நிலா அவனின் கையில், தன்னுடைய பேக்கை கொடுத்து விட்டு பரீட்சை எழுத சென்றிருந்தாள். கதிரோ, அவனுடைய பைக்கில் சாய்ந்து நின்று, அவள் பேக்கில் இருந்த டைரியை எடுத்துப் பார்த்தான். முதலில் படிக்க வேண்டாம் என்று நினைத்து உள்ளே வைத்தவன், அதன் பின் ஏதோ தோன்ற மீண்டும் அதை கையில் எடுத்து முதல் பக்கத்தை திருப்பினான்.
நிலா தென்றல் பக்கத்தில் ஐ ஏ எஸ் என்று எழுதி வைத்திருந்தாள். அதைப் படித்தவனுக்கு, இதழோரம் மெல்லிய புன்னகை படர்ந்தது. அவனும் அதை சொல்லிப் பார்த்தான்.
“சின்னதா சத்தம் கேட்டா, பயந்து நடுங்குறாங்க. ஆனா மேடமுக்கு கலெக்டர் ஆகனும்னு கனவு. ம் நம்ம நினச்ச மாதிரி இல்ல" என்றவனுக்கு மனதினுள், அவள் மீதான எண்ணம் சற்று மாறியிருந்தது.
முதல் பக்கத்திலேயே, மயிலிறகை வைத்திருந்தாள். அதை எடுத்துப் பார்த்தவனுக்கு, ஏனோ இதழ்கள் விரிந்தது. அந்த மயிலிறகை எடுத்து அந்த புத்தகத்தின் நடுப்பகுதியில் வைத்தவன், பின் மெல்ல அடுத்த பக்கத்தை திருப்பினான். அவளுடைய முத்து முத்தான கையெழுத்தில், அவளுடைய குடும்ப அட்டவனையை வரைந்து வைத்திருந்தாள். அம்மா அப்பா, அந்தப் பக்கம் சித்தப்பா சித்தப்பா சித்தி. தாத்தா பாட்டி. நடுவில் இவளுடைய பெயரை எழுதியிருந்தாள். அவர்களுடைய புகைப்படத்தையும் ஒட்டி வைத்திருந்தாள்.
அதில் அவனுடைய பெயர் இல்லாததைக் கூட அவன் கவனிக்கவில்லை. அடுத்தப் பக்கம் திருப்பியிருந்தான். அதில், அவளுக்கு பிடித்த கலரில் ஆரம்பித்து பிடித்த உணவு வரை அனைத்தையும் எழுதி வைத்திருந்தாள். ஆங்காங்கே அவள் பார்த்த விஷயங்களையும், வரைந்து வைத்திருந்தாள்.
இடை இடையில் சோட்டா பீம், கார்டூன் கதாப்பாத்திரங்களின் போட்டோக்களை ஒட்டி வைத்திருந்தாள். பத்தாம் வகுப்பு படிக்கும் ஒருவளின் டைரியில், பின் என்ன மேகமலை ரகசியத்தையா எழுதி வைத்திருப்பாள். அவளுக்கு தெரிந்ததை, அவளுக்கு பிடித்ததை கிறுக்கி, வரைந்து, எழுதி வைத்திருந்தாள். ஓவியத்தின் கீழே அந்த ஓவியத்துக்கு ஒவ்வொரு பெயரையும் வைத்திருந்தாள். அதை எல்லாம் சிரித்தப்படியே பார்த்தவனுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை. நடுவில் ஒரு பக்கத்தில் மட்டும் எதையோ எழுதி வைத்திருந்தாள்.
அது என்ன என்று அந்தப் பக்கம் அவன் திரும்பி பார்க்க, அவளுக்கு வந்த கனவை அப்படியே எழுதி வைத்திருந்தாள். ஒரு சிறுமியின் கனவுத்தான். அதனால் அதில் அர்த்தம் எதுவும் இல்லை. அந்த ஒரு பக்கம் மட்டும் அல்ல, அவள் கனவில் வருவதை எல்லாமே அவ்வப்போது எழுதி வைத்திருந்தாள். எல்லாமே சிறுபிள்ளைத்தனமான கிறுக்கல்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே காதல், கீதல் என்று உளறிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், அவனின் அக்கா மகள், பச்சைக் குழந்தையாய் தான் அவனுக்கு அந்த நொடி பதிவாகியிருந்தாள். அது அவன் மனதை மெல்லிய மயிலிறகால் வருடியது.
