்களை எல்லாம் வெட்டி வெளியில் அனுப்பியிருந்தாள். அதன் பின்னே அவனும், செஸ் போர்டைப் பார்த்தான். இன்னும் ஒன்றிரண்டு மூவில், கவி ஜெயிப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருந்தது.
அதில் அவளோ சிறு கேலியுடன், “இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் முடிஞ்சிடும்” என்றப்படி அவனை நிமிர்ந்துப் பார்க்க, அவன் முகத்திலோ அத்தனைக் கலக்கம். ஏனோ எடுத்த காயினை அவளால் நகர்த்த முடியவில்லை.
அவளின் மனமோ, “என்ன கவி யோசிக்கிற? உன் கையில கிடைச்ச சான்ஸ மிஸ் பண்ணிடாத. இன்னும் ஜஸ்ட் ரெண்டு மூவ் தான்” என்று சொல்லியது. ஆனாலும் கூட, அவனுடைய அந்த கலக்கம் தோய்ந்த முகத்தைப் பார்த்து விட்டு, மேலும் முன்னேற சுத்தமாய் மனமில்லை.
அவள் அப்படியே இருக்க, வேந்தனோ, அவளைப் பார்த்தான்.
அவளுடைய முகத்தில், ஒரு வித கோவம், எரிச்சல், வெறுப்பு, வருத்தம், தயக்கம் என்று அத்தனையும் இருந்தது. ஆனாலும் அவன் எதுவும் சொல்லவில்லை. இங்கே சில நொடிகள் ஏதேதோ யோசித்தவள், எடுத்த காயினை திருப்பி வைத்து விட்டு, வேறு ஒரு காயினை நகர்த்தினாள்.
அதில் வேந்தனின் முகத்தில் அப்பட்டமான வெற்றி புன்னகை. ஏனோ அந்தப் புன்னகையைப் பார்த்தப் பின் தான் அவளுக்கு நிம்மதியாகவும் இருந்தது. அதே நேரம், தான் செய்த மடத்தனமும் புரிந்தது.
“என்னடி பண்ணியிருக்க” என்று தன்னைத் தானே நொந்தப்படி, அவள் போர்டைக் கவனிக்க, இப்போது வேந்தன் அவளுடைய காயினை வெளியில் அனுப்பியிருந்தான். இதன் பின் ஆட்டம் அவன் கையில் தான் என்பது புரிய, அவளோ, அவனை முறைத்தாள்.
“என்னாச்சு கேரம் சேம்பியன்? என்னமோ என்னை ஜெயிச்சிடுவேன்னு அவ்ளோ பேசுனீங்க?” என்று சீண்டலாய் கேட்டான்.
அவன் சீண்டலில், அவளோ அதற்கு மேல் அங்கு இருக்க இயலாது, அங்கிருந்து எழுந்தாள். அதில் அவள் கையைப் பிடித்து தடுத்தவனோ, “பாதி கேம்ல இப்படி எந்திரிச்சு போ முடியாது” என்றான்.
அவன் தொடுகை, அவளுக்குள் என்னமோ செய்ய, கையை உறுவ முயற்சித்தாள். அதைக் கவனித்தாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காது, “உனக்கு எப்படியோ? ஆனா எனக்கு எடுத்த எதையும் பாதியில விடுற பழக்கம் கிடையாது. சோ இன்னிக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகனும். உட்காரு” என்றான்.
அதில் பல்லைக் கடித்தவளோ, “சரி நான் தோத்துட்டேன். போதுமா? எங்க வேலைக்கு போக சொல்றீங்களோ? போறேன்” என்று எரிச்சலை மறைத்து சொல்ல, அவனோ இப்போது கையை விட்டான்.
ஏனோ அவன் கையை விட்டதும், அவளுக்கு பிடிக்கவில்லை. மனம் அவன் கைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று நினைத்தது. இப்படி இரு தலை எறும்பாய் அவள் துடிக்க, “குட். பட் இருந்தாலும், கேம்ம பாதியில விட்டுட்டு போறதுக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கனுமே?” என்று நக்கலாய் கூறினான்.
