தென்றல் – 23

பிரியாவைப் பார்க்க, கதிர் தன்னுடைய வண்டியில் கிளம்பினான். செல்லும் வழியில் நிலா பள்ளி புத்தகத்துடன் அழுதுக் கொண்டு நிற்க, சட்டென்று சடன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தினான். மணியைப் பார்த்தான். கிட்ட தட்ட ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.

“இன்னிக்கு இவளுக்கு பரீட்சைத்தான. இங்க என்னப் பண்ணிட்டு இருக்கா?” என்று ஒரு நொடி யோசித்தவன், அடுத்த நொடி ரோட்டைக் கடந்து அவளின் அருகில் சென்றான்.

சட்டென்று யாரோ அருகில் வரவும், வேகமாய் பயந்து பின்னே நகர, “நிலா” என்றான் கதிர்.

அவனின் குரலில், சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தவள் கண்ணில், கதிரைக் கண்டதும் பயத்தை தாண்டி ஒரு வித நிம்மதி தோன்றி மறைந்தது.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்ணிலும், அது சரியாக விழ, “என்னாச்சு? இங்கன ஏன் நின்னுட்டு இருக்க?” என்றான். ஏனெனில், பள்ளி முடியும் நேரம் கூட, அவள் தனியாக வருவதை பார்த்துள்ளான். ஆனால் காலையில், செந்தில் தான் எவ்வளவு வேலையாக இருந்தாலும் அழைத்து சென்று விட்டு வருவார். இப்போது அவள் தனியாக நிற்கவும், அவனுடைய யோசனை விரிந்தது.

“அத் அது. பஸ்" என்றவளுக்கு, அந்த ரெண்டு எழுத்து கூட சரளமாய் வரவில்லை. அதில், “இன்னிக்கு உனக்கு பரீட்சைத்தான?” என்று கேட்டான் கதிர்.

“ம்" என்றவளுக்கு கண்ணீர் சட்டென்று வந்து விட, இவனுக்கோ எரிச்சல் தான் கூடியது.

“என்னென்னு சொன்னாத்தான எனக்கு தெரியும்" என்று கதிர் குரலை உயர்த்த, “பஸ்ஸ விட்டுட்டேன்" என்று பயந்தப்படி கூறினாள் நிலா.

அவர்கள் ஊரில் இருக்கும் அரசாங்க பள்ளியில் தான் படிக்கிறாள். அங்கு கேமரா போன்ற வசதி எல்லாம் கிடையாது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு என்பதால், தேர்வு எழுதுவதற்கு, அங்கிருந்து மதுரையில் இருக்கும் வேறு ஒரு பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும். வழக்கமாய் செந்தில் தான் அவளை அழைத்து செல்வார். இன்று அவருக்கு முக்கியமான வேலை வந்திருக்க, அவளை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு சென்றிருந்தார்.

செல்லும் போதே, “செத்த நேரத்துல பஸ் வந்துடும்" என்று அத்தனை முறை சொல்லிவிட்டு தான் சென்றிருந்தார்.

இவளோ படிக்கும் ஆர்வத்தில், அங்கிருந்த திண்டில் அமர்ந்தவள், பஸ் வந்ததைக் கூட கவனிக்காமல் இருந்து விட்டாள். அதன் பின்னே பஸ் வராமல் போகவும், ரோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் அங்கு வந்த ஒருவர், பஸ் சென்று விட்டதாக, இவளின் அருகில் நின்றிருந்தவரிடம் சொல்லி அழைத்து சென்றார். அதில் இவளுக்கு என்ன செய்ய என்றே தெரியவில்லை. சத்தமாய் பேசினாலே அழுகை வரும். இப்போது பரீட்சை எழுத முடியாதோ என்று பயந்துப் போய் அழுது விட்டாள். அப்போது தான் கதிர் அந்தப் பக்கமாய் வந்திருந்தான்.