அப்படியே அடுத்த பக்கம் திருப்ப, அவளுடைய ஆசைகளையும் அதில் கிறுக்கி வைத்திருந்தாள். முதல் ஆசையே, தைரியமாக இருக்க வேண்டும் என்று தான். ஆனால் அடுத்த ஆசையே அதற்கு எதிர்பரமாய், நான் இப்படியே இருக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தாள்.
அதில், இப்போது கதிருக்கு சிரிப்பு மத்தாப்பாய் விரிந்தது. “இப்படியே இருந்தா, இந்த ஜென்மத்துல உனக்கு தைரியம் வந்துடும்" என்று நக்கலாய் சொல்லியவன், அதன் பின், அடுத்தடுத்த ஆசையைப் பார்த்தான். மழையில் ஐஸ்கிரீம். மலை உச்சிப் பயணம், திருவிழா கொண்டாட்டம், என்று சாதாரணமானவை தான். கலெக்டர் ஆக வேண்டும் என்பது மட்டுமே, அவளுடைய ஆசையில் உருப்படியாக இருந்தது. மத்தது எல்லாம், படிக்கும் போதே அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.
இப்படி முழுதாய் இரண்டு மணி நேரத்தை வேலை இன்றி, வெட்டியாய் செலவளிப்பான் என்று சில மணி நேரத்துக்கு முன்பு சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டான். ஏனெனில் அவன் பிரியாவை சந்திப்பதற்காக மட்டுமே கிளம்பவில்லை. அவளிடம் பேசிவிட்டு, அடுத்தடுத்து அவன் பார்க்க வேண்டிய வேலை எக்கசக்கமாய் குவிந்து கிடந்தது.
ஏதோ அமைதியான நீரோடையில் படகில் பயணித்துக் கொண்டிருந்தவனின் முகத்தில், சட்டென்று பலத்த கடலலை அடித்து, அவன் கவனத்தை சிதறடித்தது போல், அவனுடைய அலைப் பேசி, தன்னுடைய அழைப்பைக் காட்டி, சத்தம் போட்டு கத்தியது.
அதிலேயே இவ்வுலகுக்கு வந்தவன், மொபைலைப் பார்க்க ‘பிரியா காலிங்' என்று வந்தது. அப்போதே பிரியா என்பவளின் ஞாபகம் வர, வேகமாய் மணியைப் பார்த்தான்.
காலையில் சந்திப்பதாக சொல்லியிருந்தான். இப்போது மதியம் ஒரு மணி ஆகியிருந்தது.
உடனே அட்டண்ட் செய்து, “ஹலோ” என்று இவன் ஆரம்பிக்கும் முன்னே, “பர்ஸ்ட் மீட்டையே இப்படி சொதப்பி வச்சிருக்கீங்களே. உங்கள நம்பி பர்ஸ்ட் நைட் எக்ஸ்பக்டேசன் எல்லாம் வளத்துக்க முடியாது போலையே” என்ற பிரியாவின் நக்கல் குரல் அவன் செவியை துளைத்தது.
அதில் ஒரு நொடி குழம்பி பின், “என்ன?” என்று அதிர்ந்தே விட்டான் கதிர். அவனுடைய அதிர்ச்சியில் வாய் விட்டே சிரித்தவள், “சும்மா ஜோக் பண்ணேன் மில்காரரே. ஆக்சிவலா, நீங்க இன்னும் என்னைப் பார்க்க வராததுக்கு, நான் கிளம்பியிருக்கனும். இல்லன்னா, உங்கள கால் பண்ணி திட்டியிருக்கனும். ஆனா பாருங்க, இன்னும் நீங்க வருவீங்கன்னு, உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்றாள் பிரியா.
“உண்மையாவே சாரிங்க. கொஞ்சம் வேலையில மாட்டிக்கிட்டேன். இன்னொரு நாள் நம்ம பார்க்கலாமா?” என்று கேட்டான் கதிர்.