அதில் இப்போது அவளோ, “இன்னும் உங்களுக்கு என்ன வேணும்?” என்று சிறு கடுப்புடனே கேட்டாள்.
“பசிக்குது. சாப்பிட ஏதாச்சும் கொடுத்தன்னா, சாப்டு தூங்கப் போவேன்” என்று அவன் சொல்ல, இங்கே இவள் இதயம் ஒரு நொடி துடிப்பை மறந்தது. இப்போது சுர்ரென்று கோவம் வந்தது.
“மணி என்னாச்சு தெரியுமா? இவ்வளவு நேரம் எதுக்கு சாப்பிடாம இருந்தீங்க. வந்த உடனே ஆச்சும் சொல்லிருக்கலாம்த்தான” என்றவளுக்கு ஏனோ அத்தனை வலித்தது. வேகமாய் கிச்சனுக்குள் சென்றவள், அடுத்த சில நிமிடங்களில், சூடான தோசையை சுட்டு வந்து அவனுக்கு கொடுத்தாள்.
இப்போது அவனோ அதை சாப்பிடாது, “நீ சாப்டீயா?” என்றான். ஏனோ இந்த ஒரு வார்த்தைத்தான். அவளுடைய அத்தனை வலியையும் மறைந்துப் போக வைக்கிறது. அதில் அவளோ, அவனையே பார்த்தாள்.
தன் முன்னே இருந்த தட்டில் இருந்த உணவை எடுத்து அவளுக்கு முன் நீட்ட, இப்போது அவளுக்கு கண்கள் கலங்கியது. அவனோ எதுவும் சொல்லாது அவளையே பார்க்க, அவன் கொடுத்து அவள் எதையும் வேண்டாம் என்று சொல்லியது கிடையாது. அப்படி அவள் சொல்ல வேண்டும் என்றால், அவளின் இந்த உயிரையே வேண்டாம் என்று சொல்ல வேண்டும். அதனால் அமைதியாய் வாங்கிக் கொண்டாள்.
அவனோ அடுத்த வாயையும் எடுத்து அவள் முன் நீட்ட, “நான் விழியோட சேர்ந்து சாப்டேன்” என்றாள். எப்படியும் பொய் எல்லாம் சொல்ல மாட்டாள். அதுவும் விழி, நிச்சயம் அவளை சாப்பிட வைத்திருப்பாள் என்று தெரியும். அதனால் அடுத்த நிமிடம் வேகமாய் சாப்பிட ஆரம்பித்தான். அவன் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்தவளோ, மீண்டும் கிச்சன் உள்ளே சென்று மேலும் இரண்டு தோசையை சுட்டு எடுத்து வந்து அவன் தட்டில் வைத்தாள்.
அவனும் போதும் என்றெல்லாம் சொல்லவில்லை. அவன் சாப்பிடும் வேகமே, அவனின் பசியின் அளவை சொல்ல, “இப்படி வயித்த பட்னி போட்டு, நாட்டுக்கு வேலைப் பார்த்து என்னத்த சாதிக்கப் போறாராம். நமக்கு மட்டும் ஆயிரம் அட்வைஸ் பண்ணுவாரு. ஆனா அவருக்கு அதெல்லாம் கிடையாது. இவ்ளோ பசிய வச்சிக்கிட்டு, என்கிட்ட சரிக்கு சமமா மல்லுக்கு வேற நின்னாச்சு” என்று மனதிற்குள் சாரமாரியாய் அவனைத் திட்டினாள்.
அதில் அவனுக்கு பொரையேற, “அச்சோ மெதுவா” என்றவள் வேகமாய் அங்கிருந்த தன்ணீரை எடுத்து அவனுக்கு கொடுத்தாள். அதையும் அமைதியாய் வாங்கிக் கொண்டவன், “திட்டுறத கொஞ்சம் சத்தமா திட்டுனன்னா, நானும் தெரிஞ்சிப்பேன்ல” என்றான்.
அதில் அவளோ, “நான் எதுக்கு உங்கள திட்டனும்?” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள். ஆனாலும் அவனுக்கு அதைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது. சிரிப்பை முகத்தில் காட்டாது, “தோசை அவ்வளவுத்தானா?” என்று வேண்டுமென்றே சீண்டினான்.