இதை அத்தனையும், அப்போதும் இவள் சொல்லவில்லை. அங்கிருந்த டீக்கடைக்காரர் தான் விவரத்தை கதிரிடம் விளக்கினார்.

அதைக் கேட்ட கதிருக்கு இன்னும் கோவம் தான் வந்தது. “பஸ்ஸ விட்டுட்ட சரி. இந்த வழியா நம்ம ஊர் காரங்க எத்தன பேரு போறாக, ஆறுகிட்டையாச்சும் உதவி கேட்டு போலாம்ந்தேன்ன?” என்றான்.

“அத் அது. எனக்கு ஆறும் தெரியாது. அம்மாவும் யாருட்டையும் பேச கூடாது சொல்லிருக்காங்க" என்று திக்கி திணறி கூறினாள். அதை சொல்லுவதற்கே அவளுக்கு மூச்சு முட்டியது. அவளிடம் இருந்து ஒவ்வொரு வார்த்தையாய் வாங்க, இங்கே இவனுக்கும் மூச்சு வாங்கியது.

“என்னையாச்சும் ஆறுன்னு தெரியுமா? இல்ல?” என்று பொறுமையை இழுத்துப் பிடித்தப்படி கடுப்பாய் கேட்டான் கதிர்.

அவனின் கேள்வியில், ஒரு நொடி அவனைப் பார்த்தவள், “ம்" என்று தலையாட்டினாள். ஏற்கனவே தாமதமாகியிருக்க, இதற்கு மேலும் பேருந்து வரும் என்றோ? இல்லை அப்படியே ஏற்றி விட்டாலும், இவள் சரியாக அங்கு சென்று சேர்வாள் என்றோ? அவனுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. 

“வா” என்று அவன் அழைக்க, அவளோ திரு திருவென்று விழிக்க, “என்னைத் தெரியும் தான. என் கூட வரலாம் தான?” என்று அழுத்திக் கேட்க, அடுத்த நொடி எதுவும் சொல்லாமல், அவனின் பின்னே அமைதியாய் நடந்தாள்.

புல்லட்டை ஸ்டார்ட் செய்தவன், அவள் ஏறுவதற்கு தோதாய், வண்டியை சற்று சாய்த்துக் கொடுத்தான். இம்முறை அவன் சொல்லாமலே, அவனுடைய கையைப் பிடித்து புல்லட்டில் ஏறியிருந்தாள்.

கண்ணாடி வழியே அவள் அழுது வடிந்த முகத்தைப் பார்த்தவன், “ஏதாச்சும் சாப்டீயா?” என்றான். “ம்" என்று அவள் தலையாட்ட, “ஏதாச்சும் குடிக்கிறீயா?” என்று கேட்டான்.

“இல்ல. லேட்டாயிருச்சி. பரீட்சை எழுதப் போணும்" என்று சிறுமியாய் கூறினாள் நிலா.

“அதெல்லாம் ஒன்னும் லேட்டாகல. பத்து மணிக்குத்தான பரீட்சை. அதெல்லாம் போயிடலாம். ஏதாச்சும் குடிக்கிறீயா?” என்று பொறுமையை இழுத்துப் பிடித்துக் கேட்டான்.

“இல்ல. இல்ல வேணாம்" என்று அவள் வேகமாய் தலையாட்ட, “எங்க உனக்கு ஹால் போட்டிருக்காங்க?” என்று அவளுடைய ஹால் டிக்கெட்டை வாங்கிப் பார்த்தான். ஏனெனில், அவளிடம் கேட்டு, அவள் அதற்கு திக்கி திணறி பதில் சொல்லி, இவனுக்குத்தான் கோவம் வரும். அதனாலையே, அவனே பார்த்துக் கொண்டான்.

அடுத்த நொடி வண்டியை ஸ்டார்ட் செய்தவன், சொல்லியது போலவே, அடுத்த பதினைந்து நிமிடத்தில், அவள் தேர்வு எழுதும் பள்ளிக்கு முன்னே நிறுத்தியிருந்தான்.