“உங்க வேல எப்போ முடியும்னு சொல்லுங்க. அதுவரைக்கும் நான் வேணா வெயிட் பண்றேன். எனக்கு வீட்டுல ஒன்னும் அவ்ளோ முக்கியமாலாம் எந்த வேலையும் இல்ல. அதுலையும், இப்போ மட்டும் உங்கள மீட் பண்ணாம கிளம்புனேன். என் பிரண்ட்ஸ் எல்லாம் கலாய்ச்சி தள்ளிடுவாங்க" என்றாள் பிரியா.
அதில் என்ன செய்வது என்று புரியாமல் சுற்றிப் பார்த்தவன், “சரிங்க ஒரு அரை மணி நேரம் மட்டும் வெயிட் பண்ணுறீகளா?” என்றான் கதிர்.
“வெயிட் பண்றேன். ஆனா, இந்த நீங்க, வாங்க, இதெல்லாம் வேணாமே” என்றாள் பிரியா.
அதில் சிரித்தவன், “செரி. வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டு கால்லை வைத்தான் கதிர்.
“எப்படி அத மறந்தேன். அந்தப் புள்ள என்ன நினச்சிருக்கும்? இப்படித்தேன் இருப்பியால நீ” என்று தன்னைத் தானே நொந்தவன், கையில் இருந்த டைரியை அந்த பள்ளி பேக்கில் வைத்தான்.
அதற்குள் தேர்வு முடிந்ததுக்கான, மணி அடிக்க, மாணவ, மாணவிகள் அனைவரும் வெளியில் வர ஆரம்பித்தனர். கதிர் நிலாவைத் தேட, அவளைக் காணவில்லை.
“எல்லாரும் வந்துட்டாங்க, இவெ மட்டும் என்னத்தேன் பண்றா?” என்றப்படி, அவனும் சுற்றிப் பார்த்தான்.
இவன் கடிகாரத்தைப் பார்க்க, ஒரு வழியாய், அங்கு வந்து சேர்ந்தாள் நிலா. “இத்தன நேரமா?” என்று கேட்க நினைத்தாலும், அதைக் கேட்காமல், “நல்லா எழுதுனீயா?” என்று கேட்டான்.
“ம்" என்று அவள் தலையாட்ட, “நம்மூரு பஸ்ல ஏத்தி விட்டா பத்திரமா போயிடுவீயா?” என்று கேட்டான் கதிர்.
அதில் சிறு அச்சம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல், “ம்" என்று தலையாட்டினாள்.
“எல்லாத்துக்கும், இப்படியே ஆட்டு" என்று சொல்லியவன், பைக்கில் அவளை ஏற சொல்ல, அவளும் ஒரு வித பயத்தோடே அவனின் பின்னே ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
ஆனாலும், அவனிடம் சொல்லவில்லை என்றாலும், தனியாக செல்ல வேண்டுமே என்ற பயம், அவளுக்குள் வேரூன்ற ஆரம்பித்தது. அதில் அவன் சட்டைக்குப் பதில், அவன் கரத்தையும் சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
என்னத்தான் சாலையில் கவனத்தை பதித்தாலும், கண்ணாடி வழியே, அவளையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். கூட்டத்தைப் பார்த்து அவள் மிரளுவதும், ஹாரன் சத்தம் கேட்டு, இன்னும் பயந்து அவனுடன் ஒன்றுவதையும் கவனித்தவனுக்கு, அவளை தனியே பஸ்ஸில் அனுப்ப மனம் வரவில்லை.
அதில் பைக்கை ஓரமாய் நிறுத்தி, “சாப்பிடுறீயா?” என்று கேட்டான். அவளோ ஏதோ ஒரு சிந்தனையில், “ம்" என்று தலையாட்ட, “நிலா” என்று அழுத்திக் கூப்பிட்டான்.
அப்போதே இவ்வுலகுக்கு வந்தவள், அது தான் பஸ் ஸ்டாப் என்று நினைத்து பதறி, “நான் போயிடுவேன்" என்று நடக்க முயன்றாள்.
அதில் அவள் கரத்தை அழுத்திப் பிடித்து, “எங்க போவ?” என்று கேட்டான். “ஆ..ங். அத்” என்றவள் மீண்டும் சுற்றிப் பார்க்க, அங்கே பஸ் என்ற ஒன்று இல்லவே இல்லை.