“வேணுமா? நில்லுங்க நான் போய் சுட்டு எடுத்துட்டு வரேன்” என்றவள் வேகமாய் நகர, “ஹேய்” என்றப்படி கையை கழுவிவிட்டு அவள் சேலை முந்தானையை பற்றினான். அதில், அவன் ஈர விரல் மெலிதாய் அவள் தேகத்தை உரச, திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.
“போதும், வயிறும், மனசும் நெறஞ்சிடுச்சி” என்று அவளைப் பார்த்து அழுத்தமாய் சொல்லியவன், தன்னுடைய ஈர கையை அவள் சேலை முந்தானையில் துடைத்தப்படி எழுந்தான்.
ஏனோ, அந்த செயலில், அவளுடைய இதயம் அத்தனைப் பலமாய் துடிக்க, இப்போது அந்த சேலையை வைத்தே வாயை துடைப்பது போல், அந்த சேலையின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தான்.
ஏனோ அவளே அவனுக்குள் கலப்பது போல் ஒரு இதம் அவனுக்குள் பரவ, மெதுவாய் அவள் சேலையை, தன் கரத்தில் இருந்து விடுவித்தான். அவனுடைய அந்த உரிமையான செயலில், இவளுக்கோ அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது? என்றே தெரியவில்லை.
“இன்னிக்கு புல்லா, இப்படி நின்னுட்டே இருக்கப் போறீயா?” என்ற அவனின் குரலில், “நான் என்னமோ பண்ணிட்டு போறேன். உங்களுக்கு என்ன? சாப்டீங்கத்தான போயி படுங்க” என்றப்படி, டைனிங் டேபிளில் இருந்ததை எல்லாம் எடுத்து கிச்சன் சென்று வைத்தாள்.
அவள் திரும்பி வரும் வரையிலுமே வேந்தன் அங்கேயே நிற்க, அப்போதுத்தான், அவளுக்கு, இன்று அவனுடைய அறையில் தான் உறங்க வேண்டும் என்ற நினைவே வந்தது.
அதில் இவளோ, “உங்க தங்கச்சிக்காக, யோசிச்சு ஒன்னும் என்ன உங்க ரூமுக்கு கூப்பிட தேவையில்ல. நான் இங்க சோபாவுல படுத்துக்கிறேன். காலையில உங்க தங்கச்சி எந்திரிக்கிறதுக்கு முன்னாடி எந்திரிச்சிடுவேன்” என்றப்படி சோபாவில் படுக்க செல்லப் போனாள்.
அதில் மீண்டும், அவள் சேலை முந்தானையை சிறு அழுத்தம் கொடுத்து பிடித்திழுக்க, அவன் இழுத்த வேகத்தில், அவன் மார்பில் மோதும் அளவுக்கு நெருங்கியிருந்தாள். ஆனால் கடைசி நொடியில் அவன் ஒரு அடி பின் செல்ல, இப்போது இருவரின் தேகத்துக்கும் இடையில் மெல்லிய இடைவெளி. ஆனாலும் இருவரின் சுவாசமும், ஒன்றுக்கொன்று கலந்தது.
அவன் இழுத்த இழுப்பில், அவளுக்கு மூச்சு வாங்க, இங்கே இவளின் வாசத்தில் அவனுக்கோ மூச்சு முட்டியது. இருந்தும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாது, “என் தங்கச்சிக்காக செய்ற எதையும் நான் பொய்யா செய்றது கிடையாது. அதனால ஒழுங்கா வந்து படு” என்றான்.
ஏனோ அந்த வார்த்தை அவளை ஒரு நொடி உலுப்ப, இருந்தும் அதில் இருந்து சட்டென்று மீண்டு, “முடியாது” என்றாள்.
“பொண்டாட்டியா நினைச்சித்தான் தொட மாட்டேன்னு சொல்லிருக்கேன். மத்தப்படி, என் தங்கச்சிக்காக, உன்னை இப்படியே தூக்கிட்டு கூட என் ரூமுக்கு போவேன். நீயா வறீயா? இல்ல நான் தூக்கிட்டு போகட்டுமா?” என்றான்.