அப்போது தான் நிலாவுக்கு மூச்சே வந்தது. ஆனாலும் கூட, இன்னமுமே அவளிடம் பதட்டம் மிச்சமிருக்க, அவளை அப்படியே விட்டு விட்டு செல்ல மனம் வரவில்லை.

“லேட்டாகலத்தான. இப்போ ஏதாச்சும் குடிக்கலாம் தான?” என்று அவனிடம் கேட்க, அவளோ எதுவும் சொல்லாமல் அமைதியாய் நின்றாள்.

“உப்" என்று மூச்சை உள்ளிழுத்து உதடு குவித்து காற்றை வெளியில் ஊதியவன், “வா” என்று அவளை அங்கிருந்த ஒரு கடைக்கு அழைத்துச் சென்றான்.

“என்ன வேணுமோ வாங்கிக்கோ” என்று அவன் சொல்ல, அப்போதும் அவள் அவன் முகத்தைப் பார்த்தப்படியே நிற்க, அவனே அவளுக்கு குடிக்க ஜூஸ் வாங்கிக் கொடுத்தான்.

அதன் பின், “பரிட்சைக்கு படிச்சிட்டீயா?” என்று அவளை சகஜமாக்க பேச்சுக் கொடுத்தான் கதிர். “ம்" என்று அவள் தலையாட்ட, “ம்ன்னா? எவ்வளவு மார்க் வரும்?” என்று கேட்டான் கதிர்.

அதில் என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாறியவள், “ரிசல்ட் வந்ததும் சொல்றேன்" என்றாள்.

அவன் ஆயிரம் கேள்வி கேட்டால், அவளிடம் இருந்து ஒரு பதில் தான், சற்று நீளமாய் வரும். அவர்கள் வீட்டில் அமைதி என்று ஒருவரைக் கூட சொல்லிவிட முடியாது. செந்திலும் அப்படித்தான். அவர்கள் வீட்டிலும், அத்தனைப் பேரும் வாய் பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார்கள் தான். இவள் மட்டும் எப்படி இப்படி தப்பி பிறந்தாள்? என்று அவனால் யோசிக்காமல் இருக்கவே முடியவில்லை.

அவள் கரம் இன்னமுமே நடுங்கிக் கொண்டிருக்க, “நிலா” என்று சிறு சத்தம் கொடுத்து அழைத்தான். அதில் திடுக்கிட்டு நிமிர, தன்னுடைய சட்டையில் இருந்த ஒரு பேனாவை எடுத்து அவள் முன் நீட்டினான்.

அவனின் செய்கையில், “என்கிட்ட பேனா இருக்கு" என்று நிலா வேகமாய் சொல்ல, “இதையும் சேர்த்து வச்சுக்கோ” என்று அவள் உள்ளங்கைக்குள், தன்னுடைய பேனாவை திணித்தான்.

அதற்குள், தேர்வுக்கான அழைப்பு மணி அழைக்க, இவளுக்குள் பதட்டம் கூடியது.

அதைப் பார்த்தவன், “நீ படிச்சதத்தேன் எழுதப் போற. அப்புறம் ஏன் இம்புட்டு பதட்டம்? போ” என்றான்.

“ம்" என்றவள் வேகமாய் அங்கிருந்து ஓட, இவனோ அவளைப் பார்த்தப்படி அப்படியே நின்றான். ஓடியவள் ஒரு நொடி நின்று திரும்பி, “தேங்க்ஸ்" என்றாள். 

அதில் மெலிதாய் புன்னகைத்தவன், “தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம். நீ ஒழுங்கா பரிட்சை எழுதிட்டு வா. அது போதும்” என்றான் கதிர்.