அதில் அவள் திரு திருவென்று விழிக்க, இவனுக்கு கோவம் தான் வந்தது.
“இங்க பஸ் இல்ல" என்று அவள் திக்கி திணறி சொல்ல, “படிச்சப் புள்ளத்தான நீ? நடு ரோட்டுல பஸ் எப்படி நிக்கும்? பஸ் ஸ்டாப்புலத்தேன் நிக்கும்" என்றான் கதிர்.
அதில் அவள் குழம்பி அவனைப் பார்க்க, அவனோ அவளிடம், “போற வழியில, நான் ஒருத்தர பாக்க வேண்டியிருக்கு. அவங்கள பாத்துட்டு, உன்னை கொண்டு போயி ஊர்ல விடவா?” என்று குழந்தையிடம் கேட்பது போல் கேட்டான்.
அப்போதே, சற்று தெளிந்தவள், “ம்" என்று வேகமாய் தலையாட்டினாள். “என் கூட வர்றதுல உனக்கேதும் பிரச்சனை இல்லத்தேன்ன?” என்று கேட்டான் கதிர்.
“ம்ஹூம்" என்று அதற்கும் அவள் வேகமாய் தலையாட்ட, மீண்டும் பிரியாவுக்கு கால் செய்தான்.
“என்ன? இன்னும் ஒரு அரை மணி நேரம் அதிகமாகுமா?” என்று அதே கிண்டலுடன் தான் கேட்டாள். ஆனாலும் அதில் சிறு சோர்வும் தெரிந்தது.
“இல்ல பக்கத்துல வந்துட்டேண். எப்படியும் கோவில் நட சாத்திருப்பாங்கள்ல, பக்கத்துல இருக்கிற ஹோட்டலுக்கு வந்திடுறீங்களா?” என்று கேட்டான் கதிர்.
“ஆல்ரெடி, நான் ஒரு மணி நேரமா ஒரு ஹோட்டல்லத்தேன் இருக்கேன்” என்று பிரியா சொல்ல, “செரி வந்துடுறேன்" என்றவன், எந்த ஹோட்டல் என்பதை கேட்டுவிட்டு நிலாவுடன் கிளம்பினான்.
நிலாவுக்கோ, இப்போதைக்கு தனியே வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்ற நிம்மதி படர்ந்திருந்தது. ஆனால் அங்கே அமர்ந்திருப்பவளுக்கு, இவளைப் பார்த்து நிம்மதி பறிபோகப் போவதை அவள் இப்போது அறியவில்லை. பின்னாளில், இந்த சந்திப்பு, நிலாவின் நிம்மதியையும் கெடுக்கும், என்று இவளும் அறியவில்லை. இப்படி இரு பெண்களின் நிம்மதி தன்னால் தொலைந்து, தன் நிம்மதியும் பறிப்போகும் என்று பாவம் கதிரும் அறியவில்லை.
ஒரு பிரபலமான ரெஸ்டாரண்டில் தான் பிரியா அமர்ந்து மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தாள். முதன் முதலாக, இப்படி ஹோட்டலுக்கு வந்திருப்பதை நிலா சிறுமியாய் வேடிக்கைப் பார்த்தாள்.
அவள் சுற்றி முற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடக்க, கல் தட்டி கீழே விழ சென்றாள்.
“நிலா” என்று வேகமாய் எட்டி அவள் கரத்தைப் பிடித்தவன், “கவனமா நடக்க மாட்டீயா?” என்று திட்ட, அதில் நிலாவின் முகம் வாடியது. அதன் பின் ஏதோ திருவிழா கூட்டத்தில் சிறுமியின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வது போல், அவள் கையை விடாமல் அவனுடன் உள்ளே அழைத்துச் சென்றான்.
(ஆமப்பா பச்ச புள்ள, நீ கைய விட்டா தொலைஞ்சிடும். கட்டிக்கப் போற புள்ளைய பார்க்க, முறைப்புள்ள கைய பிடிச்சிட்டே போற பாரு. அங்க நிக்கிற நீ. சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பன்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
0 Comments
No comments yet.