அவனின் வார்த்தையில் அவளோ அதிர்ந்து பின் அவனை தீயாய் முறைக்க, அவனோ சிறு சிரிப்புடன், “நீயா வந்தா சோபாவுல படுக்கலாம். நானா தூக்கிட்டுப் போனா, கட்டில்லத்தான் படுக்கனும். அதுலையும் தூக்கத்துல பொண்டாட்டியா நினைக்கலன்னாலும், பொண்ணா நினைச்சிட்டேன்னாக் கூட, உனக்குத்தான் கஷ்டம்” என்றவனின் வார்த்தையில், அவள் முகம் அத்தனை உணர்வுகளையும் ஒரே நேரத்தில் காட்டியது.
அதில் பொங்கி வந்த சிரிப்பை உள்ளுக்குள் அடக்கியவன், “என்ன வறீயா?” என்று புருவத்தை உயர்த்தினான்.
அதில் வேகமாய் அவள் அவனிடம் இருந்து விலகப் போக, அவன் கையில் சேலை பிடிப்பட்டிருக்க, இப்போது அவள் மாராப்பு சேலை கழன்று விழ சென்றது.
அதில் திடுக்கிட்டு தன் கையால் அதைப் பிடிக்க, “நான் தான் சொன்னேன் தான. நான் நினைச்சா, கலைஞ்சிடும்னு” என்று சொல்லியவனின் வார்த்தை அவள் தேகத்தை மேலிருந்து கீழாய் உரசிச் செல்ல, இவளுக்கோ உடல் வெடவெடத்தது.
“சரி ரூமுக்கு வரேன். முதல்ல சேலைய விடுங்க” என்று எரிச்சலாய் சொல்ல, “நான் சொல்றத கேட்கவே கூடாதுன்ற முடிவுல நீ இருந்தன்னா, அத எப்படி கேட்க வைக்கனுமோ, அப்படி நான் கேட்க வைப்பேன். முன்னாடி போ” என்றான்.
அதில் அவனைப் பார்த்து முறைத்தவளோ, “இவரு தான் என்ன அந்த ரூம்ம விட்டே போ சொன்னாரு. இப்போ இவரே இவ்ளோ அடம்பண்ணி கூட்டிட்டு போறாரு. இவருக்கு இவரு நினைச்சது நடக்கனும்” என்று தனக்குள் திட்டியப்படியேத்தான் அவனுடைய அறைக்குள் சென்றாள்.
அவள் அறைக்குள் நுழைந்தப் பின்னே, இதுவரை அடக்கியிருந்த பெருமூச்சை வெளியிட்டவன், “ப்பா, என்னாப் பொண்ணுடா இவ. அரை அடி தூரத்துல இருந்ததுக்கே உடம்பெல்லாம் இப்படி சூடாகுது. இன்னும் கிட்ட வந்தா, நான் காலி ஆகிடுவேன். மனுஷன போட்டு பாடா படுத்துறா. ராங்கி” என்று அவளை செல்லமாய் திட்டியவனின் முகத்தில், அவள் தனக்காக விட்டுக் கொடுத்தது, ஒரு வித இதத்தைக் கொடுத்தது.
அவளை நெருங்கவே கூடாது. தொடவே கூடாது என்றெல்லாம் பல முடிவை எடுத்திருந்தான். ஆனால் கவியின் விஷயத்தில் மட்டும் ஏனோ அவன் முடிவை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறான். ஏன்? அந்தளவுக்கு அவளின் மீது காதலா? இல்லை பிடித்தமா? இல்லை வேறு எதுவுமா? அவனுக்கே தெரியவில்லை.
இங்கே அறைக்குள் வந்து சோபாவில் படுத்தவளுக்கும் கூட, வேந்தனுடைய சிந்தனை மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.
(என்ன ஓடி என்ன பிராயஜனம்? நீ இன்னும் ஒரு ஸ்டெப் கூட முன்னாடி வர மாட்டுறீயே. சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?...
Shree Ram
sam felling 😛😛😛😛