“ம்” என்று சிறு புன்னகையுடன் தலையாட்டியவள், மீண்டும் அப்படியே நிற்க, “என்ன?” என்று கேட்டப்படி அவளின் அருகில் சென்றான்.

“பரீட்சை முடிஞ்சதும் கூப்பிட வருவீங்கத்தான?” என்று சிறு தயக்கத்தோடு கேட்டாள் நிலா.

ஏனெனில், அவளுக்கு தனியாக பஸ் ஏறி, வந்தெல்லாம் பழக்கமே கிடையாது. அவள் முகத்தில் அப்பட்டமான பயம் தெரிந்தது. எங்கே தனியே விட்டு சென்று விடுவானோ என்று.

“இவ்ளோ பயம் இருக்கிறவ எப்படி தனியா பஸ்ல போக சம்மதிச்சா?” என்று யோசித்தவனுக்கு தெரியாதே. தாமரை பள்ளிக்கே போக வேண்டாம் என்று சொல்லி திட்டியது. அதனால் தான் அவளே பஸ்ஸில் சென்று வந்து விடுவேன் என்று சொல்லியிருந்தாள்.

ஆனாலும், அதை எல்லாம் ஒதுக்கி விட்டு, “நீ திரும்பி வர்ற வரைக்கும், இங்கனத்தான் இருப்பேன். சரியா? நீ போய் பரீட்சை எழுது" என்றான் கதிர்.

“ம்" என்று நிம்மதியாய் தலையாட்டியவள், அவனிடமே தன்னுடைய பேக்கையும் கொடுத்து விட்டு ஓடியிருந்தாள்.

அதில் அவள் பேக்குடன் மீண்டும் தன்னுடைய பைக் அருகில் வந்தமர்ந்தவனுக்கு, அவனை நினைத்தே சற்று ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை பொறுமையாய் அவனுக்கு நடந்துக் கொள்ள தெரியும் என்றே அவன் இப்போது தான் அறிந்துக் கொண்டான்.

இந்த கலவரத்தில் பிரியாவை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வர சொல்லிய விஷயத்தை மறந்து விட்டான். அவனோ, அவள் பேக்கில் இருந்த நோட்டை எடுத்து படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவளுடைய டைரி ஒன்றும் இருந்தது.

அதை எடுத்துப் பார்த்தவன், “பரவாயில்லையே மேடமுக்கு டைரி எழுதுற பழக்கம் எல்லாம் இருக்கு போலையே” என்று யோசித்தப்படி அதை திறந்தான்.

முதல் பக்கத்திலேயே, “டோன் ரீட்” என்று எழுதி, அதன் கீழே ஒரு அவார்னஸ் படத்தையும் வரைந்து வைத்திருந்தாள். அதைப் பார்த்தவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.

“இந்த வயசுல மேடமுக்கு சீக்ரெட் வேற இருக்கா?” என்று சொல்லியவனுக்கு ஏனோ அதை படித்துப் பார்க்க ஆசை பிறந்தது. ஆனாலும், “அவ என்னெத்தையோ எழுதிட்டுப் போற. உனக்கு என்னல வந்திச்சு. அந்தப் புள்ள உன்ன நம்பித்தேன்ன, பேக்க கொடுத்துட்டு போயிருக்கு” என்று மனசாட்சி சொல்ல, அவன் அதை படிக்காமல் மீண்டும் பேக்கினுள் வைத்தான். ஆனாலும் உள் மனம் அப்படி என்னத்தான் இருக்கும்னு பார்க்கலாம் என்று அடம்பிடிக்க, மீண்டும் அதை ஓபன் செய்தான்.

(அப்படி நம்ம நிலா, டைரில என்ன ரகசியத்த ஒழிச்சு வச்சிருக்காங்கன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அப்படியே இவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிற பிரியா என்ன ஆனாங்கன்னும் பார்க்கலாம். அதுக்கு முன்னாடி, இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Comments   0

*** தென்றல் – 23 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***